Friday 19 November 2021

ஜோதிட நுணுக்கங்கள் வலைமனை

வாசக அன்பர்களுக்கு வணக்கம்.


எனது பதிவுகளை புதிய எனது வலைமனையில் (Website) தொடர்ந்து படிக்க    இங்கு சொடுக்கவும் 

என்றும் உங்களுடன்,

உங்கள் அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Wednesday 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501