Monday 20 March 2017

விதியோடு ஒரு விளையாட்டு

வாழ்க்கை ஒரு புதிர்.

பதிலளிக்க இயலாத பல கேள்விகளை தன்னகத்தே கொண்டது.
வாழ்கையின் மற்றும் காலத்தின் சூட்சுமங்களை ஓரளவு அறிந்தவர்கள் நமது ஞானிகள். தங்களது தவ வலிமையால் தாங்கள் அறிந்துகொண்ட அதன் ரகசியங்களை சாதாரண மக்களுக்கு பயன்படும் வண்ணம் உபநிஷங்களாக எழுதி வைத்தனர். பிறகு அவை வேதக் குறிப்புகளாக தொகுக்கப்பட்டன.

வேதங்களின் சாரத்தை எளிமையாக விளங்கிக்கொள்ள எழுதப்பட்டவைகளே இதிகாச புராணங்கள். இவைகளிலுள்ள கருத்துக்கள் வாழ்கையையும் காலத்தையும் அறிந்து சாதாரண மக்கள் இவைகளின் வழியே பயணிக்கும்போது தங்களை காத்துக்கொள்ள எழுதப்பட்ட அற்புதங்கள் என்பது நமது புராணக்களை ஆழ்ந்து அனுபவிப்பவர்களுக்கு புரியும்.

வேதத்தில் காலத்தை கணிக்கும் கண்ணாடி என போற்றப்படுவது ஜோதிஷம். அதனால்தான் ஜோதிடம் வேதத்தின் கண் எனப்படுகிறது. தேர்ந்த ஜோதிடர்களால் கூறப்படும் அறிவுரைகள் தேவர்களின் அறிவுரைகளுக்கு ஒப்பானவை. அத்தகைய ஜோதிட அறிவுரைகளை பின்பற்றாமல் புரந்தள்ளி தங்களது வாழ்க்கை தங்களது கட்டுப்பாட்டை மீறிச்சென்றுவிடாது என எண்ணுபவர்களின் நிலை விதியோடு விளையாடுவதற்கு நிகரானது. ஜோதிட ஆலோசனைகளை சூழ்நிலைகளால் கடைபிடிக்க இயலாதவர்கள் வாழ்க்கையிலும் ஜோதிடரை மீறி விதி அவர்களை ஆட்டுவிக்கிறது என்றே பொருள்கொள்ள வேண்டும்.

கீழே நீங்கள் காணும் பெண்மணியின் ஜாதகம் அத்தகைய ஒன்று. இது நான் பலன் கூறிய ஜாதகமன்று. எனது ஆய்வுக்கு கிடைத்த ஜாதகம். 




லக்னாதிபதியே ஆனாலும் குடும்ப காரகன் குடும்ப பாவத்தில் இருப்பது “காரகோ பாவ நாசாய” எனும் ஜோதிட கிரந்தப்படி குடும்பத்தை கெடுக்கும். அப்படி ஒரு கிரகம் தனது காரகங்களில் ஒன்றில் கடும் பாதிப்பை தந்தால் அதன் மற்ற காரகங்களில் பாதிப்பை தரக்கூடாது என்பது ஒரு முக்கிய ஜோதிட விதியாகும். ஜாதகி கணினி மென்பொருளாளர் கைநிறைய தற்போதும் சம்பாதிப்பவர்.

குரு குடும்ப பாவத்தில் இருப்பதே ஒரு வகையில் கெடுதல் என்பதோடு அங்கு மாந்தியோடு இணைந்தது இன்னும் கேடு. குடும்ப பாவாதிபதி செவ்வாய் தனது பாவமான மேஷத்திற்கு பாதக ஸ்தானத்தில் லக்ன விரையத்தில் ராகுவோடு இணைந்து கடுமையாகவே கெட்டுவிட்டது. ஒரு பாவத்தின் பலனை ஆராயும்போது அந்த பாவாதிபதி தன் பாவத்திற்கு எந்த இடத்தில் எந்த நிலையில் உள்ளார் என்று கவனிப்பது மிக முக்கியமாகும்.

ஜாதகத்தில் களத்திர காரகன் சுக்கிரனும் களத்திர பாவாதிபதி புதனும் வக்கிரமடைந்து வலிமை இழந்துவிட்டனர். எனவே ஜாதகியின் பொதுவான சுகம் மற்றும் களத்திர வகை தாம்பத்ய சுகம் ஆகியவை கெட்டுவிட்டதாக பொருள் கொள்ளவேண்டும். படுக்கை சுகத்தை குறிக்கும் 12 ஆமிடத்தில் ராகு-செவ்வாய் அமைந்ததால் கெட்டுவிட்டது. அதன் பாவாதிபதி சனியும் வக்கிரமடைந்து வலிமை குறைந்தார்.

7 ஆமதிபதியுடன் சுக்கிரன் இணைந்ததால் காதல் திருமணம்.
ஜாதகத்தில் 2, 4, 7,12 ஆகிய பாவங்களும் குரு சுக்கிரன் இரண்டாம் அதிபதி, ஏழாம் அதிபதி ஆகியவை கெட்டுவிட்டன. ராசி ரீதியாகவும் இவை கெட்டுவிட்டது தெளிவாகவே தெரிகிறது.

ஜாதகிக்கு 19.06.2013 ல் சூரிய திசை ராகு புக்தியில் திருமணம் நடந்தது.

திருமண பொருத்தம் பார்க்கையில் ஜோதிடர் ஜாதக கிரக நிலைகளையும் ஜாதகியின் தனுசு ராசிக்கு துவங்கவிருக்கும் ஏழரை சனியையும் ஆராய்ந்துவிட்டு தற்போது திருமணம் நடந்தால் குடும்ப வாழ்வை இழக்க வேண்டியிருக்கும் என்றும் விரைய சனி முடிந்த பிறகு திருமணம் செய்வது நல்லது என்று தெளிவாக எச்சரித்துள்ளார்.

பொருளாதார வளத்தில் செழித்த ஜாதகி அதனைக்கொண்டு எத்தகைய சிரமங்களையும் எதிர்கொள்ளலாம் என்று எண்ணிவிட்டார். அதுமட்டுமல்ல தனது சம்பாத்யத்தை வேண்டியும் காதல் மனம் வேண்டாமென்றும் பெற்றோர்கள் நினைத்து தவறான கருத்தை ஜோதிடர் மூலம் கூறுவதாகவும் எண்ணியிருக்க வாய்ப்பு உள்ளது.

ஒரு பாவத்திற்கு முந்தைய பாவத்தின் திசை நடக்கையில் அந்த பாவம் பாதிக்கப்படும் என்பது ஜோதிடத்தில் பால பாடமாகும். சூரிய திசை லக்னப்படியும் ராசிப்படியும் ஆறாம் பாவ தொடர்பு கொண்டுள்ளதை கவனியுங்கள். ஆறாம் பாவம் வாழ்க்கைத் துனைவரை குறிப்பிடும் 7 ஆம் பாவத்திற்கு விரைய பாவமாகும். மேலும் சூரியன் களத்திர காரகன் சுக்கிரனுக்கும் களத்திர பாவாதிபதி புதனுக்கும் 12 ல் நிற்கிறது. வாழ்க்கைத் துனைவருக்கு பாதிப்பு என்பதை தெள்ளத்தெளிவாக குறிப்பிடும் அமைப்பு இது. ராகு குடும்ப காரகன் குருவின் சாரம் பெற்று தாம்பத்ய பாவமான 12 ல் நின்றதால் ராகு புக்தியில் திருமணம். அதை அடுத்து வந்த குரு புக்தியில் 2014 ல் ஜாதகி குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

கடந்த 2016 ஏப்ரல் இறுதி வாரத்தில் ஜாதகத்தில் 7 க்கு 12 ஆமிடத்தில் அமைந்த கேதுவின் புக்தி துவங்கியது. ஜாதகியின் தனுசு ராசிக்கு ஏழரை சனியின் கடுமையான கால கட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது. பொதுவாக ராகு-கேதுக்கள் தாங்கள் நிற்கும் பாவாதிபதி மற்றும் நட்சதிராதிபதிகளின் பாவ காரக பலன்களையே பிரதானமாக எடுத்துச் செய்வார்கள். சூரியனின் வீட்டில் சிம்மத்தில் சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்த கேது ஏழாம் இடம் குறிப்பிடும் கனவனை வீழ்த்தியது.

ஜாதகியின் சம்பாத்தியத்தில் தனது சம்பாத்தியத்தை மறந்து போகத்திலும் போதையிலும் திளைத்த கணவனுக்கு அதுவே பிரச்சனைகளுக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் வழி வகுத்தது. விழைவு கணவன் தற்கொலை செய்துகொண்டான்.

புதன் தன் வீட்டில் வக்கிரமடைந்து அஷ்டமாதிபதியான வக்ரநிலை பெற்ற சுக்கிரனுடன் இணைந்து வக்கிரம் பெற்ற விரயாதிபதி சனியின் பார்வை பெற்றதைக்கொண்டு கணவனின் சூழ்நிலைகளை மதிப்பிடலாம்.

அறியாத விஷயங்களில் எதிர்பாராமல் மாட்டிக்கொண்டு விழிப்பது ஒருவகை என்றாலும் ஜோதிடர் தெளிவாக தனது வாழ்க்கை பற்றி எச்சரித்ததை மீறி நடந்ததால் ஏற்பட்ட விளைவை எண்ணி எண்ணி ஜாதகி வேதனையுறுவார்.

மருத்துவக்கல்லூரிகளில் பிணத்தைக்கொண்டுதான் உடற்கூறியல் பாடங்களை நடத்துவர். இத்தகைய எதிர்மறையான ஜாதகங்களை ஆராய்வது நம்மை காத்துக்கொள்ளும் வாய்ப்புகளை தேடவே என்பதை உணருங்கள். 

அடுத்த பதிவு “ஒருபுறம் அவசரம் மறுபுறம் ஆத்திரம்”.


அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி:7871244501.

Sunday 5 March 2017

புயலுக்கு நடுவே ஒரு போராட்டம்

பங்குச்சந்தையுடன் தொடர்புடைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிரிந்த போது சரியான புரிதல் இல்லாத பலர் பங்குச்சந்தைக்கு வந்து பெரும் இழப்புகளை சந்திக்கின்றனர். இதற்கு சாதகமான ஜாதக அமைப்பு பற்றியும் யாரெல்லாம் பங்குச்சந்தையில் ஈடுபடலாம் என்பது பற்றியும் எழுத கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கே.

“பணம் ஒரு சிறந்த வேலைக்காரன்.
ஆனால் மோசமான எஜமான்”   

பணத்தை நாம் ஒரு வேலைக்காரனாக பயன்படுத்தும்போது நாம் அதை ஆள்கிறோம். நமது வாழ்வை வளமாக்கவே பணம். நமது வாழ்வை பணயம் வைத்து அதை ஈட்டுகையில் பணம் நம்மை ஆள்கிறது.
பிணத்தை ஆய்வு செய்துதான் மருத்துவ மாணவர்களுக்கு நோய் பற்றிய பாடம் எடுக்கப்படுகிறது. இது போன்ற பதிவுகளையும் அவ்வாறே எடுத்துக்கொள்ளுங்கள்.

பங்குசந்தையில் லாபம் பார்பதற்கான ஜாதக அமைப்புகள்:

1. ஏழரை சனிக்காலம் சனி பகவான் நமது வாழ்வை செம்மைப்படுத்திக்கொள்ள பாடம் எடுக்கும் காலமாகும். அக்காலகட்டத்தில் உத்தேச வருமானம் போன்றவற்றிற்கு வாய்ப்பே இல்லை. எனவே ஏழரை சனி காலத்தில் அனைத்து ஜாதகர்களும் பங்குச்சந்தையை விட்டு விலகி இருத்தல் நலம்.

2. ஜாதகத்தில் தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் பாவம் தனம் வரும் வழிகளை காட்டும். பங்குப்பத்திரங்கள், காப்பீடுகள், முதலீடுகள், ஊதாரிதனமான செலவுகள், பங்குச்சந்தை ஈடுபாடு ஆகியவற்றை குறிப்பிடும். இரண்டாம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உழைத்துத்தான் பொருளீட்ட வேண்டும். எனவே இரண்டாம் பாவம் கெட்டிருந்தால் பங்குச்சந்தையை நினைத்துப்பார்க்க வேண்டாம்.

3. தன காரனும் இரண்டாம் பாவ காரனுமான குரு, ஜாதகத்தில் வலுவோடு இருக்க வேண்டும். குரு ஜாதகத்தில் கெட்டவர்கள் பங்குச் சந்தை பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம்.

4. உத்தேச மற்றும் யூக வகை வருமானங்களுக்கு காரகத்துவம் பெற்ற ராகு ஜாதகத்தில் நல்ல பாவங்களில் அமைந்திருக்க வேண்டும். 11 ல் அமைவது சிறப்பு. பாவிகள் 3, 6,11 ல் அமைவது சிறப்பு என்றாலும் 6 ஆமிடத்தில் அமையும் ராகு அந்த பாவாதிபதியின் பணியையும் தானே எடுத்துச் செய்யும் என்பதால் கவனம் தேவை.

5. பந்குச் சந்தையோடு நேரடியாக தொடர்புடைய கிரகங்கள் என்றால் அது புதனும் சுக்கிரனும்தான். இவ்விரு கிரகங்களும் ஜாதகத்தில் நன்கு அமைந்து இவற்றின் திசா புத்திகள் நடந்தால் பங்குச் சந்தையில் பெரும் பொருளீட்டலாம். இவ்விரு கிரகங்களும் கெட்டிருந்தால், முக்கியமாக சுக்கிரன் ஜாதகத்தில் கெட்டவர்கள் பங்கு சந்தை இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கிவிடுவது நலம்.

6.இவை தவிர தனவரவோடு தொடர்புடைய பாவங்களான 4(எளிதான சம்பாத்தியம்), 5(புத்தி சாதுர்யத்தால் பொருளீட்டல்), 8 (திடீர் அதிஷ்டம்), 11 (லாபம்) மற்றும் 2 ஆம் பாவத்திற்கு  11 பாவம் என்றவகையில் விரயத்தை குறிப்பிடும் 12 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும்.

மேற்கண்ட மேற்கண்ட குறிப்புகளின்படி தங்களது ஜாதகங்களிலுள்ள சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒருவர் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.



அப்படி ஆராயாமல் பங்குச்சந்தையில் ஈடுபட்டு ஜாதகமும் திசா-புக்திகளும் மோசமாக இருந்தால் அவரது நிலைமை புயலில் அகப்பட்டுக்கொண்ட படகு போன்று பரிதாபகரமானதாக இருக்கும். அப்படியான ஒரு ஜாதகம்தான் கீழே நீங்கள் காண்பது. 

இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் ஜாதகம் திருக்கணித முறையில் பூச பக்ஷ அயனாம்ச அடிப்படையில் அடியேன் ஆய்வு செய்தது.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.



லக்னம் துலாமில் லக்னதிற்கு சத்ருவும் ஆறாம் அதிபதியுமான குருவின் விசாகம்-1 ல் அமைத்திருக்கிறது. குருவும் லக்னத்தில் வலுவோடு அமைந்துள்ளார். பகை வீட்டில் வக்கிர கதியில் அமைந்திருக்கும் கிரகம் வலிமையோடு இருக்கும் என்பது முக்கிய ஜோதிட விதி. குரு லக்னத்தில் திக்பலத்துடன் இருப்பார். இவை அனைத்தும் ஜாதகரை குரு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

தன ஸ்தானாதிபதியான செவ்வாய் லாபாதிபதியுடன் அஷ்டமத்தில் இணைந்தது தன வரவில் ஏற்படக்கூடிய வேதனைகளை தெளிவாக குறிப்பிடுகிறது.

ஜீவன காரகனும் சிந்தனை , அதிஷ்டம் மற்றும் பூர்வ புண்ணியம் போன்றவற்றை குறிப்பிடும் ஐந்தாம் அதிபதி சனிபகவான் மேஷத்தில் நீசமாகியுள்ளார். இது ஜாதகர் தெளிவான முடிவெடுக்க முடியாதவர் என்பதையும் அவரது உழைப்பு வீணாகும் என்பதையும் அதிஷ்டமில்லாதவர்  என்பதையும் குறிப்பிடுகிறது.    

லாபாதிபதியும் சிம்ம ராசிக்கு அதிபதியுமான சூரியன் அஷ்டமத்தில் அமைத்துள்ளார். லாப ஸ்தானமே சர லக்னமான துலாமிற்கு பாதக ஸ்தானம் ஆவதால் அங்கு அமையும் கிரகங்களும் ஜாதகருக்கு பாதகத்தை செய்ய வேண்டும். மனோ காரகனும் ஜீவன ஸ்தானமான பத்தாம் அதிபதியுமான சந்திரன் அங்கு அமைந்துவிட்டது தனது சுய சிந்தனையால் ஜாதகர் தவறான முடிவெடுத்து பாதகங்களை சந்திப்பார் என்பதை காட்டுகிறது. ஜாதகர் நவமி திதியில் பிறந்துள்ளார். நவமி திதிக்கு உரிய கிரகமான சூரியன் அஷ்டமத்தில் அமைந்துள்ளதும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

லக்னாதிபதி மாரகாதிபதியுடன் இணைந்து அஷ்டமத்தில் நின்று சந்திரன் கேதுவோடு சேர்ந்துவிட்டால் அது தரித்திர யோகத்தில் ஒரு வகையாகும்.

இங்கு லக்னாதிபதி சுக்கிரன் மாரகாதிபதியான சூரியனுடன் அஷ்டமத்தில் சேர்ந்துள்ளதுடன் சந்திரனும் கேதுவோடு சேர்ந்துள்ளது தரித்திர யோகம் ஜாதகருக்கு உள்ளதை குறிப்பிடுகிறது. 

பங்குச்சந்தையில் முக்கிய பங்குவகிக்கும் சுக்கிரன் ஜாதகத்தில் அஷ்டமத்தில் ஆட்சி பெற்றது ஜாதகரது ஆயுளை தாங்கிப்பிடிக்க மட்டுமே உதவும். மேலும் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றுள்ளதை கவனிக்கவும்.

பங்குச்சந்தையோடு தொடர்புடைய மற்றொரு முக்கிய கிரகம் புதன் நீச நிலையில் அமைந்துவிட்ட சனியோடு வக்கிர கதியில் மேஷத்தில் இணைத்துள்ளது. புதன் பாக்ய-விரயாதிபதி என்பதோடு புத்தி காரகன் என்பதும் புதன் ஒரு நீச கிரகத்துடன் இணைந்துவிட்டால் ஜாதகர் புத்தி சாதுர்யம் அற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் புதன் மற்றொரு கிரகத்துடன் இணையும்போது இணையும் கிரகத்தை சார்ந்தே செயல்படும் ஜாதகரின் புத்தியை செயல்பட வைக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும். பன்றிக்குட்டியோடு இணைந்த கன்றுக்குட்டி என்பதுபோல் இங்கு நீச சனியுடன் இணைந்துவிட்ட புதனின் நிலை உள்ளது.

யூகம், புதுமை, உத்தேச வகைகளை குறிப்பிடும் கிரகம் என்ற வகையில் பங்குச்சந்தையோடு நேரடியாக தொடர்புபெறும் ராகு அதிஷ்ட வகைகளை குறிப்பிடும் ஐந்தாமிடத்தில் அமைந்தது சிறப்பென்றாலும் ஐந்தாமதிபதி சனி நீசமாகிவிட்டதால் சனியை சார்ந்தே செயல்பட வேண்டிய நிலையில் ராகு இருக்கிறார்.

மேற்சொன்னவை அனைத்தும் பங்குச்சந்தையில் ஈடுபட்டால் ஜாதகர் வாழ்க்கை வீணாகும் என்பதை தெளிவாக விளக்குகிறது.

கோட்சாரத்தில் சிம்ம ராசிக்கு நான்கில் சனி அமர்ந்து ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தை பார்வை செய்வதும் சிம்ம ராசிக்கு பரம அசுபனான ராகு சிம்ம ராசியை ஆட்கொண்டிருப்பதும் சிம்ம ராசியினருக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய கோட்சார அமைப்பினால் அனைத்துவகை சிம்ம ராசியினருக்கும் ஒரே வகையான பாதிப்புகள் ஏற்படுமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஜனன ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலையில் அமைந்துள்ள கிரகங்கள் கோட்சாரத்தில் பாதிக்கக்கூடிய நிலையில் அமைந்தால் மட்டுமே கடுமையான விளைவுகள் அதிகம் இருக்கும் மற்றையோருக்கு அப்படி இல்லை. 

திசா புக்திகளின் வலிமை பொறுத்து பாதிப்புகளை அளவிடலாம் என்றாலும் நீதிமானான சனியும் சனியை போன்றே செயல்படும் ராகுவும் சில சமயம் திசா புக்திகளின் வலிமையை மீறி ஜாதகரை தண்டிக்கும் வல்லமை பெற்றவை. பொதுவாக சிம்ம ராசிக்கு சனியும் ராகுவும் எப்போதுமே பாவிகள்தான். கடந்த வருடம் ராகுவோடு இணைந்திருந்த குரு ராகுவின் கடுமையை ஓரளவு குறைத்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் மட்டுமே சிம்ம ராசியினரை காத்திருப்பார்.

ஜாதகருக்கு ராகு திசையில் குரு புக்தி 01.06.2016  முதல்   28.10.2018 வரை நடப்பில் உள்ளது. ஜாதக அமைப்புப்படி இக்காலகட்டத்தில் பங்குச்சந்தை தொழிலில் ஈடுபட்டிருந்த ஜாதகர் குரு புக்தியில் யானையின் வாயில் அகப்பட்டுவிட்ட கரும்பின் நிலையில் இருக்க வேண்டும். ஜாதகருக்கு இது ஒரு கொடுமையான கால கட்டம். தாங்கமுடியாத நிலையில் கடுமையான பொருளாதார தவிப்பில் ஜாதகர் என்னை வந்து சந்தித்தார்.   

ஜாதகப்படியான சூழ்நிலைகளை ஆய்வுசெய்து ஆலோசனைகளை வழங்கினேன். ஜோதிடர்களால் எந்த ஒரு ஜாதகரின் விதியையும் மாற்றிட இயலாது. ஜோதிடர்கள் சரியான பாதையில் செல்ல வழிகாட்டும் வழிகாட்டிள். அவ்வளவே. அப்பாதையை ஏற்பதும்  மறுப்பதும் அவரவர் கர்மாவை பொறுத்தது.

களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் ஒரு நீச கிரகம் அமைந்து சுக்கிரன் ஆட்சி பெற்றதன் பலனாவது ஜாதகர் கடும் சூழ்நிலையை கடக்கும்போது மனைவியும் அதுபோன்ற ஒரு மோசமான காலத்தை கோட்சார ரீதியாக கடந்துகொண்டிருப்பதால் ஜாதகரின் போராட்டங்களை வேதனையோடு காண்பவராக இருப்பார் என்பதை குறிப்பிடுகிறது.

இந்தக் குறிப்பின்படி ஜாதகரின் மனைவிக்கு விருட்சிக ராசி. ஏழரை சனியில் கடுமையான காலத்தை கடந்துகொண்டிருப்பவர்கள் விருட்சிக ராசியினர். ஜாதகரின் நிலைமை யானை வாய் கரும்பு என்றால் அவரது மனைவியின் நிலை முதலைவாய் பிராணிதான்.

கணவனும் மனைவியும் வறண்டதொரு பாலைவனத்தில் அகப்பட்டுக்கொண்ட பரிதாபத்திற்குரிய நிலைதான்.





 திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கையில் தம்பதியர் இருவருக்கும் கடுமையான காலங்கள் சேர்ந்தார்போல வருவதை பொதுவாக ஜோதிடர்கள் தவிர்ப்பார்கள். அதன் காரணம் மேற்கண்டபடியான சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான். ஒருவருக்கு நிலைமை மோசம் என்றால் மற்றொருவரின் ஜாதகம் அதை தாங்கிப்பிடிக்க வேண்டும். திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத இந்தக்காலத்தில் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் திருமணமே நடக்காது என்பதுதான் இன்றுள்ள நிலைமை.  

அடுத்த வார பதிவு 

"விதியோடு ஒரு விளையாட்டு"


வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
அலைபேசி எண்: 7871244501