Sunday 29 June 2014

பாவச் சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?

ஜோதிடத்தில் ராசி மற்றும் நவாம்ச கட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பாவக் கட்டத்திற்கு பெரும்பாலான ஜோதிடர்கள் அளிப்பதில்லை. காரணம் பாவச்சக்கரத்தை போடுவதற்கு சற்றே தேர்ந்த நுணுக்கம் தேவை. மேலும் ராசி நவாம்சத்தைவிட பாவச்சக்கரம் நுணுக்கமாக எதையும் தெரிவித்துவிடாது என்ற எண்ணமும் ஒரு காரணம். அதனால் ஆய்வு ஜோதிடர்கள் மட்டுமே பாவத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் ஜோதிடர்களுக்கு உதவ கணினிகள் வந்துவிட்ட சூழ்நிலையில் பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது ராசியும் நவாம்சமும் குறிப்பிடாத விஷயங்களைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவும்.

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.
ராகு திசை இருப்பு: 3 வருஷம்  0 மாதம்  8 நாட்கள்.

ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண்.

கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னத்தில்  விரயாதிபதி சூரியன் கேதுவுடன் உள்ளார். சுக்கிரன் 2 ஆம் பாவத்தில் ஆட்சியில் உள்ளார். சுக்கிரனுடன் லக்னாதிபதி புதன் வக்கிரகதியில் சேர்க்கை.

ராசியைக் கொண்டு கவனித்தால் ஜாதகரின் கும்ப ராசிக்கு 2 ஆமிடத்தில் ராசி மற்றும் விரைய ஸ்தானங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்கிர கதியில் ராகுவுடன் சேர்க்கையில் உள்ளார். ஆனால் ராசிக்கு இரண்டாம் பாவத்திற்கு உரிய குரு தனது பாவத்திற்கு 6 ல் செவ்வாயுடன் மறைந்துவிட்டார். ராசிக்கு 7  ஆமதிபதி சூரியன் ராசிக்கு 8 ல் மறைந்துவிட்டார்.

ராசிக்கட்டத்தில் இந்த  அமைப்பை வைத்து ஜாதகத்தை கணித்தால் என்ன தோன்றும்.

1.ராசியை குரு பார்ப்பதாலும் லக்னத்திற்கு 2 ல் சுக்கிரன் லக்னாதிபதியுடன் சேர்ந்து ஆட்சியில் உள்ளதாலும் ஜாதகருக்கு திருமணம் நடந்துவிடும் இல்லறத்திற்கு துணைவி வருவாள் என அனுமானிக்கலாம்.

உண்மையே. ஜாதகர் திருமணமானவர்.

2. ராசிக்கு 2 ஆமிடம் கெட்டு அந்த பாவாதிபதி தனது 2 ஆம்  பாவத்திற்கு 6 ல் மறைந்ததால் குடும்பத்தில் பிரச்சினை இருக்க வேண்டும். இதை ராசிக்கு 7 ஆமதிபதி சூரியன் ராசிக்கு 8 ல் கேதுவுடன் சேர்ந்து கெட்டதிலிருந்து தெளிவுற அறியலாம்.

இதுவும் உண்மையே. வாக்கு ஸ்தானமான ராசிக்கு 2 ல் கடும் பாவிகள் சனி, ராகு நின்றதால் ஜாதகருக்கு கடும் சொல் உதிர்க்கும் சுபாவம் ஏற்பட்டுவிட்டது. அதனால் ஜாதகருக்கு மனைவியுடன் இணக்கமான உறவு இல்லை.

இப்போது கிரகங்களின் அடிப்படையில் ராசிக்கட்டத்தை ஆராய்வோம்.

லக்னத்தில் அமரும் கிரகம் ஜாதகரின் வாழ்க்கைப் பயணத்தில் வாகன ஒட்டியாகச் செயல்படும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதே சமயம் விரயாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்ததாலே வாழ்வில் கண்டிப்பாக ஏதாவது ஒன்றினை ஜாதகர் விரயமாக்கிவிட வேண்டும் என்பது விதி.
லக்னாதிபதி புதன் தனம், வாக்கு, குடும்பம், வலது கண் போன்ற இன்னும் பலவற்றைக் குறிக்கும்   2 ஆம் இடத்தில் அதன் அதிபதியும் நண்பனுமான சுக்கிரனுடன் நின்றதால் ஜாதகருக்கு குடும்பம் அமைத்துத் தந்தார். வித்யா காரகனான  புதன் பத்தாம் அதிபதியும் ஆகி 2 ல் நின்றதால் ஜாதகர் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். லக்னம்தான் சூரியனாலும் கேதுவாலும் கெட்டுவிட்டது புதனின் மற்றொரு வீடான 10 ஆமிடம் மிதுனம் எவ்வித தோஷமும் இன்றி அமைந்திருப்பதைப் பாருங்கள்.

இப்போது பாவச் சக்கரத்திற்கு வருவோம்.

ராசிக்கட்டத்தில் லக்னத்தில் இருந்த சூரியன் பாவக்கட்டத்தில் லக்னத்திற்கு 2 ல் நீசம். ராசிக்கட்டத்தில் ராசிக்கு 2 ல் மீனத்தில் வக்கிரகதியில் இருந்த சனி பாவச்சக்கரத்தில்  மேஷத்திற்கு மாறிவிட்டார். இதன் அடிப்படையில் சூரியன் ஜாதகருக்கு எப்படி பலனளிப்பார் என ஆராய்வோம்.

விரயாதிபதி சூரியன் எப்படிப் பலனளிபார் என ஆராய சூரியனது பாவம் மற்றும்  காரகத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சூரியன் அரசு உத்தியோகத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம். அது ராசிக்கட்டத்தில் லக்னத்தில் அமர்ந்ததால் ஜாதகருக்கு அரசுக் கல்லூரிப் பணியை அமைத்துத் தந்து தனது அம்சத்தை நிலை நாட்டினார். அதே சூரியன் நேந்திரத்திற்கும் (கண்கள்) காரகத்துவம் பெற்றவர் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் கண்களுக்கு ஒளி வழங்குவதில் சுக்கிரனுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுக்கிரனை உப நேந்திர காரகனாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. சுக்கிரன் ஆட்சியில்தான் உள்ளது ஆனால் ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் (3 ஆம் பாதத்தில்) உள்ளது. ராகு ராசிக்கு நேந்திர ஸ்தானமான (2 மிடம்) மீனத்தில் ராசிக்கு விரையாதிபதியான சனியுடன் சேர்க்கை. இதனால் ஜாதகர் மட்டுமல்ல எந்த உரியினமும் தனது வாழ்வில் இழக்ககூடாத கண் பார்வையை இழந்துவிட்டார். சனியும் ராகுவும் 2 ஆமிடத்தில் இருப்பது கண் பார்வையைப் பறிக்கும் அமைப்பு. சூரியனும் சுக்கிரனும் கண்களுக்கு ஒளி வழங்கும் கிரகங்கள் என்றால் சனியும் சனி போன்று செயல்படும் ராகுவும் கண்களை குருடாக்குவதற்கு காரகத்துவம் பெற்ற கிரகங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

லக்னத்தில் நின்ற சூரியன் தனது அம்சமாக ஜாதகர் இருக்க வேண்டும் என்பதால் ஜாதகருக்கு அரசுப் பணியை வழங்கியது. அதே சூரியன் பாவத்தில் நீசமானதால் தனது காரகத்தின் அடிப்படையில் கண்களை குருடாக்கிவிட்டது. மொத்தத்தில் சூரியன் ஜாதகத்தில் தான் அமைந்த அமைப்புக்குத் தக்கபடி தனது பணியை குறைவில்லாமல் நிறைவேற்றிவிட்டது.

கண்களைப் பறித்த சூரியன் அரசுப் பணி மூலம் ஜாதகரை கைதூக்கியும் விட்டுள்ளது.

ராகுவின் சதய  நட்சத்திம் 4 ஆம் பாதத்தில் ராகு திசை சூரிய புக்தியில் பிறந்த ஜாதகர் ராகுவின் சாரத்தில் நின்ற சந்திரனின் புக்தியில் தனது இரண்டாவது வயதில் கண் பார்வையை இழந்தார்.

குழந்தை பிறந்தவுடன் படைத்தவன் ஜாதகரின் கண்களைப் பறித்துவிடுவான் என்பதை அறியாத அப்பாவிப் பெற்றோர் ஜாதகருக்கு கண்ணன் எனப் பெயரிட்டனர் என்பதை  இறைவனின் திருவிளையாடல் என்று சொல்வதைத் தவிர வேறென்ன சொல்வது?


பின்வரும் இரண்டாவது ஜாதகத்தைக் கவனியுங்கள்.

செவ்வாய் திசை இருப்பு : 5 வருஷம்  5 மாதம்  28 நாட்கள்.

ஜாதகர் இதுவரை மணமாகாத ஒரு ஆண்.

கால சர்ப்ப தோஷ ஜாதகம். லக்னத்திற்கு 2 ல் செவ்வாய் நீசம். ராசியும் ராசிக்கு 7 வீடும் பாவிகளால் கெட்டது.  லக்னத்தில் நின்ற குரு ஜாதகரை எத்தகைய இடர்பாடுகளில் இருந்தும் காக்க வேண்டும். தாம்பத்திய சுகத்தைக் குறிக்கும் 12 ஆமிடத்தில் ஆட்சியில் உள்ள சுக்கிரன் தாம்பத்யத்திற்கு மனைவியை அளித்தருள வேண்டும். குருவும் சுக்கிரனும் ஜாதகருக்கு ஏற்படும் தோஷங்களிலிருந்து ஜாதகரை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விடுவித்து ஜாதகருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்.

இந்த ஜாதகத்தின் பாவச்சக்கரத்தை இப்போது அலசுவோம்.

ராசிக்கட்டத்தில் சிம்மத்திலிருந்த சனி லக்னத்திற்கு இரண்டாமிடமான கடகத்திற்கு மாறியுள்ளார். கடகத்தில் நீச நிலையிலுள்ள செவ்வாயுடன் சேர்ந்ததால் 2 ஆமிடம் மேலும் கடும் தோஷத்திற்கு உள்ளானது.

ராசிக்கட்டத்தில் 8 லிருந்த சூரியன் 7 ஆமிடத்திற்கு மாறிவிட்டது. அதனால்  7 ஆமிட தோஷம் மேலும் கடுமையானது.

ஜாதகரைக் கடைதேற்றும் என ராசிக்கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட குரு லக்னத்திற்கு 12 ல் மறைந்துவிட்டார். 12 ஆமிடத்தில் ஆட்சியில் நின்ற சுக்கிரன் 11 ஆமிடத்திற்கு மாறிவிட்டார். அதோடு அவர் அப்படி மாறி அமர்ந்த மேஷத்தின் அதிபதி செவ்வாய் ஏற்கனவே நீசமாகி கடும் தோஷத்தை தரவேண்டிய நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

பாவத்தில் ஏற்பட்ட இத்தகைய கடும் பாதிப்புகள் 1978 ல் பிறந்த  ஜாதகரின் திருமண வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டன. தற்போது குருவும் சனியும் உச்சமாகி எழரையாண்டுச் சனியும் விலக உள்ள சூழ்நிலையில் ஜாதகருக்கு ஓரளவு (ஓரளவு மட்டுமே) திருமணத்திற்கான காலம் கனிந்துள்ளது.


பின்வரும் மூன்றாவது ஜாதகத்திற்கு உரியவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 2012 மத்தியில்  குரு ரிஷபத்தில் இருக்கும்போது என்னிடம் ஜோதிட ஆலோசனைக்கு வந்தார்.

சூரிய திசை இருப்பு: 3 வருஷம் 10 மாதம்  16 நாட்கள். 

ஜாதகரின் மகர ராசிக்கு 5 ல் வரும் குரு அற்புதப் பலன்களைச் செய்வார் என்று தொலைகாட்சி ஜோதிடர்கள் கூறிக்கொண்டிருக்க தனக்கு குருப்பெயர்ச்சி ஆனதிலிருந்தே சோதனைதான். என்ன ஜோதிடப் பித்தலாட்டாம் என அங்கலாய்த்தார்.

ஜாதகரின் ராசி மகரமானாலும் பாவத்தின் அடிப்படையில் பார்த்தால் அவருக்கு தனுசு ராசிதான் வருகிறது. தனுசு ராசிக்கு 6 ஆவது ராசியான ரிஷபத்திற்கு வரும் குரு 6 ஆமிடப் பலன்களான கடன், வியாதி மற்றும் எதிர்ப்பு போன்றவைகளைத் தூண்டிவிடுவார். இந்த நுட்பங்களை ஜாதகருக்கு விளக்கியவுடன்  ஜாதகரும் ஜோதிடம் பயில ஆர்வம் காட்டினார்.

பாவச் சக்கரத்தை இப்படி அலசினால் அது ராசிச் சக்கரம் சொல்லாத பல கேள்விகளுக்கு விடை சொல்வதை உணரலாம். எனவே ஜோதிடர்கள் ராசிச்சக்கரம் நவாம்சச் சக்கரங்களை ஆராய்வதோடு நின்றுவிடாமல் குறைந்த பட்சம் பாவச் சக்கரத்தையும் ஒரு ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வது பலன்களை துல்லியமாக அளவிட உதவும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Sunday 8 June 2014

குருப்பெயர்ச்சி – என் தேசம் என் மக்கள்

கருணைக் கடல் களங்கமற்ற முழுமையான ஒரே சுபன் குருபகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்கு இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறார்.

உலக மக்கள் அணைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும். மனித வாழ்வை இயக்கும் இரு மகத்தான மாபெரும் சக்திகள் இவை இரண்டும் என்றால் அது மிகையல்ல. இதை ஜோதிடர்கள் நன்கறிவர். இந்த இரண்டு கிரகங்களுமே தனது உச்ச வீட்டில் இந்த வருடத்தில் நிலைகொள்வது அரிதான செயல்.

இதன் தாக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதில்தான் சாமான்யனுக்கு ஆவல்.

இனி பலன்களைக் காண்போம்.


இந்தியா :


இந்தியாவைப் பொறுத்தவரை அதன் ரிஷப லக்னத்திற்கு பாக்யாதிபதி சனி பகவான் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருக்கிறார். பாக்யாதிபதி உச்சத்திலிருக்கும் போது பாக்யங்களை தரத் தவறாது என்பது ஜோதிட உண்மை. நீதிமான் சனியும் தனது பணியை செவ்வனே செய்துள்ளார். ஆம் இந்தியாவை அதன் மக்களை கொடூர அரசியல்வாதிகளிடமிருந்து காத்துவிட்டார். இந்தப் பணியை தன்னுடன் கோச்சாரத்தில் உடனிருக்கும் ராகுவின் கடும் எதிர்ப்பையும் மீறி செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

ராகுவின் அம்சமே இந்தியாவை ஆட்சி செய்யும் என்று கடந்தவருட குருப்பெயர்ச்சி பற்றிய பதிவிலேயே  பார்த்தோம். ராகு சனியைப் போல செயல்படுபவர் என்பதால்தான் 17 ஆம் தேதி பிறந்து (17.09.1950) எண் ஜோதிடப்படி சனியின் ஆதிக்கத்தில் வரும் 8 ஆம் எண்ணுக்குரியவரும் சனியின்  நட்சத்திரத்தில் (அனுஷம்) பிறத்தவருமான மோடி  தேசத்தை வழி நடத்துபவராக ஆகியிருக்கிறார்.

ராகு விதவைப் பெண்ணை குறிக்கும் என்பதால் விதவையை (சோனியா காந்தியை) தலைவியாகக் கொண்ட காங்கிரஸ் ராகுவின் அம்சம். ராகு நிழல்கிரகம் என்பதால்தான்  காங்கிரஸ் பின்னாலிருந்துதான் தேசத்தை இயக்கியது. சனியின் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் மோடி. எனவே மோடி  சனியின் அம்சம். சனி முழுமையான முக்கிய கிரகம் ஆகும்.எனவே பி.ஜே.பி தேசத்தை நேரடியாக இயக்குவதை காணலாம். ஆனால் சனிக்கு  ராகு (பி.ஜே.பி க்கு காங்கிரஸ்) முழுமையாக துணை நிற்கும்.

கடலில் மூழ்கும் மனிதனின் கடைசி  நேரக் கூக்குரல்போல பிரிவினைவாதிகள் 2016 மத்திவரை கூச்சலிடுவார்கள்  பிறகு காணாமல் போவார்கள் என்று சென்ற வருட குருப்பெயர்ச்சி பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவை படிப்படியாக  காங்கிரசின் சதிராட்டங்களுக்குமுன் அழிவதை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும்  என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தேர்தலில் அதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரிந்தது. தி.மு.க, ம.தி.மு.க , சமாஜ்வாடி , பா.மா.கா, பகுஜன் சமாஜ் கட்சி போன்ற அத்தகைய கட்சிகளை காங்கிரஸ் கட்டம்கட்டி காணாமல் போகச் செய்ததை கண்கூடாகக் காண முடிந்தது . இதில் கம்யுனிஸ்டுகளும் காணாமல்போனதுதான் வேதனை. இனி வரும் காலங்களில் இந்தக் கட்சிகளை பி.ஜே.பி கையாளும் விதத்தைப் பார்த்து  இக்கட்சிகள்,  காங்கிரசும் பி.ஜே.பியும் இரட்டைக்குழாய்  கொண்ட ஒரே துப்பாக்கிதான் என்பதை உணரும் .

தற்போது இந்தியாவின் ராசியான கடக ராசிக்கு பாக்யாதிபதியான குருவும் தனது உச்ச வீட்டிற்கு வருகிறார். மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுக்கவிருக்கிறார் என்பதை அறிந்து கிரகங்கள் அதன் உச்ச வீட்டிற்கு விரைந்தன என்பது புராண கதை (ஸ்ரீராமனின் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம்). தற்போது சுதந்திர இந்தியா தனது ஜாதக தோஷங்கள் அணைத்திலும் இருந்து விடுபட்டு சரியான பாதைக்குத் திரும்பியுள்ள சூழ்நிலையில் இந்த குருப்பெயர்ச்சி அதி முக்கியத்துவம் வாய்ந்தது.கோவர்த்தனகிரியை தனது சுண்டுவிரலால் தூக்கி மக்களைக் காத்த அந்த கோபாலனைப் போல நம் இந்தியாவைக் காக்க மோடியை அனுப்பி வைத்தான் இறைவன்.
படம் உதவிக்கு நன்றி: இஸ்கான்.


சனியைப் போல் ராசிக்கு பக்யாதிபதி குருவும் நமது தேசத்திற்கு பாக்யங்களை தரத் தயங்கமாட்டார் என்பது உறுதி. கடந்த வருட குருப்பெயர்ச்சி பற்றிய பதிவில் நான் குறிப்பிட்டவற்றை இங்கு நினைவு கூர்வோம்.

அதில் முக்கியமானவை, நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது, தேசம் இருகட்சி ஜனநாயக முறைக்குத் திரும்புவது, ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள், தமிழகமின்வெட்டு  போன்றவை. குறிப்பாக பாதுகாப்பு, ராணுவம்  மற்றும் அது தொடர்புடைய வின்வெளி &  ஏவு சாதனங்கள் போன்றவற்றில் எப்போதும் இல்லாத பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.  சென்ற வருட குருப்பெயர்ச்சி பதிவில் நான் மேலும் சிலவற்றை  குறிப்பிட்டிருந்தாலும்  அவை அணைத்தையுமே நேரடியாக மக்கள் உணர முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரிவிணைவாதிகள் மற்றும் தேசவிரோத, சுயநல அரசியல்வாதிகள் சூழ்ச்சிக்காரர்கள் மக்களால் ஒதுக்கப்படுவர் என்றது நடந்தது என்றாலும் காங்கிரசும் பி.ஜே.பியும் வெளிப்படையாகக் கூறமுடியாத சில அவசியத்தின் பொருட்டு இவர்களை இன்னும் சில ஆண்டுகள் முழுமையாகக் அழித்துவிடாது கட்டுப்படுத்தி மட்டுமே வைத்திருக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

உலகம்:
உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்கு உயரும். அதன் பொருளாதாரம் மேம்படும். ஆனால் அமெரிக்கா இனி இந்தியாவின் உதவியின்றி உலக அரங்கில் தன்னால் கோலோச்ச முடியாது என்ற உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளும்.

சீனாவிற்கும் இந்தியாவிற்குமான உறவு சீரடையும் என்றாலும் சில மறைமுகமான விரும்பத்தகாத விளைவுகள் மகர ராசியில் செவ்வாய் உச்சமடைந்து விருச்சிகச் சனியால் பார்க்கப்படுபோது (மார்கழி மாதம்) ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது  டெல்லி, ஸ்வீடன், பிரசில், மொராக்கோ, நார்வே போன்றவை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

சீனா தனது நாட்டில் வளர்ந்துவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஒடுக்க ஈவிரக்கமற்ற முறைகளைக் கையாளும்  என்றாலும் சில குண்டுவெடிப்புகளை தடுக்க இயலாது. ஆனால் குரு பார்வை செவ்வாய்க்கும் விருச்சிக ராசியிலிருக்கும் சனிக்கும் ஏற்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் பெரும் சீரழிவைக் கொண்டுவரும். அமெரிக்கா மட்டுமின்ற சீனா மற்றும், ரஷ்யாவும் அதை ஒடுக்க முன்வரும் என்றாலும் அது உடனடியாக முடியாது. ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாவர் என்பதை சனி, ராகு, செவ்வாயின் நிலை குறிப்பிடுகிறது.

தனுசு ராசி அமைப்பில் வரும் அரேபிய தீபகர்ப்பத்தில் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் அதிகமாகும். காரணம் தனுஷு ராசிக்கு நவம்பர் மாதம் ஏழரை சனி துவங்குகிறது.  அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவிற்கும் கருத்துவேறுபாடு அதிகமாகும். அதனால் அவ்விரு நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகவிருப்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. டிசம்பர் மாதம் தனது உச்ச வீட்டில் வக்கிரமடையும் குரு அப்படி ஒரு சூழ் நிலையை ஏற்படுத்துவார்.

மீன ராசி அமைப்பில் வரும் இலங்கை சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மதிப்பான நிலைக்கு மாறும். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே செயல்படும். மீனவ மற்றும் கச்சத்தீவு பிரச்சனைகளைப் பொறுத்தவரை அவை இரு நாட்டு நல்லுறவைப் பாதிக்காது. காரணம் அது அரசியல் காரணங்களுக்காக இந்திய இனவாத அரசியல்வாதிகளால் ஏற்படுத்தப்படும் ஒரு மாயையே.

பாகிஸ்தானின் சுதந்திர ஜாதகம்.

பாகிஸ்தான் உள்நாட்டுத் தீவிரவாதத்தால் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்படும் என்பதை பாகிஸ்தானின் ஜாதகத்தில் சுக்ரதிசையில் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கும் சனி புக்தி மற்றும் கிரக சஞ்சார நிலைகளில் இருந்து அறியமுடிகிறது. பாகிஸ்தான் விரித்த வலையில்  பாகிஸ்தானே விழுந்து தப்பிக்க வழியின்றி தவிக்கும். மக்கள் பாகிஸ்தானில் பிழைத்திருக்க எத்தகைய செயலுக்கும் துணிவர். ஆளும் தலைவர்களை நம்பிப் பயனில்லை எனும் சூழ்நிலையில் மக்கள் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. மக்களின் ஒரு பிரிவினர் அரசுக்கு எதிராகப் போராடாமல் அதன் ராணுவத்திற்கு எதிராகப் போராடும் அதிசய நிகழ்வை வரும் மாதங்களில் அங்கு  காணலாம். ஆளுபவர்கள் மக்களுக்காக இல்லாமல்  தங்களைக் காத்துக்கொள்ள ராணுவத்துடன் இணைந்து செயல்படுவர். அதனால் ஆள்கடத்தல் மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதல் மரணங்கள் பாகிஸ்தானில் சர்வ சாதாரணமாகிவிடும்.

மனிதனை அழிக்க மனிதனே கருவியாகும் தற்கொலைப்படை தாக்குதலை ராஜீவ்காந்தி மரணம் மூலம் உலகிற்கு விடுதலைப்புலிகளால் அறிமுகப்படுத்தியவன்  தமிழன் என்ற முறையில் ஒரு தமிழன் என்று கூறுவதற்கே நான் வெட்கப்படுகிறேன்.


தமிழ்நாடு:
சனிப்பெயர்ச்சிக்குப் பிறகே 90%  மின்வெட்டு இருக்காது என்று கடந்த ஆண்டு எழுதியிருந்தேன். அதன்படியே நடக்கிறது. ராகு கேதுப் பெயர்ச்சி மற்றும் சனிப் பெயர்ச்சிகள் தமிழக அரசின் மின்திட்டங்கள் முழுமையான செயல்பாட்டுக்கு வர வருட இறுதியாகும் என்பதைக்  குறிப்பிடுகின்றன. திட்டங்களை தீட்டுவது மனிதர்கள்தான் எனினும் அவை செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் கால கட்டத்தை கிரக நிலைகளைக் கொண்டு தெளிவாக அறியலாம்.

அரசியலில் இது ஜெயலலிதாவின் காலமே. அரசை ஜெயலலிதா மிகச் சிறப்பாகவே வழிநடத்துவார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலும் அவருக்கு சாதகமே என்பதை அவருக்கு நடக்கும் குரு திசையின் வலிமையை வைத்து தெளிவாக அறியலாம். மூன்று கிரகங்கள் உச்சமான  கருணாநிதியின் ஜாதக வலு தற்போது செயலிழந்துவிட்டது.

பி.ஜே.பிக்கு தமிழ் நாட்டிலிருந்து முக்கியமான உதவிகள் கிடைக்கும் என்பதை கிரகச் சூழ்நிலைகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

மோடியின் முன் உள்ள சவால்கள்:
உள் நாட்டுப் பாதுகாப்பு.
நக்சலைட்டுகளை வேரறுப்பது.
இயற்கைவளங்களை அழிக்காது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது.
விவசாயத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பது.
உற்பத்தி, வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம்.
ராணுவ பாதுகாப்புக் கட்டமைப்பை பலப்படுத்துவது, அவற்றிற்குத் தேவையான நவீன தளவாடங்களை தடையின்றி கிடைக்கச் செய்வது.
வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது.
நீராதாரங்களை பாதுகாப்பது மற்றும் நதி நீர் மேலாண்மையை சீரமைப்பது.
மதமாற்றத்தை ஒழிப்பது. முக்கியமாக கிறிஸ்தவத்தின் மூலம் நமது பண்பாட்டை சிதைக்க முயலும் அந்நிய சக்திகளை அழிப்பது. அதாவது கிறிஸ்தவத்தை வேரறுப்பது.
கூடங்குளம் போன்று தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியமானவைகளை தடைசெய்திட முயன்ற வெளிநாட்டு சதிக்குத் துணை நிற்பவர்களை பைத்தியக்காரர்களாக்குவது. அதன் மூலம் அத்தகைய அந்நிய சக்திகள் இந்தியாவைக் கண்டு நடுநடுங்கச் செய்வது.
தேச வளர்ச்சிக்கு தேவையான சிறந்த தலைவர்களை உருவாக்குவது.
மதம், இனம், மொழி,பிராந்திய, ஜாதீயவாதிகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்வது. இவைதொடர்பான சமுதாய மற்றும் அரசியல் அமைப்புகளை கட்டுப்படுத்துவது.
செயலற்றுவிட்ட நீதித்துறையை வலுப்படுத்துவது. (ஆனால் இவற்றிற்கு சுயாச்சி அளித்தால் இத்துறையினருக்கு சம்பளம் அமெரிக்காவிலிருந்துதான் வரும் என்பதால் சுயாச்சி கூடாது.)
கல்விக்கு, சுற்றுப்புற சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது. (சீனாவில் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடுவிளைவிப்பவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படுகிறது).
வளர்ச்சிக்குத் தேவையான எரிபொருள், மின்சாரம் போன்றவற்றில் அதிக ஆய்வும் முதலீடும் தேவை. இல்லையேல் வளர்ச்சி தடைபடும்.
வனவளங்களை பாதுகாப்பது. மரம் வெட்டுபவர்களையும் மரக்கடத்தலுக்கு துணை புரிபவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை அளிப்பது.
இவை எல்லாவற்றையும்விட தவறு செய்துவிட்டு மத, மொழி, இன, பிராந்திய, ஜாதீயப் போர்வைக்குள் ஓடி ஒளியும் பாதகர்களை கடுமையாகத் தண்டிப்பது அவசியம். இதற்கு பொது சிசில் சட்டம் அவசியம்.
வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரஸ் வகுத்துச் சென்ற பாதை சிறப்பானதே. அவசியம் ஏற்பட்டாலன்றி அதில் மாற்றம் கூடாது.
அண்டை நாடுகளுடன் உறவுகளை மோடி எப்படி கையாள்கிறார் என்பதிதான் பி.ஜே.பி யின் வெற்றி உள்ளது. எனவே அண்டை நாடுகளுடனான உறவில் மிகுந்த கவனம் தேவை.

இந்தியாவின் இறையாண்மை என்பது பாகிஸ்தானைச் சார்ந்தே உள்ளது.
காஷ்மீரைப் பொறுத்தவரை அங்கு அரசியலைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவில் பல மாற்றங்கள் தேவை. ஆனால் அதை நீக்குவது கூடாது என்பது எனது தனிப்பட்ட அபிமானம். அதாவது காஷ்மீரில் அங்கு பூர்வ குடிமக்களான பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். காஷ்மீரில் திருமணம், குடியுரிமை போன்றவற்றில் இந்தியாவின் உரிமை முழுமையாக நிலை நாட்டப்பட வேண்டும். இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பிரிவினைவாதிகளின் ஆணிவேர்கள் இந்தியாவின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இயங்கவேண்டும். மறுப்பவர்கள் ஒழித்துக் கட்டப்படவேண்டும். ஆனால் அங்கு பிற மாநிலத்திவர்கள் குடியேற, நிலம் வாங்கும் உரிமைகளில் நீடித்த நடைமுறை தேவை. அவசரகதியில் இவற்றை செயல்படுத்தக் கூடாது. ஏனெனில் அது எதிர்மறை விளைவுகளைத் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது.  


விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

குறிப்பு: 
ஆய்வுக்கு உதவிய ஆதார நூல்கள்; சாராவளி, உத்திர காலமிர்தம்.

குறிப்பிட மறந்த பிற்சேர்க்கை:
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இவ்வருட பின்பகுதியில் குரு திசையில் துவங்கும் சனி புக்தி சில இடர்பாட்டைத் தர உள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சியாகி வரும் அஷ்டமாதிபதி குருவும் ராசிக்கு 4 ல் (அர்தாஷ்டமத்தில்) விருச்சிக ராசியில்  நிலை கொண்டு சிம்ம ராசிக்கு ராஜ்ய ஸ்தானமான 10 ஆமிடத்தைப் பார்க்கும் சனியும் அவரது பதவிக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனினும் சனி லக்னாதிபதி புதனின் சாரத்தில் உள்ளதாலும் குருவின் வீட்டில் நிலைகொண்டுள்ள கேதுவாலும் இது தவிர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு. கேது 11 ஆம் பார்வையாகவும் விருச்சிக சனி 3 ஆம் பார்வையாகவும் சிம்ம ராசிக்கு 6 ஆமிடத்தை (எதிரி ஸ்தானத்தை) பார்ப்பதாலும்  இது தவிர்க்கப்படக்கூடும். நாட்டில் நல்லாட்சி தொடரவேண்டும் என்ற ஆவலில் இது எச்சரிக்கையாக முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது.