Wednesday 30 January 2019

பரிகாரம்


“மூர்த்தி போலாமா” எனக்கேட்டார் ராஜசேகர்

சத்தியமூர்த்தி மதுரையில் பிரபல புள்ளிகளில் ஒருவரான ராஜசேகரின் வாகன ஓட்டி. எட்டு வருடமாக ராஜசேகரிடம் பணிபுரிகிறான். மூர்த்திக்கு ராஜசேகரின் குடும்பம், முதலீடுகள், பலம்-பலகீனம் அனைத்தும் தெரியும். சில குழப்பமான சூழ்நிலைகளில் சரியான சமயத்தில் தன்னை பாதுகாக்க எச்சரிக்கையும் செய்வான் என்பதால் ராஜசேகர் மூர்த்தியை முழுமையாக நம்புபவர்.

சத்தியமூர்த்தி ராஜசேகரிடம் முழு நேரமாக பணிபுரிந்தான் என்பதால் அவ்வப்போது ஓய்வு கிடைக்கும், ஓய்வில் Whats app, Face book போன்றவற்றில் ஈடுபட்டு ஜோதிடம், பாடல்கள், போன்றவற்றில் பொழுதைக் கழிப்பான். ராஜசேகரிடம் சமயத்தில் அரசியல் பேசவேண்டி இருக்குமே என்ற எண்ணத்தில் அரசியல் பிடிக்காவிட்டாலும் அவருக்காக ஓரளவு தெரிந்து வைதிருப்பவன்.




“போலாம் ஐயா” என்றுவிட்டு காரின் கைப்பிடியை திறந்துவிட்டான் மூர்த்தி.

காரில் ஏரிய ராஜசேகர் “ராத்திரி சரியா தூக்கமில்லே, நீ தூங்கினியால?’ என்றார்.

“எனக்கும் அரத் தூக்கந்தான் ஐயா” என்றான் மூர்த்தி.  

“இன்னும் பொண்டாட்டி கனவில் வந்து பயமுறுத்துறாங்களா?” என்றான் மூர்த்தி.

“அது இல்லடே. புது இடம் அதான் சரியா தூக்கமில்ல என சொல்லிவிட்டு “நீ எப்டி தூங்கின?”’ என்றார் தனது நெல்லைத் தமிழில்.

“சுமாரான தூக்கந்தேன்” என்றான் மூர்த்தி.

 “ஐயரு ஊட்டுக்கு இதுக்கு முன்னாடி நீ வந்திருக்கியால?”

“ஆங். அது ஒரு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணுவிட்ட மச்சினன் ஒருத்தனுக்கு திதி கொடுக்க வந்தப்ப போயிருக்கேன்?” என்றான் மூர்த்தி.

ராமேஸ்வரத்தில் அவர்கள் தங்கியிருந்த லாட்ஜை விட்டு வண்டி கிளம்பியது.

“எம்புட்டு தூரம் ஐயரு ஊடு?” என வினவினார் ராஜசேகர்.

“கா மணி நேரத்துக்கு போய்டலாம் ஐயா”

மணி இப்போது அதிகாலை 4.55 மணி.

 
ராஜசேகரின் மனைவி மைதிலி கிராமத்து சூழலில் வளர்ந்தவள். மைதிலியின் தந்தை மாரி மர அரவை மில் நடத்தி ஓய்ந்தவர் என்பதால் கஷ்ட ஜீவனத்தில் வளர்ந்தவள். ராஜசேகரின் தந்தையின் தென்னந்தோப்புக்கு பட்டுப்போன மரங்களை எடுக்க வந்த மாரிக்கு அறிமுகமாகி அந்த தொடர்பால் தனது மகளை கட்டிக்கொடுத்த கையோடு இதய நோயால் போய்ச்சேர்ந்தவர்.

மைதிலிக்கு நேர் எதிர் ராஜசேகர். பிறக்கும் போதே பணக்காரச்சூழலில் பிறந்து சௌகரியமாக வளர்ந்தவர். தந்தையின் காலத்திற்குப் பிறகு மைதிலி தடுத்தும் கேளாமல் MLA பித்து பிடித்து அரசியலில் ஈடுபட்டு தனது சொத்துக்களை இழந்தவர். பிறகு 18 வருடங்கள் கழித்து அவர் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் பல ஒப்பந்தங்களை பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வந்து தனது மகனுக்கும் மகளுக்கும் கௌரவமாக திருமணம் நடத்தி வைத்தார். மகளை தனது அக்கா மகனுக்கு மணமுடித்து அவர்கள் ஸ்வீடனில் இருக்கிறார்கள். மகன் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ந்தவன். தனது டாக்டர் மனைவியோடு சிங்கப்பூரிலேயே குடியுரிமை பெற்றுவிட்டான். அம்மா இறந்த பிறகு தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். மகள் எப்போதாவது பேசுவதோடு சரி.

ராஜேகரின் சபலத்தால் ஏற்பட்ட தொடர்புகளை எளிதில் கண்டு பிடித்துவிட்டாள் மைதிலி. அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜசேகர் மைதிலியை அடிக்க அவள் நிலை தடுமாறி சாப்பாட்டு மேசை முனையில் தலைமோதி எதிர்பாராமல் இறந்துவிட்டாள். கோர்ட்டில் தனது தொடர்பை மட்டும் மறைத்து குடித்ததால் ஏற்பட்ட சண்டை என்றும் எதிர்பாராதது என்று கூறி 2 ஆண்டு குறைந்த பட்ச தண்டனை பெற்று தற்போது தண்டனையை ரத்து செய்ய மேல்முறையீட்டில் ஜாமீனில் வெளியே உள்ளார். மனைவி மீது சராசரிப் பிரியம் வைத்திருந்தவர். பட்டென்று போய்விட்டாளே என்ற கோபமே மைதிலி மீது அவருக்கு இருக்கிறது. செயற்கை மரணம் என்பதால் அவளது கர்ம காரியங்களையும் சாந்திப் பரிகாரங்களையும் செய்யவே தற்போது டிரைவருடன் ராமேஸ்வரம் வந்திருக்கிறார்.

பரிகார ஹோமங்களை முடித்து கோவில் சென்று கடலிலும் நாழிக்கிணறுகளிலும் குளித்து சுவாமி தரிசனம் முடிந்து தங்கும் விடுதி திரும்பியபோது நேரம் மதியம் ஒரு மணியை கடந்துவிட்டிருந்தது.
உணவு வரவழைத்து உண்டுவிட்டு ராஜசேகர் உறங்கினார். மூர்த்தி கடைவீதி சுற்றிவிட்டு காரில் வைக்க ஒரு கணபதி பொம்மையை வாங்கி வந்திருந்தான். பிறகு மாலை ராஜசேகர் எழுந்ததும் கிளம்பி வழியில் மன்னார்குடியில் தனது தொழில் தொடர்பு நண்பரை பார்த்து பேசிவிட்டு உணவை முடித்து கிளம்ப இரவு மணி 10 ஐ தாண்டிவிட்டிருந்தது. ஐயர் ஹோமம் முடித்து கோவில் சென்றபின் நேராக வீட்டிற்கு செல்லுமாறு கூறியதை ராஜசேகர் கண்டுகொள்ளவில்லை.

“இது என்னடே எப்போ வாங்கினே/” என்று காரின் முன்பக்கம் இருந்த  உலோகத்தாலான விநாயகரை பார்த்துக் கேட்டார் ராஜசேகர். அவருக்கு மைதிலி நினைவு வந்து தாக்கியது. வித விதமான விநாயகர் பொம்மைகளை வாங்கி சேகரிக்கும் பழக்கம் மைதிலிக்கு இருந்தது. நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள், பொம்மைகள் என வீட்டில் இருந்தன. ராஜசேகருக்கு மைதிலியை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால் வித்தியாசமான விநாயகர் பொம்மையை வாங்கிக்கொடுத்தால் போதும் நகைகள் கூட தேவையில்லை என்பதை நன்கு அறிந்திருந்தார். ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது அவளுக்கான வாங்கி வந்திருந்த நியானில் ஒளிரும் கணபதி சிலை மீது மைதிலி மிகுந்த பிரியம் வைத்திருந்தது நினைவில் வந்தது. 

“இது ரொம்ப புடிச்சிருந்ததுங்க ஐயா” அதான் வாங்கினேன் என்றான் மூர்த்தி. அப்போதுதான் மூர்த்தியின் கண்களை பார்த்தார் ராஜசேகர். சத்தியமூர்த்தியின் கண்கள் சிவந்திருந்தது. “எலே மத்தியானம் கொஞ்சம் தூங்கியிருக்கலாம்லே, நேத்து ராத்திரியிலும் நல்ல தூக்கமில்லைனு சொன்னியாலே.. கண்ணு இப்படி செவந்திருக்கு” என்றார் ராஜாசேகர்.

“அது பெரிய பிரச்னையில்லீங்கையா மன்னார்குடில சாப்பிட்ட தோசை கொஞ்சம்  புளிச்சிருந்தது. அதான் தலைவலியும் சேர்துடுச்சு” என்றான் மூர்த்தி.

“எலே வண்டிய நிறுத்துலே நீ பின்னாடி வா. நா வண்டிய ஒட்டுதேன்” என்று மூர்த்தியின் மறுப்பை கேளாமல் மூர்த்தியை பின்சீட்டில் அமர்த்திவிட்டு வண்டியை ஓட்டினார் ராஜசேகர்.

அன்னபூரணியின் கோலத்தை பார்த்த செல்வம் “ஏண்டி என்னடி எப்ப பாத்தாலும் ஒளவையார் கணக்கா இப்டி ஒரு கோலம். நமக்கு கல்யாணமாகி 6 வருஷந்தான் ஆச்சு . அதுக்குள்ளே இப்டியா?” என்றான்.

“உனக்கு அஷ்டம சனியாம் கண்டம் இருக்காம். ஜோசியரு சொன்னாரு அதான் புள்ளார (பிள்ளையார்) சுத்தி வேண்டிட்டு வாரேன்.” என்றாள் அன்னபூரணி.


“மொதல்ல ஊட்டுக்காரன சுத்துங்கடி. புள்ளார அப்புறம் சுத்தலாம்” என்று செல்வம் அன்னபூரணியிடம் கடுப்படித்த வேளையில் உள்ளே வந்தான் குமார்.

“அண்ணாத்தே ஒரு அர்ஜென்ட் சவாரி. உன்ன முதலாளி இட்டார சொன்னாரு” என்றான் .

“இப்பதாண்டா வந்தேன் அதுக்குள்ள அர்ஜெண்டா என்றான்.

“ஏன்டா ஒரு அர நாள் மனுசன சும்மா உடுரீங்களா. இன்னும் உங்கண்ணன் சாப்டக்கூட இல்ல. நாளைக்கு போய்க்கலான்னு போய் சொல்லு” என்றாள் அன்னபூரணி.

நசீர் மதுரையில் பிரபல மோட்டார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். செல்வம் நசீரிடம் கடந்த 9 வருடங்களாக லாரி டிரைவராக வேலை பார்க்கிறான். நசீரிடம் உள்ள 18 வண்டிகளில் 6 வது வண்டியை ஓட்டிவருபவன். 15 வயதில் செல்வம் கிளீனர் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்தே நசீருக்கு தொழில் வளம் கூடியது என்பதால் நசீருக்கு செல்வத்தின் மீது தனிப்பட்ட அக்கறை உண்டு.  குமார் செல்வதுடன் வரும் கிளீனர். குமாருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் சென்ற பிறகு தனி வண்டி தருவதாக சொல்லி இருக்கிறார் நசீர். அது வரை செல்வத்துடன்தான் குமாரின் பிழைப்பு.

செல்வம், குமார், அன்னபூரணி மூவருமே ஏழ்மையான சூழலோடு போராடுபவர்கள். படிப்பறிவு குறைவு என்பதால் கிடைத்த வேளையில் தங்கள் ஏழ்மையை களைய முனைபவர்கள். அனாதையான செல்வந்துக்கு கடவுள் கொடுத்த பரிசு அன்னபூரணி எனலாம். நசீர்தான் அவனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தார்.

மூவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது நசீர் கைப்பேசியில் அழைத்தார்.

“ அண்ணே குமாரு சொன்னான்னே” என்றான் செல்வம்.

“நீ இப்பத்தான் திருச்சியில இருந்து வந்தே. நாளைக்கும் நாளை மறுநாளும் டீசல் வெல குறைப்புக்காக லாரிகள் வேலை நிறுத்தம் செய்யலாம்னு சாயந்திரம் தீர்மானம் போடப்போறோம். நீ என்ன பண்ணு இப்ப தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ. சாயந்தரம் கிளம்பி கீழக்கர போயிட்டு நைட்டோட நைட்டா திரும்பிரு.. நாளைக்கு ரெண்டு நாள்  ஸ்ட்ரைக்குனால ரெஸ்டுதான்” என்று கூறிவிட்டு லோடு விபரங்களை கூறினார் நசீர்.

மாலை எழுந்த  பிறகு லோடு ரெடியாகி விட்டதா என்பதை உறுதி செய்து கொண்டு கிளம்ப தயாரானார்கள் செல்வமும் குமாரும்.

அன்னபூரணி பிள்ளையார் கோவில் சென்று வந்து இருவருக்கும் விபூதி பூசிவிட்டு பிறகு தன் தாலிக்கயிற்றில் வைத்து கண்களில் ஒத்திக்கொண்டாள். செல்வம் லாரிக்கு செல்லும்போதெல்லாம் வீட்டில் இது ஒரு சடங்காகவே உருவாகியிருந்தது. செல்வத்திற்கு துவக்கத்தில் நம்பிக்கையில்லாவிட்டாலும் பிறகு அன்னபூரணியின் நம்பிக்கைக்காக மகிழிச்சியோடு ஏற்றுக்கொண்டான். அதுமட்டுமல்ல அவள் ஆசையாக திருவிழாவில் வாங்கிக்கொடுத்த விநாயகர் பொம்மையை தனது வண்டியில் தனக்கு முன்னால் பொருத்தியிருந்தான். அன்னபூரணி தன் கணவன் கண்ட இடத்தில் உணவுக்காக செலவு செய்து உடம்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணத்திலும், சிக்கனத்தின் பொருட்டும் ஒருநாள் லோடு எனும் போது உணவு தயாரித்து தந்துவிடுவாள்.

“சாக்குறதயா போய்யா. உன் ராசிக்கு இன்னைக்கு சந்திராஷ்டமம்னு டிவில ஜோஸ்யர் சொன்னாரு” என்றாள்.

“உன் ஜோஸ்யருகிட்ட எப்ப காசு வரும்னு கேட்டு சொல்லு” என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே அவள் கொடுத்த உணவுப் பொட்டலத்தை வாங்கிக்கொண்டு இருவரும் சென்று நசீரை பார்த்து லாரியை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

லோடு குறித்த நேரத்துக்கு ரெடியாகவில்லை. தாமதித்தலில் இதுதான் அன்னபூரணி சொன்ன சந்திராஷ்டமோ என்று அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பது தெரியாமல் அலுத்துக்கொண்டான்.  எதிர்பார்த்தற்கு மாறாக மிகவும் தாமதமாகவே  லோடு ஏற்றிக் கிளம்பினர்.

வழியில் வண்டியை நிறுத்தி உணவருந்தினர். உணவுப்பொட்டலத்தை பிரிக்கையில் அந்த நேரத்தில் ஒரு பிச்சைக்காரி வந்து கையை நீட்டி பிச்சை கேட்டாள்.

செல்வம் ஒரு கணம் அவளையும் அவள்  கையிலிருந்த குழந்தையையும் பார்த்தான். அன்னபூரணி தற்போதுதான் கருவுற்றிந்தாள். கையிலிருந்த பொட்டலத்தை அப்படியே அவளிடம் தந்துவிட்டான்.

குமார் அவளை வைதான் “போ மே அந்தாண்ட. சாப்புடுற நேரத்துல” என்று விரட்டினான்.

செல்வம் பக்கம் திரும்பி “ஏன் அண்ணாத்த அப்டியே குடுதுட்ட” என்றான்.
“சாப்புடுட்டுண்டா. என்ன பெத்தவ என்ன தூக்கிபோட்டது  மாதிரி இவளும் அவ குழந்தைய தூக்கிப் போட்டுடக்கூடாது பாரு” என்றான்.

“போ அண்ணாத்தா. இதெல்லாம் பிச்ச எடுக்கரதுக்கே வாடகைக்கு எடுத்துட்டு வந்த குழந்தையா இருக்கும்” என்றான்.

“அவிங்கெல்லாம் இந்நேரம் வந்து பிச்சை எடுக்க மாட்டாங்கடா. குழந்தயோட பசிக்கு சோத்த தேடுற தாய்க்கு நேரம் தெரியாதுடா. நீ சாப்டு” என்று விட்டு கீழே இறங்கி அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றான்.

அதிகாலை 2.47 மணிக்கு செல்வத்தின் லாரியும் ராஜசேகரின் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

குறுக்கே வந்த டூ வீலர்காரனை திட்டிவிட்டு வேகத்தை குறைக்காமல் வண்டியை சற்றே வளைத்த ராஜசேகர் எதிரே வந்த லாரியை கவனிக்கத் தவறியிருந்தார்.

தன்னெதிரே திடீரென்று நிலைதடுமாறித்  திரும்பிய காரைப்பார்த்து இடது பக்கம் பள்ளத்தில் இறங்க வழியில்லாமல் கஸ்மாலம், சாவுகிராக்கி என்றபடியே பிரேக்கை அழுத்தினான் செல்வம்.

கார் லாரியை மோதிய வேகத்தில் தூக்கி எறியப்பட்டு பள்ளத்தில் உருண்டது. செல்வமும் குமாரும் கண்னாடிக் கீரல்களை எதிர்கொண்டனர்.

செல்வம் மயங்கியிருந்தான். அண்ணாத்த என்று குமார் உலுக்கியபோது கண்திறந்த செல்வத்தின் பார்வையில் அவர்களது வண்டியிலிருந்த விநாயகர் கண்சிமிட்டுவது போல் தெரிந்தார்.

உயிர் தப்பிய மூர்த்திக்கு மார்பிலும் முகத்திலும் காயங்கள். 

உடலின் மீது அதிக சேதம் என்றாலும் டாஷ் போர்டிலிருந்த விநாயகர் பொம்மை நெற்றிபொட்டில் தாக்கியதால் வினாடியில் உடல் வேதனைகளை அனுபவிக்காமல்  உயிரை விட்டிருந்தார் ராஜசேகர். 

அடுத்த பதிவு 

“கர்மா”

ஜாதகத்தில் நமக்கான கர்மங்களை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் கிரகங்கள் பற்றிய ஆய்வு.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501.

1 comment:

  1. சிறுகதை சிறப்பு . மத நம்பிக்கையுடன் , ஜோதிடத்தை கலந்து அருமையாக எழுதப்பட்டுள்ளது. சந்திராஷ்டம காலம் எப்படியிருக்கும்? என்பது ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.கர்மா எப்படி வேலை செய்கிறது? என்பதையும் மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள் .
    மிக்க நன்றி
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்

    ReplyDelete