Showing posts with label தோஷங்கள். Show all posts
Showing posts with label தோஷங்கள். Show all posts

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 30 September 2021

யாருக்கோ திருமணம் – பகுதி இரண்டு!

கடந்த பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு வருகிறது. கடந்த பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.


சூரிய-சுக்கிர இடைவெளி அதிகமிருப்பவர்களின் கவனம் பெரும்பாலும் பொருளாதாரத்தை நோக்கிய திசையில் இருப்பதை நடைமுறையில் காணமுடிகிறது. சுக்கிரன் சூரியனை விட்டு அதிக தூரம் விலகி விடுவதால் சுக்கிரனின் காரகமான இல்லற நாட்டமும் இத்தகையோரை விட்டு விலகி விடுவதாகவே தோன்றுகிறது. இயல்பான இத்தகைய எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்கள் ஒருவரை ஆக்கிரமிக்கின்றன எனில் எதிர்மறை எண்ணங்களுக்குரிய  ராகு-கேதுக்களின் பிடியில் இத்தகையோர் அகப்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். சுக்கிரனின் காரகங்கள் பாதிப்புக்குள்ளாகும் அதே வேளையில் இவர்களின் எதிர்பார்ப்புகள் பொருளாதாரத்தின் பக்கம் திசை திரும்பி விடுகிறது. மேலும் துணை பற்றிய எண்ணம் குறையும்போது அதற்காக தனக்கான துணையை தேர்ந்தெடுப்பது பற்றிய எண்ணங்களை வளர்ப்பதற்குப் பதில், தனது எண்ணைகளை ஒத்த ஒரு தன்பாலினரையே நாடுகின்றனர் என்பதுதான் இத்தகைய ஜாதக அமைப்பினரின் விபரீதம். இத்தகைய எண்ணம் ஏற்படும் சூழலில் மற்றவர்களைவிட தனித்து தெரிவதற்காக தங்களது தோற்றத்தில் சில வித்தியாசமான அமைப்புகளையும்  இவர்கள் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 1980 ல் பிறந்த ஒரு ஆண். இவருக்கு சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 பாகைகளாக உள்ளது. களத்திர காரகன் சுக்கிரன் 8 ல் மறைந்தாலும் தன் வீட்டில் ஆட்சி பெறுவதும், 7 ஆமதிபதி செவ்வாய் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் வீட்டை தனது 8 ஆம் பார்வையில் வைத்திருப்பதும் இவருக்கு குடும்ப வாழ்வை தருகிறது. ஆனால் இவர் குடும்பத்தோடு இணைந்திருப்பதை அது பாதிக்கிறது. ஜாதகர் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து வேலை செய்கிறார். இந்தியா வந்து சில மாதங்கள் குடும்பத்தோடு இருக்கும்போது கருத்து வேறுபாடு தலைதூக்குவதாக கூறுகிறார். ஜாதகருக்கு கடகத்தில் உள்ள ராகு திசை நடக்கிறது. இரட்டைப்படை ராசியில் நிற்கும் ராகு திசையை அடுத்து ஒற்றைப்படை ராசியில் உள்ள குரு திசை வரும் வரை இவர் நீடித்து குடும்ப தொடர்பில் இருப்பது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜாதகருக்கு இந்த நிலையை சொல்லி தெளிவுபடுத்தினால் போதும்.  

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்..


ஜாதகர் 1969 ல் பிறந்த ஒரு ஆண். முன் ஜாதகத்தில் பார்த்த சில அமைப்புகள் இதிலும் உள்ளன. இவருக்கும் சூரிய-சுக்கிர இடைவெளி 42 பாகைகள்தான். ஆனால் இவருக்கு திருமணம் ஆகவில்லை. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்தில் நீசம் பெற்று லக்னத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதகாதிபதி சனி, பாவ கர்த்தாரி தோஷம் பெற்ற 7 ஆமிடத்தையும் பார்த்துதான்.  ஜாதகர் திருமண காலத்தில் சுக்கிர திசையை கடந்துள்ளார். ஆனால் சுக்கிரன் 8 ஆமதிபதி செவ்வாயின் சாரம் பெற்று மிருகசீரிஷம்-2 ல் நின்று, பாதகாதிபதி சனியின் அனுஷம்-3 ல் இருந்து 8 ஆமதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் செவ்வாயின் 8 ஆமிட பார்வையின் பலனையே சுக்கிரன் வழங்க வேண்டியவராகிறார். களத்திர காரகன் சுக்கிரனுக்கு 8 ஆமிட செவ்வாய் தொடர்பு மறுப்பை தெரிவிப்பதால் ஜாதகருக்கு திருமண வாழ்வு மறுக்கப்பட்டுள்ளதை உணரலாம். இவருக்கு பரிகாரங்களோ வழிபாடுகளோ பலனளிக்காது.

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். சூரிய சுக்கிர இடைவெளி 42 பாகைகள். ஜாதகர் 5 , 10 க்குரிய சுக்கிர திசையில் திருமணம் செய்துகொண்டார். ஜாதகருக்கு கப்பலில் பணி. எனவே பல காலத்திற்கு பிறகுதான் குடும்பத்தோடு இணைவார். 5 ஆமிடம் என்பது 7 க்கு லாபமாக வரும் பாவம் என்பதால் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 1௦ ஆம் பாவம் என்பது 7 க்கு 4 ஆம் பாவமாக வரும் இரட்டைப்படை பாவமாகும். பொருளாதாரத்திற்கு சிறப்பை வழங்கும்  இரட்டைப்படை பாவங்கள் இல்லறதிற்கு சிறப்பல்ல. எனவே மனைவியை பிரிந்திருந்தார். அடுத்து வந்த சன்னியாசி கிரகமான கேது திசையும் இல்லற சிறப்பை தரவில்லை.  தற்போது 11 ஆமிடத்தில் இருந்து செயல்படும் புதன் திசையாவது குடும்பத்தோடு தன்னை இணைத்து வைக்குமா என எதிர்பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் சூரிய-சுக்கிர இடைவெளி பாதிப்பை தருவதற்கு திசா-புக்திகள் காரணமாகின்றன. கணவனை குறிக்கும் செவ்வாய்க்கு மனைவியை குறிக்கும் சுக்கிரன் பாதகம் பெற்றதும் இவரின் நிலைக்கு காரணம்.

ஜாதக ரீதியாக சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிகம் இருப்போர் எதிர்கொள்ளும் விளைவுகள்.

இத்தகைய ஜாதக அமைப்பினர் பலருக்கு சிறு வயதில்  பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் ஏனையோரைவிட மிக அதிகம். இதனால் அவர்களது எதிர்கால குடும்ப வாழ்வு பாதிக்கும். சிறு வயதில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தங்களது மகன்களை தவறான நபர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பது.

சிற்றின்ப ஆசை தலைதூக்கும் பதின்ம வயதில் தவறான நண்பர்களாலும், நவீன தொலை தொடர்பு சாதனங்களாலும் பாலியல் காட்சிகளை பார்த்து கெட்டுப்போகும் சிறார்களுக்கும் குடும்ப வாழ்வு பாதிக்கும். எனவே பெற்றோர் தங்கள் மகன்களின் நண்பர் வட்டாரத்தின்மீது ஒரு கண் வைத்திருப்பது மிக முக்கியம்.

இயல்பான மனிதர்களோடு பழகாமல் மிக வித்தியாசமான நபர்களை தங்களது ஆதர்ஷ நாயகனாக பாவித்தல் இவர்களது மன ஓட்டத்தை சொல்லும். 

சிறுவயதில் ஜாதகரை தனியாக இருக்க விடாமல்  குடும்பத்தோடும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பெரும்பாலான நேரங்களை செலவிட வைப்பது உதவிகரமாக இருக்கும்.

ஜாதகரை தொடர்ந்து ஓய்வு நேரங்களில் பல்வேறு வகை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு உட்படுத்துவது மிகுந்த பலனளிக்கும்.

அவசியமின்றி நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பக்கம் செல்வதை தடை செய்வதும், குறிப்பாக Video Games போன்றவற்றில் ஒருவரின் கவனம் செல்லாமல் தடை செய்வதும் அவசியம். பொதுவாகவே செயற்கை சாதனங்களை அதிகம் நாடுவோருக்கு இல்லற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதை சமீபதித்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்கிறது.

இயற்கையை நேசித்தல், புதிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல், மனவளக்கலை, யோகா, தியானம், தோட்டக்கலை, வீட்டு விலங்குகளை பராமரித்தல் இவற்றோடு திருவிழா போன்ற ஊர் பொது விஷயங்களில் ஜாதகரின் பங்களிப்பு இருக்குமாறு பார்துக்கொள்வது இத்தகையோரை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க பெருமளவில் உதவும்.

 தீர்வுகள்.

பல காலம் ஒரே இடத்தில் வசிப்பதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக இருக்குமென்பதால் இடமாற்றமும் இவர்களுக்கு சிறந்தது. 

இவர்களாக திருமணதிற்கு தயாராகும் முன் திருமணம் செய்விப்பது மணமுறிவுக்கு வழிவகுக்கும். எனவே ஜாதகர் தனது எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீண்டு வரும் வரை பெற்றோர் ஜாதகருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு இல்லற நாட்டம் குறைவு எனில் அவரது துணைவருக்கும் அதுபோன்றே ஜாதக அமைப்பு இருக்குமாறு தேர்ந்தெடுப்பது நன்று.

இதர ஜாதக அமைப்புகள் சாதகமற்று இருப்பின், அதிகமான சூரிய-சுக்கிர இடைவெளி  ஒரு சந்நியாசி யோகம் போல செயல்படும் என்பதை மேலே பார்த்த இரண்டாவது ஜாதகம் உணர்த்துகிறது. இத்தகையோர் குடும்பத்தோடு எப்போதும் இணைந்து இருப்பதை கிரகங்கள் அனுமதிக்காது. மீறி இருப்பின் பிரிவினையை தூண்டும் என்பதால் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து வெளியிடம் சென்று வேலை பார்ப்பது குடும்பம் பிரியாமல் இருக்க வழிவகுக்கும்.

இத்தகையோருக்கு உளவியல் சிகிச்சையே மிகுந்த பலனளிக்கும்.

வழிபாடுகள்.

வழிபாடுகளை பொறுத்தவரை ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரக அம்சங்களை வழிபடுவது பலனளிக்கும்.

இத்தகையோருக்கு சர்ப்ப தோஷம் இயல்பாகவே செயல்படும் என்பதால் சர்ப்ப தோஷங்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளும் உதவும்.

சிவன் கோவிலில் இரவு இறுதியாக செய்யப்படும் பள்ளியறை பூஜையில் ஜாதகரை பங்கேற்க செய்வது பலனளிக்கும்.   

ஜாதக ரீதியாக திசா-புக்திகள் சாதகமற்று இருப்பின் அதற்குரிய வழிபாடுகளை தகுந்த ஜோதிடரை நாடி தெரிந்து செய்வது பலன் தரும்.  

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Saturday, 25 September 2021

யாருக்கோ திருமணம்!

 

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவர். அதற்கு ஒரு ஜாதகரின் குண நலன்களை அறிந்து சாதகமான சூழலில் பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொருள். இதுவன்றி அவசரசப்பட்டு முன்னரே திருமணம் செய்விப்பது ஒருவரது இல்லறத்தில் சிக்கலை ஏற்படுத்தும். ஒருவரது குண நலனை புறந்தள்ளிவிட்டு சாதகமற்ற கிரக சூழலில், வசதி வாய்ப்புகள் ஏற்பட்டுவிட்டன என்பதை மட்டும் வைத்து திருமணம் செய்விப்பது பாதிப்பை ஏற்படுத்தும். திருமணதிற்கு ஒருவர் உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோ ரீதியாகவும் தயாராக இருக்கிறாரா என்று கவனித்து, அவரது எண்ணங்களை புரிந்து  பிறகு முடிவு செய்வதே நல்லது. கால மாற்றத்தில் இன்று நட்சத்திரப் பொருத்தங்களைவிட  கிரக ரீதியான மற்றும் பாவ ரீதியான பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மேற்சொன்ன அனைத்தையும் விட, திசா-புக்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒருவரது திருமண வாழ்வு சிறக்க லக்னத்திற்கு 7 ஆமிடமும் ஏழாமதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது அவசியம். இதனோடு கால புருஷனுக்கு 7ஆமிடமான துலாமும் அதன் அதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது மிக அவசியம். இவற்றில் பாதிப்பிருந்தால் ஒரு ஜாதகரது திருமண வாழ்வில் சிரமங்கள் ஏற்பட திசா-புக்திகளின் அடிப்படையில் வழியுண்டு. முக்கியமாக இல்லற இன்பத்தின் அதிபதி என்று கூறப்படும் சுக்கிரன் நிலை கவனிக்கப்பட வேண்டும். ஆனால் சுக்கிரன் உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனிடமிருந்தே ஒளியைப்பெற்று பிரதிபலிக்கின்றன. சூரியனுக்கு சுக்கிரனுக்கும் அதிக பட்சமாக்க 46 பாகைக்கும் சற்று கூடுதலாக அமையும். இவ்விடைவெளி 4௦ பாகைக்கு மேற்படின், அங்கு சுக்கிரனின் காரகங்கள் பாதிக்கப்படும்.  இது மிக நெருக்கமாக அமைந்தாலும் சுக்கிரனின் காரகமான இல்லறம் பாதிக்கப்படும். இந்த இரு நிலைகளிலும் சுக்கிரன் பாதிக்கப்படும் அதே வேளையில் சூரியனின் காரகங்கள்  தீவிரமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே இல்லாத ஒருவர் தொழிலில் சிறப்பாக பொருளீட்டுவது யாருமே இல்லாத ஊரில் யாருக்காக டீ ஆற்றுகிறார் என்ற நிலையை தரும்.   

எனவே சூரிய –சுக்கிர இடைவெளி சரியான அளவில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இந்த சூரிய சுக்கிர இடைவெளி அளவு, தற்போதைய நவீன பாகை முறை ஜோதிடத்தில் ஒருவரது திருமண வாழ்வை எடை போடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.  

முதலாவதாக ஒரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ஜாதகத்தில் சூரியனுக்கும் சுக்கிரனுக்குமான இடைவெளி அதிக பட்ச இடைவெளியில் 46 பாகைக்குமேல் உள்ளது. இவருக்கு திருமணம் பற்றிய எண்ணமே மிக குறைவாக உள்ளது. இவரை வீட்டோர் பெண் பார்க்க அழைத்துச்  செல்லுமிடத்தில் யாருக்கோ திருமண ஏற்பாடு நடப்பது போன்று நடந்துகொள்வதாக வீட்டோர் கூறுகிறார்கள். சூரியன் சுக்கிரன் இடை வெளி 4௦ பாகைகளுக்கு மிகுந்ததால்தான். இது போன்ற மனோ நிலை ஒரு ஜாதகருக்கு ஏற்படும். இவ்வமைப்பில் எந்த கிரக திசா-புக்தி நடந்தாலும் இவர்களின் மனோபாவம் பெரிதாக மாறிவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிக பட்ச சூரிய சுக்கிர இடைவெளி அமைபவர்களுக்கு இடது கை பழக்கமும், தன்பால் ஈர்ப்பும் (Homo sex), ஒரு காதில் கடுக்கண்  போடுவது போன்ற  வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு விருப்பமின்றி திருமணம் செய்து வைத்தால்  மண முறிவு ஏற்படும். மேற்கண்ட ஜாதகர் ஒரு காதில் கடுக்கண் போட்டுள்ளார். சுய தொழில் செய்யும் 32 வயதாகும் ஜாதகருக்கு இதுவரை திருமணம் நாட்டம் வரவில்லை. அதனால் திருமணமும் நடக்கவில்லை.

கீழே இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்த ஜாதகை 1985 ல் பிறந்தவர. 36 வயதாகும் ஜாதகிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தன, குடும்ப காரகரான விரையாதிபதி குரு லக்னத்தில் நீசமானதால், குடும்ப வறுமை இவரை வாட்டியுள்ளது. இவர் வேலை செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவராக இருக்கிறார். இவரது ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிக பட்ச இடைவெளியான 46 பாகையில் இருப்பதை கவனியுங்கள். இவ்வமைப்பு இயல்பிலேயே ஒருவருக்கு இல்லறத்தில் நாட்டக்குறைவை அல்லது அதை நோக்கி செல்வதை தடை செய்யும் வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும். இந்த ஜாதகி தந்தையின் வறுமையே தான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமைக்கு காரணம் என்கிறார். சிரம காலத்திலும் தன்னை நாடி வந்த காதல்  மற்றும் திருமண  வாய்ப்புகளை புரந்தள்ளி உள்ளார். தற்போது தந்தை காணாமல்போய்  விட்டார். சூரியன் இந்த ஜாதகத்தில் 12 ல் மறைந்து லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாகவும் வருகிறார். இதனால் சூரியன் தனது காரகதுவ அடிப்படையில் ஜாதகியின் வாழ்வை பாதித்துள்ளது. தனது தந்தை உயிரோடு இருந்தால் நிச்சயம் தங்களை தொடர்புகொள்ளாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார். 36 வயதில் தற்போதுதான் தனக்கு திருமண நாட்டம் வந்துள்ளது என்கிறார். இதிலிருந்து அறிய வருவது, தோஷத்தை ஏற்படுத்தும் சூரியனின் அம்சமான  தந்தை, ஜாதகியை  விட்டு விலகியதால்தான் ஜாதகிக்கு திருமண எண்ணமே ஏற்பட்டுள்ளது. நீச குரு  தனது மூன்றாவது சுற்றை தற்போது கோட்சாரத்தில் நிறைவு செய்வதும் மற்றொரு காரணம். சூரியனிலிருந்து அதிக பாகை  இடை வெளியில், லக்னத்திற்கு 2 ல், பாதகாதிபதியோடு செவ்வாயோடு இணைந்து  நிற்கும் சுக்கிரன், பொருளாதார அடிப்படையில் குடும்ப வாழ்வை பாதிக்கிறார். காரக கிரகங்கள் பகையாகவும், பாதிப்பான நிலையில் இருப்பதாலும் ஜாதகியின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது..

கீழே மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.

இந்த ஜாதகர் 1987 ல் பிறந்த ஒரு ஆண். 34 வயதான இவருக்கு இதுவரை  திருமணமாகவில்லை. ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளியானது அதிக பட்ச இடைவெளியான 46 பாகை என்பதை கவனியுங்கள். இதனால் இவருக்கு  இயல்பாகவே இல்லற நாட்டம் குறைவு. இவருக்கு திருமண அமைப்பை பற்றி ஜாதகம் பார்த்தபோது ஜாதகரின் சார்பாக அவரது நண்பர்தான் பேசினார். ஜாதகர் யாருக்கோ திருமண வாழ்வு பற்றி கேட்கிறார்கள் என்ற ரீதியில் தனது திருமண அமைப்பை பற்றி ஜோதிடரிடம் பேசக்கூட முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்காவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1988 ல் பிறந்த ஒரு ஆண். சூரியன் சுக்கிர இடை வெளி 4௦ பாகையாக உள்ளது. ஆனால் இதில் ஒரு சிறப்பு சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகியுள்ளனர். சூரியன் கால புருஷனுக்கு 7 ஆமிடத்தில் நீசம் பெற்ற நிலையில் பரிவர்தனையாகியுள்ளது. பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதால் ஜாதகர் மிக நேர்த்தியான தோற்றம் கொண்டவர். குடும்ப காரகன் குரு 8 ல் வக்கிரம்  பெற்று 2 ஆமிடத்தை பார்ப்பதால் நல்ல வேலையில் சிறப்பான சம்பாத்தியத்திலும் இருப்பவர். பேச்சு சாதுர்யம் மிக்கவரும் கூட. இவருக்கும் திருமண ஆசை இல்லை. ஆனால் குறுக்கு வழியில் காம சுகத்தை திட்டமிட்டு அனுபவிப்பவர். காரணம், கால புருஷனுக்கு 7 ல் 11 ஆமதிபதி நீசம் பெற்றதாலும், பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதாலும்தான். 32 வயதை கடந்த ஜாதகர் முறையான திருமண வாழ்வு தனக்குத் தேவையில்லை என்கிறார்.

இப்பதிவில் நாம் அலசிய ஜாதக அமைப்பினருக்கான தீர்வுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Saturday, 14 August 2021

இரிடியத்தில் இன்வெஸ்ட் பண்ணலாமா?

 



மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ்ந்த பண்டைய காலத்தில் சக மனிதர்களிடம் நேசம் அதிகம் இருந்தது. அதன் காரணமாக சக மனிதரை ஏமாற்றுவதும் குறைந்திருந்தது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாக தனிமைப்பட்டு நிற்கும்  இன்றைய காலத்தில் சக மனிதன் மீதான நேசம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் சக மனிதனை ஏமாற்றிப்பிழைக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டனர். அரசே மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் சக மக்களை ஏமாற்றுகின்றனர். அதுவும் நவீன மின்னணு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துவிட்ட இக்காலத்தில் இவற்றை சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை காணலாம். பல்வேறு வகையான மோசடிகள் பல்வேறு பெயர்களில் பிரபலமாகிவிட்டன. இரிடியம் மோசடி, மண்ணுள்ளிப்பாம்பு மோசடி, ஈமுக்கோழி மோசடி, இணைய வழி மோசடிகள், கைபேசி வழி மோசடிகள், முகநூல் வழி மோசடிகள் என்று இப்பட்டியல் நீளுகிறது. காலத்திற்குக்காலம் இத்தகைய மோசடிகள் புதிய அவதாரங்கள்  எடுக்கின்றன. தற்போது நடப்பில் உள்ளது அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் அரசியல் ஏஜெண்டுகளின் மோசடிகள்தான். பொதுவாக வங்கியை தவிர்த்து தனி நபர்களிடம் சேமிக்கும் சேமிப்பில்தான் மோசடிகள் நடக்கும் என்றால் தற்போது வங்கியில் பணியாற்றுவோரே மோசடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவை எல்லாவற்றையும் பார்த்து சாதாரண மனிதன் திகைத்து நிற்கிறான். பணம் கொடுத்து  அரசு வேலைக்கு முயற்சிக்கலாமா?, இரிடியம் நபர்களிடம் பணம் கொடுக்கலாமா? என்று என்னிடமும் பலர் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். நமது இன்றைய பதிவு இவற்றை ஆராய்வதே.

இரிடியம் 

பொதுவாக மோசடிகளுக்கு முதன்மை காரக கிரகம் என்று ராகுவை சொல்லலாம். மனிதனின் ஆசையை தூண்டிவிட்டு பிறகு இழப்பை கொடுத்து இறுதியாக உண்மையை உணர்த்துவது ராகு-கேதுக்களின் பணி. கேதுவின் மோசடியில் ஒரு தனித்துவம் இருக்கும். கேது ஆசை காட்டி இழப்பை கொடுத்து பிறகு ஜாதகரை நெறிப்படுத்தும். ஆனால் ராகு,  வகை தொகையற்ற மோசடிகளுக்கு காரக கிரகமாகும். ராகு கொடுக்கும் பாதிப்பிலிருந்து ஒருவர் விரைவில் மீளமுடியாது. சுக்கிரன் வளமையை நேசிக்கும் கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனுக்கு  ராகு-கேதுக்களின் தொடர்பு ஏற்படும் போது அந்த ஜாதகர் பண மோசடியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ராகு-கேதுக்கள் இருவருமே ஆசையை தூண்டி தண்டிக்கும் கிரகங்கள் என்றாலும் தொடர்புடைய திசா புக்தி வரும் வரை இவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராகு-கேதுக்கள் குறுக்கு வழியில் கொடுக்கும் தனத்தை ஒருவர் அனுபவித்து விட்டால் அதன் பிறகு அந்த ஜாதகர் அவற்றின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை எனலாம். அல்லது ஒரு இழப்பை ஜாதகருக்கு கொடுத்துவிட்ட பிறகு அவருக்கு முறையான மற்றும் முறையற்ற வகைகளில் உதவி புரிகிறது.  ஆனால் அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. ராகு-கேதுக்களுக்கு குருவின் தொடர்பு ஏற்பட்டால் அந்த ஜாதகர் ராகு-கேதுக்களின் மூலம் நேர் வழியில் சிறப்பான தனம் ஈட்டுகிறார். உதாரணமாக கைராசி மருந்துவர், மிக நேர்மையான குற்றம் கண்டுபிடிக்கும் அதிகாரி, நேர்மையான நீதிபதி ஆகியோர் இவற்றின் அம்சங்களாகும். இப்படி குரு தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களுடைய ஜாதகர்களுடன், ராகு-கேதுக்கள் ஒரு தெய்வீக சக்தியாக உடன் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த வகை ஜாதகர்கள் மற்றவர்களின் கர்மாவை அவர்களை தண்டிப்பதன் மூலம் தீர்க்க அவதாரம் எடுத்தவர்கள் எனலாம்.

கீழே ஒரு ஜாதகம்.


இந்த ஜாதகி 1964 ல் பிறந்தவர். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மாங்கல்ய பாவமான 8 ஆமிடம் பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துள்ளது.. இதனால் இந்த ஜாதகிக்கு மாங்கல்ய பலமில்லை. கேது சாரத்தில் மேஷத்தில் குரு நிற்கிறார். களத்திர பாவத்தில் சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது முதலில் மாங்கல்ய, பாக்ய ஸ்தானாதிபதியான சனியையும் லக்னத்தில் நிற்கும் ராகு முதலில் 5 ஆம் பாவாதிபதியான சுக்கிரனையும் முதலில் தொடுகின்றனர். ஜாதகிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுக்கிரனை கடக்கும் ராகு அடுத்து தொடுவது களத்திர பாவாதிபதியான குருவைத்தான். இத்தகைய அமைப்புகளால் விதவையானவர் ஜாதகி. 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது நிற்பதால் இவரது மகள் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்துள்ளார். இந்த ஜாதகிக்கு ராகு-கேதுக்கள் தீய பலனை ராகு மற்றும் கேதுவோடு தொடர்புடைய குரு திசையில் கொடுத்துவிட்டன. தற்போது ஜாதகிக்கு பாக்ய ஸ்தானமான கும்பத்தில் மூலத்திரிகோணம் பெற்று நிற்கும் சனியின் திசை 2010 முதல் நடக்கிறது.  

மிதுனத்தில் அமைந்த லக்ன ராகு குறுக்கு வழி சிந்தனையை தூண்டுவார். கேது சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். பணத்தின் மீதான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் தன காரக கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஆத்ம அல்லது தாரா காரகர்களாக இருக்க வேண்டும் அல்லது ராகு-கேதுக்கள் தொடர்பு பெறவேண்டும். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நிற்பது கவனிக்கத்தக்கது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட வலையில் சிக்க வைத்து  ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அந்த குறிப்பிட்ட விஷத்யத்தின் மீது அவரது ஆசையை தூண்ட வேண்டும். ராகு முதலில் தொடப்போவது சுக்கிரனைத்தான். மேலும் ஆசையை தூண்டி சிக்க வைக்கும் காரக கிரகமான கேது பாதக ஸ்தானத்தில் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். எனவே ராகுவும்-கேதும்  ஜாதகிக்கு பணத்தின் மீதான ஆசையை தூண்டுவர். இந்த ஜாதகியை 9 ல் ராகு சாரம் சதையத்தில் நிற்கும் சனியின் திசையில், கேது புக்தியில் இரிடியம் மோசடியாளர்கள்  தொடர்புகொண்டனர். சனி பாக்ய ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினாலும் அவர் திடீர் அதிஷ்டத்தை குறிக்கும் 8 ஆம் பாவத்திற்கும் அதிபதி என்பதாலும் சனி ராகு சாரம் பெற்றதாலும் ஜாதகிக்கு இத்தகைய வாய்ப்பு வந்தது. ஜாதகி அவர்களிடம் பணம் கொடுக்குமுன் என்னை ஜாதகத்துடன் அணுகினார். ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் மிதுனத்தில் ஜனன கால ராகு மீது சென்றுகொண்டிருந்தது.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday, 3 January 2021

காத்திருந்து... காத்திருந்து...

 

காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் காதலிலும் சில வேதனைகளும் வெற்றிகளும் உண்டு. அனைத்திற்கும் ஒரே காரணம், வாழ்க்கையை அதன் இயல்பில் அனுபவிக்க எண்ணாமல் தங்கள் எண்ணப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என எண்ணுவதே. இது சாத்தியமானால் இறைவனுக்கு இங்கே இடமில்லை. காதலால் எந்தகைய ஜாதகத்தினர் சிரமப்படுவர் என்பதை தெரிந்துகொண்டால் அவர்கள் தகுந்த உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கலாம். ஜோதிடமும் அதற்கு உதவும்.


காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். ஐந்தாம் பாவம் 7 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டால் மட்டுமே காதல் திருமணத்தில் முடியும். காதலின் வெற்றியை 3,5,7,11 ஆகிய பாவங்களின் ஒருங்கிணைவு தீர்மானிக்கிறது. காதலில் தோல்வியை 4,6,1௦, ஆகிய பாவங்களும் கேதுவும் தீர்மானிக்கின்றனர். காதல் யாருக்கு தீமையை தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.             

                    


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாம் பாவம் என்பதால் தனது எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தாது மறைக்கக்கூடியது. அதுவும் லக்னமும் ராசியும் ஒன்று என்பதால் இக்குணம் அதிகமிருக்கும். சந்திரன் நீசமாவதால் பெற்றோர்களுக்கு பாதிப்பைத்தரும் ராசியாகும். இந்த ஜாதகி தனக்கு வந்த வரன்களை எல்லாம் பிடிக்கவில்லை என பல ஆண்டுகள் மறைத்தார். ஜாதகத்தில் லக்னாதிபதி மறைவு ஸ்தானமான எட்டாமிடம் மிதுனத்தில் வக்கிர கதியில் அமைந்திருப்பதை காண்க. இயல்பாகவே பிடிவாத காரகனான செவ்வாய் வக்கிரமானால் பிடிவாத குணம் மேலும் கூடும். இதனால் பிடிவாதமாக தனக்கு சாதகமான நிலை வரும்வரை ஜாதகி தனது விஷயங்களை மறைக்கிறார். ஜாதகிக்கு வயது தற்போது 28. இன்னும் திருமணமாகவில்லை. மிக தாமதமாகவே தனது காதலை வீட்டில் தெரிவித்தார். ஜாதகத்தில் சந்திர சூரியர்களுக்கு சஷ்டாஷ்டகத்தில் லக்னாதிபதி இருப்பதால் ஜாதகியின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த ஜாதகி நிறைவேற வழியற்ற தனது காதலால் மிகவும் சிரமப்படுகிறார். ஜாதகியின் காதலை நிறை வேற்ற துணிவுடன் பெற்றோரை தொடர்புகொண்டு ஜாதகியை கரம்பிடிக்க வேண்டிய காதலனே தீர்மானம் எடுக்க முடியாமல் ஜாதகியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஜாதகியின் இளமையை வீணாக்குகிறார் என்பதுதான் இதில் சோகம்.

சரி ஜாதகியின் காதல் இப்படி இழுபறியாக விளங்க காரணம் என்ன?

1993 ல் கேட்டை-2 ல் பிறந்த ஜாதகிக்கு காதலை குறிக்கும் கேது திசையில் காதலுக்குரிய பாவமான 5 ஆம் பாவாதிபதி குருவின் புக்தி 2008 ல் ஜாதகியின் 14 ஆவது வயதில் துவங்கியது. அப்போது முதல் ஜாதகி காதலிக்கிறார். தற்போதுவரை 14 வருடமாக மிக நீண்ட காதல். 2011 மத்தியிலிருந்து ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. களத்திர மற்றும் விரையாதிபதியான சுக்கிரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்று 2, 5 ஆம் பாவாதிபதி குருவின் பூரட்டாதி-1 ல் நிற்கிறார். திசா நாதன் சுக்கிரன் பகை சாரம் பெற்று திக்பலம் பெறுகிறார். திக்பலம் பகை சாரத்தை முறியடிக்கும் என்றாலும் சுக்கிரன் 4 ஆமிடத்திலிருந்து திசை நடத்துவதுதான் பாதிப்பு. காரணம் 4 ஆம் பாவம் திக்பலம் பெற்றாலும் அது காதலை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு விரைய பாவமாகும். இதனால் 5 ஆம் பாவாதிபதி சாரம் பெற்றாலும் 5 க்கு விரையத்திலிருக்கும் சுக்கிரன் 5 க்கு பாதிப்பை தருகிறார். மேலும் சுக்கிரனும் 5 ஆம் பாவாதிபதி குருவும் பகை என்பதை மீறி இருவரும் ஒருவருக்கொருவர் சஸ்டாஷ்டகத்தில் உள்ளதால் காதலை தனது திசையில் நிறைவேற்றிட மாட்டார். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதன் குறைந்த பாகை (2.06) பெற்றதனால் தாரா காரகனாக உள்ளார். தாரா காரகனான புதனே ஜாதகியின் காதலுக்கு முக்கிய காரணம். புதன் தாரா காரகனானதால் ஜாதகியின் காதலில் உண்மையும் ஏக்கமும் இருக்கும். ஆனால் காதலனை குறிக்கும் புதன் சூரியனின் அஸ்தங்கமாகியுள்ளது. இதனால் காதலனுக்கு போதிய தகுதி இல்லை என்பது தெரிகிறது. ஆனால் புதன் சூரியனோடு சேர்ந்ததால் கௌரவமாகவும்,  சனியோடு சேர்ந்ததால் ஜாதகியை ஏமாற்றுபவராகவும் இருப்பார். (புதன்+சனி சேர்க்கை ஏமாற்றத்தை  குறிக்கும்).

ஜாதகத்தில் குரு 7 ஆம் பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்துனைவர் வகையில் ஓரளவு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பாகும். ஓரளவு மட்டுமே என்று கூறக்காரணம், குரு நின்ற வீட்டோன் புதன் அஸ்தங்கம் பெற்றுவிட்ட நிலையில், குருவும் சார அடிப்படையில் பாதகாதிபதி சந்திரனின் ஹஸ்தம்-4 ல் நிற்கிறார். நீச சந்திரன் குடும்ப பாவத்திற்கு  விரையத்தில் லக்னத்தில் நின்று, சந்திரனோடு இணைவு பெற்ற சர்ப்பங்களும் 1 & 7 ல் நிற்பது ஜாதகிக்கு திருமணம் நடக்க கடும் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  மூன்றாவது காமத்திரிகோணமான 11 ஆமிடத்தில் குரு நின்றாலும் அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் காதலனும் பின்வாங்கும் நிலையில் பெற்றோரும் சம்மதிக்காத நிலையில் ஜாதகி விரக்தி நிலையை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜோதிடம் மூலம் தனது வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் என மிக காலம் தாழ்த்திய நிலையில் என்னிடம் ஜாதகி ஆலோசனை கேட்டார். ஜாதகிக்கு சுக்கிர திசை இன்னும் 11 ஆண்டுகள் உள்ளதையும், சுக்கிர திசை சுகத்திற்கு கணவனை கொண்டுவரும் ஆனால் காதலை நிறைவேற்றி வைக்காது என்பதையும் எடுத்துக்கூறினேன். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதனுக்கும் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டகம் (6-8 ஆக) உள்ளது. இது காதலன் வேறு கணவன் வேறு என்பதை தெரிவிக்கிறது. மேலும் மேற்சொன்னபடி காதலனுக்குள்ள பாதகமான அமைப்புகளை எடுத்துக்கூறி இனிமேலும் தனது வாலிபத்தை வீணாக்காமல், பெற்றோர் பார்க்கும் நல்லதொரு வரனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகிக்கு சுக்கிர திசையில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குரு புக்தி இந்த ஆண்டு பிற்பகுதியில் துவங்குகிறது. ராகு கேதுக்கள் கோட்சாரத்தில் லக்னத்தைவிட்டு விலகி லக்னத்திற்கு 6 மற்றும் 12 ஆக அதாவது 2022 ராகு-கேது பெயர்ச்சிக்குப்பிறகு கோட்சார குருவும் மீனத்திற்கு வரும் காலம் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501     

Sunday, 27 September 2020

கடனில் கரையும் கர்மவினைகள்!

 


வாழ்வில் மீதம் வைக்காமல் தீர்த்துவிடக்கூடிய செயல்கள் என்று நெருப்பு, வியாதி, எதிரி, கடன் என்று ஒரு பட்டியலை குறிப்பிடுவதுண்டு. இவை நான்குமே மனித வாழ்வை அழித்துவிடக்கூடியவை.  இதில் வியாதியைவிட சற்று கடன் நன்று என்று கூறுவதுண்டு. “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றொரு பிரபலமான ராமாயண வாசகம் கடனின் துயரை கூறுகிறது.   பேராசையைத்தவிர கடனுக்கு காரக கிரகங்கள் என்று கூறினால் அது ராகு-கேதுக்கள்தான். தன காரகன் குரு, ஜனன காலத்தில் கேதுவோடு தொடர்பாகி கோட்சாரத்திலும் குருவும் கேதுவும் தொடர்பாகும்போது  நிச்சயம் கடன் ஏற்படும். இதை தவிர்க்க இயலாது. கால புருஷனுக்கு 6 ஆம் அதிபதியான புதனின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து தன ஸ்தானமும் அதன் அதிபதியும் ஜனன ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அப்போதும் கடன் ஏற்படும். கடனால் படும் நீடித்த துயரத்தை சனியும், அதீத துயரத்தை செவ்வாயும், கடனின் குரூரத்தன்மையை ராகுவும், கடனுக்கான சட்ட நடவடிக்கைகளை கேதுவும் சுட்டிக்காட்டும். கடன் கொடுக்கக்கூடாதவர்களுக்கான ஜாதக அமைப்பைப்பற்றி இப்பதிவில் நாம் ஆராய்வோம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் லக்னத்திற்கு விரையத்தில் கால புருஷனுக்கு ஆறாம் அதிபதி புதன், கேது, 4 ஆமதிபதி நீச செவ்வாய் ஆகியோரோடு இணைந்துள்ளார். தன ஸ்தானாதிபதி புதனும் தன காரகன் குருவும் வக்கிரமானது பொருளாதார விஷயத்தில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்ற ஜாதகியின் தீவிர எண்ணத்தை சுட்டிக்காட்டுகிறது. லக்னாதிபதி இப்படி கடனின் காரக கிரகங்களோடு விரையத்தில் மறைந்து குருவும் வக்கிரமானதால் ஜாதகி கடனால் தனது வாழ்வில் நிம்மதி இழப்பார் என எதிர்பார்க்கலாம். லக்னபுள்ளி மகம்-3 ல் விழுந்துள்ளது ஜாதகி கடன், வழக்கு இவைகளோடு தொடர்புடையவாராக  வாழ்வில் தனது கர்மாவை கழிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜாதகி ஒரு வழக்கறிஞர். ஜாதகத்தில் குரு கேதுவின் மூலம்-2 லும், கேது குருவின் புனர்பூசம்-4 லும் நின்று சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். ஜாதகிக்கு தற்போது செவ்வாய் திசையில் சனி புக்தி கடந்த 2019 முற்பகுதியில் துவங்கியது. செவ்வாய் வியையத்தில் நீசமாகி கேதுவால் தீண்டப்பட்டுள்ளது. கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுக்கக்கூடியது. இந்த ஜாதகிக்கும் கேது ஆசையை தூண்டி பிறகு அவஸ்தைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறார். பாதக ஆதிபத்யம் பெற்ற செவ்வாயின் திசையில் செவ்வாய்க்கு பாதகத்தில் செவ்வாயின்  மிருகசீரிஷம்-1 ல் நிற்கும் 6 ஆமதிபதி சனி புக்தி துவங்கியதும் ஜாதகி கேதுவின் ஆசை வலையில் விழுந்தார். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனது மிக கணிசமான தொகையை கடனாக அசையாச்சொத்து ஒன்றின் பெயரில் ஜாதகி ஒருவருக்கு கொடுத்தார். கோட்சாரத்தில் ஜனன காலத்தில் வக்கிரமான குருவோடும், கோட்சார குரு கோட்சார சனியோடும் கோட்சார கேது தொடர்புகொண்ட 2019 முன்பகுதியில் இது நடந்தது.  

கடன் பெற்றவர் தனது நிலப்பத்திரத்தை அடமானமாக வைத்தே கடனை பெற்றிருக்கிறார். சிறு விஷயங்களுக்கு ஜோதிடர்களை நாட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவரின் வாழ்நாள் ஆதாரமான விஷயங்களில் ஈடுபடும்போது தகுந்த தெளிந்த  ஜோதிடர்களின்  ஆலோசனையை நாட வேண்டியது அவசியம். ஒருவர் ஈடுபடும் செயலின் காரக கிரகம் அவரது ஜாதகத்தில் எந்த நிலையில் அமைந்துள்ளது மற்றும் நடக்கும் திசா-புக்திகள் அந்த காரக கிரகத்திற்கு எப்படி ஒத்துழைக்கும் என்று அறிந்து தனது செயல்களை திட்டமிடுவது அவரது வாழ்வின் பல சிரமங்களை குறைக்க வழிவகுக்கும். இந்த ஜாதகத்தில் நிலப்பத்திரத்தை ஈடாக பெற்று கடன் கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை (Unmovable Property) குறிக்கும் காரக கிரகமான செவ்வாயும், பத்திரத்தை குறிக்கும் காரக கிரகமான புதனும், லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் அமைந்துள்ளனர். அதிலும் செவ்வாய் அசையா சொத்தை குறிக்கும் 4 ஆவது பாவம் விருட்சிகத்திற்கு 9 ஆம் பாவம் கடகத்தில் நீசம் பெற்று அது லக்னத்திற்கு விரையமாகவும் அமைந்துள்ளது. கால புருஷனுக்கு 4 ல் கடகத்தில் இப்படி ஒரு சூழல் அமைவது ஜாதகி தனது வாழ்நாளின் செவ்வாய் திசா-புக்தி காலங்களில் பூமி வகைகளிலும், புதன் தொடர்பான திசா–புக்தி காலங்களில் பத்திரம் தொடர்பான கடன் வகைகளில் பாதகத்தையும் சந்திப்பார் என்பது ஜாதகத்தில் தெளிவாக உள்ளது. முக்கியமாக ஜாதகிக்கு செவ்வாய் திசை நடப்பில் உள்ளது. இந்த சூழலில் செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தியில் கடந்த 2019 முற்பகுதியில் ஜாதகி கடன் கொடுத்துள்ளார். சனி புக்தியில் மிகப்பெரிய தனத்தை கடனாக கொடுத்ததற்கு காரணம், சனிக்கு திரிகோணத்திலும் திசா நாதன் செவ்வாய்க்கு 7ல் லக்னத்திற்கு 6 ல் ராகு நின்று திசா-புக்தி நாதர்களுக்கு ராகு இடும் கட்டளைதான். கடன் கொடுத்த பிறகு ஜாதகிக்கு ஓரிரு மாதங்கள் வட்டி வந்தது. தற்போது கொடுத்த பணமாவது வந்துவிடுமா என்ற நிலைதான். ஈடாக பெற்ற நில பத்திர வகையில் சில பாதகங்கள் இருப்பதை தற்போது அறிந்து ஜாதகி திகைத்து நிற்கிறார். திசா-புக்தி அடிப்படையில் அலசும்போது ஜாதகிக்கு வரவிருக்கும் ஏழரை சனியின் இறுதி காலத்தில்தான் அவரது பணம் பல போராட்டங்களுக்குப்பிறகு திரும்பக்கிடைக்கும் என்று தெரிகிறது.  

ஜாதகிக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பதை 4 & 12 ஆமிடங்களும் அவற்றில் நின்ற கிரகங்களும் சுட்டிக்காட்டுகின்றன. 12 ஆமிடத்தில் 4 ஆமதிபதி நீசமானது ஜாதகிக்கு தாயாதிகள் வழியில் பூமிவகையில் எற்பட்ட இட தோஷம் சாபமாக மாறியுள்ளதையும் அதில் சூரியன் தொடர்பானது இது தலைமுறைகளாக தொடரும் சாபம் என்பதையும்,  புதன், கேது தொடர்பாகி 12 ல் நின்றது நில பத்திர வகைகள் மூலம் ஏற்பட்ட பாதிப்பே சாபத்திற்கு காரணம் என்றும் அறிய முடிகிறது.

ஒருவர் வட்டித்தொழிலில் பொருளீட்டவேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் வட்டித்தொழிலின் காரக கிரகங்களான ராகுவும் கேதுவும் பொருட்பாவங்களான 2,6,10,11 ஆகிய பாவங்களில் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதில் ராகுவின் பங்கே பிரதானமானதாகும். கேது வட்டித்தொழிலில் ஏற்படும் சிரமங்களை சட்டரீதியாக எதிர்கொள்ளும். ராகு மூர்க்கக்குணத்தனத்தொடு எதிர்கொள்ளும். இவைகளுக்கு குரு சுக்கிரன், தொடர்பு ஏற்படின் வட்டித்தொழில் சிரமமின்றி நடைபெறும். இவைகளுக்கு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் பல பிரச்சனைகள் ஏற்படும். வரக்கூடிய பிரச்சனைகள் மிகுந்த குரூரத்தன்மையோடு அடிதடி, கடத்தல் என்ற வகையில் எதிர்கொள்ளவைக்கும். எனினும் வட்டித்தொழிலில் ஈடுபடுவோரை ஒருவகையில் மற்றவர்களின் கர்மாவை தீர்க்க உதவிடுபவராக கருதலாம். பிறரின் பாவ கர்மாவை இவர்கள் வட்டி என்ற வகையில் பெற்றுக்கொண்டு இவர்கள் கழித்துவிடுகின்றனர் என்றே கருதவேண்டியுள்ளது. இப்படி வட்டித்தொழிலில் சம்பாதிப்பவர்களுக்கு குடும்ப வகையில், சந்ததிகள் வகையில் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.

விரைவில் மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 08300124501