Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, 4 March 2021

ஜோதிடமும் அரசியலும்!

 



ஜோதிடத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதில் அரசியல் ஜோதிடமும் ஒன்று.. அது அரசியல், அரசு, ஆள்பவர்களின் நிலை, எதிர்க்கட்சிகள் ஆகியவற்றை கூறும். தமிழகத்தில் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அரசியலில் குதிக்க எண்ணியிருக்கிறேன். அதன் நீள, அகல உயரம் என்ன? எந்த இடத்தில் எவ்வளவு உயரத்திலிருந்து நான் அரசியலில் குதித்தால் அடிபடாமல் சம்பாதிக்கலாம்? பெயர் கெடுமா? பண இழப்பா? சம்பாதிக்க முடியாதா? புகழ் உண்டா? என்ற கேள்விகளுடன் சிலர் அணுகியதன் விளைவாக இப்பதிவு இங்கே உங்களுக்காக.

அரசியலில் கிரகங்களின் பங்கு.

சூரியன் – ஆளும் தகுதியை தரும் முதன்மைக்கிரகம். ஆளும் கட்சியை குறிப்பது.

சந்திரன் – பொதுச்சேவை, மக்கள் தொண்டு. இரண்டாவது முக்கியமான ராஜ கிரகம்.

செவ்வாய் – இரண்டாம் நிலை அரசியல்வாதிகள். ஆளும் கட்சியின் கூட்டணிக்கட்சிகள்.

புதன் – அரசியலில் திட்டங்களுக்கான காரக கிரகம். கூட்டணி பேச்சுவார்த்தை. அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்களை குறிக்கும் கிரகம். சூரியனுடன் சேர ஆளும் கட்சிக்கும் சுக்கிரனுடன் சேர எதிர் கட்சிகளுக்கும் உதவி செய்யும் கிரகம்.

குரு – தேச நலன் கருதி செயல்படும் கிரகம். தேர்தல் காலங்களில் எந்த கிரகங்களுடன் தொடர்புகொள்கிறதோ அதன் அடிப்படையில் முடிவுகளை தெரிவிக்கும். ஆளும் கட்சியை அல்லது தேச நலனின்பொருட்டு செயல்படுபவர்களை ஆதரிக்கும் கிரகம்.

சுக்கிரன் – அரசியலுக்கான காரக கிரகங்களில் முக்கியமானது. எதிர்க்கட்சிகளை நேரடியாக குறிக்கக்கூடியது. அரசியலில் நடக்கும் அனைத்து சதிராட்டங்களுக்கும் காரகம் வகிப்பது. பணம் பரிசு, இனாம், தானம் மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்பவர்கள் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்களே.

சனி – வாக்காளர்களை, அடித்தட்டு மக்களை குறிக்கும் கிரகம். சூரியனின் பகை கிரகமாவதால் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படக்கூடியது. ஜனன ஜாதகத்தில் சனி சாதகமாக இல்லை எனில் அரசியலில் வெற்றி பெற இயலாது. வயதான அல்லது பல்லாண்டு உழைப்பிற்குப்பிறகு அரசியலில் வெற்றியை உறுதியாகத்தரும் கிரகம். சாதகமற்ற சனி அரசியலில் தோல்வியை, அவமானங்களை, இழப்புகளை தரக்கூடியது. 

ராகு – சட்டத்திற்கு புறம்பான வழிகளில் அரசியல் வெற்றியை பெற வைக்கும் கிரகம்.

கேது – சட்டப்படியான வழிகளில் அரசியலில் வெற்றி பெற வைக்கும் கிரகம்.

மாந்தி – அரசியல் கூட்டணிகள் கடைசி நேரத்தில் மாறுவதற்கான காரக கிரகமாகும். மரணத்திற்கு சமமான பாதிப்புகளை சாதகமற்ற மாந்தி தருகிறார். அரசியல் படுகொலைகளுக்கு ராகு, செவ்வாய், சனி தொடர்பு பெற்ற மாந்தி காரணமாகிறார்..  

லக்னாதிபதி கிரகம் வக்கிரமானாலோ அல்லது வக்கிர கிரகம் லக்னத்தில் இருந்தாலோ அதன் திசா-புக்திகளில் அரசியலில் ஒருவரை பின்வாங்கவைக்கும்.

வக்கிர கிரகம் அரசியலில் நடிப்பவர்களை குறிப்பிடும்.

கடகம், சிம்மம் ஆகியவை ஆட்சி அதிகாரங்களுக்குரிய ராஜ ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

தனுசு ராசியும் அதன் அதிபதி குருவும், மகர ராசியும் அதன் அதிபதி சனியும் தேசத்தை ஆள்பவர்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குருவும் சனியும் கால புருஷனுக்கு தர்ம-கர்மாதிபதிகளாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குருவும் சனியும் கோட்சாரத்தின் கால புருஷனின் ராஜ்ய ஸ்தானமான மகரத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் வேளையில் தமிழக தேர்தல் வந்தாலும் வாக்குப்பதிவு காலத்தில் குரு கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ ராசிகளில் ஒன்றான கடகம் மக்கள் சேவையை குறிக்கும் ராசியாகும். கடகத்தின் எதிர் ராசியான மகரம் மக்களை குறிக்கும் சனியின் ராசியாவதால் மகரம் மக்களளின் மனநிலையை வெளிக்காட்டும் ராசியாகும். சிம்மத்தின் எதிர் வீடும் சனியின் கும்ப ராசிதான். ஆனால் கும்பம் மக்கள் மனோநிலையை வெளிக்காட்டாத ராசியாகும். இதன் பொருள் சந்திரனுக்குரிய தாய்மை உணர்ச்சியுடன் மக்களை அணுகினால் மக்கள் ஆதரவு உண்டு என்பதும் சிம்மத்தின் அதிகாரத்தோடு மக்களை அணுகினால் மக்கள் தங்கள் மனநிலையை வெளிக்காட்டாது தேர்தலில்தான் எதிரொலிக்கும் என்பதாகும். ஒவ்வொரு ராசியும் செயல்படுவது அதன் எதிர் ராசியின் வலுவைப்பொறுத்துதான்  என்பது குறிப்பிடத்தக்கது.  

கீழே ஒரு அரசியல்வாதியின் ஜாதகம்.

லக்னம் மக்கள் சேவையை குறிக்கும் கடக ராசியாகும். கடகத்தின் எதிர் ராசியாதிபதி சனியும் லக்னத்திற்கு மூன்றாமிடத்தில் சிறப்பாக அமைந்துள்ளனர். லக்னத்திற்கு 6  ஆமதிபதியும் 8 ஆமதிபதியும் லக்னத்திற்கு மூன்றில் அமைந்து விபரீத ராஜ யோகத்தை வழங்குகின்றனர். இவர்கள் கால புருஷனின் தர்ம கர்மாதிபதிகள் என்பது இங்கே குறிப்படத்தக்கது. கடக லக்னத்தின் பாதகாதிபதி சுக்கிரன் நீசம் பெற்று லக்னத்திற்கு மூன்றில் மறைவது ஒருவகையில் நன்மையே என்றாலும் சுக்கிரன் நீசமாகும் கன்னிக்கு அடுத்த ராசி துலாம் சுக்கிரனின் ஆட்சி வீடு என்பதால் சுக்கிரன் விரைவில் நீசபங்கம் பெற்று விடுவார். இது ஜாதகர் அரசியல் செல்வாக்கால் இல்லற விஷயத்தில் தவறாக நடந்துகொண்டால் ஜாதகர் தண்டனையையும் பெண்கள் மூலமான அவமானத்தையும் அடைவார் என்பதை குறிப்பிடுகிறது. இந்த அரசியல்வாதி தற்போது சுக்கிர திசையில்தான் உள்ளார். 11 ஆமதிபதியான சுக்கிரன் நீசம் பெற்று இப்படி திசை நடத்துவது இல்லற விஷயத்தில் ஜாதகர் தவறு செய்துகொண்டுள்ளார் என்பதையும் தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள அதிகம் செலவு செய்வதையும் குறிக்கிறது. ஆனால் இவை யாவும் வெளி உலக்கிற்கு தெரியாது காரணம் சுக்கிரன் மறைவு பெற்றதுதான்.  லக்னத்திற்கு 2 ல் சூரியன் ஆட்சி பெற்று நிற்பது ஜாதகருக்கு அரசியல் மூலம் வருமானமும் வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. லக்னத்தில் நிற்கும் செவ்வாய், சந்திரன் ராகு ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஜாதகர் அரசியலில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செயல்படுவதையும் அவரது நிலைப்பாடு கடுமையாகவும் இருக்கும் என்பதையும் குறிக்கிறது. அதே சமயம் லக்ன ராகு ஜாதகர் முறையற்ற குறுக்கு வழிகளில் சென்று தனது காரியங்களை முடிக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறது.  இரண்டாமிட புதன் ஜாதகர் அரசியலின் பொருட்டு செய்யும் செலவுகளை குறிப்பிடுகிறது.

கீழே தான் அரசியலில் ஈடுபட்டால் சாதிக்க முடியுமா எனக்கேட்ட ஒரு இளைஞனுக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம்.


கும்ப உதயத்தில் முதன்மை ராஜ கிரகம் சூரியன். இது ஜாதகரின் அரசியல் ஈடுபாட்டை காட்டுகிறது. உதயத்தில் உள்ள சூரியன் தேஜேஸ்வர் என்ற  பெயரை கேள்வியாளருக்கு கொடுத்துள்ளது. முயற்சி ஸ்தானத்தில் அதன் அதிபதிகளான இரு செவ்வாயும் உள்ளது. இது ஜாதகரின் துணிவான நிலையை குறிக்கிறது. இரண்டு செவ்வாய்களும் 1௦ ஆமிடத்தை 8 ஆம் பார்வையால் பார்ப்பது கேள்வியாளரின் அரசியல் ஆசையை குறிக்கிறது.. ஆரூடம் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறது.. ஜாம குரு மீனத்தில் ஆட்சி பெற்று நின்றாலும் உள்வட்ட குரு நீசம் பெற்று நிற்கிறது. இது ஜாதகர் தன்னை பொருளாதார ரீதியாக முதலில் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதையும், தனக்கு ஒரு குடும்பத்தை இன்னும் அமைத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார் என்பதையும் குறிப்பிடுகிறது. கும்ப உதயம். சனியினுடையது. ஜாம சனி துலாத்தில் உச்சமாகி மகர சுக்கிரனுடன் பரிவர்தனையாகிறார். இதனால் இரு உதயாதிபதிகளும் உதயத்திற்கு விரையதிலேயே அமைகிறார்கள். இப்படி உதயாதிபதி கிரகம் உதயத்திற்கு விரையத்தில் அமைவது கேள்வியாளர் முதலில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது. ஜாம சனி மூன்றாவது திரிகோணத்தில் உச்சமாகியுள்ளது ஜாதகரின் எண்ணம் நிறைவேற பல ஆண்டுகள் ஆகும் என்பதை தெரிவிக்கிறது.  5 ஆவது திரிகோணம் சில ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களையும் 9 ஆவது திரிகோணங்கள் பல ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவங்களையும் குறிக்கும். உச்ச சனி பலனை மெதுவாக கொடுக்கும் என்பதை குறிக்கிறது. கவிப்பு 1௦ ஆமதிபதி செவ்வாயின் மிருகச்சீரிஷ நட்சத்திரத்தில் ஜாம சூரியனோடு நிற்பதும் 1௦ல்  கேது நிற்பதும் ஜாதகரின் அரசியல் எண்ணங்களுக்கு தற்போது உள்ள தடைகளையும் குறிக்கிறது. அரசியலில் ஈடுபட எண்ணம் கொண்டுள்ள ஜாதகருக்கு வயது தற்போது 21. எனவே ஜாதகர் தற்போது தன்னை முதலில் நிலைநிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.

 

மீண்டு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Monday, 9 March 2020

விதி, மதி, கதி!




ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்துவிட்டால் ஒருவருக்கான வாழ்க்கை நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நிறைவேறிவிடும். ஜாதகர் வாழத் துவங்குமுன்பே அவருக்கான  பாதையை படைத்தவன் வகுத்து வைத்திருப்பான் எனலாம். இரண்டாவதாக மதி எனப்படுவது  சந்திரனை குறிப்பிடும் சொல் ஆகும். ஒருவரது லக்னம் வலு குறைவாக அமைந்திருந்து ராசியும் ராசி நாதனும் வலுவாக அமைந்துவிட்டால் ஜாதகர் தனது சுய முயற்சியால் தன் விருப்பப்படி தனக்கான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுப்பார் எனலாம்.  நிறைவாக கதி என்பது சூரியனை குறிப்பிடும் சொல் ஆகும். ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத்தவிர சூரியனின் கதிர்வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதால் ஒருவருக்கு லக்னமும் ராசியும் பாதிக்கப்பட்டிருந்து சூரியன் சிறப்பாக அமைந்திருந்தால் சூரியன் அமைந்துள்ள பாவமே ஜாதகரை இயக்கும் பாவம் என பிரதானமாக எடுத்துக்கொண்டு பலன்சொல்வது ஒரு முறை. இதன் அடிப்படையின் இப்பதிவை சில உதாரண ஜாதகங்களுடன் காண்போம்.

விதி

மேற்கண்ட  ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. மிதுன லக்னத்தில் லக்ன சுபரும் சுபாவ பாவருமான சனி அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் வக்கிர நிலை பெற்ற குருவின் பார்வையை பெறுகிறார். லக்னாதிபதி ராசியில் உச்சமாகி பாவிகள் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். லக்னாதிபதி உட்பட எந்த கிரகமும் அஸ்தங்கம் அடையவில்லை என்பது சிறப்பே. இதனால் மதி எனப்படும் ராசியை விட விதி எனப்படும் லக்னமே வலுப்பெறுகிறது.  இதனால் ஜாதகரை ராசியை விட லக்னமே வழிநடத்தும். தனக்கு இயல்பாக அமையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் துணைவரை கரம்பிடிக்க வேண்டியிருக்கும். காரணம் ராசியில் அமைந்துள்ள புதனை சூரிய-சந்திரனும்  செவ்வாயும் கட்டுப்படுத்துவதே ஆகும். பாக்யாதிபதி சனி லக்னத்தில் தன் நண்பனின் வீட்டில் நேர்கதியில் வலுவாக அமைந்துள்ளதால் ஜாதகருக்கு எதிலும் தெளிவான நிதானமான போக்கு இருக்கும். 7 ஆமதிபதி குரு வக்கிரமடைந்து செவ்வாயும் சூரிய, சந்திர, புதனோடு சேர்க்கை பெற்றதால் கணவர் நிர்வாகத்திறனுடையவராகவும், பொறுமை அற்றவராகவும், அடிக்கடி பயணங்கள் செய்பவராகவும் , கோபம் மிகுந்தவராகவும் இருப்பார் எனலாம். 7 ஆமதிபதியான நீர்க்கோள் குரு 9 ஆம் பாவத்தில் நிற்பதாலும் லக்னத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியாகி சந்திரன் லக்னாதிபதி சேர்க்கை பெற்றதனாலும் ஜாதகிக்கு கணவரின் சூழலை முன்னிட்டு வெளிநாட்டு வாழ்வு அமையும் எனலாம்.  ஜாதகி வெளிநாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். ஜாதகிக்கு நடப்பவை அனைத்தும் அவரது விதிப்படி நடப்பவை. லக்னாதிபதி ராசியில் பாவிகளோடு சேர்ந்து விட்டதால்  ஜாதகர் போராடி தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி அமைத்துக்கொள்ள இயலாது.

மதி

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகத்தில் உச்ச நீச்சமாக அமையப்பெற்ற கிரகங்களே ஜாதகருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மையாகும். இந்த ஜாதகத்தில் கடக ராசியில் அமையப்பெற்ற குருவும் கடக ராசி அதிபதி சந்திரனும் உச்சமாக அமைந்துள்ளனர். சுக்கிரனும் செவ்வாயும் ஆட்சி. சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் அமைந்துள்ளதால் நீச பங்கமடைந்துள்ளார். ராகு கேதுக்கள் தனித்த நிலையில் இதர கிரகங்களோடு சேர்க்கை பெறாமல் அமைந்துள்ளது சிறப்பே. இப்படி பல சிறப்புகள் பெற்ற ஜாதகம் நிச்சயம் ஒரு யோக ஜாதகமாகத்தான் இருக்கும். ஜாதகர் உலகப்புகழ் பெற்ற தமிழர். ஜாதகத்தில் லக்னம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்திரனும் அதன் வீடும் வலுவடைந்ததால் இந்த ஜாதகரை ராசியே வழிநடத்தும் எனலாம். அதாவது லக்னப்படி தனக்கு அமையப்பெறும் சூழ்நிலைகளை ராசி வலுவாடைந்ததால் தன் எண்ணப்படி போராடி மாற்றியமைத்துக்கொள்ள இயலும். பிராமண ராசியான கடகத்தில் பிராமண கிரகம் குரு  உச்சமாகி அதன் அதிபதி சந்திரனும் உச்சமானதால் ஜாதகர் பிராமண வர்கத்தில் பிறந்தவர். சந்திரன் மாற்றங்களை குறிக்கும் கிரகம் என்பதால் தான் சார்ந்த வைணவ சம்பிரதாய நெறிக்கு எதிராக சைவ சம்பிரதாயப்படி தன் நெற்றியில் திருநாமத்திற்கு பதிலாக தன் எண்ணப்படி திருமண் (விபூதி) இட்டுக்கொண்டவர். சைவ நெறிகளை குறிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை வைணவ நெறிகளை குறிக்கும் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களைவிட வலுவாக அமைந்ததே இதற்கு காரணமாகும். 

ராசியாதிபதி சுக்கிரன் சூரியனோடு சேர்ந்ததால் அரசியல் அரசாங்கத்தொடர்புகளும் ஜாதகரை தேடி வந்தன. கற்பனைக்கிரகம் சூரியனும் திரைத்துறைக்கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் வலுவாக அமைந்ததால் திரைத்துறையில் கோலோச்சியவர். ராசிக்கு இரண்டாமிடம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைகிறது. அதுவும் 2 ஆமிடதிற்கு சுபகர்த்தாரி யோகத்தை வழங்கும் இரு கிரகங்களும் உச்ச கதியில் அமைந்துள்ளன. இதனால் 2 ஆமிடதிற்கு உச்ச சுபகர்த்தாரி யோகம் அமைகிறது. அன்னை சரஸ்வதி இவர் நாவில் குடியிருந்தாள் என்பது தமிழகம் கண்ட உண்மை. இவரது நாவிலிருந்து விழுந்த பாடல் வரிகள் சாமான்யனை குதூகலிக்க வைத்தன. ஆட்சியாளர்களை பிரமிக்க வைத்தன. இனி இதுபோன்ற கவிஞர்கள் திரைத்துறைக்கு வரமாட்டார்களா என நம் எல்லோரையும் ஏங்க வைக்கின்றன. ராசிக்கு 5 ஆமிடத்தில் ஆன்மீக கிரகம் கேது அமைந்ததனால் திரைப்படக் கவிஞராக இருந்தாலும் ஆன்மீகத் துறைக்கும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜாதகர் ஸ்ரீரங்கத்தில் பிறந்த மறைந்த திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் வாலி ஆவார். பலநாள் போராடி விடாப்பிடியாக முயன்று தன் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டதற்கு இந்த ஜாதகத்தில் மதி என அழைக்கப்படும் மாற்றங்களுக்குரிய சந்திரனின் வலுவே காரணமாகும்.

கதி

மேற்கண்ட ஜாதகம் இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலினுடையது. ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் விருண யோகம் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்திலும் ராசிக்கு 3 லும்  அமைகிறது. விருண யோகத்தால் வாழ்வில் பல போராட்டமான சூழல்களை சந்திக்க வேண்டும். லக்னாதிபதி பகை கிரகங்களோடு 6 ல் அமைந்த நிலையில் ராசியாதிபதி செவ்வாய் சனியோடு  கிரக யுத்தத்தில் தோற்றுவிட்ட நிலையில் லக்னதிற்கு யோகாதிபதியான சனியும் ராசியதிபதியான செவ்வாய் இருவருமே ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவராகின்றனர். இவ்விருவருக்கும் 1௦ ல் திக்பலத்தில் சூரியன் நீச பங்கமடைந்த நிலையில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகரை கதி எனப்படும் சூரியனே இயக்கும் சக்திபெற்றவராகிறார்.


சட்டம் ஒழுங்கை குறிக்கும் சனி-செவ்வாய் சேர்க்கையால் ஜாதகர் வக்கீலுக்கு படித்தார். லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் இச்சேர்க்கை அமைந்ததால் ஜாதகர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். சனி அடித்தட்டு மக்கள் என்பதாலும் செவ்வாய் போராட்டங்களுக்குரிய கிரகம் என்பதாலும் இவ்விரு கிரக சேர்க்கையால் ஜாதகர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இவர் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் இவரது போர்க்குணத்தையும் கண்டு மிரண்ட  ஆங்கிலேய அரசு மக்களுக்காக இறங்கி வந்து பல சலுகைகளை அளித்தது.  பூமிகாரகன் செவ்வாயோடு உழைப்புகாரகன் சனி இணைந்து ஜாதகத்தில் செயல்படுவதால் இவர் “இந்திய விவசாயிகளின் ஆன்மா” என அழைக்கப்பட்டார்.

காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இவரை நாடி வர சனி+செவ்வாய் நிலையே காரணமாகும். தேச விடுதலைக்கான போராட்டங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது.  அதற்காக பலமுறை சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை தனது உறுதிமிக்க செயல்களால் ஒருங்கிணைத்ததற்காக தேசம் இவரை “இந்தியாவின் இரும்பு மனிதர்” எனப்போற்றுகிறது. சூரியனின் நிலையால் முதல் துணை பிரதமராகவும் சனியின் நிலையால் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய சாமான்ய விவசாயிகள் இப்படி ஒரு மனிதர் மீண்டும் பிறந்து தங்கள் வாழ்வை காக்க வரமாட்டார்களா என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் இவருடையது. இவை அனைத்திற்கும் காரணம் இவரது ஜாதகத்தில் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் உச்சமடைந்து கர்ம காரகன் சனியோடு சேர்க்கை பெற்றதே ஆகும். இந்த சேர்க்கைக்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியன் அமைவது “அழியாப்புகழைத்தரும்” அமைப்பாகும். இத்தகைய ஜாதக அமைப்பினர் அவர்களுக்கான காலகட்டத்தில் மட்டுமே அபூர்வமாக பிறவி எடுக்கிறார்கள். அழியாப்புகழை அடைகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.  படேலின் புகழ் என்றும் அழியாதது. கட்டுமானத்திற்கு காரகன் செவ்வாய் உச்சமானதால் குஜராத்தில் அமைந்துள்ள இவரது சிலையே உலகில் இன்று உயரமான சிலையாகும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Wednesday, 18 September 2019

அரசியல் யாரை அரவணைக்கும்


கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ரகு Vs ராகு பதிவு மற்றொரு நாளில் வெளிவரும். வாசகர்கள் பொருத்தருள்க. 

அரசியலில் சதிராட்டங்கள் நிறைந்த மோசமான காலத்தில் இருக்கிறோம். இந்நிலை மேலும் வருங்காலத்தில் தாழ்வடையவே செய்யும்.  ஆனால் இந்திய அரசியல் இனிமேல்தான் தன்னை நிலை நிறுத்தி தேசம் முன்னேற பெரும் போராட்டங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை இனி வருங்கால அரசியல் சிறப்பாகவே இருக்கும் என எதிர் பார்க்கிறேன்.


அரசியலில் ஈடுபட்டு பெரும் தனம் ஈட்ட முடியுமா? .பெரும் புகழைடைய முடியுமா? என்பது போன்ற கேள்விகளால் ஜோதிட உலகம் விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக தமிழக தேர்தலுக்கு இன்னும் ஓரிரு வருடங்களே உள்ள நிலையில் , உள்ளாட்சி தேர்தலில் ஈடுபட்டு செலவு செய்தால் போட்ட முதலை எடுத்துவிடலாமா? என்பது போன்ற கேள்விகள் ஜோதிடர்களின் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலே இந்த பதிவை எழுத தோன்றியது.

கீழே நேற்று பிறந்தநாள் கண்ட நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம்.

சனியின் அனுஷ நட்சத்திரத்தில் சந்திரன் நிற்கிறார். சனி ராசிக்கு 1ல் ராஜ்ய ஸ்தானம் சிம்மத்தில் நிற்கிறார். இதனால் இவரது கர்மம் என்பது ராஜ கர்மம் என்பதாகிறது. கர்ம  காரகன் சனிக்கு 2 ல் சூரியன் நிற்பது இதற்கு மற்றொரு காரணம். ஜல ராசியில் பிறந்தவர். நடப்பது சந்திர திசை. சந்திரன் விரைவாக  சுற்றும் கிரகம். சுதந்திரமடைந்து இவரது ஆட்சியில் தான் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. துணிச்சலுக்கு காரணம் சந்திரன் செவ்வாயுடன் இணைந்து நீச பங்கப்படுவது. உலகம் சுற்றும் வயோதிகராக திகழ்கிறார். காரணம் 9 ஆம் அதிபதி சந்திரன் நீர் ராசியில் அமைந்து திசை நடத்துவதே. 7 ஆமதிபதி கர்ம காரகன் சனியுடன் ராசிக்கு 1௦ ல் அமைந்து நீசம் நோக்கி செல்வதால் குடும்ப வாழ்வு சிறப்பில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார். காரணம் சந்திர திசை முடிந்தாலும் அடுத்து வரும் ராசி அதிபதி செவ்வாய் திசையும் தனது முதல் பகுதியில் நன்மையை செய்யும் என்பதே.

அடுத்து கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



சூரியன் லக்னத்தில் நிற்கிறார். சூரியனுக்கு திரிகோணத்தில் ராகு உள்ளார். அதனால் சிந்தனை அரசியலின் பக்கம் உள்ளது. சூரியன் சனியின் நட்சத்திரத்தில் நிற்கிறார். சனி சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் நிற்பதாலும் சனிக்கு 2 ல் சுக்கிரன் நிற்பதாலும் அரசியல்வாதிகளுக்கு வாகன ஓட்டியாக செயல்படுகிறார். 12 ஆமிடத்திற்கு, சுக்கிரனுக்கு, 2 ஆமிடதிற்கு  பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. சுக்கிரன் 8 ஆமதிபதியோடும் மாந்தியோடும் இணைந்து நிற்கிறார். நடப்பது 7 க்கு விரையமான 6 ஆம் பாவத்தில் நிற்கும் சந்திரனின் திசை. ஜாதகருக்கு 38 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் இவருக்கு லக்னத்தில் சனியின் நட்சத்திரத்தில் சனி பார்வை பெற்று நிற்கும் சூரியனால் திருமண எண்ணமே பெரிதாக இல்லை என்பதுதான்.  சனி சூரிய தொடர்பால் ஜாதகர் பிரபல ஜாதிக்கட்சி ஒன்றை சார்ந்து செயல்படுகிறார். சிம்ம ராசிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. அரசியலில் ஜாதகர் ஜொலிக்க வாய்ப்பில்லை. ஜாதகர் அடியாளாகவே செயல்படுவார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே .


ஜாதகர் சிம்ம ராசி என்பதும்.  ராகு சூரியன் சேர்க்கை பொதுச் சேவையில் ஈடுபடுத்தும் என்ற அமைப்பு மட்டுமே அரசியலுக்கு ஓரளவு சாதகமாக உள்ளது.  ராகு திசையில் லாப ஸ்தானத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிக்கு பணப்பட்டுவாடா செய்யும் உள்ளூர் பொறுப்பாளராக இருந்து ஓரளவு பொருளீட்டினார்.


பின்வரும் ஜாதகம் மற்றுமொரு ஆணினுடையது.

இந்த ஜாதகத்தில் சூரியன் ராகு சேர்க்கை இல்லை. ஆனால் சூரியனுக்கு திரிகோணத்தில் 5 ஆமிடத்தில் ராகு உள்ளது. கடக ராசி அரசியலுக்கு உரியது இந்த இரு அமைப்புகளால் இவர் ஒரு அரசியல் கட்சியில் தீவிர ஆதரவாளராக உள்ளார். சந்திரனுக்கு  1௦ ல் நான்கு கிரக சேர்க்கை என்பதால் இது ஒரு சன்யாச யோக ஜாதகம். 38 வயதாகியும் ஜாதகருக்கு திருமண எண்ணம் இல்லை.  குடும்பததை குறிக்கும் குரு வக்கிரமாகிவிட்டதால் குடும்பம் பற்றி இவர் வேண்டாம் என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளதை அறிய முடிகிறது. சுக்கிரன் அஸ்தங்கமாகிவிட்டதும் இதை உறுதி செய்கிறது. தன கார கிரகங்கள் குருவும் சுக்கிரனும் தோஷம் பெற்றதாலும் சன்யாச யோகத்தாலும் இவரால் அரசியலில் பொருளீட்டவும் முடியாது. லாபத்திலிருந்து திசை நடத்தும் சனி 1௦ ஆமதிபதி சூரியனின் சாரம் பெற்றுள்ளதால் ஓரளவு பிரபலமாக வாய்ப்புண்டு.

அரசியலில் சேவை செய்ய ராஜ கிரகங்களான சூரியன், சந்திரன், சனி, குரு  ஆகியவை சிறப்பாக ஒரு ஜாதகத்தில் அமைந்திருந்து திசாபுக்திகள் சாதகமாக வரவேண்டும். அரசியலில் சதிராட்டங்களில் ஈடுபட்டு பொருளீட்ட (கொள்ளையடிக்க) ராகு, சுக்கிரனின் வலு ஜாதகத்தில் இருக்க வேண்டும். இவற்றை தவிர ராஜ்ய ஸ்தானம் எனப்படும் 1௦ ஆமிடமும், சூரியனும் வலுவடைந்து சாதகமான திசை வந்தாலும் அரசியலில் ஈடுபடலாம். பொதுவாக நெருப்பு ராசிகள் 3 ம் (மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை), கடகம், கும்பம் ஆகியவையும் அவற்றின் அதிபதிகளும் சாதகமாக அமைந்த ஜாதகர்கள் அரசியலில் ஈடுபடலாம்.

அரசியலில் ஈடுபட சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு ஆகியவை இளம் வயதில் கடும் சோதனைகளையும் இழப்புகளையும் ஒருவருக்கு கொடுத்து, பல தியாகங்களை செய்ய வைத்து அவற்றில் அவர் தேரிய பிறகே இக்கிரகங்கள் அரசியலில் வெற்றிகரமாக உலா வர உதவுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்றும் சரி, கடந்த காலங்களிலும் சரி நமது மாபெரும் அரசியல் தலைவர்களின் வரலாற்றை கவனித்தால் இவ்வுண்மை புரியவரும். அரசியல்வாதியின் வாரிசாக பிறந்துவிட்டால் மட்டுமே ஒருவர் அரசியல்வாதியாகிவிட முடியாது.

இப்போது கூறுங்கள் நீங்கள் அரசியலுக்கு வரத் தயாரா.?

தன்னலமற்ற தியாகிகளை இன்றைய அரசியல் எதிர்பார்க்கிறது.


மீண்டும் அடுத்த வாரத்தில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்
கைபேசி: 08300124501



Sunday, 22 May 2016

யாரை எங்கே வைப்பது என்று...

யாரை எங்கே வைப்பது என்று யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ படைத்தவனுக்கு நன்றாகவே தெரியும். சில சமயங்களில் நமது விருப்பங்களையும் வெறுப்புகளையும் மீறி வாழ்வில் சில சம்பவங்கள் நடந்துவிடுவது உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல் காரணம் புரிந்தால் கவலைகள் மறையும்.

ஒருவர் அரசியலில் ஈடுபடவும் முன்னேறவும் கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

1.அரசியlலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் வலுப்பெற்று 1௦ ஆமிடத்துனோ அல்லது சூரியனுடனோ தொடர்புகொண்டிருக்க வேண்டும்.

2. ராஜ கிரகமான சூரியன் ராசி, லக்னம், 5, 7 ஆமிடங்கள் அல்லது பத்தாமிடத்துடன் தொடர்புகொண்டிருக்க வேண்டும்.

3.அரசாங்க வகை பாக்கியங்களை குறிக்கும் 5 ஆமிடத்தில் கேது வலுத்திருக்க வேண்டும்.

4.சுதந்திர இந்திய ஜாதகத்தில் லக்னத்தில் உச்ச ராகு இருப்பதால் இந்திய அரசியலில் உள்ளவர்களும் ராகுவின் அம்சங்களாகவே இருக்க வேண்டும். இதனடிப்படையில்  அரசியலில் வெற்றி பெற சூழ்ச்சி மற்றும் சதிராட்டங்களுக்கு காரகத்துவம் பெற்ற ராகு வலுத்திருக்க வேண்டும். 


இந்தியாவின் வடகோடி மாநிலமான காஷ்மீரின் முதலமைச்சர் திருமதி.மகபூபா முக்தியின் ஜாதகம் கீழே.


ராசி அதிபதி செவ்வாயும் பாக்யாதிபதி சந்திரனும் நீச நிலையில் பரிவர்த்தனை. இதனால் வாழ்வின் முன்பகுதியில் கடும் சோதனைகளை சந்தித்து வேதனைப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நீச கிரக பரிவர்த்தனையானது வாழ்வின் பிற்பகுதியில் பங்கமடைந்து ராஜ யோகத்தை தர வேண்டும் என்பது விதி.  இவ்விதிப்படி முற்பகுதியில் திருமணம் நடந்து மணமுறிவு ஏற்பட்டுவிட்டது. இப்போது பிற்பகுதி வாழ்க்கை.

மேலும் ஒருவரின் தொடர்புகளை குறிக்கும் 7 ஆமிடத்தில் ராஜ்ய ஸ்தானாதிபதியும் (1௦ ஆமதிபதி))  அரச கிரகமுமான சூரியன் நின்றதும் ஜாதகி அரசாங்கத்தோடு தொடர்புகொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.  7 ஆமிடமானது பத்தாமிடத்திற்கு பத்தாமிடம் (பாவத் பாவம்) என்ற வகையில் அரசியலுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அரசாங்க வெகுமதிகளைக் குறிக்கு 5 ஆமிடத்தில் கேது நின்றால் ஒருவர் உயர்ந்த நிலையை தனது வாழ்வில் ஒருநாள் அடைந்துவிடுவார். அல்லது ஞானியாகவோ பிச்சைக்காரராகவோ தனது வாழ்நாளை கழிக்க வேண்டும். “வச்சா குடுமி செரச்சா மொட்டை” என்ற அனுபவ மொழி கேதுவின் 5 ஆமிட நிலைக்கு மிகச் சரியாகப் பொருந்தும். கேது விஷயத்தில் நடுவாந்திரமான நிலை, பலன் என்பதே இல்லை. மேற்கண்ட ஜாதகத்தில் ராசிக்கு 5 ல் கேது நிற்பது ஜாதகியின் அரசியல் தொடர்பை குறிக்கிறது.

குடும்ப ஸ்தானம் வக்கிர சனியால் பாதிப்படைந்ததும், குடும்ப காரகனும் குடும்ப பாவாதிபதியுமான குரு வக்கிரமடைந்து தனது குடும்ப பாவத்திற்கு 12 ஆமிடமான ராசியில் நின்றதும்,  7 ஆமிடமான களத்திர ஸ்தானத்தில் சுபாவ பாவி சூரியன் நின்றதும், சுக்கிரன்  ராசிக்கு 8 ல் மறைந்ததாலும் ஜாதகியின் மண வாழ்வை முறித்துவிட்டது.

அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரனின் திசை ஜாத்கிக்கு தற்போது நடக்கிறது. ஒரு கிரகம் அதன் திசையில் தன் வீட்டில் உள்ள கிரகத்தையும் சார்ந்து பலன் கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி ரிஷபத்தில் நின்ற ராஜாங்க கிரகம் சூரியனின் பலனையும் எடுத்துக்கொண்டு தற்போது நடக்கும் சுக்கிர திசை ஜாதகிக்கு முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. ஜாதகி முதலமைச்சராக பல தடைகளை சந்தித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை தகர்த்து ஜாதகியை கிரகங்கள் முதலமைச்சர் ஆக்கியுள்ளது தெளிவாகியுள்ளது.

கீழே இந்தியாவின் தென்கோடி மாநிலமான நமது தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம். 


லக்னத்திற்கு பத்தாமிடத்தில் அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் உச்சமானது ஜாதகியின் அரசியல் தொடர்பையும் அதே சுக்கிரன் கலைத்துறைக்கும் காரகத்துவம் பெற்றவர் என்பதால் ஜாதகியின் சினிமாத்துறை தொடர்பையும் குறிக்கிறது.

ராசியதிபதியாக சூரியனே அமைந்ததும், அந்த சூரியனும் ராசிக்கு 7ல் அமைந்ததும் ஜாதியின் அரசியல் தொடர்பை உறுதி செய்கின்றன. அரச பாக்கியங்களுக்குரிய இடமான 5 ல் கேது அமைந்து கேதுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் 1௦ ஆமிடத்தில் உச்சமடைந்ததும் ஜாதகி அரசியலில் உச்ச நிலையை அடைவார் அன்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறது. 

ஜாதகிக்கு குரு திசை 2012  ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. இந்த ஜாதக அமைப்பின் படி குரு 7 மற்றும் 1௦ க்கு உரியவர் என்பதால்,முதல் எட்டு ஆண்டு கால பலனாக 1௦ ஆமிட பலன் தற்போது நடக்கிறது. ஒரு கிரகம் அதன் திசையில் தன் வீட்டில் இருக்கும் கிரகத்தையும் சார்ந்துதான் பலன் கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரனை சார்ந்து குரு பலன்களை தற்போது கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே ஜாதகி தற்போதும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது காலத்தின் கட்டாயம்.

உபய லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 7 ஆமிடத்தில் குரு ஆட்சியாக தனித்து நின்றதும், குடும்ப ஸ்தானம் வக்ர சனியால் கெட்டதும். களத்திர காரகன் சுக்கிரன் தசம கேந்திரத்தில் உச்சமாகி கேந்திராபத்திய தோஷத்திற்கு ஆளானதாலும் ஜாதகிக்கு இல்லற வாழ்க்கை பாக்கியம் வாய்க்கவில்லை என்பதை குறிப்பிடுகிறது. 

அடுத்து நாம் காண்பது இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலமான மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் ஜாதகம்.



மேஷ லக்னத்திற்கு ராஜ்ய ஸ்தானமான 1௦ ஆமிடாதிபதியும் மக்கள் செல்வாக்கை குறிக்கும் கிரகமுமான சனி லக்னத்திற்கு 7 ல் உச்சம். இந்த உச்ச சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் அமைந்தது மிக விசேஷம். உச்சனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகமும் உச்ச வலுவோடு செயல்படும் என்பது கவனிக்கத்தக்கது. சுக்கிரனின் இரு வீடுகளும் சனி, சந்திரன் ஆகிய இரு உச்ச கிரகங்களை கொண்டு ஜாதகம் அமைந்ததால் சுக்கிரன் உச்ச வலுவோடு செயல்பட்டு அரசியல் தொடர்பை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும். இப்படி சுக்கிரன் 8 ல்  மறைந்தாலும் உச்ச வலுவோடு அமைந்த கிரகத்திற்கு மறைவு ஸ்தான தோஷமும் இல்லை என்பது நுட்பமான ஒரு விதி. 

சனி உச்ச வலுவோடு அமைந்துவிட்டால் அது சூரியனின் காரகத்தையும் எடுத்துக்கொண்டு செயல்படும் என்பது பெரும்பாலான ஜோதிடர்களுக்கே இன்னும் தெரிய வராத ஒரு முக்கிய விதியாகும். சூரியனும் அரசியல் செல்வாக்கை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 5 ல் (பாவத் பாவம் என்ற அடிப்படையில்) அமைந்துள்ளார்.

ஜாதகிக்கு தற்போது உச்ச கிரகமான சனியின் திசைதான் நடப்பில் உள்ளது இதன்படி பார்த்தாலும் சூரியனுக்குரிய ராஜாங்க தொடர்பு ஜாதகிக்கு நீடிக்க வேண்டும் என்ற அமைப்பில் தற்போது மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுகஸ்தானமான 4 ஆமிடத்தில் குரு உச்சமாகி வக்ரமாகிவிட்டார். உச்சமாகி வக்ரமான கிரகம் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும்.  குடும்ப காரகன் குரு நீச நிலை பெற்றுவிட்டாலும் குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் உச்சமானால் அது தன வீட்டில் அமைந்த நீச தோஷம் பெற்ற குருவை வலுவடைய செய்ய வேண்டும். ஆனால் உச்சமான சந்திரன் சர ராசியான தனது கடக ராசிக்கு பாதக ஸ்தானத்தில் 11 ல் உச்சம் பெற்றதால் பயன்படவில்லை.

7 ஆமிட சனி  8 ஆமிட சுக்கிரன், நீச நிலை பெற்ற குரு ஆகியவை ஜாதகிக்கு மண வாழ்வை அமைய விடாமல் தடுத்துவிட்டன என்றால் அது மிகையல்ல.

கீழே இந்தியாவின் மேற்குக்கோடி மாநிலமான குஜராத்தின் முதலமைச்சர் ஆனந்திபென் அவர்களின் ஜாதகம். 


மகர லக்ன ஜாதகத்தில் ஐந்தாமிடாதிபதி சுக்கிரனும் 3, 12 ஆமிடாதிபதியுமான குருவுடன் பரிவர்த்தனை. 12 ஆமிடத்தில் ஒரு கிரகம் பரிவர்த்தனை பெறுகிறது என்றால் ஜாதகர் ஒன்றை இழந்து ஒன்றை அடைய வேண்டும் என்பது விதி. ஜாதகி இழந்தது குடும்ப வாழ்வை. பெற்றது அரசியல் சிறப்பு. ஐந்தாமிடம் அரச வெகுமதிகளுக்குரிய இடம் என்பதால் இது நடந்தது என்பதோடல்லாமல் லக்னாதிபதி சனி அங்கு தனது நட்பு வீட்டில் நல்லவன் ஒருவனோடு அமர்ந்துள்ளான் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வகைகளில் விசேஷ பலம் பெற்ற ஐந்தாமிடத்தை ராஜ கிரகம் சூரியன் பார்த்தது ஜாதகி அரசியலில் ஈடுபட்டு உயர்ந்த நிலையை அடைவார் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.

முதன் முறையாக இந்தியாவின் நன்கு திசைகளின் முக்கிய மாநிலங்களிலும் பெண் முதலமைச்சர்கள். நால்வருமே குடும்ப வாழ்வு அற்றவர்கள். இந்த நான்கு பேர் மட்டுமல்ல பெரும்பாலும் இந்தியாவில் ஆள்பவர்களுக்கு குடும்ப வாழ்வு இந்தியாவை  பொறுத்தவரை இல்லை என்பதே நிதர்சனம். கருணாநிதி போன்ற சிலர்  இதற்கு விதி விலக்காகலாம். ஆனால் விதி விலக்குகள் குறைவானவையே. 

இதற்கு என்ன காரணம்?

சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் இதற்கான பதில் உள்ளது. 

சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் ரிஷப லக்னத்தில் ராகு உச்சம். லக்னத்தில் உச்சம் பெற்ற ஒரு கிரகம் அதன் காரகத்துவத்தை அழுத்தம் திருத்தமாக நிலை நிறுத்தும்.  ராகுவின் அம்சங்களாக குறிப்பிடப்படுவோர்கலீல் சில கீழே.

அதீத கஷ்டங்களை கடந்து வாழ்வில் முன்னேறுபவர்கள், முஸ்லீம்கள், கண்டம் மற்றும் விபத்து போன்ற குரூர சம்பவங்களை எதிர்கொள்வோர், விதவைகள், மணமுறிவுற்றவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள், குடும்ப வாழ்வை இழந்தவர்கள் அல்லது குடும்ப வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அனைத்து விதமான மோசமான நடத்தைகளையும் தனதாக்கிக்கொண்டவர்கள். 

இந்த அம்சங்களில் ஒன்றை பெற்ற ஒருவர்தான் இந்தியாவில் அரசியலில் வெற்றி பெறவும் நீடித்திருக்கவும் இயலும். ராகுவின் அம்சங்களை தவிர பிற அம்சங்களை பெற்றவர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டினாலும் அது வெகு காலம் நீடிக்காது என்பதே உண்மை.

மேற்சொன்ன 4 முதல்வர்களும் இத்தகைய அம்சங்களான குடும்ப வாழ்வு அற்றவர்களும் மணமுறிவுற்றவர்களும்தான்.

இந்தியாவை சிறப்பாக ஆண்ட அன்னை இந்திரா         - ஒரு விதவை.
காங்கிரசை இயக்கிக்கொண்டிருக்கும் அன்னை சோனியா - ஒரு விதவை
தற்போதைய பிரதமர் மோடி                           – மணவாழ்வை துறந்தவர்.
மக்கள் போற்றிய முதலமைச்சர் காமராஜர்   - குடும்ப வாழ்வை துறந்தவர்.
குடும்ப வாழ்வை துறந்தவர் – வாஜ்பாய்.

தமிழ்நாடும் ஆந்திராவும் கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசி என்ற அமைப்பில் வருவதால் கலைத்துறையோடு தொடர்புடையவர்களே சிறப்பான முதல்வர்கள்.  

அதீத கஷ்டத்தில், பசிகொடுமைக்கு தனது முதல் மனைவியை பறிகொடுத்தவர், கலைத்துறையில் கோலோச்சியவர்  – M.G.R

அதீத கஷ்டங்களை சந்தித்தவர்கள் – கக்கன் போன்ற எண்ணற்ற உத்தமர்கள் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்து போற்றப்பட்டிருக்கிரார்கள்.. .

M.G.R மட்டுமல்ல கருணாநிதி, ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, N.T .ராமராவ் ஆகியோர் முதலமைச்சர்களாக வர கலைகளுக்குரிய சுக்கிரனே முக்கிய காரணம்.

காஞ்சி மகா முனிவரின் வாக்கு:
“வாழ்வின் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அந்நிலையை அடைந்ததற்காக இழந்தவற்றை அறிந்தால் அத்தகைய நிலையை அடைய ஒருவனுக்கு மனமே வராது.”

மேற்கண்டவர்கள் ஜெயலலிதா உட்பட முதலமைச்சர்களாவது இந்த காலகட்டத்தின் கட்டாயம். இந்த காலகட்ட விதிக்கு பொருந்தாதவர்களையே காலம் தோல்வியடைய செய்துள்ளது என்பதே நிதர்னமான உண்மை.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,

பழனியப்பன்.