Showing posts with label பங்குச்சந்தை. Show all posts
Showing posts with label பங்குச்சந்தை. Show all posts

Friday, 12 February 2021

CURRENCY TRADING

 



பங்குச்சந்தையைப்பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியிருந்தாலும் அதில் உள்ள பல வகைப்பாடுகளை ஆராய்ந்து எழுதுமாறு அவற்றில் ஈடுபட்டிருக்கும் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பங்கு வணிகத்தின் ஒரு பிரிவான பண மதிப்பில் முதலீடு செய்யும் Currency Trading  பற்றி இப்பதிவில் நாம் ஆராயவிருக்கிறோம்.

பொதுவாக பங்கு வணிகத்திற்கு அனைத்து கிரகங்களுமே ஒரு வகையில் தொடர்பு பெறுகின்றன.

1)பங்கு வணிகத்தில் உறுதியாக, தெளிவாக, பதட்டமும் பயமும் இன்றி முடிவுகளை எடுக்க சூரியன் சிறப்பாக அமைந்திருப்பது முக்கியம். சூரியன் நீசமானவர்கள் துணிச்சலான முடிவெடுக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்கவே மாட்டார்கள். எனவே லாபமும் மிக சொற்பமே..

2)ஜாதகத்தில் சந்திரன் வலுவாக அமைந்தவர்கள் விரைந்து சிறந்த முடிவுகளை  எடுக்கிறார்கள் என்ற வகையில் சந்திரன் சிறப்பாக, குறிப்பாக வளர்பிறை சந்திரனாக அமைவது நல்லது. தினசரி வணிகத்தில் சில சமயம் வினாடிகளில் எடுக்கும் முடிவுகள் லாப நஷ்டங்களை தீர்மானிக்கின்றன. எனவே ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி வணிகத்தில் ஈடுபடாமல் நீண்ட கால வணிகத்தில் ஈடுபடுவது சிறந்தது.

3)வேகமும் கோபமும் கொண்ட செவ்வாய் ஜாதகத்தில் திட்டமிடலுக்குரிய புதனின் தொடர்பற்று அமைவது நன்று. செவ்வாய் சேர்க்கையால் புதனின் திட்டமிடல் அங்கு சிதறிவிடும். ஆனால் மிதுன லக்னத்திற்கு புதனும் செவ்வாயும் மேஷத்தில் அமையலாம். ஆனால் புதன் செவ்வாயைவிட அதிக பாகையில் நிற்க வேண்டும். இத்தகையோர் விரைவாகவும் சாதுர்யத்துடனும் செயல்படுகிரார்கள். ஆனால் இவர்களுக்கு திருமண வாழ்வு இல்லை என்பது வருத்தமான செய்தி. இதே மிதுன லக்னத்திற்கு புதன் மேஷத்திலும் செவ்வாய் மிதுனத்திலும் பரிவர்தனையாகியிருக்க சிறப்பு. இவர்களின் திருமண வாழ்வு கடுமையாக பாதிப்பதில்லை. பொதுவாக மிதுன லக்னம் தவிர ஏனையோருக்கு குரு செவ்வாய் இணைவு நன்று. இதிலும் குருவே செவ்வாய்க்கு முன்னால் நிற்க வேண்டும். சனி தொடர்பு செவ்வாய்க்கு எப்போதும் கூடாது..   

4)வணிகம் என்றாலே அது திட்டமிட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்ற வகையில் சரியான அணுகுமுறைக்கு புதன் காரக கிரகமாகிறது. ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு வணிகத்தை விட்டு விலகி இருப்பது நன்று.

5)குரு பெரிய அளவிலான முதலீட்டிற்கு காரக கிரகமாகிறது. குரு பாதிக்கப்பட்டவர்கள் சிறிய அளவில் வணிகத்தில் இதர கிரக சிறப்புகளைப்பொருத்து ஈடுபடலாம். குரு பாதகாதிபதியாக இல்லாமல் அமைவது நன்று. மேஷ லக்னத்திற்கு சனி தொடர்பு குருவிற்கு கூடாது.

6)சிறிய வகை பங்கு வணிகத்திற்கு சுக்கிரன் காரக கிரகமாகிறது. சிறிய அளவிலான  தினசரி வணிகத்திற்கு சுக்கிரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். புதனும் சுக்கிரனும் பங்கு வணிகத்தின் காரக கிரகங்களாகின்றன. இவ்விரு கிரகங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு வணிகத்தின் பக்கம் தலை வைத்துப்படுக்காமல் இருப்பது நல்லது.

7)சனி லக்னத்தில் கெடாமல், வக்கிரமின்றி அமைவது நிதானமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். மெதுவாகச் சுற்றும் சனி உச்சம் பெற்றவர்களும் புனர்பூ (சனி+சந்திரன் இணைவு) தோஷம் கொண்டவர்களும் விரைந்து முடிவெடுக்கும் தினசரி வணிகத்தில் ஈடுபட லாபமில்லை.  ஆனால் நீண்டகால முதலீட்டிற்கு சனி நன்று. அதாவது எதிர்காலத்தில் லாபம் தரும் சிறந்த துறை பங்குகளை வாங்கி வைத்து பிறகு லாபம் பார்க்க மட்டுமே சனி சிறப்பு. எந்த அமைப்புகள் சாதகமாக இருந்தாலும் கோட்சாரத்தில் ஏழரை சனி, அர்தாஷ்டம (4 ஆமிட சனி) சனி நடப்பவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடக்கூடாது. மூன்றாமிடச் சனி ஓரளவு நன்மை தருகிறது.

8)மிக பிரம்மண்ட வகை அதாவது பல கோடிகளை முதலீடு செய்ய ராகு காரக கிரகமாகிறது. ராகு-கேதுக்கள் இருவரும் 2 & 8 பாவங்களோடு சுபர் தொடர்பில், பார்வையில் இருப்பது பங்கு வணிகத்திற்கு மிகச்சிறப்பு. ஆனால் இது குடும்ப வகையில் பாதகத்தையும் சேர்த்தே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளின் 2 & 8  பாவ தொடர்பில் பங்குச்சந்தையில் நன்கு சம்பாதிப்பவர்களும் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வாழ்பவர்களாகவும் அல்லது சொந்த இனம், குலம் கலாசாரம் விட்டு வேறு கலப்பில் மணம் புரிந்தவர்களாகவும் அல்லது மண வாழ்வில் தோல்வியை சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்  

9)கேது பங்கு வணிகத்திற்கு எதிரான கிரகமாகும். திடீர் லாபங்களை கொடுத்து பிறகு பிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுகிறது என்றாலே அங்கே கேது செயல்படுகிறார் எனப்பொருள். ராகு சாதகமற்று ஜாதகத்தில் அமைந்திருந்தாலும் இதே விதி செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க.  கேது சிறப்பாக லாப ஸ்தானத்தில் அமைத்திருப்பின் கடன் பத்திரங்களில் முதலீடு, கணினி, மென்பொருள் துறை பங்குகள் லாபம் தரும்.  

அதிசயமாக 8 ஆமிடமும் அதன் பாவாதிபதியும் தன லாப பாவங்களோடு, அவற்றின் அதிபதிகளோடு தொடர்பு கொள்ளும் ஜாதக அமைப்பு உள்ளோர் பங்கு வணிகத்தில் மிகச்சிறப்பாக சம்பாதிக்கிறார்கள். எனவே பங்கு வணிகத்தை பொருத்தவரை  எட்டாமிடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எட்டாமிடம் என்பது மறைந்திருக்கும் தனம் என்பதை கவனத்தில் கொள்க.

கீழே ஒரு ஆணி ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகம். பணத்தை நேரடியாக குறிக்கும் கிரகம் புதனாகும். லக்னப்புள்ளி பூரம்-2 ல் அமைந்து சுக்கிரன் 8 ஆமிடத்தில் உச்சமாகியுள்ளது. இதனால் இவர் பங்கு வணிகத்தில் ஈடுபடுவார் என்பது இவரது லக்ன புள்ளியே சுட்டிக்காட்டுகிறது. சிம்ம லக்னாதிபதி சூரியனுக்கு சுக்கிரன் பகை கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுக்கிரன் சிம்மத்திற்கு நன்மை செய்ய மாட்டார். ஆனால் 8 ல் மறைந்து உச்சமான சுக்கிரன் நன்மை செய்தே ஆக வேண்டும். சுக்கிர திசையில் ஜாதகர் பாங்கு வணிகத்தில் ஈடுபட நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். ஆனால் இந்த ஜாதகத்தில்  1௦ ஆமதிபதி சுக்கிரன் 8 ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆகியுள்ளது. இதனால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். சுக்கிரன் பரிவர்த்தனை ஆகாமல் இருந்தால் மட்டுமே இவர் பங்கு வணிகத்தில் நல்ல லாபம் பார்ப்பார். ஏனெனில் பரிவர்த்தனை என்பது ஜாதகருக்கு உயர்வையும் தாழ்வையும் இணைத்தே வழங்கும்.

இந்த ஜாதகர் பணத்தின் மதிப்பில் முதலீடு செய்யும் Currency Trading செய்கிறார்.  Currency Trading க்கு சூரியன் காரக கிரகமாகிறார். ஏனெனில் பணத்தின் மதிப்பை கட்டுப்படுத்துவது அரசாங்கமே. சூரியன் லக்னத்தை பார்ப்பதால் இவருக்கு Currency Trading செய்ய எண்ணம் வந்துள்ளது. உச்ச கிரகமும் Currency Trading செய்ய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தகத்தில் Currency Trading என்பது பங்கு வணிகத்தில் ஒரு உயர்வான நிலை என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச கிரகமும் சூரியனைப்போல உயர்வையே சிந்தித்து Currency Trading ல் ஈடுபட வைக்கும். ஆனால் சூரியனது துணிவு ஆளுமை ஆகியவை இதர உச்ச கிரகங்களிடம் இருக்காது. ஜாதகர் உச்ச கிரகமான செவ்வாய் திசையில்தான் Currency Trading செய்தார். செவ்வாய் லக்ன பாதகாதிபதி என்பதோடு அவர் பாதக ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து நிற்கும் விரையாதிபதி சந்திரனின் (திருவோணம்-3) நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே இவருக்கு பாதகம் விரையம் என்ற வகையில் வரும். செவ்வாய் திசையின் குரு புக்தியில்தான் ஜாதகர் Currency Trading ல் ஈடுபட்டார். காரணம் குரு Currency Trading ன் காரக கிரகமான சூரியனின் (கார்த்திகை-2)  நட்சத்திரத்தில் நிற்பதுதான்.

திசா நாதன் செவ்வாய் புதனோடு இணைவு பெற்றதால் இவர் நண்பரின் வற்புறுத்தலால்தான் இதில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்களை குறிக்கும் 7 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் விரையத்தில் நின்று நண்பர்களை குறிக்கும் புதனையும் திசா நாதன் செவ்வாயையும் பார்க்கிறது. இதனால் இந்த ஜாதகர் நண்பர்களால் விரையத்தை சந்திப்பார் என்பது தெளிவாக உள்ளது. ஜாதகர் செவ்வாய் திசையில் குரு புக்தியில் குரு மற்றும் சனியின் அந்தரத்தில், Currency Trading ன் காரக கிரகம் சூரியன் கோட்சாரத்தில் ஜனன ராகு மற்றும் கோட்சார கேதுவின் மேல் சென்றபோது அதாவது கடந்த ஐப்பசி, கார்த்திகை  மாதங்களில் (November& December) Currency Trading ல் ஈடுபட்டார். திசா புக்தி கிரகங்கள் ஒருவர் ஈடுபடும் செயலை தெளிவாக குறிப்பிடுகிறது என்றால் கோட்சார கிரகங்கள் அதன் தாக்கத்தை தெளிவாக உணர்த்துகின்றன.  Currency Trading ன் காரக கிரகம் சூரியன் கோட்சாரத்தில் ராகு-கேதுவோடு தொடர்பானதால் இந்த இரு மாதங்களில் ஜாதகர் லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை இழந்தார். புதன் செவ்வாய்க்கு முன்னால்தான் நிற்கிறது. திட்டமிடலை மீறி இதர அம்சங்கள் ஜாதகரை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பங்கு வணிகத்தில் மட்டுமல்ல அவர் ஈடுபடும் தொழில் எதுவாயினும் அந்த காரக கிரகத்தின் நிலையை ஜாதகத்திலும் கோட்சாரத்திலும் அறிந்து செயல்படுவது எப்போதும் நன்மை பயக்கும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 21 May 2020

8 ஆமிட ரகசியங்கள்

ஜாதகத்தில் லக்ன பாவத்தின் ஆயுளை தீர்மானிப்பது எட்டாவது பாவம்தான். ஒரு பாவத்திற்கு அதன் எட்டாவது பாவம் சிறப்பாக இருந்தால்தான் அந்த பாவத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இதை கிரகம் நின்ற இடத்திற்கு எட்டாம் பாவத்தை அளவிட்டும்  கிரகத்தின் பலம், பலனத்தை அறியலாம். எட்டாவது பாவம் பல்வேறு ரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது. எட்டாவது பாவம் பொதுவாக நல்ல பலனை தர வாய்ப்பே இல்லை எனலாம். காரணம் எட்டாவது பாவத்தின் சக்தி ஜாதகரின் உயிரை தாங்கிப்பிடிக்க மட்டுமே செலவிடப்பட வேண்டும். எட்டாவது பாவம் ஒரு மனிதன் பிறரிடம் வெளிப்படுத்தக்கூடாத ரகசியங்களை குறிக்கும். அவை ஆயுள், அவமானங்கள், தண்டனைகள், உடலுறவு, மணமுறிவு, மறைப்பொருள், ஆன்மிகம், புதையல், பங்கு வணிகம், திடீர் பொருளாதாரங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை அடுத்தவரிடம்  வெளிப்படுத்தினால் ஜாதகர் தனது வாழ்வில் வீழ்ச்சியை சந்திப்பார் என்பது நமது தர்ம சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகம். ஆன்மிகம் என்பது மறைந்திருக்கும் இறை சக்தியை உணர்வதுதான். அதனால்தான் ஞான காரகன் கேது கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் உச்சமடைகிறார். மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமடைந்துள்ளார். ராசியதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் ராசிக்கு எட்டில் சிம்ம ராகுவிடம் தஞ்சமடைந்துள்ளார். லக்னத்தில் எட்டாமதிபதி புதன் அமர்ந்துள்ளார். இவை யாவும் மறைப்பொருளான பரம்பொருளை நாடும் நோக்கில் ஜாதகரின் கர்மா இயங்கும் என்பதை குறிப்பிடுகின்றன. சந்திரனை நோக்கி வரும் கேதுவும் இதை உறுதி செய்கிறது. லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்துள்ளதாலும் ராசியதிபதி சனி சூரியனின் வீட்டில் மோட்சகாரகன் ராகுவுடன் இணைந்துள்ளதாலும் ஜாதகர் சிவாச்சாரியராக (சிவன் கோவிலில் பூஜை செய்பவர்) உள்ளார். கால புருஷனுக்கு போக ஸ்தானாதிபதி (3 ஆமதிபதி) புதன் லக்னத்தில் அமர்ந்ததால் உடல் ரீதியான போகத்தை ஜாதகர் விரும்புகிறார். புதன் எட்டாமதிபதியாகி எட்டாமிடம் உடலுறவையும் மறைபொருளையும் ஒருங்கே குறிப்பதால் இவ்விரண்டையும் ஜாதகரின் மனம் நாடுகிறது. புதனுடன் இணைந்துள்ள 12 ஆமதிபதி சுக்கிரன் படுக்கை சுகத்தோடு மோட்ச நிலைக்கும் அதிபதியாகிறார். புதன் சுக்கிரன் இணைவது மதன கோபால யோகம் என்று சொல்லப்படும் சூழலில் ஜாதகருக்கு சிற்றின்ப ஆசையும் ஆன்மீகமும் ஒருங்கே எழுகிறது. ஆனால் இங்கு இருவரும் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகிவிட்டதால் லக்னாதிபதியை மீறி புதனும் சுக்கிரனும் எதுவும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையை வழங்கவேண்டிய குரு 2 க்கு 8 ல் உச்ச வக்கிரமடைந்து குடும்ப வாழ்வை தர இயலாத சூழலில் அமைந்துவிட்டார். 1978 ல் பிறந்த ஜாதகரின் திருமண முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ரிஷப லக்ன ஆணின் ஜாதகத்தில் தற்போது அஷ்டமாதிபதியான குருவின் திசை நடக்கிறது. குரு லக்னத்திற்கு 8, 11 க்கு உரியவராகி லக்னத்திற்கு 2 ல் நிற்கிறது. 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனம். இவர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். பங்கு வணிகம் நேரடி வருமானமல்ல. பாரம்பரிய தொழில் அல்ல. வணிக சந்தையில் மறைந்திருக்கும் தனத்தை தேடி முதலீடு செய்து பொருளீட்டுவதுதான். எனவேதான் லக்னத்திற்கு 8 ம் பாவம் பங்கு வணிகத்திற்கு உரிய பாவமாக பார்க்கப்படுகிறது. லக்னதிபதி சுக்கிரனும் பங்கு வணிகத்திற்கு உரிய கிரகங்களில் ஒன்றாகி அது பங்கு வணிகத்திற்கு மற்றொரு காரக கிரகமான புதனின் வீட்டில் தன ஸ்தானத்தில் நிற்பதால் ஜாதகர் பங்கு வணிகத்தில் பொருளீட்டுகிறார். இங்கு சுக்கிரனும் குருவும் இணைந்து ஜாதகருக்கு தனம் வரும் வழியை நிர்ணயம் செய்கின்றன.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி லக்னத்திற்கு 7 ல் திக்பலம் பெற்று நிற்கிறார். எனவே ஜாதகரை சனி எப்படியும் காப்பாற்றுவார் எனலாம். சனி ஆயுள் மற்றும் ஜீவன காரகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுள் என்பது சனியோடு 8 ஆமிடத்தையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகருக்கு லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின்  திசை கடந்த பதினேழரை வருடங்களாக நடக்கிறது. 8 ஆமிடம் என்பது ஆயுளோடு ஒரு ஜாதகர் படும் அவமானங்களையும் குறிப்பிடும். ராகு சனியை நோக்கி நகர்ந்து வருகிறது. சனி வக்கிரமில்லாத நேர்கதியில் உள்ளது. இதனால் ஜாதகரின் ஜீவனம் ராகுவால் பாதிக்கப்படும். ராகுவின் காரக தொழிலை செய்தால் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் எனலாம். ராகு சூரியனின் உத்திரம்-4 சாரம் வாங்கியுள்ளார். சூரியன் ரிஷபத்தில் நின்று ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தை பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு கெளரவதிற்கு உரிய சூரியனின் சாரம் வாங்கியுள்ளத்தால் இவர் வேலை செய்யுமிடங்களில் கௌரவம் பார்த்து வேலையோடு ஒன்ற இயலாமல் சண்டையிட்டு வந்துவிடுகிறார். சுய தொழிலை குறிக்கும் 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய், வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளதால் சுயதொழிலிலும் சோபிக்க இயலாமல் போராடுகிறார். இதனால் ஜாதகர் பெருத்த அவமானங்களை சந்திக்கிறார். வேலை மற்றும் சுய சம்பாத்தியம் எதற்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுகிறார். அவமானங்களை எதிர்கொள்ள இயலாமல் திசா நாதன் ராகு 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் மதுப்பழக்கதிற்கும் அடிமையாகிவிட்டார். இங்கே ஆயுள்காரகன் சனி திக்பலம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் ஆயுள் ரீதியாக ஜாதகரை காப்பாற்றுகிறார். எனவே ராகு ஜாதகருக்கு ஆயுள் கண்டத்தை தர இயலவில்லை. இதனால் திசா நாதன் ராகு 8 ஆமிடம் குறிப்பிடும் அவமானங்களை தருகிறார். குரு திசை துவங்கியதும் ஜாதகர் தெளிவான வாழ்க்கைப்பாதைக்கு மாறி தனது அவமானங்களிளிருந்து விடுபடுவார் எனலாம்.

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
  
இந்த ஜாதகமும் முந்தைய ஜாதகத்திற்கு ஒப்பானதுதான். ஜாதகருக்கு நடந்தது சனி திசை. கும்ப லக்னாதிபதி சனி வக்கிர நிலை பெற்று லக்னத்திற்கு 11 லிருந்து திசை நடத்துகிறார். சனியும் 5 ஆமிட செவ்வாயும் நேர்பார்வை பார்த்துக்கொள்கின்றனர். சனி-செவ்வாய் தொடர்புகொள்பவர்கள் தங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் விபத்து, மணமுறிவு, கண்டம் போன்ற கடுமையான பாதிப்புகளை அடைகிறார்கள். லாபஸ்தான திசா நாதன் சனி தனது பகை கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சை வாங்கி 1௦ ஆவது பார்வையாக லக்னத்திற்கு 8 ஆவது பாவத்தை பார்க்கிறது. சாதாரணமாகவே சனியின் பார்வைக்கு கடுமை அதிகம் என்பது அனைவரும் அறிந்த நிலையில் செவ்வாயின் பார்வை பெற்ற சனிக்கு கடுமை மிக அதிகமாகும். சனி பார்க்கும் இடங்களுக்கு தனது பாதிப்பை தராமல் இருக்க மாட்டார். இந்நிலையில் சனியின் பார்வையை வாங்கும் செவ்வாயின் 4 ஆவது பார்வையும் 8 மிடத்தின் மீது விழுகிறது. ஜாதகர் தனது சனி திசையில்  ராகு புக்தியில் கொடுமையானதொரு வாகன விபத்தில் சிக்கி நீண்டதொடு மரணப்போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைத்தார். 8 ஆமிட ராகு வேகத்திற்கு உரிய சந்திரனோடும் ஆவேசத்திற்குரிய செவ்வாயோடும் கடுமைக்குரிய சனியோடும் தொடர்புகொண்ட நிலையில் புக்தியை நடத்துகிறது. சனி தான் பார்க்கும் இடத்திற்கு தனது சக்தியை தனது திசா புக்தியில் செலவிட்டே ஆக வேண்டும். இதனால் சனியால் விபத்தை தடுக்க இயலவில்லை. சனி லக்னத்தை 3 ஆம் பார்வை பார்த்ததால் கண்டத்தை கொடுத்து மரணத்தை தவிர்த்தாரா என்றால் அது குறைவே. ஏனெனில் சனி வக்கிரமாகி பின்னோக்கி வருகிறது. இதனால் சனியின் 3 ஆமிட பார்வை லக்னத்தை விட்டு விலகுகிறது. எனவே சனியால் ஜாதகரை காப்பாற்ற இயலாது. இங்கு ஜாதகரை காப்பாற்றியது சனி சாரம் அனுஷம்-1 பெற்ற விருட்சிக குருதான். குருவும் வக்கிரமாகி 9 ஆமிடத்தை நோக்கி போகிறார். இதனால் குருவின் அறை பங்கு பார்வை துலாத்திலிருந்து லக்னத்திற்கு கிடைக்கிறது. இதனால் ஆயுளை எடுக்க ஆயுள்காரகன் சனியின் சாரம் பெற்ற குருவின் அனுமதியும் திசா புக்தி நாதர்களுக்கு தேவை. குரு ஆயுளை எடுக்க அனுமதிக்கவில்லை.  இங்கு குரு ஜாதகரின் உயிரை காப்பாற்றினார் என்றால் அது மிகையல்ல. இங்கு குருவின் அமைப்பால் திசா புக்தி நாதர்கள் ஜாதகருக்கு 8 மிடம் குறிப்பிடும் கண்டத்தை மட்டுமே வழங்க முடிந்தது.

ஐந்தாவது ஆணின் ஜாதகம் கீழே.
.
விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். பொதுவாக ஒரு மறைவு ஸ்தான பரிவர்த்தனைகள் சிறப்பல்ல. ஏனெனில் பரிவர்த்தனைகளே பாதிப்பை ஒரு வகையில் வழங்கிவிட்டுத்தான் பலனளிக்கும் என்ற நிலையில் மறைவு ஸ்தானங்களுடனான பரிவர்த்தனை ஒரு பாதிப்பையும் இழப்பையும் வழங்காமல் பலனளிக்க வாய்ப்பே இல்லை. எப்போது அவை இரண்டும் ஏற்படும் என்றால் தொடர்புடைய திசா புக்திகளில்தான் ஏற்படும். 8 ஆமதிபதி புதன் புத்திகாரகனாகும். புதன் லக்னத்திற்கு திக்பலத்தை வழங்கும் 1௦ ஆமதிபதி சூரியனோடு இணைந்து லக்னத்தில் நிற்பது சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இவ்விரு கிரகங்களும் லக்னம், நான்கு மற்றும் 8 ஆகிய இடங்களில் இணைவதுதான் சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்தனையாவதால் ஜாதகருக்கு  பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். ஜாதகர் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இது நுட்ப அறிவால் ஏற்பட்டது. ஜாதகருக்கு 8 ஆமிடதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் சில வருட போராட்டமான வாழ்க்கைத்துனையுடனான மண வாழ்க்கை முறிவுக்கு வந்தது.

போராட்டமான மண வாழ்க்கைக்கு காரணம் சுக்கிரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் ஏற்பட்டது. இதனால் மனைவியின் குணம் ராகுவால் பாதிக்கப்படும். குடும்ப பிரிவினைக்கு அடித்தளமிட்டது கடந்து போன சந்திர திசையாகும். சந்திரன் விருட்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி குடும்ப பாவத்தில் வந்து அமர்ந்து திசை நடத்திய சூழலில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி அது முற்றிய நிலைக்கு தள்ளிவிட்டுத்தான் தனது திசையை முடித்திருக்கிறார். இந்நிலையில் மணமுறிவை குறிப்பிடும் 8 ஆம் பாவதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் மண வாழ்வு முறிவு பெற்றது. பரிவர்த்தனைச் செவ்வாய் குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் பரிவர்த்தனையாகி அமர்ந்ததும் லக்னம் வலுவடைகிறது. அதனால் லக்ன பாவ செவ்வாய் திசை துவங்கியதும் 2 ஆமிடம் வீழ்ச்சியடைகிறது. இங்கு பிரிவினையை லக்ன பாவம் மற்றும் 8 ஆம் பாவம் ஆகிய இரண்டுமே குறிப்பிடும் என்பது கவனிக்கத்தக்கது. அதே சமயம் இப்படி லக்னத்தில் பரிவர்த்தனையால் வந்து அமரும் செவ்வாய் தனது பார்வைகளால் சுகஸ்தானமான 4 ஐயும் களத்திர பாவமான 7 ஐயும் 8 ஆம் பாவத்தையும் பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு மறுதிருமணமும் அமைந்தது.  

மீண்டும் உங்களை மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501   

Sunday, 5 March 2017

புயலுக்கு நடுவே ஒரு போராட்டம்

பங்குச்சந்தையுடன் தொடர்புடைய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிரிந்த போது சரியான புரிதல் இல்லாத பலர் பங்குச்சந்தைக்கு வந்து பெரும் இழப்புகளை சந்திக்கின்றனர். இதற்கு சாதகமான ஜாதக அமைப்பு பற்றியும் யாரெல்லாம் பங்குச்சந்தையில் ஈடுபடலாம் என்பது பற்றியும் எழுத கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கே.

“பணம் ஒரு சிறந்த வேலைக்காரன்.
ஆனால் மோசமான எஜமான்”   

பணத்தை நாம் ஒரு வேலைக்காரனாக பயன்படுத்தும்போது நாம் அதை ஆள்கிறோம். நமது வாழ்வை வளமாக்கவே பணம். நமது வாழ்வை பணயம் வைத்து அதை ஈட்டுகையில் பணம் நம்மை ஆள்கிறது.
பிணத்தை ஆய்வு செய்துதான் மருத்துவ மாணவர்களுக்கு நோய் பற்றிய பாடம் எடுக்கப்படுகிறது. இது போன்ற பதிவுகளையும் அவ்வாறே எடுத்துக்கொள்ளுங்கள்.

பங்குசந்தையில் லாபம் பார்பதற்கான ஜாதக அமைப்புகள்:

1. ஏழரை சனிக்காலம் சனி பகவான் நமது வாழ்வை செம்மைப்படுத்திக்கொள்ள பாடம் எடுக்கும் காலமாகும். அக்காலகட்டத்தில் உத்தேச வருமானம் போன்றவற்றிற்கு வாய்ப்பே இல்லை. எனவே ஏழரை சனி காலத்தில் அனைத்து ஜாதகர்களும் பங்குச்சந்தையை விட்டு விலகி இருத்தல் நலம்.

2. ஜாதகத்தில் தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் பாவம் தனம் வரும் வழிகளை காட்டும். பங்குப்பத்திரங்கள், காப்பீடுகள், முதலீடுகள், ஊதாரிதனமான செலவுகள், பங்குச்சந்தை ஈடுபாடு ஆகியவற்றை குறிப்பிடும். இரண்டாம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உழைத்துத்தான் பொருளீட்ட வேண்டும். எனவே இரண்டாம் பாவம் கெட்டிருந்தால் பங்குச்சந்தையை நினைத்துப்பார்க்க வேண்டாம்.

3. தன காரனும் இரண்டாம் பாவ காரனுமான குரு, ஜாதகத்தில் வலுவோடு இருக்க வேண்டும். குரு ஜாதகத்தில் கெட்டவர்கள் பங்குச் சந்தை பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம்.

4. உத்தேச மற்றும் யூக வகை வருமானங்களுக்கு காரகத்துவம் பெற்ற ராகு ஜாதகத்தில் நல்ல பாவங்களில் அமைந்திருக்க வேண்டும். 11 ல் அமைவது சிறப்பு. பாவிகள் 3, 6,11 ல் அமைவது சிறப்பு என்றாலும் 6 ஆமிடத்தில் அமையும் ராகு அந்த பாவாதிபதியின் பணியையும் தானே எடுத்துச் செய்யும் என்பதால் கவனம் தேவை.

5. பந்குச் சந்தையோடு நேரடியாக தொடர்புடைய கிரகங்கள் என்றால் அது புதனும் சுக்கிரனும்தான். இவ்விரு கிரகங்களும் ஜாதகத்தில் நன்கு அமைந்து இவற்றின் திசா புத்திகள் நடந்தால் பங்குச் சந்தையில் பெரும் பொருளீட்டலாம். இவ்விரு கிரகங்களும் கெட்டிருந்தால், முக்கியமாக சுக்கிரன் ஜாதகத்தில் கெட்டவர்கள் பங்கு சந்தை இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கிவிடுவது நலம்.

6.இவை தவிர தனவரவோடு தொடர்புடைய பாவங்களான 4(எளிதான சம்பாத்தியம்), 5(புத்தி சாதுர்யத்தால் பொருளீட்டல்), 8 (திடீர் அதிஷ்டம்), 11 (லாபம்) மற்றும் 2 ஆம் பாவத்திற்கு  11 பாவம் என்றவகையில் விரயத்தை குறிப்பிடும் 12 ஆம் பாவத்தையும் ஆராய வேண்டும்.

மேற்கண்ட மேற்கண்ட குறிப்புகளின்படி தங்களது ஜாதகங்களிலுள்ள சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒருவர் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.



அப்படி ஆராயாமல் பங்குச்சந்தையில் ஈடுபட்டு ஜாதகமும் திசா-புக்திகளும் மோசமாக இருந்தால் அவரது நிலைமை புயலில் அகப்பட்டுக்கொண்ட படகு போன்று பரிதாபகரமானதாக இருக்கும். அப்படியான ஒரு ஜாதகம்தான் கீழே நீங்கள் காண்பது. 

இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் ஜாதகம் திருக்கணித முறையில் பூச பக்ஷ அயனாம்ச அடிப்படையில் அடியேன் ஆய்வு செய்தது.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.



லக்னம் துலாமில் லக்னதிற்கு சத்ருவும் ஆறாம் அதிபதியுமான குருவின் விசாகம்-1 ல் அமைத்திருக்கிறது. குருவும் லக்னத்தில் வலுவோடு அமைந்துள்ளார். பகை வீட்டில் வக்கிர கதியில் அமைந்திருக்கும் கிரகம் வலிமையோடு இருக்கும் என்பது முக்கிய ஜோதிட விதி. குரு லக்னத்தில் திக்பலத்துடன் இருப்பார். இவை அனைத்தும் ஜாதகரை குரு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

தன ஸ்தானாதிபதியான செவ்வாய் லாபாதிபதியுடன் அஷ்டமத்தில் இணைந்தது தன வரவில் ஏற்படக்கூடிய வேதனைகளை தெளிவாக குறிப்பிடுகிறது.

ஜீவன காரகனும் சிந்தனை , அதிஷ்டம் மற்றும் பூர்வ புண்ணியம் போன்றவற்றை குறிப்பிடும் ஐந்தாம் அதிபதி சனிபகவான் மேஷத்தில் நீசமாகியுள்ளார். இது ஜாதகர் தெளிவான முடிவெடுக்க முடியாதவர் என்பதையும் அவரது உழைப்பு வீணாகும் என்பதையும் அதிஷ்டமில்லாதவர்  என்பதையும் குறிப்பிடுகிறது.    

லாபாதிபதியும் சிம்ம ராசிக்கு அதிபதியுமான சூரியன் அஷ்டமத்தில் அமைத்துள்ளார். லாப ஸ்தானமே சர லக்னமான துலாமிற்கு பாதக ஸ்தானம் ஆவதால் அங்கு அமையும் கிரகங்களும் ஜாதகருக்கு பாதகத்தை செய்ய வேண்டும். மனோ காரகனும் ஜீவன ஸ்தானமான பத்தாம் அதிபதியுமான சந்திரன் அங்கு அமைந்துவிட்டது தனது சுய சிந்தனையால் ஜாதகர் தவறான முடிவெடுத்து பாதகங்களை சந்திப்பார் என்பதை காட்டுகிறது. ஜாதகர் நவமி திதியில் பிறந்துள்ளார். நவமி திதிக்கு உரிய கிரகமான சூரியன் அஷ்டமத்தில் அமைந்துள்ளதும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

லக்னாதிபதி மாரகாதிபதியுடன் இணைந்து அஷ்டமத்தில் நின்று சந்திரன் கேதுவோடு சேர்ந்துவிட்டால் அது தரித்திர யோகத்தில் ஒரு வகையாகும்.

இங்கு லக்னாதிபதி சுக்கிரன் மாரகாதிபதியான சூரியனுடன் அஷ்டமத்தில் சேர்ந்துள்ளதுடன் சந்திரனும் கேதுவோடு சேர்ந்துள்ளது தரித்திர யோகம் ஜாதகருக்கு உள்ளதை குறிப்பிடுகிறது. 

பங்குச்சந்தையில் முக்கிய பங்குவகிக்கும் சுக்கிரன் ஜாதகத்தில் அஷ்டமத்தில் ஆட்சி பெற்றது ஜாதகரது ஆயுளை தாங்கிப்பிடிக்க மட்டுமே உதவும். மேலும் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றுள்ளதை கவனிக்கவும்.

பங்குச்சந்தையோடு தொடர்புடைய மற்றொரு முக்கிய கிரகம் புதன் நீச நிலையில் அமைந்துவிட்ட சனியோடு வக்கிர கதியில் மேஷத்தில் இணைத்துள்ளது. புதன் பாக்ய-விரயாதிபதி என்பதோடு புத்தி காரகன் என்பதும் புதன் ஒரு நீச கிரகத்துடன் இணைந்துவிட்டால் ஜாதகர் புத்தி சாதுர்யம் அற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் புதன் மற்றொரு கிரகத்துடன் இணையும்போது இணையும் கிரகத்தை சார்ந்தே செயல்படும் ஜாதகரின் புத்தியை செயல்பட வைக்கும் என்பதையும் குறிப்பிடவேண்டும். பன்றிக்குட்டியோடு இணைந்த கன்றுக்குட்டி என்பதுபோல் இங்கு நீச சனியுடன் இணைந்துவிட்ட புதனின் நிலை உள்ளது.

யூகம், புதுமை, உத்தேச வகைகளை குறிப்பிடும் கிரகம் என்ற வகையில் பங்குச்சந்தையோடு நேரடியாக தொடர்புபெறும் ராகு அதிஷ்ட வகைகளை குறிப்பிடும் ஐந்தாமிடத்தில் அமைந்தது சிறப்பென்றாலும் ஐந்தாமதிபதி சனி நீசமாகிவிட்டதால் சனியை சார்ந்தே செயல்பட வேண்டிய நிலையில் ராகு இருக்கிறார்.

மேற்சொன்னவை அனைத்தும் பங்குச்சந்தையில் ஈடுபட்டால் ஜாதகர் வாழ்க்கை வீணாகும் என்பதை தெளிவாக விளக்குகிறது.

கோட்சாரத்தில் சிம்ம ராசிக்கு நான்கில் சனி அமர்ந்து ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தை பார்வை செய்வதும் சிம்ம ராசிக்கு பரம அசுபனான ராகு சிம்ம ராசியை ஆட்கொண்டிருப்பதும் சிம்ம ராசியினருக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய கோட்சார அமைப்பினால் அனைத்துவகை சிம்ம ராசியினருக்கும் ஒரே வகையான பாதிப்புகள் ஏற்படுமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஜனன ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கக்கூடிய நிலையில் அமைந்துள்ள கிரகங்கள் கோட்சாரத்தில் பாதிக்கக்கூடிய நிலையில் அமைந்தால் மட்டுமே கடுமையான விளைவுகள் அதிகம் இருக்கும் மற்றையோருக்கு அப்படி இல்லை. 

திசா புக்திகளின் வலிமை பொறுத்து பாதிப்புகளை அளவிடலாம் என்றாலும் நீதிமானான சனியும் சனியை போன்றே செயல்படும் ராகுவும் சில சமயம் திசா புக்திகளின் வலிமையை மீறி ஜாதகரை தண்டிக்கும் வல்லமை பெற்றவை. பொதுவாக சிம்ம ராசிக்கு சனியும் ராகுவும் எப்போதுமே பாவிகள்தான். கடந்த வருடம் ராகுவோடு இணைந்திருந்த குரு ராகுவின் கடுமையை ஓரளவு குறைத்து உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் மட்டுமே சிம்ம ராசியினரை காத்திருப்பார்.

ஜாதகருக்கு ராகு திசையில் குரு புக்தி 01.06.2016  முதல்   28.10.2018 வரை நடப்பில் உள்ளது. ஜாதக அமைப்புப்படி இக்காலகட்டத்தில் பங்குச்சந்தை தொழிலில் ஈடுபட்டிருந்த ஜாதகர் குரு புக்தியில் யானையின் வாயில் அகப்பட்டுவிட்ட கரும்பின் நிலையில் இருக்க வேண்டும். ஜாதகருக்கு இது ஒரு கொடுமையான கால கட்டம். தாங்கமுடியாத நிலையில் கடுமையான பொருளாதார தவிப்பில் ஜாதகர் என்னை வந்து சந்தித்தார்.   

ஜாதகப்படியான சூழ்நிலைகளை ஆய்வுசெய்து ஆலோசனைகளை வழங்கினேன். ஜோதிடர்களால் எந்த ஒரு ஜாதகரின் விதியையும் மாற்றிட இயலாது. ஜோதிடர்கள் சரியான பாதையில் செல்ல வழிகாட்டும் வழிகாட்டிள். அவ்வளவே. அப்பாதையை ஏற்பதும்  மறுப்பதும் அவரவர் கர்மாவை பொறுத்தது.

களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் ஒரு நீச கிரகம் அமைந்து சுக்கிரன் ஆட்சி பெற்றதன் பலனாவது ஜாதகர் கடும் சூழ்நிலையை கடக்கும்போது மனைவியும் அதுபோன்ற ஒரு மோசமான காலத்தை கோட்சார ரீதியாக கடந்துகொண்டிருப்பதால் ஜாதகரின் போராட்டங்களை வேதனையோடு காண்பவராக இருப்பார் என்பதை குறிப்பிடுகிறது.

இந்தக் குறிப்பின்படி ஜாதகரின் மனைவிக்கு விருட்சிக ராசி. ஏழரை சனியில் கடுமையான காலத்தை கடந்துகொண்டிருப்பவர்கள் விருட்சிக ராசியினர். ஜாதகரின் நிலைமை யானை வாய் கரும்பு என்றால் அவரது மனைவியின் நிலை முதலைவாய் பிராணிதான்.

கணவனும் மனைவியும் வறண்டதொரு பாலைவனத்தில் அகப்பட்டுக்கொண்ட பரிதாபத்திற்குரிய நிலைதான்.





 திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கையில் தம்பதியர் இருவருக்கும் கடுமையான காலங்கள் சேர்ந்தார்போல வருவதை பொதுவாக ஜோதிடர்கள் தவிர்ப்பார்கள். அதன் காரணம் மேற்கண்டபடியான சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான். ஒருவருக்கு நிலைமை மோசம் என்றால் மற்றொருவரின் ஜாதகம் அதை தாங்கிப்பிடிக்க வேண்டும். திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத இந்தக்காலத்தில் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தால் திருமணமே நடக்காது என்பதுதான் இன்றுள்ள நிலைமை.  

அடுத்த வார பதிவு 

"விதியோடு ஒரு விளையாட்டு"


வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,
அலைபேசி எண்: 7871244501