Wednesday 27 September 2017

ஜோதிடத்தில் கனி மரங்கள்.

ஜாதகத்தில் நான்காம் பாவம் ஒருவர் எந்த வகையான சூழலில் வசிப்பார் என்பதை குறிபிடுகிறது,.



ஒருவர் கனி தரும் மரங்கள் சூழ்ந்த வீட்டில் வசிக்க வேண்டும் எனில் அதற்கு சுக்கிரன் அனுக்கிரகம் வேண்டும். பெரிய அடர்ந்த உயர்ந்த மரங்களை சூரியன் குறிப்பார் என்றாலும் மனம் வீசம் மலர்ச்செடிகளையும் சுவை தரும் கனி மரங்களையும்  குறிப்பவர் சுக்கிரனாவார். எனது சிறு வயதில் வீட்டின் முன்பகுதியில் முல்லை, மல்லிகை செடிகளையும் பின்பக்கத்தில் மா மரங்கள் கொண்ட வீடுகளையும் பார்த்திருக்கிறேன். அது ஒரு பொற்காலம். 

கனி மரங்களில் இனிப்பான சதைப்பற்று கொண்ட மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, ஆப்பிள் ஆகியவை குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. திராட்சை, ஆரஞ்சு போன்ற ரசக்கனிகள் சுக்கிரனின் தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. அதனால்தான் இறைவனுக்கு மனம் வீசும் மலர்களையும், கனிகளையும் படைக்கிறோம்.

கீழே கிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட கனிகள் சில.

இலந்தை பழம்        - சூரியனின் அம்சம்.

பேரிக்காய், தர்பூசணி  – சந்திரனின் அம்சம்.

முந்திரி               - செவ்வாயின் அம்சம்

நெல்லிக்கனி, கொடுக்காப்புளி - புதனின் அம்சமாகும்.

மா, பலா, வாழை – குருவின் அம்சம்

நாவல், திராட்சை, ஆரஞ்சு – சுக்கிரனின் அம்சம்.

பேரிச்சை, வேப்பம் பழம்  – சனியின் அம்சம்

பலவகை சுவை கொண்ட உண்ட பின் சுவை மாறும் கனிகள் ராகு-கேதுவின் ஆதிக்கத்திற்கும் உட்பட்டவை.

ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் வலு குறைந்தவர்கள் வாய்ப்பு இருப்பின் தொடர்புடைய மலர்களையும் கனி மரங்களையும் வீட்டில் பேணி வளர்த்து வந்தால் அவர்களுக்கு தொடர்புடைய கிரகங்கள் கருணை புரியும் என்பதும் குறிப்பாக சுவையும் ரசமும் கொண்ட குரு சுக்கிரனுக்குரிய கனி மரங்களை வீட்டில்  வளர்த்து வந்தால் வீட்டில் லக்ஷ்மியும் திருமாலும் வாசம் செய்வார்கள் என்பது அனுபவ உண்மையாகும். இவ்விரு கிரகங்களின் அருட்பார்வையை பெற்றவர்கள் பிற கிரகங்கள் தரும் சிரமங்களையும் கடந்திட வழி பிறக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


கீழே சமீபத்தில் அடியேன் ஆராய்ந்த அன்பர் ஒருவரது ஜாதகம் கீழே.


தனுசு லக்ன அதிபதி குரு ஒரு ஜாதகரின் வசிக்கும் சூழலை குறிக்கும் நான்காம் பாவத்தில் ஆட்சியில் உச்ச சுக்கிரனுடனும் ராகுவுடனும் இணைந்துள்ளது. சுக்கிரன் நவாம்ச நிலைப்படி வர்கோத்தமம் என்பது அருமையான அமைப்பு. கேந்திரத்தில் ராகு-கேதுக்கள் நிற்பது ஒருவகையில் நன்மையே.  வலுவான மரங்களுக்கு ஆதிபத்தியம் பெற்ற பாக்யாதிபதி சூரியன் தனது சுய நட்சத்திரத்தில் உச்சம். தனது வீட்டில் உச்சமான சூரியனால் பூமி காரகன் செவ்வாயும் வலுவடைகிறது. தனது சுய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் செவ்வாய் நிற்பது கூடுதல் பலம். நீர் கிரகமான சந்திரன் தனது சுய நட்சத்திரத்தில் ஹஸ்தத்தில் நிற்பது சிறப்பே. புதனும் உச்சன் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் நின்றதால் வலுவடைகிறது. சனி ஜல ராசியான விருட்சிகத்தில் பகைவனின் வீட்டில் வக்ர நிலையில் நிற்பது ஒருவகையில் நன்மையே. 

ஜாதக அமைப்பின் பலனாவது ஜாதகரது வீட்டில் கனி தரும் பல மரங்கள் இருப்பது மட்டுமின்றி அவை வருடம் முழுதும் பலனளிக்கின்றன என்பது ஜாதகருக்கு இறைவன் கொடுத்துள்ள பாக்கியம் என்றே கூற வேண்டும். 

கிரகங்களின் அருளைப்பெற எளிய வழி அவைகளின் அம்சங்களை நேசித்து போற்றுவதே. எனவே கனி மரங்களை போற்றி வளர்த்து கிரகங்களின் அருளை பெறுவோம்.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 7871244501.