Friday 30 July 2021

இரவுப்பறவைகள்!

 


அபூர்வமாக சில நாட்கள் இரவு நேரங்களில் வெளி இடங்களில் அலைய வேண்டியிருக்கும். இரவுப்பணி முடிந்து வெளியே வரும் தொழிலாளர்கள், புகைவண்டி நிலையத்திலிருந்து திரும்பும் பயணிகள், காய்கறி, பால், நாளிதழ்கள் போன்றவற்றை சுமந்துகொண்டு பல்வேறு காரணங்களுக்காக விரையும் வாகனங்கள், சுற்றுலா பயண இடைவெளியில் தேநீர் பருகும்  அறிமுகமற்ற நபர்கள், மருத்துவமனையருகே கவலையுடன் நின்றிருக்கும் மனிதர்கள், அபூர்வமாக தென்பட்டு நம்மை பயமுறுத்தும் குடுகுடுப்பைக்காரர்கள், நமது தூக்கத்தை கெடுக்க விசில் ஊதும் நமர் இவர்தானா என பார்க்க வைக்கும் நேபாள கூர்க்காக்கள். எத்தனை எத்தனை முகங்கள். பகலில் செயல்படுவோர் அலுவலகத்தில் படும் பாடு ஒரு வகை.  இரவில் செயல்படுபவர்களுக்கு அந்த வகை சிரமங்கள் குறைவு எனலாம். ஆனால் இரவில் செயல்படுவோருக்கு வேறு வகை பாதிப்புகள் உண்டு. இப்படி இரவில் செயல்படுவோருக்கான ஜாதக அமைப்பு என்ன என ஆராய எண்ணியதன் விளைவே இன்றைய பதிவு.

கீழே 1963 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம்.

 
மகர லக்னம். லக்னத்திலேயே லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பது ஒரு சிறப்பு எனலாம். இதனால் சனிக்குரிய நிதானம், நேர்மை, ஆகியவற்றோடு கடும் உழைப்பு ஆகியவையும் உண்டு. சூரியன் பகலை ஆளும் கிரகமென்றால் சனியை இரவை ஆளும் கிரகம் எனலாம். அதனால்தான் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனை தந்தைக்கு உரிய கிரகமாக குறிப்பிடுவது போல் இரவில் பிறந்தவர்களுக்கு சனியை தந்தைக்கு உரிய கிரகமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறோம். நாம் பொதுவாக இரவில்தான் உறங்குகிறோம். உறக்கத்தை குறிப்[பிடும் பாவம் படுக்கை பாவம் என்று அழைக்கப்படும் 12 ஆம் பாவமாகும். 12 ஆம் பாவமும் 12 ஆம் அதிபதியும் பாதிக்கப்பட்டால் ஒருவருக்கு தூக்கம் பாதிக்கப்படும். சந்திரன் தூக்கத்தின் காரக கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு தூக்கமின்மை ஏற்படும். தொடர்புடைய திசா-புக்திகளில் அதன் தாக்கம் அதிகம் வெளிப்படும். தூக்கம் கெட்டால் மனநிலை, கிரகிப்புத்திறன், நினைவாற்றல், செரிமானம் போன்ற  சந்திரனின் காரக  வகைகளில் பாதிப்பு ஏற்படும். ஏனெனில் சந்திரன் இரவின் ராணி ஆகும். இது மட்டுமின்றி தூக்கத்தை குறிக்கும் 12 ஆம் பாவம் அதீத வலுப்பெற்றால் அத்தகைய ஜாதகர் பகலைவிட இரவில் அதிக செயல் திறன் மிக்கவராக இருப்பார். மேலும் ராகு, சனி ஆகிய இருள் கிரகங்களோடு 12 ஆமதிபதி வலுபெற்ற ஜாதகர்களுக்கும் பகலை விட இரவில் செயல்திறன் அதிகமிருக்கும். அத்தகையோர் இரவு நேர வாழ்க்கையை அதிகம் விரும்புவர். உதாரணமாக சில திரை இசையமைப்பாளர்கள் திரைப்படத்திற்கு இரவில் பின்னணி இசையமைப்பதை சொல்லலாம்.

மேற்கண்ட ஜாதகத்தில் தூக்கத்தின் காரக கிரகமான சந்திரன் தனது ஆட்சி வீடு கடகத்திற்கு 6 ல், தனது மூலத்திரிகோண வீடான ரிஷபத்திற்கு 8 ல் தனுசுவில் மறைகிறார். இதனால் ஜாதகருக்கு தூக்கம் பாதிக்கும். ஆனால் அப்படி பாதிக்கப்படும் இரவின் ராணியான சந்திரன் இரவைக் குறிக்கும் 12 ஆம் பாவத்திலேயே சென்று அமர்கிறார். மேலும் லக்னத்தில் அமைந்த சனியின் பாகையிலே 12 ஆம் பாவத்தில் அமர்கிறார். இதனால் பாகை ரீதியாக சந்திரனுக்கும் சனிக்கும் ஒரு தொடர்பு ஏற்படும். இப்படி இரவை ஆளும் இரு கிரகங்களும், 12 ஆம் பாவமும் வலுவடைவதால் ஜாதகரது ஜீவனம் இரவுப்பொழுதை சார்ந்து அமையும் என தெரிகிறது. பகல் பொழுதை ஆளும் ராஜா சூரியனும், பகலின் ராணியான 1௦ ஆமதிபதி சுக்கிரனும் 12 ல் சென்று மறைவதாலும் ஜாதகரின் ஜீவனம் பகலில் இல்லை என்பது புலனாகிறது.


தசாம்சத்தில் புதன் தசாம்ச லக்னத்திற்கு 7 ல் நிற்பது ஜாதகரது ஜீவனத்துறை புதன் சார்ந்த பத்திரிக்கை துறை என்பதை உறுதி செய்கிறது. 1௦ ன் பாவத்பாவமான 7 ஆமதிபதி சூரியன் ராகுவோடு இணைந்து 12 ல் மறைவதும் லக்னாதிபதி சனியும் 1௦ ஆமதிபதி செவ்வாயும் புதன் வீட்டில் மிதுனத்தில் இணைவது ஜாதகர் ஈடுபடும் துறையையும் அதில் அவரது உழைப்பின் கடினத்தன்மையையும் குறிப்பிடுகிறது. 

12 ஆம் பாவம் மோட்ச பாவமாகும். ஒரு இடத்தில் அடைபட்டு இருப்பதை குறிக்கும் பாவம் 12 ஆம் பாவமாகும். செவ்வாய் கால புருஷனின் மோட்ச பாவம் மீனத்தில் நிற்கும் குரு பாகை 16.28 மற்றும் ஞான&மோட்ச கார கிரகங்கள் ராகு-கேதுக்களின் பாகை 18.44 க்கு நெருக்கமாக 16.24 பாகையில் நிற்பதால் செவ்வாய் திசையில் தனது 25, 26 வயதுகளில் ஆன்மீக நாட்டம்கொண்டு ஒரு தத்துவ ஞானியின் தொடர்பில் அவரது புத்தகங்களை கையாளும் பணிபுரிந்தார். பிறகு  புதனின் வீட்டில் 6 ஆமிடத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு திசை ஜாதகருக்கு துவங்கியது. தனித்த ராகு, தான் நிற்கும் வீட்டதிபதியின் குணத்தையே வெளிப்படுத்துவார் என்பதற்கேற்ப ராகு திசையில் ஜீவன காரகன் சனியின் உத்திரட்டாதி சாரம் பெற்ற குரு புக்தியில் ஜாதகருக்கு வேலை கிடைத்தது. 3 ஆமிட குரு கைகளால் செய்யும் வேலையை குறிக்கும். அங்கு குரு ஆட்சி பெற்று சனி சாரம் பெற்றதால் எழுத்துத்துறையில் தமிழ்நாட்டின் பிரபல நாளிதழ் ஒன்றில் வேலை கிடைத்தது. திசா நாதன் ராகு, புதன் வீட்டில் நிற்பதால் புதனின் காரகமான பத்திரிகைத்துறை வேலையை கொடுக்க முக்கிய காரணமானார். திசாநாதன் தயவின்றி புக்திநாதன் செயல்பட முடியாது. குறிப்பாக ஜாதகர் யாருடைய தயவும் இன்றி தனது தனித்திறமையால் பணியில் சேரும்போதே ஒரு மதிப்பான பதவியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

லக்னத்தில் அமைந்த சனி, ஜாதகரின் வேலையில் நுட்பத்தையும், பொறுமையையும், நேர்த்தியையும், விடா முயற்சியையும் கொடுத்தார். அதன் மூலம் ஜாதகர் தான் சார்ந்த நாளிதழ் நிறுவனத்தில் நற்பெயர் பெற்றார். முக்கியமாக நாளிதழ்களை இரவில் அச்சடிக்கும்போது ஜாதகரது மேற்பார்வையில் அச்சடிக்கப்பட்டால்தான் பிழையின்றி வெளிவரும் என்ற நிலை உருவானது. பாகை அடிப்படையில் இணைந்த சனி சந்திரன் புனர்பூ  தோஷத்தை தரும். இது குற்றம் கண்டுபிடிப்பதற்கு சிறப்பான அமைப்பாகும்.  இதன் காரணமாக இரவில் ஜாதகர் பணிபுரிவது தவிர்க்க முடியாத அம்சமானது. கிட்டத்தக்க 25 ஆண்டுகள் ஜாதகர் இப்படி பெரும்பாலும் இரவுகளில் பணிபுரிந்தார். ஜாதகருக்கு ராகு திசையில் 7 ஆம் பாவத்தை பார்க்கும் சனியில் புக்தியில், 7 ஆமிடத்தை பார்க்கும் குடும்ப காரகன் குருவின் அந்தரத்தில் திருமணம் நடந்தது. சனி புக்தியை அடுத்து 5 ஆமதிபதி சுக்கிரனின் பூராடம்-3 நிற்கும் புதனின் புக்தியில் சூரியனின் சாரம் உத்திராடம்-1 ல் நிற்கும் 5 ஆமதிபதி சுக்கிரன் அந்தரத்தில் ஒரு மகன் பிறந்தார். குரு திசையில் வீடு காரகன் செவ்வாயின் பாகைக்கு நெருங்கிய பாகையில் நிற்கும் கேது புக்தியில் ஜாதகர் நிலம் வாங்கி வீடு கட்டினார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன், குரு திசையில் வேலை பாவமான 6 க்கு விரயாதிபதி சுக்கிரன் சாரம் பூராடம்-4 ல் நிற்கும் சந்திர புக்தியில் தனது  55 ஆவது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.

உண்மையில் ஜாதகர் தனது வாழ்வில் பெரும்பகுதியை வேலைக்காக இரவில் கழித்திருந்தாலும் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் நிறைவாகவே வாழ்ந்துள்ளார். ஒரு மனிதனாக கிடைக்க வேண்டிய நல்ல குடும்ப வாழ்க்கையும், குழந்தை பாக்கியமும் இல்லமும் கிடைத்துள்ளன. ஜாதகர் லக்னாதிபதியும் இசை பாவமான 3 ஆமிடாதிபதியும் கொண்ட தொடர்பால் சுய கற்றலில் சிறந்த ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசைக்கலைஞராக மிளிர்கிறார். 25 வருடங்களுக்கு மேலாக இரவில் விழித்திருந்து பணி புரிந்ததால் ஓய்வுக் காலத்திலும் பகல் பொழுதோடு அதிகம் ஒன்ற முடியாமல் தனது வேலைகளை இரவில் செய்யவே விரும்புகிறார்.

இந்த ஜாதகத்தை மேலோட்டமாக பார்க்கையில் 12 ஆமிட தோஷம் அதிகம் என்று தெரிந்தாலும், ஜாதகரின் வாழ்வில் வந்த நல்ல திசைகள் ஜாதகரை தாங்கிப்பிடிக்கின்றன. லக்னத்தில் சிறப்பாக ஆட்சி பெற்று அமைந்த லக்னாதிபதி சனி, ராசியாதிபதி குருவோடு நட்சத்திர அடிப்படையில் ஏற்படும் தொடர்பால் நல்ல வேலையும் குடும்ப வாழ்வும் ஜாதகருக்கு அமைத்துள்ளது. அடுத்து வரும் சனி திசையும் லக்னாதிபதி திசைதான் என்பதால் அது ஜாதகரை மேலும் நேர்த்தியாக வழிநடத்தும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501  

Saturday 24 July 2021

மகனின் திருமணம்…

 ஜாமக்கோள் ஜாலங்கள் – 11


பிரசன்னங்களில் பல வகைகள் உண்டென்றாலும் ஜாமக்கோள் பிரசன்னம் ஒரு தனிச்சிறப்பு மிக்கது. பல்வேறு வகை பிரசன்னங்களில் (36 வகை பிரசன்ன முறைகள் உள்ளதாக கூறப்படுகிறது) தமிழ் நாட்டில் தோன்றிய ஒரே பிரசன்ன முறை ஜாமக்கோள் பிரசன்னமாகும். இதர வகைகள் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தோன்றியவை. இதர பிரசன்ன முறைகளில் இருந்து கணித முறைகளிலும் பலன் எடுக்கும் முறையிலும் முற்றிலும் மாறுபட்டது ஜாமக்கோள் பிரசன்னமாகும். இந்த ஜாமக்கோள் பிரசன்னத்தில் சொல்லமுடியாத விஷயங்களே இல்லை எனலாம். இதர பிரசன்ன வகைகளை விட துல்லியமான பலன்களை தனக்குள் பொதித்து வைத்திருக்கும் புதையல் இது. அவற்றைக் கண்டுபிடித்து அள்ளிக்கொள்வதே நமது வேலை. ஜோதிடம் ஒரு சாகரம் என்றால் இந்த ஜாமக்கோள் பிரசன்னக் கடலில் எவ்வளவு ஆழம் மூழ்கிறோமோ அந்த அளவு முத்தெடுக்கலாம். நான் பார்த்து பிரம்மிக்கும் ஜாமக்கோள் பிரசன்னத்தின் அதிசயங்களை தொடர்ந்து எழுதும்படி எனது மாணவர்களும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது  ஜாமக்கோள் பதிவு வரிசையில் 11 ஆவது பதிவாக இந்தப் பதிவு அமைகிறது.  

எனது மகனுக்கு 32 வயதாகிறது. எப்போது திருமணம் என்று கவலையுடன் ஒரு தாய் என்னை அணுகினார். அதன் விளைவே இப்பதிவு. இப்பதிவில் பாவாதிபதிகள் என அழைக்கப்பெறும் கிரகங்கள் அனைத்தும் உதயம் முதலாவதாகக்கொண்டு அழைக்கப்படுபவை என்பதை வாசகர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.


உதயம் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்து ஆரூடம் 2.18 பாகையில் உத்திராடம்-2 ஆம் பாதத்தில் விழுந்துள்ளது. தாய் மகனுக்காக கேட்ட பிரசன்னம் இது என்பதை பிரசன்னம் உணர்த்துகிறது. கேள்வி கேட்ட தாயின் பெயர் ஜோதி ஆகும். உத்திராட நட்சத்திற்குரிய நாம எழுத்தான ‘ஜ’ வில் கேள்வி கேட்டவர் பெயர் அமைந்துள்ளது. சூரியனின் நட்சத்திரத்தில் ஆரூடம் அமைந்ததால் சூரியனின் பெயரான ஜோதி என்பது கேள்வியாளரின் பெயர் என்பதை பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. கேள்வியாளர் ஒரு சுப விஷயமாக கேட்டுள்ளதை உதயத்தை குரு பார்ப்பதிலிருந்து உணரலாம். ஆரூடம் 5 ல் அமைந்து குரு உதயத்திற்கு 7ல் இருந்து பார்ப்பதால் மகனின் திருமண விஷயம் என்பதை பிரசன்னம் தெளிவாக கூறுகிறது. இனி மகனுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம் வாருங்கள்.  

தந்தையை குறிக்கும் உதயத்திற்கு 9 ஆமதிபதி சுக்கிரன் உதயத்திற்கு 4 ல் தனுசுவில் கவிப்போடு சேர்ந்துள்ளது. தந்தையின் காரக கிரகம் சூரியன் உதயத்திற்கு விரையாதிபதியாகிறார். இதனால் மகனின் திருமணம் நடக்க தந்தையின் முயற்சியைவிட தாயின் முயற்சியே பலனளிக்கும் என்பது தெரிகிறது. கவிப்பு திருமணத்தை நடத்தி வைக்கும் அல்லது தடை ஏற்படுத்தும் நபரை குறிப்பிடும். உதயத்திற்கு 4 ல் கவிப்பு தாயாரின் முயற்சியாலேயே திருமணம் நடக்க இயலும் என்பதை காட்டுகிறது. உதயதிற்கு 2 ல் உதயத்தின் 5, 6 ஆமதிபதி சனி உச்சமாகி உதயத்தை நோக்கி வருகிறது. மேலும் மேஷத்தில் செவ்வாய் அமைந்து துலாத்தில் சனி உச்சம் பெறுவது மரண ஜாமம் என்று அழைக்கப்பெறும். இதனால் குடும்ப பாவம் பாதிப்பை அடையும். 2 ஆமதிபதி கவிப்பில் அமைந்துள்ளது இதை உறுதி செய்கிறது. உள்வட்ட சனியும் உள்வட்ட குருவும் வக்கிர கதியில் இருப்பதால் மகன் திருமணதிற்கு இன்னும் சாதகமான காலம் வரவில்லை என்பதை இது காட்டுகிறது. 5 ல் நிற்கும் வக்கிர சனி 2 ல் அமைந்த உச்ச ஜாம சனியை 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதாலும் உதயம் அடுத்து 2 ஆமிட ஜாம சனியை கடந்து கேதுவை தொடுவதும் மகனுக்கு இன்னும் திருமணதிற்கு கடும் தடைகள் ஏற்படும் என்பதையே புலப்படுத்துகிறது.

1௦ ல் திக்பலத்தில் அமைந்த ஜாம சூரியன் புத ஆதித்ய யோகம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். இது சிறந்த அமைப்பே.  உள்வட்ட சூரியன் சந்திரனின் வீட்டில் அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் அலைந்து திரிந்து வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும். சந்திரனின் காரக தொழிலில் புதனின் தன்மையும் கலந்திருக்கும். மகன் அலைந்து திரிந்து (12 ஆமதிபதி சூரியன் சந்திரன் தொடர்பு) வேலை செய்பவர் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. மகன் சந்திரனின் காரகமான உர விற்பனை  பிரதிநிதியாக வேலை பார்க்கிறார் என தாய் கூறினார்.  ஆனால் வேலையே மகனின் திருமணத்திற்கும் தடைபோடும் அமைப்பு என்பதை 2 ல் அமைந்த உச்ச சனி காட்டுகிறது. உதயம் முதலில் தொடுவது உச்ச சனியைத்தான். உச்ச சனியின் தடை, தாமதங்களை கடந்து அதற்கு அடுத்து கேதுவைத்தான் தொடவுள்ளது. அதுவும் தடையைத்தான் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் மகனின் திருமணம் நடக்க சாதகமான சூழல் தற்போது இல்லை என்பதையே காட்டுகிறது.

கேள்வியாளர் கேட்டது மகனின் திருமணத்தைப்பற்றி. பிற்பாடு மகனின் ஜாதகத்தை தேடி எடுத்து அனுப்பினார் இந்தப்பெண்மணி. மகன் மகர லக்னம், கன்னி ராசி. இதை ஜாமக்கோள் பிரசன்னத்தில்  உதய, ஆரூடம் சுட்டிக் காட்டிவிட்டது. இதுதான் ஜாமக்கோள் பிரசன்னத்தின் மகிமை. இக்கலையை எனக்கு புகட்டுவித்த எனது குருமார்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Monday 19 July 2021

நுண்ணுயிரியல் கல்வி

 


நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி வாய்ப்புகளும் அதற்கேற்ப பெருகிவிட்டன என்றுதான் கூற வேண்டும். வருடா வருடம் புதிய பிரிவுகள் கல்வித்துறையில் அறிமுகமாகின்றன. பழைய காலத்திற்கு ஒவ்வாத துறைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய  காலத்திற்கேற்ப நல்ல பொருளாதார முன்னேற்றத்தை தரக்கூடிய பிரிவுகளை பலர் அறிந்திருந்தாலும் அதன் எதிர்கால நிலையையும் கணிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் தங்கள் மன ஆர்வத்தை பூர்த்தி செய்யக்கூடிய கல்வியாக தாங்கள் தேர்ந்தேடுக்கும் கல்வி அமைய வேண்டும் என்று எண்ணுவது இயற்கையே. அப்படி தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி தனது திறமைக்கு உட்பட்டதாகவும், பொருளாதார சூழலுக்கு உட்பட்டதாகவும் அமைய வேண்டியதும் அவசியமாகிறது. இவை அனைத்தும் ஒருங்கே தரும் கல்விப்பிரிவை ஒரு மாணவன் இனங்கண்டு கொண்டால் மட்டும் போதாது, அதில் சேர வைக்கப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அதில் சேர முடியும் என்ற நிலை இன்று ஏறக்குறைய அனைத்து கல்விப்பிரிவிலும் உள்ளது. இந்நிலையில் உயர் கல்வி வாய்ப்பில் ஒரு பிரிவான நுண்ணுயிரியல் (Micro Biology) பிரிவில் தனது மகளுக்கு வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் என்னை ஒரு தாய் அணுகியதன் விளைவே இன்றைய பதிவு.

ஜோதிடத்தில் உயர்கல்வி வாய்ப்புகள் சிறப்பாக அமைய வேண்டுமெனில் கிரகிப்புத் திறனுக்கும் நினைவுத் திறனுக்கும் உரிய சந்திரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்களின் தொடர்பு எந்த கிரகங்களுக்கும் நல்லதல்ல என்றாலும் தீவிரமான நுட்பத்திறனை வழங்குவது ராகு-கேதுக்கள்தான். குறிப்பிட்ட வகை கல்வியில் நவீனத்துவத்தை (advanced level) குறிக்கும் ராகு-கேதுக்களின் தொடர்பு விரும்பத்தக்கது. கல்வியின் காரக கிரகம் புதனும், பாக்ய, லாப ஸ்தானங்களும் அவற்றின் அதிபதிகள் நிலையும் சிறப்புற அமைய வேண்டியது அவசியம். குறிப்பாக உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவம் ஆகியவை சிறப்பாக அமைவது நன்று. ஒருவர் தனக்கான உயர் கல்வியில் சிறப்புற பயின்று தேர்ச்சி பெறுவாரா அல்லது பாதிப்படைவாரா என்பதை கோட்சாரமும் திசா-புக்திகளும் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டும்.   

பொதுவாக அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக சுக்கிரன் அமைகிறார் எனினும் Biology எனும் உயிரியலுக்கு காரக கிரகங்களாக ஜீவ கிரகங்கள் புதனும் குருவும் அமைகின்றன. அடிப்படை உயிரியல் கல்வியை புதனும் மேம்பட்ட உயிரியல் கல்வியை குருவும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உயிரியல் பிரிவின் மேம்பட்ட Micro Biology எனும் நுண்ணியிரியலிலுக்கு காரக கிரகம் குருவாகும். குருவோடு சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்கள் தொடர்பு கொள்ளும் போது அது இயந்திரங்களைக் கொண்டு கையாளும் technology எனும் நுட்பவியலாகிறது. குருவோடு ராகு-கேதுக்கள் தொடர்பாகும்போது அது நவீன தொழில்நுட்பமாக (Advanced Technology) மாற்றமடைகிறது.  

கீழே ஒரு 1999 ல் பிறந்த ஒரு மாணவியின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவம் விருச்சிகம்  மற்றும் 9 ன் பாவத் பாவமான 5 ஆம் பாவமான கடகத்தையும் குரு பார்க்கவில்லை. ஆனால் அதன் அதிபதிகளான செவ்வாயையும் சந்திரனையும் பார்க்கிறார். இந்த ஜாதகி முதுகலை உயிரி தொழில் நுட்பவியல் (Msc-Bio Technology) பட்டம் பெற்றவர். ஜாதகிக்கு  இக்குறிப்பிட்ட கல்வியை படிக்கும் காலத்தில் நடப்பில் இருந்தது 5 ஆம் பாவத்தில் இருந்த சுக்கிர திசையாகும். சுக்கிரனும் ராகுவும் வித்யா ஸ்தானமான 4 ல் ஆட்சி பெற்று சூரியனோடு சேர்க்கை பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்துள்ள புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. இவர்கள் இருவருக்கும் நட்சத்திர சாரம் கொடுத்த புதன் குரு சாரம் (புனர்பூசம்) பெற்றதே இந்த ஜாதகி உயிரி தொழில்நுட்பம் படிக்க காரணமாக அமைந்துள்ளது. இவரது கல்வியில் technology என்ற பெயர் அமையக் காரணம் ராகுவே ஆவார். திசா நாதன் சுக்கிரனுக்கு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு கல்வி போன்ற உயிரற்ற காரணிகளை தடுக்க மாட்டார். எனவே ஜாதகியின் கல்விக்கு அவர் உதவினார் என்றே சொல்ல வேண்டும். சுரப்பி காரகன் சுக்கிரனோடு நெருங்கிய பாகையில் அமைந்த ராகு ஜாதகிக்கு உடல் ரீதியாக சில சிரமங்களை கொடுத்துள்ளதை மறுக்க முடியாது. 9 ஆமதிபதியை  (செவ்வாய்) குரு பார்த்தது ஜாதகி இரட்டை பட்டம் பெற காரணமாக அமைகிறது.

தற்போது பனிரெண்டாம் வகுப்பு பயின்று கொண்டு அடுத்த ஆண்டு கல்லூரியில் தனக்கு நுண்ணுயிரியியல் (Micro Biology) கிடைக்குமா என கேட்கும் மாணவிக்கான ஜாதகம் கீழே.


சிம்ம லக்ன ஜாதகம் வித்யா ஸ்தானமான நான்காம் பாவத்தில் புதனும் சூரியனும் புத்த-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளனர். பால்ய கல்வியை குறிக்கும் 2 ஆம் பாவத்தில் குரு, 4 ஆம் பாவம் புத-ஆதித்ய யோகம் பெற்று சிறப்பாக அமைந்துள்ளது. உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்தில் தனித்த ராகு அந்த ராசியாதிபதி செவ்வாயைப் போன்றே செயல்படுவார் எனலாம். சந்திரனை குரு பார்ப்பது சிறப்பு எனலாம். எனினும் 8 ல் மறைந்த சந்திரனை நோக்கி ராகு வருவது சிறப்பல்ல. ஜாதகிக்கு தற்போது கேது திசை நடப்பில் உள்ளது. ஜாதகி கல்லூரி செல்லும் காலத்தில் கேது திசையில் புதன் புக்தி நடப்பில் இருக்கும். இந்நிலையில் இந்த மாணவிக்கு கல்லூரியில் நுண்ணுயிரியியல் பயில வாய்ப்பு கிடைக்குமா என காண்போம்.

ஜாதகத்தில் கேது செவ்வாயை கடந்திருப்பது சிறப்பான அமைப்பே.  நுண்ணுயிரியலின் காரக கிரகமான குரு, இந்த லக்னத்திற்கு 5 மற்றும் 8 ஆம் பாவாதிபதியாகிறார். எனவே 5 ஆமதிபதி எனும் நிலையில் உயர் கல்வியை தரும்போது 8 ஆமதிபதி எனும் நிலையில் அதை தடை செய்ய அமைப்புள்ளது. குரு 8 ஆமிடத்தில் அமைந்த சந்திரன் சாரம் ஹஸ்தம் பெற்றுள்ளார் எனவே உயர் கல்வியில் நிச்சயம் தடைகளும் விரையங்களும் ஏற்படும். கல்லூரிக் காலத்தில் புதன் புக்தியில் ஜாதகி இருப்பார். புதன் ஆத்ம (அதிக பாகை பெற்ற கிரகம்) காரகனாக உள்ளார். அது சிறப்பு என்றாலும் புதன் 9 க்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துவதும் எண்ணிய பாடப்பிரிவை அடைவதில் தடைகள் ஏற்படும். 3 ஆமிட கேது 2 ஆமிடத்தில் விரயாதிபதி சந்திரன்  சாரம் பெற்ற குருவை நோக்கி வருகிறார். திசா நாதன் கேது கோட்சாரத்தில் தற்போது 4 ஆம் பாவத்தில் விருட்சிகத்தில் நிற்பது கல்வியை பாதிக்கும் அமைப்பாகும். இந்த பாதிப்பு இந்த ஜாதகிக்கு மட்டுமல்ல தற்போதைய கொரோனா காலத்தில் அனைத்து மாணவர்களுக்குமான அமைப்பாகும். கோட்சார கேது 3 ஆம் பாவத்திற்கு செல்கையில் ஜாதகியின் கல்விச் சூழலில் நல்ல வகையான மாறுதல் ஏற்படும் என்றாலும் உயர்கல்விக் காலத்தில் ஏழரை சனியில் பயிலும் இந்த ஜாதகத்தில் ஜாதகி குறிப்பிட்ட வகை பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கையில் எளிதாக கிடைக்காமல் அதற்காக கணிசமான பொருளாதாரத்தை செலவு செய்துதான் பெற வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday 8 July 2021

மணி அடிச்சா சோறு! இது மாமியாரு வீடு!

சமீபத்தில் திருமணத்திற்காக ஆராய்ந்த ஒரு ஜாதகத்தில் ஜாதகியின் பெற்றோர் தங்களது ஒரே மகளை பிரிய மனமின்றி, வீட்டோடு மாப்பிள்ளையாக வர வாய்ப்புள்ள வரனை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டு வரங்களின் ஜாதகங்களை கொடுத்தனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் இக்காலத்தில் பெண்களை இல்லத்து லக்ஷ்மிகளாக நடத்தாமல் வரதட்சினை உள்ளிட்ட பல வகைகளில் கொடுமைப்படுத்தும் குடும்பத்து வரன்களுக்கே இது போன்று நிலை ஏற்படும் என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெண் என்பவள் குடும்பத்தை வளர்ச்சியுறச் செய்பவள், இல்லத்து லக்ஷ்மி. “லக்ஷ்மியின் வடிவமான பெண்ணை பாதுகாக்காமல் தூஷிப்பவனில் இல்லத்திலிருந்து லக்ஷ்மி தேவி வெளியேறுகிறாள். பதிலாக அங்கு மூதேவி குடியேறுகிறாள்” என்று ஸ்ரீ தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.  பெண்கள் கல்வியில் முன்னேறி ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கும் இக்காலத்தில் ராமன் இருக்குமிடம் அயோத்தி எனும் பழங்கால நிலைகள் மாறிவருவது வருந்தத்தக்கது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளைகளாக செல்லும் ஆண்களுக்கான ஜாதக அமைப்பு என்ன? என ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.  

ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின் நிலையை சொல்லும் என்றால், 7 ஆமிடம் களத்திரத்தின் நிலையை சொல்லும். 2 ஆமிடம் ஜாதகரின் குடும்ப நிலையை  சொல்லும் என்றால், களத்திரத்தின் குடும்பத்தை பற்றிய விபரங்களை 7 க்கு 2 ஆமிடமான 8 ஆமிடம் சொல்லும். லக்னத்திற்கு 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திலும், ராசிக்கு 7 ஆமதிபதி சந்திரன் ராசியிலும் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது ஜாதகரின் மேல் மனைவியின், ஆளுமையும் ஆதிக்கமும் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் சூரிய சந்திரர்களே லக்னத்திற்கும் ராசிக்கும் 7 ஆமதிபதிகளாகி லக்னம், ராசியில் வந்து அமைவது, மனைவி வந்த பிறகு ஜாதகர் தாய், தந்தையை விட்டு விலகுவார் என்பதை குறிக்கிறது. லக்னத்தோடு தொடர்புடைய கிரக காரக உறவுகளை ஒரு ஜாதகர் எந்த சூழலிலும் இழக்க மாட்டார். ஆனால் அவை 7 ஆம் பாவாதிபதியாகி லக்னம், ராசியில் வந்து அமர்வதால் மனைவி வந்த பிறகு ஜாதகர் 7 ஆமதிபதியின் ஆளுகைக்கு ஜாதகர் முழுமையாக சென்றுவிடுவார். ஆனால் அந்த காரக உறவுகளை விட்டுகொடுக்க மாட்டார். இங்கு கடக ராசிக்குரிய சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 12 ல் சுக்கிரன், செவ்வாயோடு மறைகிறார். இது தாயாரையும், சகோதரனையும் விட்டு ஜாதகர் விலகுவதை குறிக்கும். சுக்கிரன் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் பாவாதிபதி சூரியன் லக்னத்தில் வந்து அமர்வதால் மனைவியையும், தந்தையையும் விட்டு ஜாதகர் பிரிய மாட்டார்.  ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் மனைவி வந்த பிறகு ஜாதகர் மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி சென்றுவிட்டார். ஒரே ஊரில் உள்ள தந்தை, தாயையும், சகோதரனையும் அவ்வப்போது வந்து கவனித்துக்கொள்கிறார்.  

ஜாதகத்தில் 8 ஆமதிபதி புதன் லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் நீச நிலை பெற்று அமைந்துள்ளது. அதே சமயம் 2 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஜாதகரின் வீட்டின் பொருளாதார சூழலைவிட மனைவி வீட்டின் பொருளாதார சூழல் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. 2 ஆமிடத்தில் புதன் அமைந்துள்ளது ஜாதகர் புதனின் காரகதுவமான வியாபாரம் தொடர்புடைய கமிஷன், தரகு, ஏஜென்சி போன்றவற்றில் ஈடுபடுவதையும்  ஜாதகரின் வீட்டில் ஒரு கல்வியாளர் மூலம் வருமானம் வருவதையும் குறிப்பிடுகிறது. ஜாதகரின் தாயார் ஒரு ஆசிரியை. சிம்ம ராசியும் சூரியனும் சுயமாக தொழில் புரிபவர்களை குறிக்கும். சூரியன் லக்னத்தில் வந்து அமைந்ததால் ஜாதகருக்கு திருமணமான பிறகு இந்த அமைப்பு ஜாதகரை தொழில்களை நிர்வகிக்கும் நிர்வாகியாக உயர்த்துகிறது. நிர்வாகம் என்பது சூரியனின் காரகத்துவம். 7 ஆமதிபதி சூரியன் ஆனதால் திருமணமாகி மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாகிவிட்டார்.


நவாம்சத்தில் 7 ஆமிட குரு வர்கோத்தமமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இது குடும்பம் அமைத்தபின் பொருளாதாரத்தை முன்னிட்ட விஷயத்தில் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக ஜாதகர் தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகத்  தயங்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி குரு, 7 ஆமிடத்தை சிம்ம ராசியில் 3 ஆம் பாவத்தில் நின்று பார்க்கிறார். இதனால் களத்திர பாவம் வலுவடைகிறது. இது மனைவி ஆளுமையும், ஜாதகரை கட்டுப்படுத்தும் வல்லமையும் மிக்கவர் என்பதையும் தெரியப்படுத்துகிறது. 7 ஆமதிபதிக்கு வீடு கொடுத்த சூரியன் 1௦ ல் திக்பலம் பெற்று நிற்பது மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாக உயர்வார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.  

இந்த ஜாதகர் திருமணமான பிறகு மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி மனைவி வீட்டாரின் தொழில்களை நிர்வகிக்கிறார். நவாம்ச லக்னாதிபதி புதன், 2 ஆம் பாவமான கடகத்தில் சுக்கிரனோடு இணைவு பெற்றுள்ளது வருமான வகைகளில் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவார்கள் என்பதையும், இவற்றோடு சந்திரன் சேர்க்கை அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் தொடர்பான வியாபாரம் அது என்பதையும் குறிப்பிடுகிறது. (புதன்=தரகு,கமிசன், ஏஜென்சி & சந்திரன்=வியாபாரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்). ராகு இவைகளோடு சேர்க்கை  பெறுவது அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களோடு பலதரப்பட்ட நவீன சாதனங்களையும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. 

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501