Sunday 9 February 2014

கேந்திராதிபத்திய தோஷத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் உண்மை



சுபக்கிரகங்களான குரு,சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் மற்றும் புதன் ஆகியவை  1,4,7,10 ஆகிய கேந்திரங்களுக்கு அதிபதிகளாக வரும்போது அவை தனது சுபாவ குணத்தைவிட்டு அசுபத்தன்மை அடைகின்றன. சுபக்கிரகங்கள் அடையும் இந்த நிலையே கேந்திராதிபத்திய தோஷம் எனப்படுகிறது. கேந்திர ஸ்தானங்கள் அவற்றின் சொந்த வீடாக அமைந்தால் ஜாதகருக்கு கேந்திராதிபத்திய தோஷத்தின் கடுமை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அதிகமாக இருக்கும். அவற்றின் திசா புக்திகளில் அதன் தாக்கத்தை நன்கு அறியலாம்.
  
சுபக்கிரகங்களில் முதன்மையான கிரகம் குரு. முழுமையான சுபக்கிரகம் என போற்றப்படுபவர். அறிவியல் ரீதியான காரணம், குரு என அழைக்கப்படும் வியாழன் கிரகத்தின் விட்டம் 2,42,000 கிலோமீட்டரை மிஞ்சும். (1300 பூமிகளை இதன் பரப்பில் வைக்கலாம்) முற்றிலும் உறைந்த கடலால் ஆன நிலமற்ற இதன் பரப்பு சூரிய ஒளியை கிரகிக்காமல் அப்படியே குளிர்ந்த தன்மையுடன் பிரதிபலிக்கும். இந்தக் குளிர்ந்த பிரதிபலிப்பு ஒளியானது சனி, செவ்வாய் போன்ற பிற கிரகங்களிருந்து வரும் கடுமையான வெப்பக் கதிர்வீச்சினையும் குளிர்வித்து மாற்றிவிடுகிறது. இதனால்தான் வியாழன் (குரு) கிரகத்தை சுபக்கிரகம் எனப் போற்றுகிறோம்.

குருதான் கேந்திராதிபத்திய தோஷத்தில் அதிக கெடுபலனைத் தரக்கூடியவர். சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியவை இதற்குப் பிறகு வரிசைக் கிரமமாக கெடுபலனைத் தருவர். 

இந்தக் தோஷத்திலும் நுட்பமான சில விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாக லக்ன கேந்திரத்தில் குருவுக்கு ஏற்படும் திருக்பலத்தினால் அது கெடுபலனைத் தராது. சில பாதிப்புகளைத் தந்தாலும் அது சாதாரணமானதாகவே இருக்கும். ஆனால் வர்கோத்தமம் அடைந்த சுபக்கிரகம் கேந்திராதிபத்திய தோஷத்தை உறுதியுடன் தரும். 

ராசியில் ஆட்சியிலிருக்கும் கேந்திராதிபத்திய தோஷமடைந்த சுபக்கிரகம் நவாம்சத்தில் நீசமடைந்தால் கேந்திராதிபத்திய தோஷம் பங்கப்பட்டு கெடுபலன் ஏற்படாது. கடும் வெப்பக் கதிர் வீச்சுகளை ஏற்படுத்தும்  சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற அசுபக்கிரகங்களுடன் சேர்ந்தாலும் கேந்திராதிபத்திய தோஷம் அடைந்த கிரகம் வலுவிழந்து குறிப்பிட்ட கிரகம் கெடுபலனைத் தராது அல்லது  கெடுபலனை குறைத்துத் தரும். இதுபோன்றே தீய கிரகங்கள் பார்த்தாலும் சுபக்கிரகங்களுக்கு ஏற்படும் கேந்திராதிபத்திய தோஷம் குறையும்.

இப்போது இதன் அறிவியல் பின்னணியைக் காண்போம்.



ஜாதகத்தில் லக்னம் எனப்படுவது நாம் பிறக்கும் போது சூரியன் இருக்கும் ராசி மண்டலத்தைக் குறிப்பிடுவதாகும். (இதுபோன்றே சந்திரன் ஜனன நேரத்தில் இருக்கும் ராசி மண்டலமே ஜாதகத்தில் ராசி எனப்படுகிறது) லக்னமான ராசிமண்டலத்திலிருந்து கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 4,7 மற்றும் 10 ஆவது ராசிமண்டலங்கள் சூரியனின் சுழற்சி விதிகளின்படி  குளிர்ந்த தன்மையான கதிர் வீச்சினைக்  கொண்டிருக்கும். இப்படி ஏற்கனவே குளிர்ந்த தன்மையுடைய இந்த இடங்களுக்கு அதிபதிகளாக வரும் குரு, சுக்கிரன் போன்ற சுபக்கிரகங்கள் தங்களது குளிர்ந்த கதிர்வீச்சினால் அவ்விடங்களை மேலும் குளிர்வித்து உறைநிலைக்கு கொண்டுசெல்கின்றன. அதனால் அந்த ராசிமண்டலத்திலிருந்து  வரும் கதிவீச்சுக்கள் வலுவிழந்துவிடுகின்றன. அதனால் குறிப்பிட்ட அந்த பாவத்தின் பலன் ஜாதகருக்கு மறுக்கப்பட்டுவிடும் அல்லது பிரச்சினைக்குள்ளாகும். இதைத்தான் ஜோதிடத்தில் கேந்திராதிபத்திய தோஷம் என்கிறோம்.

இதனால்தான் இவ்விடங்களுக்கு வரும் சனி,செவ்வாய், ராகு, கேது போன்ற  சுபாவ பாவக் கிரகங்கள் தங்களது வெப்பக் கதிர்வீச்சை இவ்விடங்களுக்கு அளித்து இவ்விடங்கள் கொண்டிருக்கும் குளிர்ந்த கதிவீச்சால் தங்களது  சுபாவ பாவத்தன்மையிலிருந்து விடுபடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட பாவம் ஜாதகருக்கு நற்பலனைத் தரும். இதனால்தால் சுபாவ பாவக் கிரகங்கள் கேந்திரத்தில் அமைவது விரும்பத்தக்கது என்கிறோம். 

மேற்குறிப்பிட்ட கேந்திர பாவங்களுக்கு எதிர்மறையானது திரிகோண ஸ்தானங்கள் எனப்படும் 1,5,9 ஆம் பாவங்கள்.(லக்னம் எனப்படும் முதல் பாவம் கேந்திரம் மற்றும் திரிகோண இயல்புகள் இரண்டையுமே கொண்டிருக்கும் என்பதால் லக்னத்தை கேந்திரம் மற்றும் திரிகோணம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடுகிறோம்). இவ்விடங்கள் இயல்பாகவே வெப்பக் கதிர் வீச்சுக்களைக் கொண்டிருக்கும் இவ்விடங்களில் அமையும் சுபக் கிரகங்கள் தங்களது குளிர்ந்த கதிர் வீச்சை இவ்விடங்களுக்கு அளித்து அவை இயல்பாகப் பெற்றிருக்கும் வெப்பக் கதிர் வீச்சால் தங்களது சுபாவத்திலிருந்து மாறுபடுகின்றன. இதனால் அக்குறிப்பிட்ட திரிகோண பாவமும் அதில் அமைந்த சுபக் கிரகமும் ஒரு  ஜாதகருக்கு நன்மை செய்கின்றன.

எப்படி உயிரினத்தின் இயல்புக்கு அதிக குளிரற்ற அதேசமயம் அதிக வெப்பமற்ற மிதமாக தட்ப வெப்பச் சூழல் தேவையோ அதே போல்தான் ஜாதகத்தில் ஒரு பாவமும் ஒரு கிரகமும் மிதமான தட்ப வெப்பத்தைக்கொண்டிருப்பது விரும்பப்படுகிறது. மனிதன் கோவணம் கட்டி சந்நியாசியாவது விரும்பப்படாததுபோல் அதீத ஆக்ரோஷமான தூண்டுதல் உள்ளவனாக இருப்பதும் விரும்பப்படுவதில்லை. சமநிலையான மனிதனே சமுதாயத்தில் விரும்பப்படுகிறான்.  குளிர்ச்சியான சுபக்கிரகங்கள் அதீத குளிச்சியடையாமல் பாவக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் பேணப்பட வேண்டும். அதே போன்று பாவக்கிரகங்களின் கடுமையான வெப்பக் கதிர்வீச்சு   சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் சமநிலையாக்கப்படவேண்டும். அப்படி அமையப்பெற்ற ஜாதகன் அதிக துன்பங்களற்ற சராசரியான இன்ப துன்பங்களுடன் கூடிய வாழ்வை அனுபவிப்பான்.

மேலே குறிப்பிட்டவை மிக நுட்பமானவை. பல ஆண்டு ஆராய்ச்சியில் பல்வேறு ஜாதகங்களை ஆராய்ந்தால் மட்டுமே இவற்றைக் கணிக்க முடியும். இவற்றை அளவிட்டதில் எனது பங்கு குறிப்பிடத் தகுந்தது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

கேந்திராதிபத்திய தோஷத்தின் தீவிரம் உங்களுக்குப் புரிய வேண்டுமானால் கீழே கொடுத்துள்ள ஜாதகத்தை கவனியுங்கள்.


 
சிற்றின்பத்திற்கு காரகத்துவம் கொண்ட சுக்கிரன் உச்சம். ஆனால் என்ன பயன்? அது கேந்திர ஸ்தானமாகிவிட்டது. உபய லக்னமான மிதுன லக்னத்திற்கு பாதக ஸ்தானமான சப்தம கேந்திரத்தில் (7 ஆமிடத்தில்) குரு ஆட்சி. குருவும் சுக்கிரனும் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டுவிட்டன. கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என்றால் அவற்றின் காரகத்துவம், அவற்றின் சொந்த பாவங்கள் மற்றும் அவை ராசிக்கட்டத்தில் அமைந்த பாவங்களின் அடிப்படையில்தான் முதலில் பலனளிக்கும். மற்ற பிற காரணிகள் பிறகுதான் பாதிக்கும். அதனடிப்படையில் குரு காரகத்தினடிப்படையில் குடும்பத்தையும் பாவத்தினடிப்படையில் களத்திர, தொழில் ஸ்தானங்களை கட்டுப்படுத்துகிறார். 

1.ஒரு கிரகம் தனது தோஷமான அமைப்பினால் ஜாதகருக்கு மிகக் கடுமை காட்டும்போது தனது காரகங்களில் ஒன்றை ஜாதகருக்கு முழுமையாக மறுத்துவிடும். பிறகு அக்கிரகம்  தொடர்புடைய பிற  விஷயங்களில் பாதிப்பைத் தராது. (அணைத்து விஷயங்களிலும் ரவுண்டு கட்டி அடித்தால் மனிதன் தாங்கமாட்டான் என கடவுள் நினைத்திருப்பாரோ என்னவோ)

2.ஒரு கிரகம் ஜாதகருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில்  அளப்பரிய நன்மையை செய்ய வேண்டிய சூழலில் அதன் காரகங்களில்  ஒன்றை முழுமையாக கைவிட்ட பின்னரே அளப்பரிய அந்த நன்மையை வழங்கும். 

மேற்சொன்ன  இரு விதிகளும்  குறிப்பிட்ட கிரகம் கேந்திராதிபத்திய தோஷத்தில் இல்லாமல் இருந்தாலும் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 

இதன் பின்னணியை ஆராய்ந்தால் மனித வாழ்வின் சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட  கிரகம் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது புலப்படும். 

இந்த ஜாதகத்தில் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆளான இரு கிரகங்கள் குரு மற்றும் சுக்கிரன் ஆவர். மேற்சொன்ன விதியினடிப்படையில் பார்த்தால் குரு அதன் காரகத்தில் ஒன்றான குடும்ப வாழ்வை ஜாதகிக்கு முழுமையாக மறுத்துவிட்டார். (இதற்கு குடும்ப பாவத்தில் வக்ரகதியில் நின்ற சனியும் துணை புரிகிறார்.)  ஆனால் ராஜ்யஸ்தானமான  தனது பத்தாவது பாவத்தின் அடிப்படையில் ஜாதகிக்கு  ராஜ்ய பரிபாலனம் செய்ய வைக்கிறார். 10 ஆவது பாவத்தில் ஒரு உச்சக் கிரகம் (சுக்கிரன்) இருப்பதால் தனது 10 ஆவது பாவத்தின் பலனை மிக உயர்வாகத் தர வேண்டிய நிலையில் குரு இருக்கிறார். 

கேந்திராதிபத்திய தோஷத்தில் இருக்கும் மற்றொரு சுபக்கிரகம் சுக்கிரன். சுக்கிரனுக்கு மீனம் சொந்த வீடாக இல்லாவிட்டாலும் சுபக்கிரகம் கேந்திரத்தில் உச்சகதியில் அமைந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்தை தர வேண்டியவராகிறார்.  அதனால் தனது காரகங்களில் ஒன்றான இல்லற இன்பத்தை ஜாதகிக்கு முழுமையாக மறுத்துவிட்டார். ஜாதகி திரைத்துறையில் நடிப்பு, நடனம் மற்றும் பாடலிலும் பெரும் புகழ் பெற்றார். அதற்கு சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் உச்சமானதும் பிறந்த தேதி எண் 6 (24) ஆக அமைந்ததும் காரணம். அதோடு ராஜ்யஸ்தானமான 10 ஆவது பாவத்தில் உச்ச கதியில் அமர்ந்ததால் சுக்கிரன் ஜாதகிக்கு ராஜ்ய பரிபாலனம் செய்ய முழுமையாக உறுதுணை புரிகிறார். சுக்கிரன் அரசியலுக்கு உரிய கிரகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால் இதைப் பெற ஜாதகி இழந்தது மனிதனை முழுமைப்படுத்தும் குடும்ப வாழ்வை.

ஜாதகி யார் என இன்னும் அனுமானிக்க முடியாத அப்பாவிகளுக்கு,




ஜாதகி நமது மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

அடுத்த பதிவு.
நவாம்ச சக்கரத்தின் நுட்பங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.