Wednesday, 27 September 2017

ஜோதிடத்தில் கனி மரங்கள்.

ஜாதகத்தில் நான்காம் பாவம் ஒருவர் எந்த வகையான சூழலில் வசிப்பார் என்பதை குறிபிடுகிறது,.ஒருவர் கனி தரும் மரங்கள் சூழ்ந்த வீட்டில் வசிக்க வேண்டும் எனில் அதற்கு சுக்கிரன் அனுக்கிரகம் வேண்டும். பெரிய அடர்ந்த உயர்ந்த மரங்களை சூரியன் குறிப்பார் என்றாலும் மனம் வீசம் மலர்ச்செடிகளையும் சுவை தரும் கனி மரங்களையும்  குறிப்பவர் சுக்கிரனாவார். எனது சிறு வயதில் வீட்டின் முன்பகுதியில் முல்லை, மல்லிகை செடிகளையும் பின்பக்கத்தில் மா மரங்கள் கொண்ட வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அது ஒரு பொற்காலம். 

கனி மரங்களில் இனிப்பான சதைப்பற்று கொண்ட மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, ஆப்பிள் ஆகியவை குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. திராட்சை, ஆரஞ்சு போன்ற ரசக்கனிகள் சுக்கிரனின் தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அதனால்தான் இறைவனுக்கு மனம் வீசும் மலர்களையும், கனிகளையும் படைக்கிறோம்.

கீழே கிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட கனிகள் சில.

இலந்தை பழம்        - சூரியனின் அம்சம்.

பேரிக்காய், தர்பூசணி  – சந்திரனின் அம்சம்.

முந்திரி               - செவ்வாயின் அம்சம்

நெல்லிக்கனி, கொடுக்காப்புளி - புதனின் அம்சமாகும்.

மா, பலா, வாழை – குருவின் அம்சம்

நாவல், திராட்சை, ஆரஞ்சு – சுக்கிரனின் அம்சம்.

பேரிச்சை, வேப்பம் பழம்  – சனியின் அம்சம்

பலவகை சுவை கொண்ட உண்ட பின் சுவை மாறும் கனிகள் ராகு-கேதுவின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டவை.

ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் வலு குறைந்தவர்கள் வாய்ப்பு இருப்பின் தொடர்புடைய மலர்களையும் கனி மரங்களையும் வீட்டில் பேணி வளர்த்து வந்தால் அவர்களுக்கு தொடர்புடைய கிரகங்கள் கருணை புரியும் என்பதும் குறிப்பாக சுவையும் ரசமும் கொண்ட குரு சுக்கிரனுக்குரிய கனி மரங்களை வீட்டில்  வளர்த்து வந்தால் வீட்டில் லக்ஷ்மியும் திருமாலும் வாசம் செய்வார்கள் என்பது அனுபவ உண்மையாகும். இவ்விரு கிரகங்களின் அருட்பார்வையை பெற்றவர்கள் பிற கிரகங்கள் தரும் சிரமங்களையும் கடந்திட வழி பிறக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கீழே சமீபத்தில் அடியேன் ஆராய்ந்த அன்பர் ஒருவரது ஜாதகம் கீழே.


தனுசு லக்ன அதிபதி குரு ஒரு ஜாதகரின் வசிக்கும் சூழலை குறிக்கும் நான்காம் பாவத்தில் ஆட்சியில் உச்ச சுக்கிரனுடனும் ராகுவுடனும் இணைந்துள்ளது. சுக்கிரன் நவாம்ச நிலைப்படி வர்கோத்தமம் என்பது அருமையான அமைப்பு. கேந்திரத்தில் ராகு-கேதுக்கள் நிற்பது ஒருவகையில் நன்மையே.  வலுவான மரங்களுக்கு ஆதிபத்தியம் பெற்ற பாக்யாதிபதி சூரியன் தனது சுய நட்சத்திரத்தில் உச்சம். தனது வீட்டில் உச்சமான சூரியனால் பூமி காரகன் செவ்வாயும் வலுவடைகிறது. தனது சுய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் செவ்வாய் நிற்பது கூடுதல் பலம். நீர் கிரகமான சந்திரன் தனது சுய நட்சத்திரத்தில் ஹஸ்தத்தில் நிற்பது சிறப்பே. புதனும் உச்சன் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் நின்றதால் வலுவடைகிறது. சனி ஜல ராசியான விருட்சிகத்தில் பகைவனின் வீட்டில் வக்ர நிலையில் நிற்பது ஒருவகையில் நன்மையே. 

ஜாதக அமைப்பின் பலனாவது ஜாதகரது வீட்டில் கனி தரும் பல மரங்கள் இருப்பது மட்டுமின்றி அவை வருடம் முழுதும் பலனளிக்கின்றன என்பது ஜாதகருக்கு இறைவன் கொடுத்துள்ள பாக்கியம் என்றே கூற வேண்டும். 

கிரகங்களின் அருளைப்பெற எளிய வழி அவைகளின் அம்சங்களை நேசித்து போற்றுவதே. எனவே கனி மரங்களை போற்றி வளர்த்து கிரகங்களின் அருளை பெறுவோம்.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 7871244501.

Saturday, 26 August 2017

பகிரி
வாசக அன்பர்களுக்கு ஆசிரியரின் இதயங்கனிந்த விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்.


சுழி போட்டு செயல் எதையும் துவங்கு என்பது முன்னோர் வாக்கு.

அதன் அடிப்படையில் பல நாட்களாக பல்வேறு வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நமது வலைதளத்திற்காக புலன வழி தொடர்புக்குழு  (Whatsapp Group) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. "ஜோதிட சாகரம்"  என்ற பெயரில் அடியேனை நிர்வாகியாகக்கொண்டு  இயங்கி வருகிறது. இந்தக்குழுவில் ஜோதிடக்கருத்துக்கள், ஆய்வுச் செய்திகள், ராசி பலன்கள் வழங்க உத்தேசம். தனிப்பட்ட தங்களது ஜாதகத்தை ஆய்வு செய்துகொள்ள அல்ல என்பதை அறியவும். ஜோதிடத்தை உண்மையாக நேசிக்கும் ஆர்வலர்களும், ஜோதிடர்களும், ஆய்வாளர்களும் பங்குகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.  . விருப்பமுள்ள அன்பர்கள் தங்களைப்பற்றிய முழுவிபரங்களுடன் ஜோதிடத்திற்கும் தங்களுக்குமான தொடர்பு பற்றி சுருக்கமாக விளக்கி தங்கள் புலனதொடர்பு (Whatsapp)  அலைபேசி எண்ணை குறிப்பிட்டு புகைப்படத்துடன் feedbackjn@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யவும். 

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்:7871244501

Sunday, 20 August 2017

பெண்

இன்றைய காலத்தில் வளமான வாழ்வு வாழ வேண்டும் என்றால் அதற்கு ஆச்சார்ய கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். 

இதில் குரு தன, குடும்ப காரகன் என்றால் அதை வளமையாக அனுபவிக்க சுக்கிரனே காரணமாகிரார். குரு வலுவாக இல்லாதிருந்து சுக்கிரன் வலுவாக அமைந்துவிட்டால் கூட அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தாலும் கூட மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.  பெண்கள் மகிழ்வாக இருக்கும் குடும்பத்தில் மகாலகஷ்மி வாசம் செய்கிறாள். பெண் கண்ணீர் சிந்தினால் அந்த வம்சத்தில் அதற்கு காரணமானவர்களை சுக்கிரன் தண்டிக்கிறார். இதை ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை கண்டு அறியலாம்.“எங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லையோ
எங்கே பெண்மைக்கு மதிப்பில்லையோ
எங்கே பெண்கள் வஞ்சிக்கப்படுகிரார்களோ
அது மக்கள் வாழத்தகுதியற்ற பூமியாகும்”

என நமது நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன.

பெண் மனித வாழ்வின் இன்றியமையாத சக்தி.

சக்தி இல்லையேல் சிவமில்லை.

பெண் இல்லாத வாழ்க்கை பட்டுப்போன மரத்திற்குச்சமம்.

இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தற்கொலை செய்துகொல்பவர்களை தினசரிகளில் படிக்க முடிகிறது.

இது போன்ற நிலைக்கு 80 களில் துவங்கி 90களில் புற்றீசல்களாக உருவெடுத்த பாலினத்தை அறியும் மையங்களும் தவறான மருதுவர்களுமே காரணம். அதை நாடிச்சென்று தங்கள் பெண் செல்வங்களை அழித்தவர்களின் சந்ததியினரே இன்று பெரும்பாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

பெண்களை துன்புறுத்தினால் அல்லது அழித்தால் அவர்களது சந்ததியினருக்கு பெண் வகையில் குடும்ப சந்தோஷங்களோ பெண் வாரிசுகளோ இல்லாததை அல்லது மிகத்தாமதமாக அமைவதை காண முடிகிறது. ஒருவர் பெண்களுக்கு இழைக்கும் தீங்குகள் அவரை மட்டுமின்றி அவரது வம்சத்தையும் கடுமையாகவே பாதிக்கின்றன.

பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளை சேறும் என்பது மிகச்சரியான அனுபவ மொழியாகும்.

ஒருவர் அவருக்கு கேடு செய்யும் செயல்களை செய்யக்கூடாது என்பதுடன் அவரது சந்ததியினருக்கு செல்வங்களை சேர்த்து வைக்காமல் விட்டாலும் பரவாயில்லை. அவரது சந்ததியினருக்கு பாவங்களை தேடிவைதுவிட்டு செல்லக்கூடாது.

இது வெறும் பயமுறுத்தல் அல்ல.

பெண்களுக்கு பாதகம் செய்தவர்களின் சந்ததியினரின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள். அவர்களது ஜாதகங்களை பெற்று ஆய்வு செய்து பாருங்கள். சுக்கிரன் எப்படி அமைத்திருக்கிறார் என்பதை கவனியுங்கள். நான் சொல்வதன் உண்மை உரைக்கும்.

பெண்களை வஞ்சிக்க துணை நின்றவர்கள், மருத்துவர்கள் அதை சார்ந்தவர்கள், கற்புடைய மங்கையரைப்பற்றி பழி சொன்னவர்கள் போன்றவர்களையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.

இது போன்ற செயல்களை செய்தவரின் சந்ததியினர் இராமேஸ்வரத்தில் மூன்றுமுறை தில ஹோமம் செய்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன்.

வீட்டுப்பெண்களை கண்ணீர் சிந்தவைத்துவிட்டு அம்மன் கோவிலில் அக்கினிச்சட்டி எடுப்பதில் அணுவளவும் பயனில்லை என்பதை உணருங்கள்.


முக்கியமாக தொடர்புடையவர்களை மட்டுமின்றி அவர்களின் சந்ததியினரையும் சுக்கிரன் கடுமையாக தண்டிக்கிறார்.  


மேற்கண்ட பெண்மணியின் ஜாதகத்தில் குரு உச்சமாகி வக்கிரமான நிலையில் இருக்கிறார். ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமானால் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும். இவ்விதிப்படி குடும்ப பாவமான 2 க்கு விரயத்தில் அமைந்த குரு திசையில் ராகு புக்தியில் ஜாதகி கணவரை இழந்தார். ராகு கணவரை குறிக்கும் 7 ஆமிடத்திற்கு சுகஸ்தானம் 1௦ உடனும், 7 ஆமிடத்திற்கு பாதக ஸ்தானமான 5 உடனும் தொடர்புகொண்டுள்ளது. (7 ஆமிடம் சர ராசியாகியதால் 7 க்கு 11 ஆன விருச்சிகம் பாதக ஸ்தானம் ஆகும்).   

கணவரை இழந்தபின் மருமகளை மாமனாரே அடைய எண்ணினார். இதற்கு தந்தை மற்றும் மாமனாரை குறிக்கும் சூரியன் காம களத்திர ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்ததே காரணமாகும். ஜாதகி கணவர் குடும்பத்தை விட்டு குழந்தைகளுடன் வெளியேறினார்.

சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் கிரகமாகி அது தொடர்புகள் ஸ்தானமாகிய 7 ஆமிடத்தில் லக்னாதிபதியுடன் இணைந்து லக்னத்தை பார்த்ததால் ஜாதகிக்கு அரசுப்பணியையும் முன்னமே கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற குரு ஐந்தாமிடத்தை பார்த்ததாலும் ஐந்தாமதிபதி செவ்வாய் 5 க்கு விரயத்தில் மறைந்து கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டதாலும் கணவர் வகை தொடர்புகளின் இந்த செயல் இவர்களது வம்சத்தை பாதித்தது.

எப்படி எனில்.
ஜாதகியின் மகன் வேற்று ஜாதியில் மணமுடித்து தனது குல மரபுகளை விட்டு விலகிவிட்டார். எனினும் ஜீவன ரீதியாக கடினமான சூழ்நிலையிலேயே உள்ளார். ஜாதகியின் மகள் வேற்று குலத்தை சார்ந்தவரை காதலித்து மணமுடிக்க தயாராக உள்ளார்.

ஜாதகத்தில் 5, 9 மற்றும் அதன் பாவாதிபதிகளும் குருவும் கெட்டுவிட்டால் ஒருவர் தனது குலத்தை விட்டு விலகுகிறார் அல்லது தனது குல மரபுகளுக்கு மாறாக நடக்கிறார்.

கீழே வருவது ஒரு ஆணின் ஜாதகம் 


கன்னி லக்னத்திற்கு 7 ல் விரயாதிபதியும் தந்தையை குறிக்கும் கிரகமும் ஆன சூரியன் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து 6 ஆமதிபதி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். தனம் மற்றும் தந்தையை குறிக்கும் 2 , ஒன்பதாம் பாவாதிபதியான சுக்கிரன் விரயாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியுடன் இணைந்து குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். அஷ்டமாதிபதியான செவ்வாய் தனது கடும் பகைவனும் 5, 6 ஆம் பாவாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார்.

இவர்கள் நின்ற நட்சத்திராதிபதிகளும் பாவாதிபதிக்களுமான குருவும் சனியும் வக்கிரமாகி தங்களது இயல்பை இழந்த நிலையில் மேற்கண்ட மூவரையும் பார்வை செய்கின்றனர்.

ஜீவன காரகன் சனியும் தன காரகன் குருவும் வக்கிரகமாகி தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் நிற்பதும் லக்னாதிபதி புதன் ஆறாமதிபதி சனியுடன் பரிவர்த்தனை ஆகி 6 ல் நின்றதும் ஜீவனம் மற்றும் ஆரோக்ய ரீதியாக கடும் போராட்டங்களை ஜாதகருக்கு தந்துகொண்டிருக்கிறது.

ஜாதகரின் இந்த நிலைக்கு கீழ்வரும் தந்தையார் வகை கர்மங்களே காரணமாகும்.

ஜாதகரின் தந்தையார் அபலைப்பெண் ஒருவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி கற்பவதியாக்கி கைவிட்டார். பிறந்த குழந்தை தமதில்லை என்று வாதிட்டார். நீதிமன்றத்தில் மரபுக்கூறு சோதனையில் குழந்தைக்கு தந்தை அவரே என்று நிரூபணமாகி ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. 

ஜாதகரின் தாயார் ஒரு மாதம் ஜீவனாம்சம் பெற்ற பிறகு அவரது தந்தை ஜாதகியை வேறு ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். இப்போது மகன் விரும்பினாலும் தாயாரை தொடர்புகொள்ள இயலாத நிலை. ஜாதகர் ஜீவனம் ஆரோக்கிய வகை போராட்டங்களால் மனம் நொந்த நிலையில்   மூன்று முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். 

தந்தையின் செயல்களுக்கு தமையனே இப்படி அனுபவிக்கிறார் என்றால் ஜாதகரின் தந்தையின் நிலை என்னவாகி இருக்கும்.

இவற்றிற்கு காரணமான ஜாதகரின் தந்தையையார் அவரது ஒழுக்கக்கேடான வாழ்வினால்  எய்ட்ஸ் வியாதியில் நிராதரவான நிலையில் இறந்து போனார்.

பெண்மைக்கு தீங்கு விளைவித்தால் அது காரணமானவர்களை மட்டுமல்ல அவரது வம்சத்தையே கடுமையாக பாதிக்கிறது.

பெண் பாவம் பொல்லாதது என்பது அறிவுரை மட்டுமல்ல அது அனுபவமொழி.

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன், அன்பன்,

பழனியப்பன்,
கைப்பேசி எண்: 7871244501