Friday 8 February 2019

கர்மா


உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா உண்டு. இதில் அந்த கர்மங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறோம். அதற்காக ஜோதிடம் போன்ற வழிகளில் முயல்கிறோம்.

கர்மம் என்பது ஒரு ஜாதகர் தனது வாழ்வில் ஈடுபடும் செயல்களைக் குறிக்கும். ஒரு ஜாதகர் தனது வாழ்வில் பலவகை கர்மங்களில் ஈடுபட்டாலும் பிரதானமாக அவரது உணவுக்கான உழைக்கும் 2 மற்றும் 10 ஆமிட தொடர்பையும் ஜீவன காரகன் சனியையும் கொண்டே அது அளவிடப்படுகிறது. இது ஜீவன கர்மா மட்டுமே.

ஒருவர் உணவுக்காக உழைக்கும் தன்மையை 10 ஆமிடம், மகர ராசி, 10 ஆமிடாதிபதி, சனி இவர்களை கொண்டும்,

உழைப்பால் பெரும் பொருளாதாரத்தை 2 ஆமிடம், 2 ஆமிடாதிபதி, ரிஷப ராசி, சுக்கிரனை கொண்டும். 

உழைப்பால் ஈட்டிய தனத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதை 12 ஆமிடம், 12 ஆமிடாதிபதி,  மீன ராசியையும் குருவைக்கொண்டும் ,

உழைப்பால் பெற்ற தனத்தைக்கொண்டு தன்   மனைவியோடு எப்படி வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார் என்பதை 7 ஆமிடத்தையும், 7 ஆமதிபதியையும், துலாம் ராசியையும் சுக்கிரனைக் கொண்டும்,

உழைப்பில் ஒருவருக்கு உள்ள உறுதி, சாதிக்க வேண்டும் என்ற தீவிரம், மற்றவர்களோடு சேர்ந்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை லக்னம், லக்னாதிபதி, மேஷம், செவ்வாய் ஆகியவைகளைக் கொண்டும்,

உழைக்கும் இடத்தில் ஏற்படும் நட்பை புதன், ஏழாமிடம், எழாமதிபதி ஆகியோரைக் கொண்டும்,

உழைக்குமிடத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள், வேலையில் இடம் மாறும் சூழல் ஆகியவற்றை சந்திரன், சந்திரனுக்கும் 10 ஆமிடத்திற்கும் உள்ள தொடர்புகளை கொண்டும்,  

தொழிலில் ஜாதகருக்கு உள்ள நிர்வாகத் திறமையை லக்னாதிபதி, லக்னம், சூரியன், சிம்ம ராசியை கொண்டும்,

வேலையில் ஜாதகர் எதிர்கொள்ளும் கடுமைகளை, எதிர்ப்புகளை, தடைகளை 6 ஆமிடம், 6 ஆமதிபதி, செவ்வாய், ராகு-கேதுக்களை கொண்டும்,

உழைப்பில் வேளையில் ஜாதகருக்கு உள்ள திட்டமிடும் தன்மையை புதனை கொண்டும்,

சூழ்நிலைக்கேற்ப விரைந்து முடிவெடுக்கும் தன்மையை சந்திரனை கொண்டும் அளவிட வேண்டும்.

ஜீவன கர்மாவை தவிர்த்து ஒருவரது ஆன்மா தனது பிறப்பின் ரகசியங்களை தேடி மோட்சத்தை நோக்கிய நிலையில் பயணிப்பது மோட்ச கர்மா ஆகும். அதற்கு லக்னம் மோட்ச லக்னங்களில் ஒன்றாகி லக்னமும், ராசியும் குரு, சனி, ராகு-கேதுக்களின்  தொடர்பு பெறுவது சிறப்பு. லக்னாதிபதி, உடல்காரகன் சந்திரன், உயிர் மற்றும் ஆன்ம காரகன் சூரியன் இவர்களோடு இல்லற வாழ்வை கைவிட சுக்கிரனும் அனுமதிக்க வேண்டும். மேலும் ஜாதகத்தில் இதர பாவங்களும் பாவாதிபதிகளும் இதை அனுமதிக்க வேண்டும்.

ஒருவரின் முற்பிறவி கர்மங்களையும் அடுந்த பிறவி கர்மங்களையும் அனுமானிக்க ஜோதிடத்தில் வழிகள் உள்ளது என்றாலும் இங்கு நாம் இப்பிறவியில் ஒரு மனிதன் ஈடுபடும் கர்மங்களை எடுத்துக்கொள்வோம். 
உண்மையில் நமது கர்மங்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன என்றாலும் நமது வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அது தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்கிறது என்பதே உண்மை. கர்மங்களில் காலத்திற்குத்தக்க மாறுபாடுகள் உண்டு. அவற்றை திசா புக்திகளைகொண்டு அறியலாம்.  


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. ஜாதகரின் பெயர் குப்புசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்க்குப் பெயர் பெற்ற பத்தமடையை  சேர்ந்தவர்.

ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் கடக லக்னத்திலுள்ள செவ்வாயுடன் பரிவர்த்தனையில் உள்ளார். பரிவர்தனையான கிரகங்கள் பரிவர்த்தனையான தங்கள் ஆட்சி வீட்டோடு தொடர்புகொண்டு இடம் மாறிச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சனி பார்வையை சந்திரன் பெறும்போது ஜாதகரை தவறு செய்ய வைத்து பிறகு தண்டிக்கும். ஆனால் சந்திரன் சனியோடு இணையும்போது சனியின் பற்றுதலற்ற மனோநிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.  கால புருஷனுக்கு சுகஸ்தானமான 4 ஆமிடத்தில்  சனி சந்திரனோடு மறை பொருளை குறிக்கும் ராகுவும் இணைவது ஜாதகர் பற்றற்ற வாழ்வுக்கு செல்வதை குறிப்பிடுகிறது. சன்யாச யோகங்களில் இது குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் ராகுவோடு இணையும்போது ஜாதகர் சாதாரண உலகியல் வாழ்வை விட்டு மாற்றி யோசிப்பவர் எனலாம். மேலும் கடகத்தில் சந்திரனோடு சனி, ராகு இணைவு ஜாதகருக்கு வெளிநாட்டுத் தொடர்பை ஜீவன வகையில் ஏற்படுத்தும் எனலாம்.

தன, குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ஆட்சி சூரியன் சிறப்பாக அமர்ந்திருக்கிறார் என்றாலும் அவர் விரையாதிபதி சேர்க்கை பெற்று நிற்பது வருமான வகையில்  மருத்துவத்தோடு தொடர்பு பெறுவதை குறித்தாலும் குடும்ப வகையில் சிறப்பல்ல. 10 ஆமிடத்தில் பரிவர்த்தனைக்குப் பிறகு வந்து அமரும் செவ்வாயை குரு பார்வை செய்கிறார். இது ஜாதகர் தனது தொழிலிலும் கர்மங்களிலும் அடையும் சிறப்பைக்  குறிப்பிடுவதோடு ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்பு  கொள்வதை உறுதி செய்கிறது. ஜாதகர் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

லக்னத்தில் ராகு அமைந்து ஜாதகர் மருத்துவரானாலோ அல்லது மறை பொருளைத்தேடும் ஞானி ஆனாலோ போற்றத்தக்க வாழ்வை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.

ஜாதகர் செவ்வாய் திசையில் தஞ்சையில் மருத்துவம் பயின்றார். வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்திலமைந்த குரு அதற்கு உதவினார் என்றால் அது மிகையல்ல. ஜாதகர் செவ்வாய் திசை சுக்ர புக்தியில் வெளிநாடு (மலேசியா)   சென்றார். சுக்கிரன் சந்திரன் சாரம் பெற்று வெளி நாட்டு வாழ்வைக் குறிக்கும் 12 ஆமிட தொடர்பு பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடக லக்னத்தில் சனி அமர்ந்ததால் ஜாதகர் வெளி நாடு சென்று மருத்துவ சேவை செய்தார். குறிப்பாக சனி குறிப்பிடும் ஏழைகளுக்கு இலவச சேவை செய்து அவர்களால் வெளிநாட்டில் கொண்டாடப்பட்டார்.

லக்னத்தில் சனி, ராகு என்ற இரு கடும் பாவிகளால் ஞான நிலையை நோக்கி ஜாதகர் மனம் சென்றது என்றால் இரண்டாமிடத்தில் விரையாதிபதி புதன் அமர்ந்து குடும்ப வாழ்வை புறந்தள்ள வைத்தது. குடும்ப காரகன் குரு பகையும் கேதிராதிபத்திய தோஷத்திய தோஷமும் பெற்று அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் தனது சுக ஸ்தானத்திற்கு விரையத்தில் நீசமாகி வக்கிரம் பெற்றதும் ஜாதகருக்கு இல்லற வாழ்வு மறுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. ராகு லக்ன கேந்திரத்தில் தனது நட்சத்திரத்திரமான சுவாதியில் அமைந்த குருவால் சூட்சுமமாக சுபத்துவம் பெற்றுள்ளது மிகச் சிறப்பு. பொதுவாக குரு நான்காமிடத்தில் அமைவதே குடும்ப வாழ்வுக்கு எதிரான அமைப்புதான். 

ராகு 3 மற்றும் 12 ஆமிடாதிபதி புதன் சாரம் பெற்றதால் ராகு திசையின் முதல் 9 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்வை முடிந்த பின் ஜாதகர் இந்தியா திரும்பினார். புதன் சூரியனுடன் சிம்ம ராசியில் இணைந்துள்ளதை கவனிக்க. சிம்ம ராசி உயர்ந்த மலைப்பகுதிகளை குறிப்பிடும். சூரியன் தலைமைப் பண்பை குறிப்பிடும். இந்தியா திரும்பிய ஜாதகரின் மனம் முழுமையான ஆன்மீக வாழ்வை நாடியது. நெடிதுயர்ந்த மலைப்பகுதியான ரிஷிகேசில் கடவுள் தனக்காக வழி காட்ட அனுப்பிய குரு விஸ்வானந்த சரஸ்வதியை ஜாதகர் சந்தித்தார். சில மணி நேரங்களே நீடித்த அந்த சந்திப்பில் குப்புசாமிக்கு போதிக்க அதிகமில்லை என்பதை குரு உணர்ந்தார்.  குருவின் வேண்டுகோளை ஏற்று ஜாதகர் சன்யாச வாழ்வை மேற்கொண்டார். ரிஷிகேசிலேயே தமது ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு ஞான குருவாக இருந்துகொண்டு இவ்வுலகிற்கு வழிகாட்டினார். குருவால் சுபத்துவம் பெற்று மோட்ச லக்னமான கடகத்தில் அமர்ந்த ராகு திசையின் 2 ஆவது பகுதியும் அதனை அடுத்து வந்த குரு திசையும் ஜாதகரை உலகம் கொண்டாடும் உத்தம மகானாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

உலகம் இன்றும் வழிபடும் இந்தியாவின் மிகச்சிறந்த மகான்களில் ஒருவர்  ஜாதகராவார். இன்றைய நிலையில் இந்தியா ஏங்கிக்கொண்டிருப்பது இவரைப்போன்ற உத்தம மகான்களுக்காகத்தான். வாழ்க்கை, ஆன்மீக, இயற்கை நெறிகளை குறித்து ஜாதகர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். இந்துமதத்தின் ஒப்புயர்வற்ற சக்தியாக விளங்கிய ஜாதகர் “தெய்வ நெறிக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இன்றளவும் மிகச்சிறப்பாக இந்து தர்ம நெறிகளை உலகிற்கு அளித்துவருகிறது இவ்வமைப்பு. 

   

சனி திசையி;ல் 14.07.1964ல் “சுவாமி சிவானந்தர்” என்றழைக்கப்பட்ட ரிஷிகேசை சார்ந்த இந்தத் தமிழ்நாட்டு மகான் முக்தியடைந்தார். 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501

No comments:

Post a Comment