Thursday 11 September 2014

பாதாள லோக யோகம்

ஜோதிட யோகங்களில் இந்த பாதாள லோக யோகமும் ஒன்று. பண்டைய நாளில் இந்த பாதாள லோக யோகம் மிக கொடுமையான ஒரு யோகமாகக் கருதப்பட்டது. காரணம் இதன் பலன்கள்.

இதற்கான ஜோதிட அமைப்பு என்னவெனில் லக்னத்திற்கு 7 ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து நின்றால் அத்தகைய அமைப்பு பாதாள லோக யோகம் எனப்படும். லக்னம் சரமாகவும் அமைந்து  இவ்விரு கிரகங்களும் கேந்திராதிபதிகளுமாகி இப்படி 7 ஆமிடத்தில் இணைந்து நின்றால் இந்த யோகம் இன்னும் தீவிரமாக செயல்படும்.

எல்லாம் சரி இதன் பயன் என்ன? ஏன் இந்த யோகம் கொடியது?

இந்த யோகம் ஜாதகத்தில் அமையப்பெற்றவர் தான் பிறந்த மண்ணை, பெற்றோரை, உறவுகளை விட்டு திரும்பி வர இயலாத பாதாலத்திற்குச் சென்றிடுவார் என்பதே இதன் பயன்.

பண்டைய மனிதன் பூமி உருண்டை என்பதை ஒரு வழியாக உறுதி செய்துகொண்டபின். தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவிலும் தங்களைபோன்றே மனிதர்கள் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழும் பகுதி தாங்கள் வாழும் பூமிப் பந்தின் கீழ்பகுதியில் இருக்கும் என்பதையும் அனுமானித்ததார்கள். தாங்கள் வாழும் பகுதியை பூலோகம் (பூமி உலகம் – லோகம் என்றால் உலகம்) என அழைத்த அவர்கள் பூமியின் மறுபகுதியையே பாதாளலோகம் என அழைத்தனர். வாகன வசதிகளற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்நாளில் அப்படி பூமிப் பந்தின் மறுபகுதிக்குச் சென்றவர் திரும்ப வர இயலாது என்பதாலேயே இந்த யோகம் கொடுமையானது என அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் சென்னையில் இருந்து இந்த யோகத்தை கணக்கிட்டால், சென்னைக்குக் கீழே அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் வருகிறது. இன்று இந்த யோகம் வாய்க்கப்பெற்ற ஜாதகர் எளிதாக தனது வாழிடத்தை வெளிநாட்டில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அமைத்துக்கொள்வார் எனலாம். அதற்கான சூழ்நிலை ஜாதகப்படி ஜாதகருக்கு வாய்க்கும்.

அமெரிக்காவிற்கு தற்காலத்தில் விமானப்பயணம் செய்து ஓரிரு நாளில் சென்றுவிடலாம். திரும்புவதும் அவ்வாறே.

இன்று இந்த யோகம் எனக்கு இருக்கிறதா சொல்லுங்கள் என ஆர்வத்துடன் சிலர் ஜோதிடரிடம் வருகின்றனர். பாதாளத்திற்குப் போவதற்கு அப்படி என்னய்யா ஆர்வம் என விளையாட்டாய் நான் கேட்பதுண்டு.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் கொடுமையாகப் பார்க்கப்பட்ட ஒரு ஜாதக அமைப்பு, வாகன வசதிகள் வளர்ந்தவிட்ட தற்காலத்தில் விரும்பத்தக்கதாக மாறிவிட்டது காலத்தின் அதிசயம்.

பின்வரும் ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகர் பிறந்த ஆண்டு 1984.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 2 வருடம், 4 மாதங்கள், 0 நாள்.


மேஷ லக்னத்திற்கு 7 ல் உச்ச சனியுடன் செவ்வாய் சேர்க்கை. எனவே பாதாள லோகம் உள்ளது. யோக பலனின்படி ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஜாதகர் மலேசியாவில் வசிக்கிறார். இந்த யோகத்திற்கு துணை செய்யும் இதர அமைப்புகளும் ஜாதகத்தில் உண்டு. அவை பின்வருமாறு.

லக்னத்திற்கு 2 ல் அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்தை உறுதிப்படுத்துகிறது.

வெளிநாடு செல்லும் அமைப்பிற்கு 4 மற்றும் 9 ஆகிய பாவங்கள் ஜலராசிகளாகவோ அல்லது ஜலக் கோள்களுடனோ தொடர்புகொண்டிருக்க வேண்டும் என நான் முந்தைய பதிவில்  குறிப்பிட்டேன். இந்த ஜாதகத்தில் நான்காமிடம் ஜலராசியான கடக ராசியாகி அதன் அதிபதி சந்திரன் லக்னத்துடன் தொடர்புகொண்டது ஜாதகர் வெளிநாடு வாசம் செய்வார் என்பதை அறிவிக்கிறது. மேலும் 9 ஆமிடத்தில் ஜலக்கோளான குரு ஆட்சியில் நின்றது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்திற்கு உறுதுணை புரியும் அமைப்பு.

(பாண்டியராஜன் – புதுக்கோட்டை) போன்ற சில வாசகர்கள் 3 மற்றும்  12 ஆமிடத் தொடர்பு வெளிநாடு செல்ல எவ்விதம்  உதவும் எனக் கேட்டுள்ளனர். 3 ஆமிடம் தாற்காலிகப் பயணத்தையும் 12 ஆமிடம் பரதேசம் செல்வதையுமே குறிக்கும். 12 ஆமிடம் இழப்புகளைக் குறிப்பிடும் இடம் என்பதால் அவ்விடத்தோடு தொடர்புகொள்ளும் ஜலக்கோள்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பை வழங்கினாலும் அவை தொடர்புடைய காரகங்களில் இழப்பையும் கூடவே வழங்கிவிடும்.

உதாரணமாக குரு 12 ல் அமைந்தால் ஜாதகர் வெளிநாடு சென்றாலும் குருவின் காரகப்படி ஜாதகருக்கு தகுந்த ஊதியமின்மை, குடும்பம் அமைவதில் தடை, குடும்பம் அமைந்தாலும் மனைவியைப் பிரிந்திருப்பதால் புத்திர பாக்கியத்தடை போன்றவற்றை உருவாக்க வாய்ப்புண்டு. வளைகுடா சென்ற பல அன்பர்களின் ஜாதகத்தில் இத்தகைய அமைப்புகள் காணப்படுவதை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம்.


பின்வரும் மற்றொரு ஜாதகம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணினுடையது.    

இந்த ஜாதகியும் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர்தான்.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 1 வருடம், 0 மாதம், 23 நாட்கள். 

இந்த ஜாதகத்தில் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கை உள்ளது அதனால் இதுவும் பாதாள லோக யோக ஜாதகமே.

ஒரு ஜாதகத்தில் லக்னம் உயிர் என்றால் ராசியானது உடலை, மனதைக் குறிக்கும். ராசியும் லக்னமும் நட்பு, பகை அல்லது சமம் போன்ற எத்தகைய உறவுகளைக் கொண்டிருந்தாலும் அவை இரண்டும் ஜாதகத்தில் இணைந்தே செயல்படும். அதனால்தான் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி சாரத்தில் நிற்கும் கிரகங்களும் ஜாதகருக்கு நன்மையே செய்ய விளையும் என்கிறோம். இத்தகைய ஜோதிட விதிகள் மிக நுட்பமானவை. ஜோதிடம் பயிலும் அன்பர்கள் இவற்றை குறித்து வைத்துகொள்ளவேண்டும்.

லக்னத்தை முதன்மையாகக் கொண்டே பலன்களை கணிக்க வேண்டும் என்றாலும்.லக்னம் அல்லது ராசியில் எது வலிமை உடையதோ அதை முதன்மையாகக் கொண்டு கணிப்பதும் ஒரு முறை. இதில் மேலோட்டமாக சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் உள்ளார்ந்து ஜாதகத்தை ஆராயும்போது இரு சக்கர வாகனத்தின் இரு சக்கரங்களைப் போல லக்னம், ராசி இரண்டும் ஒரே மாதிரியான பலன்களையே குறிப்பிடும். லக்னத்தைக் கொண்டு கணிக்க இயலாத சில விபரங்களை ராசியைக் கொண்டு கணிக்கலாம். இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்வதால் அதிகப்படியான விளக்கங்கள் கிடைக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி அம்சத்தில் நீசமாகி வலு குன்றியுள்ளது கவனிக்கத்தக்கது. அதனால் இங்கு ராசியை முதன்மையாக எடுத்துக் கொண்டால் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கையால் பாதாள லோக யோகம் உள்ளதை கவனிக்கலாம்.

இந்த யோகத்திற்கு துணைபுரியும் அமைப்புகள் என்றால் லக்னத்திற்கு 4 ல் அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது மற்றும் ராசிக்கு 9 ல் ஒரு ஜலக்கோள் குரு ஆட்சியில் உள்ளதைக் குறிப்பிடலாம்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.