Showing posts with label பாவகப்புள்ளிகள். Show all posts
Showing posts with label பாவகப்புள்ளிகள். Show all posts

Wednesday, 13 November 2019

திரிகோண நுட்பங்கள்


ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி எந்த கிரக சாரத்தில் அமைகிறதோ அதே கிரக சாரம்தான் அந்த பாவகத்தின் 5 மற்றும் 9 ஆவது பாவக புள்ளியாகவும் அமையும். இப்படி அமைவதை ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்மம் என ஜோதிடத்தில் அழைக்கிறோம். 12 பாவங்களையும் மேற்கண்ட அடிப்படையில் நான்கு வகையில் பிரிக்கலாம். இந்த அடிப்படையில் லக்ன திரிகோணங்களை தர்ம திரிகோணங்கள் என்றும் 2 ஆம் பாவ திரிகோணங்கள் கர்ம திரிகோணங்கள் எனவும் மூன்றாம் பாவ திரிகோணங்கள் காம திரிகோணங்கள் எனவும் நான்காம் பாவ திரிகோணங்கள் மோட்ச திரிகோணங்கள் எனவும் அழைக்கிறோம். இவை ஒருவர் கடைப்பிடிக்கும் தர்மம், பொருளீட்டளுக்கான அவரது கர்மம், அவரது இல்லற ஈடுபாடு, இறுதியாக அவரது மோட்ச நிலை ஆகியவற்றை ஆராய இந்த திரிகோணங்கள் உதவுகின்றன.

முதலாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.



ஜாதகத்தில் 1, 5, 9 பாவங்கள் தர்ம திரிகோணங்கள் எனப்படும். ஒருவரது சிந்தனையும் செயல்களும் எதை நோக்கிய வகையில் இருக்கும் என்பதை இதனைக்கொண்டு அளவிடலாம். ராகு கேதுக்களுக்கு தனிப்பட்ட காரகங்கள் கிடையாது அவை நின்றபாவப்படியும் அவை இணைந்த கிரகங்களின் காரகங்களையும் கிரகித்தே அவை செயல்படும். தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது சூரியனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகர் அரசின் உயர்பதவியை நோக்கிய சிந்தனையை ஏற்படுத்திகொண்து ஒரே குறிக்கோளாக செயல்பட்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் (IAS) வென்றிபெற்றார்.

இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


ஜாதகத்தில் பொருளாதாரத்தை குறிக்கும் கர்மத்திரிகோணங்கள் எனப்படுபவை 2 ம் அதன் திரிகோணங்களான 6, 1௦ ஆகும். ரிஷப லக்னத்திற்கு 2 ஆம் பாவாதிபதியும் முதல் கர்மத் திரிகோணாதிபதியுமான புதன் உச்ச சுக்கிரன், ஆட்சி குரு மற்றும் ராகுவுடன் இனைந்து நீச பங்கம் பெறுகிறார். லக்னாதிபதியே இரண்டாவது கர்ம திரிகோணமான துலாமின் அதிபதியும் ஆகி உச்சமாகி லாப ஸ்தானத்தில் குரு, புதன், ராகு தொடர்பு பெறுகிறார். மூன்றாவது கர்ம திரிகோணத்தில்தான் இதர 2 திரிகோணாதிபதிகள் தொடர்பு பெறுகிறார்கள். ஜாதகர் குரு, புதன் குறிப்பிடும் ஆசிரியராக பணிபுரிந்து பொருளீட்டுகிறார். இதற்கு லக்னாதிபதி சுக்கிரன் குருவின் வீட்டில் குருவின் பூரட்டாதியில் நின்று உச்சமானதும், ஜீவன காரகன் சனி விருட்சிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்பதும் ஒரு காரணம்.

மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகம். லக்னத்திற்கு 3, 7, 11 ஆகிய பாவங்கள் காமத்திரிகோணங்கள் எனப்படும். முதலாவது காமத்திரிகோணமான மீனத்தின் பாவக துவக்கப்ப்புள்ளி புதனின் ரேவதி நட்சத்திரத்திலும்  2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தின் துவக்கப்புள்ளி புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும் மூன்றாவது காமத்திரிகோணமான விருட்சிகத்தின் துவக்கப்புள்ளி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் அமைந்துள்ளது. புதன் 2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தில் லக்னத்திற்கு இரண்டில் நிற்கும் குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. காதலை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியும் குடும்ப பாவாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் காதல் காரகன் புதனுடன் இணைந்து களத்திர ஸ்தானத்தில் நிற்கிறது.

ஜாதகி காதல் திருமணம் புரிந்துகொண்டவர்.

நான்காவதாக கீழே ஆணின் ஒரு ஜாதகம்.


கன்னி லக்னம். லக்னாதிபதி புதன் கால புருஷனுக்கு  8 ஆமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து நிற்கிறது. 8 ஆமிடம் என்பது மறைபொருள் என்பதையும் அது கால புருஷனின் 2 ஆவது மோட்ச பாவம் என்பதையும் நாம் அறிவோம். இப்படி கால புருஷனின் இரண்டாவது மோட்ச பாவத்தில் அமைந்த லக்னாதிபதி புதனை லக்னத்தின் இரண்டாவது மோட்ச பாவாதிபதியும் புதனின் ராசிநாதனுமான செவ்வாய் மேஷத்தில் ஆட்சிபெற்று ௮ ஆவது பார்வையால் பார்க்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இது மோட்சம் நோக்கிய ஜாதகரின் உறுதியை தெரிவிக்கும். லக்னத்திற்கு மோட்ச பாவங்கள் எனப்படுபவை 4, 8, 12 ஆகியவை ஆகும். முதல் மோட்ச திரிகோணமான தனுசுவில் மறை பொருளை குறிப்பிடும் ராகுவுடன் மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடாதிபதி சூரியன் இணைந்துள்ளது. 2 ஆவது மோட்ச பாவமான 8 ஆமிடத்தில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது.  மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடத்தை ஆன்மீக கிரகங்களில் ஒன்றான பரம சுபன் குரு பார்க்கிறார். இரண்டாவது மோட்ச பாவம் மேஷத்தையும் மூன்றாவது மோட்ச பாவமான சிம்மத்தையும் ஞான காரகன் கேது தனது மூன்றாவது பார்வையால் கட்டுப்படுத்துகிறார்.

ஜாதகர் உலகம் போற்றும் மிகச்சிறத்த ஆன்மீக குரு பகவான் ரமண மகரிஷி ஆவார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Tuesday, 5 March 2019

பாவகப் புள்ளி ஆச்சரியங்கள்?


ஜாதகத்தில் ஒரு பாவக பலனை அல்லது ஒரு கிரகம் செயல்படுவதை நிர்ணயிக்க பல்வேறு யுக்திகள் ஜோதிட அறிஞர்களால் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒவ்வொரு முறையும் ஒரு தனிச்சிறப்பைக் கொண்டிருக்கும். ஜாதக பலன்களை நிர்ணயிப்பதற்கு பல்வேறு முறைகளில் ஆராய்ந்து அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக  தெரியும் சூழலில் ஜோதிடர் திகைத்து நிற்பதும் உண்டு. பெரும்பாலான ஜோதிடர்கள் கையாள்வது திசா புக்தி நிலையோடு கோட்சாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து பலன் சொல்வதுதான். ஜாதகம் காட்டும் சூழலில் ஜாதகர் தோற்றம் அமைப்பு, வேலை போன்றவைகளை உறுதி செய்துகொண்டு ஜோதிடர்கள் பலன் கூறுவர். இதிலும் ஒரு சிக்கல் உண்டு ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டிருக்காவிட்டாலும் ஜனன நேரம் தவறுதலாக குறிக்கப்பட்டிருந்தாலும் பலன் கூற முடியாத சூழலில் நாடி முறைகளை அனுசரித்து பலன் கூறுவது ஒரு முறை.



இப்பதிவில் நாம் பல்வேறு ஜாதக அலசல் யுக்திகளில் ஒன்றான ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி அமைந்த நட்சத்திர நாதனைக்கொண்டு அந்த பாவகத்தின் பலனை அலசும் முறை பற்றி காண இருக்கிறோம். K.P முறையில் உப நட்சத்திரத்தை கொண்டு பாவகப் புள்ளியை வைத்து பலன் நிர்ணயிப்பவர்கள் “சார ஜோதிடம்” என்று இம்முறையை அழைக்கிறார்கள்.  நாம் இங்கு K.P உப நட்சத்திர முறையை தவிர்த்து பாரம்பரிய முறையில் அதாவது பாவகப்புள்ளி விழுந்த நட்சத்திர நாதனைகொண்டு  பலன் நிர்ணயிக்கும் முறையை காண்போம்.



மேற்கண்ட ஜாதகர் ஒரு ஆண். இவருக்கு லக்னம் மகரத்தில் 12.21 பாகையில் திருவோணம் முதல் பாதத்தில் அமைந்துள்ளத்து. இவரது ஜீவன கர்மா என்னவென்று பார்ப்போம். இவருக்கு 10 ஆவது பாவகம் துலாமின் தொடக்கப்புள்ளி ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைகிறது. ராகு கடக ராசியில் அமைந்துள்ளார். ஜாதகர் கடல் கடந்த தொடர்பில் ஜீவனம் செய்கிறார் என்பதை இது குறிக்கிறது. ராகு புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளதால் ஜாதகர் புதன் குறிக்கும் தகவல் தொழில் நுட்பவியலாளராக பணிபுரிவதை இது குறிப்பிடும். சனியின் நிலையை கொண்டும் இதை அனுமானிக்கலாம் என்றாலும் இம்முறையால் சனியை தொடர்புபடுத்தி உறுதி செய்துகொள்ளலாம்.

இரண்டாவதாக கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


லக்னம் 23 பாகையில் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. எனவே இரண்டாவது பாவகப்புள்ளி சிம்மத்தில் 23 பாகை லக்ன பாதகாதிபதியான சுக்கிரனின் பூரத்தில்  அமையும். 2 ஆமிடத்தில் பிரிவினையை குறிப்பிடும் கேது அமைந்து விரையாதிபதி  புதனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. பாதகாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் சேர்ந்து விரையத்தில் அமைந்து 2 ஆமதிபதி சூரியன் 2க்கு விரையத்தில்  லக்னத்தில் விரையாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதும் 2 ஆமிடம் கடுமையாக இந்த ஜாதகிக்கு பாதிக்கும் எனவும் அது கர்ம வினை என்பதையும் தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது. எப்போது குடும்ப பாவம் பாதிக்கும் என்பதை திசா புக்திகளை கொண்டு அறியவேண்டும். இந்த ஜாதகிக்கு 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் சாரம் பெற்ற சனி திசையில் புதன் புக்தியில் திருமணம் நடந்து கேது புக்தியில் விவாகரத்தானது.

கீழே மற்றொரு நபரின் ஜாதகம்.


லக்னப்புள்ளி துலாத்தில் 26 பாகையில் அமைகிறது. ஜாதகருக்கு புதன் திசை நடக்கிறது. திசை பாவகப்புள்ளியை சார்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை இந்த ஜாதகம் கொண்டு ஆராய்வோம். ஜாதகருக்கு புதன் நிற்கும் 10 ஆவது பாவக துவக்கப்புள்ளி புதனின் சொந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் அமைகிறது. ஜாதகருக்கு திசை நடத்தும் கிரகமும் புதன் என்பதால் புதன் தனது திசா காலம் முழுவதும் தனது, காரக, ஆதிபத்திய பலன்களை தான் நிற்கும் 10 ஆவது பாவம் சார்ந்து அழுத்தம் திருத்தமாக வழங்கும் எனலாம். திசா நாதன் புதன்  சூரியனோடு இணைந்திருப்பதால் உயர்ந்த நிலையிலான பணி. உச்ச குருவோடு சேர்ந்திருப்பதால் நிறைந்த தனம் புழங்குமிடத்திலும் கடக ராசி என்பதால் வெளிநாட்டுத் தொடர்புடன் கூடிய  நிறுவனத்திலும் பணி. உச்ச குரு குறிப்பிடும் ஆயுள் காப்பீட்டுத்துறையில் உயர்நிலை வரவு செலவு தணிக்கையாளராக  ஜாதகர் பணிபுரிகிறார். 

புதன் கால புருஷனுக்கு 6 ஆமிடாதிபதி மற்றும் லக்னத்துக்கு 9 ஆமாதிபதி என்பதாலும் ஜாதகர் தந்தை வழி பூர்வீக பூமி வகையில் விவகாரங்களை சந்தித்தார். 9 ஆம் பாவாதிபதியான புதன் லக்ன பாதகாதிபதி சூரியன் குருவோடு இணைந்து திசை நடத்வதால் ஜாதகரின் தந்தைக்கு உயிர் கொல்லி நோயான புற்றுநோய்  வந்து மரணத்தை தந்தது. (9 ஆமதிபதி + குரு + சூரியன் இணைவு தந்தைக்கு புற்றுநோயை தரும்). கடக ராசியில் புதன் நின்று பாதகாதிபதி, ரோகாதிபதி தொடர்பு கொண்டு திசை நடத்துவதால் தந்தை வழி பாரம்பரிய ரத்த தொடர்புடைய வியாதியான சர்க்கரை வியாதிக்கு ஜாதகர் ஆட்பட்டார். 

புதன் இளைய சகோதரியையும் சுக்கிரன் மூத்த சகோதரியையும் குறிக்கும். புதன் பாதகாதிபதி சூரியன் மற்றும் சகோதர-சத்ரு ஸ்தானாதிபதி குருவோடு தொடர்புகொண்டு திசை நடந்துவதாலும் சகோதர சகோதரிகள் வகையில் ஜாதகருக்கு அதிருப்தி உண்டு. முதல் மகளை குறிப்பிடும் சுக்கிரன் பாதகம் பெற்று அமர்ந்ததாலும்  முதல் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 6 அமர்ந்து புதன் திசை நடத்துவதாலும் ஜாதகரின் முதன் பெண் மகளோடு ஜாதகருக்கு சரியான புரிதல் இல்லை.

ஒரு ஜோதிடர் ஜாதக பலன்களை நிர்ணயம் செய்ய எவ்வளவு முறைகளை பயன்படுதினாலும் எந்த அளவு அவற்றில் தனது திறமையை, சுய ஆய்வை, அனுபவத்தை பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவரை வெற்றிகரமான ஜோதிராக உருவெடுக்கிறார் என்பதை மறத்தல்  கூடாது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501.