Tuesday 19 February 2019

கூக்லி


பாவகத்தில் பரிவர்த்தனை நுட்பங்கள்

கிரிக்கெட் பற்றி தெரிந்த அனைவருக்கும் கூக்லி என்றால் என்னவென்று தெரியும். பந்து வீசுகையில் அது ஒரு புறமாக திரும்பும் விதமாக ஸ்பின் பௌலர்கள் வீசுவார்கள். அது எதிர்பார்க்கும் திசையில் திரும்பாமல் மாற்று திசையில் திரும்பி பேட்ஸ்மனை திணறடிக்கும். அவ்விதமான பந்து வீச்சுக்குப் பெயர்தான் கூக்லி.



பரிவர்த்தனை அமைப்பு ஒரு ஜாதகத்தில் ஏற்பட்டிருந்தால் அது சிறப்பானது. பரிவர்த்தனை நல்ல பாவகங்களுக்கிடையேயும் இரு நட்பு கிரகங்களுக்கிடையேயும் ஏற்படுவது விரும்பத்தக்கது. இவ்வகை பரிவர்த்தனைகள் மிகச் சிறந்த பலனைத் தரும்.  இரு பகை கிரகங்கிடையேயும் மறைவு, பாதக ஸ்தான தொடர்புடைய வகையிலும் ஏற்பட்டிருந்தால் அது அவ யோகத்தையே செய்யும். பரிவர்த்தனையில் ஈடுபடும் கிரகங்களுக்கிடையேயான உறவின் அடிப்படையிலும் (நட்பு, பகை, சமம்) மற்றும் பரிவர்தனைக்குள்ளாகும் பாவங்களைப் பொருத்தும் பரிவர்த்தனையின் செயல்பாடு இருக்கும். இரு நீச்ச கிரகங்களுக்கிடையே பரிவர்த்தனை ஏற்பட்டிருந்தால் அங்கு இரு கிரகங்களின் நீச்சம் பங்கப்பட்டு யோகத்தை அளிக்கும். அப்படி இரு நீச்ச கிரகங்களுக்கிடையேயான  பரிவர்தனை இதர கிரக பரிவர்த்தனைகளைவிட மிகச்சிறப்பான பலனை அளிக்கும்.  பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் இரு வீட்டு ஆதிபத்தியம் கொண்டிருந்தால் பரிவர்த்தனையில் பங்கு கொள்ளும் பாவங்களின் செயல்பாடு சிறப்பாகவும் பரிவர்த்தனையில் பங்கு கொள்ளாத பாவங்களின் செயல்பாடுகள் பெருமளவில் பாதிப்புக்கும் உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் தங்கள் பாவங்களில் இடம் மாறி சிறந்த பலனை வழங்கும் என்றாலும் அது கோட்சாரத்தில் அதிகம் நடக்கும். எப்போது நடக்கும் என்றால் கோட்சாரத்தில் பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் ஒன்றை ஒன்று தொடர்புகொள்ளும் போது நடக்கும். பரிவர்த்தனை ஆனாலும் ஒரு  கிரகம் தனது திசா புக்திகளில் பொதுவாக தாங்கள் நின்ற பாவப்பலனையே அதிகம் செய்யும். அப்படி பரிவர்த்தனை ஆன ஒரு கிரகம் திசை நடத்துகையில் பரிவர்த்தனை ஆன மற்றொரு கிரகம் கோட்சாரத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அக்கிரகம் நின்ற பாவத்தின் பலனையும் கூடுதலாக  எடுத்துச் செய்யும்.

மேற்சொன்ன விதிகள் தெரிந்திருந்தாலும் பாவத்தில் ராசிச்சக்கரத்தில் இருக்கும் கிரக நிலைகள் பாவச் சக்கரத்தில் இடம் மாறியிருக்கும். அத்தகைய கிரகங்கள் ராசியில் அமைந்த அமைவிடத்தின் தன்மையை ஓட்டி பாவக சக்கரத்தில் அமைந்த இடத்தின் செயல்பாட்டையே தனது திசா புக்தியில் கொடுக்கும். (இது பற்றி பாவச் சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி? என்று ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருந்தோம். அதன்  இரண்டாவது பகுதியாக இப்பதிவை எடுத்துக்கொள்ளலாம்.) இந்நிலையில் ராசி சக்கர பரிவர்த்தனை அமைப்பை பாவச்சக்கரம் மாற்றி அமைத்துவிடும் என்பதை கவனத்திலகொள்ள வேண்டும். பெரும்பாலான ஜோதிடர்கள் குழம்புவது இங்குதான்

              
மேலே உள்ளது ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகத்தில் ராசியில் பரிவர்த்தனை இல்லை. பாவத்தில் உள்ளது. ராசியில் நீச்சத்தை நோக்கிச் செல்லும் சந்திரன் பாவத்தில் நீச்சமான செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகிறது. பாவகத்தில் ஏற்பட்டிருந்தாலும்  இதுவும் ஒருவகையில் அருமையான நீச கிரக பரிவர்தனையாகும். பரிவர்த்தனை கிரகங்கள் இடம் மாறிய பிறகு தங்களது ஆட்சி வீட்டிற்கு வந்து விடுகின்றன. நடப்பது பாக்யாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் அமைந்த லக்னாதிபதி புதனின் திசை. சனியும் பாவத்தில் தனது மூலத்திரிகோண வீட்டில் அமைந்துள்ளார். ஆறாம் இடம் மற்றும் சனி இரண்டும் வேலையை குறிக்கும். பரிவர்த்தனை ஆன இரு பாவங்களும் ஜல ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஜாதகர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். லக்னாதிபதி புதன் தனது பரம நண்பர் சூரியனுடனும், பரிவர்த்தனையால் வலுவடைந்த செவ்வாயுடனும் அமைந்துள்ளார். ராகு-கேதுக்கள் வெளி நாட்டுத் தொடர்பை குறிக்கும் என்பதால் ஜாதகர் வெளிநாட்டோடு தொடர்புடையதாக தமது வாழ்வை அமைத்துக்கொண்டால் ராகு-கேதுக்கள் நன்மை செய்கின்றன.  

சுபாவ பாவியும் மூன்றாமிடாதிபதியுமான சூரியன் சேவக ஸ்தானத்தில் யோக பலம் பெற்ற ஆறாமதிபதியுடன் அமைவது ஜாதகர் தனது வேளையில் முதன்மையான நிலையை அடைவார் என்பதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை ஆன இடம் தன ஸ்தானமான இரண்டாமிடம் என்பதன் பலனாவது ஜாதகர் மாத ஊதியமாக சில லகரங்களை (டாலரில்) பெறுவதை குறிக்கிறது. செவ்வாய் சனியின் பூச நட்சத்திரத்தில் அமைந்துதான் பரிவர்த்தனை பெற்றுள்ளார். பரிவர்த்தனைக்குப்பின் புதனுடன் சேருகிறார். ஜாதகர் தகவல் தொழில் நுட்பத்துறையில் வல்லுநர் (BE, MS).  இந்த ஜாதகத்தில் பாவச்சக்கர பரிவர்த்தனையை கவனிக்காமல் பலன் கூறினால் பலனில் தெளிவிருக்காது.

கீழே ஒரு பெண்மணியின் ஜாதகம்.
               
இந்த ஜாதகத்திலும் ராசியில் பரிவர்த்தனை இல்லை. பாவகத்தில் வக்ரம் பெற்ற லக்னாதிபதி சனியுடன்  6 ஆமதிபதி சந்திரன் பரிவர்த்தனை. சந்திரன் காலபுருஷனுக்கு ஆறிலும் லக்னத்திற்கு எட்டிலும் அமைந்த ராகுவின் சாரம். பாவகத்தில் பரிவர்த்தனை ஆகும் சனி ராசியில் சிம்மத்தில் கேதுவின் சாரத்தில் அமைந்துள்ளது. பரிவர்த்தனை லக்னத்திற்கும் 6 ஆமிடத்திற்கும் அதன் அதிபதிகளுக்குமிடையே அமைவது இதர அமைப்புகள் கெட்டிருந்தால் அவ யோகத்தை செய்யக்கூடியதாகும். இங்கு நாம் இதர அமைப்புகளை தவிர்த்து பாவக பரிவர்த்தனை தொடர்புடைய விஷயங்களை மட்டும் ஆராய்வோம்.

புதன் ராசியில் கேதுவின் மக நட்சத்திரத்தில் அமைந்து பாவகத்தில் லக்னத்திற்கு இரண்டில் கேது, சூரியனோடு இணைந்துள்ளார். லக்னாதிபதி சனி வக்கிரம் பெற்று சூரியனது வீட்டில் அமைந்துள்ளது. ஜாதகி அரசுப்பள்ளி ஆசிரியையாக பணி புரிய உதவியுள்ளது. வக்கிரம் பெற்ற கிரகங்களை நிரந்தர வக்கிர கதியில் அமையும் ராகு-கேதுக்கள் நண்பர்களாகவே பாவிக்கும். அவைகளெல்லாம் one way யில் பயணிக்கும் வாகனங்கள் போன்றவை. ஒன்றை ஒன்று மோதிக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவே. அப்படியே வக்கிர கிரகங்கள் பாதிக்கப்பட்டாலும் அவைகளை ராகு-கேதுக்கள் கை தூக்கி விட்டு உதவுகின்றன. .

இந்த ஜாதகத்திலும் திசா நாதன் புதனே. புதன் கேதுவின் சாரம் பெற்று பாவகத்தில்  கேதுவோடு தொடர்பு பெறுகிறது. புதன் இங்கு ஐந்து மற்றும் எட்டாம் இடத்திற்கு அதிபதி என்பது கவனிக்கத்தக்கது. எட்டாமிடம் ஒரு பெண்ணிற்கு கர்ப்பப்பையையும் குறிக்கும். சந்திரன் காரக அடிப்படையில் ஒரு பெண்ணிற்கு கர்ப்பப் பையை குறிக்கும். ஆறாமதிபதியோடு பாவகத்தில் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்றதால் ஜாதகிக்கு வக்கிரகதியில் அமைந்து ராகு-கேதுக்களுக்கு நட்பாகிவிட்ட எட்டாமதிபதி புதனின் திசையில் கேது புக்தியில் ஜாதகிக்கு கற்பப்பை கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டது.

ராகு-கேதுக்கள் மருத்துவச் சிறப்பை குறிக்கும் காரக கிரகங்களாகும். அவர்களோடு தொடர்புகொள்ளும் கிரகங்கள் வக்கிர கதியில் அமைந்து அவர்களது அன்புக்கு பாத்திரமாகும் போது அக்கிரகங்கள் குறிக்கும் பாவகங்களில் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பை மிகச் சிறப்பாக சரி செய்துவிடும். இது ராகு-கேதுக்கள் வக்கிர கிரகங்களோடு இணைந்து ஜாதகருக்கு நிகழ்த்தும் அற்புதமாகும். அனுபவித்தவர்களுக்கு இக்கிரகங்களின் அற்புதம் புரியும்.

இரு ஜாதகங்களிலும் புதன் வக்ரமடைந்திருப்பது தீவிர படிப்பாளிகளை குறிக்கும்.

எனவே ஜோதிடர்கள் பாவச் சக்கரத்தையும் ஆராய்ந்து பலன் கூறுவது அவசியம் என்றாலும் இப்படி பரிவர்த்தனை அமைப்புகளை பாவகத்தில் சரியாக மதிப்பிட்டால் தங்களது பலனில் நுட்பங்களை சேர்க்கலாம்.

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501.  


1 comment: