Showing posts with label ஐப்பசி மாதம். Show all posts
Showing posts with label ஐப்பசி மாதம். Show all posts

Wednesday, 6 November 2013

ஐப்பசியில் சூரிய நமஸ்காரம்

நாம் நன்கு ஆராய்ந்து  பார்த்தோமானால் பரிகாரங்கள் என்று நம் சனாதன வேத தர்மம் கூறுபவை பெரும்பாலும் செயலோடு இணைந்தவைகளே. ஏனையவை மனோரீதியானவை  எனப் புரிந்து கொள்ளலாம்.





உதாரணமாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் உடல் ரீதியான ஏதேனும் ஒரு குறைபாடு இருப்பதை நன்கு அறியலாம். இன்றைய விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொள்கிறது. எலும்புகள் பலகீனமாகவும் அதனால் உடலமைப்பில் வலுவற்ற ஒரு தன்மையும் இருக்கும். இவற்றிற்கு காரணம் வைட்டமின் D யை கிரகிக்கும் தன்மை ஐப்பசி மாதத்தில் பிறந்தோற்கு மிகக்குறைவாக இருப்பதுதான். வைட்டமின் D யானது உடலின் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய குறைபாடுகளை போக்கிக் கொள்ள நமது வேதம் ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்றதோடு மட்டுமின்றி சூரியனைப் போற்றிப் பாடும் ஆதித்ய ஹிருதயத்தையும் சூரிய நமஸ்காரம் எனும் வழிபாட்டு முறையையும் வழங்கியுள்ளது.

இந்த சூரிய நமஸ்காரம் செய்வதில்தான் நமது முன்னோர்களின் சாதுரியம் வெளிப்படுகிறது. நன்கு குனிந்து நிமிர்ந்து மூச்சை முறையாக இழுத்துவிட்டுச் செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தினை நாம் நன்கு கவனித்தோமானால் உடலின் அனைத்து பாகங்களிலும் சூரிய ஒளி நன்றாக விழுமாறும் சூரியன் பதமாக இளம் வெயிலாக விழும் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியுமாறு இவ்வழிபாடு அமைந்திருப்பதை அறியலாம்.(குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீடித்தால் வெயில் கடுமையாகி பித்தம் ஏறும்). இதனால் உடலின் அணைத்து பகுதிகளும் சூரியக்கதிர்களிலிருந்து வைட்டமின் D ஐ ஈர்த்து நமக்கு தேவையான வைட்டமின் D கிடைக்கிறது.  

இதே போன்றுதான் ஒரு குறிப்பிட்ட கதியமைப்பில் உச்சரிக்கப்படும் ஆதித்ய ஹிருதயத்தால் நமது உடலின் உஷ்ணாதிக்க உணர்வுகள் தூண்டப்பட்டு அதன்பொருட்டு நமக்குத் தேவையான வைட்டமின் D யை நமது உடலே உற்பத்தி செய்ய வழிவகை செய்திருக்கிறார்கள்.

   உடல் ஆரோக்கியத்தைப் பேண உடற்பயிற்சியை மனதோடு ஒருமுகப் படுத்திச் செய்யும் போது நமக்கு உடலும் உள்ளமும் பலனடைகிறது. இன்றைய நவீன யுகத்தில் செய்யப்படும் எந்த உடற்பயிற்சிக்கும் இது மேலானது இந்த நமது பாரம்பரிய சூரிய நமஸ்காரம். இது நமது ஆயுள் முழுமைக்குமான ஆரோக்கிய வழிபாட்டு முறை.

  ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சமாவதால் இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலு குறைந்திருக்கும். எனினும் அனைவருமே சூரியன் சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும்  இந்த ஐப்பசி மாதத்திலிருந்து இந்தப் பயிற்சியை துவங்கலாம்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அன்பன்,
பழனியப்பன். 

Thursday, 17 October 2013

ஐப்பசியில் அற்புதங்களை நிகழ்த்தும் சூரியன்

ஐப்பசி மாதம் வானியல் சுற்று விதிகளின் படி சூரியனின் கதிர்வீச்சு பூமிக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில் சூரியனைவிட்டு வெகு தொலைவில் பூமி தனது நீள்வட்டப் பாதையில் பயணிக்கும்.

சூரியனானவர்  தந்தை, உடல் வலு, அரசு விவகாரங்கள், அதிகார வர்க்கம், தமக்கு வேலையளித்துள்ள முதலாளி,முன்னேற்றத் துடிப்பு, முயற்சி வெற்றி போன்றவற்றிற்கு காரணமானவர். ஜனன ஜாதகத்தில் சூரியனின் பலத்தைப் பொறுத்து மேற்குறிப்பிட்டவற்றிலும் சூரியனின் ஆதிபத்திய வகையிலும் சாதக பாதக பலன்களை அளிப்பார்.

சூரியன் இயல்பில், ஜோதிட விதிகளின்படி பாதி சுபக்கிரகம் பாதி அசுபக்கிரகமாவார். மேலும் தனது சுபாவப்படி சூரியன் சந்நியாசக் கிரகமாவார். அதனால் குடும்ப வாழ்க்கையோடு தொடர்புடைய பாவங்களான 2,4,7,8,12 ஆகியவற்றோடு தொடர்புகொள்ளும்போது குடும்ப வாழ்வில் சிக்கல்களைத் தருவார். எனினும் சில ஜோதிடர்கள் பயமுறுத்துவது போல் சூரியன் விவாகரத்துக்கு ஆதிபத்தியம் பெற்றவறல்ல

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.

குடும்பகாரகனும் 1,4க்கு உரியருமான குருவானவர் 7,10 பாவங்களுக்கு அதிபதியான புதனுடன் இணைந்து லக்னத்திற்கு  மூன்றில் மறைந்துள்ளார். மேலும் 6,11 பாவங்களுக்கு அதிபதியும் லக்னாதிபதிக்கு பகையானவருமான வக்ரகதியிலுள்ள சுக்கிரனுடன், பாக்யாதிபதியும் லக்னாதிபதிக்கு நண்பருமான சூரியன் குடும்ப ஸ்தானத்தில் அமைந்துள்ளார். களத்திர பாவம் சனி, கேது போன்ற பாவிகளால் கெட்டுள்ளது. இந்த ஜாதகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஜாதகரின் குடும்ப வாழ்வு சிக்கலை சந்திக்கும் என்பதுபோல் தோன்றும். குடும்ப, களத்திர பாவங்கள் கெட்டு சூரியன் 2ல் அமைத்தால் குடும்பம் கெடும் என்பது ஓரளவிற்கே உண்மை. காரணம் சூரியன் லக்னாதிபதிக்கு நண்பன் என்பது மட்டுமின்றி அவர் பாக்யாதிபதி என்பதால் ஜாதகருக்கு இல்லறத்தில் அதிக ஈடுபாடில்லாத சாதாரண இயல்பைக் கொடுத்ததோடு தனது கடுமையை குறைத்துக் கொண்டார்.மேலும் குரு உப ஜெய ஸ்தானத்தில் (3 ல்) அமைந்துள்ளார். புதன் குருவுடன் அதே உப ஜெய ஸ்தானத்தில் அமைந்து வக்ர சனியுடன் பரிவர்த்தனையில் உள்ளார். மேலும் இரு கேந்த்ராதிபதிகள் (குரு, புதன்) இணைந்து உப ஜெய ஸ்தானத்தில் அமைந்தது நன்மையையே தரும்.

களத்திர பாவாதிபதி பரிவர்த்தனையில் அமைந்து தனது பாவத்திற்கு 9 ல் நின்றது நன்மையை அளிக்கும் அமைப்பு. களத்திர பாவத்தில் அமைந்த சனி பரிவர்த்தனை பெற்று குரு பார்வையும் பெற்றதால் ஜாதகருக்கு களத்திர வகையில் அதிக சிரமங்களை தர முடியாதவராகிறார். லக்னத்தோடு ராகு – கேதுக்கள் தொடர்பு கொண்டதன் பலனாவது ஜாதகர் தேசாந்திரம் செல்வார் என்பதாகும். ஜாதகர் தமது தொழில் நிமித்தம் தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு தேசங்களுக்கும் சென்று வருபவர்.

பின்வரும் ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக் கவனியுங்கள்.
லக்னம் மற்றும் குடும்ப பாவாதிபதி சனி வக்ரமாகி சனியின் பரம சத்ருவும் லக்னத்திற்கு பாதகாதியுமான வக்ர கதியிலிருக்கும் செவ்வாயுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். குடும்ப காரகன் குருவும் வக்ரமாகி மாந்தியுடன் சேர்ந்து கெட்டுவிட்டார். சந்திரன் 6 ஆம் அதிபதி புதனின் ஆயில்ய நக்ஷத்திரத்தில் அமர்ந்துவிட்டதால் கணவனே எதிரியானான். இந்த நிலையில் சூரியன் அஷ்டமாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்ததால் தயவு தாட்சன்யமின்றி குடும்ப பிரிவினையை விவாகரத்து மூலம் ஏற்படுத்திவிட்டார். 6, 9 ஆம் பாவங்கள் கெட்டு அதன் அதிபதி புதனுடன் சுக்ரன் சேர்ந்து 7 ஆம் பாவத்தை பார்த்ததால் சுக்கிரனால் திருமணத்தை மட்டுமே நடத்தி வைக்க முடிந்தது. திருமண உறவு நீடிக்க வைக்க இயலவில்லை.
  
கீழுள்ள மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள். ஜாதகர் ஒரு பெண்மணி.

இரண்டாம் பாவாதிபதி புதன் வக்ரமாகி கேந்திர பாவியான சூரியனுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து புத ஆதித்ய யோகத்தில் உள்ளார். சூரியன் கேந்திர பாவியானதால் இந்த லக்னத்திற்கு சுபத்தை செய்ய வேண்டியவராகிறார். சுக்கிரன் மூன்றில் அமர்ந்து ராகுவுடன் சேர்ந்து கெட்டதால் தாமத திருமணத்திற்கு வகை செய்தார். குடும்ப காரகன் குருவும் தர்ம கர்மாதிபதி சனியும் நல்ல நிலையில் உள்ளார்கள். சூரியன்  தனது இஷ்ட நண்பன் புதனை அஸ்தமனப்படுத்திவிட்டாலும் சிறிது தாமதத்துடன் திருமணத்தை சிறப்புற நடத்த வழிவிட்டார். அதுவும் எப்படி?. தான் ஒளி குறைந்து, கடுமை குறையும்  மாதமான ஐப்பசியில் திருமணத்தை நடத்திட வழிவிட்டார்.

மருத்துவ கிரகமான புதனுடன் ஆரோக்யத்திற்கு அதிபதியான சூரியன் இணைந்து வருமான ஸ்தானமான 2 ஆம் பாவத்தில் அமர்ந்ததால் ஜாதகியை மருத்துவத்துறையோடு தொடர்புபடுத்தினார்.  ஜாதகி ஒரு சிறந்த நர்ஸ் எனப் பெயரெடுத்தவர் ஆவார். இரண்டாவது பாவத்தில் சூரியன் அமர்ந்ததால் ஆண் வாரிசற்ற தனது வயோதிகப் பெற்றோரைப் பிரிய மனமின்றி தனக்கமைந்த முதலாவது திருமண முயற்சியில் அழைப்பிதழ்களை கிழித்தெறிந்து திருமணத்தை நிறுத்தினார். பிறகு நல்லோர் சிலரது முயற்சியில் மணமுடித்து பெற்றோர்களையும் கண்ணுற கவனித்துவரும் புண்ணியவதி இவர்.

முடிவாக இங்கு குறிப்பிடுவது எண்ணற்ற ஜாதகங்களை ஆராயந்தவகையில் என்னைப் பொருத்தவரை சூரியன் ஒருவரது ஜாதகத்தில் 2வது மற்றும் 7வது பாவங்களும் அவற்றின் பாவாதிபதிகளோடு முக்கியமாக சுக்கிரனும் குருவும் கெட்டிருந்தால் மட்டுமே விவாகரத்துக்கு துணை புரிகிறார்.சூரியனே திருமணத்தை நடத்திவைக்கும் கிரகமாக வந்து அவர் குடும்ப, களத்திர பாவங்களுடன் தொடர்புகொண்டிருந்தால் அவர் சாந்த சொரூபமாக விளங்கும் ஐப்பசி மாதம் திருமணத்தை நடத்திவைப்பதை பல ஜாதகங்களை ஆராயும்போது உணரமுடிகிறது.

இந்த ஐப்பசியில் துலாம் ராசியில் பிரவேசிக்கும் சூரியனால் நற்பலன்களை அடைய துலா ஸ்நானம் காவிரிக்கரையில் செய்வோம்.

மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்
பழனியப்பன்.