Showing posts with label பிரபலங்கள். Show all posts
Showing posts with label பிரபலங்கள். Show all posts

Saturday, 11 July 2020

இன்பக்கவி!



நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள் அனைவராலும் நினைவுகூறத்தக்கவர். தமிழகத்தில் அடையாளங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் கவிஞர் கண்ணதாசன் முக்கிய இடம் வகிப்பார். அவர் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அபூர்வு மலர் எனலாம். அண்ணாரது ஜாதகத்தை எனது பாணியில் இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன்.    


கவிஞரின் ஜாதகத்தில் மேஷச்சந்திரனும் கடக்கச்செவ்வாயும் பரிவர்த்தனை. கவிஞர் மேஷ ராசி என எடுத்துக்கொண்டால் ஜாதகர் முரட்டுப்பிடிவாதமும் மூர்க்கத்தனமும் முன்கோபமும் கொண்டவராக இருக்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களை சண்டைக்கோழி என குறிப்பிடுவது சரியாகப்பொருந்தும். பரிவர்தனைக்குப்பின் சந்திரன் கடகத்தில் ஆட்சி பெறுகிறது என எடுத்துக்கொண்டால் தாய்மை உள்ளம், கஷ்டத்தை கண்டு கண்ணீர் சிந்துவது, அழகியல், கற்பனைவளம், குடும்பப்பற்று, அபாரமான நினைவுத்திறன், அரசியல், உணர்ச்சித்தூண்டல் என சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞரின் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் நின்று செயல்பட்டுள்ளதை நாமறிந்த அவரது வாழ்க்கை அடிப்படையில் அனைவரும் உணரலாம். பரிவர்த்தனைக்குப்பிறகு சென்று அமரும்  இடத்திற்கே கிரகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்பதற்கு இவரது ஜாதகம் ஒரு மிகச்சிறத்த எடுத்துக்காட்டு. ராசி பரிவர்த்தனையாகி பரிவர்த்தனை கிரகத்தோடு திக்பலமடைவதால் லக்னத்தைவிட ராசி வலுவடைகிறது. லக்னம் செயல்பட்டால் ஜாதகருக்கான சூழல் தானாக அமையும். ராசி செயல்பட்டால் ஜாதகர் தனக்கான சூழலை தானே உருவாக்கிக்கொள்வார். கண்ணதாசன் தனது வாழ்க்கைக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.  

ஜாதகத்தில் சந்திரன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்கிறது. கேது சந்திரனுக்கு திரிகோணத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் கேதுவால் முழுமையாக பாதிக்கப்படும். ஆனால் பரிவர்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவின் நட்சத்திரத்தில் வந்து அமைவதால்   சந்திரனுக்கு ஏற்படவேண்டிய தோஷம் செவ்வாய்க்கு இடம் மாறுகிறது. செவ்வாய் தாய்,  தந்தை, பந்துக்களை குறிக்கும் 4, 9 க்குரிய பாவாதிபதியாவதால் ஜாதகர் இளம் வயதில் பெற்றோரால் உறவினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் முதலில் ஜாதகரை பரிதவிக்கவிட்டு பிறகே சிறப்பான பலன்களை வழங்கும். கண்ணதாசன் சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்து படிப்பை தொடர இயலாமல் பரிதவித்து பிறகே சென்னை வந்தார். சிறுவயதில் தான் கண்ணீர் சிந்திய அனுபவங்களையே பாடல்களாக்கி நமது கண்களை குளமாக்கினார். 2 ஆமதிபதி புதன் விரையத்திலும் 5 ஆமிடத்தில் கேதுவும் அமைந்ததால்  2, 5 ஆமிடங்கள் பாதித்தவர்கள் சொந்த ஊரின் இருந்தால் முன்னேற இயலாது என்ற விதியும் இங்கு செயல்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  

பரிவர்த்தனைக்குப்பின் பின் கால புருஷனுக்கு சுக ஸ்தானமான கடகத்தில், ஜாதகருக்கு படுக்கை சுகத்தை வழங்கவேண்டிய 12 ஆம் பாவத்தில், புதன்+சுக்கிரன் சேர்க்கையால் ஏற்படும் மதனகோபால யோகத்தின் மையத்தில் உணர்சிகளுக்குரிய சந்திரன் வந்து ஆட்சி பெறுகிறார். உணர்சிகளுக்குரிய பெண் கிரகமான சந்திரன் இரு காம-மோக கிரகங்களுடன் குருவின் பார்வையில் இணைகிறது. ஜாதகர் வாழ்க்கை பெண் இன்பத்தை அனுபவிப்பதற்கே என எண்ணி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக  தாசிப்பெண்களை நாடியவரே தவிர அடுத்தவர் மனைவியை அடைய எண்ணியவரில்லை. சந்திரன்+சுக்கிரன்+குரு இந்த மூன்று கிரக சேர்க்கை அளப்பரிய கற்பனைத்திறனை ஜாதகருக்கு கொடுத்தது. பெண்  இன்பம், வர்ணனை மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் இவரது கவிதைகளுக்குள் கைகட்டி நின்றது. குருவின் பார்வை பெரும் இடங்ககளான 2, 4 மற்றும் 12 ஆகிய பாவங்கள் சம்பாத்தியம், சுகத்திற்காக செலவுகள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கடகத்தில் அமைந்த கிரகச் சேர்க்கையை குரு பார்ப்பதால் கற்பனை ஊற்று பீய்ச்சி அடித்தது என்றால் அது மிகையல்ல. லக்னாதிபதி சூரியன் இசை ராசியான மிதுனத்தில் ராகுவோடு அமைந்ததால் ஜாதகர் இசையோடு தொடர்புகொள்ள அவதரித்தவர் என்பது புலனாகிறது. ராகு எதையும் அதிகப்படுத்தும் கிரகம் என்பதால் ஜாதகருக்கு லாப ஸ்தானத்தில் அமைந்த ராகு இசை வாழ்வில் அதீத பாண்டித்தியத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். இந்த முக்கிய அமைப்பே ஜாதகர்  உலகப்புகழ் பெற்றவராக தமிழ் இருக்கும் வரை நினைவு கூறத்தக்க கவிஞராக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

7 ஆமதிபதி சனி பரிவர்த்தனை செவ்வாயின் மற்றொரு வீடான விருட்சிகத்தில் வக்கிரம் பெற்று அமைந்ததால் ஜாதகருக்கு இல்லற வகையில் பல தொடர்புகள் அமைந்தது. விருச்சிகத்தை சாராயம் காயச்சுமிடம் என ஜோதிடம் வரையறுக்கிறது. சந்திரன் நீசமாகும் கால புருஷனுக்கு உடலுறவு ஸ்தானமான விருட்சிகத்தில் வக்கிர சனி அமைந்து அதன் திரிகோணம் கடகமாக வருவதால் ஜாதகர் மதுவோடு மாதுக்களின் தொடர்பிலும் இருக்க வேண்டும் என்பதன் விதிக்குட்பட்டு வாழ்ந்தார். சூரியன் ராகு தொடர்பு அரசியலிலும் இயக்கப்பணிகளிலும் ஈடுபடுத்தும் அமைப்பாகும். ஜாதகரின் அரசியல் தொடர்புகள் அனைவரும் அறிந்ததே. முக்கிய கிரக சேர்க்கைகள் அமைந்தது உணர்சிகளுக்குரிய நீர் ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதில் காம கிரகங்களோடு செவ்வாயும் தொடர்பானதால் இவர் தொட்டுப்பார்க்காத மது இல்லை என்றே கூறலாம். லக்னத்திற்கு வீழ்ச்சி ஸ்தானம் கடகம் என்பதால் இவரது மரணம் கூட வெளிநாட்டிலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. உடல் அளவில் அவர் மரணித்துவிட்டார். ஆனால் புகழ் அளவில் அவர் ஒரு சிரஞ்சீவி. அவர் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "நிரந்தரமானவர்கள் அழிவதில்லை."  

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

Monday, 9 March 2020

விதி, மதி, கதி!




ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்துவிட்டால் ஒருவருக்கான வாழ்க்கை நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நிறைவேறிவிடும். ஜாதகர் வாழத் துவங்குமுன்பே அவருக்கான  பாதையை படைத்தவன் வகுத்து வைத்திருப்பான் எனலாம். இரண்டாவதாக மதி எனப்படுவது  சந்திரனை குறிப்பிடும் சொல் ஆகும். ஒருவரது லக்னம் வலு குறைவாக அமைந்திருந்து ராசியும் ராசி நாதனும் வலுவாக அமைந்துவிட்டால் ஜாதகர் தனது சுய முயற்சியால் தன் விருப்பப்படி தனக்கான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுப்பார் எனலாம்.  நிறைவாக கதி என்பது சூரியனை குறிப்பிடும் சொல் ஆகும். ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத்தவிர சூரியனின் கதிர்வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதால் ஒருவருக்கு லக்னமும் ராசியும் பாதிக்கப்பட்டிருந்து சூரியன் சிறப்பாக அமைந்திருந்தால் சூரியன் அமைந்துள்ள பாவமே ஜாதகரை இயக்கும் பாவம் என பிரதானமாக எடுத்துக்கொண்டு பலன்சொல்வது ஒரு முறை. இதன் அடிப்படையின் இப்பதிவை சில உதாரண ஜாதகங்களுடன் காண்போம்.

விதி

மேற்கண்ட  ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. மிதுன லக்னத்தில் லக்ன சுபரும் சுபாவ பாவருமான சனி அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் வக்கிர நிலை பெற்ற குருவின் பார்வையை பெறுகிறார். லக்னாதிபதி ராசியில் உச்சமாகி பாவிகள் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். லக்னாதிபதி உட்பட எந்த கிரகமும் அஸ்தங்கம் அடையவில்லை என்பது சிறப்பே. இதனால் மதி எனப்படும் ராசியை விட விதி எனப்படும் லக்னமே வலுப்பெறுகிறது.  இதனால் ஜாதகரை ராசியை விட லக்னமே வழிநடத்தும். தனக்கு இயல்பாக அமையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் துணைவரை கரம்பிடிக்க வேண்டியிருக்கும். காரணம் ராசியில் அமைந்துள்ள புதனை சூரிய-சந்திரனும்  செவ்வாயும் கட்டுப்படுத்துவதே ஆகும். பாக்யாதிபதி சனி லக்னத்தில் தன் நண்பனின் வீட்டில் நேர்கதியில் வலுவாக அமைந்துள்ளதால் ஜாதகருக்கு எதிலும் தெளிவான நிதானமான போக்கு இருக்கும். 7 ஆமதிபதி குரு வக்கிரமடைந்து செவ்வாயும் சூரிய, சந்திர, புதனோடு சேர்க்கை பெற்றதால் கணவர் நிர்வாகத்திறனுடையவராகவும், பொறுமை அற்றவராகவும், அடிக்கடி பயணங்கள் செய்பவராகவும் , கோபம் மிகுந்தவராகவும் இருப்பார் எனலாம். 7 ஆமதிபதியான நீர்க்கோள் குரு 9 ஆம் பாவத்தில் நிற்பதாலும் லக்னத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியாகி சந்திரன் லக்னாதிபதி சேர்க்கை பெற்றதனாலும் ஜாதகிக்கு கணவரின் சூழலை முன்னிட்டு வெளிநாட்டு வாழ்வு அமையும் எனலாம்.  ஜாதகி வெளிநாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். ஜாதகிக்கு நடப்பவை அனைத்தும் அவரது விதிப்படி நடப்பவை. லக்னாதிபதி ராசியில் பாவிகளோடு சேர்ந்து விட்டதால்  ஜாதகர் போராடி தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி அமைத்துக்கொள்ள இயலாது.

மதி

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

ஜாதகத்தில் உச்ச நீச்சமாக அமையப்பெற்ற கிரகங்களே ஜாதகருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மையாகும். இந்த ஜாதகத்தில் கடக ராசியில் அமையப்பெற்ற குருவும் கடக ராசி அதிபதி சந்திரனும் உச்சமாக அமைந்துள்ளனர். சுக்கிரனும் செவ்வாயும் ஆட்சி. சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் அமைந்துள்ளதால் நீச பங்கமடைந்துள்ளார். ராகு கேதுக்கள் தனித்த நிலையில் இதர கிரகங்களோடு சேர்க்கை பெறாமல் அமைந்துள்ளது சிறப்பே. இப்படி பல சிறப்புகள் பெற்ற ஜாதகம் நிச்சயம் ஒரு யோக ஜாதகமாகத்தான் இருக்கும். ஜாதகர் உலகப்புகழ் பெற்ற தமிழர். ஜாதகத்தில் லக்னம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்திரனும் அதன் வீடும் வலுவடைந்ததால் இந்த ஜாதகரை ராசியே வழிநடத்தும் எனலாம். அதாவது லக்னப்படி தனக்கு அமையப்பெறும் சூழ்நிலைகளை ராசி வலுவாடைந்ததால் தன் எண்ணப்படி போராடி மாற்றியமைத்துக்கொள்ள இயலும். பிராமண ராசியான கடகத்தில் பிராமண கிரகம் குரு  உச்சமாகி அதன் அதிபதி சந்திரனும் உச்சமானதால் ஜாதகர் பிராமண வர்கத்தில் பிறந்தவர். சந்திரன் மாற்றங்களை குறிக்கும் கிரகம் என்பதால் தான் சார்ந்த வைணவ சம்பிரதாய நெறிக்கு எதிராக சைவ சம்பிரதாயப்படி தன் நெற்றியில் திருநாமத்திற்கு பதிலாக தன் எண்ணப்படி திருமண் (விபூதி) இட்டுக்கொண்டவர். சைவ நெறிகளை குறிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை வைணவ நெறிகளை குறிக்கும் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களைவிட வலுவாக அமைந்ததே இதற்கு காரணமாகும். 

ராசியாதிபதி சுக்கிரன் சூரியனோடு சேர்ந்ததால் அரசியல் அரசாங்கத்தொடர்புகளும் ஜாதகரை தேடி வந்தன. கற்பனைக்கிரகம் சூரியனும் திரைத்துறைக்கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் வலுவாக அமைந்ததால் திரைத்துறையில் கோலோச்சியவர். ராசிக்கு இரண்டாமிடம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைகிறது. அதுவும் 2 ஆமிடதிற்கு சுபகர்த்தாரி யோகத்தை வழங்கும் இரு கிரகங்களும் உச்ச கதியில் அமைந்துள்ளன. இதனால் 2 ஆமிடதிற்கு உச்ச சுபகர்த்தாரி யோகம் அமைகிறது. அன்னை சரஸ்வதி இவர் நாவில் குடியிருந்தாள் என்பது தமிழகம் கண்ட உண்மை. இவரது நாவிலிருந்து விழுந்த பாடல் வரிகள் சாமான்யனை குதூகலிக்க வைத்தன. ஆட்சியாளர்களை பிரமிக்க வைத்தன. இனி இதுபோன்ற கவிஞர்கள் திரைத்துறைக்கு வரமாட்டார்களா என நம் எல்லோரையும் ஏங்க வைக்கின்றன. ராசிக்கு 5 ஆமிடத்தில் ஆன்மீக கிரகம் கேது அமைந்ததனால் திரைப்படக் கவிஞராக இருந்தாலும் ஆன்மீகத் துறைக்கும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜாதகர் ஸ்ரீரங்கத்தில் பிறந்த மறைந்த திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் வாலி ஆவார். பலநாள் போராடி விடாப்பிடியாக முயன்று தன் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டதற்கு இந்த ஜாதகத்தில் மதி என அழைக்கப்படும் மாற்றங்களுக்குரிய சந்திரனின் வலுவே காரணமாகும்.

கதி

மேற்கண்ட ஜாதகம் இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலினுடையது. ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் விருண யோகம் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்திலும் ராசிக்கு 3 லும்  அமைகிறது. விருண யோகத்தால் வாழ்வில் பல போராட்டமான சூழல்களை சந்திக்க வேண்டும். லக்னாதிபதி பகை கிரகங்களோடு 6 ல் அமைந்த நிலையில் ராசியாதிபதி செவ்வாய் சனியோடு  கிரக யுத்தத்தில் தோற்றுவிட்ட நிலையில் லக்னதிற்கு யோகாதிபதியான சனியும் ராசியதிபதியான செவ்வாய் இருவருமே ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவராகின்றனர். இவ்விருவருக்கும் 1௦ ல் திக்பலத்தில் சூரியன் நீச பங்கமடைந்த நிலையில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகரை கதி எனப்படும் சூரியனே இயக்கும் சக்திபெற்றவராகிறார்.


சட்டம் ஒழுங்கை குறிக்கும் சனி-செவ்வாய் சேர்க்கையால் ஜாதகர் வக்கீலுக்கு படித்தார். லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் இச்சேர்க்கை அமைந்ததால் ஜாதகர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். சனி அடித்தட்டு மக்கள் என்பதாலும் செவ்வாய் போராட்டங்களுக்குரிய கிரகம் என்பதாலும் இவ்விரு கிரக சேர்க்கையால் ஜாதகர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இவர் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் இவரது போர்க்குணத்தையும் கண்டு மிரண்ட  ஆங்கிலேய அரசு மக்களுக்காக இறங்கி வந்து பல சலுகைகளை அளித்தது.  பூமிகாரகன் செவ்வாயோடு உழைப்புகாரகன் சனி இணைந்து ஜாதகத்தில் செயல்படுவதால் இவர் “இந்திய விவசாயிகளின் ஆன்மா” என அழைக்கப்பட்டார்.

காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இவரை நாடி வர சனி+செவ்வாய் நிலையே காரணமாகும். தேச விடுதலைக்கான போராட்டங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது.  அதற்காக பலமுறை சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை தனது உறுதிமிக்க செயல்களால் ஒருங்கிணைத்ததற்காக தேசம் இவரை “இந்தியாவின் இரும்பு மனிதர்” எனப்போற்றுகிறது. சூரியனின் நிலையால் முதல் துணை பிரதமராகவும் சனியின் நிலையால் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய சாமான்ய விவசாயிகள் இப்படி ஒரு மனிதர் மீண்டும் பிறந்து தங்கள் வாழ்வை காக்க வரமாட்டார்களா என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் இவருடையது. இவை அனைத்திற்கும் காரணம் இவரது ஜாதகத்தில் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் உச்சமடைந்து கர்ம காரகன் சனியோடு சேர்க்கை பெற்றதே ஆகும். இந்த சேர்க்கைக்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியன் அமைவது “அழியாப்புகழைத்தரும்” அமைப்பாகும். இத்தகைய ஜாதக அமைப்பினர் அவர்களுக்கான காலகட்டத்தில் மட்டுமே அபூர்வமாக பிறவி எடுக்கிறார்கள். அழியாப்புகழை அடைகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.  படேலின் புகழ் என்றும் அழியாதது. கட்டுமானத்திற்கு காரகன் செவ்வாய் உச்சமானதால் குஜராத்தில் அமைந்துள்ள இவரது சிலையே உலகில் இன்று உயரமான சிலையாகும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Friday, 8 February 2019

கர்மா


உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா உண்டு. இதில் அந்த கர்மங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே ஒவ்வொரு மனிதரும் துடிக்கிறோம். அதற்காக ஜோதிடம் போன்ற வழிகளில் முயல்கிறோம்.

கர்மம் என்பது ஒரு ஜாதகர் தனது வாழ்வில் ஈடுபடும் செயல்களைக் குறிக்கும். ஒரு ஜாதகர் தனது வாழ்வில் பலவகை கர்மங்களில் ஈடுபட்டாலும் பிரதானமாக அவரது உணவுக்கான உழைக்கும் 2 மற்றும் 10 ஆமிட தொடர்பையும் ஜீவன காரகன் சனியையும் கொண்டே அது அளவிடப்படுகிறது. இது ஜீவன கர்மா மட்டுமே.

ஒருவர் உணவுக்காக உழைக்கும் தன்மையை 10 ஆமிடம், மகர ராசி, 10 ஆமிடாதிபதி, சனி இவர்களை கொண்டும்,

உழைப்பால் பெரும் பொருளாதாரத்தை 2 ஆமிடம், 2 ஆமிடாதிபதி, ரிஷப ராசி, சுக்கிரனை கொண்டும். 

உழைப்பால் ஈட்டிய தனத்தை எப்படி செலவழிக்கிறார் என்பதை 12 ஆமிடம், 12 ஆமிடாதிபதி,  மீன ராசியையும் குருவைக்கொண்டும் ,

உழைப்பால் பெற்ற தனத்தைக்கொண்டு தன்   மனைவியோடு எப்படி வாழ்வை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார் என்பதை 7 ஆமிடத்தையும், 7 ஆமதிபதியையும், துலாம் ராசியையும் சுக்கிரனைக் கொண்டும்,

உழைப்பில் ஒருவருக்கு உள்ள உறுதி, சாதிக்க வேண்டும் என்ற தீவிரம், மற்றவர்களோடு சேர்ந்து உழைக்கும் தன்மை ஆகியவற்றை லக்னம், லக்னாதிபதி, மேஷம், செவ்வாய் ஆகியவைகளைக் கொண்டும்,

உழைக்கும் இடத்தில் ஏற்படும் நட்பை புதன், ஏழாமிடம், எழாமதிபதி ஆகியோரைக் கொண்டும்,

உழைக்குமிடத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மைகள், வேலையில் இடம் மாறும் சூழல் ஆகியவற்றை சந்திரன், சந்திரனுக்கும் 10 ஆமிடத்திற்கும் உள்ள தொடர்புகளை கொண்டும்,  

தொழிலில் ஜாதகருக்கு உள்ள நிர்வாகத் திறமையை லக்னாதிபதி, லக்னம், சூரியன், சிம்ம ராசியை கொண்டும்,

வேலையில் ஜாதகர் எதிர்கொள்ளும் கடுமைகளை, எதிர்ப்புகளை, தடைகளை 6 ஆமிடம், 6 ஆமதிபதி, செவ்வாய், ராகு-கேதுக்களை கொண்டும்,

உழைப்பில் வேளையில் ஜாதகருக்கு உள்ள திட்டமிடும் தன்மையை புதனை கொண்டும்,

சூழ்நிலைக்கேற்ப விரைந்து முடிவெடுக்கும் தன்மையை சந்திரனை கொண்டும் அளவிட வேண்டும்.

ஜீவன கர்மாவை தவிர்த்து ஒருவரது ஆன்மா தனது பிறப்பின் ரகசியங்களை தேடி மோட்சத்தை நோக்கிய நிலையில் பயணிப்பது மோட்ச கர்மா ஆகும். அதற்கு லக்னம் மோட்ச லக்னங்களில் ஒன்றாகி லக்னமும், ராசியும் குரு, சனி, ராகு-கேதுக்களின்  தொடர்பு பெறுவது சிறப்பு. லக்னாதிபதி, உடல்காரகன் சந்திரன், உயிர் மற்றும் ஆன்ம காரகன் சூரியன் இவர்களோடு இல்லற வாழ்வை கைவிட சுக்கிரனும் அனுமதிக்க வேண்டும். மேலும் ஜாதகத்தில் இதர பாவங்களும் பாவாதிபதிகளும் இதை அனுமதிக்க வேண்டும்.

ஒருவரின் முற்பிறவி கர்மங்களையும் அடுந்த பிறவி கர்மங்களையும் அனுமானிக்க ஜோதிடத்தில் வழிகள் உள்ளது என்றாலும் இங்கு நாம் இப்பிறவியில் ஒரு மனிதன் ஈடுபடும் கர்மங்களை எடுத்துக்கொள்வோம். 
உண்மையில் நமது கர்மங்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன என்றாலும் நமது வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அது தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்கிறது என்பதே உண்மை. கர்மங்களில் காலத்திற்குத்தக்க மாறுபாடுகள் உண்டு. அவற்றை திசா புக்திகளைகொண்டு அறியலாம்.  


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. ஜாதகரின் பெயர் குப்புசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்க்குப் பெயர் பெற்ற பத்தமடையை  சேர்ந்தவர்.

ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் கடக லக்னத்திலுள்ள செவ்வாயுடன் பரிவர்த்தனையில் உள்ளார். பரிவர்தனையான கிரகங்கள் பரிவர்த்தனையான தங்கள் ஆட்சி வீட்டோடு தொடர்புகொண்டு இடம் மாறிச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சனி பார்வையை சந்திரன் பெறும்போது ஜாதகரை தவறு செய்ய வைத்து பிறகு தண்டிக்கும். ஆனால் சந்திரன் சனியோடு இணையும்போது சனியின் பற்றுதலற்ற மனோநிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.  கால புருஷனுக்கு சுகஸ்தானமான 4 ஆமிடத்தில்  சனி சந்திரனோடு மறை பொருளை குறிக்கும் ராகுவும் இணைவது ஜாதகர் பற்றற்ற வாழ்வுக்கு செல்வதை குறிப்பிடுகிறது. சன்யாச யோகங்களில் இது குறிப்பிடப்படுகிறது.

சந்திரன் ராகுவோடு இணையும்போது ஜாதகர் சாதாரண உலகியல் வாழ்வை விட்டு மாற்றி யோசிப்பவர் எனலாம். மேலும் கடகத்தில் சந்திரனோடு சனி, ராகு இணைவு ஜாதகருக்கு வெளிநாட்டுத் தொடர்பை ஜீவன வகையில் ஏற்படுத்தும் எனலாம்.

தன, குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் ஆட்சி சூரியன் சிறப்பாக அமர்ந்திருக்கிறார் என்றாலும் அவர் விரையாதிபதி சேர்க்கை பெற்று நிற்பது வருமான வகையில்  மருத்துவத்தோடு தொடர்பு பெறுவதை குறித்தாலும் குடும்ப வகையில் சிறப்பல்ல. 10 ஆமிடத்தில் பரிவர்த்தனைக்குப் பிறகு வந்து அமரும் செவ்வாயை குரு பார்வை செய்கிறார். இது ஜாதகர் தனது தொழிலிலும் கர்மங்களிலும் அடையும் சிறப்பைக்  குறிப்பிடுவதோடு ஜாதகர் மருத்துவத்தோடு தொடர்பு  கொள்வதை உறுதி செய்கிறது. ஜாதகர் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

லக்னத்தில் ராகு அமைந்து ஜாதகர் மருத்துவரானாலோ அல்லது மறை பொருளைத்தேடும் ஞானி ஆனாலோ போற்றத்தக்க வாழ்வை ஜாதகருக்கு ஏற்படுத்தும்.

ஜாதகர் செவ்வாய் திசையில் தஞ்சையில் மருத்துவம் பயின்றார். வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்திலமைந்த குரு அதற்கு உதவினார் என்றால் அது மிகையல்ல. ஜாதகர் செவ்வாய் திசை சுக்ர புக்தியில் வெளிநாடு (மலேசியா)   சென்றார். சுக்கிரன் சந்திரன் சாரம் பெற்று வெளி நாட்டு வாழ்வைக் குறிக்கும் 12 ஆமிட தொடர்பு பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடக லக்னத்தில் சனி அமர்ந்ததால் ஜாதகர் வெளி நாடு சென்று மருத்துவ சேவை செய்தார். குறிப்பாக சனி குறிப்பிடும் ஏழைகளுக்கு இலவச சேவை செய்து அவர்களால் வெளிநாட்டில் கொண்டாடப்பட்டார்.

லக்னத்தில் சனி, ராகு என்ற இரு கடும் பாவிகளால் ஞான நிலையை நோக்கி ஜாதகர் மனம் சென்றது என்றால் இரண்டாமிடத்தில் விரையாதிபதி புதன் அமர்ந்து குடும்ப வாழ்வை புறந்தள்ள வைத்தது. குடும்ப காரகன் குரு பகையும் கேதிராதிபத்திய தோஷத்திய தோஷமும் பெற்று அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் தனது சுக ஸ்தானத்திற்கு விரையத்தில் நீசமாகி வக்கிரம் பெற்றதும் ஜாதகருக்கு இல்லற வாழ்வு மறுக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. ராகு லக்ன கேந்திரத்தில் தனது நட்சத்திரத்திரமான சுவாதியில் அமைந்த குருவால் சூட்சுமமாக சுபத்துவம் பெற்றுள்ளது மிகச் சிறப்பு. பொதுவாக குரு நான்காமிடத்தில் அமைவதே குடும்ப வாழ்வுக்கு எதிரான அமைப்புதான். 

ராகு 3 மற்றும் 12 ஆமிடாதிபதி புதன் சாரம் பெற்றதால் ராகு திசையின் முதல் 9 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்வை முடிந்த பின் ஜாதகர் இந்தியா திரும்பினார். புதன் சூரியனுடன் சிம்ம ராசியில் இணைந்துள்ளதை கவனிக்க. சிம்ம ராசி உயர்ந்த மலைப்பகுதிகளை குறிப்பிடும். சூரியன் தலைமைப் பண்பை குறிப்பிடும். இந்தியா திரும்பிய ஜாதகரின் மனம் முழுமையான ஆன்மீக வாழ்வை நாடியது. நெடிதுயர்ந்த மலைப்பகுதியான ரிஷிகேசில் கடவுள் தனக்காக வழி காட்ட அனுப்பிய குரு விஸ்வானந்த சரஸ்வதியை ஜாதகர் சந்தித்தார். சில மணி நேரங்களே நீடித்த அந்த சந்திப்பில் குப்புசாமிக்கு போதிக்க அதிகமில்லை என்பதை குரு உணர்ந்தார்.  குருவின் வேண்டுகோளை ஏற்று ஜாதகர் சன்யாச வாழ்வை மேற்கொண்டார். ரிஷிகேசிலேயே தமது ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு ஞான குருவாக இருந்துகொண்டு இவ்வுலகிற்கு வழிகாட்டினார். குருவால் சுபத்துவம் பெற்று மோட்ச லக்னமான கடகத்தில் அமர்ந்த ராகு திசையின் 2 ஆவது பகுதியும் அதனை அடுத்து வந்த குரு திசையும் ஜாதகரை உலகம் கொண்டாடும் உத்தம மகானாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

உலகம் இன்றும் வழிபடும் இந்தியாவின் மிகச்சிறந்த மகான்களில் ஒருவர்  ஜாதகராவார். இன்றைய நிலையில் இந்தியா ஏங்கிக்கொண்டிருப்பது இவரைப்போன்ற உத்தம மகான்களுக்காகத்தான். வாழ்க்கை, ஆன்மீக, இயற்கை நெறிகளை குறித்து ஜாதகர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். இந்துமதத்தின் ஒப்புயர்வற்ற சக்தியாக விளங்கிய ஜாதகர் “தெய்வ நெறிக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இன்றளவும் மிகச்சிறப்பாக இந்து தர்ம நெறிகளை உலகிற்கு அளித்துவருகிறது இவ்வமைப்பு. 

   

சனி திசையி;ல் 14.07.1964ல் “சுவாமி சிவானந்தர்” என்றழைக்கப்பட்ட ரிஷிகேசை சார்ந்த இந்தத் தமிழ்நாட்டு மகான் முக்தியடைந்தார். 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501

Sunday, 8 January 2017

உங்களது வாழ்க்கை எங்கே?

சிலர்  எங்கோ ஓரிடத்தில் பிறந்து எங்கோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர். வேறு சிலர் உலகம் சுற்றினாலும் சொந்த ஊரே சொர்க்கம் என சொந்த ஊரிலேயே தமது வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர்.

ஜாதகத்தில் இரண்டாம் பாவம் கெட்டுவிட்டால் அந்த ஜாதகர் சொந்த ஊரில் இருந்தால் வாழ்க்கை மிக கடினமானதாக இருக்கும். அத்தகையவர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியூர் சென்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பல வேதனைகளை தவிர்க்கலாம்.

மறைந்த முதலமைச்சர் செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் ஜாதகம் கொண்டு இதை ஆராய்வோம்.(ஜெயலலிதா பற்றிய எனது முந்தைய பதிவை தவறவிட்டவர்கள் இங்கே சென்று காண்க.)


ஜாதகத்தில் இரண்டாம் பாவம் அஷ்டமாதிபதியான சனியால் கெட்டுவிட்டது. இரண்டாம் அதிபதி சந்திரன் மூன்றாமிடத்தில் ஆறாமதிபதி செவ்வாயுடன் இணைந்ததால் கெட்டுவிட்டது.

இதன் பாதிப்புகள் என்ன?

ஜாதகியின் சொந்த மற்றும் வளர்ந்த ஊரைவிட்டு வெளியேறி தமிழ்நாடு வந்த பிறகே வாழ்க்கை அவரை வசீகரித்து என்பது அணைவரும் அறிந்ததே.

      28.12.1932

வளைகுடா நாடுகளுக்கெல்லாம் சென்று தனது வாழ்க்கையை தேடினார் திருபாய் அம்பானி. பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துவிட்டாலும் ஆட்சியில் அமைந்து குரு பார்வை பெற்றுவிட்ட இரண்டாம் அதிபதி சனி. இறுதியில் அவருக்கான வாழ்க்கையை அவரது மண்ணிலேயே அமைத்துத் தந்தது. 

  22.12.1887 

இரண்டாம் பாவம் பாவிகளால் கெட்டுவிட்டாலும் இரண்டாம் பாவத்தையும் தன் வீட்டில் லக்ன கேந்திரத்தில் அமைந்த இரண்டாம் பாவாதிபதி சந்திரனையும் குரு பார்க்கிறார். ஆறாம் பாவம் சுபக்கிரகங்களால் சூழப்பட்டு அதன் அதிபதி செவ்வாய் இரண்டாம் பாவாதிபதியான வளர்பிறை சந்திரனை பார்ப்பது சிறப்பான குரு – மங்கள யோகமாகும். ஜாதகர் தனது மண்ணிற்கு வெளிநாட்டினர் அளித்த நோபல் பரிசால் புகழ் சேர்த்த கணித மேதை ராமானுஜம் அவர்கள். சிறிய வயதில் மறைந்துவிட்டாலும் தான் பிறந்த மண்ணிற்கு அழியாத புகழை அளித்துவிட்டு சென்ற உலகின் மிகச்சிறந்த கணித மேதைகளுள் ஒருவர்.

  11.12.1931
எட்டில் மறைந்துவிட்ட இரண்டாம் அதிபதி. ஜாதகர் இந்தியாவில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாது அமெரிக்காவிலும் ஜப்பானிலும் புகழ்பெற்ற சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஞானி ஓஷோ என அழைக்கப்பட்ட ரஜ்னீஷ்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501

Sunday, 28 February 2016

மணமுறிவுற்ற வாழ்க்கைத்துணை யாருக்கு வாய்க்கும்?

தற்கால திருமண சூழ்நிலைகள் கடினமாகி வரும் நிலையில் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. ஜோதிடர்களிடம் சென்று சரியான வரனை தேர்ந்தெடுத்துவிட்டோம் என யாரும் கூறிக்கொள்ள இயலாது. காரணம் இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தவன் இறைவன். அந்த விதியை ஜோதிடர்களால் மாற்றிவிட இயலாது. வாய்ப்புகளில் சிறப்பானதை ஜோதிடர்களால்  தேர்ந்தெடுத்துத்தர மட்டுமே இயலும். அவ்வளவே.

இன்று நாம் மணமுறிவுற்றவர்களை திருமணம் செய்துகொள்ளும் ஜாதக அமைப்பை பற்றி விவாதிப்போம். தங்களுடைய ஜாதகப்படி அமையக்கூடிய துணைவரின் அம்சங்களை தெரிந்துகொள்வது பொருத்தம் காண வசதியாக இருக்கும். திருமணத்தில் ஏற்படும் தாமதத்தையும் இதனால் தவிர்க்கலாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

கீழுள்ளது ஜாதகத்தை ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.




ஜனனம் 09.09.1985 – 2.21 AM – கரூர்

இவர் மணம் புரிந்தது திருமணம் முறிவுற்ற ஒரு பெண்ணை.

லக்னாதிபதி சூரியன் நீசமாகிகிவிட்டார். லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகரின் ஒட்டுமொத்த குணாதிசயங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பண்பு வகிப்பவர்  ஆவார். லக்னாதிபதி நீசமானால் ஜாதகருக்கு அடிப்படையில் வலுவான தெளிவான சிந்தனைபோக்கு போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படும். குடும்ப காரகன் குரு நீசமானதால் குடும்பம் நீச வகையில் அல்லது கலங்கமுற்ற வகையில் அமையவேண்டும். ஒரு கிரகத்தின் செயல்பாட்டை அதன் வீட்டில் இருக்கும் கிரகம் பாதிக்கும். இவ்விதிப்படி சனியின் செயல்பாட்டை சனியின் வீட்டில் நீச நிலையில் அமைந்த குரு பாதிக்கிறது. இதனால் சனியும் நீச தோஷத்திற்கு உள்ளாகிறார். எனவே சனி எழாமதி எனும் வகையில் மனைவியின் அம்சம் நீசம் அல்லது கலங்கமுற்றவர் என்பதை அனுமானிக்கலாம்.

குருவால் இப்படி தோஷசப்பட்ட சனி லக்னத்தை பார்ப்பது ஜாதகரில் மேற்சொன்ன குணாதிசயத்தை உறுதிசெய்கிறது. மேலும் சுக ஸ்தானத்திலும் (விருச்சிகம்)  பாக்ய ஸ்தானத்திலும் (மேஷம்) பாவிகள் அமைந்து அதன் அதிபதி செவ்வாய் விரயாதிபதி சந்திரனுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமைந்தது ஜாதகருக்கு குடும்ப விஷயத்தில் குறைகள் உண்டு என்பதை உணர்த்துகிறது. ஜாதகர் எளிய குடும்பத்தை சார்ந்தவர் என்பதும் பொருளாதார சிரமங்களின் அடிப்படையில் மணமுறிவுற்ற வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் புரிந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குருவும் சனியும் ஜாதகரின் பொருளாதார சூழலை குறிப்பிடுகின்றனர். 

ஜாதகருக்கு 09.06.2014 அன்று திருமணம் நடந்தது.


ராகு திசையில் குடும்ப பாவாதிபதி புதனின் புக்தியில் திருமணம். திருமண நாளின் கிரக நிலைகள் கீழே.



ஜாதகரின் கன்னி ராசிக்கு இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமான துலாத்தில் வக்கிர சனி. உச்சமாகி வக்கிரமான கிரகம் நீச பலனை தரவேண்டும் எனும் விதிப்படி  நீச வகையில் களங்கமான மனைவியை ஜாதகருக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது தெளிவாக தெரிகிறது. ராகு இரண்டாமிடத்தில் நின்றது குடும்பத்திற்கு வரும் மனைவியின் அம்சத்தை அதாவது களங்கம் என்ற தனது காரக வகையில் உணர்த்துகிறது. ராசி அதிபதி புதன் தனது ஆட்சி வீட்டில் வக்கிரமானதால் விவாகரத்தான மனைவியை அடையும் மனநிலையை ராசி அதிபதி மற்றும் புத்திகாரகன் என்ற வகையில் ஜாதகருக்கு ஏற்படுத்தி உள்ளார். புதன் குடும்ப காரகன் குருவுடன் இணைத்து திருமண காலத்தில் நின்றது குறிப்பாக மேற்குறிப்பிட்ட வகையில் குடும்பம் அமையும் என்பதை உணர்த்துகிறது.

அடுத்து கீழே காணப்படும் ஜாதகமும் விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்த ஒரு ஆணின் ஜாதகம்தான்.


ஜனனம் 02.06.1977

விருச்சிக ராசி & லக்னத்தில் அமைந்த நீச கிரகம் சந்திரன் களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்தையும் குடும்ப காரகன் குருவையும் பார்வை செய்கிறது. நீசன் சந்திரனின் வீட்டில் அமைந்த சுக ஸ்தானாதிபதி சனி ஜாதகர் சுகப்படும் விதம் நீசம் எனும் வகையில் களங்கமுற்ற பெண்ணிடம்தான் என்பதை தெரிவிக்கிறது. தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்த ராகு ஜாதகரின் படுக்கைக்கு வரும் துணைவரின் அம்சம் தனது காரக அடிப்படையில் களங்கமடைந்தவர் என்பதை தெரிவிக்கிறது. குடும்ப காரகன் குருவை நீச கிரகம் சந்திரன் பார்ப்பதால் குடும்பம் கலங்கமுற்றவகையில் அமையும் என்பதை  தெளிவாக குறிப்பிடுகிறது.

மூன்றாவது ஜாதகம் கீழே.


31.08.1968 - மைசூர் 

கடக லக்னாதிபதி சந்திரன் நீசம். லக்னாதிபதி மனோகாரகன் சந்திரன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. லக்னத்தில் 5 ஆமதிபதியும் ஒரு மனிதனின் மன   ஓட்டங்களை குறிக்கும் ஐந்தாமதிபதியான நீச கிரகம் செவ்வாய் அமைந்துள்ளது போன்றவை ஜாதகரின் எண்ணங்களில் குறை அல்லது கலங்கமடைந்தவரை வாழ்க்கைத்துணைவராக  ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையை ஜாதகருக்கு தந்துள்ளது. மேலும் மனைவியை குறிக்கும் ஏழாமதிபதி சனியும் நீசமாகி வக்கிரமடைந்து நீசன் செவ்வாயின் வீட்டில் அமைந்துள்ளது ஜாதகரின் வாழ்க்கை துணை மணமுறிவுற்றவர் அல்லது கலங்கமடைந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.

செவ்வாயும் சனியும் நீச நிலையில் பரிவர்த்தனை பெற்றதால் இங்கு ஓரளவு ஜாதகருக்கு பலனையும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சமடைந்து வக்கிரமடையும் கிரகம் எப்படி நீச பலனை கொடுக்குமோ அப்படி அதேபோல் நீசமடைந்து வக்கிரமடையும் கிரகமும் உச்சத்திற்கு ஈடான நல்ல பலனையும் கொடுக்கும். இந்த ஜாதகம் இந்த விதிக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதன்படி சனி நீசமடைந்து வக்ரமானதால் சனியின் காரகம் அடிப்படையில் ஜீவனம் வலுவடைந்தது. செவ்வாயின் வீட்டில் உள்ள சனி வலுவடைந்ததால் பரிவர்தனையடைந்த செவ்வாயும் வலுவடைந்தது. சந்திரனும் சனியும் வர்கோத்தமம் பெற்றதாலும் வலுவடைந்துள்ளன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 

செவ்வாய் வேகம், கோபம், அவரசம் போன்றவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சந்திரன் விரைவுத்தன்மைக்கு உரிய கிரகமாகும். இவற்றின் அடிப்படையில் ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பரிமளித்தவர்.

நீங்கள் நினைப்பது சரிதான். ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் திரு.ஜவகல் ஸ்ரீநாத் ஆவார். இவர் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது திருமணமாகி மணமுறிவுற்றவரை விரும்பி மணம் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகரின் குடும்ப ஸ்தானமும் குடும்ப காரகன் குருவும் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டதாலும் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரனும் களத்திர ஸ்தானாதிபதி சனியும் லக்னாதிபதி சந்திரன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் நீச நிலை பெற்றதாலும் ஜாதகர் விரும்பி அமைத்துக்கொண்ட அந்த முதல் திருமணம் நிலைக்கவில்லை. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாதகர் இரண்டாவதாக மறுமணம் செய்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

மீண்டுமொரு பதிவில் ஆராய்வோம்,


வாழ்த்துக்களுடன்

அன்பன்,

பழனியப்பன்.