Sunday 18 May 2014

கிரகங்கள் ஆடும் இரண்டாவது இன்னிங்க்ஸ்

திசா-புக்தி நுட்பங்கள் - பகுதி 1

கிரகங்களில் சூரிய சந்திரர்களைத் தவிர மற்றவை அனைத்தும் இரண்டு வீட்டுக்கு ஆதிபத்தியம் பெற்றவை என்பது அணைவரும் அறிந்ததே. உயிரினக்களுக்குத் தந்தையும் தாயுமான  சூரிய சந்திரர்கள் மட்டுமே ஒரே சீரான பலன்களை  தங்களது திசாபுக்திகளில் ஜாதகருக்கு வழங்குவர். இதில் சந்திரன் தனது  இயல்புக்கேற்ப  ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட பலன்களையே தனது திசையில் ஒரு ஜாதகருக்கு அளிப்பார். சந்திரன் உட்பட அணைத்து கிரகங்களும் ஜனன ஜாதகத்தில் உச்ச கதி போன்று வலுவான நிலையில்  இருந்தால் தங்களது திசை முழுதுமே நல்ல பலன்களையே வழங்கும். செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் தங்களது திசையில் அவைகளுக்குரிய இரு பாவங்களின் பலன்களையும் தங்களது திசா – புக்திகளில் இரண்டாகப் பிரித்து வழங்கும்.

கிரிக்கெட் விளையாட்டில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் போன்ற நிலை இது. முதல் இன்னிங்ஸ் சிலருக்கு ஊற்றிக்கொண்டுவிடும் இரண்டாவது இன்னிங்ஸில் பிரமாதப்படுத்தும். சிலருக்கு முதல் இன்னிங்க்ஸ் பிரமாதப்படுத்தும். இரண்டாவது இன்னிங்க்ஸ் ஊற்றிக்கொண்டுவிடுவதும் உண்டு. 

ராகு – கேதுக்கள் தாங்கள் அமர்ந்துள்ள பாவம் மற்றும் பாவதிபதியை சார்ந்தே தங்களது திசா புக்தி பலன்களை அளிப்பார்கள்.

உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னம் எனக் கொள்வோம். ஜாதகர் குரு திசையை எதிர்கொள்கிறார் எனக்கொள்வோம். குருவானவர் சிம்ம லக்னத்திற்கு 6 ஆவது பாவமான  தனுசுக்கும் 8 ஆவது பாவமான மீனத்திற்கும் அதிபதி என்பதால் குரு திசையானது தனது திசைக் காலம் 16 ஆண்டுகளும் ஒரே மாதிரியான பலன்களை வழங்காது. முதல்  8 ஆண்டுகள் தனது இரு பாவங்களில் ஒரு பாவத்தின் பலனையும் மீதி  8 ஆண்டுகள் தனது மற்றொரு பாவத்தின் பலனையும் ஜாதகருக்கு வழங்கும். இதில் எந்த பாவத்தின் பலனை முதலில் வழங்கும் என்பதை கோட்சார சனி மற்றும் குருவின் நிலையக் கொண்டு தெளிவாக அறியலாம்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகி தற்போதும் வளைகுடா நாடு ஒன்றில் கணவருடன் வசித்து வருபவர்.

90 களின் துவக்கத்தில் வளைகுடா சென்ற தனது கணவருடன் தானும் சென்றிட அதிக பட்ச பிரயாசைப்பட்டார். ஆனால் இவரால் 96 ன் மத்தியில் தான் தனது கணவருடன் சென்று சேர முடிந்தது. கணவரை பிரிந்திருந்தது மற்றும் ஒன்று சேர்ந்தது இரு நிகழ்வுகளும் புதன் திசையில்தான் நிகழ்ந்தது. ஜாதகிக்கு 1988 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை 17 வருடங்கள் புதன் திசை. அதில் முதல் பகுதி எட்டரை வருடங்களான 1996  மத்திவரை ஜாதகியால் குடும்பச் சூழல் காரணமாக கணவருடன் சென்று சேர்ந்திட இயலவில்லை. புதன் திசையின் இரண்டாவது பாவ ஆதிக்க காலம் துவங்கியதுமே ஜாதகி வெளிநாடு சென்று கணவருடன் சேர இயன்றது.

என்ன காரணம்?.

புதன் ஜாதகியின் சிம்ம லக்னத்திற்கு லாபத்தில் (11 ல்) மிதுனத்தில் ஆட்சியில்  இருந்தாலும் உச்ச, ஆட்சி வீட்டிலிருக்கும் கிரகங்கள் வக்ர கதியடைந்தால் வலுவிலந்திவிடும் என்பதற்கேற்ப வலுவிழந்துவிட்டது. புதன் அஸ்தங்கமடைந்ததும் ஒரு காரணம் என்றாலும். புதனுக்கு அஸ்தங்க விதி பெரிய பாதிப்பைத் தந்திடாது என்பது அனுபவ உண்மை. புதன் குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாவது பாவத்திற்கும் லாபத்தைக் குறிக்கும் பதினோராவது பாவத்திற்கும் அதிபதி. புதன் வக்ரமடைந்ததன் பாதிப்பு அதன் திசையில் முதல் எட்டரை வருடங்களில்தான் ஏற்பட்டது. அதுவும் அதன் இரு பாவங்களில் குடும்ப பாவத்திற்குத்தான் ஏற்பட்டது.

எப்படி ஏற்பட்டது?.

புதன் திசை துவங்கியதுமே ஜாதகியின் கணவர் வெளிநாடு செல்ல முன்முயற்சி எடுத்து அதில் வெற்றிபெற்று குடும்பத்தைப் பிரிந்து வளைகுடா சென்றார். ஜாதகி குடும்ப வாழ்வை அனுபவிக்க இயலாத சூழல் இதனால் ஏற்பட்டது. இது புதன் தனது திசையின் முதல் எட்டரை ஆண்டுகள் வரை அதாவது 1996 மத்திவரை நீடித்தது. பிறகு புதன் தனது இரண்டாவது பாவமான லாப ஆதிபத்திய பலனை வழங்க ஆரம்பித்த பிறகு ஜாதகிக்கு விசா கிடைத்து வெளிநாடு சென்று தனது கணவருடன் இணைந்தார்.

இதை ராசி ரீதியாக பார்த்தால், புதன் திசையின் முதல் எட்டரை ஆண்டுகள் ஜாதகியின் துலாம் ராசிக்கு விரைய பாவமான புதனின் கன்னி ராசிக்கான பலனை அளித்து ஜாதகியின் முயற்சிகளை விரயங்களாக்கியது எனலாம். இரண்டாவது எட்டரை ஆண்டுகள் துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான (9வது பாவம்) புதனின் மிதுன ராசிக்கான பலனையும் அளித்துள்ளதை அறியலாம். 9 வது பாவத்தின் திசையோ அல்லது புக்தியோ நடப்பின் ஒரு ஜாதகர் வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இந்தக் குறிப்பிட்ட விதியானது ராசிப்படி பார்த்தால் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது.  

இனி குடும்ப காரகன் குருவின் கோள்சாரத்தைக் கவனித்தால், ஜாதகிக்கு புதன் திசை ஆரம்பித்த போது ஜாதகியின் துலாம் ராசிக்கு அஷ்டமத்தில் (8 ல்) ரிஷபத்தில் இருந்து குடும்பத்தை பிரித்தார். பிறகு திசா நாதன் புதனின் வீட்டில் ராசிக்கு ஒன்பதில் வந்தாலும் திசா நாதன் புதனை மீறி குருவால் பலனளிக்க முடியாது. ராசிக்கு பத்தில் குரு உச்சமானாலும் ராசிக்கு பகைவனானதால் நற்பலனை வழங்கவில்லை. குரு ராசிக்கு லாபத்தில் சிம்மத்திற்கு வந்தபோதும்  சர ராசிக்கு லாபம் பாதக ஸ்தானம் என்பதற்கேற்ப குரு நற்பலனை வழங்கவில்லை. குரு ஆறாமதிபதியாகி 12 ல் மறைந்தபோது கணவர் இந்தியா வந்து ஜாதகியுடன் விடுமுறையில் உறவு பாராட்ட மட்டுமே முடிந்தது. பிறகு ஜென்ம ராசி குருவும் ஜாதகியின் குடும்ப வாழ்வை பிரித்தே வைத்தது. குரு ராசிக்கு இரண்டில் வந்த பிறகு ஜாதகி கணவருடன் இணைய கடும் முயற்சி எடுக்க வைத்து 96 மத்திக்குப் பிறகே ஜாதகி வெளிநாடு சென்றார்.

கீழே மற்றொரு ஆண் ஜாதகத்தைக் கவனியுங்கள் 


ஜாதகருக்கு 2001 மே மாதம் முதல் சனி திசை. சனி பகவான்  ஜாதகருக்கு லாபத்திற்கும் விரயத்திற்கும் அதிபதி. சனி திசை 19 வருடத்தில் முதல் ஒன்பதரை வருட காலம் அதாவது 2010 இறுதிவரை ஜாதகர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார். உச்சமாகி வக்கிரமான கிரகம் வலுவிழந்துவிடும் என்ற ஜோதிட விதிப்படி ஜனன காலத்தில் வலுவிழந்த லக்னாதிபதி குருவும் அதற்கு ஒரு காரணம். சனி திசையின் முதல் ஆதிபத்திய காலத்தில்தான் ஜாதகர் ஏழரை ஆண்டுச் சனியைக் கடந்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சனி திசையின் இரண்டாவது ஆதிக்க காலம் லாப ஆதிக்கமானதால் ஜாதகர் தற்போது பொருளாதார சிரமங்களிலிருந்து விடுபட்டு ஓரளவு நல்ல சூழ்நிலையில் உள்ளார்.

இவ்வாறு ஒரு ஜாதகருக்கு எப்போது நல்ல பலன்களும் எப்போது சிரம பலன்களும் ஏற்படும் என்பதை திசா புக்திகள் மற்றும் கோள்சாரங்களைக் கொண்டு துல்லியமாக அளவிட முடியும்.

ஜோதிடம் காலதேவனின் பணியை கணக்கிட்டு மனித வாழ்வை மட்டுமல்ல அணைத்து உயிர்களின் வாழ்வையும் பாதுகாத்திட நமது ஆன்றோர்கள் வழங்கிய அறிய பொக்கிஷம். நல்ல முறையில் இதை பயன்படுத்துவோம்.

மற்றொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.