Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, 14 September 2021

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்!

காதல் இன்றைய காலத்தில் நிறைய மாறிவிட்டது. புறா விடு தூதிலிருந்து குருஞ் செய்திகளில் பரிமாறிக்கொள்ளப்படும் காலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக பொருத்தம் பார்க்கத்தான் ஜோதிடரை நாடி வருவர். காதலிப்பவர் தனக்கு தகுந்தவரா? எனக் கேட்டு ஜோதிடரை அணுகுவோரும் உண்டு. சமீபத்தில் காதலை சொல்ல நல்ல நாள் கேட்டு ஒரு அன்பர் வந்தது ஆச்சரியமூட்டும் அனுபவம். வந்தவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்  அவருக்கு ஜாதகத்தை பெற்றோர் எழுதி வைக்கவில்லை. எனவே பிரசன்னம் பார்க்க வேண்டுமென்றார்.


அவரது கேள்வி நான்கு.
 

1..சக ஆசிரியையின் செயல்கள் என்னை கிளர்சியூட்டுகின்றன. அவரது செயல்கள் என்னை வசீகரிப்பதன் அறிகுறியா?

2. அல்லது “நான் தவறாக புரிந்துக்கொண்டுள்ளேனா?”

3. எனது எண்ணம் சரி எனில் அவரிடம் எனது காதலை சொல்ல நாள் குறித்து சொல்லவும்.

4. எனது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் எங்கள் மண வாழ்வு எப்படி இருக்கும்? என்று கேள்விகள் இருந்தன.

ஆசிரியருக்கு தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அடிவாங்காமல் அவமானப்படாமல் தனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலில் ஜோதிட ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.. அவரது பயத்திற்கு காரணம் அவர் விரும்புவதாக சொல்லும் சக ஆசிரியை வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதுதான்.

ஆசிரியருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயம் ஆரூடம் இரண்டும் ஒன்றாக உள்ளது. இது கேள்வியாளர் தனக்காகவே கேள்வியை கேட்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. உதயமும் ஆரூடமும் சிம்மமாகி அங்கு சூரியன் ஆட்சி பெற்றுள்ளது கேள்வியாளர் அரசுத் தொடர்புகொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது. உதயத்தை குரு பார்ப்பதும், உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உச்ச புதன் இருப்பதும் வந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை குறிப்பிடுகிறது. உதயம் கேள்வியாளர் என்றால் 7 ஆமிடம்  இவர் காதலை சொல்லவிருக்கும் ஆசிரியையைக் குறிக்கும். 7 ஆமிடத்தில் குரு இருந்து சூரியன் பார்வை பெறுவது எதிராளியும் ஆசிரியையே என கேள்வியாளர் கூறியது சரியே என்பதை தெரிவிக்கிறது. 

இப்போது இவர் காதலின் நிலை என்ன என்பதை காண்போம். உதயம் இரண்டாமிடத்தில் உள்ள உச்ச புதனையும், நீச சுக்கிரனையும், நோக்கி நகர்கிறது. புதன் காதலின் காரக கிரகம் என்பதோடு, அவர் தகவல் பரிமாற்றம், கடிதம் இவற்றின்  காரக கிரகமும் கூட. மேலும் உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சுக்கிரன் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாவது பாவத்தின் அதிபதியும் கூட. எனவே கேள்வியாளர் காதலை தெரிவிக்க  தயாராக இருக்கும் நிலையை இரண்டாமிட கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதன் காதலியையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். இவை இரண்டும் ஒன்றாய் உதயத்திற்கு இரண்டில் அமைவது, காதலிக்கவுள்ள பெண்ணை மனைவியாக அடையும் கேள்வியாளரது ஆசையை குறிப்பிடுகிறது. காதல் பாவமான உதயத்திற்கு 5 ஆமிடம் தனுசில் ஜாமச் சந்திரன் அமர்ந்து அதன் அதிபதி ஜாம குருவால்  உதயதிற்கு லாபத்தில் மிதுனத்தில் இருந்து பார்ப்பது சிறப்பு என்றாலும் வெளிவட்ட குருவிற்கு உள்வட்ட குருவே ஆதார சக்தி. உள்வட்ட குரு வக்கிரம் பெற்று 7 ல் அமர்ந்து உதயத்தை பார்க்கிறார். உதயத்தில் சூரியனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் காதலை சொல்ல துணிச்சல் ஜாதகருக்கு உண்டென்றாலும் வெளிவட்ட செவ்வாய் நீசம் பெற்று, துணிச்சல் ஸ்தானாதிபதி உள்வட்ட சுக்கிரனும் நீசம் பெற்று அமைந்தது ஆகியவற்றால் கேள்வியாளருக்கு சிறிது பயம் கலந்த ஆர்வம் இருப்பது தெரிகிறது. உச்ச, நீச கிரகங்களே கேள்வியாளரின் சிந்தனையில் மையம்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப களத்திர காரக கிரகங்களான சுக்கிரன், செவ்வாயோடு காதல் காரகன் புதனும் உச்சம் பெற்றது ஜாதகரின் சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது.   

இப்போது இவரது காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பார்ப்போம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் உதயத்திற்கு இரண்டாம் வீட்டில் நீசம் பெறுவது கேள்வியாளர் குறிப்பிடும் பெண்ணுக்கு உள்ள பாதிப்பை கூறும் அல்லது கேள்வியாளரின் எண்ணத்திலேயே உள்ள தகுதிக் குறைவை குறிப்பிடும். இதை தனது மதத்திற்கு மாறுப்பட்ட அளவிலான எண்ணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஜாம சுக்கிரன் உதயத்திற்கு எட்டாமிடமான மீனத்தில் உச்சம் பெற்று மறைவது, எதிராளி ஆசிரியை தற்போது வசதியாக இருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. சுக்கிரனும் புதனும் காதல் பாவமான 5 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளாமல் அவமான பாவமான எட்டாமிடத்தையே தொடர்புகொள்கின்றன.  மேலும் உதயத்திற்கு எட்டாம் அதிபதி 7 ல் இருப்பதால் எதிராளியால் கேள்வியாளருக்கு அவமானம் ஏற்பட இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. 7 ஆமிட குருவே உதயத்திற்கு 11 ல் இருப்பது கேள்வியாளரின் ஆவலை தூண்டுவதோடு முறையற்ற தொடர்பு குறித்த தகவலையும் தெரிவிக்கிறது. எனவே கேள்வியாளர், எதிராளியிடம் தனது காதலை தெரிவித்தால் அவமானப்பட நேரும். சக ஆசிரியையின் நடவடிக்கைகளை கேள்வியாளர் தவறாக புரிந்து கொண்டுள்ளதையே பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. 

காதல் காரகன் புதன் வெளிவட்டத்தில் உதயத்திற்கு பாதக ஸ்தானமாக மேஷத்தில் கவிப்புடன் உள்ளது இதனை உறுதி செய்வதாக உள்ளது. உதயதிற்கு 6 ல் இரு சனியும் உள்ளது, தவறாக எடுக்கப்படும் கேள்வியாளரின் ஒரு முன் முயற்சியால் அவரது வேலையில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஒரே கிரகம் உள்வட்டதிலும் வெளிவட்டதிலும் ஒரே ராசியில் இருப்பது அதன் காரகம் பாதிக்கப்படுவதை குறிக்கும். உதயத்திற்கு விரையத்தில் அமைந்த வெளிவட்ட நீச செவ்வாயை இரு சனியும் பார்க்கிறது. பாதகத்தில் கவிப்பு அமைந்து பாதகாதிபதியான செவ்வாய் உள்வட்டத்தில் உதயத்தில் அமர்ந்து 5, 8 அதிபதியான உள்வட்ட குரு  பாதகாதிபதி செவ்வாயின் அவிட்டத்தில் நின்று உதயத்தை பார்ப்பது ஆகியவை காதலைவிட பாதகமே கேள்வியாளரை தேடி வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. எனவே சக ஆசிரியையின் செயல்களை கேள்வியாளர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். காதல் கடிதம் கொடுத்தால் கேள்வியாளர் அவமானப்பட நேரும் என்பதோடு அவரது பணிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதை  பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனவே காதலை சொல்ல தற்போதைய சூழல் சாதகமில்லை என்று கேள்வியாளருக்கு கூறப்பட்டது. 

இந்த வகை பிரசன்னம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது என்பதோடு இவ்வகை கேள்விகளுக்கு எப்படி விடையளிக்கலாம் என்ற புரிதலையும் கொடுத்தது. இதை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசான்களுக்கு நன்றிகள் கோடி.

 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 3 January 2021

காத்திருந்து... காத்திருந்து...

 

காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் காதலிலும் சில வேதனைகளும் வெற்றிகளும் உண்டு. அனைத்திற்கும் ஒரே காரணம், வாழ்க்கையை அதன் இயல்பில் அனுபவிக்க எண்ணாமல் தங்கள் எண்ணப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என எண்ணுவதே. இது சாத்தியமானால் இறைவனுக்கு இங்கே இடமில்லை. காதலால் எந்தகைய ஜாதகத்தினர் சிரமப்படுவர் என்பதை தெரிந்துகொண்டால் அவர்கள் தகுந்த உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கலாம். ஜோதிடமும் அதற்கு உதவும்.


காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். ஐந்தாம் பாவம் 7 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டால் மட்டுமே காதல் திருமணத்தில் முடியும். காதலின் வெற்றியை 3,5,7,11 ஆகிய பாவங்களின் ஒருங்கிணைவு தீர்மானிக்கிறது. காதலில் தோல்வியை 4,6,1௦, ஆகிய பாவங்களும் கேதுவும் தீர்மானிக்கின்றனர். காதல் யாருக்கு தீமையை தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.             

                    


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாம் பாவம் என்பதால் தனது எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தாது மறைக்கக்கூடியது. அதுவும் லக்னமும் ராசியும் ஒன்று என்பதால் இக்குணம் அதிகமிருக்கும். சந்திரன் நீசமாவதால் பெற்றோர்களுக்கு பாதிப்பைத்தரும் ராசியாகும். இந்த ஜாதகி தனக்கு வந்த வரன்களை எல்லாம் பிடிக்கவில்லை என பல ஆண்டுகள் மறைத்தார். ஜாதகத்தில் லக்னாதிபதி மறைவு ஸ்தானமான எட்டாமிடம் மிதுனத்தில் வக்கிர கதியில் அமைந்திருப்பதை காண்க. இயல்பாகவே பிடிவாத காரகனான செவ்வாய் வக்கிரமானால் பிடிவாத குணம் மேலும் கூடும். இதனால் பிடிவாதமாக தனக்கு சாதகமான நிலை வரும்வரை ஜாதகி தனது விஷயங்களை மறைக்கிறார். ஜாதகிக்கு வயது தற்போது 28. இன்னும் திருமணமாகவில்லை. மிக தாமதமாகவே தனது காதலை வீட்டில் தெரிவித்தார். ஜாதகத்தில் சந்திர சூரியர்களுக்கு சஷ்டாஷ்டகத்தில் லக்னாதிபதி இருப்பதால் ஜாதகியின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த ஜாதகி நிறைவேற வழியற்ற தனது காதலால் மிகவும் சிரமப்படுகிறார். ஜாதகியின் காதலை நிறை வேற்ற துணிவுடன் பெற்றோரை தொடர்புகொண்டு ஜாதகியை கரம்பிடிக்க வேண்டிய காதலனே தீர்மானம் எடுக்க முடியாமல் ஜாதகியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஜாதகியின் இளமையை வீணாக்குகிறார் என்பதுதான் இதில் சோகம்.

சரி ஜாதகியின் காதல் இப்படி இழுபறியாக விளங்க காரணம் என்ன?

1993 ல் கேட்டை-2 ல் பிறந்த ஜாதகிக்கு காதலை குறிக்கும் கேது திசையில் காதலுக்குரிய பாவமான 5 ஆம் பாவாதிபதி குருவின் புக்தி 2008 ல் ஜாதகியின் 14 ஆவது வயதில் துவங்கியது. அப்போது முதல் ஜாதகி காதலிக்கிறார். தற்போதுவரை 14 வருடமாக மிக நீண்ட காதல். 2011 மத்தியிலிருந்து ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. களத்திர மற்றும் விரையாதிபதியான சுக்கிரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்று 2, 5 ஆம் பாவாதிபதி குருவின் பூரட்டாதி-1 ல் நிற்கிறார். திசா நாதன் சுக்கிரன் பகை சாரம் பெற்று திக்பலம் பெறுகிறார். திக்பலம் பகை சாரத்தை முறியடிக்கும் என்றாலும் சுக்கிரன் 4 ஆமிடத்திலிருந்து திசை நடத்துவதுதான் பாதிப்பு. காரணம் 4 ஆம் பாவம் திக்பலம் பெற்றாலும் அது காதலை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு விரைய பாவமாகும். இதனால் 5 ஆம் பாவாதிபதி சாரம் பெற்றாலும் 5 க்கு விரையத்திலிருக்கும் சுக்கிரன் 5 க்கு பாதிப்பை தருகிறார். மேலும் சுக்கிரனும் 5 ஆம் பாவாதிபதி குருவும் பகை என்பதை மீறி இருவரும் ஒருவருக்கொருவர் சஸ்டாஷ்டகத்தில் உள்ளதால் காதலை தனது திசையில் நிறைவேற்றிட மாட்டார். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதன் குறைந்த பாகை (2.06) பெற்றதனால் தாரா காரகனாக உள்ளார். தாரா காரகனான புதனே ஜாதகியின் காதலுக்கு முக்கிய காரணம். புதன் தாரா காரகனானதால் ஜாதகியின் காதலில் உண்மையும் ஏக்கமும் இருக்கும். ஆனால் காதலனை குறிக்கும் புதன் சூரியனின் அஸ்தங்கமாகியுள்ளது. இதனால் காதலனுக்கு போதிய தகுதி இல்லை என்பது தெரிகிறது. ஆனால் புதன் சூரியனோடு சேர்ந்ததால் கௌரவமாகவும்,  சனியோடு சேர்ந்ததால் ஜாதகியை ஏமாற்றுபவராகவும் இருப்பார். (புதன்+சனி சேர்க்கை ஏமாற்றத்தை  குறிக்கும்).

ஜாதகத்தில் குரு 7 ஆம் பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்துனைவர் வகையில் ஓரளவு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பாகும். ஓரளவு மட்டுமே என்று கூறக்காரணம், குரு நின்ற வீட்டோன் புதன் அஸ்தங்கம் பெற்றுவிட்ட நிலையில், குருவும் சார அடிப்படையில் பாதகாதிபதி சந்திரனின் ஹஸ்தம்-4 ல் நிற்கிறார். நீச சந்திரன் குடும்ப பாவத்திற்கு  விரையத்தில் லக்னத்தில் நின்று, சந்திரனோடு இணைவு பெற்ற சர்ப்பங்களும் 1 & 7 ல் நிற்பது ஜாதகிக்கு திருமணம் நடக்க கடும் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  மூன்றாவது காமத்திரிகோணமான 11 ஆமிடத்தில் குரு நின்றாலும் அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் காதலனும் பின்வாங்கும் நிலையில் பெற்றோரும் சம்மதிக்காத நிலையில் ஜாதகி விரக்தி நிலையை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜோதிடம் மூலம் தனது வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் என மிக காலம் தாழ்த்திய நிலையில் என்னிடம் ஜாதகி ஆலோசனை கேட்டார். ஜாதகிக்கு சுக்கிர திசை இன்னும் 11 ஆண்டுகள் உள்ளதையும், சுக்கிர திசை சுகத்திற்கு கணவனை கொண்டுவரும் ஆனால் காதலை நிறைவேற்றி வைக்காது என்பதையும் எடுத்துக்கூறினேன். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதனுக்கும் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டகம் (6-8 ஆக) உள்ளது. இது காதலன் வேறு கணவன் வேறு என்பதை தெரிவிக்கிறது. மேலும் மேற்சொன்னபடி காதலனுக்குள்ள பாதகமான அமைப்புகளை எடுத்துக்கூறி இனிமேலும் தனது வாலிபத்தை வீணாக்காமல், பெற்றோர் பார்க்கும் நல்லதொரு வரனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகிக்கு சுக்கிர திசையில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குரு புக்தி இந்த ஆண்டு பிற்பகுதியில் துவங்குகிறது. ராகு கேதுக்கள் கோட்சாரத்தில் லக்னத்தைவிட்டு விலகி லக்னத்திற்கு 6 மற்றும் 12 ஆக அதாவது 2022 ராகு-கேது பெயர்ச்சிக்குப்பிறகு கோட்சார குருவும் மீனத்திற்கு வரும் காலம் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501     

Friday, 16 October 2020

கடவுளைத்தேடி!

 


வாழ்க்கை தன்னகத்தே பல்வேறு புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் போக்கில் சென்று அந்தப்புதிர்களை விடுவிக்க முயல்பவர்கள் சிலர். வாழ்வின் புதிர்களுக்குள் சிக்கிக்கொண்டு அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் பெரும்பாலோனோர். அப்படி வாழ்வின் புதிர்களுக்கு விடைகாண முயன்ற ஒரு இளைஞன் தன்னால் ஈர்க்கப்பட்ட குரு தனக்கு வழிகாட்டுவார் என எண்ணுகிறான். அவர் மூலம் படைத்தவனை உணர அவனால் முடிந்ததா? அவனது ஞானத்தேடல்களுக்கு விடை கிடைத்ததா? அல்லது வாழ்வில் புதிர்களுக்குள் அவன் சிக்கிக்கொண்டுவிட்டானா? என இப்பதிவில் ஆராய்வோம்.

ஜாதகர் 1976 ல் பிறந்தவர். மேஷ லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ஞானகாரகன் கேது, மோட்ச ஸ்தானாதிபதி (12 ஆமதிபதி) குருவுடன் இணைந்துள்ளது. இவரது பிறப்பின் நோக்கத்தை, ஞானத்தேடல்களில் ஜாதகர் ஈடுபடுவார் என்பதை குறிப்பிடுகிறது. மனோ காரகன் சந்திரன் மறை பொருளை குறிக்கும் 8 ஆமிடத்தில் நீசமாகி, சந்திரனுக்கு 1௦ல், சந்திரனுக்கு திக்பலம் தரும் வகையில் அமைந்த செவ்வாயால் நீச பங்கமும் ஆகியுள்ளது. இதனால் இவரது மனம் மறைப்பொருள் சார்ந்த வகையில் சிந்திக்கும் என்பது புலனாகிறது. தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் மற்றொரு மறைபொருள் சார்ந்த மோட்ச காரகன் ராகு நிற்பதால் இவரது தொடர்புகள் ஞானம், மோட்சம், இறைவழி சார்ந்ததாகவே அமையும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ள கேது,குருவிற்கு திரிகோணத்தில் சூரியனின் வீட்டில் அமைந்து கேதுவோடு சேர்ந்த குருவின் பார்வையை பெறுவதால் ஒரு உயர்ந்த இடத்தில் (மடத்தில்)  ஞானத்தை தேடும் குருவின் தொடர்பு ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை .குறிப்பிடுகிறது. ராசியிலும் நவாம்சத்திலும் 7 ஆமிடம் பாவிகளால் கெட்டு, குருவின் பார்வையை பெறுகிறது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்வு சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை.

ஜாதகர் 1௦ ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க விருப்பமின்றி ஞானத்தேடலில் சனி திசையில் லக்னத்தில் நின்ற குருவின் புக்தியில் வீட்டை விட்டு கிளம்பி தன்னை ஈர்த்த குருவின் ஆசிரமத்தை அடைந்தார். குருவை தரிசித்த ஜாதகர். அங்கேயே தங்கிவிட எண்ணினார். ஆசிரமத்தில் தங்கி பயிற்சி பெற ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அதற்காக ஜாதகர் ஆசிரமம் இருந்த ஊரில் ஒரு குதிரை லாயத்தில் ஓரிரு வருடங்கள் சனி திசை முடியும் வரை வேலை பார்த்தார். ஜாதகரின் விருப்படியான விஷயங்களை ராசியைக்கொண்டே அளவிட வேண்டும். ஜாதகரின் கர்மவழி விஷயங்களை லக்னத்தை கொண்டு அளவிட வேண்டும். இந்த அடிப்படையில் ஜாதகரின் விருப்பத்தை குறிக்கும் ராசிக்கு 5 ஆமதிபதி குரு 6 ல் அமைந்து சனி பார்வை பெற்றதால் ஜாதகர் தனது விருப்பம் நிறைவேற வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை செய்து கிடைத்த பணத்தில் ஜாதகர் ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக பயிற்சி பெற்றார். ஜாதகருக்கு புதன் திசை துவங்கி சுய புக்தி முடியும் வரை அது நீடித்தது.

ஜாதகரின் குரு  காமத்தை நுகர்ந்து கடந்து பிறகு ஆன்மீகப்பாதைக்கு திரும்புமாறு போதித்தார். ஏனெனில் காமம் கொண்ட மனம் எப்போதும் தெளிவடையாது. எனவே காமத்தை எதிர்கொண்டு அதை கடந்து வருமாறு தன்னை பின்பற்றுபவர்களுக்கு கூறினார். இதனால் ஜாதகர், தன்னைப்போன்று ஆஸ்ரமத்திற்கு வந்த சக ஆசிரம வாசிகளுடன் காமத்தை நுகர்ந்தார். சுகஸ்தானாதிபதியான சந்திரன் உடலுறவை குறிக்கும் 8 ஆமிடத்தில்  சுகஸ்தானத்தில் அமைந்த சனியின் அனுஷம்-1 ல் அமைந்துள்ளது. சனி திருட்டு, குறை, முறையற்ற விஷயங்களுக்கும், சந்திரன் முறையற்ற உறவிற்கும் காரக கிரகங்களாகும். புதன் காமத்திரிகோணமான மிதுனத்தில் நண்பர்கள் சூரியனோடும் சுக்கிரனோடும் அஸ்தங்கமடையாமால் சிறப்பாக அமைந்துள்ளது. புதன் தனது திசையில் ஜாதகரின் மனம் காமத்தின்பால் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் என்றால் அது மிகையல்ல.சிந்தனை ஸ்தானமான 5 ஆமதிபதி சூரியன், திசாநாதன் புதனோடு இணைந்ததால் ஜாதகரின் மனம் காமத்தில் திளைத்தது.

ஜாதகரின் காம ஸ்தானமான 7 ஆமிடத்தில் ராகு நிற்கிறார். இதனால் 7 ஆமிட தொடர்புகள் வளரும். ஜாதகர் ஆசிரமத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலம் ஒன்றில், ஒரு மகனோடு உள்ள விதவை ஒருவருடன் திருமணமாகாமால் இணைந்து வாழ்கிறார். ராகு விதவையையும் குரு ராகுவை பார்ப்பதால் அவர் குழந்தை உள்ளவராகவும் இருந்தார். 7 ஆமிட ராகு 7 ஆமதிபதி சுக்கிரன் போலவே செயல்படுவார். புகன் திசையில் குருவின் சாரம் புனர்பூஷம்-3 ல் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் அந்த தொடர்பு அமைந்தது. சுக்கிரன் அஸ்தங்கமாகியுள்ளது குறையுள்ள அதாவது விதவையான பெண்மணி என்பதையும், குரு சாரத்தில் அமைந்ததால் அவர் குழந்தையுடனும் இருந்தார் என்பதையும் தெரிவிக்கிறது. குரு திசையில் ஜாதகருக்கு ஏற்பட்ட ஞானத்தேடலை புதன் திசை தனது தன்மையோடு இணைந்து ஜாதகருக்கு புகட்டினார். எனினும் ஞானத்தேடலை ஜாதகர் கைவிடவில்லை. காரணம், புதன் ராசிக்கு 8 ஆமதிபதி. அதே சமயம் புதன் காம திரிகோணாதிபதியாகி காதல் ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்ததால் ஞான அனுபவத்திலும், தன் மீது காதல்கொண்டு தன்னை நாடிவந்த பெண்களால் காம அனுபவத்திலும் ஒன்றுபட்ட சூழல்களால் ஜாதகர் திக்குமுக்காடினார். சில காலங்களுக்குப்பிறகு மீண்டும் பழைய ஆசிரமத்திற்கு திரும்பினார். அதன்பிறகு ஆசிரமத்தில் தவிர்க்க முடியாத முதன்மை நபர்களில் ஒருவரானார். ராஜ கிரகமானா சூரியனோடு திசா நாதன் புதன் சேர்ந்ததால் ஜாதகரின் ஞானத்தேடலில் ஒரு உயர்ந்த தன்மை வெளிப்பட்டது. அதே சமயம் காமமும் ஜாதகரை வழிய வந்து அணைத்துக்கொண்டது.

மோட்சத்திரிகோணமான 4 ஆமிட சனியின் பிற்பகுதியில் ஜாதகரின் மனம் ஞானத்தை நோக்கி கடினத்துடன் திரும்பியது என்றால் புதன் திசை அதை காதலுடன் உயர்த்தியிருந்தது. ஒரு வழியாக ஜாதகருக்கு புதன் திசை முடிந்து ஞான காரகன் கேதுவின் திசை 2012 முற்பகுதியில் துவங்கியது. ஞான காரகனானாலும் காமத்திரிகோணத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-2 ல் நின்ற கேது ஞானத்தோடு காமத்தொடர்புகளையும் ஜாதகருக்கு வழங்கியது கேது திசையில் ஜாதகர் ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாக, தியானப்பயிற்சியாளராக உயர்ந்தார். அதே சமயம் கிறிஸ்தவர்களை குறிக்கும் கேது திசையில் அயல் தேச பெண்மணி ஒருவருடன் ஜாதகர் திருமணம் செய்துகொள்ளாமல் ஓரிரு வருடங்கள் இணைந்து வாழ்ந்தார். கேதுவின் திரிகோணத்தில் காதல் பாவமான 5 ல் லக்னாதிபதி செவ்வாய் அமைந்தது அதற்கு காரணம். பிற்பாடு தன்னை மிகவும் நேசித்து, தன்னை திருமணம் செய்துகொண்டு தனது தேசத்திற்கு வந்துவிடுமாறு மன்றாடிய அப்பெண்ணின் வேண்டுகோளை கனத்த இதயத்துடன் நிராகரிக்கிறார். கேது திசையில் குரு புக்தியில் அது நிகழ்ந்தது. குரு ஜாதகரின் பிறப்பின் நோக்கம் என்ன என்று தெளிவுபடுத்தி அந்த தொடர்பை துண்டிக்க வைக்கிறார். ராகு-கேதுக்களின் இணைவில் அவைகளை மீறி செயல்படக்கூடிய ஒரே கிரகமாக திகழ்வது கிரகங்களிலேயே குரு ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேது திசை முடிந்து ஜாதகர் சுக்கிர திசையில்தான் உள்ளார். சுக்கிரன் காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில்தான் உள்ளார். 5 பாகை இடைவெளியில் சுக்கிரனுக்கு அஸ்தங்கம் பெரிதாக பாதிப்பைத்தராது. சுக்கிர திசையிலும் ஜாதகர் ஆன்மீக மற்றும் காம ரீதியான தொடர்பில்தான் தற்போதும் இருப்பார்.

பொத்திப்பொத்தி வளர்த்த சித்தார்த்தனை புத்தனாக்கியதும், செல்வத்தில் திளைத்த பட்டினத்தாரை திருவோடேந்த வைத்ததும் கிரகங்களின் லீலைகளே. கடவுளைதேடிச்சென்ற நமது ஜாதகரை ஞானத்திலும் காமத்திலும் திளைக்கவைத்துக்கொண்டிருப்பதும் அதே கிரகங்களே. நாம் எதை அடைய வேண்டும், யாரை எப்போது தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் கிரகங்களே. இது புரிந்தால் இறை புரியும், இயற்கை புரியும், ஞானம் சித்திக்கும், மனம் அமைதி பெறும். ஜோதிடம் அதற்கு ஒரு வழிகாட்டி. ஜாதகம் அதற்கொரு சாட்சி பூதம்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501.  

Friday, 14 August 2020

பெற்றோர் ஆதரவற்ற காதல் மண அமைப்பு!


ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரே சம்பவத்தில், ஒரே நாளில்  மாற்றிவிடும் வல்லமை படைத்தவை ராகு-கேதுக்கள். ஒரு பாவ பலனை அதன் பாவாதிபதியும் காரக கிரகமும் ஜாதகத்தில் மறுத்திருந்தால் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தோடு தொடர்புகொண்டிருந்தால் அந்த பாவ பலனை நடத்தி வைக்கும் தகுதியை அடைகின்றன. இதனால் இதர கிரகங்களை மீறி ஜாதகருக்கு ஒரு விஷயத்தை இவை நடத்தி வைக்கின்றன. இதனால் அப்படிப்பட்ட காலத்தில் இவை இதர கிரகங்களை கட்டிவைக்கின்றன. இதனால் எழும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி போர்க்குணத்தோடு அப்படிப்பட்ட சம்பவங்களை அவை நல்லவை ஆயினும் பொல்லாதவை ஆயினும்  செய்துவைக்கின்றன. ராகுவிற்கு குரு தொடர்பிருந்தால் அப்படிப்பட்ட சம்பவ காலங்களில் குருவே போர்க்களத்தில் இருப்பதாக எண்ணலாம். சனி, செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் தொடர்பிருந்தால் இவை சம்பவ காலங்களில் ராகு-கேதுக்களை தொடர்புகொண்ட கிரகங்களின் குரூரத்தன்மையை வெளிப்படுத்தும். எப்படி நடந்ததென்றே தெரியாமல் கனவுபோல நடந்துவிடும் வாழ்க்கை சம்பவங்கள் அனைத்திற்கும் ராகு-கேதுக்கள் காரக கிரகங்களாகின்றன.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்   

ஜாதகிக்கு ராகு திசை குரு புக்தி நடந்த போது நடந்த சம்பவங்கள் இவை. ராகு 7 , 12 பாவங்களோடு தொடர்புகொண்டு லக்னாதிபதி சுக்கிரனின் பரணி-2 ல் நின்று திசை நடத்துகிறார். ஜாதகிக்கு அப்போது வயது 24. ஏழாமிடத்தோடு தொடர்பாவதால் ராகு ஜாதகிக்கு திருமணம் நடத்திவைக்க பொறுப்பேற்கிறார். 7 ஆமிட சனி குரு சாரத்தில் நின்று மகரத்தில் அமைந்த குருவை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். குரு 3 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து 7 ஆமிட சனி தொடர்பு ஏற்பட்டு 11 ஆமிடாதிபதிமாகவும்  வருவதால் தனது புக்தியில் ஜாதகிக்கு தனது காரக மற்றும் பாவ தொடர்பு அடிப்படையில் திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பேற்கிறார். (3, 7, 11 ஆகியவை திருமண வாழ்வை அமைத்துத்தரும் காமத்திரிகோணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) பாதகாதிபதி சனி வக்கிரமாகிவிட்டதால் தனது 9 ஆம் ஆதிபத்திய பலனான பாதக பலனை கைவிட்டு காரக பலனை மட்டும் வழங்க வேண்டியவராகிறார். எனவே இந்த ஜாதகிக்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் குருவாலும் சந்திரனாலுமே பாதிப்புகள் ஏற்படவேண்டும். சனியால் ஏற்படாது.

நீசமாகி வக்கிரம் பெறுவதால் குரு நீசபங்கமாகிறார். வக்கிர குரு தனது ஆதிபத்தியத்தை விட்டு காரக பலனையே பிரதானமாக செய்யும் என்றாலும், தான் நிற்கும் ஸ்தான அடிப்படையில் பாதக பலன்களையும், வக்கிரமாகி 8 ஆமிடம் நோக்கி வருவதால் அவமானம், கண்டம் என்ற வகை பலன்களையும்,  லக்னத்திற்கு லாபாதிபதி என்பதால் லாப ஸ்தான பலன்களையும் தனது புக்தி காலத்தில் ஒரு சேர வழங்கியாக வேண்டிய நிலையில் உள்ளார். குரு எத்தனை இடர்பாடுகளை தந்தாலும், குருவிற்கு கேந்திரத்தில் நிற்கும் திசா நாதன் ராகுவிற்கு குரு கட்டுப்பட்டே ஆக வேண்டும். மேலும் ராகுவிற்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகங்களின் செயல்பாட்டினை ராகு கட்டுப்படுத்துவார் என்றொரு முக்கிய விதி உண்டு. அதனோடு வக்கிரமாகி தன்னிலை இழந்த கிரகங்களை நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்கள் தங்களது சேவகர்களாக பயன்படுத்தும் என்றொரு விதியும் உண்டு. இதனால் பாதகம், பாதகாதிபதி, அஷ்டமாதிபத்யம் ஆகிய பலன்களோடு 11 ஆமதிபத்திக்குரிய பலன்களையும் குரு வழங்கியாக வேண்டும். இவை அனைத்தையும் ஒரே சம்பவத்தின்மூலம் வழங்கிவிட குருவிற்கு திசா நாதன் ராகு கட்டளையிடுகிறார்.

குரு தனது புக்தி காலத்தில் இவ்வணைத்து பலன்களையும் திருமணம் என்ற ஒரே சம்பவத்தின் மூலம் ஜாதகிக்கு வழங்கினார். சுக்கிரன்+செவ்வாய் இணைவால் ஜாதகி காதலித்தார். செவ்வாய்-சனி பரஸ்பர பார்வையால் ஜாதி மாறி காதலித்தார். 9 ஆமதிபதி 9 க்கு பாதகத்தில் நின்றால் ஜாதகர் தனது குலப்பெருமையை காப்பாற்றமாட்டார் என்பதற்கேற்ப ஜாதி மாறி காதலித்தார்.  காதலுக்குரிய பாவமான லக்னத்திற்கு 5 ல் காதல் கிரகம் புதன் உச்சமாகி சூரியனோடு இணைந்து நின்ற அமைப்பாலும் ஜாதகி  காதலித்தார். ஆனால் 9 ஆமிடம் பாதிக்கப்பட்டு சிம்ம ராசிக்கு சனி+செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் தந்தை தனது காதலை ஏற்கமாட்டார் என்றொரு மனோநிலைக்கு ஜாதகி ஏற்கனவே வந்திருந்தார். இதனால் காதலனோடு சென்று பதிவு திருமணம் செய்துகொண்டார். பெண் ஜாதகத்தில் குரு, புதன், சந்திரன் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பாவது வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்வதை குறிக்கும். இந்த ஜாதகத்தில் சந்திரனோடு இணைந்த குரு, புதனை 9 ஆம் பார்வையாக பார்ப்பதும், குரு+சந்திரனுக்கு திரிகோணத்தில் லக்னத்திற்கு 5 ல் புதன்  வலுவாக அமைந்ததும் ஜாதகியின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. தந்தை இதனால் வெகுண்டெழுந்து ஜாதகியின் திருமண வாழ்வை முறிக்க சகல முயற்சிகளையும் எடுத்தார். சூரியனுக்கு 8 ல் மேஷத்தில் நிற்கும் திசா நாதன் ராகு சூரியனின் முயற்சிகளை முறியடித்தார். (கவனிக்க: ஒரு கிரகத்திற்கு அதன் ஆயள் ஸ்தானமான 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும்.) இதனால் ஜாதகி அவமானப்பட்டார். உயிராபத்திற்கு உள்ளானார். இறுதியில் தனது காதலில் உறுதியாய் நின்று தற்போது குடும்ப வாழ்வை நடத்தி வருகிறார். 

இப்போது திருமண கால கிரக நிலைகளை கவனிப்போம்.     

ஸ்திர லக்னக்திற்கு பாதிப்பை வழங்க வேண்டிய பாதக ஸ்தானமான 9 ஆமிடத்தில் கோட்சார ராகு வந்து நின்று குருவின் செயல்பாட்டை தானே முன்னின்று கவனிக்கிறார். இதனால் ஜனன காலத்தில் பாதகத்தில் நின்ற குரு, ராகுவை மீறி செயல்பட முடியாதவாறு ராகு குருவை கட்டுப்படுத்துகிறார். எதிர்ப்பை தெரிவிக்கும் சூரியன், கோட்சாரத்தில் மேஷத்தில் ஜனன ராகு மீது நின்று கிரகண தோஷமடைகிறார். இதனால் ராகுவை மீறி சூரியனால் செயல்பட முடியாது. தாயாரை குறிக்கும் சந்திரன் கோட்சாரத்தில் ஜனன கேது மீது நின்று,  கோட்சார கேதுவும் கடகத்தில் நிற்பதால் தாயின் எதிர்ப்பையும் கேது முறியடிக்கிறார். ஜனன நிலையை போலவே கோட்சாரத்திலும் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்திருக்கின்றனர். சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாயோடு இணைந்துள்ளது வீட்டை பிரிந்துவர ஜாதகிக்கு துணிச்சலை கொடுத்துள்ளது. ஜனனத்தில் 7 ஆமிடத்தில் நின்று சிம்மத்தை பார்த்த சனி கோட்சாரத்தில் வக்கிரமாகி ஜனன செவ்வாய்+சுக்கிரன் மீது நிற்கிறது. இதனால் இந்த ஜாதகி திருமணமானவுடன் தனது பாதுகாப்பிற்காக காவல்நிலையத்தை நாடினார். ஜனன காலத்தில் குரு வக்கிரமாகி சனி நேர்கதியில் இருக்கிறது. ஆனால் கோட்சாரத்தில் சனி வக்கிரமாகி குரு நேர்கதியில் உள்ளது. இது ஜனன கால கிரகங்களின் மனோபாவம் மாறிவிட்டதை குறிப்பிடுகிறது.,

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

 அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

 பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Saturday, 25 July 2020

காம புதனின் காதல் சேட்டைகள்!



ஜோதிடத்தில் புதன் ஒரு முக்கிய கிரகம். புதன் ஜோதிடத்தில் புத்திகாரகன் என வர்ணிக்கப்படுகிறார். புத்தியைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்பதால்தான் “பலவான் புத்திமான்” என்கிறார்கள்.  புதன் காதலுக்கு உரிய கிரகமாகவும் கருதப்படுகிறது. "எத்தனை பெரிய புத்திசாலியும் காதல் வயப்பட்டுவிட்டால் முட்டாளாகிவிடுகிறான்" என நகைச்சுவையாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. காதலில் புத்தியை உணர்வுகள் வென்றுவிடுகின்றன. ஆனால் காதலுக்கும் புத்திக்கும் உரிய ஒரு கிரகம் தனது காரகத்துவங்களிலேயே ஒன்றை வென்று ஒன்றை தோல்வியடைய வைக்கிறது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். புதன் காதலன்-காதலி, நண்பர்கள் ஆகியவர்களையும் குறிப்பிடும் கிரகமாகும். புதனால் ஒரு காதல் ஏற்பட்டால் அது ஒரு காலத்தில் வெற்றியடையாமல் விலகிச்சென்றாலும் மீண்டுமொருமுறை தேடிவரும். நல்ல நண்பர்களையே காதலர்களாக அடைபவர்கள் கொடுப்பினைகொண்டவர்கள். அவர்களையே திருமணம் செய்பவர்கள் பாக்கியசாலிகள். புதன் ராகுவோடு தொடர்புகொண்டு 7 ல் நின்று அங்கு களத்திர காரகர்களும் கெட்டிருந்தால் அங்கு காமக்களியாட்டம்தான். சொல்ல, எண்ண முடியாத  நிகழ்வுகளையெல்லாம் இச்சேர்க்கை நடத்திக்காட்டும். கயிலாயத்தையே இலங்கைக்கு பெயர்த்துவரத் துணிந்தான் ராவணன். ஆனால் சீதை மீது கொண்ட முறையற்ற காதலால் அனைத்தையும் இழந்தான். புத்தியால் வெல்ல இயலாத எதிரியைக்கூட காதலும் காமமும் வென்றுவிடுகின்றன.  

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம். 


விருட்சிக லக்னத்திற்கு 6 ல் கேது சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் சுக்கிரனின் பூராடத்தில் அமைந்துள்ளது. சந்திரனின் திரிகோணத்தில் கேது அமைந்து இருவரும் ஒரு கிரக சாரம் பெற்றதால் இவர்களுக்கிடையேயான தொடர்பு வலுவானதாக அமைகிறது. சந்திரன் பாதகாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் வந்து அமைவதால் ஒரு பெண்ணால் பாதிப்பு வரும் என அனுமானிக்கலாம். நட்பு, காதலர்களை குறிப்பிடும் புதன் உச்சமாகி காதல் பாவமான 5 ஆமிடத்தை பார்க்கிறது. புதனின் இந்த அமைப்பால் இந்தப்பெண்ணுக்கு இயல்பாகவே காதலுணர்வு இருக்கும். ராகு காம, களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனோடும் குடும்ப காரகன் குருவோடும் இணைந்து தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் நிற்கிறது.  இந்த ராகு புதனுக்கு அடுத்த ராசியில் இருந்து புதனை நோக்கி வருகிறார். இதனால் இந்த ஜாதகியின் இயல்பான காதலுணர்வில் விபரீதமான எண்ணங்கள் எழும்.

நட்பு பாவமான 4 ஆமதிபதி சனி, சதயம்-3 ல் நின்று ராகுவோடு தொடர்பாகிறது. இதனால் நட்பையே காதலாக என்னும் எண்ணம் இப்பெண்ணுக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்த களத்திர பாவாதிபதி சுக்கிரனின் பூராடம்-3 ல் உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் நிற்கிறார். உச்ச புதன் ஹஸ்தம்-4 ல் நின்று  2 ஆமிட சந்திரனோடு தொடர்புகொள்கிறார். சந்திரன் மற்றும் புதனின் இத்தகைய தொடர்பால்  ஏற்படும் உணர்ச்சித்தூண்டலில்  காதல் மூலம் குடும்பத்தில் சில விபரீத எண்ணங்கள் ஜாதகிக்கு எழும். கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகமே காம உணர்வுகளை பிரதிபலிக்கும் ராசியாகும். காரணம் 8 ஆமிடம் என்பது உடலுறவை குறிப்பிடும் இடம் என்பதால்தான். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் கால புருஷனுக்கு போக ஸ்தானாமான மிதுனத்தில் அமைந்து அதன் அதிபதி உச்ச புதனை பார்க்கிறது. லக்னாதிபதி செவ்வாய் இப்படி அமைவதால் ஜாதகிக்கு புதனின் காரகத்துவங்ளான நட்பு மற்றும் காதலில் அதிக தூண்டுதலை ஏற்படுத்தும்  12 ஆமிட ராகுவும் புதனை நோக்கி வருகிறது. மூலத்திரிகோணத்தில் உச்சம் பெற்ற தனித்த புதன் சிறப்பாக அமைத்திருப்பது போல இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் புதனை அதன் இயல்பிலிருந்து மாற்றுகின்றன. இதனால் புதன் காமத்தில் மாறுபட்ட பல்வேறு கோணங்களை ஜாதகியை எண்ண வைக்கிறது.

இந்த ஜாதகிக்கு 2 ஆமிடதில் நிற்கும் சந்திரனின் திசையில் சந்திரன் சாரம் பெற்ற லாபாதிபதி புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பிறகு ராசிக்கு காதல் பாவமான 5 ஆமிடத்தில் மேஷத்தில் நிற்கும் காதலை குறிக்கும் மற்றொரு கிரகம் கேதுவின் புக்தி துவங்கியது. கேது சுக்கிரனின் சாரம் பரணி-4 ல் நிற்கிறது. 7 ஆமதிபதி சுக்கிரனுக்கு திரிகோணத்தில் பள்ளி நட்பை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனி நிற்கிறது. இதனால் மணமான பின்னும் பள்ளி நட்பு காதலெனும் தீயாய் சுடுகிறது. புதன் விட்டுப்போன தொடர்பை ஒரு காலத்தில் மீண்டும் தேடிவரச்செய்யும். அப்படி பள்ளி நட்புகள் மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டன. ஆனால் வாழ்க்கைச்சூழல்கள் இருவருக்கும் திருமணம் எனும் நிலையால் மாறியிருந்தன. இப்போது சந்திர புக்தியில்   கேது புக்தியில் ஜாதகி தனது பள்ளி நட்பை எண்ணி கணவரை பிரிகிறார். சுக்கிரனின் புக்தியிலும் ஜாதகி கணவரை பிரிந்துதான் இருந்தார்.

சுக்கிரனின் திரிகோணத்தில் நின்று குரு பார்வை பெறும் கணவரான செவ்வாய் தனது மனைவியை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை இருந்ததால் கணவர் ஜாதகியின் நிலையை புரிந்துகொண்டார். ஜாதகிக்கு சந்திர திசையில் திக்பலம் பெற்ற சூரியனின் திசை துவங்கியதும் கணவர் ஜாதகியை உளவியல் முறையில் அணுகி பள்ளிக்காதலில் இருந்து தனது மனைவியை மீட்டெடுத்தார். நட்பை குறிக்கு 4 ஆம் பாவாதிபதி சனி தனது பாவத்திலேயே வக்கிரமாகியுள்ளது. இதனால் திருமணமான பள்ளி நண்பர் ஜாதகியின் எண்ணங்களை புறந்தள்ளினார். திக்பலம் பெற்ற சூரியன் பாதகாதிபதி சந்திரனுக்கு திரிகோணத்திலும் 12 ஆம் பாவ ராகு, சுக்கிரனுக்கு பாதகத்திலும் உச்ச புதனுக்கு விரையதிலும் நின்று புக்தி நடத்தியதால் அது சாத்தியமாயிற்று.  

இந்த ஜாதகி திருமணமான பின்னும் தனது பள்ளிதோழியை மறக்க இயலாமல் தோழியுடன் இணைந்து வாழ எண்ணி தனது கணவரை பிரிந்து சென்றார். தோழிக்கும் திருமணமான நிலையில் இப்பெண்ணின் கருத்தை நிராகரித்தார். ஜாதகியின் குடும்ப வாழ்வை சூரியன் காப்பாற்றினார். தற்போது ஜாதகி கணவருடன் இணைந்து வாழ்கிறார்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Thursday, 19 December 2019

குளறுபடித் திருமணங்கள்!



திருமணம் நிச்சயமான சிலருக்கு திருமண நாளில் மாப்பிள்ளை அல்லது பெண்ணை மாற்றி வேறொருவரை திருமணம் செய்யும் செய்திகளை நாம் கேள்வியுற்றிருப்போம். இப்படி குளறுபடியாக நடக்கும் திருமணங்களுக்கும் ஜாதக ரீதியான காரணங்கள் உண்டு. அத்தகைய திருமணங்களுக்கான காரணிகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு கேதுவின் சாரத்தில் மூலம்-3 ல் நின்று திசை நடத்துகிறார். கேது புதனின் கேட்டை -2 ல் நிற்கிறார். இதனால் குரு, புதன், கேது மூவருக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. புதன் பாதகாதிபதி என்பதோடு காதலியை குறிப்பவராகிறார். அவர் 7 ஆமதிபதி என்பதால் மனைவியையும் குறிக்கிறார். கேதுவும்  காதல் ஆசையை தூண்டும் கிரகம் என்றாகி புதனின் நட்சத்திரத்தில் நிற்பதும் பாவத்தில் குரு கேதுவோடு இணைந்து நிற்பதும் கவனிக்கத்தக்கது. புதன் வர்கோத்தமம் அடைந்து குருவின் பாகை 9 ஐ விடவும் சுக்கிரனின் பாகை 16 ஐ விடவும்  னைவிட அதிகமாக 27 பாகை சென்று ஆத்ம காரகனாக அமைந்துள்ளபடியால் லக்னத்தை புதனே இயக்குபவராகிறார்.  ஜாதகருக்கு குரு திசை நடக்கிறது. லக்னாதிபதி ஆட்சி பெற்று 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும்.   காதலுக்குரிய சகல அமைப்பும் ஜாதகத்தில் உள்ளதாலும் திசா நாதன் குருவிற்கு புதன் கேது தொடர்பு உள்ளதாலும் ஜாதகர் காதலித்தார். அதுவும் பிரச்சனை வேண்டாமென்று தாய்மாமன் மகளையே காதலித்தார். உறவு என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடானது.

ஜாதகத்தை நன்கு கவனியுங்கள் கால புருஷனுக்கு 2, 7 க்குரிய சுக்கிரனின் இரு வீடுகளும் பாவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டுள்ள்ளது. களத்திர கிரகங்கள் சுக்கிரன், செவ்வாய் & 7 ஆமதிபதி புதன்  ஆகிய மூன்று கிரகங்களுமே தத்தம் பகை கிரகங்களுடன் தொடர்பில் உள்ளன. லக்னாதிபதியும் குடும்ப காரகனுமான குருவும் பாதகாதிபதி கிரகத்துடனும், 6 ஆமதிபதியுடனும் குடும்ப வாழ்க்கைக்கு எதிராக செயல்படும்  சந்நியாச – ஆன்மீக கிரகம் கேதுவுடனும் தொடர்பில் உள்ளது. எனவே ஜாதகருக்கு திருமண விஷயத்தில் பாதகமில்லாமல் சாதகமில்லை என்பது புலனாகிறது.  2 ஆமிடமான குடும்ப பாவத்திலும் ஒரு பாவக்கிரகமே இருந்தாலும் அது பாக்யாதிபதியும் தந்தை – மாமனாரை குறிக்கும் சூரியனாக இருப்பதால் ஜாதகருக்கு குடும்பம் அமைகையில் தந்தையும் மாமனாரும் உதவியாக இருப்பார்கள் எனலாம்.

திருமண நாளின்  கிரக நிலையை கீழே.

ராசிக்கு 6 ல் கோட்சார குரு செல்லும் காலம் அமையும் திருமணங்கள் குளறுபடிகளை சந்தித்தே ஆக வேண்டும். லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் லக்னாதிபதி போகும் காலம் திருமணம் நடந்தால் ஜாதகர் அவமானங்களை சந்தித்த பிறகே திருமணம் செய்வார்.  7 ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைக்கும் காலம் திருமணம் செய்வதே சிறப்பானது. சிறப்பான குடும்ப வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதியரின் ஜாதக திருமண விபரங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புரியும். ஜாதகத்தில் உள்ள தோஷ அமைப்பைக்கூட சரியான திருமண முகூர்த்தத்தின் மூலம் குறைத்துக்கொள்ளலாம்  என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருமண நாள் என்பது மிகுந்த கவனத்துடன் தகுந்த ஜோதிடரைக்கொண்டு குறிக்கப்பட வேண்டும்.  குரு ராசிக்கு 6 லும் லக்னாதிபதி குரு அவமான ஸ்தானமான 8 ஆமிடத்திலும் செல்லும் காலத்தில் திருமண முகூர்த்தம் அமைந்துள்ளது.

ஜாதகருக்கு லக்னாதிபதியும் குடும்ப காரகனும் லக்னதிலிருந்து 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குருவின் திசையில் 7 ஆமதிபதி புதனோடு இணைந்து நிற்கும் களத்திர காரகன் சுக்கிரனின் புக்தியில் லாப ஸ்தானத்தில் குரு சாரத்தில் நிற்கும் 2 ஆமதிபதி சனியின் அந்தரத்தில் திருமண நாள் குறிக்கப்பட்டது. திருமண நாளில் கோட்சார சந்திரன் 2 ஆமிடத்தில் நிற்கும் சூரியனின் உத்திரத்தில் கன்னியில் நிற்கிறார். திருமண நாளின் கிழமை குருவாரமான வியாழக்கிழமை ஆகும். 

இந்த ஜாதகத்தில் திசா நாதனான லக்னாதிபதியைவிட லக்னத்தில் நிற்கும் பாதகாதிபதி புதனுக்கு வலு கூடியுள்ளது. இதனால் திருமண நாளன்று காதலியான மாமன் மகள் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மனதடுமாற்றத்தில் (மனத்தடுமாற்றம் – புதன்)  திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால் திருமண மண்டபமே திகைத்துவிட்டது. இறுதியில் மணமகளின் தந்தையும் தாய் மாமனுமான மாமனார் (தாய் மாமன் – புதன்)  தனது இரண்டாவது மகளை அதே முகூர்தத்தில் ஜாதகருக்கு திருமணம் செய்வித்தார். இங்கு ஏழாமதிபதியான  பாதகாதிபதி திருமண விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார். திசா நாதன் லக்னாதிபதியானதால் குழப்பம்  தீர காரணமானார். இளைய மற்றும் கடைசி மகளை புதன் குறிப்பதால் கடைசி பெண்ணை திருமணம் செய்வித்ததால் காரக அடிப்படையில் புதனும் சமாதானம் அடைந்து திருமணம் நடக்க வழிவிட்டது. அதனால் புதனின் அம்சமான தாய் மாமனும் சூரியனின் அம்சமான மாமனாரும் (இருவரும் ஒருவரே)  ஜாதகரின் கௌரவத்தை காப்பற்றி குளறுபடிகளை கலைந்து திருமணத்தை நடத்திவைத்தார்.

நமது திருமணத்தில் இப்படி நடந்துவிட்டதே என்று புலம்புவதைவிட அத்தகைய சூழல்களில் பாதிக்கும் கிரகம் தனது வேலையை செய்கிறது என்ற அமைப்பில் நிதானத்துடனும்  சாதுர்யத்துடனும் சூழ்நிலைகளை எதிர்கொண்டு சமாளிக்க முயலவேண்டும். முக்கியமாக திருமண திட்டமிடலில் தகுந்த ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது சிரமங்களை எதிர்கொண்டு சம்மாளிக்க உதவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Wednesday, 25 September 2019

காதலெனும் தேர்வெழுதி


இன்றைய சூழலில் காதல் திருமணம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் பெற்றோர் பார்த்து செய்விக்கும் திருமணங்கள் அபூர்வமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். பெரும்பாலான பெற்றோர் இதை உணர்ந்தே இருக்கின்றனர். எனினும் தங்கள் பிள்ளைகள் தங்கள் குலப்பெருமையை காக்க மாட்டார்களா? தங்களது குலத்தை  விட்டு மாறிவிடுவார்களா? என இன்னும் மேற்கண்ட கேள்வியை ஜோதிடரிடம் தவறாமல் கேட்கின்றனர். இன்றைய காதல் திருமணங்கள் காலத்தின் கட்டாயம்.




காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவம். அது வெற்றியாகி திருமணத்தில்  முடிய காதல் & கலப்புமண காரகன் எனப்படும் புதன் மற்றும் கேது, செவ்வாய், சுக்கிரன்,குரு 2,7,11 ஆம் அதிபதிகள், மற்றும்  காதலை குறிக்கும் பாவமான 5 க்கு லாப பாவமான 3 பாவமும் அதன் அதிபதியும் என பல்வேறு பாவங்களும் கிரகங்களும் எதோ ஒரு வகையில் இணைந்தே தொடர்புகொள்கின்றன.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் காதல் ஆசையை தூண்டும் கிரகம் எனப்படும் கேது லக்னத்தில் தனித்த நிலையில் நின்று பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் குருவின்  பார்வையை பெறுகிறார். காதல் பாவமான 5ஆம் பாவாதிபதி குரு 5 க்கு 5 ஆம் பாவதிபதியான பாக்யாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். இதனால் பரிவர்தனைக்குப்பின் 5, 7 ஆம் பாவாதிபதிகளான குரு- சனி இணைப்பு ஏற்படுகிறது. காதல் காரகன் புதன் காதல் பாவமான 5ல் நிற்கும் லக்ன யோகாதிபதி செவ்வாயின்  அவிட்டம் – 2 ல் நின்று நவாம்சத்தில் உச்சமடைகிறார். 5ல் சனி,செவ்வாய் இணைவு  7 க்கு லாபத்தில் ஏற்பட்டு சனி 7 ஆமிடத்தை பார்ப்பது ஆகியவை இவரது காதல் நிறைவேறி திருமணம் நடக்கும் என்பதை உறுதி செய்கிறது.

ஒரு ரகசியம் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். சனி செவ்வாய் இணைவு ஏற்பட்டு அது 7 ஆமிடத்தோடு எதோ ஒருவகையில் தொடர்புகொள்ளும் ஜாதகர்கள் கலப்பு மனம் செய்கையில் அங்கு இந்த இணைவினால் ஏற்படும் “விருண யோகம்” எனப்படும்   கடும் யோகம் செயல் இழந்துவிடும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் திருமணம் செய்கையில் விருண யோகம் பாடாய் படுத்திவிடும். இந்த யோகத்திற்கு இதைவிட சிறந்த பரிகாரம் இல்லை என்பது எனது கருத்து. ஜாதி மாறி திருமணம் செய்ய புதனது தொடர்பும் அவசியம். இந்த ஜாதகத்தில் புதன் தொடர்புகொண்டுள்ளது. ஜாதகரின் மனைவி மாற்று ஜாதியை சேர்ந்தவர். இந்த ஜாதகரின் வாழ்க்கையில் சனி திசையில் புதன் புக்தியில் தனது காதலியை கண்டுகொண்டார். 5 ல் நின்ற 7 ஆமதிபதி சனி திசையில் 7ல் நின்ற லக்னாதிபதி சூரியன் புக்தியில் ஜாதகர் திருமணம் செய்தார். பாவத்தில் 5க்கு விரையத்தில் நின்ற நீச சந்திரனால் தாயார் வடிவில் வந்த எதிர்ப்பை தனது பொறுமையினால் முறியடித்தார். ஜாதகரின் ஜாதக கர்மாவை அடியேன் எடுத்துச் சொன்னதும் தாயார் தனது எதிர்ப்பை கைவிட்டார்.

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று வக்ரமடைந்த சனியின் பூசம் சாரத்தில் நீசம் பெற்று நிற்கும் 2, 7 ஆமதிபதி செவ்வாயின் திசையில் ஜாதகிக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் தொடர்புடைய கிரகங்கள் வலுவிழந்ததால் ஜாதகியின் திருமணம் சனி – செவ்வாய் தொடர்ப்பால் திருட்டுத் திருமணமாகி அது பெற்றோர்களின் பிரச்சனையால், செவ்வாய் குறிப்பிடும் காவல் துறை வரை சென்றது. செவ்வாய் திசையில் பாவத்தில் இரண்டில் நிற்கும் சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது. தற்போது இருவரும் சிறப்பாக வாழ்ந்தாலும் செவ்வாய் நீசம் பெற்று திசை நடந்ததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களின் ஆசியின்றி திருமணம் நடந்தது. செவ்வாய் 2 மற்றும் 7 ஆமிட தொடர்பு கொண்டு நீசம் பெற்று திருமண காலம் வருகையில் பலருக்கு இது போன்று காவல் நிலைய, அல்லது திருட்டுத் திருமணங்கள் நடப்பதை கவனிக்க முடிகிறது.  

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


எப்படிப் பார்த்தாலும் இந்த ஜாதகரின் திருமண வாழ்வு சிறப்பில்லை. 7 ஆமிடம் இதை தெளிவாக கூறுகிறது. ஆனால் இவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்.  7 ஆமிடத்தில் சனி காதலுக்கு ஆசை வலை விரிக்கும் கேதுவின் மகம் சாரம் பெற்ற சனியின் திசையில் குடும்ப ஸ்தானத்தில் நின்ற கேதுவின் புக்தியில் திருமணம் செய்துகொண்டார். 7 ஆமிடத்தில் சனி நின்று திசை நடந்த காலத்தில்  பணி புரியும் இடத்தில் காதல் ஏற்பட்டது. 7 ஆமிடம் தன்வந்திரி என புகழப்படும் சூரியனது சிம்ம ராசியாகி அதற்கு இரு புறமும் மருத்துவத்தை குறிக்கும் சூரியனும் ராகுவும் நின்று 7 ஆமிடத்திலும் மருத்துவத்தை குறிக்கும் செவ்வாயும் புதனும் நின்றதால் ஜாதகரும் அவரது காதலியான மனைவியும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்த காலத்தில் காதலித்தனர். இருவரும் மருத்துவம் தொடர்புடையவர்கள் ஆனால் மருத்துவர்களல்ல.  இந்த ஜாதகத்திலும் விருண யோகம் பெரிய பாதிப்பை தரவில்லை. காரணம் ஜாதகரும் ஜாதகியும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதோடு 7 ஆமிடம் மற்றும் 7க்கு இருபுறமும் நிற்கும் கிரகங்கள் குறிப்பிடும் மருத்துவ துறையை சார்ந்தவர்கள் என்பதால் தோஷ கிரக அமைப்புகளுக்கேற்ற செயலில் ஜாதகர் ஈடுபட்டிருந்தால் தோஷ கிரகங்கள் தங்கள் தோஷத்தை குறைத்துக்கொள்ளும் என்ற விதியே ஆகும்.

எப்படிப் பார்த்தாலும் 7 ஆமிட தோஷம் வேலை செய்யும் என்ற வகையில் சனி நீர் ராசியான மீனத்தில் நிற்கும் கேது சாரம் பெற்று திசை நடத்துவதால் மனைவியை பிரிந்து பொருளீட்ட  ஜாதகர் வெளிநாடு சென்றார்.

நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


திசா நாதன் சனி காதல் காரகன் புதனின் கேட்டை சாரத்தில் நின்று லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை தனது 1௦ ஆம் பார்வையால் பார்க்கிறார். மேஷத்திற்கு பாதகாதிபதி சனி எட்டில் நிற்பது ஒருவகையில் சிறப்பே ஆகும். சனி ராசிக்கு ஐந்தாமதிபதி என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.  மேலும் பாவத்தில் 11 ல் ராகு நிற்பதால் சனி பாதக ஸ்தானத்திற்கு செயல்பட வழியில்லை. ராசியில் ஒரு பரிவர்த்தனை நடந்துள்ளதால் சனி உள்ளிட்ட கிரகங்கள் பெரும்பாலும் ராசியை சார்ந்தே செயல்பட வேண்டும். சனி ஐந்தாமதி சூரியனுடனும் பரிவர்தனையான 2, 7 ஆமதிபதி சுக்கிரனுடனும் இணைந்து ராசிக்கு 2 ல் நிற்கிறார். சுக்கிரனும் செவ்வாயும்  பரிவர்த்தனையாகி அது லக்னாதிபதியின் ஆட்சி வீடானதால் எட்டாமிட பரிவர்த்தனை தோஷம் இங்கு செயல்படாது.

காதலுக்குரிய பாவாதிபதி சூரியன் எட்டில் மறைந்தாலும் அவர் அனுஷம் - 1 ல் நின்றதால் நவாம்சத்தில் சிம்மத்தில் ஆட்சியாகிவிடுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். ஜாதகர்  சனி திசையில் பாவத்தில் ராசிக்கு ஐந்திலும் லக்னத்திற்கு 11 லிலும் நின்ற ராகு புக்தியில் திருமணம் செய்தார். இந்த ஜாதகத்தில் பரிவர்தனைக்குப்பிறகு சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஜாதி மாறி திருமணம் செய்தால் விருண யோகம் செயல்படாது என்பதோடு கலப்பு மணத்தால் பாதகத்தில் நிற்கும் ராகுவும் பாதிக்க வாய்ப்பில்லாமல் போனது. காரணம் ஜாதி மற்றும் மதம் மாற்றத்திற்கு ராகுவும் ஒரு காரணம். அதனால் ஜாதி மாறி திருமணம் செய்தால் சர்ப்பக் கிரகங்கள் கடுமை காட்டாது என்பதை கவனத்தில் கொள்க.  இப்படி ஜாதி மாறி திருமணம் செய்தால் ஜாதகப்படி பாதிக்கப்படக்கூடிய ஒரு அமைப்பும் செயல் இழக்கும் என்பதை பிள்ளைகளின் ஜாதக தோஷம் கழிக்க கோவில் கோவிலாக சுற்றும் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும்.

மீண்டும் அடுத்த வாரம் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501.