Friday 20 July 2018

ஒரு ஜாதகத்தை மற்றோர் ஜாதகம் எப்படி பாதிக்கிறது?


ஒருவரது ஜாதக அமைப்பே அவரது வாழ்க்கைச் சூழலை தீர்மானிக்கிறது. வேலை, குடும்பம், உறவுகள் என இப்படி அனைத்தையும் ஒருவரது ஜாதகத்தை அலசுவதன் மூலம் தெளிவாக அறியலாம். அதனால் ஒரு ஜாதகர் தனது வாழ்வில் எதிகொள்ளும் மற்றொரு ஜாதகரை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்பதே அப்பட்டமான உண்மை.


 
கீழ்க்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள்

தனபால் சென்னையில் பிறந்தவர். லக்னப் புள்ளியும் 2 ம் அதிபதி குருவும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமதிபதி சுக்கிரனும் வாக்கு காரகனும் 8, 11 க்கு உரியவரான   புதனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர்.

குரு, சூரியன் உள்ளிட்ட 5 கிரகங்கள் மாந்தியோடு லக்னத்தில் அமைந்துள்ளனர். எனவே ஜாதகர் தனித்து இயங்குபவர் . செவ்வாய் லக்னத்தின்  சதுர்த்த கேந்திரத்தில் சனியின் வீட்டில் கும்பத்தில் அமைந்துள்ளது. செவ்வாய் 10 ஆமிடமான சிம்மத்தை பார்க்கிறது. செவ்வாய்க்கு 10 ல் லக்னத்தில் சூரியன் உள்ளது. தொழில் ஸ்தானமான 10 க்கு 10ல் ரிஷபத்தில் சனி அமைந்து 10 ஆமதிபதி சூரியனை பார்க்கிறது. சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்வை செய்கின்றனர்.

மேற்கண்ட அமைப்பின் பலனாக முக்கியமாக சனி செவ்வாய் தொடர்பின் காரணமான  ( சட்டம் ஒருங்கு நீதித்துறை) தொழில் புரிகிறார் ஜாதகர். .

தனபாலுக்கு கடந்த  29.11.2007ல்  திருமணம் சூரிய திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

லக்னத்தில் பாவக்கிரகமான சூரியன் எதிரியும் மற்றொரு பாவியுமான சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து 8, 11 அதிபதி புதன், நீச நிலை பெற்ற பாக்யாதிபதி சந்திரன் இவர்களோடு குடும்ப புத்திர அதிபதியான குரு , களத்திர காரகன் சுக்கிரன் ஆகியோரையும் கட்டுப்படுத்துகிறார். இதில் சூரியனை தவிர இதர நான்கு கிரகங்களும்,  லக்னம் விழுந்த புள்ளியும் 8, 11 அதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

குடும்ப காரகன் குரு குடும்ப பாவமான தனுசுக்கு விரையத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானமான மீனத்திற்கு திரிகோணத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர பாவமான மீனத்திற்கு 3,6,8  மற்றும் மீனத்திற்கு பாதகாதிபதி புதனுடனும் இணைந்துள்ளார்.

தனபால் குரு ஒரையில்தான் பிறந்துள்ளார். குரு மேற்கண்ட அமைப்பில் உள்ளதும் நவாம்சத்தில் நீச மானதும் ஜாதகர் தன, குடும்ப புத்திர வகையிலான பாதிப்புகளை அடைய வேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும்.

லக்னத்தில் அமைந்த கிரக கூட்டில் சந்திரன் நீச நிலை பெற்று 4 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் கடகத்திற்கு பாதகதிலும் லக்னத்திற்கு 7 லும்  அமைந்து சனி செவ்வாய் தொடர்பு 4 ஆம் இடத்திற்கு ஏற்படுவதும் முந்தைய பத்தியில் குறிப்பிட்ட பாதிப்புகளை ஜாதகர் அடைய ஜாதகரின் தாயார் காரணமாக இருப்பார் என அளவிடலாம். 

சந்திரனின் வீடான கடகத்தில் கேது நின்று கடகம் சனி பார்வை பெறுவது இதை உறுதி செய்கிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்து நீச பங்கம் ஏற்படுத்த முயன்றாலும் சந்திரனும் செவ்வாயும் சந்திரனின் வீடும் சனி பார்வை பெற்றதால் நீச பங்கம் தடைபடுகிறது. சந்திரனின் வீட்டில் ஒரு வக்கிர கிரகம் கேது, சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணியில் ஒரு வக்கிர கிரகம் சனி அமையும் நிலைமை ஒரு ஜாதகனுக்கு மன நிலையிலும் தாயார் வகையிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தனபாலுக்கு  29.08.2008 அன்று ஓர் குழந்தை பிறந்தது. அஷ்டமாதிபதி புதனின் சாரம் பெற்ற நீச நிலையில் அமைந்த  சந்திர திசை சந்திர புக்தியில் ஒரு பெண் மகள் ரூபா பிறந்தாள்.



ரூபாவின் லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானாதிபதியுமான  குரு லக்னத்திலேயே வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளார். தந்தையை குறிக்கும் பித்ருகாரகன் சூரியன் ஆட்சி பெற்று பாவியான சனியுடன் இணைவு பெற்று  பாவ கர்தாரி யோகமும்  பெற்று நீசன் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது. சுக்கிரனும் சூரியனும் சார பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் சனியும் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கிரக யுத்தத்தில் செவ்வாய் அதிக பாகை பெற்று வெற்றி பெற்றுவிட்டதால் புதன் சுக்கிரன் இணைவு காரணமான நீச பங்கம் இங்கு சுக்கிரனுக்கு செயல்படமுடியாமல் போகிறது. 

ரூபா பிறந்த ஓரை நாதன் சுக்கிரனாகி, சுக்கிரன் நீசம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சூரியனின் சாரம் பெற்று நிற்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓரை நாதன் சூரியன் சாரத்தில் நிற்பது சூரியனின் அம்சமான தந்தையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தை ரூபாவின் லக்ன புள்ளி கேதுவின் மூலமாகி சூரியனும் சந்திரனும் ஆட்சி பெற்றாலும் இருவருக்குமிடையில் கேது அமர்ந்தது ஆகியவை குழந்தை  பிறந்தவுடன் பெற்றோருக்கிடையே பிரிவினை ஏற்படும் என்பதை குறிக்கிறது.

மகள் ரூபா பிறந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக தனபால் தனது மனைவியையும் குழந்தையையும் பிரிந்தார். மகளை தந்தை பார்க்க மறுத்தார் . பிரிவிற்கு தனபாலின் தாயார் (நீச சந்திரன்) வழிகோலியுள்ளார். தனபால்  தனது தொழிலின் மூலம் எளிதாக வழக்குத்தொடர்ந்து சட்ட ரீதியாக குடும்பத்தை மகள் பிறந்த சில மாதங்களிலேயே பிரிந்துள்ளார்.

தனபாலின் ஜாதகத்தில் அவர் பிறந்த துவிதியை திதிக்குரிய திதி சூனிய ராசிகள் தனுசு மீனமாகி திதி சூன்யாதிபதி குரு சூரியனுடன் இணைந்து திதி சூனிய தோஷத்திலிருந்து மீண்டாலும் குரு அஷ்டமாதிபதி புதன் சாரம் பெற்றது.  தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

ரூபா பிறந்தது சதுர்த்தசி திதியில். எனவே மிதுனமும் கன்னியும் திதி சூனிய ராசிகளாகவும் புதன் திதி சூனியம் பெற்ற கிரகமுமாகிறது. இங்கு செவ்வாயுடனான யுத்தத்தில் தோல்வியுற்று தனது உச்ச வலுவும் பயனற்றுப்போனதன் காரணமாக திதி சூனியம் புதனுக்கு குறைவாகவே செயல்பட்டாலும் தோல்வியுற்ற லக்ன பாதகாதிபதி புதன் சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதால் ஏற்கனவே சனி கேதுவால் பலவீனப்பட்டுள்ள சூரியனை மேலும் பாதிக்கச் செய்வதை அறிய முடிகிறது.

தனபால் ஜாதகத்தின் அஷ்டமாதிபதி புதனின் நட்சத்திரத்தில் புத்திர காரகன் குரு. ரூபாவின் ஜாதகத்தில் லக்ன பாதபாதிபதியும் தந்தையின் அஷ்டமாதிபதியுமான புதன் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் நிற்பது ஒருவரது ஜாதகம் மற்றவருக்கு பாதகத்தை செய்யும் என்பதை குறிப்பிடுகிறது.

கவனிக்க:
ஜாதகங்கள் ஜோதிட ஆய்வு நோக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. யாரையும் குற்றம் கூறும் நோக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதை அறியவும். ஜாதகங்களில் உண்மைப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜாதகங்கள் திருக்கணித அடிப்படையில் பூச பக்ஷ அயனாம்சப்படி ஆய்வு செய்யப்பட்டவை.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501.