ஒருவரது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து அவருக்கு
அமையவிருக்கும் வாழ்க்கைத் துணைவரின் லக்ஷணங்களை தெளிவாகக் கூற முடியும். அதற்கான
தெளிவான வழிகாட்டு முறைகள் பண்டைய ஜோதிட நூல்களின் உள்ளன. இப்பதிவில் நாம் அதில்
ஒருவகையான சொந்தங்களுக்குள் திருமண உறவு பற்றி ஆராய்வோம்.
குடும்ப ஸ்தானத்தில் மாதுல காரகன் (தாய்
மாமாவைக் குறிக்கும் கிரகம்) புதன் உச்ச குருவின் நட்சத்திரம் பூரட்டாதியில் அமர்ந்து
நீசபங்க ராஜ யோகத்தில் உள்ளார். புதனுடன் லக்னாதிபதியும் விரையாதிபதியுமான சனி மற்றும்
களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் அமைந்துள்ளனர். குடும்ப காரகனும் குடும்ப
பாவாதிபதியுமான குரு தாய் மாமனைக்
குறிப்பிடும் 6 வது பாவத்தில் உச்சத்தில் உள்ளார். மாதுல
காரகன் குடும்ப ஸ்தானத்திலும் குடும்ப
காரகன் தாய்மாமனைக் குறிப்பிடும் 6 வது பாவத்திலும்
அமர்ந்ததால் இந்த ஜாதகிக்கு மாமன் வகையில்தான் திருமணம் அமையும் என்பது மிகத்
தெளிவாக விளங்குகிறது. ஜாதகி அத்தை மகனை மணம் முடித்தவர்.
இது தவிர சூரியன் களத்திர பாவாதிபதியாகி
குடும்ப பாவத்தில் அமர்ந்ததால் கணவர் அரசுத் துறையோடு தொடர்புடையவர். மேலும்
சூரியன் புள்ளிவிவரம், விஷய, ஆவணத் தொகுப்பு போன்றவற்றைக் குறிப்பிடும் புதனுடன்
இணைந்து தனகாரகனின் (குரு) வீட்டில் அமர்ந்ததால் கணவர் பணத்தோடு தொடர்புடைய விஷயத்
தொகுப்பு தொடர்பான பணி புரியலாம் என அனுமானிக்கலாம். கணவர் கூட்டுறவு வங்கி
அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
தன, போதனை காரகன் குருவின் வீடு 2 வது பாவமாகி அதில் அரசுத் துறையைக் குறிப்பிடும் சூரியனானவர் வித்யாகாரகன்
புதனுடன் அமர்ந்ததால் ஜாதகிக்கு கல்வித்துறையில் அரசுப்பணி அமையும் என
அனுமானிக்கலாம். அதுவே உண்மையும் கூட. நான் மிகச்சரியாகவே இதைக் குறிப்பிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன்
கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். சனி 2
வது பாவத்தில் அமர்ந்தால் திருமணம் தாமதபடலாம் என்பது ஜோதிட விதி. நடந்ததும்
அப்படியே..
பின்வரும் இரண்டாவது ஜாதகத்தைக்
கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்.
தாய் மாமனைக் குறிக்கும் 6 ஆம் பாவ அதிபதி
சந்திரன் மாதுலகாரகன் புதனின் சாரத்தில் கேட்டை நட்சத்திரத்தில் உள்ளார். உச்சன்
புதனின் சாரம் பெற்றதால் சந்திரன் நீச பங்க ராஜஜோகத்தில் உள்ளார். அது மட்டுமல்ல
குடும்ப காரனும் குடும்ப பாவாதிபதியுமான குருவுடன் சந்திரன் இணைந்து உள்ளதால் மாமன்
வகையில்தான் குடும்பம் அமையவேண்டும். இந்த ஜாதகியும் அத்தை மகனை மணம் முடித்தவர்தான்.
புதனும் சனியும் உச்சம். சந்திரன் உச்ச
புதனின் சாரம் பெற்றதோடு குருவும் உச்சனான சனியின் சாரம் (அனுஷம்) பெற்றது
சிறப்பு. சூரியன் வித்யாகாரனான உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து 2 வது பாவத்தைப் பார்ப்பதால் இவருக்கும் ஆசிரியர் பணி அரசுத்துறையில்
அமையும் என்பது உறுதி. ஜாதகியின் உடல் எண் 1 ஆகவும் உயிர் எண் 5 ஆகவும் அமைந்தது ஜாதகிக்கு அமையவிருக்கும்
அரசு ஆசிரியைப் பணியில் தலைமைப் பொறுப்புக்கு முன்னேறுவார் என்பதைக்
குறிப்பிடுகிறது. உச்சம் பெற்ற சனியும் புத- ஆதித்ய யோகமும் இதை தெளிவாக எடுத்துக்
காட்டுகிறது. புத-ஆதித்ய யோகம் மற்ற பாவங்களைவிட 1,4,8
பாவங்களில்தான் மிகச் சிறப்பான பலனை அளிக்கும் என்பது அனுபவ உண்மை.
முதல் மற்றும் இரண்டாம் ஜாதகத்திற்கு உள்ள
ஒற்றுமை, இரண்டுமே கும்ப லக்னம் என்பதோடு புதனும் குருவும் 2,6
ஆம் பாவ சம்பந்தம் பெற்றதால் இரு ஜாதகியரும் அத்தை மகனைத் திருமணம்
புரிந்துள்ளனர் என்பதோடு இருவருக்கும் அரசு ஆசிரியர் பணி அமைப்பு உள்ளது
கவனிக்கத்தக்கது. முதலாம் ஜாதகிக்கு அரசு ஆசிரியர் பணி அமைந்துவிட்டது.
இரண்டாமவருக்கு அமையும் வாய்ப்பு உறுதியாக உள்ளது.
பின்வரும் சற்று மாறுபட்ட மூன்றாவது
ஜாதகத்தை கவனியுங்கள். இவரும் பெண்தான்.
லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானதிபதியுமான குரு,
தாய் மாமனைக் குறிக்கும் 6 வது பாவத்தில்
உள்ளார். குடும்ப காரனுமாக லக்னாதிபதி திகழ்வதால் குடும்பம் தாய் மாமன் வகையில்
அமையும் என்பதை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. மாத்ரு (தாய்) ஸ்தானாதிபதி 6
வது பாவத்தில் அமர்ந்தால் தாய்மாமன்தான் கணவன் என்பதை அனுமானிக்கலாம்.
இது மட்டுமல்ல குரு நின்ற 6 வது பாவத்திற்கு 6
ல் மாதுல காரகன் புதன் நிற்பது இதனை உறுதிப்படுத்துகிறது.
குரு, புதன் மற்றும் செவ்வாய் மூன்றும்
வக்ரகதியில் இருப்பதும், விருட்சிக-தனுசு ராசி சந்தியில் சனி நின்று களத்திர
பாவத்தை பார்ப்பதும், நான் ஜாதகிக்கு தாய்மாமன் மணமகனாக வருவார் என்பதை கணக்கிடத்
தவறினேன் என்பதை இவ்விடம் ஒப்புக் கொள்ள வேண்டும். மாதுல காரகன் புதன் பஞ்சமாதிபதி
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்றது, ஜாதகிக்கு தாய்மாமனின் மேல் ஈர்ப்பு
உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. சனி களத்திர பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்
துணைவர் வயது வித்தியாசமானவராக அமைவார் என்பதைக் குறிக்கிறது.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.