Friday 28 May 2021

ஒரு ஜாதகம் மற்றொரு ஜாதகத்தை எப்படி பாதிக்கிறது?

 

ஒருவரது ஜாதக அமைப்பே அவரது வாழ்க்கைச் சூழலை தீர்மானிக்கிறது. வேலை, குடும்பம், உறவுகள் என இப்படி அனைத்தையும் ஒருவரது ஜாதகத்தை அலசுவதன் மூலம் தெளிவாக அறியலாம். அதனால் ஒரு ஜாதகர் தனது வாழ்வில் எதிகொள்ளும் மற்றொரு ஜாதகரை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்பதே அப்பட்டமான உண்மை.


 
கீழ்க்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள்

தனபால் சென்னையில் பிறந்தவர். லக்னப் புள்ளியும் 2 ம் அதிபதி குருவும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமதிபதி சுக்கிரனும் வாக்கு காரகனும் 8, 11 க்கு உரியவரான   புதனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர்.

குரு, சூரியன் உள்ளிட்ட 5 கிரகங்கள் மாந்தியோடு லக்னத்தில் அமைந்துள்ளனர். எனவே ஜாதகர் தனித்து இயங்குபவர் . செவ்வாய் லக்னத்தின்  சதுர்த்த கேந்திரத்தில் சனியின் வீட்டில் கும்பத்தில் அமைந்துள்ளது. செவ்வாய் 10 ஆமிடமான சிம்மத்தை பார்க்கிறது. செவ்வாய்க்கு 10 ல் லக்னத்தில் சூரியன் உள்ளது. தொழில் ஸ்தானமான 10 க்கு 10ல் ரிஷபத்தில் சனி அமைந்து 10 ஆமதிபதி சூரியனை பார்க்கிறது. சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்வை செய்கின்றனர்.

மேற்கண்ட அமைப்பின் பலனாக முக்கியமாக சனி செவ்வாய் தொடர்பின் காரணமான  ( சட்டம் ஒருங்கு நீதித்துறை) தொழில் புரிகிறார் ஜாதகர். .

தனபாலுக்கு கடந்த  29.11.2007ல்  திருமணம் சூரிய திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

லக்னத்தில் பாவக்கிரகமான சூரியன் எதிரியும் மற்றொரு பாவியுமான சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து 8, 11 அதிபதி புதன், நீச நிலை பெற்ற பாக்யாதிபதி சந்திரன் இவர்களோடு குடும்ப புத்திர அதிபதியான குரு , களத்திர காரகன் சுக்கிரன் ஆகியோரையும் கட்டுப்படுத்துகிறார். இதில் சூரியனை தவிர இதர நான்கு கிரகங்களும்,  லக்னம் விழுந்த புள்ளியும் 8, 11 அதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

குடும்ப காரகன் குரு குடும்ப பாவமான தனுசுக்கு விரையத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானமான மீனத்திற்கு திரிகோணத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர பாவமான மீனத்திற்கு 3,6,8  மற்றும் மீனத்திற்கு பாதகாதிபதி புதனுடனும் இணைந்துள்ளார்.

தனபால் குரு ஒரையில்தான் பிறந்துள்ளார். குரு மேற்கண்ட அமைப்பில் உள்ளதும் நவாம்சத்தில் நீச மானதும் ஜாதகர் தன, குடும்ப புத்திர வகையிலான பாதிப்புகளை அடைய வேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும்.

லக்னத்தில் அமைந்த கிரக கூட்டில் சந்திரன் நீச நிலை பெற்று ஆமதிபதி சனி வக்கிரம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் கடகத்திற்கு பாதகதிலும் லக்னத்திற்கு 7 லும்  அமைந்து சனி செவ்வாய் தொடர்பு ஆம் இடத்திற்கு ஏற்படுவதும் முந்தைய பத்தியில் குறிப்பிட்ட பாதிப்புகளை ஜாதகர் அடைய ஜாதகரின் தாயார் காரணமாக இருப்பார் என அளவிடலாம். 

சந்திரனின் வீடான கடகத்தில் கேது நின்று கடகம் சனி பார்வை பெறுவது இதை உறுதி செய்கிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்து நீச பங்கம் ஏற்படுத்த முயன்றாலும் சந்திரனும் செவ்வாயும் சந்திரனின் வீடும் சனி பார்வை பெற்றதால் நீச பங்கம் தடைபடுகிறது. சந்திரனின் வீட்டில் ஒரு வக்கிர கிரகம் கேது, சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணியில் ஒரு வக்கிர கிரகம் சனி அமையும் நிலைமை ஒரு ஜாதகனுக்கு மன நிலையிலும் தாயார் வகையிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தனபாலுக்கு  29.08.2008 அன்று ஓர் குழந்தை பிறந்தது. அஷ்டமாதிபதி புதனின் சாரம் பெற்ற நீச நிலையில் அமைந்த  சந்திர திசை சந்திர புக்தியில் ஒரு பெண் மகள் ரூபா பிறந்தாள்.



ரூபாவின் லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானாதிபதியுமான  குரு லக்னத்திலேயே வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளார். தந்தையை குறிக்கும் பித்ருகாரகன் சூரியன் ஆட்சி பெற்று பாவியான சனியுடன் இணைவு பெற்று  பாவ கர்தாரி யோகமும்  பெற்று நீசன் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது. சுக்கிரனும் சூரியனும் சார பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் சனியும் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கிரக யுத்தத்தில் செவ்வாய் அதிக பாகை பெற்று வெற்றி பெற்றுவிட்டதால் புதன் சுக்கிரன் இணைவு காரணமான நீச பங்கம் இங்கு சுக்கிரனுக்கு செயல்படமுடியாமல் போகிறது. 

ரூபா பிறந்த ஓரை நாதன் சுக்கிரனாகி, சுக்கிரன் நீசம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சூரியனின் சாரம் பெற்று நிற்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓரை நாதன் சூரியன் சாரத்தில் நிற்பது சூரியனின் அம்சமான தந்தையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தை ரூபாவின் லக்ன புள்ளி கேதுவின் மூலமாகி சூரியனும் சந்திரனும் ஆட்சி பெற்றாலும் இருவருக்குமிடையில் கேது அமர்ந்தது ஆகியவை குழந்தை  பிறந்தவுடன் பெற்றோருக்கிடையே பிரிவினை ஏற்படும் என்பதை குறிக்கிறது.

மகள் ரூபா பிறந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக தனபால் தனது மனைவியையும் குழந்தையையும் பிரிந்தார். மகளை தந்தை பார்க்க மறுத்தார் . பிரிவிற்கு தனபாலின் தாயார் (நீச சந்திரன்) வழிகோலியுள்ளார். தனபால்  தனது தொழிலின் மூலம் எளிதாக வழக்குத்தொடர்ந்து சட்ட ரீதியாக குடும்பத்தை மகள் பிறந்த சில மாதங்களிலேயே பிரிந்துள்ளார்.

தனபாலின் ஜாதகத்தில் அவர் பிறந்த துவிதியை திதிக்குரிய திதி சூனிய ராசிகள் தனுசு மீனமாகி திதி சூன்யாதிபதி குரு சூரியனுடன் இணைந்து திதி சூனிய தோஷத்திலிருந்து மீண்டாலும் குரு அஷ்டமாதிபதி புதன் சாரம் பெற்றது.  தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

ரூபா பிறந்தது சதுர்த்தசி திதியில். எனவே மிதுனமும் கன்னியும் திதி சூனிய ராசிகளாகவும் புதன் திதி சூனியம் பெற்ற கிரகமுமாகிறது. இங்கு செவ்வாயுடனான யுத்தத்தில் தோல்வியுற்று தனது உச்ச வலுவும் பயனற்றுப்போனதன் காரணமாக திதி சூனியம் புதனுக்கு குறைவாகவே செயல்பட்டாலும் தோல்வியுற்ற லக்ன பாதகாதிபதி புதன் சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதால் ஏற்கனவே சனி கேதுவால் பலவீனப்பட்டுள்ள சூரியனை மேலும் பாதிக்கச் செய்வதை அறிய முடிகிறது.

தனபால் ஜாதகத்தின் அஷ்டமாதிபதி புதனின் நட்சத்திரத்தில் புத்திர காரகன் குரு. ரூபாவின் ஜாதகத்தில் லக்ன பாதபாதிபதியும் தந்தையின் அஷ்டமாதிபதியுமான புதன் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் நிற்பது ஒருவரது ஜாதகம் மற்றவருக்கு பாதகத்தை செய்யும் என்பதை குறிப்பிடுகிறது.

கவனிக்க:
ஜாதகங்கள் ஜோதிட ஆய்வு நோக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. யாரையும் குற்றம் கூறும் நோக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதை அறியவும். ஜாதகங்களில் உண்மைப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜாதகங்கள் திருக்கணித அடிப்படையில் பூச பக்ஷ அயனாம்சப்படி ஆய்வு செய்யப்பட்டவை.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501. 

பி.கு: மீள் பதிவு.

Tuesday 18 May 2021

ஆத்மா காரகனும் தாரா காரகனும்

 ஜோதிடம் ஒரு கடல் அதனால்தான் எங்களது ஜோதிட பகிரி குழுவுக்கு ஜோதிட சாகரம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஒரு ஜாதகத்தை அலச பல்வேறு முறைகளை ஜோதிடத்தில் பயன்படுத்துவோம். அதில் ஒன்று ஜெயமினி முனிவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ள ஆத்ம காரகன் மற்றும் தாரா காரகன் நிலைகளைக்கொண்டு ஆராய்வது. இவர் பிரகத் ஜாதகத்தை இயற்றிய வராக மிகிரருக்குப்பின் வந்த முக்கியமான ஜோதிட அறிஞர். 


ஜனன ஜாதகத்தில் முப்பது பாகைகள் கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் அதிக பாகைகள் சென்றுள்ள கிரகம் ‘ஆத்ம காரகன்’ எனப்படும். மிகக்குறைந்த பாகை சென்றுள்ள கிரகம் ‘தாரா காரகன்’ எனப்படும். தற்போது இந்த முறையைக்கொண்டு ஜாதகத்தை அலசுவது குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் தொடர்புடையதான கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் நின்ற பாகையைக்கொண்டு ஜாதகத்தை அலசும் ஜோதிட ஆய்வாளர்கள் “பாகை முறை ஜோதிடம்” என்ற வகையில் தனித்துவம் பெற்றுத்திகழ்கின்றனர். இந்த முறையில் கிரகங்கள் வெவ்வேறு ராசிமண்டலங்களில் இருந்தாலும் தங்கள் நிற்கும் பாகைகளுக்கு 3 பாகைகள் அளவில் நெருக்கமாக இருக்கும் கிரகங்கள் கிரகக்கூட்டணிபோல  ஒருங்கிணைந்து செயல்படும் என்பது இந்த முறையின் முக்கிய அம்சம்.  

இந்த பாகை முறை ஜோதிட அலசலில்  ஆத்ம காரகன் ஜாதகரை முன்னின்று வழிநடத்தி ஜாதகரின் கர்மங்களை நிறைவேற்ற உறுதுணை புரியும். இதற்கு எதிர்மாறாக தாரா காரகன் ஜாதகரின் கர்மங்களில் இடர்பாட்டை எற்படுத்தி ஜாதகரை தவறான பாதையில் வழிநடத்தும். எப்படி ஆயினும் இவ்விரு கிரகங்களும் ஜாதகரின் வாழ்க்கைப்பயணத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையாகாது.

பின்வரும் சில ஜாதகங்கள் இந்த வகையில் இவ்விரு கிரகங்களின் செயல்பாடுகளை எடுத்துக்காட்ட அடியேன் ஆராய்ந்தது.

பகவான் ரமண மகரிஷியின் ஜாதகம் இது.



30.12.1879 - பாண்டிச்சேரி
ஜாதகத்தில் ஆத்ம காரகன் சந்திரன் – 29.23 பாகை.
தாரா காரகன் சுக்கிரன் – 1.36 பாகை.

சந்திரன் ஞான காரகன் கேதுவுடன்  நின்று ஆன்மீகத்தை நோக்கிய திசையில் ஜாதகரை உலகம் போற்றும் உத்தம குருவாக உயர்த்தியது. தாரா காரகன் சுக்கிரனுக்கும் குடும்ப ஸ்தானமான துலாத்திற்கும் 3, 8 க்கு உரிய செவ்வாய் பார்வை பெற்றுள்ளது. மேலும் இல்லற வாழ்வை குறிக்கும் 2,4,7,8,12 ஆகிய பாவங்களும் அதன் அதிபதிகளும் கெட்டுள்ளன. இந்நிலையில் கேதுவுடன் சேர்ந்துவிட்ட ஆத்ம காரகன் சந்திரன், சுக்கிரனின் இல்லற எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டு ஜாதகரை தனது பாதைக்கு திருப்பினார்.

அடுத்து ஹிட்லரின் ஜாதகம்.





20.04.1889 - ப்ராணா, ஆஸ்திரியா.
ஆத்ம காரகன் சுக்கிரன் – 25.32 பாகை.
தாரா காரகன் புதன் – 4.24 பாகை.

ஹிட்லரின் ஜாதகத்தில் ஆத்ம காரகன் சுக்கிரன் சுய சாரத்தில் நின்றாலும் பாவிகளுடன் இணைந்து மறைவு ஸ்தானத்தில் வலுவிழந்துவிட்டது. லக்னாதிபதியான தாரா காரகன் புதனுக்கும் இதே நிலைதான். மேலும் புதன் அஸ்தங்கமாகிவிட்டது.  இங்கு ஆத்ம காரகனாக சுக்கிரன் இருந்தாலும் விபரீத ராஜ யோகம் பெற்று வலுவாகிவிட்ட உச்ச சூரியன் மற்றும் ஆட்சி செவ்வாயை மீறி வக்கிரமடைந்த ஆத்ம காரகன் சுக்கிரன் தனித்து செயல்பட முடியாது என்பதே உண்மை. எனவே உலகை அழிக்கும் குரூரத்தனம் சூரிய செவ்வாயின் நிலையால் ஜாதகருக்கு ஏற்பட்டது.

அடுத்து இந்திய அரசியல்வாதிகளை அலறவிட்ட மக்களின் மதிப்பிற்குரிய நமது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு. திருநெல்லை நாராயண ஐயர் சேஷன். (T.N.சேஷன்) அவர்களின் ஜாதகம்.





14.05.1933 - பாலக்காடு
ஆத்ம காரகன் சந்திரன் – 27.02 பாகை.
தாரா காரகன் சூரியன் - ௦.52 பாகை

அரசு வகை யோகங்களை குறிக்கும் 5 ஆமிட அதிபதி சந்திரன் ஆத்ம காரகனாகி கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தில் நிற்கிறது. தாரா காரகனாகிய சூரியன் தனது வீட்டிற்கு தசம கேந்திரம் பெற்று, பாவத்தில் வருமான வழியை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் நின்றதால் அரசுப்பணியில் உயர்ந்த நிலை.  லக்னமும் ராசியும் குருவினுடையதாக அமைந்துவிட்டதால் நல்ல விஷயத்தில் உறுதித்தன்மை. எதிர்ப்புகளைக்குறிக்கும் 6 ஆமிடமான சூரியனின் சிம்ம ராசியில் லக்ன & ராசி அதிபதி குரு நின்றதால் அரசு வகையில் கடும் எதிர்ப்புகளுக்குடையே பணியாற்றினார்.

குருவின் லக்னத்தையும் ராசியையும் பெற்றதால் உணவு விஷயத்தில் தாராளம். (ஓய்வு பெற்ற பிறகு சமையல் கலை பற்றி விகடனில் தொடர் ஒன்று எழுதினார்.)

பாவத்தில் புத-ஆதித்ய யோகம் – மிகச் சிறந்த ஜோதிடர். (ராஜீவ் காந்தியின் மரணத்தை முன்கூட்டியே கணித்தவர். காஞ்சி மகா பெரியவரின் வேண்டுதலுக்கிணங்க ராஜீவ் காந்தியை எச்சரிக்கை செய்து TOP MOST URGENT” என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதினர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு ஒரு வாரம் கழிந்த பின் உரை பிரிக்கப்படாத அக்கடிதம் ராஜீவின் மேசையிலிருந்து கைப்பற்றப்பட்டது.)

ஐந்தாமதிபதி சந்திரன் ஐந்துக்கு ஆறில் மறைவு.. குரு லக்னத்திற்கு ஆறில் மறைவு. மகத்தான இம்மனிதரின் குழந்தைப் பேரின்மையை இது குறிக்கிறது.

தற்போது யாருக்கும் பாரமின்றி முதியோர் இல்லத்தில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார். 

அடுத்து உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் உள்ள பில் கேட்சினுடையது.



இது ஒரு விசேஷ ஜாதகம்.


28.10.1955 - சியாட்டில், அமெரிக்கா.
ஆத்ம காரகன்  சனி – 29.29 பாகை
தாரா காரகன் குரு – 05.40 பாகை

ஆத்ம காரகன் சனி பொதுவான அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 5 ஆமிடத்தில் உச்சம் அது மட்டுமா அவரே ஜீவன காரகன், ஆயுள் காரகன், திடீர்  அதிஷ்ட வாய்ப்புகளை குறிக்கும் 8 ஆமிடாதிபதி. பாக்யாதிபதி போன்ற பல்வேறு பொறுப்புகளை இந்த ஜாதகத்தில் ஏற்றுள்ளார். அத்தோடு அவர் 8 க்கு  8 ஆமிடமான மூன்றாமிடாதிபதியான  சூரியனை நீசத்திலிருந்து விடுவித்து நீச பங்க ராஜ யோகத்தை ஏற்படுத்துகிறார். மூன்றாமிடம் வெற்றியைக் குறிப்பிடுமிடம்  என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவர் தொட்டதெல்லாம் வெற்றியாகின என்பதை அனைவரும் அறிவோம். 

சனி குருவின் விசாக நட்சத்திரத்தில் உச்சமானதால் தாராகாரகன் குருவும் குருவின் வீட்டில் நிற்கும் தன ஸ்தானாதிபதி சந்திரனும் சேர்ந்தே வலுவடைந்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்.  சுக்கிரன் ஆட்சி வீட்டில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளார். எந்த கிரகமும் அஸ்தங்கமடையவில்லை. இந்த ஜாதகத்தின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம் என்றாலும் இங்கு ஆத்ம காரகன் சனி தாரா காரகன் குருவின் நட்சத்திரத்தில் உச்சம் பெற்று இருவரும் உச்ச பலனை ஜாதகருக்கு தரவேண்டிய நிலையில் அமைந்துள்ளனர் என்பது இந்த ஜாதகத்தில் உள்ள அபூர்வமான மற்றும் விசேஷமான ஒரு அமைப்பாகும்.

கால மாற்றத்தில் ஜோதிடமும் பல்வேறு நவீன யுக்திகளை கையாள்கிறது. பண்டைய முறையானாலும் தற்போது இந்த வகை ‘பாகை முறை ஜோதிடம்’ சிறப்பான பல கணிப்புகளுக்கு வழி வகுக்கிறது என்றால் அது மிகையல்ல.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.

அலைபேசி எண்: 8300124501

பி.கு. மீழ்பதிவு 

Sunday 9 May 2021

தத்துக்குழந்தை யோகம்!

 


மனித வாழ்வின் பொருளே இயற்கை வகுத்துள்ள நியதிப்படி நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரங்களை கண்டறிந்து அதில் வெற்றி பெற்று, பிறகு நமக்கான ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கொண்டு, நமது சந்ததியை விருத்தி செய்து, அற  வழியில் நடந்து நாம் வாழும் பூமிக்கும் சமுதாயத்திற்கும் சேவை செய்து, இறுதியாக நாம் வந்த இயற்கையுடன் இரண்டற மீண்டும் கலந்து விடுவதுதான். இயற்கையின் நியதியை மீறி செயல்பட்டால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாகாது. அதனால்தான் இயற்கை நியதிகளுக்கு எதிராகவும் குடும்ப வாழ்வுக்கு எதிராகவும் துறவறத்தை போதித்த நமது நாட்டிலேயே தோன்றிய சமண, பௌத்த மதங்கள் தோல்வியை தழுவின. இந்து மதம் இல்லறமே நல்லறம் என்கிறது. இல்லறத்தில் இருந்துகொண்டே சமுதாயத்தொண்டு செய்ய வலியுறுத்துகிறது. இயற்கையின் நியதியில் எந்த இடத்தில் தடுமாறினாலும் வாழ்வு நிறைவானதாக இருக்காது. பொருளாதாரத்தை மட்டுமே பின்தொடர்ந்து செல்பவர்களுக்கு குடும்ப வாழ்வில் பாதிப்பிருக்கும்.. குடும்ப வாழ்வில் மட்டுமே திளைப்பவனுக்கு பொருளாதார முன்னேற்றம் குறைவு. இதில் தனி ஒருவரின் குடும்ப வாழ்வு முழுமையடைவது அவரது சந்ததி விருத்தியில்தான். அதனால்தான் குழந்தை இல்லாதோருக்கு சொர்க்கத்தில் இடமில்லை என்றொரு கூற்று உருவானது. புத்திரப்பேறற்றவர்களிடம் ஆசி பெறுவது கூட பயனற்றது என்று கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் அன்றைய சமுதாயம் புத்திரப்பேறு இல்லாத ஆண் மட்டும் சந்ததி விருத்தியின் பொருட்டு இரண்டாவதாக மற்றொரு பெண்ணை மணந்து  புத்திரப்பேறை  பெறலாம் என்று பெண்ணுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்திருக்கிறது. ஏனெனில் தனது சொத்துக்காக தனது சந்ததியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஆணுக்கு இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுவரை சொத்து உரிமை ஆணுக்கு மட்டுமே இருந்ததன் பொருட்டே இத்தகைய கருத்துக்கள் எழுந்துள்ளதை உணரலாம். அத்தகைய கருத்துக்களை முன் வைத்தவர்கள் ஆண்கள் என்பதும் மற்றொரு காரணம். இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிர்ப்புகுரல்கள் எழும்பிய காலகட்டத்தில் ஒருவரது குடும்ப வாழ்வு முழுமையடைய ஒருவர் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்றொரு நிலைப்பாடு பிற்பாடு ஏற்பட்டது. இன்றைய பதிவில் நாம் சந்ததி இல்லா தம்பதியரில் தத்துக்குழந்தை அமைவது எத்தகைய ஜாதகத்தினருக்கு என்பதைப்பற்றி ஆராயவிருக்கிறோம். இது ஒரு உடலியக்கம் சார்ந்த விஷயம் என்பதால் மருத்துவ ரீதியாக ஆராய வேண்டி பாகை அடிப்படையில் இப்பதிவை அணுகியுள்ளேன்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1985 ல் பிறந்த ஒரு ஆண். இவரது ஜாதகத்தில் வீரிய ஸ்தானாதிபதி சந்திரன், விரையாதிபதி செவ்வாய், தடைகளுக்குரிய ராகு ஆகிய மூவரும் 3 பாகை நெருங்கிய நிலையில் அமைந்துள்ளனர். இப்படி வெவ்வேறு ராசிகளில் 3 பாகை இடைவெளிக்கும் அமையும் கிரகங்களும் கிரகச்சேர்க்கையாக நவீன ஜோதிடவியலில் குறிப்பாக மருத்துவ ஜோதிடவியலில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன  சந்திரனும் செவ்வாயும்  நின்ற மீனத்தின் அதிபதி குரு நீசமாகியுள்ளார். பாகை அடிப்படையில் பார்க்கையில் போக ஸ்தானாதிபதி (மூன்றாமதிபதி) சந்திரனும் வீரியத்திற்கு காரகன் செவ்வாயும் பாகை அடிப்படையில் ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்திர காரகன் குருவும் பாதக ஸ்தானத்தில் நீசம் பெற்றதால் ஜாதகருக்கு குழந்தை பெற உடலில் போதிய உயிரணுக்கள் இல்லை என்ப்பது தெளிவாகிறது. 5 ஆமதிபதி புதன் 8 ஆமிடத்திலிருந்து திசை நடத்துகிறார். இது புத்திரப்பேறுக்கு சிறப்பல்ல. மேலும் புத்திர காரகன் குரு 5 ன் விரையாதிபதி சூரியனோடு பாதக ஸ்தானத்தில் நீசம் பெற்று அமைந்த நிலையில் அலி கிரகங்களான கேது மற்றும் சனியின் 3 ஆம் பார்வையை பெறுவது கடும் புத்திர தோஷமாகும்.  ஜோதிடத்தில் 5 ஆம் பாவம் புத்திரம் என்றால் 8 ஆம் பாவம் தத்துக்குழந்தையை குறிக்கும் பாவமாகும். இதனால் 5 ஆமதிபதி 8 ல் நின்று திசை நடத்துவதால் ஜாதகர் தத்துக்குழந்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதா? என பார்த்தால் தத்துக்குழந்தையை குறிக்கும் 8 ஆமதிபதி நீசமானதால் ஜாதகருக்கு ஒரு குழந்தையை தத்தெடுக்கும் எண்ணமே இல்லை. மனைவிக்கு புத்திர பாக்கியம் உண்டா என ஆராய்ந்தால் 7 ஆமிடம் பாதிக்கப்பட்டு 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சந்திரனுடன் நெருங்கிய பாகையில் அமைந்து இவ்விருவருக்கும் நெருங்கிய பாகையில் ராகு அமைந்ததால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இதனால் இவரது மனைவிக்கும் புத்திர பாக்கியத்தில் பாதிப்பு உள்ளது தெளிவாகிறது. இவருக்கு புத்திர பாக்கியம் தத்து உட்பட அனைத்து வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

இரண்டாவது ஜாதகம் கீழே.


இந்த ஜாதகரும் ஒரு ஆண்தான் 1976 ல் பிறந்தவர். இவருக்கு சந்திரன் 6 ல் நீசமாகி லக்னாதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று திசை நடத்துகிறார். 5 ல் ராகு உள்ள நிலையில் ஜாதகருக்கும் புத்திரப்பேறு கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிய ஜாதகருக்கு குழந்தை இல்லை. செவ்வாய் லக்னாதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். இங்கு பரிவர்த்தனை 1 & 11 என ஆகிறது ஒரு சிறப்பு. பரிவர்த்தனைக்குப்பின் செவ்வாய் புதனின் பாகை 21.21 க்கு வந்து 5 ஆமதிபதியான உச்ச சுக்கிரனின் சாரம் பரணி-3 பெறுகிறார். மேலும் செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு-கேதுக்களும் நெருங்கிய பாகையிலே அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இவற்றை பாகை வரிசைப்படி கிரகச் சேர்க்கையாக எடுத்துக்கொள்ளலாம். ஜாதகத்தில் பரிவர்த்தனை மூலம் உச்ச சுக்கிரன் தொடர்பு பெற்று வலுவடைந்த செவ்வாய்  நீச சந்திரனை 8 ஆம் பார்வையாக பார்த்து  நீச பங்கப்படுத்துகிறார். 5 ல் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு சுக்கிரனின் உச்ச வலுவை தனதாக்கிக்கொள்கிறார். சூரியனில்  அஸ்தங்கமாகாமல்  குருவோடு இணைந்து 5 ஆமதிபதி சுக்கிரனின் உச்ச வலுவை ஏற்றுக்கொண்ட செவ்வாய் திசா நாதன் சந்திரனை பார்ப்பதால் சந்திரனுக்கு வலு அதிகமாகிறது. சந்திரன் இந்த ஜாதகத்தில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனானது கூடுதல் சிறப்பு. மேலும் பரிவர்தனைக்குப்பின் குருவின் சாரம் புனர்பூசம்-1 க்கு லக்னாதிபதி புதன் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் புதனின் கேட்டை-3 ல் நிற்கும் திசா நாதன் சந்திரனால்  புத்திரப்பேறை அளிக்க வாய்ப்பு உருவாகிறது. இந்நிலையில் 8 ஆமதிபதி சனி 2 ல் அமைந்து தனது 1௦ ஆம் பார்வையாக 11 ஆமிட கிரகங்களை பார்ப்பது புத்திர வாய்ப்பை குறைக்கவே செய்கிறது என்பதோடு சனி கால புருஷ 5 ஆமதிபதியான உச்ச சூரியனுக்கு பாகை அடிப்படையில் நெருங்கி நிற்கிறார். இப்படி பாகை அடிப்படையில் சனி சூரியன் இணைவதும் புத்திரப்பேறுக்கு பெரும் தடையாகும். இது புத்திர வாய்ப்பை குறைத்து குடும்பத்தில்  தத்துக்குழந்தையை ஏற்றுக்கொள்ளும்  நிலையை உருவாக்குகிறது. இதனால் ஜாதகர் குழந்தையை தத்து எடுக்க வேண்டி விண்ணப்பித்தார். கூடுதலாக மேற்கண்ட கிரகங்களோடு பாகை நெருக்கம் பெற்று 5, 11 அமைந்த ராகுவாலும் கேதுவாலும் புத்திரத்தடை ஏற்படுவதால் ஜாதகர் செயற்கை முறை கருவூட்டலை நாடுகிறார். புத்திர பாவங்களோடும் காரக கிரகங்களோடும் பாகை அடிப்படையில் நெருகிய தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களின் அமைப்பால் சில தோல்விகளுக்குப்பிறகு செயற்கைக்கருவூட்டல் வெற்றி பெற்று ஜாதகருக்கு சந்திர திசையில் பரிவர்தனைக்குப்பின் குரு சாரம் புனர்பூசம்-1 பெறும் புதன் புக்தியில் 5 ஆமதிபதி சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது அந்தரத்தில் கடந்த 2021 ஆண்டு துவக்கத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பாகை அடிப்படையில் சேர்க்கை பெற்றதாலும் செயற்கைக்கருவூட்டல் என்ற தங்களது காரகம் பயன்படுத்தப்படுவதாலும் ராகு-கேதுக்கள் புத்திரம் அமைய உதவியுள்ளன.  தற்போது சந்திர திசையின் அதே புதன் புக்தியில் குடும்ப பாவத்தில் நிற்கும் 8 ஆமதிபதி சனி அந்தரத்தில் தத்துக்குழந்தை வாய்ப்பும் வந்தது. தத்துப்புத்திரத்தையும் தங்களது குழந்தையாக ஏற்றுக்கொண்டு வளர்க்கவே ஜாதகர் எண்ணினார் என்றாலும் தங்களைப்போல் புத்திரப்பேறுக்காக தவிக்கும் மற்றொரு தம்பதிக்கு அந்த வாய்ப்பு செல்லவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தத்துக்குழந்தை வாய்ப்பை ஜாதகரது குடும்பம் மறுத்தது.

கீழே மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


மேற்கண்ட ஜாதகி 1974 ல்  பிறந்தவர். ஜாதகிக்கு 20 வயது முதல் 37 வயது வரை புதன் திசை. ஜாதகிக்கு புதன் திசையில் ராகு புக்தியில் 3௦ வயதில் திருமணம் நடந்தது. ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரனும் 7 ஆமதிபதி செவ்வாயும் விரையாதிபதி புதனும் தங்களுக்குள் 3 பாகை நெருக்கத்தில் அமைந்துள்ளன. இதனால் ஜாதகியும் கணவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். புதன் காதலை குறிக்கும் கிரகமாவதால் புதன் திசையில் காதல் திருமணம். மிதுனத்தில் 5 ஆமதிபதி சனி இருப்பதால் பாக்கிய ஸ்தானமான மிதுனத்தின் வேலையை புதன் செய்ய மாட்டார். தான் நிற்கும் 12 ஆமிடமான கன்னியின் வேலையை மட்டுமே செய்வார். இதனால் 5க்கு 8 ஆம் பாவமான கன்னியில் இருந்து திசை நடத்தியதாலும் பாகை அடிப்படையில் 5 ஆமதிபதி சனிக்கு மிகுந்த இடைவெளியில் புதன் அமைந்ததாலும் புதனின் திசையில் ஜாதகிக்கு புத்திரம் அமையவில்லை. அதே சமயம் கணவரை குறிக்கும் செவ்வாய், ஜாதகியை குறிக்கும் சுக்கிரன் மற்றும் கற்பப்பையை குறிக்கும் சந்திரன் ஆகியோரோடு அலி கிரகமான புதன் நெருங்கிய பாகை பெற்றதால் கணவன் மனைவிக்கு காதலை தருகிறது ஆனால் புதன் ஒரு அலிக்கிரகம் என்பதால் புத்திரத்தை தர இயலவில்லை. புதன் திசைக்கு அடுத்து வந்த கேதுவும் 8 ஆமிட தொடர்பு பெற்றதால் புத்திரப்பேற்றை தரவில்லை. ஆனால் 8 ல் அமைந்த கேது, பாகை அடிப்படையில் பாக்ய ஸ்தானமான 9 ல் அமைந்த 5 ஆமதிபதி சனியோடும் 5 ல் வக்கிரம் பெற்று 5 ஆமதிபதி சனியை பார்க்கும் குருவோடும் 3 பாகை நெருக்கமாக அமைந்துள்ளார். இப்படி 5 அமைந்த புத்திர காரகன் குரு, 5 ஆமதிபதி சனி மற்றும் 8 ஆமிட கேது இவர்களுக்கிடையேயான பாகை முறை தொடர்பால் ஜாதகியும் அவர்தம் கணவரும் தத்துக்குழந்தையை ஏற்க முடிவு செய்கின்றனர். இதன் அடிப்படையின் 8 ல் நின்ற கேது திசையில் 5 ல் நின்ற குரு புக்தியில் ஜாதகியின் 41 ஆவது வயதில் இவர்களுக்கு தத்துக்குழந்தையாக ஒரு ஆண் குழந்தை கிடைக்கப்பெற்றது.  

மீண்டும் ஒரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday 2 May 2021

வட்டித்தொழிலில் வளர்ச்சி உண்டா?

ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின் அதிபதி ஆவது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் குரு தனது மூலத்திரிகோண வீடான தனுசுவிற்கு மறைவதே ஒரு வகையில் பொருளாதார சிரமங்களை குறிக்கும். அப்படி குரு தனுவிற்கு 6, 8, 12 ல் மறைந்தால், லக்னத்திற்கு மறையாமல் இருப்பது நன்மை. இரண்டு விதங்களிலும் குரு சாதகமாக அமையாவிடில் அந்த ஜாதகர் பொருளாதார வகையில் பாதிக்கப்படுவார். குறிப்பாக லக்னத்தை குரு பார்ப்பது பொருளாதார வகையில் மட்டுமல்ல ஏனைய அனைத்து  வகையிலும் ஒரு மேம்பட்ட நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவமும் அதன் எதிர்பாவத்தை சார்ந்தே இயங்குகிறது. உதாரணமாக கணவன்-மனைவி, வியாபாரி-வாடிக்கையாளர், முதலாளி-பணியாள். குருதான் கால புருஷனுக்கு விரைய பாவம் மீனத்தின் அதிபதியும் ஆகிறார். செலவிற்கு பணம் இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் மீனத்தின் எதிர்பாவம் கன்னி கால புருஷ தத்துவப்படி கடன் பாவம் எனப்படுகிறது. ஒருவர் உழைக்காமல் பொருளீட்டுவதை உபய ராசிகள் நான்கும் குறிப்பிடும். உபய ராசிகளுக்கு அதிபதிகள் குருவும் புதனும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் நாம் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபட ஜாதக ரீதியான அமைப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் கடனை குறிக்கும் பாவம் 6 என்றால், கடனை வசூலிப்பது 5 ஆம் பாவமாகும். எனவே கடன்னை வசூலிப்பதை 5 ஆம் பாவமும் அதையே தொழிலாக செய்ய 5 மற்றும் 1௦ ஆம் பாவங்களும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகரான ஆண் வங்கிகளுக்கு கடன் வசூல் செய்து தரும் நிறுவனத்தை (Loan collection agency) நடத்தி வருபவர்.  சந்திரனும் 5 ஆம் பாவமும் ஒருவரது எண்ணங்களையும் ஆசைகளையும் குறிப்பிடும். அது 1௦ ஆம் பாவ தொடர்பு பெறுவது எண்ணத்தையே தொழிலாக்குவதை குறிப்பிடுகிறது. ஜோதிடத்தில் கேது கடனை நேரடியாக குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். கேது லக்னத்திற்கு 2 ல் அமைந்துள்ளது கடனை முன்னிட்டு வருமானம் பெறுவதை குறிக்கிறது. தடைகளுக்குரிய கேது தன பாவமான 2 ல் அமைவது இல்லறம், உறவுகள் வகைக்கு சிறப்பல்ல. ஆனால் கடன் என்ற தனது காரகம் செயல்படுவதால் பொருளாதார வகையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். பொதுவாகவே ராகு-கேதுக்கள் உயிர் காரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமளவு பொருட்காரகத்திற்கு பாதிப்பை தரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்துப்பொருளீட்ட ஜீவன காரகன் சனி ,இரட்டைப்படை பாவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும். இந்த ஜாதகத்தில் கடன் வசூல் செய்வதை குறிக்கும் ஒற்றைப்படை பாவம் 5 ல் சனி அமைந்திருப்பது ஜாதகர் செய்யும் தொழிலுக்கு உகந்த ஒரு அம்சமாகும். லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 3 ல், தனுசுவிற்கு 6 அமைந்தாலும் அவர் வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய) நிலையில் உள்ளதால் தனுசு ராசியின் மீது குருவின் அறைப்பங்கு பார்வை விழுகிறது.

ஜாதகத்தில் 8 ஆமிடம் என்பது 7 க்கு 2 ஆக அமைவதால் அது அடுத்தவர் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்து 2 ஆம் இடத்தை பார்வை செய்வதால் அடுத்தவர்கள் தனம் ஜாதகரிடம் அதிகம் புழங்கும் எனலாம். ஜாதகருக்கு 8 ல் வட்டி காரகன் ராகுவின் சுவாதி-1 ல் மறைந்த 2 ஆமதிபதி செவ்வாய் திசை துவங்கியவுடன் கடன் வசூல் செய்யும் நிறுவத்தை துவங்கி இன்று பல வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து கடனை வசூல் செய்து தருகிறார். அதற்கான தனது  தரகுத்தொகையை பெற்றுக்கொள்கிறார். பல வங்கிகள் இவரது சேவையை நாடிப்பெறுகின்றன. இவரது கடன் வசூல் நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தன ஸ்தானமான 2 ஆமிடத்தை சூரியன், புதன், சனி ஆகியவை இணைந்து பார்வையிடுவது வங்கிகளுக்கு கடன் கடன் வசூல் செய்து தருவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் 2 ஆம் பாவத்தோடு தொடர்பாவது கடனுக்கான வட்டியை குறிக்கிறது. பொதுவாக தனுசி ராசி அதுவும் மூல நட்சத்திரத்தில் சந்திரன் அமைவது இரக்கமற்ற முறையில் வட்டி வாங்குவதை குறிப்பிடும். ஜாதகர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  


இவரும் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளார். தொடர்பு ஸ்தானமான 7 ஆமிட குரு, கடனை வசூல் செய்யும் 5 ஆம் அதிபதி புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் இவர் இந்த வேலையில் உள்ளார். 5 ஆமதி புதனும் 1௦ ஆமதிபதி சனியும் இணைந்து 1௦ ஆம் பாவத்தில் நிற்பதால் இவர் இத்துறையில் உள்ளார். 5 ஆமதிபதி புதனும் 6 ஆமதிபதி சுக்கிரனும் 1௦ ஆம் பாவத்தில் இணைந்து நிற்பது, கடன் கொடுத்து வசூல் செய்வதையே தொழிலாக செய்யும் நிதி நிறுவனத்தில் பணி புரிவதை குறிக்கிறது. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும் என்றேன். சனி இந்த ஜாதகத்தில் 1௦  ல் நிற்பதால் இவர் மற்றொருவரிடம் வேலை செய்கிறார். தனது மூலத்திரிக்கோண வீட்டில் நிற்கும் சனியின் திசை துவங்கினால் ஜாதகர் சுய தொழிலில் இறங்குவார்.   சூரியன் 11 ல் நின்று 5 ஆம் பாவத்தை பார்ப்பது இவரது முதலாளி இவர் மீது மிகுந்த மதிப்பைக்கொண்டிருப்பதை காட்டுகிறது. குரு புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகத்தில் புதனுக்கும் குருவிற்கும் நட்சத்திரப்பரிவர்த்தனை ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி உபய ராசி அதிபதிகளான குரு-புதன் தொடர்பு கடன் மற்றும் கடன் வசூல் செய்யும் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. 8 ஆமதிபதி குரு லக்னத்தை பார்ப்பது ஜாதகரிடம் அடுத்தவர் பணம் வருவதை குறிக்கிறது. 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.