Thursday 28 January 2021

பால் வளத்துறை பலன் தருமா?

 


நமக்கு சம்பாத்தியம் வரும் வழிகளை ஒருவர் தெரிந்துகொண்டு அதில் ஈடுபட்டால் வருமானம் பற்றிய கவலைகள் மறைந்துவிடும். சம்பாத்தியம் சுகமானால் வாழ்வில் பாதிப்பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் சம்பாத்தியத்திற்குரிய சரியான துறையை தேர்ந்தெடுப்பதில்தான் மனித வாழ்வின் பாதி வெற்றியே அடங்கியுள்ளது. பொருளாதாரத்தால் முடங்கிய இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தங்களுக்கான துறையை நாடியே ஓடுகிறார்கள். அந்த ஓட்டத்தில் தங்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் துறைகளை தெரிந்துகொண்டு அந்த திசையில் ஓடுபவர்கள் பொருளாதார ரீதியாக விரைவில் வெற்றிபெறுகிறார்கள். இன்றைய பதிவில் நாம் பால் வளத்துறையில் சம்பாதிக்கும் ஜாதக  அமைப்பு பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராயவிருக்கிறோம்.

கீழே 1996 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம். ஜாதகர் குஜராத் அரசின் பால் வளத்துறையில் பணிபுரிகிறார்.



கடக லக்னம் ஒரு நீர் ராசியாகும். அதில் வருமான ஸ்தானாதிபதி சூரியன் லக்னத்தில் நின்று தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தை பார்க்கிறார். வேலைவாய்ப்பு பாவமான 6 ஆமதிபதி குரு நவாம்சத்தில் சூரியன் வீட்டில் நிற்கிறார். இதனால் ஜாதகரின் வேலை அரசு வேலையாகும். ஜீவன காரகன் சனி வேலை பாவமான 6 ஆமிடதிலுள்ள அதன் அதிபதி குருவை 1௦ ஆம் பார்வையாக பார்க்கிறார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கிறார். சனி தனது 1௦ ஆம் பார்வையாக 6 ஆமிடத்தையும் 6 ஆம் பாவதிபதியையும் பார்ப்பதால் ஜாதகர் சுயதொழிலைவிட வேலைக்கு செல்வதே சிறப்பு என இந்த அமைப்பு குறிப்பிடுகிறது. தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் லாபாதிபதியுடன் இணைந்து விரையத்தில் நிற்கிறார். செவ்வாய் வியாபர கிரகமான புதனின் வீட்டில் நிற்பதால் ஜாதகர் பாலை விற்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். செவ்வாய் உணவு பாவமான கடக லக்னத்திற்கு விரையத்தில் நிற்பதால் ஜாதகர் சார்ந்துள்ளது உணவை நுகர்ந்து விரையம் செய்யும் துறையாகும். கடகத்தின் யோகாதிபதியும் 1௦ ஆமதிபதியுமான செவ்வாய் நவாம்சத்தில் லக்னத்தில் உச்சமாகி கடக ராசியை பார்ப்பதால் அந்த வேலை கடகம் குறிக்கும் திரவம் சார்ந்தது என்பது புரிகிறது. இரண்டாம் அதிபதி சூரியனும் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். புதன் வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் வேலை பார்க்கும் துறை புதன் குறிப்பிடும் வியாபரத்துறையேயாகும். விரையாதிபதியே வருமான ஸ்தானத்தில் அமைந்துள்ளதால் விரையம் செய்வதன் மூலமே பொருளீட்டும் துறையாகும். புதன் கேதுவின் மகம்-3 ல் நிற்பதால் ஜாதகர் பால் பதப்படுத்தும் துறையில்  Lab Chemist ஆக பணிபுரிகிறார்.

லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் பூர்வீக பூமியை விட்டு வெகுதொலைவில் சென்று வேலை பார்ப்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. சந்திரன் நீர் ராசியான மீனத்தில் ஜீவன காரகன் சனியோடு அமைந்துள்ளார். நீர் ராசியான மீனம் கால புருஷனுக்கு விரைய ராசியாகும். இதனால் ஜாதகர் குடித்துத்தீர்க்கும் பால் வளத்துறையில் பணிபுரிகிறார். (சனி-மக்கள். சந்திரன்-பால், மீனம்-நுகர்தல், அழித்தல், கேது- Chemist). ராகு கன்னியில் ஹஸ்தம்-3 ல் நிற்கிறார். இது பாலை பதப்படுத்தும் துறையில்  ஜாதகர் ஈடுபடுவதை குறிக்கிறது. (ராகு/கேது-பதப்படுத்துதல்) லாபாதிபதியும் பாதகாதிபதியுமான சுக்கிரன் செவ்வாயின் மிருகசீரிஷம்-3 ல் நிற்கிறார். இதனால் பாதகாதிபதி சுக்கிரன் லக்ன யோகாதிபதி செவ்வாய்க்கு கட்டுப்பட்டவராகிறார். சந்திரன் உச்சமாகும் பாதகாதிபதி சுக்கிரன் விரையத்தில் நிற்பதால் பால் உணவால் ஜாதகருக்கு லாபம் வரும். 1௦ ஆமதிபதி செவ்வாயை ஒன்பதாம் அதிபதி குரு பார்க்கிறார். இதனால் தர்ம கர்மாதிபதி யோகமும் ஜாதகருக்கு உண்டு.

உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் அமைந்த  கேது 2 ஆம் பாவத்தில் நிற்கும் புதனோடு சாரப்பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் உயர்கல்வியில் ஜாதகர் B.Tech – (Dairy Tech) படித்தார். ஜாதகர் தற்போது புதன் திசை ராகு புக்தியில் உள்ளார். புதன் இரண்டாம் இடத்தில் நிற்பதால் ஜாதகருக்கு புதன் திசையில் 1௦ ஆம் அதிபதி செவ்வாயில் புக்தியில் வேலை கிடைத்தது. அப்போது கோட்சார சனி தனுசுவில் ஜனன கால 6 ஆமதிபதி குருவின்மேல் இருந்தது. கோட்சார குரு துலாத்தில் இருந்து 1௦ ஆம் பாவமான மேஷத்தையும் மிதுனத்தில் நின்ற 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாயையும் பார்த்த காலத்தில் வேலை கிடைத்தது. அடுத்தடுத்து திசை நடத்தும் கிரகங்களான புதன், கேது, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வருமானத்தை தரும். இம்மூன்று கிரகங்களும் ஜாதகர் தொலை தூர இடத்தில் இருப்பதையே குறிப்பிடுகின்றன. 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமர்ந்த சூரிய திசையில் ஜாதகரின் வேலை, வருமானம் தடைபடும். அப்போது ஜாதகர் ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார். சூரியன் லக்னத்தில் நிற்பதால் ஜாதகர் தனது வேலையில் முதன்மையான இடத்தை அடைவார். லக்னாதிபதி சந்திரனும் ஜீவன காரகன் சனியும் உபய ராசியில் அமைந்திருப்பதால் ஜாதகர் வேலையில் பல மாறுதல்களை சந்திப்பார் எனலாம்.

இன்றைய தேவை ஒரு வேலை. கிடைக்கும் வேலையை செய்யும் கூலியாட்களைவிட வாழ்வில் பொருளாதார வகையில் உயர வேண்டுமானால் தகுந்த துறையை ஜோதிடத்தின் வாயிலாக அடையாளம் கண்டு முயல்வது மிகுந்த பயனைத்தரும்.

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துகளுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Wednesday 20 January 2021

வேகத்தடைகள் விபத்தை தவிர்ப்பதற்கே!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் ஒரு கிரகம் தனது தனித்துவத்தை இழக்காது. உதாரணமாக தாய்மை உணர்வுக்குரிய சந்திரனே வேகத்திற்குரிய முதன்மை கிரகமாகும். கிரகங்களில் விரைவாக ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக்கூடியது. இதற்கு மாறான கிரகம் சனி. ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சம்பவ கால கிரகங்களுடன் சந்திரன் தொடர்பாகும்போது சம்பவங்கள் மிக விரைவாக நடந்துவிடுகின்றன. சனி தொடர்பாகும் சம்பவங்கள் நீண்ட இழுபறிக்குப்பிறகே நடக்கின்றன. செவ்வாய் துடிப்புக்கும் ஆவேசத்திற்கும் உரிய கிரகமாகும். சந்திரன் செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு எளிதில் வாகன விபத்துக்களோ, நீரில் மூழ்கி இறப்பதோ அல்லது இதர வகை துர்மரணங்கள் நடக்க வாய்ப்பு அதிகம். நிதானமற்று யோசிக்காமல் செயல்களில் ஈடுபடும் குணமும் தெரிந்தே தவறு செய்யும் குணமும் சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்ற ஜாதகர்களுக்கு இருக்கும். இந்த கிரக சேர்க்கையில் ராகுவும் இணைந்திருப்பின் இவர்களுது செயல்கள் தறிகெட்ட வகையில் இருக்கும். அப்போது இவர்களது வேகத்திற்கு தடைபோடுவது சனியும் கேதுவுமாகும். ஜோதிடத்தில் நீர் ராசிகளும் சந்திரனும் பேச்சுக்கு காரக கிரகங்களாகின்றன. புதன் நாவன்மையை அதாவது பேச்சின் குணத்தை & சாதுரியத்தை குறிக்கும். இதில் சனியும் கேதுவும் சம்மந்தமுறும்போது பேச்சில் தடையை, நிதானத்தை அல்லது தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தான் நாம் இன்றைய பதிவில் ஆராயவிருக்கிறோம். 

கீழே 2008 ல் பிறந்த ஒரு சிறுவனின் ஜாதகம்.

வாக்கு ஸ்தானமான 2 ஆம் இட அதிபதி குரு வக்கிரமாகியுள்ளார். இரண்டாமிடத்தை நோக்கி ராகு வருகிறார் . இதனால் இச்சிறுவனுக்கு பேசுவதில்  தடை ஏற்படும். குரு வர்கோத்தமம் பெற்றுள்ளது ஒரு நல்ல அமைப்பு. பேச்சுக்கு காரக கிரகமான சந்திரன் தாமததிற்குரிய சனியோடு இணைவு பெற்றுள்ளார். இவை பேச்சில் தடை ஏற்படும் என்பதை குறிக்கிறது. பேச்சின் காரக கிரகமான சந்திரனின் வீட்டில் நீசமான லக்னாதிபதியுடன் செவ்வாயுடன் இணைந்த கேது, பாவ சக்கரத்தில் சந்திரன், சனியோடு இணைந்துள்ளார். சந்திரனின் கடக ராசி பாதிக்கப்பட்டதோடு நவாம்ச லக்னத்திற்கு 2 ல் சந்திரன் நீசமானது ஒரு கடுமையான அமைப்பாகும். ஜனன திசா-புக்தி நாதர்கள் அனுமதியின்றி ஒருவருக்கு பிறவிக்குறைபாடு ஏற்படாது. பூரம்-4 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகனுக்கு சுக்கிரனும் சூரியனும் ஒரே பாகையில் நின்று அஸ்தங்கமடைகிறது. கால புருஷனுக்கு 2 ஆம் இடத்தில் அதன் அதிபதி சுக்கிரன் கடக செவ்வாயின் சாரத்தில் அஸ்தங்கமடைவது, மரபு வழியாக தொடர்ந்து வரும் சுரப்பிவகை குறைபாட்டை குறிக்கிறது.   சூரியனும் சுக்கிரனும் பாதக ஸ்தானத்தில் நீச்சமாகியுள்ள செவ்வாயின் மிருக சீரிஷம்-1 ல் நிற்கின்றன. இதனால் சுக்கிர திசையிலும் சூரிய திசையிலும் செவ்வாயின் வெளிப்பாடு இருக்கும். கடகத்திற்கு பாதகத்தில் சூரியன், சுக்கிரன், புதன் அமைவது சந்திரனின் செயல்பாட்டை பாதிக்கும் அமைப்பே. சுக்கிரன் அஸ்தங்கமானதால் பிறப்பிலேயே பையனுக்கு பேச்சில் திக்குவாய் ஏற்பட்டது. காரணம் சுக்கிரனின் சார நாதன் நீச செவ்வாயே. செவ்வாய் சிறுவனின் பேசும் ஆர்வத்தை வேகமாக தூண்டுகிறது. ஆனால் சுரப்பி காரகன் சுக்கிரன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் மனதின் கட்டளைகள் குரல்வளை போன்ற உறுப்புகளுக்கு தாமதமாகவே செல்கின்றன. செவ்வாயுடன் இணைந்த கேதுவும் செவ்வாயின் தீய செயல்களை அதிகப்படுத்தவே செய்யும்.  

காலபுருஷனுக்கு குரல்வளையை குறிக்கும் மிதுனத்தின் அதிபதி புதன், சந்திரன் சாரத்தில் ரோஹிணி-4 ல் மிதுனதிற்கு 12 ல் மறைந்து வக்கிரமாகிறார் என்பது கவனிக்கத்தக்கது. சுக்கிர திசைக்கு அடுத்து வந்த சூரிய திசையும் செவ்வாயின் சாரத்தையே பெற்றுள்ளது. இதனால் சூரிய திசையிலும் சிறுவனுக்கு திக்குவாய் குறைபாடு தொடர்ந்தது. இங்கு சூரியன் ராசிக்கு திக்பலத்தில் நின்றாலும், அவர் கடகத்தில் அமைந்த நீச செவ்வாய் மிருக சீரிஷம்-1 ல் நிற்பதால் பாதக ஸ்தான செவ்வாயின் பலனையே தந்துள்ளது கவனிக்கத்தக்கது. சூரிய திசைக்கு அடுத்து வந்த சந்திர திசை சிறுவனுக்கு 2017 ல் துவங்கியது. சந்திரன் பேச்சின் காரக கிரகம் என்றாலும் அவர் உடன் அமைந்த சனியின் குணத்தையும் சேர்த்தே செயல்படவேண்டும். வேகத்திற்குரிய செவ்வாய் மனோகாரகன்  வீட்டில் பாதிக்கப்பட்ட நிலையின் அமைந்ததால் சிறுவனுக்கு மனோவேகம் அதிகம். மனத்தின் வேகத்திற்கு தக்கபடி பேச்சு விரைவாக வரவில்லை. இந்நிலையில் சனி தொடர்புபெற்ற சந்திரன், சனியைப்போன்றே நிதானமாக செயல்பட வேண்டும். சந்திரன் சிறுவனின் எண்ண அலைகளை இப்போது நிதானப்படுதுகிறது. மட்டுப்பட்ட மனதின் வேகத்தோடு இப்போது வார்த்தைகள் சரியாக ஒருங்கிணைகின்றன. இதனால் சிறுவனுக்கு பேச்சில் இருந்த திக்குவாய் குறைபாடு நீங்குகிறது.

பொதுவாகவே விரைந்த செயல்பாடுகொண்ட செவ்வாயின் குணத்தை கேதுவின் தொடர்பு அதிகப்படுத்தியதால் சிறுவனுக்கு பேச்சில் பாதிப்பு ஏற்பட்டது. கேதுவும் செவ்வாய் போன்ற செயல்பாடுகொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது சந்திர திசை துவங்கியதும் 2017 ல் ராகு கடகத்திற்கு வருகிறார். கேது செவ்வாய் போன்றவர் என்றால் ராகுவிடம் சனியின் குணம் இருக்கும். மேலும் ஒரு பாதிப்பை ராகு துவக்கினால் கேதுவும், கேது துவக்கினால் ராகுவும் முடித்துவைப்பர்.  இதனடிப்படையில் செவ்வாய் கேது இருவரின் செயல்பாட்டையும் ராகு சரிசெய்கிறார். காரணம் ஜனன காலத்தில் செவ்வாயின் அவிட்டம்-2 ல் ராகு நின்றதே. ஆனால் திசா நாதனின் ஒத்துழைப்பு இன்றி ராகுவால் செயல்படமுடியாது. திசா நாதன் சந்திரன், சுரப்பி காரகன் சுக்கிரனின் பூரம்-4 ல் நின்று சுக்கிரனின் செயல்பாட்டை சரியான பாதைக்கு திருப்புகிறார். சூரியன் சுக்கிரனை  அஸ்தங்கப்படுதினாலும் ராசிநாதன் என்பதாலும், ராசிக்கு திக்பலத்தில் நிற்பதால்   சந்திரனின் செயல்பாட்டை ஆமோதித்து சுக்கிரன் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார். தற்போது சுரப்பி காரகன் சுக்கிரன் இயல்பாக செயல்படுகிறார். தனது சாரத்தின் நின்று தனக்கு கட்டளைடும் திசாநாதன் சந்திரனின் கட்டளையை ஏற்று சுரப்பிகள் நன்கு செயல்பட சுக்கிரன் சம்மதிக்கிறார். கிரகங்களுக்கிடையேயான இந்த ஒருங்கிணைவு சிறுவனை தடைகளற்று பேசவைத்தது. செவ்வாயின் வேகமான எண்ணங்களுக்கு சனி சந்திரன் இணைவு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தி சிறுவனின் பேச்சை சரிசெய்துள்ளது என்றால் அது மிகையல்ல.

இப்போது தலைப்பை மீண்டுமொருமுறை படியுங்கள்.

 

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Wednesday 13 January 2021

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன?

தனது கர்மா என்ன?

தன்னை எது வழிநடத்துகிறது?


என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய அனைவரிடமும் இக்கேள்வி ஒருநாள் கண்டிப்பாக எழுந்தே தீரும். அதனால்தான் மனிதர் மனம் வயது செல்லச்செல்ல ஆன்மீகத்தின்பால் திரும்புகிறது. ஒருவரது பிறப்பின் சூழலை லக்னமும் லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் வாழும் சூழலை பூர்வ புண்ணியம் எனும் அவரது ஐந்தாம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் ஆன்மா இறுதியாக எதில் நிறைவு பெறும் என்பதையும் அவரது கடந்த பிறவியின் கொடுப்பினைகள் என்ன என்பதையும் 9 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களுமே முடிவு செய்கிறது. அவரின் வாழ்வின் முடிவை 12 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் முடிவு செய்கின்றன. எளிமையாக சொல்வதென்றால் வாழ்வின் துவக்கத்தை லக்னமும், மத்திய காலத்தை 5 ஆம் பாவமும் இறுதிக்காலத்தை 9 ஆம் பாவமும் குறிப்பிடும்.  இவற்றின் ரகசியங்களை தெரிந்துகொண்டால் ஒருவரின் வாழ்க்கைப்பயணம் தவிப்பாக இருக்காது. இப்பதிவில் நாம் ஒரு மனிதனின் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளையும் ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.

ஜாதகர் 1968 ல் பிறந்த ஒரு ஆண். லக்னம் மோட்ச ராசியான கடகத்தில் அமைந்து அதன் அதிபதி சந்திரன் வளர்பிறையான காலத்தில் பிறந்தவர். இதனால் ஜாதகருக்கு இயல்பாகவே ஒரு அறம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும் எனலாம். லக்னம் பூசம்-3 ல் அமைந்துள்ளது. சந்திரன் பூசம்-2 ல் அமைந்துள்ளது. பூச நட்சதிராதிபதி சனி, கால புருஷனின் மூன்றாவது மோட்ச ராசியான மீனத்தில் மோட்ச காரகன் ராகுவுடன்  அமைந்துள்ளார். இவரது சிந்தனை வாழ்வின் பிற்காலத்தில் எதை நோக்கிய நிலையில் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இவரது ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்னத்திற்கு 3 ல் அமைந்து அதன் அதிபதி புதன் மீனத்தில் அமைந்துள்ளார். மீனத்தின் அதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனையாகி நிற்கிறார். இந்நிலையில் கடக லக்னத்தின் யோகாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு திக்பலத்தை தரும் நிலையில் அமைந்து மீனத்தில் உச்சமாகியுள்ள சுக்கிரனின் சாரம் பரணி-1 பெற்றுள்ளார். செவ்வாய் கடகத்தையும் மற்றொரு மோட்ச ராசியாகிய விருட்சிகத்தையும் பார்வை செய்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.  இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மீன ராசியையே தொடர்புகொள்கின்றன. லக்னத்தின் போக ஸ்தானாதிபதி (3 ஆம் அதிபதி) புதனே கால புருஷனுக்கும் போக ஸ்தானமான மிதுனதிற்கும் அதிபதியான நிலையில் அவர்  லக்னத்தின் மோட்ச பாவமான 12 ஆம் அதிபதியுமாகி, அவர் கால புருஷனின் மோட்ச பாவமாகிய மீனத்தில் அமைகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜாதகரின் பிறப்பு விபரங்களை காண்போம். லக்னமும் லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்ததால் ஜாதகர் ஒரு நல்ல ஆன்மீக  நாட்டம் கொண்ட ஒரு உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தார். பிறப்பு திசை சனி திசை என்பதும், சந்திரன் சனி சாரம் பெற்றதும் இதற்கு காரணமாகும். பிறவியிலேயே சனி திசை வந்து சிரமங்களை சிறு வயதிலேயே அனுப்பவிப்பவர்கள் பிற்கால வாழ்வில் தடம் மாறுவது குறைவு. காரணம் சனி கற்றுத்தரும் பாடங்கள் அப்படி. சனி திசைக்குப்பிறகு ஜாதகருக்கு சனியோடு சாரப்பரிவர்த்தனை பெற்ற (புதன் உத்திரட்டாதி-2, சனி ரேவதி-2) புதன் திசை வந்தது. வித்யா ஸ்தானமாகிய 4ஆம் பாவத்தின் அதிபதியாகிய உச்ச சுக்கிரனால் நீச பங்கப்பட்ட புதன் வித்யா காரகன் என்பதால் சிறந்த கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். ஜீவன காரகன்  சனியோடு புதன் தொடர்பாவதால் கல்விக்கேற்ற வேலையையும் கிடைக்கப்பெற்றார். 7 ஆம் அதிபதி சனியோடு தொடர்பானதால் ஜாதகருக்கு திருமணமும் தக்க வயதில் நடந்தது. பாதகாதிபதியான மனைவி வந்ததும் வாழ்வில் வசந்தகளும் கூடவே  பாதகமான சில மாற்றங்களும் வரவேண்டும். ஆனால் இங்கு பாதகங்கள் ஏதும் பெரிய அளவில்  நடக்கவில்லை. மனைவியும் ஜாதகரைப்போலவே நல்ல ஆன்மீக சிந்தனை வாய்க்கப்பெற்றவராகவே இருக்கிறார். காரணம் சுக்கிரனுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்ப்படுவதால் தனது இயல்பான பலன்களை வழங்க முடியவில்லை.

இரண்டாவதாக ஜாதகரின் மத்திய வயது வாழ்வியலை ஆராய்வோம். ஜாதகருக்கு இப்போது பூர்வ புண்ணிய பலன்கள் செயல்படத்துவங்குகின்றன. 31 ஆவது வயதில் ஜாதகருக்கு புதன் திசை முடிந்து கேது திசை துவங்கியது. ஞான காரகன் கேது தனது காரக அடிப்படையிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் கேதுவின் சாரநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானதாலும் பூர்வ புண்ணிய அடிப்படையில் ஜாதகருக்கான பலன்கள் நடந்தன. செவ்வாய் லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்த்ததால் வீடு, வாகன பாக்கியங்களை குறைவின்றி வழங்கினார். 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கினார். ஞான காரகன் கேது தற்போது கட்டுமான காரகன் செவ்வாய்க்கு தனது காரக அடிப்படையில் தான் விரும்பும் “அடியார்க்கு எளியர்” (சிவன்)  கோவில் கட்டும் சிந்தனையை ஏற்படுத்துகிறார். பொதுமக்களிடம் ஜாதகருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் தனது வீட்டின் ஒரு பகுதியையே கோவிலாக மாற்றுகிறார் ஜாதகர். ஞான காரகன் கேது, பிடிவாதகாரகன் செவ்வாய் தொடர்பால் தன் முயற்சியில் ஜாதகர் பின்வாங்கவில்லை. உரிய காலம் வரும் வரை காத்திருக்கிறார். ஜாதகர் 2௦ வருடங்களாக தனது வீட்டில் வழிபாடுகள் செய்து இப்படி காத்துக்கொண்டுள்ளார். தற்போது 52 வயதான நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை முடிய இன்னும் உத்தேசமாக 5 வருடங்கள் உள்ளது. சுக்கிரன் பாதகாதிபதி என்பதோடு கால புருஷனின் குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் அதுவரை ஜாதகருக்கு தடை நீடிக்கும்.

இறுதியாக ஜாதகரின் கடைசி காலங்களிலாவது அவரது விருப்பங்கள் நிறைவேறுமா எனக்காண்போம். சுக்கிர திசைக்கு அடுத்து வரும் சூரிய திசை ஜாதகரின் எண்ணங்களை நிறைவேற்றும். காரணம் சூரியன் குருவோடு பரிவர்தனையாவதுதான். சூரியனுடன் பரிவர்த்தனையாகி மோட்சகாரகன் ராகுவோடு இணையும் கால புருஷனின் மோட்ச ஸ்தானாதிபதி குரு, ஞானகாரகன் கேதுவின் மகம்-1 ல் நிற்கிறார். இப்படி சூரியன், குரு, ராகு-கேதுகளுடன் ஏற்படும் தொடர்பால் ஜாதகர் கோவில் கட்டுவார். குருவிற்கும் கேதுவிற்கும் ஆன்மீக ரீதியாக இயல்பாக உள்ள புரிதலால் சூரிய திசையில் ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறும். அப்போது கோவில் கட்ட ஜாதகருக்கு அரசின்  பின்புலத்தில் இயங்கும் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பு ஒன்றின் மூலம் உதவிகள் கிடைக்கும் என்பது ஜாதக ரீதியாக தெரிகிறது. சூரிய திசையை அடுத்து வரும் சந்திரன் அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெறுவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் ஜாதகரின்  வாழ்வு சந்திர திசையில் இறையோடு கலந்து நிறைவுபெறும். கடகத்தில் பிறந்து விருட்சிகத்தில் பொங்கி பிரவாகமெடுத்த நதி இறுதியாக மீனத்தில் கடலில் கலக்கும் எனலாம். ஜாதகத்தில் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதகரின் நோக்கத்தை தெளிவாகத்தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday 3 January 2021

காத்திருந்து... காத்திருந்து...

 

காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் காதலிலும் சில வேதனைகளும் வெற்றிகளும் உண்டு. அனைத்திற்கும் ஒரே காரணம், வாழ்க்கையை அதன் இயல்பில் அனுபவிக்க எண்ணாமல் தங்கள் எண்ணப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என எண்ணுவதே. இது சாத்தியமானால் இறைவனுக்கு இங்கே இடமில்லை. காதலால் எந்தகைய ஜாதகத்தினர் சிரமப்படுவர் என்பதை தெரிந்துகொண்டால் அவர்கள் தகுந்த உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கலாம். ஜோதிடமும் அதற்கு உதவும்.


காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். ஐந்தாம் பாவம் 7 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டால் மட்டுமே காதல் திருமணத்தில் முடியும். காதலின் வெற்றியை 3,5,7,11 ஆகிய பாவங்களின் ஒருங்கிணைவு தீர்மானிக்கிறது. காதலில் தோல்வியை 4,6,1௦, ஆகிய பாவங்களும் கேதுவும் தீர்மானிக்கின்றனர். காதல் யாருக்கு தீமையை தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.             

                    


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாம் பாவம் என்பதால் தனது எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தாது மறைக்கக்கூடியது. அதுவும் லக்னமும் ராசியும் ஒன்று என்பதால் இக்குணம் அதிகமிருக்கும். சந்திரன் நீசமாவதால் பெற்றோர்களுக்கு பாதிப்பைத்தரும் ராசியாகும். இந்த ஜாதகி தனக்கு வந்த வரன்களை எல்லாம் பிடிக்கவில்லை என பல ஆண்டுகள் மறைத்தார். ஜாதகத்தில் லக்னாதிபதி மறைவு ஸ்தானமான எட்டாமிடம் மிதுனத்தில் வக்கிர கதியில் அமைந்திருப்பதை காண்க. இயல்பாகவே பிடிவாத காரகனான செவ்வாய் வக்கிரமானால் பிடிவாத குணம் மேலும் கூடும். இதனால் பிடிவாதமாக தனக்கு சாதகமான நிலை வரும்வரை ஜாதகி தனது விஷயங்களை மறைக்கிறார். ஜாதகிக்கு வயது தற்போது 28. இன்னும் திருமணமாகவில்லை. மிக தாமதமாகவே தனது காதலை வீட்டில் தெரிவித்தார். ஜாதகத்தில் சந்திர சூரியர்களுக்கு சஷ்டாஷ்டகத்தில் லக்னாதிபதி இருப்பதால் ஜாதகியின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த ஜாதகி நிறைவேற வழியற்ற தனது காதலால் மிகவும் சிரமப்படுகிறார். ஜாதகியின் காதலை நிறை வேற்ற துணிவுடன் பெற்றோரை தொடர்புகொண்டு ஜாதகியை கரம்பிடிக்க வேண்டிய காதலனே தீர்மானம் எடுக்க முடியாமல் ஜாதகியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஜாதகியின் இளமையை வீணாக்குகிறார் என்பதுதான் இதில் சோகம்.

சரி ஜாதகியின் காதல் இப்படி இழுபறியாக விளங்க காரணம் என்ன?

1993 ல் கேட்டை-2 ல் பிறந்த ஜாதகிக்கு காதலை குறிக்கும் கேது திசையில் காதலுக்குரிய பாவமான 5 ஆம் பாவாதிபதி குருவின் புக்தி 2008 ல் ஜாதகியின் 14 ஆவது வயதில் துவங்கியது. அப்போது முதல் ஜாதகி காதலிக்கிறார். தற்போதுவரை 14 வருடமாக மிக நீண்ட காதல். 2011 மத்தியிலிருந்து ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. களத்திர மற்றும் விரையாதிபதியான சுக்கிரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்று 2, 5 ஆம் பாவாதிபதி குருவின் பூரட்டாதி-1 ல் நிற்கிறார். திசா நாதன் சுக்கிரன் பகை சாரம் பெற்று திக்பலம் பெறுகிறார். திக்பலம் பகை சாரத்தை முறியடிக்கும் என்றாலும் சுக்கிரன் 4 ஆமிடத்திலிருந்து திசை நடத்துவதுதான் பாதிப்பு. காரணம் 4 ஆம் பாவம் திக்பலம் பெற்றாலும் அது காதலை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு விரைய பாவமாகும். இதனால் 5 ஆம் பாவாதிபதி சாரம் பெற்றாலும் 5 க்கு விரையத்திலிருக்கும் சுக்கிரன் 5 க்கு பாதிப்பை தருகிறார். மேலும் சுக்கிரனும் 5 ஆம் பாவாதிபதி குருவும் பகை என்பதை மீறி இருவரும் ஒருவருக்கொருவர் சஸ்டாஷ்டகத்தில் உள்ளதால் காதலை தனது திசையில் நிறைவேற்றிட மாட்டார். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதன் குறைந்த பாகை (2.06) பெற்றதனால் தாரா காரகனாக உள்ளார். தாரா காரகனான புதனே ஜாதகியின் காதலுக்கு முக்கிய காரணம். புதன் தாரா காரகனானதால் ஜாதகியின் காதலில் உண்மையும் ஏக்கமும் இருக்கும். ஆனால் காதலனை குறிக்கும் புதன் சூரியனின் அஸ்தங்கமாகியுள்ளது. இதனால் காதலனுக்கு போதிய தகுதி இல்லை என்பது தெரிகிறது. ஆனால் புதன் சூரியனோடு சேர்ந்ததால் கௌரவமாகவும்,  சனியோடு சேர்ந்ததால் ஜாதகியை ஏமாற்றுபவராகவும் இருப்பார். (புதன்+சனி சேர்க்கை ஏமாற்றத்தை  குறிக்கும்).

ஜாதகத்தில் குரு 7 ஆம் பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்துனைவர் வகையில் ஓரளவு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பாகும். ஓரளவு மட்டுமே என்று கூறக்காரணம், குரு நின்ற வீட்டோன் புதன் அஸ்தங்கம் பெற்றுவிட்ட நிலையில், குருவும் சார அடிப்படையில் பாதகாதிபதி சந்திரனின் ஹஸ்தம்-4 ல் நிற்கிறார். நீச சந்திரன் குடும்ப பாவத்திற்கு  விரையத்தில் லக்னத்தில் நின்று, சந்திரனோடு இணைவு பெற்ற சர்ப்பங்களும் 1 & 7 ல் நிற்பது ஜாதகிக்கு திருமணம் நடக்க கடும் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  மூன்றாவது காமத்திரிகோணமான 11 ஆமிடத்தில் குரு நின்றாலும் அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் காதலனும் பின்வாங்கும் நிலையில் பெற்றோரும் சம்மதிக்காத நிலையில் ஜாதகி விரக்தி நிலையை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜோதிடம் மூலம் தனது வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் என மிக காலம் தாழ்த்திய நிலையில் என்னிடம் ஜாதகி ஆலோசனை கேட்டார். ஜாதகிக்கு சுக்கிர திசை இன்னும் 11 ஆண்டுகள் உள்ளதையும், சுக்கிர திசை சுகத்திற்கு கணவனை கொண்டுவரும் ஆனால் காதலை நிறைவேற்றி வைக்காது என்பதையும் எடுத்துக்கூறினேன். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதனுக்கும் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டகம் (6-8 ஆக) உள்ளது. இது காதலன் வேறு கணவன் வேறு என்பதை தெரிவிக்கிறது. மேலும் மேற்சொன்னபடி காதலனுக்குள்ள பாதகமான அமைப்புகளை எடுத்துக்கூறி இனிமேலும் தனது வாலிபத்தை வீணாக்காமல், பெற்றோர் பார்க்கும் நல்லதொரு வரனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகிக்கு சுக்கிர திசையில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குரு புக்தி இந்த ஆண்டு பிற்பகுதியில் துவங்குகிறது. ராகு கேதுக்கள் கோட்சாரத்தில் லக்னத்தைவிட்டு விலகி லக்னத்திற்கு 6 மற்றும் 12 ஆக அதாவது 2022 ராகு-கேது பெயர்ச்சிக்குப்பிறகு கோட்சார குருவும் மீனத்திற்கு வரும் காலம் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501