Showing posts with label படைத்தவன். Show all posts
Showing posts with label படைத்தவன். Show all posts

Wednesday, 17 February 2021

குறை தீர்க்க வரும் தெய்வம்!

 

வழிபாடுகள் தோன்றியதன் அடிப்படை.

தெய்வ வழிபாடுகளில் பல வகை உண்டு. பொதுவாகவே வழிபாடுகள் இயற்கையையும் இதர உயிரினங்களையும் கண்டு அஞ்சிய மனிதர்களின் பயத்தினால் ஏற்பட்டவை என்றொரு கருத்து உண்டு. மனிதன் ஆதி காலத்தில் காட்டு விலங்குகளின் மீதுள்ள பயத்தால் குரூர விலங்குகளையும், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றையும் வணங்கியிருக்கிறான். இன்றைய நமது தெய்வங்களின் காலடியில் சிங்கங்களும், புலிகளும், யானைகளும், பாம்புகளும் இருப்பதன்  காரணம் இதுதான். பண்டைய மனிதர்கள் தனித்தனி கூட்டங்களாக வசித்தபோது எதிரிக்கூட்டத்தினரால் பாதிக்கப்பட்டபோது, தாங்கள் வணங்கும் தெய்வம் எதிரிகளிடம் இருந்து தன்னை காக்கும் என்று நினைத்ததன் விளைவே நமது தெய்வங்களின் காலடியில் அரக்கர்கள் என்ற எதிரிகளின் தலைகள் இருப்பது. பிறகு தங்களுக்கு நிழல் தரும், கனி தரும், ஆரோக்கியம் தரும், பால் தரும் பசுக்களையும், மரங்களையும், செடிகளையும், நதிகளையும், சூரிய, சந்திரர்களையும் வணங்கி இருக்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்த மகா பெரிய பிரபஞ்ச சக்தியை நமது மனதின் எண்ண அலைகளின் மூலம் தொடர்புகொள்ள ஒரு வடிவம் சாமான்ய மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்த வடிவம் தேவைப்படுபவர்களுக்கு அது தெய்வம் தேவைப்படாதவர்களுக்கு அது இயற்கை என்பதே உண்மை. நமது எண்ண அலைகளை ஒரு வடிவத்தின் மீது குவிக்கும்போது இயற்கையுடன் மனிதன் அந்த வடிவத்தின் மூலம் தொடர்புகொள்கிறான் என்பதை சில அபூர்வமான அறிவியல் ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.    

குல தெய்வம்.

குல தெய்வம் என்பது பயத்தின் பொருட்டு உருவான கதைகளின் அடிப்படையில் மேலே கூறப்பட்டவை போன்று உருவானதல்ல. குல தெய்வம் என்பது தனித்துவமானது.  குல தெய்வம் என்பது தங்கள் கூட்டத்தின் பொருட்டு எதிரிகளோடு நடந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களையும், தனது குலத்திற்கு, தனது குடும்பத்தின் நலனின் பொருட்டு தனது உயிரை, வாழ்வை தியாகம் செய்தவர்களே அந்த குலத்தின் (கூட்டத்தின்) தெய்வங்கள் என அழைக்கப்படுகிறது. குல தெய்வத்தோடு அந்த குலம் காக்க உயிர்நீத்த வீரர்களையும் காவல் தெய்வங்கள்  என்று வணங்குவது நடைமுறை. இந்த தெய்வங்கள் நமது வாழ்வோடு ஒன்றியவை. எனவே இவைகளின் ஆன்மாவிற்கு அந்த குலத்தை காக்கும் சக்தி உண்டு. முறையாக வழிவழியாக ஏற்படுத்தப்பட்ட வழிபாடுகளின் அடிப்படையில் நன்றி செலுத்தும் உணர்வோடு குல தெய்வத்தை வணங்கினால்  ஒருவரின் துயர் தீர்க்க விரைந்து வரும் தெய்வம் குல தெய்வமாகும். ஒருவரின் துயர் தீர்ப்பதில் எப்போதும் முன்னிலை வகிக்கும் தெய்வம் குல தெய்வமாகும்.

தமிழர்களின் தெய்வம் முருகன்.

நமது தமிழ் சமுதாயம் அனைத்திற்கும் பொதுவான தெய்வமாக முருகன் வழிபடப்படுகிறார். ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் பண்டைய காலாசாரத்தின் விடிவெள்ளியாக விளங்கிய தன்னிகரற்ற தலைவனே முருகன் ஆவார். மலைகளிலும் காடுகளிலும் தமிழர்கள் குழுக்களாக வசித்த பண்டைய காலத்தில் தோன்றியவராக முருகன் இருந்திருக்க வேண்டும். அப்போது தமிழ் பேசும் அனைவரையும் ஒருங்கிணைந்த ஒரே  குடையின்கீழ் கொண்டுவர முயன்றவராக முருகன் இருந்திருக்கலாம். அதனால்தான் முருகன் குறிஞ்சி நிலத்தின் (மலையும் மலை சார்ந்த இடம்) கடவுளாக கூறப்படுகிறார். முருகன் தமிழர்களின் கலாச்சார தெய்வமாகும். குல தெய்வம் தெரியாத தமிழர்கள் மட்டுமல்ல, தமிழகத்தை நாடி பிழைக்க வரும் குல தெய்வம் தெரியாத ஏனையயோரும் முருகனை குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடமாறு கூறுவதன் அடிப்படை இதுதான். மனினாக  பிறந்து தமிழ் சமுதாயத்திற்கு பெரும் பங்களிப்பு செய்த முருகனை பிற்பாடு சிவனின் மகனாக உருவகம் செய்துள்ளனர். முருகனின் வரலாற்றை நமது பண்பாட்டுக்கூறுகளின் ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு ஒப்பற்ற தமிழர்களின் தெய்வ வரலாறாக தொகுத்து எழுதும் முயற்சியில் தமிழறிஞர்கள்  சிலர் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளதாக அறிகிறேன். அரசியல் தொடர்பற்று அது நடந்தால் அது தமிழ்  சமூகத்திற்கு நல்லது. காரணம் இன்று அரசியலுக்காக தங்கள் மதத்தையும், இனத்தையும் வழிபாடுகளையும் இழிவுபடுத்திக்கொண்டு பிற மதத்திற்கு வால் பிடிப்பவர்களே தங்களை தமிழக தலைவர்களாக காட்டிக்கொள்கின்றனர். முருகன் மனிதனாக பிறந்து வாழ்ந்து மறைந்தவர். தனது வாழ்வின் சொகுசுக்காக முருகனை சந்திர குப்த விக்ரமாதித்தனின் மகனாக அவதானித்து காளிதாசர் “குமார சம்பவம்” எழுதிச்சென்ற நகைச்சுவைகளெல்லாம் வரலாற்றில் இருக்கிறது. 

கால மாற்றத்தில் குல தெய்வ வழிபாடுகள்.

இன்றைய நவீன யுகத்தில் தங்கள் வாழிடத்தை விட்டு சம்பாத்தியத்திற்காக வெளி தேசம் செல்வோர் தங்களது மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவைகளையும் இழந்துவிட்டே செல்கின்றனர். முந்தைய காலங்களில் இலங்கை, பர்மா, மலேசிய, சிங்கப்பூர் சென்றோர் அங்கெல்லாம் நமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை பரப்பினர். ஆனால் இன்று பொருளாதாரத்தின் பொருட்டு உலக மக்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கலந்து செயல்படும் சூழ்நிலையில் நமது இனத்தின் அடையாளம் மாறிவருகிறது. உலகின் முதன்மையான கலாச்சார தொட்டில்களில் ஒன்று தமிழ்நாடு எனும் நிலையில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தனித்தன்மையை விட்டுக்கொடுக்காது பேணுவதற்கு பொறுப்பு உள்ளது. நமது வழிபாட்டுமுறைகளை குறிப்பாக தங்கள் துயர்தீர்க்கும் முதன்மை தெய்வமாகிய குல தெய்வ வழிபாட்டை தவறாமல் கடைபிடிப்பது அவசியம்.

இன்று தங்கள் குல தெய்வம் தெரியாது ஜோதிடம் பார்க்க வருபவர்களை காணும்போது பரிதாபமாகவுள்ளது. இத்தகையவர்களுக்கு உதவ ஜோதிடம் கைகொடுக்கிறது. குலதெய்வத்தை அறிய ஜாதகத்தைவிட பிரசன்னமே மிகச்சிறந்தது என்பது எனது கருத்து.

ஜாதகம் மூலம் குல தெய்வம் அறிதல்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். 9 ஆம் பாவமும் கிரகங்களில் சனியும் (குருவும் கூட)  குல தெய்வ அனுக்கிரகத்தை கூறுகிறது. மேற்கண்ட ஜாதகத்தில் குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆம் பாவம் பெண் ராசியாகி அதில் சூரியன் அமைந்துள்ளார். இதனால் இவரது குல தெய்வம் ஒரு பெண் தெய்வமாகும். சூரியன் 5 ல் அமைந்துள்ளதால் குல தெய்வம் ஆளுமை மிக்க தெய்வமாகும். உச்ச ராகு சூரியனின் நட்சத்திரம் கார்த்திகை-4 ல் நின்றதால் 5 ஆம் பாவத்தோடு தொடர்பாகிறார். மேலும் ராகு 5 ஆம் பாவத்தை கட்டுப்படுத்தும் பாவத்தில் உள்ளார். இதனால் ராகுவின் ஆதிக்கம் 5 ஆமிடத்தில் அதிகம். ராகு ஒரு மூர்க்க கிரகமாகும். ராகு செவ்வாயின் பார்வையை பெறும்போது அதற்கு மூர்க்க குணம் அதிகமாகும். இந்த ஜாதகரின் குல தெய்வம் பழனி  அருகிலுள்ள வீரமாத்தி அம்மன் என்பதாகும். குல தெய்வத்தில் உச்ச ராகுவின் ரௌத்ர குணம் தெரிகிறது. 5 ல் அமைந்த கிரகமே குல தெய்வத்தின் நிலையை சொல்லும் என்றாலும் ராகு சூரியன் சாரம் பெற்றதால் சூரியன் இங்கே தனது ஆதிக்கத்தை ராகுவிடம் இழந்துவிடுகிறார். குல தெய்வ பாக்கியத்தை குறிக்கும் 9 ஆமிடத்தில் வீரத்தை குறிக்கும் செவ்வாயின் பார்வையை வாங்கும் ராகு, குலதெய்வத்தின் பெயரிலேயே செவ்வாயின் தன்மையை ஏற்றுக்கொள்கிறார். ராகு தனித்திருப்பதால் அது பார்க்கும், சேரும் கிரகங்களின் நிலையையே வெளிக்காட்ட வேண்டும் என்ற விதி  இங்கு செயல்படுகிறது.

சூரியன் இரட்டைத்தன்மையை குறிக்கும் புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். எனவே குல தெய்வ வழிபாட்டில் மற்றொரு அம்சமும் கலந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த ஜாதகர் பாரம்பரையில் குழந்தை பிறந்ததும் குழந்தையை சூரியனுக்கு முன் வைத்து வணங்கி ஆசி பெற வேண்டும் என்ற மற்றொரு வழிபாட்டு முறையையும் காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர். ஜாதகம் இதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது.

பிரசன்னம் மூலம் குல தெய்வம்  அறிதல்.

குல தெய்வம் என்னவென்று உறுதியாக தெரியாமல் இரண்டு தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். இதுபற்றி விபரமறிந்த எங்கள் முன்னோர்கள் வழியில் தெளிவான நபர்கள் யாரும் இல்லை. எனவே வழிகாட்டுங்கள் என்று எங்கள் ஊர் நண்பர் வந்தார். ஜாதகம் இல்லாத சூழலில் அவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.



ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ அனுக்கிரகத்தை உதயத்தில் இருக்கும் கிரகம் சொல்லிவிடும். ஆனால் குல தெய்வத்தை கூறுமிடம் 5 ஆமிடமும் 9 ஆமிடமும் ஆகும். ஒன்பதாமிடம் ஜாமக்கோள் பிரசன்னத்தில் குல தெய்வ நிலையை தெளிவாகக்காட்டும். இந்த பிரசன்னத்தில் உதயத்தில் உள்ள உதயாதிபதி சுக்கிரன் ஆட்சிபெற்று வலுவாக உள்ளார். எனவே ஜாதகருக்கு குல தெய்வ பாக்கியம் சிறப்பாக உள்ளது. ஆரூடம் இரட்டைக்கிரகம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் இருவித  தெய்வங்களை  வணங்கி வருவதாக ஜாதகர் கூறியது சரியாகும். ஒன்பதாம் பாவத்தில் பாம்பு, குருவின் சாரம் புனர்பூசம்-2 பெற்று  பாம்பின் சாரநாதன் குரு உள்வட்டத்திலும் வெளிவட்டத்திலும் நீசமாகியுள்ளது ஜாதகருக்கு குலதெய்வத்தின் பொருட்டு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ஆம் பாவத்தை ஜாம மற்றும் ஜாதக புதன் ஆகிய இரண்டும் பார்ப்பதால் குல தெய்வ வழிபாடு தொடர்வதையும் அதில் இருவித வழிபாடுகளாக இருப்பதையும் அறிய முடிகிறது. புதனுடன் பாதகாதிபதி சூரியன் உள்ளதாலும் உதயத்தை உச்சம் பெற்ற பாதகாதிபதி சூரியன் பார்ப்பதும் குழப்பத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இந்த பிரசன்னத்தில் உச்ச நீச கிரகங்களான சூரியன் மற்றும் குரு ஆகியவை ஜாதகரின் சந்தேக மன  நிலையை தெளிவாக காட்டுகிறது.

இந்த பிரசன்னத்திற்கு நான் கூறிய பதிலானது.

9 ஆம் பாவத்தில் உள்ள பாம்பு வடிவமே குல தெய்வத்தின் அம்சமாகும். 9 ஆமிடத்தை இரு புதனும் பார்வையிடுவதால் பெருமாளையும் வழிபடுகிறீர்கள். எனினும் 9 ல் உள்ள பாம்புதான் குல தெய்வம் எனக்காட்டுகிறது என்று கூறினேன்.

நண்பர் தாராபுரம் அருகிலுள்ள பாம்பலத்தம்மனை தங்கள் பங்காளிகளுடன் இன்றும் வழிபட்டு வருவதாகவும் தற்போது உள்ள ஊரின் (கரூர் அருகிலுள்ள வெள்ளியணை)  பிரதான தெய்வமாகிய பெருமாளையும் வழிபட்டு வருவதாகவும் கூறினார்.

நண்பர் பாம்பலத்தம்மன் என்று கூறியதும் அடியேன் சிலிர்த்துப்போனேன். பிரசன்னம் துல்லியமாக பதிலை கூறிவிட்டது. சொந்த ஊரை விட்டு விலகி பிழைக்க வந்த ஊரைத்தான் 3 ஆமிடம் குறிக்கிறது. எனவே ஒரு ஊரை நம்பி வாழ வந்தவர்கள் அந்த ஊர் தெய்வத்தை முக்கியமாக வழிபட வேண்டும் என்ற வகையில் பெருமாளை வழிபடுவதை மூன்றாமிடம் கூறுகிறது. எனவே உங்களுக்கு இரு தெய்வ அனுக்கிரகமும் உண்டு. இரு வழிபாடுகளையும் தொடர்வது நன்மையே எனினும்  பாம்பலத்தம்மனே குல தெய்வம் என்பதை உங்கள் தலைமுறையினருக்கு சொல்லி வழிபட்டுவர சொல்லுங்கள் அதன் நன்மை அளப்பரியது என்று கூறி அனுப்பிவைத்தேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Wednesday, 13 January 2021

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன?

தனது கர்மா என்ன?

தன்னை எது வழிநடத்துகிறது?


என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய அனைவரிடமும் இக்கேள்வி ஒருநாள் கண்டிப்பாக எழுந்தே தீரும். அதனால்தான் மனிதர் மனம் வயது செல்லச்செல்ல ஆன்மீகத்தின்பால் திரும்புகிறது. ஒருவரது பிறப்பின் சூழலை லக்னமும் லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் வாழும் சூழலை பூர்வ புண்ணியம் எனும் அவரது ஐந்தாம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் ஆன்மா இறுதியாக எதில் நிறைவு பெறும் என்பதையும் அவரது கடந்த பிறவியின் கொடுப்பினைகள் என்ன என்பதையும் 9 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களுமே முடிவு செய்கிறது. அவரின் வாழ்வின் முடிவை 12 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் முடிவு செய்கின்றன. எளிமையாக சொல்வதென்றால் வாழ்வின் துவக்கத்தை லக்னமும், மத்திய காலத்தை 5 ஆம் பாவமும் இறுதிக்காலத்தை 9 ஆம் பாவமும் குறிப்பிடும்.  இவற்றின் ரகசியங்களை தெரிந்துகொண்டால் ஒருவரின் வாழ்க்கைப்பயணம் தவிப்பாக இருக்காது. இப்பதிவில் நாம் ஒரு மனிதனின் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளையும் ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.

ஜாதகர் 1968 ல் பிறந்த ஒரு ஆண். லக்னம் மோட்ச ராசியான கடகத்தில் அமைந்து அதன் அதிபதி சந்திரன் வளர்பிறையான காலத்தில் பிறந்தவர். இதனால் ஜாதகருக்கு இயல்பாகவே ஒரு அறம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும் எனலாம். லக்னம் பூசம்-3 ல் அமைந்துள்ளது. சந்திரன் பூசம்-2 ல் அமைந்துள்ளது. பூச நட்சதிராதிபதி சனி, கால புருஷனின் மூன்றாவது மோட்ச ராசியான மீனத்தில் மோட்ச காரகன் ராகுவுடன்  அமைந்துள்ளார். இவரது சிந்தனை வாழ்வின் பிற்காலத்தில் எதை நோக்கிய நிலையில் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இவரது ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்னத்திற்கு 3 ல் அமைந்து அதன் அதிபதி புதன் மீனத்தில் அமைந்துள்ளார். மீனத்தின் அதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனையாகி நிற்கிறார். இந்நிலையில் கடக லக்னத்தின் யோகாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு திக்பலத்தை தரும் நிலையில் அமைந்து மீனத்தில் உச்சமாகியுள்ள சுக்கிரனின் சாரம் பரணி-1 பெற்றுள்ளார். செவ்வாய் கடகத்தையும் மற்றொரு மோட்ச ராசியாகிய விருட்சிகத்தையும் பார்வை செய்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.  இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மீன ராசியையே தொடர்புகொள்கின்றன. லக்னத்தின் போக ஸ்தானாதிபதி (3 ஆம் அதிபதி) புதனே கால புருஷனுக்கும் போக ஸ்தானமான மிதுனதிற்கும் அதிபதியான நிலையில் அவர்  லக்னத்தின் மோட்ச பாவமான 12 ஆம் அதிபதியுமாகி, அவர் கால புருஷனின் மோட்ச பாவமாகிய மீனத்தில் அமைகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜாதகரின் பிறப்பு விபரங்களை காண்போம். லக்னமும் லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்ததால் ஜாதகர் ஒரு நல்ல ஆன்மீக  நாட்டம் கொண்ட ஒரு உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தார். பிறப்பு திசை சனி திசை என்பதும், சந்திரன் சனி சாரம் பெற்றதும் இதற்கு காரணமாகும். பிறவியிலேயே சனி திசை வந்து சிரமங்களை சிறு வயதிலேயே அனுப்பவிப்பவர்கள் பிற்கால வாழ்வில் தடம் மாறுவது குறைவு. காரணம் சனி கற்றுத்தரும் பாடங்கள் அப்படி. சனி திசைக்குப்பிறகு ஜாதகருக்கு சனியோடு சாரப்பரிவர்த்தனை பெற்ற (புதன் உத்திரட்டாதி-2, சனி ரேவதி-2) புதன் திசை வந்தது. வித்யா ஸ்தானமாகிய 4ஆம் பாவத்தின் அதிபதியாகிய உச்ச சுக்கிரனால் நீச பங்கப்பட்ட புதன் வித்யா காரகன் என்பதால் சிறந்த கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். ஜீவன காரகன்  சனியோடு புதன் தொடர்பாவதால் கல்விக்கேற்ற வேலையையும் கிடைக்கப்பெற்றார். 7 ஆம் அதிபதி சனியோடு தொடர்பானதால் ஜாதகருக்கு திருமணமும் தக்க வயதில் நடந்தது. பாதகாதிபதியான மனைவி வந்ததும் வாழ்வில் வசந்தகளும் கூடவே  பாதகமான சில மாற்றங்களும் வரவேண்டும். ஆனால் இங்கு பாதகங்கள் ஏதும் பெரிய அளவில்  நடக்கவில்லை. மனைவியும் ஜாதகரைப்போலவே நல்ல ஆன்மீக சிந்தனை வாய்க்கப்பெற்றவராகவே இருக்கிறார். காரணம் சுக்கிரனுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்ப்படுவதால் தனது இயல்பான பலன்களை வழங்க முடியவில்லை.

இரண்டாவதாக ஜாதகரின் மத்திய வயது வாழ்வியலை ஆராய்வோம். ஜாதகருக்கு இப்போது பூர்வ புண்ணிய பலன்கள் செயல்படத்துவங்குகின்றன. 31 ஆவது வயதில் ஜாதகருக்கு புதன் திசை முடிந்து கேது திசை துவங்கியது. ஞான காரகன் கேது தனது காரக அடிப்படையிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் கேதுவின் சாரநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானதாலும் பூர்வ புண்ணிய அடிப்படையில் ஜாதகருக்கான பலன்கள் நடந்தன. செவ்வாய் லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்த்ததால் வீடு, வாகன பாக்கியங்களை குறைவின்றி வழங்கினார். 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கினார். ஞான காரகன் கேது தற்போது கட்டுமான காரகன் செவ்வாய்க்கு தனது காரக அடிப்படையில் தான் விரும்பும் “அடியார்க்கு எளியர்” (சிவன்)  கோவில் கட்டும் சிந்தனையை ஏற்படுத்துகிறார். பொதுமக்களிடம் ஜாதகருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் தனது வீட்டின் ஒரு பகுதியையே கோவிலாக மாற்றுகிறார் ஜாதகர். ஞான காரகன் கேது, பிடிவாதகாரகன் செவ்வாய் தொடர்பால் தன் முயற்சியில் ஜாதகர் பின்வாங்கவில்லை. உரிய காலம் வரும் வரை காத்திருக்கிறார். ஜாதகர் 2௦ வருடங்களாக தனது வீட்டில் வழிபாடுகள் செய்து இப்படி காத்துக்கொண்டுள்ளார். தற்போது 52 வயதான நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை முடிய இன்னும் உத்தேசமாக 5 வருடங்கள் உள்ளது. சுக்கிரன் பாதகாதிபதி என்பதோடு கால புருஷனின் குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் அதுவரை ஜாதகருக்கு தடை நீடிக்கும்.

இறுதியாக ஜாதகரின் கடைசி காலங்களிலாவது அவரது விருப்பங்கள் நிறைவேறுமா எனக்காண்போம். சுக்கிர திசைக்கு அடுத்து வரும் சூரிய திசை ஜாதகரின் எண்ணங்களை நிறைவேற்றும். காரணம் சூரியன் குருவோடு பரிவர்தனையாவதுதான். சூரியனுடன் பரிவர்த்தனையாகி மோட்சகாரகன் ராகுவோடு இணையும் கால புருஷனின் மோட்ச ஸ்தானாதிபதி குரு, ஞானகாரகன் கேதுவின் மகம்-1 ல் நிற்கிறார். இப்படி சூரியன், குரு, ராகு-கேதுகளுடன் ஏற்படும் தொடர்பால் ஜாதகர் கோவில் கட்டுவார். குருவிற்கும் கேதுவிற்கும் ஆன்மீக ரீதியாக இயல்பாக உள்ள புரிதலால் சூரிய திசையில் ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறும். அப்போது கோவில் கட்ட ஜாதகருக்கு அரசின்  பின்புலத்தில் இயங்கும் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பு ஒன்றின் மூலம் உதவிகள் கிடைக்கும் என்பது ஜாதக ரீதியாக தெரிகிறது. சூரிய திசையை அடுத்து வரும் சந்திரன் அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெறுவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் ஜாதகரின்  வாழ்வு சந்திர திசையில் இறையோடு கலந்து நிறைவுபெறும். கடகத்தில் பிறந்து விருட்சிகத்தில் பொங்கி பிரவாகமெடுத்த நதி இறுதியாக மீனத்தில் கடலில் கலக்கும் எனலாம். ஜாதகத்தில் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதகரின் நோக்கத்தை தெளிவாகத்தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Monday, 4 March 2013

படைத்தவனின் மூச்சுக்காற்று ஓசை

வலையில்  (internet) கிடைத்த முத்து: 1







          ஜோதிடத்தின்  மூலம் கடவுளை உணர முயன்று கொண்டிருக்கிறேன் என தலைப்பிட்டு விட்டு நானறிந்த அற்புதங்களை சிறிதேனும் உங்களுக்கும் தர வேண்டுமல்லவா?

         நமது நாசா விஞ்ஞானிகள் நமது சூரிய மண்டலத்தின் ஓசைகளை பதிவு செய்திருப்பதைக் கேட்டு நீங்களும் பிரமிப்படையுங்கள்.

        படைத்தவனின் மூச்சுக்காற்று ஓசையை கேட்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=-MmWeZHsQzs

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.

Saturday, 16 February 2013

அவன்


அவன் ஒரு சிறுவன்
அவனது கை நிறைய பொம்மைகள்
ஒன்றின் தலையை பரிவுடன் கோதிவிடுகிறான்
ஒன்றை முத்தமிடுகிறான்
ஒன்றின் கையை பிடித்துத் திருகுகிறான்
ஒன்றின் காலை ஒடிக்கிறான்.

அவன் ஒரு அன்னை
தன் குழந்தையின் அழுகைக்கு ஓடி வந்து அணைத்துக்கொள்கிறான்
குழந்தையின் சிரமங்களை பாசத்துடன் சரி செய்கிறான்
தலை வாரி ஆடையுடுத்தி அலங்காரம் செய்கிறான்
நல்லிசை இசைக்கிறான்  
நல்ல பாடங்களை சொல்லித்தருகிறான்

அவன் ஒரு பைத்தியக்காரன்
ரோட்டில் வருவோர் போவோரையெல்லாம் தாக்குகிறான்
கண்டதையும் வீசி எறிகிறான்
சகல பாஷையில் திட்டுகிறான்
உணவு கேட்டு கை நீட்டுகிறான்
பெற்றதை ஆர்வத்துடன் உண்ணுகிறான்

அவன் ஒரு வழிகாட்டி
உண்மையான வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்
நேரிய பாதையில் நடக்கக் கோருகிறான்
பாதையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறான்
பயணத்தில் எதிர்படும் அற்புதங்களை கவனிக்ச் சொல்லுகிறான்
சுகமான பயணத்துக்கு துணை நிற்கிறான்

யாரிவன்?
அவனது பெற்றோர்கள் யார்?
அவன் எந்த ஊரைச் சார்ந்தவன்?
ஏனிப்படி நடந்து கொள்கிறான்
அதனால் அவனுக்கு என்ன பலன்?
அவன் பெயர் என்ன?

அவன் ஓர் அனாதை
அவனுக்கு பெற்றோர்கள் இல்லை
ஆகவே அவன் ஓர் பரதேசி
அவனுக்கு பிடித்த செயல்களை அவன் செய்கிறான்
அதனால் நம் கர்மங்களை அவன் கழிக்கிறான்
அவன் பெயர் இறைவன்!


ஆக்கம்
பழனியப்பன்

பிற்சேர்க்கை:

நாலாயிரத்தில் மூழ்கி
நம்மாழ்வாரில் பிரம்மித்தபோது
நான் எழுதிய கவிதை இது 

பிறிதொரு நாளில் புத்தகமாகலாம்
பிடித்திருந்தால்
பின்னூட்டம் இடுங்கள்!

Sunday, 27 January 2013

ஆண்டவனுக்கு ஒரு அப்ளிகேஷன்


           
                

                 என்னை செம்மைப்படுத்த நீயும்
                 உன்னை உணர்ந்து கொள்ள நானும்
                 முயன்று கொண்டிருக்கிறோம்
                 உனது அருளால் எனது நோக்கம் நிறைவேற
                 உத்தமனே நீ அருள்வாய்!
                                      -ஆக்கம் 
                                       பழனியப்பன்.