Showing posts with label யோகங்கள். Show all posts
Showing posts with label யோகங்கள். Show all posts

Monday, 10 August 2020

வெளிநாட்டு யோகத்தை அள்ளித்தரும் ராகு-கேதுக்கள்!

 


ராகு கேதுக்கள் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்கள். குடிசையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் கொண்டுசென்று நிறுத்தும். மாடத்தில் இருப்பவரை தெருவில் கொண்டுவந்து நிறுத்தும். பொதுவாக ராகு-கேதுக்கள் தடைகளை ஏற்படுத்தும் கிரகங்கள் மட்டுமே என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சாதகமாக இவை ஜாதகத்தில் அமைந்திருந்தால் இதர கிரகங்களை விட உறுதியான அமைப்பில் முன்னேற்றப்பாதையில் ஜாதகரை கொண்டுசெலுத்தும். இவைகளே இதர கிரக அமைப்புகளால் வாழ வழியற்றுத்திரிபவர்களுக்கு தனது காரகத்துவம் சார்த்த வகையில் திடீர் வெளிநாட்டு வாய்ப்புகளையும் கொடுத்து வாழ வழியும் காண்பிக்கும். சர்ப்ப கிரகங்கள் கட்டுப்பாட்டில் அனைத்து வகையான புதுமையான நவீனமான துறைகள் வரும் என்றாலும் குறிப்பாக குற்றமறியும் துறை, நவீன கணினி மென்பொருள் துறை, மருத்துவத்துறை, விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இவைகளின் மூலம் வெளிநாட்டு வாய்ப்புகளை இவை வழங்குகின்றன. நவீனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் மேற்குறிப்பிட்டவை பொருளாதார உயர்வைத்தரும் முக்கிய துறைகளாகும். 

இன்றைய பதிவில் ராகு-கேதுக்கள் வழங்கும் வெளிநாட்டு வாய்ப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.      

 கீழே ஆணின் ஒரு ஜாதகம். 

jothidanunukkangal.blogspot.com

ஒருவர் உள்ளூரில் ஆதாவது  தான் பிறந்து வளர்ந்த ஊரில் தனது வாழ்க்கையையும் ஜீவனத்தையும் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டுமெனில் ஜாதகத்தில் உள்ளூர் வாழ்க்கையை குறிக்கும் 2 ஆமிடம் சிறப்பாக இருக்க வேண்டும். இரண்டாமிடத்தோடு தொடர்புடைய கிரக அமைப்புகள் ஒருவருக்கு வருமானம் மற்றும் குடும்பம் அமையுமிடங்களை சுட்டிக்காட்டும். ராகுவோடு இணைந்ததால் சந்திரன் தனது பலத்தை ராகுவிடம் இழக்கிறார். இதனால் சந்திரனின் அஷ்டமாதித்ய தோஷம் ராகுவை மீறி இங்கு செயல்பட்டாது. சந்திரனும் ராகுவும் கடல்கடந்து சென்று வெளிநாட்டில் வாழ்வதை குறிக்கும் கிரகங்கள் ஆகும். ஜீவன காரகனும் வருமான ஸ்தானாதிபதியுமான சனி வக்கிரம் பெற்ற நிலையில் 6 ஆமிடத்தில் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் நிற்கிறார். 2 ஆமதிபதி 6 ல் அமைவது ஜாதகர் வேலைக்குச் செல்வார் என்பதும் (2 வருமானம், 6 வேலை), சந்திரனின் சாரத்தில் சனி அமர்வதால் வேலை வெளிநாடு தொடர்பானதாக அமையும் என்பதும் இங்கு புலனாகிறது. லக்னாதிபதி குரு வெளிநாட்டில் வசிக்கும் அமைப்பை குறிக்கும் 12 ஆமிடமான நீர் ராசி விருட்சிகத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்குவார் என்பதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

விருச்சிகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும். எப்போது இந்த அமைப்புகள் எல்லாம் செயல்படும் என்பதைக்கான திசா புக்திகளை காண வேண்டும். ஜாதகர் 1971 ல் பிறந்தவர். ஜாதகருக்கு 1991 இறுதியிலிருந்து குரு திசை நடந்தது. 16 வருட குரு திசையின் முதல் பகுதியான முதல் 8 வருடங்கள்  மேஷத்திற்கு செயல்பட்டது. மேஷம் வேலை பாவமான 6 க்கு விரைய ஸ்தானம். எனவே ஜாதகர் அப்போது சரியான வேலை அமைய போராட்டத்தில் இருந்திருப்பார்.     2004 முதல் குரு திசையின் இரண்டாவது பகுதி செயல்பட்டது. 12 ஆமிடம் ஒருவர் தான் பிறந்த வளர்ந்த வாழிடத்தை விட்டு வெகு தூரம் விலகிச்செல்வதை குறிப்பிடும். விருட்சிகத்திலிருந்து திசை நடத்தும் குரு தனது திசையின் 2 ஆவது பகுதியில் வேலை பாவத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு வேலை கிடைத்து வெளிநாடு சென்றார். ஜாதகருக்கு தற்போது குரு திசை முடிந்து சனி திசையில் உள்ளார். இறுதிக்காலத்தில் 12 ஆமிட குருவின் விசாக நட்சத்திரத்தில் நிற்கும் புதன் திசையைத்தான் ஜாதகர் சந்திக்கவுள்ளார். எனவே ஜாதகர் வெளிநாட்டில்தான் நிரந்தரமாக வாசிப்பார். ஜாதகர் தனது தாய் நாடான  இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க வாய்ப்பே இல்லை. ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பையும் வசிப்பிடத்தையும் இங்கு ராகுவே வழங்கியுள்ளது. அதற்கு திசா புக்திகள் ஒத்துழைக்க வேண்டும். 

இந்த ஜாதகத்தில் செயல்படும் மற்றொரு அமைப்பு தர்ம கர்மாதிபதி யோகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒருவர் அங்கு நிரந்தரமாக குடியுரிமை பெற்று தங்கவேண்டுமெனில் அவர் திறமையும் சாதுரியமும் மதிநுட்பமும் கொண்டவராக இருக்கவேண்டும். இவை இல்லாவிட்டால் வெளிநாட்டிலும் வாழ வழியற்று திறமையற்ற பணியாளராகவோ அல்லது அகதியாகவோதான் தங்கவேண்டியிருக்கும். சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்று பணி செய்யும் அமைப்புள்ளோருக்குத்தான் அத்தகைய அமைப்பு இருக்கும். விசா அதிகாரிகளிடம் மாட்டிய பிறகு வெளிநாட்டில் கம்பி எண்ண வேண்டியதுதான் அல்லது அவமானப்படுத்தப்பட்டு திரும்பவேண்டியிருக்கும். இந்த ஜாதகத்தில் வெளிநாட்டிலும் தனது திறமையால் சகல வசதி வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் குடியுரிமையையும் பெறும் அமைப்புகள் உள்ளன. அவற்றில் சிறப்பானது தர்ம கர்மாதிபதி யோகமாகும். கால புருஷ 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குரு , சனி தொடர்பால் ஏற்படுவதே முதல்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும். இந்த ஜாதகத்தில் சனியை குரு பார்ப்பதால் அது அமைகிறது. மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகமானது லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சுக்கிரனோடு இணைந்திருக்கும் 9 ஆமதிபதி சூரியனாலும் 1௦ ஆமதிபதி புதனாலும் ஏற்படுவதாகும். இது இரண்டாம்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும்.

ராகு கேதுக்களின் யோகத்தை பெறவும் சிறப்பானதொரு ஜாதக அமைப்பிருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்கள் வாழ்வில் ஒரு விஷயத்தில் பாதிப்பை தந்து வேறொரு வகையில் ஜாதகரை உயர்த்தும் என்று கூறுவதுண்டு. இந்த ஜாதகத்தில் நாம் கண்டது போல பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுச்செல்வது பாதகம் என்று  எடுத்துக்கொண்டால் அந்நிய தேசத்தில் சிறப்பான வாழ்வு அமைவது சாதகமே. ஒரே சமயத்தில் இந்த இரு வகையான அமைப்புகளையும் அனுபவிக்க இயலாது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501 

Saturday, 11 July 2020

இன்பக்கவி!



நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள் அனைவராலும் நினைவுகூறத்தக்கவர். தமிழகத்தில் அடையாளங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் கவிஞர் கண்ணதாசன் முக்கிய இடம் வகிப்பார். அவர் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அபூர்வு மலர் எனலாம். அண்ணாரது ஜாதகத்தை எனது பாணியில் இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன்.    


கவிஞரின் ஜாதகத்தில் மேஷச்சந்திரனும் கடக்கச்செவ்வாயும் பரிவர்த்தனை. கவிஞர் மேஷ ராசி என எடுத்துக்கொண்டால் ஜாதகர் முரட்டுப்பிடிவாதமும் மூர்க்கத்தனமும் முன்கோபமும் கொண்டவராக இருக்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களை சண்டைக்கோழி என குறிப்பிடுவது சரியாகப்பொருந்தும். பரிவர்தனைக்குப்பின் சந்திரன் கடகத்தில் ஆட்சி பெறுகிறது என எடுத்துக்கொண்டால் தாய்மை உள்ளம், கஷ்டத்தை கண்டு கண்ணீர் சிந்துவது, அழகியல், கற்பனைவளம், குடும்பப்பற்று, அபாரமான நினைவுத்திறன், அரசியல், உணர்ச்சித்தூண்டல் என சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞரின் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் நின்று செயல்பட்டுள்ளதை நாமறிந்த அவரது வாழ்க்கை அடிப்படையில் அனைவரும் உணரலாம். பரிவர்த்தனைக்குப்பிறகு சென்று அமரும்  இடத்திற்கே கிரகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்பதற்கு இவரது ஜாதகம் ஒரு மிகச்சிறத்த எடுத்துக்காட்டு. ராசி பரிவர்த்தனையாகி பரிவர்த்தனை கிரகத்தோடு திக்பலமடைவதால் லக்னத்தைவிட ராசி வலுவடைகிறது. லக்னம் செயல்பட்டால் ஜாதகருக்கான சூழல் தானாக அமையும். ராசி செயல்பட்டால் ஜாதகர் தனக்கான சூழலை தானே உருவாக்கிக்கொள்வார். கண்ணதாசன் தனது வாழ்க்கைக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.  

ஜாதகத்தில் சந்திரன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்கிறது. கேது சந்திரனுக்கு திரிகோணத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் கேதுவால் முழுமையாக பாதிக்கப்படும். ஆனால் பரிவர்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவின் நட்சத்திரத்தில் வந்து அமைவதால்   சந்திரனுக்கு ஏற்படவேண்டிய தோஷம் செவ்வாய்க்கு இடம் மாறுகிறது. செவ்வாய் தாய்,  தந்தை, பந்துக்களை குறிக்கும் 4, 9 க்குரிய பாவாதிபதியாவதால் ஜாதகர் இளம் வயதில் பெற்றோரால் உறவினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் முதலில் ஜாதகரை பரிதவிக்கவிட்டு பிறகே சிறப்பான பலன்களை வழங்கும். கண்ணதாசன் சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்து படிப்பை தொடர இயலாமல் பரிதவித்து பிறகே சென்னை வந்தார். சிறுவயதில் தான் கண்ணீர் சிந்திய அனுபவங்களையே பாடல்களாக்கி நமது கண்களை குளமாக்கினார். 2 ஆமதிபதி புதன் விரையத்திலும் 5 ஆமிடத்தில் கேதுவும் அமைந்ததால்  2, 5 ஆமிடங்கள் பாதித்தவர்கள் சொந்த ஊரின் இருந்தால் முன்னேற இயலாது என்ற விதியும் இங்கு செயல்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  

பரிவர்த்தனைக்குப்பின் பின் கால புருஷனுக்கு சுக ஸ்தானமான கடகத்தில், ஜாதகருக்கு படுக்கை சுகத்தை வழங்கவேண்டிய 12 ஆம் பாவத்தில், புதன்+சுக்கிரன் சேர்க்கையால் ஏற்படும் மதனகோபால யோகத்தின் மையத்தில் உணர்சிகளுக்குரிய சந்திரன் வந்து ஆட்சி பெறுகிறார். உணர்சிகளுக்குரிய பெண் கிரகமான சந்திரன் இரு காம-மோக கிரகங்களுடன் குருவின் பார்வையில் இணைகிறது. ஜாதகர் வாழ்க்கை பெண் இன்பத்தை அனுபவிப்பதற்கே என எண்ணி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக  தாசிப்பெண்களை நாடியவரே தவிர அடுத்தவர் மனைவியை அடைய எண்ணியவரில்லை. சந்திரன்+சுக்கிரன்+குரு இந்த மூன்று கிரக சேர்க்கை அளப்பரிய கற்பனைத்திறனை ஜாதகருக்கு கொடுத்தது. பெண்  இன்பம், வர்ணனை மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் இவரது கவிதைகளுக்குள் கைகட்டி நின்றது. குருவின் பார்வை பெரும் இடங்ககளான 2, 4 மற்றும் 12 ஆகிய பாவங்கள் சம்பாத்தியம், சுகத்திற்காக செலவுகள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கடகத்தில் அமைந்த கிரகச் சேர்க்கையை குரு பார்ப்பதால் கற்பனை ஊற்று பீய்ச்சி அடித்தது என்றால் அது மிகையல்ல. லக்னாதிபதி சூரியன் இசை ராசியான மிதுனத்தில் ராகுவோடு அமைந்ததால் ஜாதகர் இசையோடு தொடர்புகொள்ள அவதரித்தவர் என்பது புலனாகிறது. ராகு எதையும் அதிகப்படுத்தும் கிரகம் என்பதால் ஜாதகருக்கு லாப ஸ்தானத்தில் அமைந்த ராகு இசை வாழ்வில் அதீத பாண்டித்தியத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். இந்த முக்கிய அமைப்பே ஜாதகர்  உலகப்புகழ் பெற்றவராக தமிழ் இருக்கும் வரை நினைவு கூறத்தக்க கவிஞராக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

7 ஆமதிபதி சனி பரிவர்த்தனை செவ்வாயின் மற்றொரு வீடான விருட்சிகத்தில் வக்கிரம் பெற்று அமைந்ததால் ஜாதகருக்கு இல்லற வகையில் பல தொடர்புகள் அமைந்தது. விருச்சிகத்தை சாராயம் காயச்சுமிடம் என ஜோதிடம் வரையறுக்கிறது. சந்திரன் நீசமாகும் கால புருஷனுக்கு உடலுறவு ஸ்தானமான விருட்சிகத்தில் வக்கிர சனி அமைந்து அதன் திரிகோணம் கடகமாக வருவதால் ஜாதகர் மதுவோடு மாதுக்களின் தொடர்பிலும் இருக்க வேண்டும் என்பதன் விதிக்குட்பட்டு வாழ்ந்தார். சூரியன் ராகு தொடர்பு அரசியலிலும் இயக்கப்பணிகளிலும் ஈடுபடுத்தும் அமைப்பாகும். ஜாதகரின் அரசியல் தொடர்புகள் அனைவரும் அறிந்ததே. முக்கிய கிரக சேர்க்கைகள் அமைந்தது உணர்சிகளுக்குரிய நீர் ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதில் காம கிரகங்களோடு செவ்வாயும் தொடர்பானதால் இவர் தொட்டுப்பார்க்காத மது இல்லை என்றே கூறலாம். லக்னத்திற்கு வீழ்ச்சி ஸ்தானம் கடகம் என்பதால் இவரது மரணம் கூட வெளிநாட்டிலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. உடல் அளவில் அவர் மரணித்துவிட்டார். ஆனால் புகழ் அளவில் அவர் ஒரு சிரஞ்சீவி. அவர் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "நிரந்தரமானவர்கள் அழிவதில்லை."  

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

Monday, 9 March 2020

விதி, மதி, கதி!




ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்துவிட்டால் ஒருவருக்கான வாழ்க்கை நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நிறைவேறிவிடும். ஜாதகர் வாழத் துவங்குமுன்பே அவருக்கான  பாதையை படைத்தவன் வகுத்து வைத்திருப்பான் எனலாம். இரண்டாவதாக மதி எனப்படுவது  சந்திரனை குறிப்பிடும் சொல் ஆகும். ஒருவரது லக்னம் வலு குறைவாக அமைந்திருந்து ராசியும் ராசி நாதனும் வலுவாக அமைந்துவிட்டால் ஜாதகர் தனது சுய முயற்சியால் தன் விருப்பப்படி தனக்கான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுப்பார் எனலாம்.  நிறைவாக கதி என்பது சூரியனை குறிப்பிடும் சொல் ஆகும். ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத்தவிர சூரியனின் கதிர்வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதால் ஒருவருக்கு லக்னமும் ராசியும் பாதிக்கப்பட்டிருந்து சூரியன் சிறப்பாக அமைந்திருந்தால் சூரியன் அமைந்துள்ள பாவமே ஜாதகரை இயக்கும் பாவம் என பிரதானமாக எடுத்துக்கொண்டு பலன்சொல்வது ஒரு முறை. இதன் அடிப்படையின் இப்பதிவை சில உதாரண ஜாதகங்களுடன் காண்போம்.

விதி

மேற்கண்ட  ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. மிதுன லக்னத்தில் லக்ன சுபரும் சுபாவ பாவருமான சனி அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் வக்கிர நிலை பெற்ற குருவின் பார்வையை பெறுகிறார். லக்னாதிபதி ராசியில் உச்சமாகி பாவிகள் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். லக்னாதிபதி உட்பட எந்த கிரகமும் அஸ்தங்கம் அடையவில்லை என்பது சிறப்பே. இதனால் மதி எனப்படும் ராசியை விட விதி எனப்படும் லக்னமே வலுப்பெறுகிறது.  இதனால் ஜாதகரை ராசியை விட லக்னமே வழிநடத்தும். தனக்கு இயல்பாக அமையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் துணைவரை கரம்பிடிக்க வேண்டியிருக்கும். காரணம் ராசியில் அமைந்துள்ள புதனை சூரிய-சந்திரனும்  செவ்வாயும் கட்டுப்படுத்துவதே ஆகும். பாக்யாதிபதி சனி லக்னத்தில் தன் நண்பனின் வீட்டில் நேர்கதியில் வலுவாக அமைந்துள்ளதால் ஜாதகருக்கு எதிலும் தெளிவான நிதானமான போக்கு இருக்கும். 7 ஆமதிபதி குரு வக்கிரமடைந்து செவ்வாயும் சூரிய, சந்திர, புதனோடு சேர்க்கை பெற்றதால் கணவர் நிர்வாகத்திறனுடையவராகவும், பொறுமை அற்றவராகவும், அடிக்கடி பயணங்கள் செய்பவராகவும் , கோபம் மிகுந்தவராகவும் இருப்பார் எனலாம். 7 ஆமதிபதியான நீர்க்கோள் குரு 9 ஆம் பாவத்தில் நிற்பதாலும் லக்னத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியாகி சந்திரன் லக்னாதிபதி சேர்க்கை பெற்றதனாலும் ஜாதகிக்கு கணவரின் சூழலை முன்னிட்டு வெளிநாட்டு வாழ்வு அமையும் எனலாம்.  ஜாதகி வெளிநாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். ஜாதகிக்கு நடப்பவை அனைத்தும் அவரது விதிப்படி நடப்பவை. லக்னாதிபதி ராசியில் பாவிகளோடு சேர்ந்து விட்டதால்  ஜாதகர் போராடி தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி அமைத்துக்கொள்ள இயலாது.

மதி

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகத்தில் உச்ச நீச்சமாக அமையப்பெற்ற கிரகங்களே ஜாதகருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மையாகும். இந்த ஜாதகத்தில் கடக ராசியில் அமையப்பெற்ற குருவும் கடக ராசி அதிபதி சந்திரனும் உச்சமாக அமைந்துள்ளனர். சுக்கிரனும் செவ்வாயும் ஆட்சி. சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் அமைந்துள்ளதால் நீச பங்கமடைந்துள்ளார். ராகு கேதுக்கள் தனித்த நிலையில் இதர கிரகங்களோடு சேர்க்கை பெறாமல் அமைந்துள்ளது சிறப்பே. இப்படி பல சிறப்புகள் பெற்ற ஜாதகம் நிச்சயம் ஒரு யோக ஜாதகமாகத்தான் இருக்கும். ஜாதகர் உலகப்புகழ் பெற்ற தமிழர். ஜாதகத்தில் லக்னம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்திரனும் அதன் வீடும் வலுவடைந்ததால் இந்த ஜாதகரை ராசியே வழிநடத்தும் எனலாம். அதாவது லக்னப்படி தனக்கு அமையப்பெறும் சூழ்நிலைகளை ராசி வலுவாடைந்ததால் தன் எண்ணப்படி போராடி மாற்றியமைத்துக்கொள்ள இயலும். பிராமண ராசியான கடகத்தில் பிராமண கிரகம் குரு  உச்சமாகி அதன் அதிபதி சந்திரனும் உச்சமானதால் ஜாதகர் பிராமண வர்கத்தில் பிறந்தவர். சந்திரன் மாற்றங்களை குறிக்கும் கிரகம் என்பதால் தான் சார்ந்த வைணவ சம்பிரதாய நெறிக்கு எதிராக சைவ சம்பிரதாயப்படி தன் நெற்றியில் திருநாமத்திற்கு பதிலாக தன் எண்ணப்படி திருமண் (விபூதி) இட்டுக்கொண்டவர். சைவ நெறிகளை குறிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை வைணவ நெறிகளை குறிக்கும் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களைவிட வலுவாக அமைந்ததே இதற்கு காரணமாகும். 

ராசியாதிபதி சுக்கிரன் சூரியனோடு சேர்ந்ததால் அரசியல் அரசாங்கத்தொடர்புகளும் ஜாதகரை தேடி வந்தன. கற்பனைக்கிரகம் சூரியனும் திரைத்துறைக்கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் வலுவாக அமைந்ததால் திரைத்துறையில் கோலோச்சியவர். ராசிக்கு இரண்டாமிடம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைகிறது. அதுவும் 2 ஆமிடதிற்கு சுபகர்த்தாரி யோகத்தை வழங்கும் இரு கிரகங்களும் உச்ச கதியில் அமைந்துள்ளன. இதனால் 2 ஆமிடதிற்கு உச்ச சுபகர்த்தாரி யோகம் அமைகிறது. அன்னை சரஸ்வதி இவர் நாவில் குடியிருந்தாள் என்பது தமிழகம் கண்ட உண்மை. இவரது நாவிலிருந்து விழுந்த பாடல் வரிகள் சாமான்யனை குதூகலிக்க வைத்தன. ஆட்சியாளர்களை பிரமிக்க வைத்தன. இனி இதுபோன்ற கவிஞர்கள் திரைத்துறைக்கு வரமாட்டார்களா என நம் எல்லோரையும் ஏங்க வைக்கின்றன. ராசிக்கு 5 ஆமிடத்தில் ஆன்மீக கிரகம் கேது அமைந்ததனால் திரைப்படக் கவிஞராக இருந்தாலும் ஆன்மீகத் துறைக்கும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜாதகர் ஸ்ரீரங்கத்தில் பிறந்த மறைந்த திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் வாலி ஆவார். பலநாள் போராடி விடாப்பிடியாக முயன்று தன் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டதற்கு இந்த ஜாதகத்தில் மதி என அழைக்கப்படும் மாற்றங்களுக்குரிய சந்திரனின் வலுவே காரணமாகும்.

கதி

மேற்கண்ட ஜாதகம் இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலினுடையது. ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் விருண யோகம் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்திலும் ராசிக்கு 3 லும்  அமைகிறது. விருண யோகத்தால் வாழ்வில் பல போராட்டமான சூழல்களை சந்திக்க வேண்டும். லக்னாதிபதி பகை கிரகங்களோடு 6 ல் அமைந்த நிலையில் ராசியாதிபதி செவ்வாய் சனியோடு  கிரக யுத்தத்தில் தோற்றுவிட்ட நிலையில் லக்னதிற்கு யோகாதிபதியான சனியும் ராசியதிபதியான செவ்வாய் இருவருமே ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவராகின்றனர். இவ்விருவருக்கும் 1௦ ல் திக்பலத்தில் சூரியன் நீச பங்கமடைந்த நிலையில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகரை கதி எனப்படும் சூரியனே இயக்கும் சக்திபெற்றவராகிறார்.


சட்டம் ஒழுங்கை குறிக்கும் சனி-செவ்வாய் சேர்க்கையால் ஜாதகர் வக்கீலுக்கு படித்தார். லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் இச்சேர்க்கை அமைந்ததால் ஜாதகர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். சனி அடித்தட்டு மக்கள் என்பதாலும் செவ்வாய் போராட்டங்களுக்குரிய கிரகம் என்பதாலும் இவ்விரு கிரக சேர்க்கையால் ஜாதகர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இவர் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் இவரது போர்க்குணத்தையும் கண்டு மிரண்ட  ஆங்கிலேய அரசு மக்களுக்காக இறங்கி வந்து பல சலுகைகளை அளித்தது.  பூமிகாரகன் செவ்வாயோடு உழைப்புகாரகன் சனி இணைந்து ஜாதகத்தில் செயல்படுவதால் இவர் “இந்திய விவசாயிகளின் ஆன்மா” என அழைக்கப்பட்டார்.

காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இவரை நாடி வர சனி+செவ்வாய் நிலையே காரணமாகும். தேச விடுதலைக்கான போராட்டங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது.  அதற்காக பலமுறை சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை தனது உறுதிமிக்க செயல்களால் ஒருங்கிணைத்ததற்காக தேசம் இவரை “இந்தியாவின் இரும்பு மனிதர்” எனப்போற்றுகிறது. சூரியனின் நிலையால் முதல் துணை பிரதமராகவும் சனியின் நிலையால் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய சாமான்ய விவசாயிகள் இப்படி ஒரு மனிதர் மீண்டும் பிறந்து தங்கள் வாழ்வை காக்க வரமாட்டார்களா என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் இவருடையது. இவை அனைத்திற்கும் காரணம் இவரது ஜாதகத்தில் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் உச்சமடைந்து கர்ம காரகன் சனியோடு சேர்க்கை பெற்றதே ஆகும். இந்த சேர்க்கைக்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியன் அமைவது “அழியாப்புகழைத்தரும்” அமைப்பாகும். இத்தகைய ஜாதக அமைப்பினர் அவர்களுக்கான காலகட்டத்தில் மட்டுமே அபூர்வமாக பிறவி எடுக்கிறார்கள். அழியாப்புகழை அடைகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.  படேலின் புகழ் என்றும் அழியாதது. கட்டுமானத்திற்கு காரகன் செவ்வாய் உச்சமானதால் குஜராத்தில் அமைந்துள்ள இவரது சிலையே உலகில் இன்று உயரமான சிலையாகும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Wednesday, 27 March 2019

அஞ்சல் வழிக்கல்விக்கான ஜாதக அமைப்பு.


கல்வி என்பது மனிதனுக்கு கண்களைப் போன்றது. கல்வியில்லாதவன் கண்ணில்லாதவன் என்பது அன்றோர் வாக்கு. சூழ்நிலை சந்தர்பங்களாலும் பொருளாதார சூழ்நிலையின் பொருட்டும் பள்ளிப்படிபோடு கல்வியை விட்டவர்களும் வாழ்வில் நல்ல சூழ்நிலைக்கு வந்த பிறகு கற்காமல் விட்ட காலங்களை நினைத்து ஏங்குவர். அத்தகையோர் தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் புத்தகங்களை தேடிச் சென்று தங்களது அறிவு தாகத்திற்கு வழி செய்துகொள்கின்றனர்.



சிலர் சமூக அந்தஸ்திற்காகவும் தொழில் சூழ்நிலைகளின் பொருட்டும் அஞ்சல் வழியில் பயின்று தங்களக்கான தகுதியை பட்டங்களின் மூலம் வெளிக்கட்டிக்கொள்கின்றனர். கௌரவ டாக்டர் பட்டங்களை பணம்கொடுத்துப் பெற்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி மக்கள் நம்புவதாக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். இதில் திருமணதிற்காக சொல்லப்படும் பொய்யை மெய்ப்பிக்க திருமணப் பத்திரிகையில் பட்டங்களை போட்டுவிட்டு திருமணம் செய்பவர்கள் ஒருவகை. இவர்களை எதிர்கால அரசியல்வாதிகள் எனலாம். அடைப்புக்குறிக்குள் பட்டங்களை அடக்கிவிட்டு மற்றையோரை அடக்க நினைப்போர் ஒருவகை.  

இப்பதிவில் நாம் உயர்கல்வியில் தடைகளை சந்திக்கும்போது அஞ்சல்வழியில் அதை தொடர சாதகமான ஜாதக அமைப்புகளை அலசவிருக்கிறோம்.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.


17.09.1977  இரவு 7.24 மணி.

மீன லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வித்யா ஸ்தானமான ஆமிடத்தில் 2 மற்றும் ஒன்பதாமதிபதி செவ்வாயோடு அமைந்துள்ளார். இதனால் வித்யா ஸ்தானம் பலம் பெறுகிறது. ஆனால் குருவும் செவ்வாயும் தர்ம கர்மாதிபதிகள் என்பதையும் தொழிலுக்கு இது சாதகமான அமைப்பு என்ற ஒரு கோணமும் உள்ளதை கவனிக்க வேண்டும். ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் நட்சத்திரமே முதல் திசையாக வந்தது பால்ய வயது யோகமாக இருந்துள்ளதை குறிப்பிடுகிறது.

ஜாதகரின் 10 ஆவது வயதில் சனி திசை ஆரம்பித்துள்ளது. சனி தனது பகை வீட்டில் லக்ன பாதகாதிபதியுடன் இணைந்து வித்யா ஸ்தானமான 4 க்கு விரையாதிபதியும் உயர்கல்வியை குறிப்பிடும் ஸ்தானமான 9 க்கு விரையமான ஆமதிபதியுமான சுக்கிரனுடன் இணைந்து வித்யா காரகனான புதனின் மூலத்திரிகோண வீட்டிற்கும் லக்னத்திற்கு 6 லும் அமைந்து திசை நடந்துவது கல்விக்கு சிறப்பான அமைப்பு என கூறுவதற்கில்லை. திசா நாதனுக்கு வீடு கொடுத்த சூரியன் பாதக ஸ்தானத்தில் பாதகாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் உள்ளது. இது  சூரியன் நிற்கும் பாவ அடிப்படையில் கல்வியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை அமைப்பு கோட்சாரத்தில் பலனளிக்கும் திசா புக்தியில் கிரகங்கள் தாங்கள் நின்ற இட பலனையே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சனி கேது சாரம் பெற்று கேது லக்னத்தில் புதனின் சாரத்தில் நிற்பது சனி திசையில் பாதிப்பு கல்வியில்தான் ஏற்படும் என்பதை இது குறிப்பிடுகிறது.

எப்போது கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்பதை புதிகார கிரகங்களும் கோட்சாரமும் சுட்டிக்காட்டும். ஜாதகர் சனி திசை சுக்கிர புக்தியில் 1994ம் முற்பகுதியில் ஜாதகர் 12 ஆம் வகுப்பை முடித்தார். அதன்பிறகு ராசியின் மீது ராகுவோடு இணைந்து லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8 ல் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமிடதிற்கு விரையத்தில் நின்றபோது ஜாதகரின் உயர் கல்வி தடைபட்டது. சனி திசையில் சுக்கிர புக்தியில் பாதக ஸ்தானத்தில் நின்ற சூரியனின் அந்தரத்தில் கல்விக்கு சூரியன் மூலம் தடை ஏற்பட்டது. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜாதகரின் தந்தை ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க அவர் ஜாதகருக்கு உயர்கல்வியை தொடரும் அமைப்பு இல்லை என்று கூற ஜாதகரை தான் நடத்தும் மளிகை கடையை கவனிக்குமாறு பணித்தார். கவனிக்க - புதன் ஜோதிடர், கல்வி, வியாபாரம் இவைகளை குறிக்கும். சுக்கிர புக்தியில் 9 க்கு விரையத்தில் நின்ற சந்திரனின் அந்தரத்திலும் தடை தொடர்ந்தது. கவனிக்க ஜாதகருக்கு யோகியாக குருவும் அவயோகியாக சூரியனும் ஜாதகத்தில் அமைந்துள்ளனர்.

கல்வி தடைபட்ட பிறகு கோட்சார குரு லக்னத்திற்கு 9 ல் சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்லும்போது கல்வியை தொடர பள்ளி நண்பர் உந்துதலாக இருந்தார். அதனால் ஜாதகர் அஞ்சல் வழியில் இளநிலை தமிழ் பட்டப்படிப்பில் 1996 ஆம் ஆண்டு சேர்ந்தார். அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் 3 ஆம் இடாதிபதி சுக்கிரனின் புக்தியில் அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் புதனின் அந்தரத்தில் ஜாதகர் கல்வியை அஞ்சல் வழியில் தொடர்ந்தது கவனிக்கத்தக்கது. பாவ சக்கரத்தில் சனியும் சுக்கிரனும் ஐந்தாமிட தொடர்பு கொண்டதும் ஜாதகருக்கு சுக்கிரன் தனது புக்தியில் உதவியுள்ளது தெரிகிறது. புதனும் 7 ஆமிடமும் நண்பனை குறிக்கும். தொடர்ந்து ஜாதகர் அஞ்சல் வழியிலேயே முதுநிலை தமிழ் பட்டத்தையும் படித்து முடித்தார். 2005 ஆம் ஆண்டு டிசம்பரில்  ஜாதகர் சனி திசையில் லக்னாதிபதி குரு புக்தியில் M Phil பட்டம் பெற்றார்.   

ஜாதகர் 2009 ஜூனில் லக்னத்திற்கு 6 ல் நின்ற புதன் திசை அதே ஆறாமிடத்தில் நின்ற சுக்கிர புக்தியில் தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். புதன் திசையில் இட மாற்றத்தை குறிக்கும் சந்திரனின் புக்தியில் 2013 ல் ஜாதகர்  வேறொரு கல்லூரிக்கு மாறினார். அங்கு ஜாதகருக்கு முனைவர் பட்டம் ஏற்பட்ட வாய்ப்பை சரியாகப்  பயன்படுத்தினார். 2017 ல் ராகு புக்தியில் ஜாதகர் தமிழில் சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 201ல் புதன் திசை செவ்வாய் புக்தியில் NET தேர்வில் வெற்றி பெற்றார். பாதகாதிபதியின் வீடுகளான மிதுனமும் கன்னியும் ஜாதகருக்கு திதி சூன்ய வீடுகளானது கவனிக்கத்தக்கது. மேலும் திசா நாதன் புதனின் நிலையால் ஜாதகர் அக்கு பங்சர் மருத்துவமும் பயின்று மருத்துவம் பார்த்து வருகிறார். கல்லூரி சென்று பயிலாத ஜாதகர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிகிறார் என்றால் அது ஜாதகரின் முயற்சியால் மட்டுமின்றி கிரகங்களின் ஆசீர்வாதத்தால் என்றால்  மிகையல்ல.

எனவே அஞ்சல் வழிக்கல்விக்கு 3 ஆம் பாவமும், தூது மற்றும் அஞ்சல்  போன்றவற்றிற்கு  காரகன் புதனும் சாதகமாக இருப்பது அவசியம் என்பது புலனாகிறது.

லக்னப்புள்ளியும்,  லக்னத்தில் அமைந்த கேதுவும் புதன் சாரம் பெற்றதனாலும் லக்னாதிபதி புதன் வீட்டில் அமைந்து ராகு சாரம் பெற்று அந்த ராகுவும் மலைப்பகுதியை குறிக்கும் சூரியனோடு தொடர்பு கொண்டு புதன் வீட்டில் அமைந்து லக்னத்தை பார்வையிடுவதால் ஜாதகரின் பெயர் மலைமீது இருக்கும் பெருமாளின் பெயராகும்.

ஜாதகத்தில் இரண்டாமிடம் தாய் மொழிக் கல்வியையும் செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை தமிழின் வடிவமாகவே தமிழர்களாகிய நாம் வணங்குகிறோம் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜாதகத்தில் உள்ள குரு - மங்கள யோகம் மிகச் சிறப்பான பலனை ஜாதகருக்கு வணங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. செவ்வாய் நான்கில் அமைந்து தொடர்புகள் ஸ்தானமான 7 ஆமிடத்தை நான்காம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகரின் தொடர்புகளில் செவ்வாய் முன்னிலை வகிக்கிறது. மேலும் செவ்வாய் குருவை விட அதிக பாகை பெற்று நின்றதால் இந்த ஜாதகரை வழிநடத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

எவ்வாறெனில் 
   
ஜாதகரை அஞ்சல் வழிக்கல்வியில் படிப்பை தொடர உந்துதலாக இருந்த பள்ளித் தோழனின் பெயர் முருகநாத பூபதி.

ஜாதகர் முதுநிலை பட்டப்படிப்பில் தமிழை விடுத்து வேறு பாடம் எடுக்க முயன்றபோது அவரது முதுநிலையிலும் தமிழையே எடுத்து படிக்குமாறு தூண்டிய நண்பரின் பெயர் சரவணன்.

ஜாதகருக்கு சுக்கிரனின் சாரம் பெற்ற 7 ஆமதிபதி புதன் திசை துவங்கிய 2 ஆவது மாதமே 2006 ல் திருமணத்தை நடதிவைதுள்ளது. மாமனாரின் பெயர் ஆறுமுகம்.

2008ல் ஜாதகரது திருமண மோதிரம் தொலைந்துவிட்ட அதை கண்டுபிடித்துக் கொடுத்த ஜாதகரின் கடை ஊழியரின் பெயர் தங்கவேல்.

முதலில் சேர்ந்த கல்லூரியில் ஜாதகரின் திறமையை பரிசோதித்து வேலை கொடுத்த  முதல்வரின் பெயர் சிங்காரவேலன்.

ஜாதகரிடன் வேலைக்கான உத்திரவாத கடிதத்தை வழங்கிய நபரின் பெயர் சரவணகுமார்.

ஜாதகரை முதன் முதலில் பாடம் எடுக்க வகுப்பிற்கு அழைத்துச் சென்ற நபரின் பெயர் சிவசுப்பிரமணியன்.

2013 ல் பணிமாறிச் சென்று சேர்ந்த கல்லூரியின் முதல்வர் பெயர் பாலமுருகன்.

 2015 ல் புதிதாய் கட்டிய வீடு உள்ள பகுதி மந்திரகிரி நகர் எனும் முருகனின் பெயர்கொண்டது.

அந்த வீட்டிற்கு தச்சு வேலை செய்த நபரின் பெயர் சக்திவேல்.

வீட்டை கட்டிக்கொடுத்த பொறியாளரின் பெயர் மந்திராசலம் என்ற முருகனின் பெயர்.

வீட்டில் மின்சார வேலை மற்றும் நீர் குழாய் அமைத்துத்தந்த நபரின் பெயர் கார்த்திகேயன்.

ஜாதகர் அக்குபஞ்சர் மருத்துவமனை நடத்த இடன் கொடுத்து உதவிய இடத்தின் உரிமையாளர் மந்த்ராசலம் என்ற முருகனின் பெயர்.

அந்த மருத்துவமனையில் ஜாதகரிடன் மருத்துவம் பார்க்க வந்த முதல் நோயாளியின் பெயர் ஆறுமுகம்.


இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் ஜோதிடரான அடியேனது பெயர் பழனியப்பன்.

கிரகங்கள் எப்படி நம் வாழ்வில் பங்காற்றுகின்றன என்பதை இது போன்ற ஜாதகங்களை ஆராயும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. இந்த ஜாதகத்தை மேலும் சில கோணங்களில் ஆராயும்போது இன்னும் சில ஆச்சரியங்களை காண்கிறேன். பதிவின் நீலம் கருதி இத்துடன் முடிக்கிறேன். 

ஜோதிட ஆர்வலர்களுக்காக - ஜாதகம் K.P அயனாம்சம் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.  

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை,
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501

Thursday, 11 September 2014

பாதாள லோக யோகம்

ஜோதிட யோகங்களில் இந்த பாதாள லோக யோகமும் ஒன்று. பண்டைய நாளில் இந்த பாதாள லோக யோகம் மிக கொடுமையான ஒரு யோகமாகக் கருதப்பட்டது. காரணம் இதன் பலன்கள்.

இதற்கான ஜோதிட அமைப்பு என்னவெனில் லக்னத்திற்கு 7 ல் சனியும் செவ்வாயும் சேர்ந்து நின்றால் அத்தகைய அமைப்பு பாதாள லோக யோகம் எனப்படும். லக்னம் சரமாகவும் அமைந்து  இவ்விரு கிரகங்களும் கேந்திராதிபதிகளுமாகி இப்படி 7 ஆமிடத்தில் இணைந்து நின்றால் இந்த யோகம் இன்னும் தீவிரமாக செயல்படும்.

எல்லாம் சரி இதன் பயன் என்ன? ஏன் இந்த யோகம் கொடியது?

இந்த யோகம் ஜாதகத்தில் அமையப்பெற்றவர் தான் பிறந்த மண்ணை, பெற்றோரை, உறவுகளை விட்டு திரும்பி வர இயலாத பாதாலத்திற்குச் சென்றிடுவார் என்பதே இதன் பயன்.

பண்டைய மனிதன் பூமி உருண்டை என்பதை ஒரு வழியாக உறுதி செய்துகொண்டபின். தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவிலும் தங்களைபோன்றே மனிதர்கள் வாழ்வார்கள் என்பதை உணர்ந்தார்கள். அப்படி அவர்கள் வாழும் பகுதி தாங்கள் வாழும் பூமிப் பந்தின் கீழ்பகுதியில் இருக்கும் என்பதையும் அனுமானித்ததார்கள். தாங்கள் வாழும் பகுதியை பூலோகம் (பூமி உலகம் – லோகம் என்றால் உலகம்) என அழைத்த அவர்கள் பூமியின் மறுபகுதியையே பாதாளலோகம் என அழைத்தனர். வாகன வசதிகளற்ற பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனது வாழ்நாளில் அப்படி பூமிப் பந்தின் மறுபகுதிக்குச் சென்றவர் திரும்ப வர இயலாது என்பதாலேயே இந்த யோகம் கொடுமையானது என அழைக்கப்பட்டது.

தமிழ் நாட்டின் சென்னையில் இருந்து இந்த யோகத்தை கணக்கிட்டால், சென்னைக்குக் கீழே அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் வருகிறது. இன்று இந்த யோகம் வாய்க்கப்பெற்ற ஜாதகர் எளிதாக தனது வாழிடத்தை வெளிநாட்டில் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அமைத்துக்கொள்வார் எனலாம். அதற்கான சூழ்நிலை ஜாதகப்படி ஜாதகருக்கு வாய்க்கும்.

அமெரிக்காவிற்கு தற்காலத்தில் விமானப்பயணம் செய்து ஓரிரு நாளில் சென்றுவிடலாம். திரும்புவதும் அவ்வாறே.

இன்று இந்த யோகம் எனக்கு இருக்கிறதா சொல்லுங்கள் என ஆர்வத்துடன் சிலர் ஜோதிடரிடம் வருகின்றனர். பாதாளத்திற்குப் போவதற்கு அப்படி என்னய்யா ஆர்வம் என விளையாட்டாய் நான் கேட்பதுண்டு.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் கொடுமையாகப் பார்க்கப்பட்ட ஒரு ஜாதக அமைப்பு, வாகன வசதிகள் வளர்ந்தவிட்ட தற்காலத்தில் விரும்பத்தக்கதாக மாறிவிட்டது காலத்தின் அதிசயம்.

பின்வரும் ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகர் பிறந்த ஆண்டு 1984.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 2 வருடம், 4 மாதங்கள், 0 நாள்.


மேஷ லக்னத்திற்கு 7 ல் உச்ச சனியுடன் செவ்வாய் சேர்க்கை. எனவே பாதாள லோகம் உள்ளது. யோக பலனின்படி ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஜாதகர் மலேசியாவில் வசிக்கிறார். இந்த யோகத்திற்கு துணை செய்யும் இதர அமைப்புகளும் ஜாதகத்தில் உண்டு. அவை பின்வருமாறு.

லக்னத்திற்கு 2 ல் அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்தை உறுதிப்படுத்துகிறது.

வெளிநாடு செல்லும் அமைப்பிற்கு 4 மற்றும் 9 ஆகிய பாவங்கள் ஜலராசிகளாகவோ அல்லது ஜலக் கோள்களுடனோ தொடர்புகொண்டிருக்க வேண்டும் என நான் முந்தைய பதிவில்  குறிப்பிட்டேன். இந்த ஜாதகத்தில் நான்காமிடம் ஜலராசியான கடக ராசியாகி அதன் அதிபதி சந்திரன் லக்னத்துடன் தொடர்புகொண்டது ஜாதகர் வெளிநாடு வாசம் செய்வார் என்பதை அறிவிக்கிறது. மேலும் 9 ஆமிடத்தில் ஜலக்கோளான குரு ஆட்சியில் நின்றது ஜாதகரின் வெளிநாட்டு வாசத்திற்கு உறுதுணை புரியும் அமைப்பு.

(பாண்டியராஜன் – புதுக்கோட்டை) போன்ற சில வாசகர்கள் 3 மற்றும்  12 ஆமிடத் தொடர்பு வெளிநாடு செல்ல எவ்விதம்  உதவும் எனக் கேட்டுள்ளனர். 3 ஆமிடம் தாற்காலிகப் பயணத்தையும் 12 ஆமிடம் பரதேசம் செல்வதையுமே குறிக்கும். 12 ஆமிடம் இழப்புகளைக் குறிப்பிடும் இடம் என்பதால் அவ்விடத்தோடு தொடர்புகொள்ளும் ஜலக்கோள்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பை வழங்கினாலும் அவை தொடர்புடைய காரகங்களில் இழப்பையும் கூடவே வழங்கிவிடும்.

உதாரணமாக குரு 12 ல் அமைந்தால் ஜாதகர் வெளிநாடு சென்றாலும் குருவின் காரகப்படி ஜாதகருக்கு தகுந்த ஊதியமின்மை, குடும்பம் அமைவதில் தடை, குடும்பம் அமைந்தாலும் மனைவியைப் பிரிந்திருப்பதால் புத்திர பாக்கியத்தடை போன்றவற்றை உருவாக்க வாய்ப்புண்டு. வளைகுடா சென்ற பல அன்பர்களின் ஜாதகத்தில் இத்தகைய அமைப்புகள் காணப்படுவதை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம்.


பின்வரும் மற்றொரு ஜாதகம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணினுடையது.    

இந்த ஜாதகியும் 1984 ஆம் ஆண்டு பிறந்தவர்தான்.
ஜனன கால சுக்கிர திசை இருப்பு: 1 வருடம், 0 மாதம், 23 நாட்கள். 

இந்த ஜாதகத்தில் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கை உள்ளது அதனால் இதுவும் பாதாள லோக யோக ஜாதகமே.

ஒரு ஜாதகத்தில் லக்னம் உயிர் என்றால் ராசியானது உடலை, மனதைக் குறிக்கும். ராசியும் லக்னமும் நட்பு, பகை அல்லது சமம் போன்ற எத்தகைய உறவுகளைக் கொண்டிருந்தாலும் அவை இரண்டும் ஜாதகத்தில் இணைந்தே செயல்படும். அதனால்தான் லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி சாரத்தில் நிற்கும் கிரகங்களும் ஜாதகருக்கு நன்மையே செய்ய விளையும் என்கிறோம். இத்தகைய ஜோதிட விதிகள் மிக நுட்பமானவை. ஜோதிடம் பயிலும் அன்பர்கள் இவற்றை குறித்து வைத்துகொள்ளவேண்டும்.

லக்னத்தை முதன்மையாகக் கொண்டே பலன்களை கணிக்க வேண்டும் என்றாலும்.லக்னம் அல்லது ராசியில் எது வலிமை உடையதோ அதை முதன்மையாகக் கொண்டு கணிப்பதும் ஒரு முறை. இதில் மேலோட்டமாக சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் உள்ளார்ந்து ஜாதகத்தை ஆராயும்போது இரு சக்கர வாகனத்தின் இரு சக்கரங்களைப் போல லக்னம், ராசி இரண்டும் ஒரே மாதிரியான பலன்களையே குறிப்பிடும். லக்னத்தைக் கொண்டு கணிக்க இயலாத சில விபரங்களை ராசியைக் கொண்டு கணிக்கலாம். இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்வதால் அதிகப்படியான விளக்கங்கள் கிடைக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி அம்சத்தில் நீசமாகி வலு குன்றியுள்ளது கவனிக்கத்தக்கது. அதனால் இங்கு ராசியை முதன்மையாக எடுத்துக் கொண்டால் ராசிக்கு 7 ல் சனி-செவ்வாய் சேர்க்கையால் பாதாள லோக யோகம் உள்ளதை கவனிக்கலாம்.

இந்த யோகத்திற்கு துணைபுரியும் அமைப்புகள் என்றால் லக்னத்திற்கு 4 ல் அந்நியத் தொடர்புகளைக் குறிக்கும் ராகு உச்சமானது மற்றும் ராசிக்கு 9 ல் ஒரு ஜலக்கோள் குரு ஆட்சியில் உள்ளதைக் குறிப்பிடலாம்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.