Sunday 12 May 2019

மணமுறிவும் மறு திருமணமும்.


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது உணர்ந்து சொல்லிய வார்த்தைகள். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையில் மனிதன் இயற்கையை விட்டு வேகமாக விலகிச் சென்று  கொண்டிருக்கிறான். அதனால் இன்றைய மனிதனிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகிய மனித தன்மைகளும் விலகிச் சென்றுகொண்டிருக்கின்றன. இதன் விளைவே அதிரிகரித்து வரும் மண முறிவுகள். 



அமெரிக்க பூர்வ பழங்குடிகளான செவ்விந்திய தலைவரிடம்  குடியேரிகளான வெள்ளையர்கள் அவர்களது நிலப்பரப்பை தங்களுக்கு அளித்துவிடும்படி கேட்டு ஒரு ஒப்பந்தம் போட்டனர்.. அப்போது அந்த செவ்விந்திய தலைவர் குறிப்பிட்ட வாசகங்கள் இன்றும் அமெரிக்காவில் பிரபலமான வாசகங்கள்.

“இயற்கையோடு இணைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். வேட்டையாடுவதில் மட்டுமல்ல சமுதாய, குடும்ப அமைவிலும் ஒரு ஒழுங்கமைவை நாங்கள் கடைபிடிக்கிறோம். நீங்கள் பொருளாதார வளத்திற்காக காடுகளை (இயற்கையை) அழித்தால் மிருகங்கள் அழிந்துவிடும். நீங்கள் மிருகங்களாக மாறிவிடுவீர்கள்” என்பது போன்ற ஒரு நீண்ட கருத்தை பதிவு செய்திருந்தது நினைவு வருகிறது.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


ரிஷப லக்ன ஜாதகத்தில் செவ்வாய் - சனி இரண்டும்  1 – 7 தொடர்பிலிருந்து சம சப்தமமாக பார்த்துக்கொள்கின்றன. சனி வக்கிரமானதால் இது கணவரின் விட்டுக்கொடுத்துச் செல்லும் குணத்தை பாதிக்கும். கிரகம் வக்ரமானால் திக் பலம் வலுவிழந்துவிடும். கணவர் தனது சில கருத்துக்களில் ஒரு முடிவோடுதான் செயல்படுவார் என்பதை இது குறிக்கிறது. பாக்யாதிபதி சனி பாக்ய ஸ்தானத்திற்கு பாதகத்தில் அமர்ந்து, பாக்ய ஸ்தானத்தில் நீச நிலையில் சந்திரனோடு இணைந்து அமர்ந்த குருவை வக்கிர சனி மூன்றாம் பார்வை பார்க்கிறது. புத்திரமே ஒரு பாக்கியம்தான் என்பதன் அடிப்படையில் ஒன்பதாமிடம் பெண்களுக்கு பிரதானமான புத்திர ஸ்தானமாகிறது. புத்திர தோஷம் கொண்ட இந்த ஜாதகத்தில் புத்திர பேறுக்காக மருத்துவ ஆலோசனை பெற கணவர் வர மறுத்ததால் விவாகரத்து கேட்டது இந்தப் பெண்.  


கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



தனுசு லக்னத்தவர்க்கு பாதகாதியாக 7 & 10 க்குரிய புதன் வரும் என்பதால் இவர்கள் புதனின் பாதகத்தை களத்திரம் அல்லது தொழில் வகையில் அனுபவிக்கின்றனர். பொதுவாக களத்திர ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானாதிபதியான 6 ஆமதிபதியுடன் 7 ஆமதிபதி ஒன்று சேர்வது களத்திரத்திற்கு  பாதிப்பை தரும். இதில் 6 ஆமதிபதி  களத்திர காரகன் என்பது இன்னும் பாதிப்பே. முக்கியமாக களத்திர காரகனுடனும் (சுக்கிரன்), களத்திர ஸ்தானாதிபதியுடனும் (7 ஆமதிபதி) பிரிவினையை குறிக்கும் சர்ப்ப கிரகங்கள் இணைந்து நின்றால் அந்த ஜாதகர் குடும்ப பிரிவினையை தொடர்புடைய கிரகங்களின் திசா புக்தி வரும்போது நிச்சயம் எதிர்கொள்வார் எனலாம். சர்ப்ப கிரகங்களில் கேது கிரிஸ்தவத்தையும், ராகு இஸ்லாமியத்தையும் குறிக்கும். கணவன் மனைவி இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். இந்த ஜாதகர் திருமணம் முடிந்து 13 நாளில் மனைவியை உதறினார். காரணம் இந்து மதத்தை சேர்ந்த மனைவி கிறிஸ்தவ கடவுளை வழிபடுவது தெரியவர கணவர் விலகிவிட்டார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


மேஷ லக்ன ஜாதகத்தில் பாதகாதிபதியும் ராசியாதிபதியுமான சனி பிரிவினையை குறிக்கும் ஆறாமிடத்தில் வர்கோத்தம வலுவுடன் நிற்கிறது. பாவத்தில் விரையாதிபதி குருவுடன் சேர்ந்து உச்ச கதியில் 7 ல் நின்றதால் 34 வயது நெருங்கிய நிலையில்தான் ஜாதகருக்கு திருமணமானது. பாதகாதிபதியுடன் சேந்து மற்றொரு பகைவன் வீட்டில்  சனியுடன் கிரக யுத்தத்தில் தோல்வியுற்று நவாம்சத்தில் நீசம்  பெற்றும் பல்வேறு வகையில் பலவீனமடைந்த லக்னாதிபதியும் யோகியுமான செவ்வாயால் ஜாதகரின் திருமண வாழ்வை தாங்கிப்பிடிக்க இயலவில்லை. ஏழில் நின்ற குரு திசை சுய  புக்தியில் ஜாதகருக்கு திருமணமாகி எட்டாவது நாளில் மனைவி ஜாதகரை பிரிந்து சென்றுவிட்டார்.   

சந்நியாச யோகம்கொண்ட இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயைவிட ராசியாதிபதி சனிக்கே அதிக வலுவுள்ளது. ஜாதகருக்கு ராசி சுக ஸ்தானாதிபதி செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தி துவங்கியதும் ஜாதகருக்கு மறு திருமணம் நடந்தது. குரு தொடர்புகொண்ட சனி,  புத்திரத்தையும்  தனது புக்தியிலேயே கொடுத்தது. 4 ஆம் பாவம் மறு திருமணத்தை குறிக்கும்.

கீழே மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


துலாம் லக்னம், கடக ராசி. சந்திரன் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. 17 வயது முதல் ராகு திசை. பாதகத்தில் சுக ஸ்தானாதிபதி சனியோடு நின்று ராகு திசை நடத்துகிறது. ராகுவோடு சேர்ந்த சனி 2 , 7 ஆம் பாவாதிபதி செவ்வாயோடு பரஸ்பர பார்வைகளை பரிமாரிக்கொள்கிறது. இத்தகைய ஜாதக அமைப்பு மணமுறிவுற்ற அல்லது குறையுடைய கணவரை தேர்ந்தெடுத்திருந்தால் திருமண வாழ்வை பாதிக்காது. இல்லையேல் நிச்சயம் மண முறிவைத்தரும். ஜாதகிக்கு சுக்கிரன் சாரம் பெற்ற ராகு திருமணம் செய்வித்து மணமுறிவையும் கொடுத்தது. அடுத்துவந்த குரு,  பாக்ய - படுக்கை ஸ்தானாதிபதி (9 - 12 ஆமதிபதி) புதன் சாரம் பெற்றதால் 2 ஆவது திருமணம் செய்வித்தது.. கிரகங்களில் புதனும்,  பாவங்களில் 4 ம் மறு திருமணத்தை குறிப்பிடுபவை.

திருமணம் தொடர்புடைய பாவங்களும் கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் எப்படி அமைந்துள்ளன. திசா-புக்திகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை அனுமானித்து ஒரு தேர்ந்த ஜோதிடரால் ஒருவரின் திருமண வாழ்வை அதிகம் பாதகம் ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். உதாரணமாக 7 ஆம் பாவமும் களத்திர கிரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிப்பின் தன்மைக்கேற்ற ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது மணவாழ்வை பாதுகாக்கும். ஆனால் இன்றைய மனிதனின் பொருளாதாரமும் மனமும் அதை ஏற்றுக்கொள்ளும்  நிலையில் இல்லை. இன்றைய பெரும்பாலான மண முறிவுக்கு காரணம் இதுவே. இதை ஓரளவு சரி செய்துவிட முடியும். ஏற்றுக்கொள்ளத்தான் மனிதர்கள் இல்லை. 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.   
அதுவரை,

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி & பகிரி (Whatsapp) 08300124501