Showing posts with label அஸ்தங்கம். Show all posts
Showing posts with label அஸ்தங்கம். Show all posts

Wednesday, 20 January 2021

வேகத்தடைகள் விபத்தை தவிர்ப்பதற்கே!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் ஒரு கிரகம் தனது தனித்துவத்தை இழக்காது. உதாரணமாக தாய்மை உணர்வுக்குரிய சந்திரனே வேகத்திற்குரிய முதன்மை கிரகமாகும். கிரகங்களில் விரைவாக ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக்கூடியது. இதற்கு மாறான கிரகம் சனி. ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சம்பவ கால கிரகங்களுடன் சந்திரன் தொடர்பாகும்போது சம்பவங்கள் மிக விரைவாக நடந்துவிடுகின்றன. சனி தொடர்பாகும் சம்பவங்கள் நீண்ட இழுபறிக்குப்பிறகே நடக்கின்றன. செவ்வாய் துடிப்புக்கும் ஆவேசத்திற்கும் உரிய கிரகமாகும். சந்திரன் செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு எளிதில் வாகன விபத்துக்களோ, நீரில் மூழ்கி இறப்பதோ அல்லது இதர வகை துர்மரணங்கள் நடக்க வாய்ப்பு அதிகம். நிதானமற்று யோசிக்காமல் செயல்களில் ஈடுபடும் குணமும் தெரிந்தே தவறு செய்யும் குணமும் சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்ற ஜாதகர்களுக்கு இருக்கும். இந்த கிரக சேர்க்கையில் ராகுவும் இணைந்திருப்பின் இவர்களுது செயல்கள் தறிகெட்ட வகையில் இருக்கும். அப்போது இவர்களது வேகத்திற்கு தடைபோடுவது சனியும் கேதுவுமாகும். ஜோதிடத்தில் நீர் ராசிகளும் சந்திரனும் பேச்சுக்கு காரக கிரகங்களாகின்றன. புதன் நாவன்மையை அதாவது பேச்சின் குணத்தை & சாதுரியத்தை குறிக்கும். இதில் சனியும் கேதுவும் சம்மந்தமுறும்போது பேச்சில் தடையை, நிதானத்தை அல்லது தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தான் நாம் இன்றைய பதிவில் ஆராயவிருக்கிறோம். 

கீழே 2008 ல் பிறந்த ஒரு சிறுவனின் ஜாதகம்.

வாக்கு ஸ்தானமான 2 ஆம் இட அதிபதி குரு வக்கிரமாகியுள்ளார். இரண்டாமிடத்தை நோக்கி ராகு வருகிறார் . இதனால் இச்சிறுவனுக்கு பேசுவதில்  தடை ஏற்படும். குரு வர்கோத்தமம் பெற்றுள்ளது ஒரு நல்ல அமைப்பு. பேச்சுக்கு காரக கிரகமான சந்திரன் தாமததிற்குரிய சனியோடு இணைவு பெற்றுள்ளார். இவை பேச்சில் தடை ஏற்படும் என்பதை குறிக்கிறது. பேச்சின் காரக கிரகமான சந்திரனின் வீட்டில் நீசமான லக்னாதிபதியுடன் செவ்வாயுடன் இணைந்த கேது, பாவ சக்கரத்தில் சந்திரன், சனியோடு இணைந்துள்ளார். சந்திரனின் கடக ராசி பாதிக்கப்பட்டதோடு நவாம்ச லக்னத்திற்கு 2 ல் சந்திரன் நீசமானது ஒரு கடுமையான அமைப்பாகும். ஜனன திசா-புக்தி நாதர்கள் அனுமதியின்றி ஒருவருக்கு பிறவிக்குறைபாடு ஏற்படாது. பூரம்-4 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகனுக்கு சுக்கிரனும் சூரியனும் ஒரே பாகையில் நின்று அஸ்தங்கமடைகிறது. கால புருஷனுக்கு 2 ஆம் இடத்தில் அதன் அதிபதி சுக்கிரன் கடக செவ்வாயின் சாரத்தில் அஸ்தங்கமடைவது, மரபு வழியாக தொடர்ந்து வரும் சுரப்பிவகை குறைபாட்டை குறிக்கிறது.   சூரியனும் சுக்கிரனும் பாதக ஸ்தானத்தில் நீச்சமாகியுள்ள செவ்வாயின் மிருக சீரிஷம்-1 ல் நிற்கின்றன. இதனால் சுக்கிர திசையிலும் சூரிய திசையிலும் செவ்வாயின் வெளிப்பாடு இருக்கும். கடகத்திற்கு பாதகத்தில் சூரியன், சுக்கிரன், புதன் அமைவது சந்திரனின் செயல்பாட்டை பாதிக்கும் அமைப்பே. சுக்கிரன் அஸ்தங்கமானதால் பிறப்பிலேயே பையனுக்கு பேச்சில் திக்குவாய் ஏற்பட்டது. காரணம் சுக்கிரனின் சார நாதன் நீச செவ்வாயே. செவ்வாய் சிறுவனின் பேசும் ஆர்வத்தை வேகமாக தூண்டுகிறது. ஆனால் சுரப்பி காரகன் சுக்கிரன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் மனதின் கட்டளைகள் குரல்வளை போன்ற உறுப்புகளுக்கு தாமதமாகவே செல்கின்றன. செவ்வாயுடன் இணைந்த கேதுவும் செவ்வாயின் தீய செயல்களை அதிகப்படுத்தவே செய்யும்.  

காலபுருஷனுக்கு குரல்வளையை குறிக்கும் மிதுனத்தின் அதிபதி புதன், சந்திரன் சாரத்தில் ரோஹிணி-4 ல் மிதுனதிற்கு 12 ல் மறைந்து வக்கிரமாகிறார் என்பது கவனிக்கத்தக்கது. சுக்கிர திசைக்கு அடுத்து வந்த சூரிய திசையும் செவ்வாயின் சாரத்தையே பெற்றுள்ளது. இதனால் சூரிய திசையிலும் சிறுவனுக்கு திக்குவாய் குறைபாடு தொடர்ந்தது. இங்கு சூரியன் ராசிக்கு திக்பலத்தில் நின்றாலும், அவர் கடகத்தில் அமைந்த நீச செவ்வாய் மிருக சீரிஷம்-1 ல் நிற்பதால் பாதக ஸ்தான செவ்வாயின் பலனையே தந்துள்ளது கவனிக்கத்தக்கது. சூரிய திசைக்கு அடுத்து வந்த சந்திர திசை சிறுவனுக்கு 2017 ல் துவங்கியது. சந்திரன் பேச்சின் காரக கிரகம் என்றாலும் அவர் உடன் அமைந்த சனியின் குணத்தையும் சேர்த்தே செயல்படவேண்டும். வேகத்திற்குரிய செவ்வாய் மனோகாரகன்  வீட்டில் பாதிக்கப்பட்ட நிலையின் அமைந்ததால் சிறுவனுக்கு மனோவேகம் அதிகம். மனத்தின் வேகத்திற்கு தக்கபடி பேச்சு விரைவாக வரவில்லை. இந்நிலையில் சனி தொடர்புபெற்ற சந்திரன், சனியைப்போன்றே நிதானமாக செயல்பட வேண்டும். சந்திரன் சிறுவனின் எண்ண அலைகளை இப்போது நிதானப்படுதுகிறது. மட்டுப்பட்ட மனதின் வேகத்தோடு இப்போது வார்த்தைகள் சரியாக ஒருங்கிணைகின்றன. இதனால் சிறுவனுக்கு பேச்சில் இருந்த திக்குவாய் குறைபாடு நீங்குகிறது.

பொதுவாகவே விரைந்த செயல்பாடுகொண்ட செவ்வாயின் குணத்தை கேதுவின் தொடர்பு அதிகப்படுத்தியதால் சிறுவனுக்கு பேச்சில் பாதிப்பு ஏற்பட்டது. கேதுவும் செவ்வாய் போன்ற செயல்பாடுகொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது சந்திர திசை துவங்கியதும் 2017 ல் ராகு கடகத்திற்கு வருகிறார். கேது செவ்வாய் போன்றவர் என்றால் ராகுவிடம் சனியின் குணம் இருக்கும். மேலும் ஒரு பாதிப்பை ராகு துவக்கினால் கேதுவும், கேது துவக்கினால் ராகுவும் முடித்துவைப்பர்.  இதனடிப்படையில் செவ்வாய் கேது இருவரின் செயல்பாட்டையும் ராகு சரிசெய்கிறார். காரணம் ஜனன காலத்தில் செவ்வாயின் அவிட்டம்-2 ல் ராகு நின்றதே. ஆனால் திசா நாதனின் ஒத்துழைப்பு இன்றி ராகுவால் செயல்படமுடியாது. திசா நாதன் சந்திரன், சுரப்பி காரகன் சுக்கிரனின் பூரம்-4 ல் நின்று சுக்கிரனின் செயல்பாட்டை சரியான பாதைக்கு திருப்புகிறார். சூரியன் சுக்கிரனை  அஸ்தங்கப்படுதினாலும் ராசிநாதன் என்பதாலும், ராசிக்கு திக்பலத்தில் நிற்பதால்   சந்திரனின் செயல்பாட்டை ஆமோதித்து சுக்கிரன் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார். தற்போது சுரப்பி காரகன் சுக்கிரன் இயல்பாக செயல்படுகிறார். தனது சாரத்தின் நின்று தனக்கு கட்டளைடும் திசாநாதன் சந்திரனின் கட்டளையை ஏற்று சுரப்பிகள் நன்கு செயல்பட சுக்கிரன் சம்மதிக்கிறார். கிரகங்களுக்கிடையேயான இந்த ஒருங்கிணைவு சிறுவனை தடைகளற்று பேசவைத்தது. செவ்வாயின் வேகமான எண்ணங்களுக்கு சனி சந்திரன் இணைவு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தி சிறுவனின் பேச்சை சரிசெய்துள்ளது என்றால் அது மிகையல்ல.

இப்போது தலைப்பை மீண்டுமொருமுறை படியுங்கள்.

 

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Sunday, 3 January 2021

காத்திருந்து... காத்திருந்து...

 

காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் காதலிலும் சில வேதனைகளும் வெற்றிகளும் உண்டு. அனைத்திற்கும் ஒரே காரணம், வாழ்க்கையை அதன் இயல்பில் அனுபவிக்க எண்ணாமல் தங்கள் எண்ணப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என எண்ணுவதே. இது சாத்தியமானால் இறைவனுக்கு இங்கே இடமில்லை. காதலால் எந்தகைய ஜாதகத்தினர் சிரமப்படுவர் என்பதை தெரிந்துகொண்டால் அவர்கள் தகுந்த உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கலாம். ஜோதிடமும் அதற்கு உதவும்.


காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். ஐந்தாம் பாவம் 7 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டால் மட்டுமே காதல் திருமணத்தில் முடியும். காதலின் வெற்றியை 3,5,7,11 ஆகிய பாவங்களின் ஒருங்கிணைவு தீர்மானிக்கிறது. காதலில் தோல்வியை 4,6,1௦, ஆகிய பாவங்களும் கேதுவும் தீர்மானிக்கின்றனர். காதல் யாருக்கு தீமையை தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.             

                    


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாம் பாவம் என்பதால் தனது எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தாது மறைக்கக்கூடியது. அதுவும் லக்னமும் ராசியும் ஒன்று என்பதால் இக்குணம் அதிகமிருக்கும். சந்திரன் நீசமாவதால் பெற்றோர்களுக்கு பாதிப்பைத்தரும் ராசியாகும். இந்த ஜாதகி தனக்கு வந்த வரன்களை எல்லாம் பிடிக்கவில்லை என பல ஆண்டுகள் மறைத்தார். ஜாதகத்தில் லக்னாதிபதி மறைவு ஸ்தானமான எட்டாமிடம் மிதுனத்தில் வக்கிர கதியில் அமைந்திருப்பதை காண்க. இயல்பாகவே பிடிவாத காரகனான செவ்வாய் வக்கிரமானால் பிடிவாத குணம் மேலும் கூடும். இதனால் பிடிவாதமாக தனக்கு சாதகமான நிலை வரும்வரை ஜாதகி தனது விஷயங்களை மறைக்கிறார். ஜாதகிக்கு வயது தற்போது 28. இன்னும் திருமணமாகவில்லை. மிக தாமதமாகவே தனது காதலை வீட்டில் தெரிவித்தார். ஜாதகத்தில் சந்திர சூரியர்களுக்கு சஷ்டாஷ்டகத்தில் லக்னாதிபதி இருப்பதால் ஜாதகியின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த ஜாதகி நிறைவேற வழியற்ற தனது காதலால் மிகவும் சிரமப்படுகிறார். ஜாதகியின் காதலை நிறை வேற்ற துணிவுடன் பெற்றோரை தொடர்புகொண்டு ஜாதகியை கரம்பிடிக்க வேண்டிய காதலனே தீர்மானம் எடுக்க முடியாமல் ஜாதகியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஜாதகியின் இளமையை வீணாக்குகிறார் என்பதுதான் இதில் சோகம்.

சரி ஜாதகியின் காதல் இப்படி இழுபறியாக விளங்க காரணம் என்ன?

1993 ல் கேட்டை-2 ல் பிறந்த ஜாதகிக்கு காதலை குறிக்கும் கேது திசையில் காதலுக்குரிய பாவமான 5 ஆம் பாவாதிபதி குருவின் புக்தி 2008 ல் ஜாதகியின் 14 ஆவது வயதில் துவங்கியது. அப்போது முதல் ஜாதகி காதலிக்கிறார். தற்போதுவரை 14 வருடமாக மிக நீண்ட காதல். 2011 மத்தியிலிருந்து ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. களத்திர மற்றும் விரையாதிபதியான சுக்கிரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்று 2, 5 ஆம் பாவாதிபதி குருவின் பூரட்டாதி-1 ல் நிற்கிறார். திசா நாதன் சுக்கிரன் பகை சாரம் பெற்று திக்பலம் பெறுகிறார். திக்பலம் பகை சாரத்தை முறியடிக்கும் என்றாலும் சுக்கிரன் 4 ஆமிடத்திலிருந்து திசை நடத்துவதுதான் பாதிப்பு. காரணம் 4 ஆம் பாவம் திக்பலம் பெற்றாலும் அது காதலை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு விரைய பாவமாகும். இதனால் 5 ஆம் பாவாதிபதி சாரம் பெற்றாலும் 5 க்கு விரையத்திலிருக்கும் சுக்கிரன் 5 க்கு பாதிப்பை தருகிறார். மேலும் சுக்கிரனும் 5 ஆம் பாவாதிபதி குருவும் பகை என்பதை மீறி இருவரும் ஒருவருக்கொருவர் சஸ்டாஷ்டகத்தில் உள்ளதால் காதலை தனது திசையில் நிறைவேற்றிட மாட்டார். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதன் குறைந்த பாகை (2.06) பெற்றதனால் தாரா காரகனாக உள்ளார். தாரா காரகனான புதனே ஜாதகியின் காதலுக்கு முக்கிய காரணம். புதன் தாரா காரகனானதால் ஜாதகியின் காதலில் உண்மையும் ஏக்கமும் இருக்கும். ஆனால் காதலனை குறிக்கும் புதன் சூரியனின் அஸ்தங்கமாகியுள்ளது. இதனால் காதலனுக்கு போதிய தகுதி இல்லை என்பது தெரிகிறது. ஆனால் புதன் சூரியனோடு சேர்ந்ததால் கௌரவமாகவும்,  சனியோடு சேர்ந்ததால் ஜாதகியை ஏமாற்றுபவராகவும் இருப்பார். (புதன்+சனி சேர்க்கை ஏமாற்றத்தை  குறிக்கும்).

ஜாதகத்தில் குரு 7 ஆம் பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்துனைவர் வகையில் ஓரளவு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பாகும். ஓரளவு மட்டுமே என்று கூறக்காரணம், குரு நின்ற வீட்டோன் புதன் அஸ்தங்கம் பெற்றுவிட்ட நிலையில், குருவும் சார அடிப்படையில் பாதகாதிபதி சந்திரனின் ஹஸ்தம்-4 ல் நிற்கிறார். நீச சந்திரன் குடும்ப பாவத்திற்கு  விரையத்தில் லக்னத்தில் நின்று, சந்திரனோடு இணைவு பெற்ற சர்ப்பங்களும் 1 & 7 ல் நிற்பது ஜாதகிக்கு திருமணம் நடக்க கடும் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  மூன்றாவது காமத்திரிகோணமான 11 ஆமிடத்தில் குரு நின்றாலும் அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் காதலனும் பின்வாங்கும் நிலையில் பெற்றோரும் சம்மதிக்காத நிலையில் ஜாதகி விரக்தி நிலையை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜோதிடம் மூலம் தனது வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் என மிக காலம் தாழ்த்திய நிலையில் என்னிடம் ஜாதகி ஆலோசனை கேட்டார். ஜாதகிக்கு சுக்கிர திசை இன்னும் 11 ஆண்டுகள் உள்ளதையும், சுக்கிர திசை சுகத்திற்கு கணவனை கொண்டுவரும் ஆனால் காதலை நிறைவேற்றி வைக்காது என்பதையும் எடுத்துக்கூறினேன். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதனுக்கும் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டகம் (6-8 ஆக) உள்ளது. இது காதலன் வேறு கணவன் வேறு என்பதை தெரிவிக்கிறது. மேலும் மேற்சொன்னபடி காதலனுக்குள்ள பாதகமான அமைப்புகளை எடுத்துக்கூறி இனிமேலும் தனது வாலிபத்தை வீணாக்காமல், பெற்றோர் பார்க்கும் நல்லதொரு வரனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகிக்கு சுக்கிர திசையில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குரு புக்தி இந்த ஆண்டு பிற்பகுதியில் துவங்குகிறது. ராகு கேதுக்கள் கோட்சாரத்தில் லக்னத்தைவிட்டு விலகி லக்னத்திற்கு 6 மற்றும் 12 ஆக அதாவது 2022 ராகு-கேது பெயர்ச்சிக்குப்பிறகு கோட்சார குருவும் மீனத்திற்கு வரும் காலம் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501     

Tuesday, 29 December 2020

இன்னும் வாழ்க்கை மீதமிருக்கிறது!

 

அத்தப்பனும் அங்கயர்க்கன்னியும் பாரம்பரியமானதொரு சமூகத்தை சார்ந்தவர்கள். அத்தப்பன் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். இல்லறத்தை பொறுத்தவரை சிரமங்களற்ற வாழ்க்கை. அங்கயர்க்கன்னி தனது சமூகத்திற்கே உரிய வகையில் வீட்டை நிர்வகிப்பதில் நல்ல நிர்வாகியாக திகழ்கிறார். இவர்கள் இல்லறத்தில் விளைந்த முத்துக்களாக நல்ல குழந்தை செல்வத்தையும் பெற்றவர்கள். பொதுவாக ஒரு நல்ல சமூகத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறப்பதே ஒருவரது வாழ்வை பெரிய சிக்கலின்றி அனுபவித்துவிட பெரிதும் உதவும். இந்தக்கூற்று முழு உண்மையானால் இத்தகைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்வில் சிக்கலே இருக்கக்கூடாது. அப்படியானால் படைத்தவனுக்கு இவர்கள் வாழ்வில் என்ன வேலை?. நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாகவும் இருப்பது இன்றைய காலத்தில் அவசியம். நல்லவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிரார்கள். தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் அளிப்பது என்று நிம்மதியடைகிறார்கள்.   வல்லவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தங்களது வாழ்க்கைப்போராட்டத்தை துவங்குகிறார்கள். அவர்களுக்கு எந்தத்தோல்வி வந்தாலும் அது தங்களது இயலாமையினால் மட்டுமே என எண்ணித்துடிக்கிறார்கள். தங்களுக்கு மேலே ஒருவன் இருந்துகொண்டு தங்களை வழிநடத்துகிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதன் விளைவால் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்.



அத்தப்பன் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் நல்ல நிர்வாகியல்ல என்பதை திருமணமாகி சில நாட்களிலேயே அங்கயர்க்கன்னி உணர்ந்துவிட்டார். இதனால் குடும்ப நிர்வாகத்தோடு தங்களுக்கான வியாபாரத்தையும் தானே கவனிக்க வேண்டிய நிலையை அங்கயர்க்கன்னி உணர்ந்து அந்தப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார்.  இந்த சமயத்தில் ஒருவரது அறிவையும் பொறுப்புகளையும் மீறி விதி விளையாடும். அத்தப்பன்-அங்கயர்க்கன்னி வாழ்விலும் அது விளையாடியது. நல்லவர்களாக  இருந்துவிடுவதால் மட்டும் விதி மனிதர்களை விட்டு விடுவதில்லை. சோதனைகள் மூலம் அவர்களை வல்லவர்களாகவும் மாற்றுவதே அதன் வேலை. இப்படி வல்லவர்களாக மாறுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலைக்கு அனுபவம் என்று பெயர். அனுபவமே ஆசான். அனுபவமே இறை.

கீழே அங்கயர்க்கன்னியின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகம். லக்னாதிபதி ஆறாமிட தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இந்த ஜாதகத்தில்  இங்கு 6 ஆமிடாதிபதி சனியோடு லக்னாதிபதி புதன் பரிவர்தனையாகிறார். 6 , 1௦ இரண்டுமே பொருட்பாவங்கள் என்றாலும் தொழிலால் கடன் ஏற்படும் என்பதை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது.  லக்னத்திற்கு 7 ல் விரையாதிபதி சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெற்று நிற்கும் குரு, கணவர் வலுவற்றவர் என்பதை குறிக்கிறார். இப்படி களத்திராதிபதி அஸ்தங்கமாகி வலுவிழப்பது உபய லக்னத்திற்கு ஒருவகையில் நன்மையே. எப்படி எனில், 7 ல் சூரியன் குருவோடு இணைந்து லக்னத்தை பார்ப்பது, ஜாதகிக்கு திருமணமான பிறகு குடும்ப, தொழில்வகை நிர்வாகத்தையும் ஏற்பதால் லக்னாதிபதி வலுவடைவார். நவாம்சத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கடகத்தில் இணைந்து நிற்பது கணவன் மனைவி ஒற்றுமையை குறிக்கிறது. அதே சமயம் செவ்வாய் நீசம் பெற்று நீச சந்திரனோடு பரிவர்தனையாவதால் வலுவடைகிறது. நவாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை பெறுவதும் கணவனின் திறமை குறைவால் ஜாதகி நிர்வாகியாவார் என்பதை உறுதி செய்கிறது. லக்னப்புள்ளி உணவு காரகன் சந்திரனின் ஹஸ்தம்-4ல் அமைந்து,  சந்திரன் 1௦ ஆமிடத்தில் உள்ள சனியின் பூசம்-4 ல் நிற்கிறது. இதனால் இவர்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யும் இனிப்பு, காரம், சாக்லேட் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம். தசாம்சத்தில் 7 , 1௦ ஆமதிபதி புதன் நீசமாகி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து குரு, சூரியனின் பார்வையை பெறுகிறது. 1௦ ஆமதிபதி புதன் சந்திரனின் வீட்டில் சந்திரனுடன் இணைவதால் உணவு தொடர்புடைய தொழில் என்பதையும் சுக்கிரனும் குருவும் இணைந்த பார்வை புதனுக்கு கிடைப்பதால் இனிப்பு தொடர்புடைய தின்பண்டம் என்பதையும் இது குறிப்பிடுகிறது. கேதுவோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக புதனை பார்ப்பதால் கார வகைகளையும் இணைத்து விற்பனை செய்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது. (செவ்வாய்-காரம்). குரு நீசம் பெற்று சனியோடு பரிவர்த்தனை பெறுவதால் வருமானத்தில் தடைகள் ஏற்படும் என்பதும் இனிப்பை குறிக்கும் குரு பாதகாதிபதியானதும் மற்றொரு இனிப்பு கிரகம் சுக்கிரன் 8 ல் மறைந்ததும் இனிப்பு வகைகள் நஷ்டத்தை கொடுக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றன. ராசியிலும் தசாம்சதிலும் சந்திரன் கடகத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. குரு லக்ன பாதகாதிபதியாகி விரையாதிபதி சூரியனோடு இணைந்து 1௦ க்கு 1௦ ஆன 7 ல் நிற்கிறது. சுக்கிரன் ராசியின் பாதகாதிபதியாகி ராசிக்கு 1௦ ல் மேஷத்தில் நிற்கிறது. இதனால் இனிப்பு தொடர்புடைய வகையில் ஜாதகிக்கு லாபமிருக்காது என்பது தெளிவாகிறது.

2௦13 ல் ராசிக்கு 1௦ ல் நிற்கும் சுக்கிர திசையில் குரு புக்தியில் இந்தத்தொழிலை துவங்கி கடனுக்கு பொருள் கொடுத்து நெருக்கடிக்கிடையில்தான் இதுவரை தொழிலை செய்து வருகின்றனர். 6 ஆமதிபதியும் 1௦ ஆமதிபதியும் பரிவர்தனையாவதும் இவர் கடன் கொடுத்து வியாபரம் செய்ய காரணமாகிறது. வெளி நபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தங்கத்தின் காரக கிரகமான பாதகாதிபதி குரு 7ல் அஸ்தங்கமானதால் மாங்கல்யத்தைக்கூட அடமானம் வைத்துள்ளதாக ஜாதகி கண்ணீர் சிந்த தெரிவித்தார். வெளிநாட்டில் புகழ் பெற்ற இனிப்பு சாக்கலேட் ஒன்றிற்கு ஏஜென்சி எடுத்து அதில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் கார வகையை குறிக்கும் ராசியின் முதல்தர யோகாதிபதியான செவ்வாய்  ராசிக்கு 1௦ ஆமதிபதியாகிறார். அவர் மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் உச்சம் பெற்று ராசிக்கு 7 ல் நின்று சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு கார வகைகளில் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை என்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பூமிகாரகன் செவ்வாயால் இவர்களுக்கு 2 வீடுகளில் இருந்து வாடகை வருகிறது.

ஜாதகி தற்போது சுக்கிரதிசை புதன் புக்தியில் உள்ளார். 6 ஆமிடத்தோடு பரிவர்தனை பெறும் புதன், கடன் பாதிப்பை தருகிறார். லக்னாதிபதி புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகம் என்பதாலும் அது சனியோடு தொடர்பாவதாலும் ராசிக்கு 7 ல் சனியும் குருவும் தற்போது வந்துள்ளதாலும் தொழில் வகை ஆலோசனை கேட்டு ஜாதகி என்னை தொடர்புகொண்டார். செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக இருப்பதாலும் சுக்கிரனுக்கு 1௦ ல் செவ்வாய் இருப்பதாலும் இனிப்பு வகைகளில் முதலீடு செய்யாமல் காரவகை மட்டும் செய்து படிப்படியாக கொடுத்த கடனை வசூல் செய்துகொள்ளுமாறு சொல்லப்பட்டது. சந்திரன் மூன்று சக்கரங்களிலும் (நவாம்சத்தில் பரிவர்தனைக்குப்பிறகு) கடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் பேக்கரியை படிப்படியாக குறைத்துவிட்டு பதிலாக சந்திரன் குறிக்கும் மளிகை கடை (கடன் கொடுக்காமல்) நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செவ்வாயின் நிலையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் கடன் வசூலான பிறகு இருக்கும் இடத்தில் மேலும் இரு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் சொல்லப்பட்டது.   

ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவர் ஈடுபடும் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எத்தனை திறமை படைத்தவராயினும் ஒருவர் ஜாதகப்படி சாதகமற்ற தொழிலை தேர்ந்தெடுத்தால் தோல்வி நிச்சயம். ஜாதகரை வாட்டும் கிரகங்களைப்போலவே அவர்களை உயர்த்தும் கிரகங்களும் உண்டு. அத்தகைய கிரகங்களை அடையாளங்கண்டு அவை சார்ந்த வகைகளில் ஒருவர் ஈடுபடுவது அவரது வாழ்வை நிச்சயம் உயர்த்தும்.  


விரைவில் அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Wednesday, 16 September 2020

அகதியின் மகன்

198௦களில் இலங்கையில் உள்நாட்டுப்போர் கடுமையாக நடந்துகொண்டிருந்த சூழலில் போர் முனையில் இருந்து தனது மனைவி குழந்தைகளை வெளி தேசங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு ,இலங்கையில் இருக்கும் தனது சொத்துக்களை இழந்து வெளியேற மனமின்றி,வாழவும் மனமின்றி தவித்தோர் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள். போராளிக்குழுக்கள் ஒருபுறம்அரசுப்படை ஒருபுறம் என்று தங்கள் நிம்மதியை இழந்து தவித்தவர்கள் அவர்கள். அதைவிடக்கொடுமை, முறையான ஆவணங்களின்றி அந்நிய தேசங்களில் குடியுரிமை அதிகாரிகளிடம் அகப்பட்டு, தண்டிக்கப்பட்ட சூழலில் தனது குடும்பத்தவர்களின் நிலை என்ன? அவர்கள் வாழ்கிறார்களா? மரணித்துவிட்டார்களா? அல்லது சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனரா? என தெரியாது அலைந்த மனிதர்களின் மனோ நிலைதான். சற்று கற்பனை செய்து பாருங்கள். அது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.நாம் இங்கு அலசவிருக்கும் ஜாதகமும் அப்படியான ஒரு மனிதரின் மகனது ஜாதகம்தான்..

இந்த ஜாதகரின் பெயர் கதிர்காமம் என்றும் அவரது தந்தையின் பெயர் மயில்வாகனம் என்றும் கற்பனையான பெயரில் கருதுவோம். மயில்வாகனம் 1983 ல் பிறந்து இரண்டே வயதான தனது மகனையும் தனது இளம் மனைவியையும் அப்படி இத்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் அனுப்பிவிட்டு, இலங்கையில் வேதனை வாழ்க்கை வாழ்ந்தவர்தான்.மயில்வாகனம் தனது மகன் கதிர்காமம் கருவில் இருக்கும்போதே தனது தம்பி வேலாயுதத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தார். இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஒன்று இந்தியாவிற்கு தப்பிச்செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது ராணுவத்துடனோ, போராளிக்குழுக்களுடனோ இணைந்துவிட வேண்டும் என்ற நிலையே அப்போது நீடித்தது.

தனது மகன் குடும்பம் பிரிந்துவிட்டதன் பாதிப்பு மயில்வாகனத்தின் பெற்றோர் வாழ்விலும் எதிரொலித்தது. அது அவர்களது வாழ்வையும் புரட்டிப்போட்டது என்றே சொல்ல வேண்டும். பேரன் கதிர்காமம் பிறந்த 5 வருடம் சென்ற பிறகு மயில்வாகனத்தின் பெற்றோர் இருவரும் தங்களது குடும்ப வாழ்வை முறித்துக்கொண்டனர்.குடும்பத்தை பிரிந்த மயில்வாகனதிற்கு தற்போது பெற்றோர் வழி ஆதரவோ, சகோதர வழி உதவியோ இன்றி தனித்து விடப்பட்டார். சகோதரன், தாய், தந்தை, குடும்பத்தை இழந்த நிலை, போர்ச்சூழல் ஆகியவை தனி ஒருவனின் வாழ்வை தவிடுபொடியாக்கிவிட்டன. அன்றைய சூழலில் பல்வேறு தேசங்களுக்கு உயிர்பிழைக்க தங்களது குடும்பங்களை அனுப்பிவிட்டு இலங்கையில் அப்படி நடைப்பிணங்களாக வாழ்ந்த மயில்வாகனங்கள் ஆயிரமாயிரம். உரிய ஆவணங்களோ அனுமதியோ இன்றி இந்தியா வந்து, தன் மொழி பேசிய மக்களாலேயே ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள் .9௦களின் மத்தியில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு முறைகேடாக இந்தியாவிற்குள் நுழைந்தமைக்காக மயில்வாகனத்தின் மனைவியும் மகனும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்படிசொந்த தேசத்தில் வாழ முடியாமல் உறவுகளை உதறிவிட்டு வெளியேறி அந்நிய தேசத்தில் அகதிகளாக, குற்றவாளிகளாக தீவிரவாதிகளாக பார்க்கப்படும் மனிதர்களுக்கும் ஒரு ஜாதக  அமைப்பிருக்க வேண்டுமல்லவா, அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே நீங்கள் காண்பது மயில்வாகனத்தின் மகன் கதிர்காமத்தின் ஜாதகம்.


இரண்டாம்பாவம் சொந்த பூமியில், சொந்த ஊரில்ஒருவர் வாழும் நிலையையும், நான்காவது பாவம் சொந்த பந்தங்களோடு குறிப்பாக தந்தை வழி ரத்த உறவுகளோடு அதாவது பங்காளிகளுடன் உள்ள உறவுப்பினைப்பையும் குறிப்பிடும். லக்னம் ஒருவரின் தனித்தன்மையையும், ஐந்தாவது பாவம் அவரது பூர்வீகத்தின் தன்மையையும், 9 ஆவது பாவம் அவரது முன்னோர்களின் செயல்பாட்டையும், சனியின் நிலை ஒருவரது முன்னோர்களின் ஒழுக்கத்தையும் குறிப்பிடும்.. இந்த ஜாதகத்தில் 2 ஆமிடத்தோடு 5 &8 ஆமதிபதி குரு தொடர்பாகி, அங்கு6& 7 ஆமதிபதி சனியோடு 2 ஆமதிபதி புதன் பரிவர்தனையாகியுள்ளது. 5&8 ஆமதிபதி தொடர்பாகும் இந்தப்பரிவர்தனையால் ஜாதகர் பூர்வீகத்தை, சொந்த பூமியைவிட்டு வெளியேறுவார். ஏனெனில் 9 என்பது முன்னோர் வாழ்ந்த பூமி, குரு 8 ஆமிடாதிபதி ஆகையால் பூர்வீகத்தை விட்டு வெளியேறுதலை இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. குரு, சனி,ஆகியவை வக்கிரமாகியுள்ளதும் 4 & 9 பாபங்களுக்குரிய செவ்வாய் அஸ்தங்கமாகியுள்ளதும் ஜாதகரது முன்னோர்கள் அடைந்த பாதிப்பை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஜாதகத்தில் 12 ஆமதிபதி சந்திரன் 8ல் சனியின் உத்திரட்டாதி-2 ல் நின்று 2 ஆமிடத்தில் தனது நட்சத்திரம் ஹஸ்தம்-2 ல் அமைந்த சனியோடு சாரப்பரிவர்தனை பெறுகிறது. இந்த இரு பரிவர்த்தனைகளும் ஜாதகரது தந்தைவழி முன்னோர்கள் அடைந்த பாதிப்புகளால் ஜாதகர் தனது தாயகத்தைவிட்டு வெளியேறுவதை தெளிவாக எடுத்துரைக்கிறது. லக்னாதிபதி சூரியன், சனி வீட்டில் நின்று லக்னத்தை பார்ப்பதால் இந்த ஜாதகரின் வாழ்வு சிறப்படைகிறது.. எனினும் சனியின் வீட்டில் அஸ்தங்க செவ்வாயோடும் சுக்கிரனோடும் சூரியன் நிற்பது, ஜாதகருக்கு அதீத கோபத்தையும், பொறுமையின்மையையும், நேர்மையாளனாக, பிடிவாதமுள்ளவனாக, குறைகளை சகித்துக்கொள்ள இயலாதவராக ஒரு மனோநிலையை உருவாக்கும். ஜாதகரின் இந்த குணம் பணியிடத்தில் சிறப்பைத்தந்தாலும், 7 ஆமிடம் இப்படி அதீத உஷ்ணமடைவதால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படும்.

தாயை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி, தந்தையை குறிக்கும்9  ஆம் பாவாதிபதி இருவரும் செவ்வாய் ஒருவரே ஆகி அஸ்தங்கமாகியுள்ளது. சனி திசை சுக்கிர புக்தியில் பிறந்த ஜாதகர், அதே சுக்கிர புக்தியில் இலங்கையை விட்டு கள்ளத்தோணி மூலம் தந்தையை பிரிந்து தாயோடு இந்தியா வருகிறார். திசா நாதன் சனி,8 ஆமிட சந்திரனோடு சாரப்பரிவர்தனை பெற்றதும்,புக்தி நாதன் சுக்கிரன் 12 ஆமிட ராகுவின் சதயம்-3 ல் நின்றதும் இதற்கு காரணமாகும். 12 ஆமிடம் வெளிநாட்டில் குடியேறுவதை குறிக்கும். சுக்கிரன் சட்டவிரோத குடியேற்றதிற்குரிய ராகு சாரம் பெற்று 12ல் நின்றதால் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறினர்.ராஜீவ்காந்தி மரணதிற்குப்பிறகு இந்திய அரசு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கிறது. 6 ஆமிடத்தில் நிற்கும் புதனின் திசையில் தண்டனை, அவமானங்களை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரன் சாரம் பெற்ற கேது புக்தியில் 1996-97 ல் ஜாதகரும் தாயும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிற்பாடு விடுதலை செய்யப்படுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2௦௦1ல், 18 வருடங்களுக்குப்பிறகு தனது குடும்பத்துடன் இந்தியாவில் வந்து இணைகிறார் மயில்வாகனம்

இப்போது துவதசாம்சத்திற்கு வருவோம்.துவாதசாம்ச சக்கரம் பெற்றோர் நிலையை ஆராய உதவுவதாகும். லக்னத்திற்கு 12 ல் சூரியன் மறைந்து, லக்னத்திற்கு 7 ல் சூரியனுக்கு 8 சந்திரன் நிற்கிறது. சூரிய சந்திரர்கள் 6 – 8 ஆக அமைந்ததிதிலிருந்து பெற்றோர் இருவரும் ஒருங்கிணைந்து வாழும் சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்பதை இது குறிக்கிறது. லக்னத்திற்கு 6, 11 ஆமதிபதி சுக்கிரன் 9 ஆமிடத்தில்தனது புக்தியில் தந்தையைகுடும்பத்தைவிட்டு விலக்குகிறார். இதனால் 6–8 ஆக அமைந்த பெற்றோர் பிரிகின்றனர். அப்போது திசா நாதன் சனி, புக்தி நாதன் சுக்கிரன் இருவருமே சூரியனுக்கு எதிரிகளாவர். ஆனால் 2௦௦1 ல் சூழல் மாறுகிறது. புதன் சனி, சுக்கிரனுக்கு மட்டுமல்ல சூரியனுக்கும் நண்பனாவார். புதன் லக்னத்தில் அமைந்து 7 ஆமிடத்தில் தன் வீட்டில் அமைந்த சந்திரனை பார்க்கிறார். இதனால் 2௦௦1 ல் புதன் திசையில், சந்திர புக்தியில் பெற்றோர் ஒன்று சேர்கின்றனர்.

 

தந்தை குடும்பத்துடன் இணைந்த பிறகு ஜாதகருக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஜாதகர் கணினிக்கல்வியில் முதுநிலை பட்டம் பெற்று தேர்வாகிறார். 2004ல் ஜாதகரின் வாழ்வில் ஒரு பொற்காலம். புதன் திசை ராகு புக்தி அப்போது நடப்பு. ராகு ஜல ராசியில் நின்றாலும் அவர் ஜீவன காரகன் சனியின் சாரம் பூசத்தில் நிற்கிறார். ராகு சூதாட்டம், லாட்டரி, பிரம்மாண்டமான கனவு போல நம்ப முடியாத சம்பவங்களுக்கும் காரக கிரகம் ஆகிறார். அமெரிக்கா எப்போதுமே படித்த, தகுதி வாய்ந்த, திறன்மிகு உழைப்பாளிகளை கடந்த காலங்களில் இருகரங்கள் கொண்டு வரவேற்றிருக்கிறது. அப்படியான ஒரு சூழலில் அமெரிக்காவில் வந்து பணிபுரிய விரும்பும் படித்த, தகுதி வாய்ந்த நபர்களுக்காக நடத்தப்படும் லாட்டரியில் பரிசு பெற்று அமெரிக்காவில் நுழையும்போதே பரிசின் மூலம் பச்சைப்பட்டயம் ( Green card) பெற்று அமெரிக்கா சென்று பணிபுரிகிறார்.

2006ல் இந்தியாவில் புதன் திசையில் குரு புக்தியில் கதிர்காமம் பெற்றோர்களுக்காக ஒரு வீடு வாங்கித்தருகிறார். புதன்4 ஆம் பாவதிபதி செவ்வாயின் சாரம் பெற்று (அவிட்டம்-2)  புக்தி நாதன் குருவின் சாரத்தில் (பூரட்டாதி-3 ல்) செவ்வாய் அமைந்ததால் அது சாத்தியமாயிற்று. ஜாதகருக்கு  பரிவர்த்தனைக்கு உள்ளான புதனின் திசையில் 2 ஆமிடத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் 20௦9ல் திருமணம் நடந்தது .ஒரு ஆண்டிற்குப்பிறகு களத்திர பாவமான 7 க்கு விரையத்தில் 6 ஆமிடத்தில் நிற்கும் வழக்கு பிரிவினை காரகன் கேதுவின் திசை துவங்கியதும் ஜாதகருக்கு வழக்கும் வந்தது, திருமண வாழ்வும் முடிவிற்கு வந்தது. எனினும் மணமுறிவு என்பதை 6 ஆமிடம் குறிப்பிட்டாலும் 8 ஆமிடமே சட்டப்படியான முறையான பிரிவினையை குறிப்பிடும் என்பதால் 4 வருட வழக்குக்குப்பிறகு 2௦15 ல் 8 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் சாரம் (ஹஸ்தம்-2) பெற்ற 8 ஆமதிபதி குருவின் புக்தியின் சந்திரனின் அந்தரத்தில் வழக்கு முடிவுற்று சட்டப்படி விவாகரத்து பெற்றனர். (கேது – வழக்கு, சட்டப்பதியான பிரிவினை) அதே ஆண்டின் பிற்பகுதியில் கேது திசையில்,2 ஆமிடத்தில் ,2 ஆமிடத்ததிபதி புதனோடு பரிவர்த்தனையாகி நிற்கும் 7 ஆமதிபதி சனியின் புக்தியில் ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. இங்கு திசாநாதன் கேது (திருவோணம்-2)  மற்றும் சனி (ஹஸ்தம்-2)  ஆகியோர் 8 ஆமிட சந்திரனோடு நட்சத்திர அடிப்படையில் தொடர்புகொண்டதால் ஜாதகருக்கு மணமுறிவு ஏற்பட்டு பிறகு மறுதிருமணம் நடக்கவேண்டும் என்பது கர்மவினை என்று தெளிவாகிறது.

இதனிடையே ஜாதகருக்கு 2017 மற்றும்2019ல்ராசிக்கு 5 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற சுக்கிர திசையில் சுய புக்தியில் ஜாதகருக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். செவ்வாய் அஸ்தங்கமானது ஜாதகருக்கு உறவுகள், பங்காளிகள் வகையில் நன்மையில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. செவ்வாய் கடுமையாக பாதிக்கப்பட்டதால்தான் ஜாதகரின் தந்தை தனது சகோதரனை விட்டு விலகினார். உறவுகள் விலகினர், பங்காளிகள் விலகினர். செவ்வாய் அஸ்தங்கமானதால்தான் இந்தியாவில் தங்களது வீட்டில் குடியேரியவர்களிடம்கூட முறையான வாடகை வசூல் செய்ய ஜாதகரால் இயலவில்லை. பெற்றோரை ஜாதகர் தனது முதல் திருமணம் விவாகரத்தான பிறகு அமெரிக்கா அழைத்து வந்தார். எனினும் வீடு மற்றும் சொத்துகள்  வகை பிரச்சனைகளை சரிசெய்ய தந்தை தனது மனைவியை ஜாதகரிடமே விட்டுவிட்டு இந்தியா வந்து தங்கினார். நீண்டதொரு போராட்டதிற்குப்பிறகு 2020 ல் தற்போது சுக்கிர திசையில்  சுய புக்தியில் செவ்வாய் சாரம் பெற்ற புதன் அந்தரத்தில் வீட்டை விற்றனர் எனினும் சிறிது மீத தொகை வரவேண்டியுள்ளது. இங்கே அஸ்தங்க செவ்வாயின் பாதகம் அதீதம் என்பது தெளிவாகிறது.

சூரியன் பாரம்பரியத்தைகுறிக்கும் காரக கிரகம் என்பது தெரியும். ஜாதகருக்கு ஏற்பட்டுள்ளது ஒரு தலைமுறை தோஷம் என்பது சூரியனின் நிலைகொண்டு அறியலாம். சூரியன்7 ஆமிடத்தில் செவ்வாயோடு இணைந்து நின்றதால் தற்போது ஜாதகர் தனது இரண்டாவது மனைவியோடுகூட இனிமையான இல்லறம் நடத்த இயலவில்லை. ஜாதகரால் மட்டுமல்ல ஜாதகரின் தந்தை,பாட்டன் ஆகியோரின் குடும்ப வாழ்வும் பாதித்துள்ளது. தற்போதும் ஜாதகரின் தந்தை இந்த கொரானா காலத்தில் அமெரிக்கா செல்ல வழியின்றி இந்தியாவில்தான் இருக்கிறார். இத்தகைய கடுமையான தோஷங்களை முறையான வழிகளில் குறைத்துக்கொள்ள ஜோதிடம் நமக்கு வழிகாட்டுகிறது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி:8300124501 

Saturday, 18 April 2020

அஸ்தங்க ஆச்சரியங்கள்!



சூரியனுக்கு மிக நெருக்கமாக அமையும் கிரகங்கள் தங்கள் கதிர்வீச்சை  சூரியனிடம் இழந்து விடும். இதுவே சூரியனால் கிரகங்களுக்கு ஏற்படும் அஸ்தங்க தோஷமாகும். இதில் சூரியனைத்தவிர மற்றொரு முக்கிய ஒளி கிரகமான சந்திரனுக்கும்  நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை.  ஏனைய செவ்வாய் ,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கும் அஸ்தங்க தோஷம் உண்டு. அஸ்தங்க தோஷம் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பாகையில் அமையும் என்றாலும் சூரியனுக்கு 5 பாகை அளவில்தான் பாதிப்பு அதிகம் இருக்கும். அதிலும் சூரியனுக்கு 3 பாகை நெருக்கமாக அமையும் சூழலில் அது கடும் தோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.   கிரகங்களில் சூரியனுக்கு சம கிரகமான புதனுக்கு சூரியனால் அஸ்தங்க தோஷம் இல்லை என்ற வலுவானதொரு கருத்து ஜோதிட அறிஞர்களிடம் நிலவுகிறது. புதன் புத்தி காரகன் என்பதால் ஒருவருக்கு பள்ளிக்கல்வி பாதிக்கப்பட்டாலும் அனுபவம் என்ற கல்வியால் அது வாழ்வில் ஜாதகரை உயர்த்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்தங்கமடையும் கிரகங்கள் சூரியனுக்கு முன்னாள் சென்று அமையும்போது சூரியனுக்கு பின்னால் அமைவதால் ஏற்படும் பாதிப்பைவிட குறைவான பாதிப்பையே அடைகின்றன. அஸ்தங்கமடையும் கிரகங்களின் காரகங்களும் ஆதிபத்தியமும் பாதிப்பை அடையும். இவ்விரண்டில் ஒன்று கடுமையான பாதிப்பாக இருந்தால் மற்றொன்று பாதிக்காது. அதாவது காரகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டால் பாவம் பாதிக்காது. பாவம் கடும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தால் காரகம் பாதிக்காது.  அஸ்தங்க கிரகங்களின் சாரம் பெற்ற கிரகங்களும் பாதிப்பை அடையும். இதிலும் சில ஆச்சரியங்களும் உண்டு. அவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.


கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

  


சுக்கிரன் சூரியனுக்கு 5 பாகைகள் முன்னால் ரோகிணி-1 ல் நிற்கிறது. விருட்சிக லக்னாதிபதி செவ்வாய் மிருகசீரிஷம் -1 ல் நின்று ரோகிணி-3 ல் நிற்கும் சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜாதகரின் வைராக்கியம் இல்லற  விஷயத்தில் பாதிக்கப்படுகிறது.  களத்திர பாவத்தில் இரு நெருப்பு ராசி கிரகங்கள் நிற்பதால் ஜாதகரின் இல்லற ரீதியான எதிர்பார்ப்புகள் மனைவியிடன் நிறைவேறவில்லை. சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் நடுவில் இங்கு சூரியன் அமைந்துள்ளார். சூரியன் , சுக்கிரன் இருவரும் திருட்டு உறவு காரகன் சந்திரனின் சாரம் பெற்றுள்ளதால் மனைவியிடம் நிறைவேறாத தனது இல்லற ஆசைகளை திருட்டு உறவின் மூலம் சின்ன வீடு ஏற்படுத்திக்கொண்டு அடைகிறார். 7 ஆமிட பாவ கிரகங்கள் செவ்வாயும் சூரியனும் லக்னத்திற்கு நன்மையை செய்தாக வேண்டிய பாவாதிபதிகளாக அதாவது லக்னாதிபதியும் லக்னத்திற்கு திக்பலம் தர வேண்டிய 1௦ ஆமதிபதியுமாவதால் குடும்ப வாழ்வு தடையாகவில்லை. ஆனால் பாதகாதிபதி தொடர்பால் பாதகாதிபதியின் காரக அடிப்படையில் தவறு நடக்கிறது.

கீழே இரண்டாவது ஆணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து லக்னத்திற்கு திரிகோணத்தில் நிற்கிறார். வித்யா காரகன் புதன் சூரியனின் கார்த்திகை-3 ல் நின்று அதே கார்த்திகை-3 ல் நிற்கும் விரையாதிபதி சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளார். இங்கு நண்பர் சூரியனின் சாரத்திலேயே புதன் அஸ்தங்கமடைதுள்ளதால் அஸ்தங்க தோஷம் புதனை பாதிக்கவில்லை. 5 ஆமிடத்தில்  நீசமான வித்யா ஸ்தானாதிபதி (4 ஆமதிபதி)  குருவின் 5 ஆம் பார்வை 9 ஆமிட கிரகங்களுக்கு கிடைக்கிறது என்பது இங்கு நல்லதொரு அம்சம். ஜாதகருக்கு புதனின் காரகமான கல்வி அஸ்தங்கத்தால் பாதிக்கவில்லை. ஜாதகர் தமிழில் MA; MEd; MPhil முடித்து அரசுப்பள்ளியில் தமிழ்  ஆசிரியராக பணிபுரிகிறார்.

கீழே மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்
தாய்மைக்கு உரிய கிரகம் என்றால் அது சந்திரன்தான். அதனால்தான் சந்திரனை “மாத்ரு காரகன்” என ஜோதிடம் போற்றுகிறது.  சந்திரன் வலுவான ஜாதகர்களுக்கு தாய்மை உணர்வு அதிகமாக இருப்பதை காணலாம். லக்னமே சந்திரனுக்கு உரிய கடக லக்னம்தான். குடும்ப பாவாதிபதி சூரியன் லக்னதிற்கு 6 ல் தனுசுவில் மூலம்-3 ல் நின்று, மூலம்-4 ல் நிற்கும் குடும்ப காரகன்  குருவை அஸ்தங்கம் செய்கிறார். குடும்ப காரகன் அஸ்தங்கமடைந்ததால் குடும்பம் வாழ்வு இல்லை என்றொரு நிலை ஜாதகிக்கு ஏற்பட்டது. ஆனால் குரு, சூரியன் இருவரும் ஞான காரகன் கேது சாரம் பெற்றதால் கேது ஜாதகிக்கு உலகமே தன்  குடும்பம் என உணரவைத்தார்.  ஜாதகி தன்னை உலக மக்களுக்கு தாயாக  மனதார எண்ணினார். இது ஒரு அபூர்வ உணர்வு. ஜாதகியின் கணவரும் ஜாதகியை தான் வணங்கும் அன்னை காளியின் அம்சமாகவே எண்ணி ஜாதகியை பூஜை செய்தார். “மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பை தெரிவித்துவிடு. என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு!” என்று உலக மக்களுக்கு தன் கடைசி செய்தியை தெரிவித்துவிட்டு இறையில் கலந்த அன்னை  சாரதா தேவியின் ஜாதகம் இது.

 கீழே நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் என்னுடன் பணிபுரிந்தவர். குடும்ப, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகன் ஆகிய பொறுப்புகளுக்கு அதிபதியான சுக்கிரன், 7 க்கு பாதகாதிபதியான சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளார். சூரியன் பூராடம்-3 ல் நிற்கிறது. சுக்கிரன் பூராடம் – 2 ல் சுய சாரம் பெற்று அம்சத்தில் நீசமடைந்துள்ளார். இந்த ஜாதகர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 41 வயதான ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் களத்திரகாரன் சுக்கிரனை அஸ்தங்கப்படுதுவது களத்திர பாவாதிபதி சுக்கிரனுக்கு  பகைகிரகம் மட்டுமல்ல களத்திர ஸ்தானமான துலாதிற்கு பாதகஸ்தானாதிபதி ஆகவும் சூரியன் வருவதே ஆகும்.

கீழே ஐந்தாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


கடக லக்னத்திற்கு 2 ஆமதிபதி சூரியன் சுவாதி-4 ல் நின்று விசாகம்-2 ல் நிற்கும் 7 ஆமதிபதியும் ஜீவன காரகனுமான சனியை அஸ்தங்கப்படுதுகிறார். இங்கு இது ஒரு முக்கியமான அமைப்பு. நீச சூரியன் அஸ்தங்கப்படுத்தும்  சனியால்தான் நீச பங்கமடைகிறார். எனவே சூரியன் சனியை தீவிரமாக பாதிக்க முடியாது. சனி சூரியனைவிட 5 பாகை முன்னாள் சென்றுதான் 6 ஆமதிபதி குருவின் சாரத்தில் அஸ்தங்கமடைந்துள்ளார். சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாக இருப்பதால் இங்கு சூரியன் சனியை பாதிப்பதைவிட சனி சூரியனை பாதிப்பதே அதிகமாக இருக்கும். சனி சூரியனோடு இணைந்ததால் அரசுத்துறையிலும் தன காரகன் குருவின் சாரம் பெற்றதால் LIC யிலும் பணியாற்றுகிறார். சூரியன் வலுக்குறைந்து சனி தொடர்பு பெறுவதால் சூரியனின் காரகமான இருதய இயக்கத்தில் ஜாதகருக்கு பாதிப்புகள் இருக்கிறது.  சனி 6 ஆமதிபதி தொடர்பு பெறுவதும் இதற்கு மற்றொரு காரணம்.

மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை,
வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501