Monday 5 November 2018

உயிரோடு விளையாடு.

2042 ஆம் ஆண்டில் அது ஒரு மழைக்கால ஞாயிற்றுக்கிழமை.
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முகப்பில் இராவின் அடையாளத்தை பரிசோதித்த காவலாளி ரிஷியை பார்த்து நமட்டு சிரிப்புச் சிரித்தான். ரிஷி அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்துவிட்டு இராவை உள்ளே அழைத்துச் சென்றான்.



ஸ்வீடனில் நாம் ஓரிடத்திற்குள் நுழையும்போதே 28 அடி தொலைவிலிருந்து நமது கண்களைப் பார்த்து அடையாளங்கள் உறுதி செய்து அனுமதிக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது தெரியுமா இரா. இங்கு அடுத்த ஆண்டு இறுதியில் அதை செயல்படுத்த ஆரம்பித்துவிடுவோம் நாங்கள் என்றான் ரிஷி.

முதலில் அதைச் செய் என்ற இரா “ஏய் ரிஷி நீ சொன்னபடி வலையில் அலசியதில் ஜோதிட சாகரம் என்றொரு ஜோதிட தகவல் பதிவு குழுவில் நீ ஈடுபாடு காட்டும் ஜோதிட விஷயங்களை 2018 லேயே அலசியிருக்கிறார்கள்” என்றாள்.

Interesting என்றான் ரிஷி.

ஆமாம் எதிர்கால திருமண சூழல், வாழ்க்கை முறைக்கான ஜோதிட காரணங்களை பழனியப்பன், சிவக்குமார், கீர்த்தி கணேஷ்  போன்ற அன்றைய மெம்பர்ஸ் அலசியிருக்கிறார்கள் என்றாள்.

"சரி வீட்டுக்கு வந்ததும் காண்பி" என்றான் ரிஷி.

ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு இரவு தனது பிரத்யேக தகவல் தொடர்பு திரைமுன் அமர்ந்தபோது தனக்கு வந்திருந்த அந்த தகவலை பார்த்தான் ரிஷி.

உடனே தொடர்புகொண்டான்.

எதிர்முனை “ ஹலோ” என்றது.

“ஐம் ரிஷி”

“ஓஹ் நைஸ் ஐம் மீனா” என்றது குரல்.

“உங்களது பதிலை பார்த்தேன். நாம் சந்திப்போமா”

“ஆம் சந்திப்போம்”

“நீங்கள் வேலை செய்யும் ஸ்கூல் எங்கு உள்ளது” என்றான் ரிஷி.

“மடிப்பாக்கம்”

“நான் வேளச்சேரி” என்றபடி அரைமணி நேரம் பேச்சு நீண்டது.

இறுதியாக ஞாயிறு மாலை 4 மணிக்கு சந்திப்பதாக முடிவானது.

சிறிது நேரங்கழித்து ஜோதிட சாகர பதிவுகளை எடுத்துக்கொண்டு ரிஷியை அணுகினாள் இரா.

“இன்னொருனாள் பார்த்துக்கலாம்” என்றான் ரிஷி.

“ ஏன் என்ன ஆச்சு?” என்றாள் இரா.

மீனாவின் செய்தியையும் பேசியதையும் கூறினான் ரிஷி.

 “என்னையும் அழைத்துப்போவாயா?” என்றாள் இரா. 

“ஷ்யூர்” என்றபடி அவளது கையைப்பிடித்து இழுக்க இரா அவன்மீது சரிந்தாள்.
மின்விளக்கை பார்த்து கண் சிமிட்டினான் ரிஷி.

விளக்கு அணைந்தது.

வெளியே வானம் தூறிக்கொண்டிருந்தது.

காலை டைனிங் டேபிளில் இருந்து கொண்டு இராவை பார்த்து இரைந்தான் ரிஷி.

“ஆபீசுக்கு டைம் ஆச்சு சீக்கிரம்”

“கொஞ்சம் வெயிட் பண்ணு” என இரா கூற ரிஷி டென்ஷனாகி திட்டினான்.

“என்ன மனுஷியா பாரு மிஷினா பார்க்காத” என்றபடி தட்டில் இட்லியை வைத்தாள் இரா.

இட்லியை விழுங்கிக்கொண்டு இராவை பார்த்த ரிஷி “போய் குளீங்கடி” என்றான்.

“நான் குளித்தால் நீதான் மச்சான் செலவு செய்யணும்” என்றாள் இரா.

“எல்லாம் என் தலை எழுத்து” என்று நெற்றியில் ரிஷி தட்டிக்கொள்ள இரா சிரித்தாள்.

ஞாயிறு மாலை இராவுடன் ரிஷி மீனாவை சந்தித்தான்.

“ஓஹ் இவள்தான் இராவா” என்று மீனா கூற,

இரா “இவள்தான் மீனாவா” என்று கூற ரிஷி இராவை அதட்டினான்.

ரிஷியும் மீனாவும் இரண்டரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மீனா அனாதையான தான் வளர்ந்த ஆஸ்ரமம், கல்வி, தற்போது அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் நிலை என தன்னைப்பற்றி அனைத்தையும் கூறினாள். ரிஷி தான் இன்ஜினியரிங்கில் தங்கப்பதக்கம் பெற்று சைண்டிஸ்ட் ஆக இருப்பது , கிராமத்தில் வாழும் தனது வயோதிக பெற்றோர். திருமணச் சூழல், ஜாதக தோஷம், இரா  என குற்ற உணற்சியில்லாமல் தன்னைப்பற்றி மறைத்துப் பேசாமல் உண்மையாக பேசினான். அப்படித்தான் பேச வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

கல்வியில் உயர்ந்து நல்ல வளமையான நிலையில் இருக்கும் ஒருவன் ஜாதகம், தோஷம் எனப் பேசுவதைப்பார்த்து மீனா ஆச்சரியப்பட்டாள்.



“என் பின்னணி எனக்குத் தெரியாது. தவறான உறவுக்கு பிறந்தவளாகக்கூட இருக்கலாம். எனக்கு ஜாதகமும் கிடையாது” என்றாள் மீனா. தனது பின்னணியை பாராமல் தன்னை மதித்து மணந்துகொள்ளும் ஒரு ஆண் மகனை எதிர்நோக்கி இருக்கும் தனது சூழலை மீனா கூறினாள்.

இறுதியாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவானது.

எளிய முறையில் தனது கிராமத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடித்து சென்னை திரும்பினான் ரிஷி. மீனா ரிஷிக்கு ஒரு அருமையான மனைவியாக வந்து வாய்த்தாள். மீனாவிடம் இயல்பான அதீத ஈர்ப்பு இருந்தாலும் ரிஷியால் இராவை சீண்டுவதை நிறுத்த இயலவில்லை.  ரிஷி மற்றும் மீனாவின் உணவு மற்றும்  ஆரோக்ய விஷயத்தில் இரா நிலைமை அறிந்து செயல்பட்டதால் மீனாவிற்கும் இரா மீது  ஒரு பட்சாதாபம் தோன்றியது. ஒருநாள் ரிஷியிடன் கேட்டேவிட்டாள் மீனா.

“இராவிற்கு மட்டும் குழந்தை பிறக்கும் என்றால் என்னை நீ தேர்வு செய்திருக்கமாட்டாய் தானே ரிஷி”

“ஓரளவிற்கு அது உண்மைதான் மீனு” என்றான் ரிஷி.

“அது என்ன ஓரளவிற்கு உண்மை” என்றபடி அவளது காதை திருகினாள் மீனா.
  
சரியாக எட்டு மாதம் கழித்து இன்னும் குழந்தை வாய்ப்புக்கான அறிகுறியே இல்லை என்பதை உணர்ந்து ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற விரும்பினான் ரிஷி.

இராவை அழைத்து அன்னைக்கு ஜோதிட சாகரம் என்று கூறினாய் அல்லவா அவர்களில் ஒரு ஆக்டிவ் ஜோதிடரை தொடர்புகொண்டு எனது ஜாதகத்தை அனுப்பி பதில் வாங்கு என்றான் ரிஷி. இரா அதற்கான முயற்சியை எடுக்க வியாழன் இரவு ஒன்பது மணிக்கு பதில் அளிக்கப்படும் என்று ஜோதிடர் சிவக்குமாரிடம் இருந்து பதில் வந்தது. மீனாவிற்கு இரண்டு மாதங்களாக ஜீரணத்தில் பிரச்சனை இருக்கிறது. அதற்கான மருத்துவரும் அந்த நேரத்திலேயே அப்பாயிண்மென்ட் அளித்திருக்க “ நீ ரெகார்ட் செய்து வை ரிஷி, நான் டாக்டரிடம் போய் வந்தபிறகு கேட்டுக்கொள்கிறேன்” என்றுவிட்டு டாக்டரை காணச்சென்றுவிட்டாள் மீனா. 

ஜோதிடர் சிவக்குமாரை திரையில் குறிப்பிட்ட நேரத்தில் பிடித்தான் ரிஷி.

“எனது குருநாதரை வணங்கி ஜோதிடர் சிவக்குமார்” என்றார் ஜோதிடர்.

"வணக்கம் ஐயா. நான் ரிஷி ஜோதிடத்தில் ஈர்ப்புள்ளவன். உங்களது குழுவைப்பற்றி தெரியும் பழனியப்பன் ஐயாவின் வலைத்தளத்தை அவ்வப்போது படிப்பவன் நான். அவர் எப்படி இருக்கிறார் ஐயா? என வினவினான்.

நலமாக இருக்கிறார். முதுமை. நினைவுத்திறன் குறைந்துவிட்டது. காது மந்தம். எப்போதாவது குழுவில் எட்டிப்பார்ப்பார். இப்போது தனது துணைவியாருடன் பெண்ணின் குடும்பத்துடன்   ஊட்டியில் வசிக்கிறார் என்றார் ஜோதிடர். 

தொடர்ந்து “உங்கள் ஜாதகம் ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. பலன்களுக்கு செல்லலாமா?” என்றார் ஜோதிடர்.

“எங்களுக்கு புத்திர பாக்கியம் பற்றி கேட்டிருந்தோம். அவளது  ஆரோக்கியம் பற்றி கவலையாக உள்ளது. திருமணமாகி வந்ததிலிருந்து அவளுக்கு உடன் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறுகிறாள். அவளது சிரமங்களை பார்த்து வேதனைப்படுகிறேன்.அதற்கு என்ன காரணம் என்றான்.

உடனிருந்த இராவை கவனித்த ஜோதிடர் “இவர் யார்” என்று கேட்டார்.

சொன்னான்.

கும்ப லக்னமான உங்களுக்கு புத்திர காரகன் குரு இரண்டாம் இடத்தில் வக்கிரம் ஆகியுள்ளது. ஏழாமிடத்தில் ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளது. ஏழாமிடம் காம ஸ்தானம். சுக்கிரனும் தாம்பத்யத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிரகம்தான். ராகு 7ல் இருந்தால் ஏழாமிட தொடர்பை வளர்த்தும். தறிகெட்ட விபரீத காம உணர்வு. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புகள். இவற்றை ஏற்படுத்த வேண்டும். அதனால் மனைவியான சுக்கிரன் ராகுவால் கடுமையாக பாதிக்கப்படும். ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளதால் மனைவிக்கு ஆயுள்குறைவும் ஏற்படுத்தும் என்றார் ஜோதிடர்.

“ஐயோ” என மனதுக்குள் கூறிக்கொண்டான் ரிஷி.

இந்த பாதிப்பிலிருந்து மீள வழியுண்டா என வினவினான் ரிஷி.

“ராகு என்ற மாயை ஏற்படுத்தும் விபரீத எண்ணங்களுக்கு இடம்கொடாமல்  மனதை கட்டுப்படுத்தி மனைவியை நேசித்து இல்லறம் நடத்துங்கள்” என்று இராவை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டே கூறினார் ஜோதிடர்.

“எனது ஜாதகப்படி மனைவிக்கு ஆரோக்ய பாதிப்பு ஏற்படுமா?” என்றான் ரிஷி.

ஏழாமிடம் சுக்கிரனுடன் ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ராகுவுடன் சுக்கிரன் சேர்வதே மனைவியின் ஆயுளுக்கு பாதிப்பு என்பதோடல்லாமல் சுக்கிரன் நீசத்தை நோக்கி செல்கிறது. குரு இரண்டில் வக்கிரமாகி உத்திரட்டாதியில் நிற்கிறது. குரு நிற்கும் நட்சத்திராதிபதி சனி துலாத்தில் உச்சமாகி வக்ரமடைந்துள்ளது. எனவே மனைவிக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்படும் அது வயிற்றுப்பகுதியில் எதிரொலிக்கும் என்றார் ஜோதிடர் சிவக்குமார்.

அவளுக்கு வயிற்றுக்குச் செல்லும் உணவு செரிமானமாவதில்லை என்று அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறாள் என்றான் ரிஷி.

இல்லை அதன் மூல காரணம் கிட்னி மற்றும் கர்ப்பப்பையில்தான் இருக்கும். எனவே அதை பரிசோதித்துக்கொள்ளுங்கள் எங்கள் குழுவில் டாக்டர் நரேன் வயிறு தொடர்பான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் சண்முகசுந்தரம் கிட்னி ஸ்பெசலிஸ்ட். இருவருக்கும் ஜோதிட அறிவும் உண்டு தேவைப்படின் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார் ஜோதிடர்.

தொடர்ந்த ஆலோசனைகளுக்குப் பிறகு பரிகார முறைகளை குறித்துக்கொண்டு திரையை அணைத்தான் ரிஷி.

ஜோதிடர் கூறிய வார்த்தைகளின் விபரீதங்களை உணர்ந்த ரிஷி பரிகார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கினான். ஜோதிடர் கூறிய மருத்துவர்களை தொர்புகொண்டு நேரில் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று வந்தான். ஒன்றரை மாதங்களில் நிலைமை சரியானதுபோல தோன்றினாலும் மீனாவிற்கு வயிற்று உபாதை மிதமாகவேனும் இருக்கவே செய்தது.

அன்று ஒரு அரசு விடுமுறை நாள். மீனாவிற்கும் பள்ளி விடுமுறை என்பதால் பிக்னிக் செல்வது என்று முடிவாகியிருந்தது.ரிஷி செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தான். இரா கீழ்த்தளத்தில் வந்து சேர்ந்த மளிகை பொருட்களை எடுத்துவர சென்றிருந்தாள்.

திடீரென்று உடைமாற்றும் அறையில் சத்தம் கேட்டது.

ஓடிச்சென்று பார்த்தபோது மீனா தரையில் சுருண்டிருந்தாள். 

மீனா.. மீனா...என கத்தியபடி அவளது கன்னத்தை தட்டினான். 

மீனாவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவளது தலையில் ஏதேனும் அடிபட்டிருக்கிறதா எனப்பார்த்தான். .

மீனா மயங்கியிருந்தாள்.

மீனு மீனூ..

என்னடி ஆச்சு எனும்போதே அவனுக்கு கண்களில் நீர்கோர்த்தது.

அவளை தரையில் கிடத்திவிட்டு தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.

மீனு...

மீனு..

உணர்வில்லை.

இரா...

இரா...

எங்க போய்த் தொலைஞ்சே என கத்தியபடி தனது மணிக்கட்டுப் பட்டையை தட்டி இராவுக்கும் அவரச உதவிக்கும் தகவல் அனுப்பிவிட்டு உள்ளறைக்கு ஓடிச்சென்று டாக்டர் நரேன் மீனாவிற்கு அளித்திருந்த மருந்து வில்லைப் பட்டைகளை எடுத்து ஆபத்துக்கால வில்லையை கண்டுபிடித்து அவளது வாய்க்குள் திணித்தான் ரிஷி.

மீண்டும் தண்ணீரை மீனாவின் முகத்தில் தெளித்து அவளை உலுக்கினான்.. அவளது மார்பில் கைவைத்து அழுத்தியவாறே  மற்றோர் கையால் மிதமான வேகத்தில் குத்தினான். மீனாவின் கண்ணத்தை குவித்து அவளது வாயோடு தனது வாயை வைத்து ஊதினான். தனது நிறுவனத்தில் தனக்கு அளிக்கப்படிருந்த அத்தனை முதலுதவி சிகிச்சைகளையும் முயன்றான்.

பலனில்லாமல் போகேவே பீறிட்ட அழுகையை அடக்கியபடி அவளது கால் பாதங்களை தனது கரங்களில் தாங்கி விறுவிறுவென தேய்க்க ஆரம்பித்தான்.

“என்ன விட்டுட்டு போய்டாதடி” என ஓலமிட்டு புலம்பிய தருணத்தில் ரிஷி அவளது உடல் சில்லிடத்தொடங்கிவிட்டதை தெளிவாக உணர்ந்தான்.

பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த இயலாத ரிஷி மீனாவை தன் மார்போடு அணைத்துக்கொண்டு தனது கதறலை துவக்கினான்.

“கொன்னுட்டனே....”

படீரென கதவை திறந்து பாய்ந்து வந்த இரா (Indian Robotic Association  வடிவமைத்த நான்காம் தலைமுறை ரோபோட்) அவனருகில் அமர்ந்து அவனது தோளைத்தொட்டாள்.

தரைத்தளத்தில் ஆம்புலன்ஸ் ஓசை ஒலித்தது.



மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி:7871244501.