Showing posts with label பலவகை. Show all posts
Showing posts with label பலவகை. Show all posts

Friday, 14 November 2025

Make in India

 


தாது ராசிகளான சர ராசிகள் போர்க்குணம் மிக்கவை. புத்தி சாதுர்யமற்றவை. பிறர் அறிவு புகற்றினாலன்றி தனது அறியாமையை மாற்றிக்கொள்ளாது பிடிவாதமாக, முட்டாள்தனமாக செயல்படும் இயல்புடையவை. படைப்பாற்றல் அற்றவையும் கூட. அனைவருக்காகவும் கடுமையாக உழைக்கக் கூடியது. பிறருக்காகவும் போரிடக்கூடியது. செவ்வாய் தாது ராசிகளின் காரக கிரகமாகும். மூல ராசிகளுடன் இணைந்து செயல்படும். ஜீவ ராசிகளை வெறுக்கும். இவற்றை கற்களுக்கு ஒப்பிடலாம்.  

மூல ராசிகளான ஸ்திர ராசிகள் சொந்த அனுபவத்தால் ஓரளவு சாதுர்யத்தை பெற்றிருக்கும். சுய லாபத்தை முன்னிலைப்படுத்தி செயல்படக் கூடியது. போர்க்குணம் குறைவு என்றாலும் தனக்கு பாதிப்பு வந்தால் மட்டும் போர் செய்யும். படைப்பாற்றல் குறைவு. தாது ராசிகளுடன் இணைந்து செயல்படும் என்றாலும் மூல ராசிகளை அதிகம் விரும்பும். சுக்கிரன் மூல ராசிகளின் காரக கிரகமாகும். மூல ராசிகளை மண்ணுக்கு ஒப்பிடலாம்.  

உபய ராசிகளான ஜீவ ராசிகள் புத்தி சாதுர்யம் மிக்கவை. போர்க்குணம் குறைவு. ஆனால் அதை தனது புத்திசாலித்தனத்தால் சரி செய்துவிடும் இயல்புடையவை. மூல ராசிகளே படைப்பாற்றலின் காரக ராசிகளாகும். தங்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவை. இவை தாது ராசிகளின் இயல்பு குணமான கல்லையும், மூல ராசிகளின் இயல்பு குணமான மண்ணையும் விவசாயத்திற்கேற்றபடி உருவாக்கம் செய்து பயிர் விளைவித்து உயிரூட்டும் வல்லமை மிக்கவை.  அதனால்தான் இவற்றை ஜீவ ராசிகள் என்கிறோம். ஜீவ என்றால் உயிர் என்று பொருள். ஜீவ ராசிகள் மூல ராசிகளுடன் இணைந்து செயல்படும். தாது ராசிகளை வெறுக்கும். புதன் மூல ராசிகளின் காரக கிரகமாகும்.

இன்று உலகில் பல புதுமையான தொழில்நுட்பங்களை படைக்கும் அமெரிக்கா உலகியல் ஜோதிடத்தில் ஜீவ ராசியான மிதுன ராசி அமைப்பில் வரும் ராசி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தாது ராசி அமைப்பில் வரும் ராசியாகும். இதுவே இரு நாடுகளுக்கும் உழைப்பு மற்றும் படைப்பு ரீதியிலான வேறுபாட்டிற்கும் பகைக்கும் காரணமாகும். இப்பகை எப்போதும் தீராதது. அதாவது இரு நாடுகளும் தங்கள் நட்பில் ஒருபோதும் ஒன்றை ஒன்று நம்பாது.

இன்று அமெரிக்கா இந்தியர்களை அதிக பயத்துடன் பார்க்கின்றனர். காரணம் அமெரிக்கர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை இந்திய இளைஞர் அறிவு இன்று நிர்வகிக்கிறது. இன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே பணிபுரிகின்றனர். இவர்களால் இந்தியாவின் வருமானமும் உயர்ந்தது. பாரதமும் தொழில்நுட்ப அறிவை அமெரிக்கர்களிடமிருந்து பணி அறிவின் மூலம் பெற்றுள்ளது. இன்னும் பலகோடி மென்பொருள் அறிவுடைய இந்திய இளைஞர்கள்  தங்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர் என்பதும் அவற்றால் இந்தியா விரைவில் மேற்குலக நாடுகளை தொழில்நுட்பத்தில் மிஞ்சிவிடும் வாய்ப்பு இருப்பதால் அவை இன்று தூக்கத்தை தொலைதுவிட்டு இந்தியர்களை வெறுப்புடன் பார்ப்பவர்களாக உள்ளனர். இந்நிலையில் நமது அறிவை நம்மை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலக நாடுகளுக்கு விற்கும் சாதாரண பணியாட்களாக அன்றி, தொழில் நுட்பங்களை உருவாக்கி விற்கும் முதலாளிகளாக மாற வேண்டியதன் அவசியத்தை இன்றைய பதிவு வலியுறுத்துகிறது.

பின்வரும் ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.

Screenshot 2025-11-13 104157.png

ரிஷப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஜீவ ராசியான மீனத்தில் உச்சம். உச்ச சுக்கிரனால் நீச புதன் பங்கப்படுகிறார். வித்யா காரகர் புதனின் சேர்க்கையால் ஜாதகர் பொறியியலில் மின்னணு தகவல்தொடர்புக் கல்வி (BE-Electonics & Communication) படித்தார். கால புருஷ வித்யா ஸ்தானாதிபதியும் லக்னத்திற்கு மூன்றாமதிபதியுமான சந்திரன், 12 ஆமதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையாகிறார். உயர்கல்வி பாவகமான 9 ஆமிடமான மகரத்தை பரிவர்த்தனைக்குப் பிறகு கடக சந்திரன் பார்ப்பார். மகரத்தை கால புருஷ 9 ஆமதிபதி குரு 5 ஆம் பார்வையாக கன்னியில் இருந்து பார்க்கிறார். இதனால் இவர் உயர் கல்விக்கு வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். இதன்படி பரிவர்த்தனை செவ்வாய் தசையில் ஜாதகர் அமெரிக்கா சென்றார். புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு மீனம் வரும் குரு, அதே பரிவர்த்தனையால் மீனத்திலிருந்து கன்னிக்கு வந்து உச்சம் பெறும் புதனை நேர் பார்வை பார்ப்பார். இவ்வமைப்புகள் ஜாதகர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று சிறப்பாக கல்வியை முடிப்பார் என்பதும் புரிகிறது. இதன்படி தாய் நாடான இந்தியாவின் பொறியியலில் இளங்கலை கல்வியை முடித்தவர். முதுகலையில் கணினி அறிவியலை அமெரிக்காவில் முடித்து, அங்கேயே ஒரு நிறுவனத்தில் தரவு மேலாண்மையில் முதல் நிலை பணியாளராக பணிபுரிகிறார்.

தசாம்சத்தில் தரவுகளை (Datas) குறிப்பிடும் புதன், மேலாண்மையை குறிப்பிடும் செவ்வாயுடன் இணைவு பெற்றதால் ஜாதகர் தரவு மேலாண்மைத் துறையில் பணிபுரிகிறார். தாது ராசியான மேஷத்தில் ஜீவ ராசியாதிபதி புதன் தொடர்பு பகையானது. மேஷ ஆட்சி செவ்வாயின் அதிகாரம் புதனின் அறிவை கட்டுப்படுத்திவிடும். இங்கு அதிகாரமே பேசும். அறிவிற்கு இரண்டாமிடமே. ஆனால் அறிவை நிர்வகிக்க மட்டும் ஜாதகருக்கு கொடுப்பிணை உள்ளது. ஜீவ ராசிக்குரிய புதியன படைத்தல் என்பது இங்கு இருக்காது. இத்தகைய ஜாதகர்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்குச் சென்றாலும் அங்கு அவர்களின் அடிமைகளாக மட்டுமே பணிபுரிவர். இவர்களால் புதியனவற்றை உருவாக்க எந்த தசா-புக்தியிலும் முடியாது. Make in India உருவாக்கத்திற்கு இவர்கள் பயனற்றவர்கள்.

கீழே இரண்டாவதாத ஒரு பெண்ணின் ஜாதகம்.

DHAKSHANA.png

கும்ப லக்ன ஜாதகத்தில் 6 ஆமதிபதி சந்திரன் அமைவு ஜாதகிக்கு உள்ள தாய்நாட்டுப் பற்றையும், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் ஒருங்கே குறிப்பிடுகிறது. ஆரோக்கிய ஸ்தானமான 5 ஆமிடத்தில் கால புருஷ ஐந்தாமதிபதி சூரியனுடன் புதனும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். சூரியனை விட்டு பல பாகைகள் விலகியுள்ளதால் புதனும் சுக்கிரனும் அஸ்தங்கமடையவில்லை. விருட்சிக குரு சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து, மீனச் சனி குருவின் பூரட்டாதியில் நின்று நட்சத்திரப் பரிவர்த்தனையில் உள்ளனர். குரு உயிரியலை குறிப்பிடும் கிரகம். சனி தசையில்  குருவின் புனர்பூஷத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் ஜாதகி இளங்கலையில் பொறியியலில் Bio Medical Engineering படித்தார். (குரு உயிரியல், 5 ஆமிடம் மருத்துவம், சனி வக்கிரம் பொறியியல்)  உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமதிபதி சுக்கிரன் அமெரிக்காவை குறிப்பிடும் மிதுன ராசியில் அமைந்ததால் இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்று முதுகலையில் நிர்வாகவியல் (MBA) படித்தார். சூரியனுடன் 9 ஆமதிபதி இணைந்துள்ளதாலும் சூரியனே பாகை அடிப்படையில் புதன், சுக்கிரனைவிட அதிக பாகை சென்றுள்ளதாலும் ஜாதகிக்கு சுக்கிர புக்தி முடிந்து சூரிய புக்தி வந்தவுடன் முதுகலையில் சூரியன் குறிப்பிடும் நிர்வாகவியல் படித்தார்.

தசாம்சத்தில் சனி, குரு, புதன் ஆகியவை நீர் ராசியான விருட்சிகத்தில் நிற்பது ஜாதகிக்கு கடல் கடந்த தேசத்தில் பணிபுரியும் வாய்ப்பை குறிக்கிறது. ஜாதகிக்கு சனி தசை முடிந்து புதன் தசையில் அமெரிக்காவிலேயே புதன் குறிப்பிடும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைத்தது.

ஜாதகிக்கு ராசிச் சக்கரப்படி ஜீவ ராசியான மிதுன ராசியில் தனது நட்புக் கிரகங்களுடன் இணைந்து ஆட்சி பெற்ற புதனின் தசை 2௦39 வரை உள்ளது. அதுவரை ஜாதகிக்கு புதியன படைக்கும் ஆற்றல் சிறப்பாக இருக்கும். இத்தகைய ஜாதகர்களை அடையாளம் கண்டு இவர்களது மேலை நாட்டு தொழில்நுட்ப அனுபவங்களை இந்தியாவிற்கு பயன்படும்படி வாய்ப்புகளை பாரதத்திலேயே அமைத்துக்கொடுத்தால் இவர்களால் இந்தியா மாபெரும் வல்லரசாக உருவாகும் வாய்ப்புண்டு. தசாநாதர் புதன், அரசாங்கத்தை குறிக்கும் சூரியனுடன் இணைந்துள்ளதால் இவர் நமது இந்திய அரசாங்கத்திற்கு சேவை செய்ய தயாராக இருப்பார். தாய் நாட்டை குறிக்கும் சந்திரன் லக்னத்திலேயே அமைந்ததால் ஜாதகிக்கு தாய் நாட்டுப் பற்றும் அதிகமிருக்குக்கும். இத்தகைய தகுதியும், தேசப் பற்றும் மேலைத் தொழில் நுட்ப அனுபவ அறிவும் உள்ள பாரதத் தாயின் தவப் புதல்வர்களை Make in India திட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளை தொழில் நுட்பங்களுக்காக சார்ந்திராமல், இந்தியாவிலேயே அவற்றை உருவாக்கம் செய்ய இயலும்.

                      

                             ஜெய் ஹிந்த்!

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Wednesday, 15 July 2015

காலனால் அழிக்க இயலாத காவியம்.


       கண்ணீர் அஞ்சலி                                          



                                                        M.S.விஸ்வநாதன்                      
                                                               1928 - 2015

கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசிக்குள் எப்போது சனி பகவான் பிரவேசித்தாரோ அப்போதிருந்தே துலாம் ராசி குறிப்பிடும்  நீதித்துறையும், பெண்களின் பாதுகாப்பும், கலைத்துறையும் கடுமையான பல சோதனைகளையும் இழப்புகளை சந்தித்துவருகிறது. உச்ச சனியுடன் ராகுவும் துலாம் ராசிக்குள் சென்று இணைந்ததிலிருந்து காலம் தனது கோரதாண்டவத்தை ஆடிவருகிறது. இப்போது சனியும் ராகுவும் துலாம்  ராசியை விட்டு விலகிவிட்டாலும் துலாம் ராசிக்கு இருபுறமும் அவை நிற்பதால் கடுமையான பாவகர்த்தாரி யோகத்தில் துலாம் ராசி அகப்பட்டுக்கொண்டுள்ளது. தராசுத்தட்டு தடுமாரிக்கொண்டிருக்கிறது.நீதி சாமான்யனுக்கல்ல என்ற நிலை தோன்றிவிட்டது குறித்த விரக்தி அடித்தட்டு மக்களிடையே பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தியத் திருநாட்டில் நீதித்துறை மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தங்களது குடும்பம் மற்றும் பெண்கள் குறித்த அச்சத்திற்கு இடையே வாழ்ந்துவருகிறான் இந்தியப் பாமரன். 

துலாம் ராசி குறிக்கும் தமிழகத்து மக்களுக்கு இந்த காலகட்டத்தை கடந்து வருவது பெரிய வேதனை.நல்ல கலைகளில் மனிதன் தனது வேதனைகளை மறக்கிறான்.  திரைத்துறையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுவரும் இழப்புகள் அதீதமானவை. 

தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தாங்கள் பால்யத்தில் கேட்டு பார்த்து மகிழ்ந்த நல்லிசையை மனதில் அசைபோடுவதுதான்.  நல்ல திரைப்படங்களை, நல்ல கலைஞர்களை போற்றும் தமிழன் அத்தகைய கலைஞர்களின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என மகிழ்கின்றான். 

இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும் என எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடுவேன்.  நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க இயலாமல் சிறுவயதில் தாயுடன் உயிரை நீர்நிலையில் குதித்து மாய்த்துக்கொள்ள இருந்த நிலையில் கடைசி வினாடியில் காப்பாற்றப்பட்டனர் M.S.விஸ்வநாதனும் அவரது தாயாரும். காரணம் காலம் அவருக்கு அளித்திருந்த கடமை. 

இப்போது படைப்பின் காரணத்தை நிறைவு செய்து மீண்டும் இறைவனின் பொற்பாதங்களில் சென்று சேர இருக்கிறது M.S.V. யின் ஆன்மா. 

காலம் அவரது உயிரை பறித்துவிட்டது.

 ஆனால் அவரது இசை தமிழ் சினிமா வாழும்வரை உயிரோடிருக்கும்.
அதை காலனால் அளிக்க இயலாது.

ஆம் M.S.V காலனால் அளிக்க இயலாத காவியம்.


கனத்த இதயத்துடன்,

அன்பன்,
பழனியப்பன்.

Friday, 22 February 2013

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பதற்கான ஜோதிட விளக்கம்


                
ஆடி மாதம் பிறந்ததும் புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கம் நமது இந்து தர்மத்தில் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடிக்கப்படும் அவசியமான ஒரு வழக்கமாகும். ஆடிமாதத்தில் இப்படி ஒரு நடை முறையை தற்போதைய புதுமணத் தம்பதியரிடம் கூறினால், தற்காலக் கணவன்மார்கள் யாரிதைக்கூரிய ஜோதிடன் என்று ஜோதிடரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் தமது வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வை முன்னிட்டே இவ்வழக்கத்தினை கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன். தற்காலத்தில் இம்மண்ணின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய மரபுகள் மறைந்து வருவதும் தற்காலத்திய பல குடும்ப அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.  

           
ஆடிமாதம் தம்பதியர் இணைந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் வெயில் காலத்தில் தாயும் சேயும் சிரமப்படுவர் என்பதால் இத்தகைய ஒரு மரபு கடை பிடிக்கப்பட்டிருக்கலம் என்பது சாதாரணமாக மக்களின் கருத்து. இதில் ஜோதிடர்களின் கருத்து என்ன? சித்திரை மாதத்தில் தலைச்சன் குழந்தையாக ஆண் குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் அது தகப்பனுக்கு ஆகாது. அப்படிப் பிறந்தால் குழந்தையின் தந்தை எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அணைத்தையும் இழந்து சாதாரண நிலைக்கு வந்து விடுவது கண்கூடு என்பர். இது உண்மையே. ஆனால் இதன் பிண்ணனியை ஜோதிடர்கள் கூட ஆராய்ந்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க ஜோதிடத்தை கடுமையாக விமர்சித்துக் கற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் இதை ஆராய்ந்து பார்க்க ஏனையோரை அழைக்கிறேன்.


                            
     
படம் விஜய வருடம் சித்திரை மாதம் 12ஆம் தேதி (25.04.2013) அன்று சந்திரன் துலாத்தில் இருப்பதை காட்டுகிறது.

ஜோதிடக் கணக்கீட்டு முறையில் சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசி மண்டலத்திலும் 3,4 ஆம் பாதங்கள் துலாம் ராசி மண்டலத்திலும் அமைந்திருக்கும். சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் உச்ச கதியில் இருக்கும் போது மேஷ ராசிக்கு சுகஸ்தான ராசி நாதனான சந்திரன், சூரியனின் நீச்ச ராசியான துலாத்தில் சூரியனுக்கு வீடு கொடுத்த செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில்  சஞ்சரிப்பது சூரியனுக்கு கடுமையான பாதிப்புகளை கொடுக்கும். அதாவது சூரியனின் அம்சமான தந்தை தனது சுகங்களை இழந்துவிடுவார்.அது மட்டுமல்ல சந்திரன் அப்படி அமரும் சித்திரை நட்சத்திரத்திற்கு அதிபதியானவரும் சூரியனுக்கு வீடு கொடுத்தவருமான செவ்வாயானவர் சந்திரனின் கடக ராசியில்தான் நீச்சமாகிறார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

சூரியன் முதன்மைக் கிரகம் என்பதும் தலைமைப் பண்புக்கான கிரகம் என்பதாலும் இந்த விதி முதலாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு (தலைச்சன் ஆண் குழந்தை) மட்டுமே பொருந்தும். இரண்டாவது ஆண் குழந்தையாலோ அல்லது முதல் மற்றும் இரண்டாவது பெண் குழந்தைகளாலோ தந்தைக்கு இவ்வித பாதிப்பு ஏற்படுவதில்லை. இவ்வரிய உண்மையை நன்கு ஆராய்ந்தே நம் முன்னோர்கள் தமது சந்ததியினர் இத்தகைய கிரகச் சூழ்நிலையில் குழந்தை பெற வாய்ப்புள்ள சித்திரை மாதத்தில் குழந்தை பெறாமல் இருக்க ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை உணரலாம். நவீன வசதிகளற்ற அக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் எத்தனை குடும்பங்களை ஆராய்ந்து பார்த்து இத்தகைய உண்மைகளை நமது முன்னோர்கள் நமக்குக் கூறியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.இயற்கை அளிக்கும் வாழ்க்கைச் சிக்கலில் இருந்து விடுபட எத்தகைய எளிய முறைகளை நமது முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து வியப்படையந்தேன்.  எனவே நமது  சந்ததியினரின் நல்வாழ்வின் பொருட்டு இந்த மரபை விட்டுவிடாது தொடர்ந்து  கடை பிடிக்க வழி செய்ய வேண்டும்.               

வாழ்த்துக்களுடன்,
ழனியப்பன்.