Monday 30 October 2017

ஆத்ம காரகனும் தாரா காரகனும்.

ஜோதிடம் ஒரு கடல் அதனால்தான் எங்களது ஜோதிட பகிரி குழுவுக்கு ஜோதிட சாகரம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு ஜாதகத்தை அலச பல்வேறு முறைகளை ஜோதிடத்தில் பயன்படுத்துவோம். அதில் ஒன்று ஜெயமினி முனிவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ள ஆத்ம காரகன் மற்றும் தாரா காரகன் நிலைகளைக்கொண்டு ஆராய்வது. இவர் பிரகத் ஜாதகத்தை இயற்றிய வராக மிகிரருக்குப்பின் வந்த முக்கியமான ஜோதிட அறிஞர். 

ஜனன ஜாதகத்தில் முப்பது பாகைகள் கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் அதிக பாகைகள் சென்றுள்ள கிரகம் ‘ஆத்ம காரகன்’ எனப்படும். மிகக்குறைந்த பாகை சென்றுள்ள கிரகம் ‘தாரா காரகன்’ எனப்படும். தற்போது இந்த முறையைக்கொண்டு ஜாதகத்தை அலசுவது குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் தொடர்புடையதான கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் நின்ற பாகையைக்கொண்டு ஜாதகத்தை அலசும் ஜோதிட ஆய்வாளர்கள் “பாகை முறை ஜோதிடம்” என்ற வகையில் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றனர். இந்த முறையில் கிரகங்கள் வெவ்வேறு ராசிமண்டலங்களில் இருந்தாலும் தங்கள் நிற்கும் பாகைகளுக்கு 3 பாகைகள் அளவில் நெருக்கமாக இருக்கும் கிரகங்கள் கிரகக்கூட்டணிபோல  ஒருங்கிணைந்து செயல்படும் என்பது இந்த முறையின் முக்கிய அம்சம்.  

இந்த பாகை முறை ஜோதிட அலசலில்  ஆத்ம காரகன் ஜாதகரை முன்னின்று வழிநடத்தி ஜாதகரின் கர்மங்களை நிறைவேற்ற உறுதுணை புரியும். இதற்கு எதிர்மாறாக தாரா காரகன் ஜாதகரின் கர்மங்களில் இடர்பாட்டை எற்படுத்தி ஜாதகரை தவறான பாதையில் வழிநடத்தும். எப்படி ஆயினும் இவ்விரு கிரகங்களும் ஜாதகரின் வாழ்க்கைப்பயணத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பின்வரும் சில ஜாதகங்கள் இந்த வகையில் இவ்விரு கிரகங்களின் செயல்பாடுகளை எடுத்துக்காட்ட அடியேன் ஆராய்ந்தது.

பகவான் ரமண மகரிஷியின் ஜாதகம் இது.



30.12.1879 - பாண்டிச்சேரி
ஜாதகத்தில் ஆத்ம காரகன் சந்திரன் – 29.23 பாகை.
தாரா காரகன் சுக்கிரன் – 1.36 பாகை.

சந்திரன் ஞான காரகன் கேதுவுடன்  நின்று ஆன்மீகத்தை நோக்கிய திசையில் ஜாதகரை உலகம் போற்றும் உத்தம குருவாக உயர்த்தியது. தாரா காரகன் சுக்கிரனுக்கும் குடும்ப ஸ்தானமான துலாத்திற்கும் 3, 8 க்கு உரிய செவ்வாய் பார்வை பெற்றுள்ளது. மேலும் இல்லற வாழ்வை குறிக்கும் 2,4,7,8,12 ஆகிய பாவங்களும் அதன் அதிபதிகளும் கெட்டுள்ளன. இந்நிலையில் கேதுவுடன் சேர்ந்துவிட்ட ஆத்ம காரகன் சந்திரன், சுக்கிரனின் இல்லற எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டு ஜாதகரை தனது பாதைக்கு திருப்பினார்.

அடுத்து ஹிட்லரின் ஜாதகம்.





20.04.1889 - ப்ராணா, ஆஸ்திரியா.
ஆத்ம காரகன் சுக்கிரன் – 25.32 பாகை.
தாரா காரகன் புதன் – 4.24 பாகை.

ஹிட்லரின் ஜாதகத்தில் ஆத்ம காரகன் சுக்கிரன் சுய சாரத்தில் நின்றாலும் பாவிகளுடன் இணைந்து மறைவு ஸ்தானத்தில் வலுவிழந்துவிட்டது. லக்னாதிபதியான தாரா காரகன் புதனுக்கும் இதே நிலைதான். மேலும் புதன் அஸ்தங்கமாகிவிட்டது.  இங்கு ஆத்ம காரகனாக சுக்கிரன் இருந்தாலும் விபரீத ராஜ யோகம் பெற்று வலுவாகிவிட்ட உச்ச சூரியன் மற்றும் ஆட்சி செவ்வாயை மீறி வக்கிரமடைந்த ஆத்ம காரகன் சுக்கிரன் தனித்து செயல்பட முடியாது என்பதே உண்மை. எனவே உலகை அழிக்கும் குரூரத்தனம் சூரிய செவ்வாயின் நிலையால் ஜாதகருக்கு ஏற்பட்டது.

அடுத்து இந்திய அரசியல்வாதிகளை அலறவிட்ட மக்களின் மதிப்பிற்குரிய நமது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். (T.N.சேஷன்) அவர்களின் ஜாதகம்.





14.05.1933 - பாலக்காடு
ஆத்ம காரகன் சந்திரன் – 27.02 பாகை.
தாரா காரகன் சூரியன் - ௦.52 பாகை

அரசு வகை யோகங்களை குறிக்கும் 5 ஆமிட அதிபதி சந்திரன் ஆத்ம காரகனாகி கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தில் நிற்கிறது. தாரா காரகனாகிய சூரியன் தனது வீட்டிற்கு தசம கேந்திரம் பெற்று, பாவத்தில் வருமான வழியை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் நின்றதால் அரசுப்பணியில் உயர்ந்த நிலை.  லக்னமும் ராசியும் குருவினுடையதாக அமைந்துவிட்டதால் நல்ல விஷயத்தில் உறுதித்தன்மை. எதிர்ப்புகளைக்குறிக்கும் 6 ஆமிடமான சூரியனின் சிம்ம ராசியில் லக்ன & ராசி அதிபதி குரு நின்றதால் அரசு வகையில் கடும் எதிர்ப்புகளுக்குடையே பணியாற்றினார்.

குருவின் லக்னத்தையும் ராசியையும் பெற்றதால் உணவு விஷயத்தில் தாராளம். (ஓய்வு பெற்ற பிறகு சமையல் கலை பற்றி விகடனில் தொடர் ஒன்று எழுதினார்.)

பாவத்தில் புத-ஆதித்ய யோகம் – மிகச் சிறந்த ஜோதிடர். (ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்கூட்டியே கணித்தவர். காஞ்சி மகா பெரியவரின் வேண்டுதலுக்கிணங்க ராஜீவ் காந்தியை எச்சரிக்கை செய்து TOP MOST URGENT” என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு ஒரு வாரம் கழிந்த பின் உரை பிரிக்கப்படாத அக்கடிதம் ராஜீவின் மேசையிலிருந்து கைப்பற்றப்பட்டது.)

ஐந்தாமதிபதி சந்திரன் ஐந்துக்கு ஆறில் மறைவு.. குரு லக்னத்திற்கு ஆறில் மறைவு. மகத்தான இம்மனிதரின் குழந்தைப் பேரின்மையை இது குறிக்கிறது.

தற்போது யாருக்கும் பாரமின்றி முதியோர் இல்லத்தில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். 

அடுத்து உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் உள்ள பில் கேட்சினுடையது.



இது ஒரு விசேஷ ஜாதகம்.


28.10.1955 - சியாட்டில், அமெரிக்கா.
ஆத்ம காரகன்  சனி – 29.29 பாகை
தாரா காரகன் குரு – 05.40 பாகை

ஆத்ம காரகன் சனி பொதுவான அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 5 ஆமிடத்தில் உச்சம் அது மட்டுமா அவரே ஜீவன காரகன், ஆயுள் காரகன், திடீர்  அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 8 ஆமிடாதிபதி. பாக்யாதிபதி போன்ற பல்வேறு பொறுப்புகளை இந்த ஜாதகத்தில் ஏற்றுள்ளார். அத்தோடு அவர் 8 க்கு  8 ஆமிடமான மூன்றாமிடாதிபதியான  சூரியனை நீசத்திலிருந்து விடுவித்து நீச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்துகிறார். மூன்றாமிடம் வெற்றியைக் குறிப்பிடுமிடம்  என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகின என்பதை அனைவரும் அறிவோம். 

சனி குருவின் விசாக நட்சத்திரத்தில் உச்சமானதால் தாராகாரகன் குருவும் குருவின் வீட்டில் நிற்கும் தன ஸ்தானாதிபதி சந்திரனும் சேர்ந்தே வலுவடைந்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்.  சுக்கிரன் ஆட்சி வீட்டில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமடையவில்லை. இந்த ஜாதகத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் இங்கு ஆத்ம காரகன் சனி தாரா காரகன் குருவின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று இருவரும் உச்ச பலனை ஜாதகருக்கு தரவேண்டிய நிலையில் அமைந்துள்ளனர் என்பது இந்த ஜாதகத்தில் உள்ள அபூர்வமான மற்றும் விசேஷமான ஒரு அமைப்பாகும்.

கால மாற்றத்தில் ஜோதிடமும் பல்வேறு நவீன யுக்திகளை கையாள்கிறது. பண்டைய முறையானாலும் தற்போது இந்த வகை ‘பாகை முறை ஜோதிடம்’ சிறப்பான பல கணிப்புகளுக்கு வழி வகுக்கிறது என்றால் அது மிகையல்ல.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி எண்: 8300124501

1 comment: