Showing posts with label மனநிலை பாதிப்புகள்.. Show all posts
Showing posts with label மனநிலை பாதிப்புகள்.. Show all posts

Friday, 14 February 2020

பயமும் ஜோதிடமும்

துணிந்தவர்களுக்கு துக்கமில்லை என்பது முன்னோர் வாக்கு. துணிந்தவர்கள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அச்சமின்றி செயல்பட்டு எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறிச் செல்வர். அதே சமயம் அவர்கள் இழப்புகளை சந்திக்கவும் தயங்குவதில்லை. பாதிப்புகளை மட்டுமே பார்ப்பவர்கள் வாழ்வில் ஒருநாளும் முன்னேற முடியாது. ஜோதிடத்தில் பயம் என்பது ஒரு தண்டனை என்றுதான் கூற வேண்டும். ஜனன ஜாதகத்தில் சந்திரன் பாதித்தவர்கள்  பயத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.
இத்தகையவர்களுக்குத்தான் 
எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் குறைவு. செவ்வாய் வலுவடைந்தவர்களும் தைரியம், துணிவு, ஆண்மை, வீரியம் ஆகியவற்றிற்குரிய   3 ஆவது பாவம் வலுவடைந்தவர்களும் பொதுவாகவே துணிச்சல் மிகுந்தவர்களாக காணப்படுவர். ஆனால் லக்னாதிபதி மற்றும் சந்திரனின் நிலையைக்கொண்டுதான் ஒருவரின் துணிச்சலை தெளிவாக அறிய முடியும். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் சனி,ராகு-கேது போன்ற பாவிகள் தொடர்பு ஏற்படும் போது இவ்விரு கிரகங்களுக்கும் மிகுந்த பய உணர்ச்சி ஏற்படும். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளூர பயந்துகொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிப்பார். 
இயல்பாகவே தைரியம் மிக்கவை நெருப்பு ராசிகள் எனப்படும் மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை. மேஷம், சிம்மம் தவிர்த்து மற்றோர் நெருப்பு ராசியான தனுசுக்கு அதிபதி குருவிற்கு சனி சமக்கிரகமாக வருவதாலும். கேது குருவின் தன்மையை ஒத்த ஞானியாக வருவதாலும், குரு இவ்விரு கிரகங்களோடும் சூரியன், செவ்வாயைப்போன்று அல்லாமல் அஞ்சாது எதிர்த்துநின்று செயல்படும். ராகுவோடு சேர்ந்தால் மட்டும் தனது நற்குணங்களை ராகுவிடம் இழந்து அதை சமாதானப்படுத்திவிட்டு தான் வழுவிழந்து நிற்கும். அதனால்தான் சனி, ராகு-கேதுக்களோடு இணையும் குரு இவைகளால் ஏற்படும் தோஷங்களை பெருமளவில் குறைத்துவிடுகிறார்.  ராகு செவ்வாயோடு சேர்ந்தவர்களுக்கும் 3 ஆம் பாவத்தில் ராகு-கேதுகள் இருக்கப்பெற்றவர்களுக்கும் அசட்டுத்துணிச்சல் இருக்கும். எந்த இடத்தில் நிதானிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்காது. ராகு-சந்திரன் சேர்க்கை உள்ளவர்களுக்கும் ராகுவுக்கு திரிகோணத்தில் சந்திரன் அமையப்பெற்றவர்களுக்கும், சந்திரனுக்கு அடுத்த பாவத்தில் ராகு இருப்பவர்களுக்கும் வாய்ச்சவடால் அதிகம். இத்தகையவர்களை வாய்ச்சண்டையால் வெல்லவே முடியாது. ஆனால் பயமுறுத்தி இவர்களை பணிய வைக்க முடியும்.    
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் நெருப்பு ராசியும் ராஜ ராசியுமான சிம்மமே ராசியும் லக்னமுமாக அமையப்பெற்றவர். முக்கிய ஒளிக்கிரகமும் மனோ காரகனுமான சந்திரனை நோக்கி நிழல் கிரகமான கேது  வருகிறது. இதனால் ஜாதகரின் மனம் பதட்டமடைகிறது. 2 ஆமிட கேது பொருளாதரத்தை பாதிக்கவில்லை. ஆனால் மனதை பாதிக்கிறார். சந்திரன் உடலையும் உணவையும் குறிப்பவர். அதனால் உடலின் மீதும் உண்ணும் உணவின் மீதும் மிகுந்த கவலை கொள்கிறார். சந்திரனை நோக்கிய நிலையில் கேது உள்ளதால் ஜாதகருக்கு பேய் பற்றிய பயமுண்டு. நல்ல துறையில் நல்ல சம்பாத்தியத்தில் உள்ள ஜாதகருக்கு இரவில் தனியாக வெளியே செல்ல   பயம். கேதுவின் நிழல் சந்திரனின் மீது படிவதால் இந்நிலை ஏற்படுகிறது. 
இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  
மீன லக்ன ஜாதகத்தில் நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் 1 – 7 ல் அமைந்துள்ளன. இதனால் ஜாதகருக்கு நிழல் கிரகங்களின் தாக்கம் அதிகம். உடல், மனோ காரகன் சந்திரன் 8 ல் மறைந்துவிட்டதால் ஜாதகருக்கு இவை இரண்டைப்பற்றியும் பயம் மிகவும் அதிகம். சந்திரனின் வீட்டில் சந்திரனின் பகை கிரகமான சுபாவ பாவி சனி அமைந்துவிட்டதால் பயத்தில் மனம் குழம்பியுள்ளார். சந்திரனும் கடக ராசியும் ஜோதிடத்தில் மார்பை குறிப்பிடும். 1977 ல் பிறந்த ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 1998 ல் ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் திசை துவங்கியது. குரு கடக ராசிக்கு விரையத்தில் கேந்திராதிபத்திய தோஷத்தில் பகை கிரகம் சுக்கிரனுடன் அமைந்துள்ளார். குரு மார்பை ஆளுமை செய்யும் கிரகமாகும்.  மார்பு ராசியான கடக ராசிக்கு விரையத்தில் குரு கடகத்திற்கு பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து கடகத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் நிற்கும் செவ்வாயின் மிருக சீரிஷம் – 4 ல் நிற்கிறார். செவ்வாய் மிருக சீரிஷம் – 2 ல் அமைந்து நவாம்சத்தில் கன்னியில் நிற்கிறார். இந்த அமைப்பால் குரு திசை துவங்கியது முதல் தனக்கு மார்பில் பாதிப்பு இருப்பதாக எண்ணி பதட்டமடைகிறார். 
கடக ராசி அதிபதி சந்திரனுக்கு 8 ல் மாந்தியுடன் இணைந்து நிற்கும் செவ்வாயால் இந்த பதட்டம் அதிகமாகி தனக்கு மாரடைப்பு உள்ளதாக எண்ணிக்கொள்கிறார். இதனால் திருமணத்தை தவிர்த்து வருகிறார். தற்போது ஜாதகர் சனி திசையில் உள்ளார். சனி பாவத்தில் கன்னியில் உச்சமடையும் புதனின் ஆயில்யம்-4 ல் நின்று மீன நவாம்சம் பெற்று கன்னி நவாம்சத்தில் உள்ள செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் ஜாதகருக்கு தனக்கு இருப்பதாக எண்ணும் மார்பு நோய் பற்றிய பயம் மிக மிக அதிகம். மருத்துவர்கள் ஜாதகருக்கு மார்பில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறிவிட்டாலும் ஜாதகர் தனது பயத்தால் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். கால புருஷனுக்கு ரோக ஸ்தானாதிபதியான புதனே களத்திர பாவாதிபதியாகி பாவத்தில் உச்சமடைவதால் நோய் பயத்தால் ஜாதகர் திருமணம் செய்துகொள்ள மாட்டார்.   
மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
துலாம் லக்னத்திற்கு ரோக ஸ்தானமான 6 ஆமிடாதிபதி குரு லக்னத்தில் வக்கிரமடைந்த நிலையில் அமைந்துள்ளார். வக்கிர குருவால் அதன் திக்பலம் பாதிக்கப்படும். 4 ஆம் பாவம் உடலின் கட்டமைப்பை சொல்லும். 4 ஆமிடத்திற்கோ, 4 ஆம் பாவாதிபதிக்கோ குரு தொடர்பு ஏற்படும்போது ஒருவருக்கு உடற்பருமன் ஏற்படும். இந்த ஜாதகத்தில் வக்கிர குருவின் பார்வை நான்காம் அதிபதியான நீச சனியின்மீது படுகிறது. மேலும் குரு வக்கிரமடைந்து 12 ஆமிடம் நோக்கி செல்வதால் 12 ஆமிடத்திற்கும் அரைப்பங்கு குருவின் ஆதிக்கம் ஏற்படும். இதனால் 12 ஆமிட குருவின் அரை பங்கு பார்வை 4 ஆமிடத்திற்கும் ஏற்படுகிறது. இதனால் ஜாதகருக்கு உடல் பருமன் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் லக்ன பாதகத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் தொடர்புடைய திசா-புக்திகள் வந்தால் உடலும், மனம் பாதிக்கப்படும் எனலாம். ஜாதகருக்கு ராசிக்கு பாதகத்தில் லக்ன பாதகாதிபதி சூரியனுடன் இணைந்த செவ்வாய் திசை கடந்த 2018 இறுதிவரை நடந்தது.  செவ்வாய் பாதகாதிபதி சூரியனோடு இணைந்த நிலையில் மேஷத்தில் நீசமடைந்த சனியின் மூன்றாவது பார்வையை பெற்ற நிலையில் சந்திரனை பார்க்கிறது. 
உடற் பருமனுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டவர் ஒரு கட்டத்தில் உடல் மிகவும் மெலிந்துவிட்டதாக சக நண்பர்கள் கூற மிகுந்த மன பாதிப்புக்குள்ளானார். நீச சனி உடல் மெலிவுக்கு ஒரு முக்கிய காரணம்.  ஜாதகர் சிறுநீரகத்துறையில் தலைமை மருத்துவராக இருந்து ஏனையோருக்கு பாடம் நடத்துபவர். எனினும் செவ்வாய் திசையில் பாதகாதிபதி சூரியனின் புக்தியிலும் அடுத்து வந்த சந்திர புக்தியிலும்  மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் வரை சென்று மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரோக ஸ்தானமான 6 க்கு விரையத்தில் 5 ல் நிற்கும் ராகு திசை துவங்கியவுடன் ஜாதகர் தனது பாதிப்பிலிருந்து மீண்டார்.  ரோகம் 6 ஆமிடம். குணம் 5 ஆமிடம்.  

மீண்டும் விரைவில் இதுபோல் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன். 
கைபேசி: 8300124501.

Thursday, 26 December 2019

கிரகச் சேர்க்கையும் கர்மாவும்.



ஒரு கிரகச் சேர்க்கை பலரின் ஜாதகத்தில் அமையப்பெற்றாலும் அவை அமைவைப்பொறுத்து சாதக பலனையோ பாதக பலனையோ செய்யும். அக்கிரக்கச் சேர்க்கை அமையப்பெற்ற அனைவருக்கும் ஒரே விதமான பலனை கொடுக்காது. ஒரே குடும்பத்தில் இவ்வாறு கிரகச் சேர்க்கை அமையப்பெற்றாலும் இது பொருந்தும். ஆனால் கிரகச் சேர்க்கையில் இணையும் கிரகங்களின் காரகம் கண்டிப்பாக வெளிப்படும். இதனை ஒரு குடும்ப ஜாதகம் மூலம் இப்பதிவில் அலசுவோம்.


மேற்கண்ட ஜாதகம் 78 வயது நிரம்பிய ஒரு பெண்மணியின் ஜாதகம்.  சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே ராகு-சந்திரன் சேர்க்கை அமைந்துள்ளது. உடன் மாந்தியும் உள்ளது. சூரிய சந்திரர்களோடு ராகு-கேதுக்கள் இணைவது கிரகண தோஷமாகும். உடலை குறிக்கும் சந்திரனுடன் பூர்வ ஜென்ம கர்மாவின் காரக கிரகமான ராகு இணைந்திருப்பது ஜாதகியை மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் அமைப்பாகும். ஜாதகியின் மரணத்திற்கும் அது இட்டுச் செல்லும் என்பதை உடன் இணைந்துள்ள மாந்தி குறிக்கிறது. சந்திரனும் செவ்வாயும் இரத்த மரபணுக்கள் மூலமாக பாரம்பரிய பதிவுகளை கடத்தும் காரக கிரகங்களாகும். அஷ்டமாதிபதியும் புத்திர காரகருமான குரு, செவ்வாயின் மிருகசீரிஷம் – 1ல் பூர்வ புண்ணியம் மற்றும் ரோக ஸ்தானங்களுக்கு அதிபதியான சனியுடன் இணைந்துள்ளது. குரு, சனி, புதன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் ஜாதகத்தில் வக்கிரம் அடைந்துள்ளது. இது கர்ம வினையின் தீவிரத்தை குறிக்கிறது. வக்கிர கிரகங்கள் அனைத்தும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுவுடன் இணைந்தே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்கிரனை தவிர இதர கிரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளன. சுக்கிரனின் இரு வீடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில் சுக்கிரன் ரோக ஸ்தானாதிபதி சனியின் அனுஷம் – 4 ல் அமைந்து சனி பார்வை பெறுகிறார்.  சந்திரன் இரத்தத்தையும் சுக்கிரன் சுரப்பிகளையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். சந்திரன் கர்ப்பப்பையை குறிக்கும். சுக்கிரன் அமைந்த கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிக ராசியும் செவ்வாய்  நிற்கும் லக்னத்திற்கு 8 ஆமிடமும் கர்பப்பையை குறிக்கும்.  ராகு சந்திரனோடு தொடர்பு பெறுவது கர்ப்பப்பை பாதிப்பை தரும்.  ஜாதகிக்கு தற்போது ரோகாதிபதி சனியுடன் இணைந்து நிற்கும் 5 & 8க்குரிய குருவின் திசை நடைபெறுகிறது. ஜாதகி தற்போது கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரு நவாம்சத்திலும் ராகு பாவச் சக்கரத்திலும் காலபுருஷனின் ரோக ஸ்தானமான கன்னியின் நிற்பது ஜாதகி குரு  திசையில் அடையும் ரோக பாதிப்புகளை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இந்தப்பெண்மணியின் முதல் மகனின் ஜாதகம் கீழே.

மேஷ லக்ன ஜாதகத்தில் தாயாரின் ஜாதகத்தில் அமைந்துள்ளது போலவே லக்னத்தில் மாந்தி அமைந்துள்ளது. தாயாரின் ஜாதகத்தை போலவே சந்திரன் – ராகு சேர்க்கை உள்ளது. இந்த அமைப்புகள் தாயார் வழி கர்மா மகனுக்கும் தொடர்கிறது என்பதை குறிக்கிறது. லக்னதிற்கும் லக்னாதிபதி செவ்வாய்க்கும் பாக்ய ஸ்தான குருவின் பார்வை கிடைக்கிறது. இதனால் தாயார் வழி கர்ம தோஷம் ஜாதகரை குறைவாகவே பாதிக்கும் எனலாம். 4 ஆம் பாவமும் 4 ஆம் பாவாதிபதியும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து தாயாரின் நிலையை புதல்வரின் ஜாதகம் தெளிவாக காட்டுகிறது. 6 ஆம் பாவத்தில் நெருப்புக் கிரகம் சூரியன் 6 ஆம் பாவாதிபதியான உச்ச நிலையில் இருக்கும் புதனுடன் இணைந்து நிற்கிறார். புதனும் செவ்வாயும் சூரியனால் அஸ்தங்கமடைந்துள்ளன. இப்படி ஆறாவது பாவத்திற்கு சூரியனின் வலு கூடுவதால் 6 ஆமிடம் குறிக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வியாதி வகைகளை சூரியன் கட்டுப்படுத்துவார் எனலாம்.  ஜீவன காரகன் சனி அஸ்தங்க செவ்வாயின் மிருக சீரிஷம் – 2 ல் நிற்கிறார். சனியின் சார நாதன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் பாதகாதிபதி சனியால் ஜாதகருக்கு தீமை செய்ய முடியாது.

2 ஆம் பாவாதிபதி சுக்கிரன் ஜல ராசியில் கேதுவோடு இணைந்து உச்ச புதனின் ஆயில்யம் – 1 ல் நிற்கிறார். இதனால் ஜாதகர் தகவல் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக பணிபுரிந்து வருமானம் ஈட்டுகிறார். வெளிநாடு சார்ந்த பணி இது என்பது கவனிக்கத்தக்கது. 1௦ ஆமிடத்தில் ராகு சந்திரன் சேர்க்கை இதற்கு உதவி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. ராகு – கேதுக்கள் நவீன தகவல் தொழில் நுட்பம், மென்பொருள், கடல்கடந்த தொடர்புகளை குறிக்கும் காரக கிரகங்களாகும். ஜாதகர் ராகு-கேது தொடர்புடைய விதத்தில் தனது கர்மாவை கழிப்பதால் அவை ஜாதகருக்கு தங்களது பாதிப்பை குறைத்தே தரும் எனலாம். ஜாதகர் தற்போது ராகு திசையை கடந்து குரு திசையில் உள்ளார். இந்த ஜாதகத்தில் சந்திரன் – ராகு சேர்க்கை கர்மா வேலை வகையில் தனது விளைவை தருகிறது   எனலாம்.  

2 ஆவது மகனின் ஜாதகம் கீழே.

 தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியும் பரம சுபருமான குரு வக்கிர நிலையில் மறைவு ஸ்தானமான மூன்றாமிடத்தில் அமைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் சந்திரன் நீச வர்கோத்தமம் பெற்ற நிலையில் சந்திரன்-ராகு சேர்க்கை உள்ளது. தாய் வழி கர்மா இந்த ஜாதகத்திலும் தொடர்வதையே இது குறிப்பிடுகிறது. மனோகாரகன் சந்திரன் பாதிக்கப்பட நிலையில் 5, 9 பாவாதிபதிகள் பாதகாதிபதி புதன் தொடர்பு பெற்று சிம்மத்தில் அமைந்துள்ளது. பாதக ஸ்தானத்தில் சனி அமைந்து சிம்மத்தில் அமைந்த கிரகங்களை 3 ஆம் பார்வையால் பார்க்கிறது. சனி வீட்டில் குரு அமைந்து சனி பாதக ஸ்தானத்தில்  திக்பலம் பெற்று நிற்பதாலும் இங்கு குருவிற்கு சனிக்கும் ஏற்பட்ட தொடர்பு பாதகத்தை செய்யவே வழி வகுக்கும். புத்தி காரகன் புதன் பாதகாதிபதியாகி வர்கோத்தமம் பெற்று சூரியனை விட்டு 8 பாகைகள் முன்னால் சென்று (சிம்மத்தில் சூரியன் 8 பாகை, புதன் 16 பாகை)  தனது உச்ச வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.  புதன் முழுமையாக அஸ்தங்கம் அடையவில்லை. இதனால் பாதக பலனே கூடுதலாக வெளிப்படும். 

மனோ காரகன் சந்திரன் பாதகத்தில் நிற்கும் சனியின் அனுஷம் – 4 லும் 5 ஆமதிபதி செவ்வாய் 8 ஆமிடத்தில் நிற்கும் 6 ஆமதிபதி சுக்கிரனின் பூரம் – 4 லும், பாக்யாதிபதி சூரியன் 6 ஆமிடத்தில் மனோகாரகன் சந்திரனின் ரோகிணி – 4ல் சந்திரனை பாதிக்கும்படி அமைந்துவிட்ட கேதுவின் மகம் – 3ல் நிற்கிறார். கடக ராசி பாவகர்தாரி யோகத்தில் அமைந்து கேதுவின் மூன்றாவது பார்வை பெற்று  சந்திரனும் பாதிக்கப்பட்டுவிட்டதால் ஜாதகர் பிறவியிலேயே மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார். குரு பாதகாதிபதியை பார்த்து சந்திர கேந்திரம் பெற்றதால் ஜாதகர் குழந்தை மனோ பாவம் பெற்றவராக காணப்படுகிறார். ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். அடுத்து பாதக ஸ்தானத்தில் நிற்கும் சனியின் சாரம் பெற்ற சந்திர திசையில் மேலும் கடுமையாக பாதிக்கப்படப்போவதையே ஜாதகம் குறிப்பிடுகிறது.  இந்த ஜாதகத்தில் சந்திர-ராகு சேர்க்கை மன நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கிரகச் சேர்க்கை ஒரே குடும்பத்தில் ஏற்படுவது ஒரு யோகமோ தோஷமோ அவர்களை தொடர்ந்து வருவதை குறிக்கும். ஆனால் அதன் வெளிப்பாடு அனைவருக்கும் ஒரே விதமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கிரகச் சேர்க்கை சாதகத்தையோ பாதகத்தையோ வழங்கும் நிலையில் இருந்தாலும் அவ்வமைப்பை பாதிக்கும் எதிர்க்காரணிகளை ஆராய்ந்தே அதை இறுதி செய்ய வேண்டும். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501.

Wednesday, 11 November 2015

இறைவனின் விளையாட்டு பொம்மைகள்

மனிதன் வாழ்வில் துயரங்களை தாங்கமுடியாதபோது கடவுளே என்று கதறுகிறோம். என்னை பைத்தியமாக்கிவிடேன் எந்த மனோ வலிகளையும் உணரமாட்டேன் என மன்றாடுகிறோம்.

உடல் ரீதியான வேதனைகளைக்கூட பொறுத்துக்கொள்ள இயலும் மனிதனால் மனோ ரீதியான வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

மனிதன் கர்ம வினைகளை அனுபவித்துத்தீர்க்க பிறவி எடுக்கிறான் என நமது தர்மங்கள் கூறுகின்றன. அப்படியானால் சராசரி மனிதன் உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவிக்கிறான். முற்றிய நிலையிலுள்ள பைத்தியங்கள் உடல் ரீதியான வேதனைகளை மட்டுமே உணர்கிறார்கள்.

கடவுள் சராசரி மனிதனுக்கு செய்த ஒர வஞ்சனை இது எனக்கொள்ளலாமா?.

இந்தச் சிந்தனையில் விளைவே இப்பதிவு.

மனித வாழ்வில் மிகக் கடுமையான பாதிப்புகளை தரவல்லவை பாபக்கிரகங்கள். அவை கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருப்பது நல்லது. சுபர் பார்வை சேர்க்கை இருந்தால் நலம். இல்லாவிட்டால் கேந்திரமாக இருந்தாலும் அவை அமைந்த பாவம் மற்றும்  காரக அடிப்படையில் பாதிப்புகளை தரும்.

மனித மன நிலையை  நிர்ணயிப்பதில் பின்வருபவை ஜாதகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

1.மனோ காரகன்           – சந்திரன்
2.புத்திகாரகன்              - புதன்
3.மேற்சொன்ன இருவரின் வீடுகள் கடகம், மிதுனம், கன்னி.

மேலும் லக்னம், ஐந்தாம் பாவம், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி.

மனோ நிலையில் பாதிப்புகளைத் தரும் கிரகங்களில் முக்கியமான கிரகங்கள் பின்வருமாறு.

1.சந்திரனின் சக்தியை பிரதிபலிக்கும் கேது. இவர் சந்திரனுடன் சேர்ந்திருந்து சிந்தனை தொடர்புடைய இதர பாவங்கள் பாதிப்படைந்தால் மனோ நிலை பாதிப்படைவது நிச்சயம்.
2.சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் ராகு. இவர் மனோ நிலை தொடர்புடைய கிரகங்களுடனும் பாவங்களுடனும் சேர்ந்திருந்தால் அது தொடர்புடைய தீவிரத் தன்மையை தூண்டிவிடும். உதாரணமாக ஐந்தாமிடத்தில் ராகு நட்பில் அமர்ந்து சுபர் பார்வை பெற்று ஐந்தாம் பாவாதிபதி வலுப்பெற்றால் ஜாதகர் விஞ்ஞானியாகவும் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இருப்பார்.
3.சகல துன்பங்களுக்கும் காரகத்துவம் பெற்ற சனி.      
சனி – சந்திரனுடன் இணைந்தால் ஞானி. சனி-சந்திர யோகம் என்று இதற்குபெயர். துறவு மனோபாவம் ஏற்படும். ஞானிகளின் ஜாதகங்களில் சனி-சந்திர யோகம் இருப்பதை காணலாம்.  

சனி-சந்திர இணைவு, பார்வை, பரிவர்த்தனை & சந்திரன் சனியின் நட்சத்திரங்களிலும் சனி சந்திரனின் நட்சத்திரங்களிலும் அமைவது போன்றவை புனர்பூ தோஷம் எனப்படும். திருமணத்தடை, திருமண வாழ்வில் பிரச்சனைகளை இதனால் ஏற்படும்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
5.10.1986 -  12.25 PM சென்னை.

ஜாதகர் மனோ நிலை பாதித்த திருமணமாகாத ஒரு ஆண். சில சமயம் கடுமையாக (சங்கிலியால் கட்டப்படுமளவு) நடந்துகொள்வார். அவ்வப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிவரும். பெரும்பாலான சமயங்களில் பயந்த சுபாவம். குழந்தை மனம்.


தனுசு லக்னம் இருபுறங்களிலும் பரிவர்த்தனை பெற்ற பாவிகள் சனி-செவ்வாயால் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. ஐந்தாமதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. லக்னாதிபதியின் மற்றோர் வீடான மீனத்தில் ராகு நின்றுவிட்டார். அதற்கு 12 ஆமிடமான கும்பத்தில் குரு பாவி வீட்டில் வக்கிரகதியில் மாந்தியுடன் நின்று கெட்டுவிட்டார். குரு நின்ற இடம்,  சிந்தனை ஸ்தானமான ஐந்தாமிடம் மேஷத்திற்கு பாதகஸ்தானம் என்பதை கவனிக்கவும்.   

பாக்யாதிபதி சூரியன் சிறப்பாக கேந்திர பலம் பெற்றாலும் கேது இணைவு கெடுத்துவிட்டது.

6, 8 ஆமதிபதிகள் இணைந்து 11 ல் நிற்பது சிறப்பென்றாலும் இவர்களுடன் 7 ஆமதிபதியான புத்திகாரகன் புதன் இணைவு புத்தி பேதலிப்பதையும் திருமண வாழ்வு  கேள்விக்குறியாவதையும் குறிப்பிடுகிறது.   

பாவத்தில் சந்திரன் கேதுவுடன் இணைவு கவனிக்கத்தக்கது. 

முழுமையான கால சர்ப்ப தோஷ ஜாதகம் இது. ஜாதகரின் கர்மவினையை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஜாதகருக்கு 5 க்கு 11 ல் நின்ற குரு திசையில் 6 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியில் மனோ நிலை பாதிப்பு துவங்கியது. அப்போதைய கிரக நிலைகள் கீழே.





1.கோட்சார குரு லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் (ராசிக்கு 7 ல்) 6 ஆமிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நின்று வக்ரமடைகிறது.

ஜனன ஜாதகத்தில் ஒரு பாவத்திற்கு பாதகத்தில் வக்கிரகதியில் நிற்கும் கிரகம் கோட்சாரத்தில் அக்குறிப்பிட்ட பாவத்தில் நின்று வக்ரகதியை பெறும்போது பாதகத்தை உறுதியாக செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   

2.கோட்சார ஏழரை சனி முன்பே துவங்கிவிட்டாலும் சனி ஐந்தாமதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்திற்கு வந்ததும்தான் மனோநிலை பாதிப்பு துவங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.  

3.கோட்சார செவ்வாயான ஐந்தாமதிபதி நீசமடைகிறார் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.

4.புக்தியை நடத்தும் சுக்கிரன் ஆட்சியடைந்து  அதனிருபக்கமும் கடுமையான பாவகர்த்தாரி யோகம்.

5. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன நிலையை ஒட்டியே அமைந்துள்ளன.
ஜனனத்தில் கால சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி கர்மவினையை அனுபவிக்கும்படி அமைந்துள்ள ராகு-கேதுக்கள் கோட்சாரத்தில் அதே ஸ்தானங்களுக்கு வரும்போது அதை அனுபவிக்கும்படி செய்யும். (இது மிக முக்கிய ஜோதிட விதி. ஜோதிடம் பயில்வோர் குறிப்பெடுத்துக்கொள்ளவும்.)

ஜாதகர் தேறுவாரா?

கோட்சார ஏழரை சனி தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

எப்படிப்பட்ட தோஷங்களானாலும் பெரும்பாலும் சனி தனது முதல் சுற்றிலேயே அதை அனுபவிக்கும்படி செய்துவிட்டால் இரண்டாவது சுற்றில் வேதனைப்படுத்தமாட்டார். ஜாதக தோஷங்களை சனியின் முதல் சுற்றில் அனுபவிக்க விடாமல் நல்ல திசா-புக்திகள் வந்து தடுத்துவிட்டால் சனியின் இரண்டாம் சுற்று கடுமையைத்தரும் என்பதே இதில் உள்ள சூட்சுமம்.

தற்போது ஜனனத்தில் நின்ற விருச்சிக ராசியை சனி கடந்துகொண்டிருக்கிறது.

கோட்சார குருவானவர் ஜனனத்தில் தாங்கள் நின்ற இடத்தில் தற்போது நின்றுகொண்டிருக்கும் ராகு-கேதுக்களை கடந்து போகும்போது ஜாதகரின் மனோ நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டும். ராகு-கேதுக்களால் ஜனன காலத்தில் ஏற்பட்ட கால சர்ப்ப தோஷம் விலக வேண்டும். அதன் பிறகே ஜாதகர் ஓரளவு நல்ல தெளிவை பெற இயலும்.



மீண்டும் மற்றொரு பதிவில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.