Showing posts with label நவாம்சம். Show all posts
Showing posts with label நவாம்சம். Show all posts

Thursday, 8 July 2021

மணி அடிச்சா சோறு! இது மாமியாரு வீடு!

சமீபத்தில் திருமணத்திற்காக ஆராய்ந்த ஒரு ஜாதகத்தில் ஜாதகியின் பெற்றோர் தங்களது ஒரே மகளை பிரிய மனமின்றி, வீட்டோடு மாப்பிள்ளையாக வர வாய்ப்புள்ள வரனை தேர்வு செய்து தருமாறு கேட்டுக்கொண்டு வரங்களின் ஜாதகங்களை கொடுத்தனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கும் இக்காலத்தில் பெண்களை இல்லத்து லக்ஷ்மிகளாக நடத்தாமல் வரதட்சினை உள்ளிட்ட பல வகைகளில் கொடுமைப்படுத்தும் குடும்பத்து வரன்களுக்கே இது போன்று நிலை ஏற்படும் என்று பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளது. பெண் என்பவள் குடும்பத்தை வளர்ச்சியுறச் செய்பவள், இல்லத்து லக்ஷ்மி. “லக்ஷ்மியின் வடிவமான பெண்ணை பாதுகாக்காமல் தூஷிப்பவனில் இல்லத்திலிருந்து லக்ஷ்மி தேவி வெளியேறுகிறாள். பதிலாக அங்கு மூதேவி குடியேறுகிறாள்” என்று ஸ்ரீ தேவி பாகவதம் உள்ளிட்ட பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.  பெண்கள் கல்வியில் முன்னேறி ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கும் இக்காலத்தில் ராமன் இருக்குமிடம் அயோத்தி எனும் பழங்கால நிலைகள் மாறிவருவது வருந்தத்தக்கது. இப்படி வீட்டோடு மாப்பிள்ளைகளாக செல்லும் ஆண்களுக்கான ஜாதக அமைப்பு என்ன? என ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.  

ஜாதகத்தில் லக்னம் ஜாதகரின் நிலையை சொல்லும் என்றால், 7 ஆமிடம் களத்திரத்தின் நிலையை சொல்லும். 2 ஆமிடம் ஜாதகரின் குடும்ப நிலையை  சொல்லும் என்றால், களத்திரத்தின் குடும்பத்தை பற்றிய விபரங்களை 7 க்கு 2 ஆமிடமான 8 ஆமிடம் சொல்லும். லக்னத்திற்கு 7 ஆமதிபதி சூரியன் லக்னத்திலும், ராசிக்கு 7 ஆமதிபதி சந்திரன் ராசியிலும் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது ஜாதகரின் மேல் மனைவியின், ஆளுமையும் ஆதிக்கமும் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. அதே சமயம் சூரிய சந்திரர்களே லக்னத்திற்கும் ராசிக்கும் 7 ஆமதிபதிகளாகி லக்னம், ராசியில் வந்து அமைவது, மனைவி வந்த பிறகு ஜாதகர் தாய், தந்தையை விட்டு விலகுவார் என்பதை குறிக்கிறது. லக்னத்தோடு தொடர்புடைய கிரக காரக உறவுகளை ஒரு ஜாதகர் எந்த சூழலிலும் இழக்க மாட்டார். ஆனால் அவை 7 ஆம் பாவாதிபதியாகி லக்னம், ராசியில் வந்து அமர்வதால் மனைவி வந்த பிறகு ஜாதகர் 7 ஆமதிபதியின் ஆளுகைக்கு ஜாதகர் முழுமையாக சென்றுவிடுவார். ஆனால் அந்த காரக உறவுகளை விட்டுகொடுக்க மாட்டார். இங்கு கடக ராசிக்குரிய சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 12 ல் சுக்கிரன், செவ்வாயோடு மறைகிறார். இது தாயாரையும், சகோதரனையும் விட்டு ஜாதகர் விலகுவதை குறிக்கும். சுக்கிரன் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் பாவாதிபதி சூரியன் லக்னத்தில் வந்து அமர்வதால் மனைவியையும், தந்தையையும் விட்டு ஜாதகர் பிரிய மாட்டார்.  ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் மனைவி வந்த பிறகு ஜாதகர் மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி சென்றுவிட்டார். ஒரே ஊரில் உள்ள தந்தை, தாயையும், சகோதரனையும் அவ்வப்போது வந்து கவனித்துக்கொள்கிறார்.  

ஜாதகத்தில் 8 ஆமதிபதி புதன் லக்னத்திற்கு 2 ஆமிடத்தில் நீச நிலை பெற்று அமைந்துள்ளது. அதே சமயம் 2 ஆமதிபதி குரு 7 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று அமைந்துள்ளது. இந்த அமைப்பு ஜாதகரின் வீட்டின் பொருளாதார சூழலைவிட மனைவி வீட்டின் பொருளாதார சூழல் அதிகம் என்பதை குறிப்பிடுகிறது. 2 ஆமிடத்தில் புதன் அமைந்துள்ளது ஜாதகர் புதனின் காரகதுவமான வியாபாரம் தொடர்புடைய கமிஷன், தரகு, ஏஜென்சி போன்றவற்றில் ஈடுபடுவதையும்  ஜாதகரின் வீட்டில் ஒரு கல்வியாளர் மூலம் வருமானம் வருவதையும் குறிப்பிடுகிறது. ஜாதகரின் தாயார் ஒரு ஆசிரியை. சிம்ம ராசியும் சூரியனும் சுயமாக தொழில் புரிபவர்களை குறிக்கும். சூரியன் லக்னத்தில் வந்து அமைந்ததால் ஜாதகருக்கு திருமணமான பிறகு இந்த அமைப்பு ஜாதகரை தொழில்களை நிர்வகிக்கும் நிர்வாகியாக உயர்த்துகிறது. நிர்வாகம் என்பது சூரியனின் காரகத்துவம். 7 ஆமதிபதி சூரியன் ஆனதால் திருமணமாகி மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாகிவிட்டார்.


நவாம்சத்தில் 7 ஆமிட குரு வர்கோத்தமமாகியுள்ளது கவனிக்கத்தக்கது. இது குடும்பம் அமைத்தபின் பொருளாதாரத்தை முன்னிட்ட விஷயத்தில் தனது தனிப்பட்ட விஷயங்களுக்காக ஜாதகர் தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகத்  தயங்கமாட்டார் என்பதை குறிப்பிடுகிறது. நவாம்சத்தில் 7 ஆமதிபதி குரு, 7 ஆமிடத்தை சிம்ம ராசியில் 3 ஆம் பாவத்தில் நின்று பார்க்கிறார். இதனால் களத்திர பாவம் வலுவடைகிறது. இது மனைவி ஆளுமையும், ஜாதகரை கட்டுப்படுத்தும் வல்லமையும் மிக்கவர் என்பதையும் தெரியப்படுத்துகிறது. 7 ஆமதிபதிக்கு வீடு கொடுத்த சூரியன் 1௦ ல் திக்பலம் பெற்று நிற்பது மனைவி வந்ததும் ஜாதகர் நிர்வாகியாக உயர்வார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.  

இந்த ஜாதகர் திருமணமான பிறகு மனைவியின் வீட்டோடு மாப்பிள்ளையாகி மனைவி வீட்டாரின் தொழில்களை நிர்வகிக்கிறார். நவாம்ச லக்னாதிபதி புதன், 2 ஆம் பாவமான கடகத்தில் சுக்கிரனோடு இணைவு பெற்றுள்ளது வருமான வகைகளில் கணவனும் மனைவியும் இணைந்து செயல்படுவார்கள் என்பதையும், இவற்றோடு சந்திரன் சேர்க்கை அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் தொடர்பான வியாபாரம் அது என்பதையும் குறிப்பிடுகிறது. (புதன்=தரகு,கமிசன், ஏஜென்சி & சந்திரன்=வியாபாரம், அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்). ராகு இவைகளோடு சேர்க்கை  பெறுவது அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களோடு பலதரப்பட்ட நவீன சாதனங்களையும் இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. 

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 29 December 2020

இன்னும் வாழ்க்கை மீதமிருக்கிறது!

 

அத்தப்பனும் அங்கயர்க்கன்னியும் பாரம்பரியமானதொரு சமூகத்தை சார்ந்தவர்கள். அத்தப்பன் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். இல்லறத்தை பொறுத்தவரை சிரமங்களற்ற வாழ்க்கை. அங்கயர்க்கன்னி தனது சமூகத்திற்கே உரிய வகையில் வீட்டை நிர்வகிப்பதில் நல்ல நிர்வாகியாக திகழ்கிறார். இவர்கள் இல்லறத்தில் விளைந்த முத்துக்களாக நல்ல குழந்தை செல்வத்தையும் பெற்றவர்கள். பொதுவாக ஒரு நல்ல சமூகத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறப்பதே ஒருவரது வாழ்வை பெரிய சிக்கலின்றி அனுபவித்துவிட பெரிதும் உதவும். இந்தக்கூற்று முழு உண்மையானால் இத்தகைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்வில் சிக்கலே இருக்கக்கூடாது. அப்படியானால் படைத்தவனுக்கு இவர்கள் வாழ்வில் என்ன வேலை?. நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாகவும் இருப்பது இன்றைய காலத்தில் அவசியம். நல்லவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிரார்கள். தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் அளிப்பது என்று நிம்மதியடைகிறார்கள்.   வல்லவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தங்களது வாழ்க்கைப்போராட்டத்தை துவங்குகிறார்கள். அவர்களுக்கு எந்தத்தோல்வி வந்தாலும் அது தங்களது இயலாமையினால் மட்டுமே என எண்ணித்துடிக்கிறார்கள். தங்களுக்கு மேலே ஒருவன் இருந்துகொண்டு தங்களை வழிநடத்துகிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதன் விளைவால் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்.



அத்தப்பன் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் நல்ல நிர்வாகியல்ல என்பதை திருமணமாகி சில நாட்களிலேயே அங்கயர்க்கன்னி உணர்ந்துவிட்டார். இதனால் குடும்ப நிர்வாகத்தோடு தங்களுக்கான வியாபாரத்தையும் தானே கவனிக்க வேண்டிய நிலையை அங்கயர்க்கன்னி உணர்ந்து அந்தப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார்.  இந்த சமயத்தில் ஒருவரது அறிவையும் பொறுப்புகளையும் மீறி விதி விளையாடும். அத்தப்பன்-அங்கயர்க்கன்னி வாழ்விலும் அது விளையாடியது. நல்லவர்களாக  இருந்துவிடுவதால் மட்டும் விதி மனிதர்களை விட்டு விடுவதில்லை. சோதனைகள் மூலம் அவர்களை வல்லவர்களாகவும் மாற்றுவதே அதன் வேலை. இப்படி வல்லவர்களாக மாறுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலைக்கு அனுபவம் என்று பெயர். அனுபவமே ஆசான். அனுபவமே இறை.

கீழே அங்கயர்க்கன்னியின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகம். லக்னாதிபதி ஆறாமிட தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இந்த ஜாதகத்தில்  இங்கு 6 ஆமிடாதிபதி சனியோடு லக்னாதிபதி புதன் பரிவர்தனையாகிறார். 6 , 1௦ இரண்டுமே பொருட்பாவங்கள் என்றாலும் தொழிலால் கடன் ஏற்படும் என்பதை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது.  லக்னத்திற்கு 7 ல் விரையாதிபதி சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெற்று நிற்கும் குரு, கணவர் வலுவற்றவர் என்பதை குறிக்கிறார். இப்படி களத்திராதிபதி அஸ்தங்கமாகி வலுவிழப்பது உபய லக்னத்திற்கு ஒருவகையில் நன்மையே. எப்படி எனில், 7 ல் சூரியன் குருவோடு இணைந்து லக்னத்தை பார்ப்பது, ஜாதகிக்கு திருமணமான பிறகு குடும்ப, தொழில்வகை நிர்வாகத்தையும் ஏற்பதால் லக்னாதிபதி வலுவடைவார். நவாம்சத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கடகத்தில் இணைந்து நிற்பது கணவன் மனைவி ஒற்றுமையை குறிக்கிறது. அதே சமயம் செவ்வாய் நீசம் பெற்று நீச சந்திரனோடு பரிவர்தனையாவதால் வலுவடைகிறது. நவாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை பெறுவதும் கணவனின் திறமை குறைவால் ஜாதகி நிர்வாகியாவார் என்பதை உறுதி செய்கிறது. லக்னப்புள்ளி உணவு காரகன் சந்திரனின் ஹஸ்தம்-4ல் அமைந்து,  சந்திரன் 1௦ ஆமிடத்தில் உள்ள சனியின் பூசம்-4 ல் நிற்கிறது. இதனால் இவர்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யும் இனிப்பு, காரம், சாக்லேட் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம். தசாம்சத்தில் 7 , 1௦ ஆமதிபதி புதன் நீசமாகி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து குரு, சூரியனின் பார்வையை பெறுகிறது. 1௦ ஆமதிபதி புதன் சந்திரனின் வீட்டில் சந்திரனுடன் இணைவதால் உணவு தொடர்புடைய தொழில் என்பதையும் சுக்கிரனும் குருவும் இணைந்த பார்வை புதனுக்கு கிடைப்பதால் இனிப்பு தொடர்புடைய தின்பண்டம் என்பதையும் இது குறிப்பிடுகிறது. கேதுவோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக புதனை பார்ப்பதால் கார வகைகளையும் இணைத்து விற்பனை செய்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது. (செவ்வாய்-காரம்). குரு நீசம் பெற்று சனியோடு பரிவர்த்தனை பெறுவதால் வருமானத்தில் தடைகள் ஏற்படும் என்பதும் இனிப்பை குறிக்கும் குரு பாதகாதிபதியானதும் மற்றொரு இனிப்பு கிரகம் சுக்கிரன் 8 ல் மறைந்ததும் இனிப்பு வகைகள் நஷ்டத்தை கொடுக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றன. ராசியிலும் தசாம்சதிலும் சந்திரன் கடகத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. குரு லக்ன பாதகாதிபதியாகி விரையாதிபதி சூரியனோடு இணைந்து 1௦ க்கு 1௦ ஆன 7 ல் நிற்கிறது. சுக்கிரன் ராசியின் பாதகாதிபதியாகி ராசிக்கு 1௦ ல் மேஷத்தில் நிற்கிறது. இதனால் இனிப்பு தொடர்புடைய வகையில் ஜாதகிக்கு லாபமிருக்காது என்பது தெளிவாகிறது.

2௦13 ல் ராசிக்கு 1௦ ல் நிற்கும் சுக்கிர திசையில் குரு புக்தியில் இந்தத்தொழிலை துவங்கி கடனுக்கு பொருள் கொடுத்து நெருக்கடிக்கிடையில்தான் இதுவரை தொழிலை செய்து வருகின்றனர். 6 ஆமதிபதியும் 1௦ ஆமதிபதியும் பரிவர்தனையாவதும் இவர் கடன் கொடுத்து வியாபரம் செய்ய காரணமாகிறது. வெளி நபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தங்கத்தின் காரக கிரகமான பாதகாதிபதி குரு 7ல் அஸ்தங்கமானதால் மாங்கல்யத்தைக்கூட அடமானம் வைத்துள்ளதாக ஜாதகி கண்ணீர் சிந்த தெரிவித்தார். வெளிநாட்டில் புகழ் பெற்ற இனிப்பு சாக்கலேட் ஒன்றிற்கு ஏஜென்சி எடுத்து அதில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் கார வகையை குறிக்கும் ராசியின் முதல்தர யோகாதிபதியான செவ்வாய்  ராசிக்கு 1௦ ஆமதிபதியாகிறார். அவர் மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் உச்சம் பெற்று ராசிக்கு 7 ல் நின்று சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு கார வகைகளில் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை என்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பூமிகாரகன் செவ்வாயால் இவர்களுக்கு 2 வீடுகளில் இருந்து வாடகை வருகிறது.

ஜாதகி தற்போது சுக்கிரதிசை புதன் புக்தியில் உள்ளார். 6 ஆமிடத்தோடு பரிவர்தனை பெறும் புதன், கடன் பாதிப்பை தருகிறார். லக்னாதிபதி புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகம் என்பதாலும் அது சனியோடு தொடர்பாவதாலும் ராசிக்கு 7 ல் சனியும் குருவும் தற்போது வந்துள்ளதாலும் தொழில் வகை ஆலோசனை கேட்டு ஜாதகி என்னை தொடர்புகொண்டார். செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக இருப்பதாலும் சுக்கிரனுக்கு 1௦ ல் செவ்வாய் இருப்பதாலும் இனிப்பு வகைகளில் முதலீடு செய்யாமல் காரவகை மட்டும் செய்து படிப்படியாக கொடுத்த கடனை வசூல் செய்துகொள்ளுமாறு சொல்லப்பட்டது. சந்திரன் மூன்று சக்கரங்களிலும் (நவாம்சத்தில் பரிவர்தனைக்குப்பிறகு) கடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் பேக்கரியை படிப்படியாக குறைத்துவிட்டு பதிலாக சந்திரன் குறிக்கும் மளிகை கடை (கடன் கொடுக்காமல்) நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செவ்வாயின் நிலையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் கடன் வசூலான பிறகு இருக்கும் இடத்தில் மேலும் இரு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் சொல்லப்பட்டது.   

ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவர் ஈடுபடும் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எத்தனை திறமை படைத்தவராயினும் ஒருவர் ஜாதகப்படி சாதகமற்ற தொழிலை தேர்ந்தெடுத்தால் தோல்வி நிச்சயம். ஜாதகரை வாட்டும் கிரகங்களைப்போலவே அவர்களை உயர்த்தும் கிரகங்களும் உண்டு. அத்தகைய கிரகங்களை அடையாளங்கண்டு அவை சார்ந்த வகைகளில் ஒருவர் ஈடுபடுவது அவரது வாழ்வை நிச்சயம் உயர்த்தும்.  


விரைவில் அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Thursday, 29 June 2017

நீ வருவாயென...


வாழ்க்கைத்துணை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு ஒரு ஆசை இருக்கும். ஆசைக்கும் கொடுப்பினைக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கையும் அதன் போராட்டமும்..


பொதுவாக வாழ்க்கைத்துணையின் திசையை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர் என்பதை தவிர இப்பதிவில் ஜாதக அமைப்பை வைத்து ஒருவரது வாழ்க்கைதுனைவரின் அம்சங்களை கண்டுகொள்ளது பற்றி அலசியிருக்கிறேன். 


மேற்கண்ட ஜாதகத்தில் வாழ்க்கைத்துணைவரை குறிக்கும் ஏழாமிடத்தில் குரு இருக்கிறார். ஏழாமதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

ஜாதகரின் மனைவி அரசு வங்கியில் பணி புரிகிறார். குடும்ப பாவம் குருவினுடையதாக இருப்பதால் குடும்ப உறவில் இணையும் மனைவி குருவின் காரகங்களுள் ஒன்றான தனம் புழங்கும் துறை சார்ந்தவர் என எடுத்துக்கொள்ளலாம். ஏழாமதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்ததால் ஜாதகரின் மனைவி அரசுப்பணியில் இருப்பார் என அனுமானிக்கலாம்.

நவாம்சம் திருமண பந்ததிற்காகவே விசேஷமாக ஆராயப்பட வேண்டும். ராசியில் 7 ஆமிடம் என்றால் நவாம்சத்தில் 9 ஆம் பாவம் கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் ராசியில் ஒருவருக்கு அளிக்கப்படும் பாக்கியங்களை தெளிவாக கண்டுகொள்ளவே நவாம்சம். நவாம்சம் பாக்கியஸ்தானத்தின் நீட்சி என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் மேற்கண்ட ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் சூரியன் நிற்பதால் வாழ்க்கைத்துணை சூரியனோடு தொடர்புடையவர். அதாவது அரசுப்பணியில் உள்ளவர் என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.  

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜல ராசியான விருச்சிகம் ஏழாமிடமாகி அதன் அதிபதி செவ்வாய் மற்றோர் ஜல ராசியான கடகத்தில் நீச நிலையில் உள்ளார். அதனை நீசமாகி வக்கிரமடைந்த ஜலக்கோளான குரு பார்வை செய்கிறார். எனவே ஜாதகிக்கு வாய்க்கும் கணவர் வெளிநாடு தொடர்புடையவர் என அனுமானிக்கலாம். செவ்வாய் நீசமும் குரு ராசியில் வலுவடைந்து நவாம்சத்தில் பலவீனமடைந்ததும்  ஜாதகிக்கு திருமணத்தில் ஏற்பட்ட தாமதத்தை குறிப்பிடுகின்றன.

நவாம்சத்தில் ஒன்பதாம் பாவத்தில் அமைந்த கேது ஒரு ஜலக்கோள் அத்துடன் ஒன்பதாம் பாவாதிபதி செவ்வாயும் வெளிநாட்டை குறிக்கும் ராகுவோடு தொடர்பில் இருப்பது கவனிக்கத்தக்கது. குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தில் ஜலக்கோள் சந்திரன் நிற்பது ஜாதகியின் குடும்ப வாழ்வு வெனிநாட்டில் என எடுத்துக்கொள்ளலாம்.

ராசியில் 7 (வாழ்க்கைத் துணை) ஆம் அதிபதியும் 12 (தாம்பத்யம் மற்றும் வெளிநாடு)  ஆம் அதிபதியுமான செவ்வாயின் திசையில் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாடு சென்றார். ஜல ராசியான கடகத்தில் வெளிநாடு செல்வதை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சனியின் பூசம்-3 ல் நிற்கிறார் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


ஜாதகி ஒரு மருத்துவர்.

ஜீவனத்தை குறிக்கும் 1௦ ஆமதிபதி புதன் சூரியன் மற்றும் செவ்வாயுடன் 9ல் கூடியுள்ளது. இம்மூன்றும் மருத்துவத்துடன் தொடர்புடைய கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன, குடும்ப பாவாதிபதியும் ஜீவன காரகனுமான சனி 7ல் மருத்துவ கிரகமான புதன் வீட்டில் நின்றது ஜாதகியின் ஜீவனம் மருத்துவம் மூலம் ஏற்படும் என்பதோடு குடும்பத்திற்கு வரும் கணவனும் மருத்துவனே என்பதை குறிப்பிடுகிறது.

ராசியில் ஏழாமதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்ததும் கணவரும் மருத்துவர் என்பதை உறுதி செய்கிறது. புதன், சூரியன், செவ்வாய் மூன்றும் மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜாதகியின் கணவர் புகழ் பெற்ற மருத்துவர்.

நவாம்சத்தில் லக்னத்திலேயே மருத்துவக கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் நின்று ஒன்பதாம் பாவாதிபதியும் ஒளஷத காரகன் எனப்படும் புதனாகி தன்வந்திரி எனப்படும் பிரதான மருத்துவ கிரகமான சூரியனுடன் இணைந்து 7 ல் நின்றது ஜாதகியின் கணவர் மருத்துவர் என்பதை தெளிவாக்குகிறது.

விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501

Sunday, 2 March 2014

நவாம்ச சக்கரத்தின் நுட்பங்கள்.

ஒரு மனிதனின் வாழ்வின் சம்பவங்களை ஜாதகக் கட்டத்தில் உள்ள 12 பாவங்கள் அதன் அதிபதிகள் மற்றும் தொடர்புடைய காரக கிரகங்களைக் கொண்டு அறியலாம்.

ஒரு பெண்ணின் மாதவிடாய் தொடர்புடைய விபரங்களை  5 ஆமிடம் அதன் அதிபதி ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். பெண் இயல்பை நிர்ணயிப்பதில் காரகன் சுக்கிரனுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. பெண்ணின் மாதவிடாயின் ஒழுங்கை செவ்வாய் நிர்ணயிக்கிறார். செவ்வாயை மாதவிடாய் காரகன் எனலாம். அவளுடைய குழந்தை பாக்கியத்தை குரு நிர்ணயிக்கிறார்.


மேற்கண்ட மகர லக்ன ஜாதகம்  7 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளில் முதல் பெண்ணின் ஜாதகம். பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் செவ்வாய் நீசமாகி வர்கோத்தமம் பெற்றதாலும்  ஐந்தாம் பாவதிபதி சுக்கிரன் குருவின்  பார்வை பெற்றதாலும்  ஜாதகியின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பில்லை.
நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் வர்கோத்தமம்  பெற்று வலுவாகவே உள்ளனர். புதன் நவாம்சத்தில் 5 ஆம் பாவதிபதி ஆகி நீசம் பெற்றது ஜாதகி படிப்பில் கெட்டிக்காரர் என்பதைக் குறிப்பிடும் அதே நேரம் அவர் உயர் கல்வி பெறும் நிலையில் கடின சூழ்நிலைகளைக் கடந்தாக வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. ஐந்தாமிடம் ஒருவரது நுண்ணறிவைக் குறிப்பிடுவதாகும். 9 ஆம் பாவம் உயர் கல்வியை குறிக்கும். 


இந்த இரண்டாவது ஜாதகம் 7 நிமிடத்திற்குப் பின் பிறந்த ஜாதகியின் தங்கையுடையது.

முதல் ஜாதகத்தை ஒப்பிடும்போது 2வது ஜாதகத்தில் நவாம்ச லக்னம் மட்டும் மாறியுள்ளது. உச்சமாகி வக்ரமடைந்த கிரகம் நீசத்திற்கு ஒப்பான பலனைத் தரவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நவாம்சத்தில் 5 ஆமிடத்தில் உள்ள சனி கெடுபலனைத் தரவேண்டியவராகிறார். இந்த ஜாதகிக்கு மாதவிடாய் சுழற்சியில் குறைபாடு உள்ளது. கல்வியில் சுமார்தான். நுண்ணறிவு இல்லை.  இந்த இரண்டிற்கும் காரணம் நவாம்சத்தில் ஐந்தாமிடத்தில் தோஷ நிலையில் அமைத்த சனிதான். முதல் ஜாதகத்தில் நவாம்சத்தில் ஆறாமிடத்தில் அமர்ந்து கெட்ட சனி நன்மையே செய்வார். ஆனால் இரண்டாம் ஜாதகத்தில் நவாம்சத்தில்  சனி புத்திர ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்ததால் ஜாதகிக்கு தோஷத்தை கொடுக்க வேண்டியவராகிறார்.   

இரு ஜாதகத்திலும் மாதுல காரகன் (தாய் மாமனைக் குறிப்பிடும் கிரகம்) 
புதன் நீசமானது ஜாதகிகளின்  தாய்மாமன் வாழ்வில் படும் துயரங்களைக் குறிப்பிடுகிறது. 


இந்த 3 ஆவது  ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம்.

இப்பெண்ணின் ஜாதகத்தில்  2 ஆமதிபதியும் குடும்ப காரனுமான  குரு ராசியிலும் நவாம்சத்திலும் உச்சமானது சிறப்பு. நவாம்சத்தில் குரு உச்சமடைந்தது 2 ஆம் பாவமாக அமைந்தது அதனினும் சிறப்பு. 2 ஆம் பாவத்தில்  ராசியில்  2ல் நீசமடைந்து நவாம்சத்திலும் உச்சன் குருவுடன் கூடியதால்   புதன் தனது நீசத்திலிருந்து விடுபட்டார். நவாம்சத்திலும் மண வாழ்வைக் குறிக்கும் பாவங்களான 2,7 பாவங்கள் நல்ல நிலையிலேயே அமைந்துள்ளது. ராசியிலும் நவாம்சத்திலும் 2 ஆமிடத்தோடு தொடர்புடைய மாதுல காரகன்  புதனால் ஜாதகி தனது தாய் மாமனை மனம் புரிந்தார். புதன் வித்யா காரகனும் ஆவதால் ஜாதகி  பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். ராசியில் 2லும் நவாம்சத்தில் ஜீவன ஸ்தானமான 10லும் சூரியன் சம்மந்தப்பட்டதால்   ஜாதகிக்கு அரசுப் பணி அமைந்தது.


முந்தைய பெண்மணியின் ஜாதக அமைப்புகளைக் கொண்ட ஒரு ஆணின் ஜாதகம் இந்த நான்காவது ஜாதகம். அதே ஆண்டில் பிறந்தவர்.

குடும்பம் அமைவதைக் குறிப்பிடும் 2வது பாவம் லக்னாதிபதி சனி அமர்ந்ததால் கெட்டது. 2 ஆம் அதிபதியும் குடும்ப காரகனுமான  குரு உச்சமடைந்ததால் அவர் தனது பாவத்தையும் உயர்வடையச் செய்ய வேண்டும். ஆனால் குருவுக்கு வீடு கொடுத்த 6 ஆமதிபதி சந்திரன் உச்சமடைந்ததால் குருவானவர் சந்திரனை மீறிச் செயல்பட முடியாது. எனவே குருவால் குடும்பத்தை அமைத்துத் தர  இயலவில்லை. ஆனால் காரகத்தின் அடிப்படையில் குரு ஜாதகரை செல்வந்தராக்கியுள்ளார். மேலும் 7ஆமதிபதி 6 ஆமதிபதியுடன் ஒன்று சேர்வது மனைவி குடும்பத்திற்கு வருவதைத் தடுக்கும் அமைப்பாகும்.

நவாம்சத்தில் 2 மற்றும் 7 ஆம் பாவத்திற்கு அதிபதி செவ்வாய் நீசமானது ஜாதகருக்கு குடும்பம் அமையாது என்பதை உறுதி செய்கிறது. இது சகோதரத்தாலும் ஜாதகரின் உறுதியற்ற குணத்தாலும் அவருக்கு குடும்பம் அமையாது என்பதை குறிப்பிடுகிறது. நடந்ததும் அப்படியே.



மேற்கண்ட 5 ஆவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.

லக்னத்திற்கு புத்திர பாவமான 5 ஆமதிபதி செவ்வாய் 8 ல் நீசமாகி ராகுவுடன் சேர்ந்து கெட்டு மறைந்துவிட்டார். ராசிக்கு புத்திர ஸ்தானமான 5 ஆமிடம் செவ்வாய் ராகுவால் கெட்டதும் புத்திர வகையில் பாதிப்பை தரக்கூடியதே.  புத்திர காரகன் குரு 3 மறைந்துவிட்டார். 3 ஆமிடம் 5 ஆம் பாவத்திற்கு பாதக ஸ்தானம் (சர பாவமான மேஷத்திற்கு பாதக ஸ்தானமான 11 பாவத்தில் கும்பத்தில் குரு அமைந்த அமைப்பு) என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனடிப்படையில் பார்த்தால் ஜாதகரின் புத்திர பாக்கியம் கேள்விக்குறியே என்று சொல்லத் தோன்றும்.

ஜாதகருக்கு 2 புதல்விகள். எப்படி?

நீசமான செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் பூரட்டாதி 4 ல் குரு சாரத்தில் நின்று புனிதமடைகிறார். பொதுவாகவே ஒரு கிரகத்தின் சாரத்தில் (நட்சத்திரத்தில்) அமையும் கிரகங்கள் அதன் நட்சத்திராதிபதி கிரகத்தின் காரகத்தை வலுவுடன் காக்கும்.

இது ஒரு சூட்சுமமான முக்கிய விதி. ஜோதிடத்தில் இப்படி எண்ணற்ற விதிகள் உள்ளன. அணைத்தையும் ஒரு சேர கவனத்தில் கொள்வதுதான் ஜோதிடர்களுக்குச் சிரமமான வேலை. இதில் தேர்ந்தவரே ஜோதிட வித்தகர் ஆவார்.

மேற்கண்ட விதியினடிப்படியில் சந்திரன் செயல்பட்டு தனது பாவத்தில் நீசமான புத்திர ஸ்தானாதிபதியும்  நண்பனுமான செவ்வாயை வலுவூட்டுகிறார். அதனால் ஜாதகருக்கு புத்திரம் ஏற்பட்டது. மேலும் நவாம்சத்தில் செவ்வாய் லக்னாதிபதி குருவுடன் அவரது ஆட்சி வீட்டில் அமைந்தது புத்திர வகையில் பாக்கியக் குறைவை ஏற்படுத்தவில்லை. நவாம்சத்தில் 5 ஆமதிபதி சனி மேஷத்தில் நீசமானாலும் அங்கு உச்சமடைந்த சூரியனால் நீச பங்கமும் ஏற்பட்டுவிட்டது. 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் பெண் கிரகமான சந்திரனது வீட்டில் அமைந்து சந்திரனாலும் வலுவடைந்ததால் ஜாதகருக்கு இரு குழந்தைகள். இருவருமே பெண்கள்.

5 ஆம் பாவத்திற்கு 3 ஆம் பாவமான 7 ஆம் பாவம் 2 ஆவது குழந்தையைக் குறிக்கும். 7 ஆமிடத்திற்க்கு குரு  பார்வை ஏற்பட்டதால் 2 ஆவது குழந்தை பாக்கியமும் கிட்டியது. செவ்வாயுடன் ராகு ஒரு பாவத்தில் சேர்ந்தால் அங்கு இருவருமே வலுவடைவர் என்பது ஒரு நுட்பம். ஆனால் அதன் பாதிப்பை ஜாதகர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஜாதகர் செவ்வாயின் காரகத்தின் அடிப்படையில் பூமி (நிலம்) வகையில் கடனுக்காக விரையம் செய்தார் என்பது வருந்தத்தக்க உண்மை.  ஆனால் குரு மற்றும் சந்திரனால் புத்திர பாக்கியத்திற்கு குறைவு ஏற்படவில்லை.


இந்த ஆறாவது ஜாதகமும் ஒரு ஆணினுடையது

5 ஆமிடத்தில் புதன் உச்சமானால் ஜாதகரின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிட்டாது. இரண்டாவது மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்றொரு விதி ஜோதிடத்தில் உண்டு. ஆனால் ஜாதகருக்கு லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான சுக்கிரன் நவாம்சத்தில் நீசம். நவாம்சத்தில் வீரிய ஸ்தானமான 3 ஆமிடத்தில் லக்னாதிபதி சூரியன் நீசமாகி அதன் அதிபதி சுக்கிரனும் நீசமானது ஜாதகரின்  வீரியமின்மையைக் குறிப்பதோடு ஜாதகருக்கு இரண்டாவது மணம் செய்யுமளவுக்கு இல்லறத்தில் நாட்டம் இராது என்பதைக் குறிக்கிறது. ஜாதகர் ஏக பத்தினி விரதன்.  கௌரவமான வாழ்வைக் கொண்டிருந்தாலும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

மேற்கண்ட ஜாதக அமைப்புகளில் இருந்து நவாம்சத்தை அளவிடுவது எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்ளலாம். ராசியில் மறுக்கப்பட்ட ஒரு பாக்கியம் நவாம்சத்தில் உறுதி செய்யப்பட்டால் தாமதமாகவேணும் அந்த பாக்கியம் ஜாதகருக்குக் கிடைத்துவிடும். ஆனால் நவாம்சமும் கெட்டுவிட்டால் குறிப்பிட்ட அந்த பாக்கியம் ஜாதகருக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத்தான் அர்த்தம் கொள்ளவேண்டும். நவாம்சம் பற்றிய இன்னும் பல நுட்பமான முறைகளை வேறொரு  சந்தர்ப்பத்தில் காண்போம்.

அடுத்த பதிவு: சைவத் துறவியும் பௌத்தத் துறவியும்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன். 


வேண்டுகோள்:  ஆலோசணைகளுக்காகத் தொடர்பு கொள்வோர் அற்பக் காரணங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டாம்  என பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜோதிடத்தை வாழ்வில் உபயோகமான முறையில் பயன்படுத்த வேண்டும்.