Friday 21 October 2016

செவித்திறன்

மருத்துவ ஜோதிடம் - பகுதி1
ஜோதிடத்தில் பல வகைகள்.

நிமித்தம்
சகுனம்
சாமுத்ரிகா லக்ஷணம்
மச்ச சாஸ்திரம்
கௌரி சாஸ்திரம்
கைரேகை
எண் கணிதம் என்று இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது.

இவற்றுள் இயற்கை & அரசியல் நிகழ்வுகளை கணித்தல், மருத்துவ ஜோதிட முறைகள் முக்கியமானவை.

இப்பதிவில் நாம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவ ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்தை அலசுவோம்.

மருத்துவ ஜோதிட முறை பாரம்பரிய ஜோதிடத்தில் முக்கியமானது. ஒருவரது உடலில் என்ன வகையான நோய் ஏற்படும் அது எந்த திசா-புக்தி & கோட்சாரத்தில் ஏற்படும். அதன் தாக்கம் எந்த அளவு இருக்கும் என்பதை அறிந்துகொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் அதன் தாக்கத்தை குறைக்கலாம்.

பெற்றோரின் சர்க்கரை வியாதி தனக்கு வர வாய்ப்புள்ளதை அறிந்து உணவுக்கட்டுப்பாட்டிலும் நடைப்பயிற்சியிலும் அதை தள்ளிப்போட தவிர்க்க முயற்சி செய்வது போலத்தான் இதுவும்.

பொதுவாக சூரிய கிரகணங்கள் பூமியில் அதிகமாக விழும் உத்ராயணத்தில் பிறந்தவர்கள் சூரிய ஒளி குறைவாக பூமியில் விழும் தக்ஷிணாயனத்தில் பிறந்தவர்களைவிட நல்ல உடல்கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பர். நமது அணியில்தான் இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா போன்ற ஒல்லிப்பிச்சான்கள். மேற்கிந்திய அணியில் மட்டுமல்ல பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் உள்ள மேற்கிந்திய தீவுகளில் ஒல்லிப்பிச்சான்களே இல்லை என்பதை அறியவும். அதுபோல் சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.

ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.

கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. சனியின் ஆதிக்க காலங்களான திசா-புக்திகள், கோட்சாங்களில்தான் வியாதியின் வெளிப்பாடு தெரிகிறது. வயதில் மூத்தோர் உடல் ரீதியான சிரமங்களையும் வியாதிகளையும் கொண்டிருப்பதால்தான் அவர்களை சனியின் அம்சங்களாக குறிப்பிடுகிறோம். ராகு நோயின் தீவிரத்தையும் குரு நோயிலிருந்து விடுபடுவதையும் குறிப்பிடுகிறது.

ராசிக்கட்டத்தில் சர ராசிகள் உடலையும், ஸ்திர ராசிகள் உயிரையும், உபய ராசிகள் ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 



ஜாதகத்தில் இரண்டாம் பாவமும் கிரகங்களில் புதனும், ராகுவும் காதுகளை குறிப்பிடுகின்றன. மேற்கண்ட ஜாதகத்தில் புதனின் உச்ச ராசியான கன்னியில் ராகு அமைந்துள்ளது. இரண்டாமிடத்தில் மாந்தி அமைந்து இரண்டாம் வீட்டிற்குரிய சுக்கிரன் லக்னத்திற்கு அஷ்டமாதிபதியுடன் இணைந்து தன் 2ஆம் வீட்டிற்கு 8ல் அமர்ந்துள்ளார். இத்தகைய அமைப்பு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் காரக கிரகமும் லக்னாதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பாதிப்பு குணமடையும் வாய்ப்பும் உள்ளது. லக்னாதிபதிக்கு உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டிக்காக்கும் சக்தி உண்டு என்பது முக்கியமாக அறிய வேண்டிய ஒன்று. 

ஜாதகருக்கு 1996 பிற்பகுதியில் அறுவை சிகிச்சை நடந்தது.

செவிக்கு உரிய பாவமான இரண்டாம் பாவாதிபதி சுக்கிரனின் திசையில் செவித்திரனுக்கு காரக கிரகமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்துவிட்ட பிணி காரகனும் வியாதியை குறிப்பிடும் பாவமான ஆறாம் பாவாதிபதியுமான  சனியின் புக்தியில் லக்னத்திற்கு பாதகாதிபதியும் அஷ்டமாதிபதியான அறுவை சிகிச்சை காரகன் செவ்வாயின் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அமர்ந்த குருவின் அந்தரத்தில் ஜாதகருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இங்கு குரு லக்னத்திற்கு பாதகாதிபதியாகி லக்னாதிபதி புதனுக்கு 12 ல் மறைவு பெற்று கேந்திரத்தில் அமர்ந்ததால் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆட்பட்டு தோஷத்தை கொடுத்தாலும் வியாதியிலிருந்து குணமடைவதற்கு காரகத்துவம் பெற்றதால் குணமடையவும் வைத்துவிட்டார். அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சைக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்ததால் அறுவை சிகிச்சை குரு அந்தரத்தில் நடந்தது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. லக்னாதிபதியின் வீட்டில் அமரும் கிரகம் தோஷத்தை தரக்கூடிய நிலையில் இருந்தாலும் லக்னாதிபதியின் பணியையும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதியாகும்.

சனி புக்தி துவங்கிய 1993 பிற்பகுதி முதல் ஜாதகர் செவித்திரனால் பாதிக்கப்பட்டிருந்தார். சனி வியாதியை குறிப்பிடும் ஆறாம் பாவாதிபதி மட்டுமல்ல, வியாதி குணமடைவதை குறிக்கும் ஐந்தாம் பாவத்திற்கும் அதிபதி ஆவதால் குணமடையவும் வைத்தார். நீதிமான் அல்லவா தனது பணியை இரு வகையிலும் செவ்வனே செய்துள்ளார். அது மட்டுமல்ல இரு பாவங்களுக்கு அதிபதியாகும் ஒரு கிரகம் அதன் திசா - புக்தி காலங்களில் இரு பாவ பலன்களையும் கலந்து வழங்காது. முதலில் ஒரு பாவ பலனையும் பிறகு மற்றொரு பாவத்தின் பலனையும் தனித்தனியாகவே வழங்கும். இது பற்றிய எனது பதிவை கீழ்கண்ட இணைப்பில் சென்று படிக்கலாம்

.கிரகங்கள் ஆடும் இரண்டாவது இன்னிங்க்ஸ் 

ஆராய்ச்சி அன்பர்களுக்கு

ஜாதகருக்கு தற்போது லக்னத்திற்கு இரண்டாம் அதிபதியுடன் இணைந்து இரண்டிற்கு எட்டில் மறைந்துள்ள அஷ்டமாதிபதியும் அறுவை சிகிச்சை காரகனுமான செவ்வாயின் திசை  சென்ற மாதம் (செப்டம்பர்-2016) முதல் துவங்கியுள்ளது. தற்போது ஜாதகர் செவித்திரனில் சில சிரமங்களை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வியாதிகளுக்கு ஜோதிட பரிகாரமாக
குறிப்பிட்ட வியாதிக்கான காரக கிரகம் மற்றும் பாவாதிபதி கிரகங்களுக்கான அதிதேவதைகளை அறிந்து வழிபாடுகளை மேற்கொள்வது மிகுந்த உதவியாக இருக்கும். இந்த வகையில் குறிப்பிடப்படும் கிரகங்களின் அதிர்வலைகள் கிடைக்கும் திருக்கோவில்களுக்கு  சென்று அவற்றை பெறுவதும் உதவிகரமாக இருக்கும். அதோடு குறிப்பிட்ட வியாதியை அதிகப்படுத்தும் காரணிகளை தவிர்த்து குணப்படுத்தும் காரணிகளை நோக்கி நாம் உணவு, உடற்பயிற்சி, யோகாசனம், தியானம் என்ற வகையில் சென்றால் வியாதியிலிருந்து விடுபடவும் வியாதியின் தீவிரத்தை குறைக்கவும் அவை உதவும். 

"அம்மா"வின் ஜாதகத்தை அலசி ஆராயும்படி அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் ஜோதிடரின் முதுகை பிராண்டிக்கொண்டிருக்கும் அன்பர்களுக்கு,

அடியேன் சிறை செல்ல தயாரில்லை என்பதை அறியவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
அலை பேசி எண்:7871244501.

Wednesday 12 October 2016

லக்ன நட்சத்திராதிபதி

ஜோதிட பலன்களை வரையறுப்பதில் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. லக்ன நட்சத்திராதிபதி கிரகத்தையும் ஜாதகத்தில் அது தொடர்புகொண்ட பாவங்களையும் அலசினால் ஜாதகரின் ஒட்டுமொத்த இயல்பையும் மற்றவற்றை ஆராயுமுன் அனுமானித்துவிடலாம். ஒரு உயிர் என்ன காரணத்திற்காக பிறவி எடுத்திருக்கிறது என்பதையும் அது என்ன கர்மங்களில் ஈடுபடும், அனுபவிக்கும் என்பதையும் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகம் தெளிவாய் கூறிவிடும். தேர்ந்த ஜோதிடர்கள் லக்ன நட்சத்திராதிபதி கிரகம் முதற்கொண்டே ஒருவரது ஜாதகத்தை ஆராய்வர்.    

மகாபாரதத்தின் நாயகன் தருமபுத்திரரின் ஜாதகம் கீழே.

                 


லக்னம் ஞான காரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது ஏழாமிடத்தில் அமைந்த குருவை கெடுத்து குடும்ப வாழ்வில் குளறுபடிகள் ஏற்பட வழிசெய்துவிட்டார். ஆனால் அதே கேது நுட்ப அறிவுக்குரிய 5 ஆம் பாவாதிபதியும் காரகனுமான குருவுடன் இணைந்ததால் ஜாதகருக்கு பகைவனும் போற்றும் தரும சிந்தனையை கொடுத்தது. 7 க்கு சுகஸ்தானமான 1௦ ஆம் பாவத்தில் நான்கு கிரக சேர்க்கை என்பது ஏழாமிட தோஷம் எத்தனை   இணைவுகளுடன் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.. தர்மரின் 4 சகோதரர்களுக்கும் ஜாதகரின் மனைவியான திரௌபதி குடும்ப வாழ்வில் இணைந்து பாஞ்சாலியாக வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.

இவ்விடத்தில் வேறு சில விஷயங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். லக்னத்திற்கு 10 ஆமிடத்தில் ஏற்பட்டுள்ள 4 கிரக சேர்க்கை சன்யாச யோகமாகும்.  குரு, 12 ஆமிடம் ஆகியவை வலுவிழந்து இருப்பது இல்லற வாழ்வில் பிடிப்பற்ற நிலையை குறிப்பிடுகிறது. துவாபர யுகம் வரை மனிதர்கள் இத்தகைய அமைப்புகளிலேயே பிறப்பார்கள் என்று சுக்ர நீதி போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த யுகங்களில் மனிதர்களில் பெரும்பான்மையினர் நற்குணவான்களாக (ரஜோ குணம்) இருந்தனர். கலி யுகத்தில் பிறக்கும் மனிதர்களில் பெரும்பான்மையோர் ராக்ஷச குணம் கொண்டவர்களாக அதாவது  சனி,செவ்வாய், ராகு-கேது போன்ற கிரகங்கள் மனிதர்களை தவறாக வழிநடத்தும் ஜாதக பாவங்களில் கலி புருஷனின் கட்டளைப்படி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இரண்டாவதாக மற்றுமொரு ஜாதகம்.

              
சுக்கிரனின் பூராடம் – 4 ல்   லக்னம் அமைந்துள்ளது. சுக்கிரன் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில் அமைந்துள்ளது. ஜாதகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். மருத்துவ கிரகங்கள் சூரியன், கேது, செவ்வாய், புதன் ஆகியவர்களின் நிலையை ஆராய்ந்தால் ஜாதகி ஒரு மருத்துவர் என்பதை அறியலாம்.

இரண்டாமிடத்தில் கேது நின்று 2 க்கு எட்டாமதிபதியான சூரியனுடன் சனி தொடர்புகொண்டதால் ஜாதகி சனியின் காரக அடிப்படையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் அவர் சொந்த ஊரில் இருந்தால் வருமானம் பாதிப்படையும் என்பது ஒரு முக்கிய ஜாதக விதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஜாதகர்கள் சொந்த ஊரைவிட்டு முடிந்தவரை விலகிச்சென்று வருமானம் ஈட்ட முயலவேண்டும். 

மூன்றாவதாக அறிஞர் அண்ணாவின் ஜாதகம் கீழே.

                 
லக்னம் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. ராகுவிற்கு வீடு கொடுத்த லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சியில் உள்ளார். உச்சமான வாக்கு காரகன் புதனின் கன்னி ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2 ஆமிடத்தில் ராகு தொடர்பில் இருப்பது ஜாதகர் பேச்சுத்திறமையில் வல்லவர் என்பதை குறிக்கிறது. ராகு ராஜ்ய ஸ்தானமான பத்தாம் அதிபதியும் அரசியல் தொடர்புகளுக்கும் உரிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்ததும். பத்தாம் அதிபதி சந்திரன் ராஜ்யாதிபதி எனப்படும் அரசாங்கத்திற்கு காரகத்துவம் பெற்ற சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்ததும் ஜாதகரின் கர்மா அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பதை குறிப்பிடுகிறது. 

லக்னம் அமைந்த நட்சதிராதிபதி ராகு ஆயுள் ஸ்தானமான 8 ஆமிடத்துடன் தொடர்பு கொண்டதும் ராசிக்கு எட்டில் நீசம்பெற்று வக்கிரமடைந்த சனியும், சனிக்கு 12 ல் ராசிக்கு  ஏழில் அஷ்டமாதிபதியான செவ்வாய் வக்கிர நிலையில் அமைந்ததும் ஜாதகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவார் என்பதை குறிப்பிடுகிறது. புற்றுநோய்க்கு ராகு,சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் கதிர்வீச்சுகளே காரணமென்பது ஜோதிடம் ஆராய்ந்து அறிந்த உண்மை. ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பில் அடுத்தடுத்த ராசிகளில் அமைந்தது கவனிக்கத்தக்கது.

கீழே தமிழர்கள் இன்னும் இயந்திரங்களாக மாறிவிடாமல் தனது இசையால் தடுத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்.



                    
விரயாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்துள்ளது. செவ்வாய் சிம்ம ராசிக்கு எட்டில் மறைந்துள்ளார். மேலும் சூரியன் அமைந்த ரிஷப ராசிக்கு செவ்வாய் விரயாதிபதியாகிறார். தந்தையின் பாக்கியத்தை பெற இயலாத நிலையை இது குறிப்பிடுகிறது. லக்னத்தில் பித்ரு காரகன் சூரியன் மாத்ரு காரகனான உச்ச சந்திரனுடன் சேர்ந்து சனியுடன் இணைவு பெற்றது தந்தையின் பாக்கியங்களை தனது சுய அனுபவங்களின் மூலமே பெற்று உயர வேண்டும் என்பது ஜாதகறது கர்மா. சனி சூரிய புத்திரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஒருவரது ஜாதகத்தில் இசைத்துறை தொடர்பை குறிப்பது மூன்றாமிடமாகும். இசைத்திரையில் ஒருவர் கோலோச்ச வேண்டுமானால் லக்னத்திற்கு மூன்றாமிடம், சுக்கிரன், புதன் ஆகியவை வலுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமதிபதி சந்திரன் லக்னத்தில் உச்சம். கலை மற்றும் திரைத்துறைக்கு காரகத்துவம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரன் உச்ச சந்திரனின் வீட்டில் அமர்ந்ததால் உச்ச வலு பெற்றதோடல்லாமல் பரிவர்த்தனையும் பெற்றதால் ஜாதகர் உலகம் போற்றும் உன்னத இசை வல்லுனராக ஒளிர்கிறார்.



வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

எனது பதிவுகள் சாமான்யர்களுக்கும், ஜோதிட நேசர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை.. எனது சுய ஆய்வு கொண்டு வரும் கருத்துக்கள் இப்பதிவுகள். அதனால்தான் பிற ஜோதிட வலைப்பதிவுகளுக்கும் எனது பதிவுகளுக்கும் வித்தியாசங்கள் காணப்படும். ஜோதிட விதிகளை புத்தகங்களில் இருந்து வலை ஏற்றுபவை அல்ல எனது பதிவுகள். உதாரண ஜாதகங்கள் மூலம் ஜோதிட விதிகளை பூப்போல எனது பதிவுகளில் தூவியிருப்பேன். எனது ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் தங்களது ஜோதிட அறிவை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதோடல்லாமல் பதிவுகளில் தவறிருப்பின் பின்னூட்டங்கள் மூலமும் என்னை செம்மைப்படுத்தவும் உதவலாம். எனது ஆய்வுக்கருத்துகளை பலர் தங்களது ஜோதிட மாணவர்களுக்கு பாடங்களாக்கி பயன்படுத்துகின்றனர் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதில் எனது ஆக்கம் என்பதை மறைத்து பயன்படுத்துவது வேதனைப்படுத்துகிறது. எனது ஆய்வுக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி பல வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  நூல்வடிவில் கொண்டுவர இருக்கிறேன். ஜோதிடம் பயில வேண்டும் என்பவர்களுக்காக தங்களுக்கு இயன்ற நேரத்தில் இயன்ற வகையில் கட்டுப்பாடுகள்;;இல்லாமல் மின்னஞ்சலில் ஜோதிட ஜோதிட பாடங்கள் நடத்திடவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எனது ஆக்கங்களை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?, தசாம்சமும் தொழிலும் போன்ற சில பதிவுகளை PDF கோப்புகளாக மாற்றி எனது பெயரை மறைத்து வெளியிட்டிருக்கும் ஒரு வலைப்பூ..

https://vedicfastro.blogspot.in/p/pdf-tamil-books.html


மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

அன்பன்,


பழனியப்பன்.     . 

Wednesday 5 October 2016

போரில் வெற்றி யாருக்கு?

கிரக யுத்தம்

சிலவகை வாழ்வியல் நிகழ்வுகளை குறிப்பிட்ட காலத்தில்தான் அனுபவித்திட வேண்டும் என இறைவன் வகுத்திருப்பான். அதற்கான காரணங்கள் சூட்சுமமானவை. ஒருவரது கர்ம வினைகளோடு தொடர்புடையவை. அது மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வினை துவங்கும்போதுதான் அது தொடர்புடைய இதர வினை ஒருங்கே வந்து இணையும்.

எங்கே நமக்கான செயல்களை எவ்வளவு முயன்றும் நாம் செய்துகொள்ள இயலவில்லையோ அங்கேதான் படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என உணர வேண்டும். 

படைத்தவனின் கருணையாலேயே அந்த செயல் நடந்திட வேண்டும் என வேண்டிக்கொண்டு செயல் நோக்கிய திசையில் தனது பயணத்தை தொடர வேண்டும். உரிய நேரம் வந்ததும் அச்செயல் நிகழும். வெகு சிலருக்கு அவர்களது கடுமையான கர்மவினையின் காரணமாக அச்செயல் மிகுந்த தாமதத்தில் நிகழும் அல்லது மறுக்கப்பட்டிருக்கும் அவர்களது நிலை பரிதாபத்திற்குரியது.

இதை அறியாமல் புலம்புவோர் பலர். ஜோதிடத்தின் மூலம் அத்தகைய சிலவற்றை அறிந்துகொண்டு இறையோடு போட்டிபோட்டு தோல்வியுறுபவர் பலர்.    
   

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


06.07.1991  மாலை  5.49 மணி. கரூர்.

மிதுன லக்ன ஜாதகிக்கு  22.06.2017 வரை சுக்கிர திசை நடக்கிறது. 25 வயதை கடந்துவிட்ட ஜாதகிக்கு இன்னும் திருமணம் அமையவில்லை. ஜாதகி மெத்தப்படித்தவர்.

ஜாதகத்தில் மகம் – 2 ல் சுக்கிரன். மகம் – 1 ல் செவ்வாய். இருவருக்கும் இரண்டு பாகைகள் மட்டுமே இடைவெளி.

இங்கு செவ்வாய் சுக்கிரனுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. ராசி மண்டலத்தில் குறைவான பாகை இடைவெளியில் பின்னால் நிற்கும் கிரகம் முன்னாள் இருக்கும் கிரகத்தின் கதிர்வீச்சையும் அபகரித்துவிடும் என்பதே கிரக யுத்தத்தின் அடிப்படை.  யுத்தத்தில் வென்ற செவ்வாய் திசா நாதன் சுக்கிரனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.. திருமணத்தை நடத்திட சுக்கிடனுக்கு களத்திர காரகன் என்ற வகையிலும் 12 ஆம் அதிபதி எனும் வகையிலும் முழு உரிமை உள்ளது என்றாலும் செவ்வாயுடன் கிரக யுத்தத்தில் தோல்வியடைந்ததால் செவ்வாயை சார்ந்தே சுக்கிரன் செயல்படும்.  

ராசிநாதன் செவ்வாயே ஜாதகிக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறார் என்பதே உண்மை.

காரணம் காம – களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு பாக்ய ஸ்தானமாகவும் (9 ஆமிடமாக) குடும்ப பாவமான 2 ஆமிடத்திற்கு 2 ஆமிடமாக பாவத் பாவம் எனும் அடிப்படையை கொண்டிருக்கும் 3 ஆம் பாவத்தில் இருக்கும் செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் துணிச்சலான மனோநிலையை ஜாதகருக்கு வழங்கினாலும் குடும்ப வாழ்வை வழங்கிடும் மனோ நிலையில் இருக்காது.

எனவே லக்னத்தில் உச்ச குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்த சூரியனின் திசையில்தான் ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும். குரு செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் துலாத்தில் மேச ராசிக்கு 7 ஆமிடத்தில் 2017 பிற்பகுதியில் வரும்போது ஜாதகிக்கு திருமணம் நடக்க வேண்டும்.

ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் என்பதோடு எட்டாமிடம் உடல் ரீதியான உறவை குறிப்பிடும் இடம் என்பதாலும் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாமிடங்களில் சஞ்சரிக்கும் சனி திருமணத்தை தடுத்திட உரிமையுண்டு. மேலும் ஜனன காலத்தில் எட்டில் குடும்ப பாவாதிபதி சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் அமைந்ததால் முன்னமே திருமணம் நடைபெறாமல் தடுப்பது சனியின் வேலை.

நவாம்ச அடிப்படையிலும் பாவ அடிப்படையிலும் ஜாதகத்தை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் புரியவரும்.மேலும் ஒரு செயலை தீர்மானிப்பதில் பல காரணிகளும் ஜாதக அமைப்புக்கு தக்கபடி துணை நிற்கும். கர்ம வினைகளை அனுபவிக்க அனைத்து கிரகங்களும் துணை நிற்கும் என்றே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கிரக யுத்தம் எனும் ஒரு குறிப்பிட்ட வகையில் ஜாதகத்தை ஆராய்ந்ததால் ஜாதகத்தில் இதர வகை காரணிகளை நீண்டு விளக்க விரும்பவில்லை. அப்படி ஆராய விரும்புவோர்களுக்காக நவாம்சமும் பாவமும் இங்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.