Friday 29 May 2020

நமது தெய்வம் எது?



உலக மக்கள் அனைவரும் தமக்கு பிடித்த வடிவில் தத்தம் மத வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். ஒரே மதத்திலும் பல உட்பிரிவுகள் உண்டு. தந்தை சிவனை வணங்கினால் மகன் முருகனை வழிபடுவதிலிருந்து எதோ ஒரு சக்தி அல்லது ஜாதக அமைப்பு அவர்களை குறிப்பிட்ட வடிவத்தில் வழிபடும்படி ஈர்க்கிறது. அப்படி ஈர்க்கும் கிரகங்கள் சார்ந்ததாகவே அவர்களின் வழிபாடுகளும் இருக்கும். ஜோதிடத்தில் 9 ஆம் பாவம் குல தெய்வத்தையும் பாரம்பரியமாக வழிபட்டு வந்த வழிபாடுகளையும் சுட்டிக்காட்டும். லக்னத்திற்கு 5 ஆமிடம் ஒரு மனிதனின் விருப்பப்படியான வழிபாடுகளை அதாவது இஷ்ட தெய்வ வழிபாட்டை தெரிவிக்கும். லக்னத்திற்கு 4 ஆமிடம் வழிபட்டவுடன் உதவிக்கு வரும் தெய்வத்தின் அம்சத்தை தெரிவிக்கும். 4 ஆமிடம் 1௦ ஆம் பாவத்தின் நிவர்த்தி பாவமாக வருவதால் 4 ஆமிட தெய்வத்தை வழிபட்டால் ஜீவனத்திற்கு ஒரு வழி கிடைக்கும். இதனால் 4 ஆவது பாவத்தையே குலதெய்வத்திற்குறிய  பாவமாக எடுத்துக்கொள்வோரும் உண்டு. நாம் ஒரு ஜாதகனின் வழிபாட்டு முறையை நிர்ணயிக்கும் கிரகம் எது என  இப்பதிவில் ஆராயவிருக்கிறோம்.

கீழ்க்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது.
சிம்ம லக்ன ஜாதகம். லக்னாதிபதி சூரியன் பிராமண ராசி என அழைக்கப்படும் சந்திரனது வீட்டில் கடக ராசியில் செவ்வாய், சூரியன்  மற்றும் புதனோடு  அமைந்துள்ளார். சிம்ம ராசி என்பதால் ஜாதகர் சத்ரியனின் அம்சமாக அதாவது நிர்வாகத் திறமை உள்ளவராக இருப்பார்.  லக்னாதிபதி சூரியன் பிராமண ராசியில் அமைந்ததால் ஜாதகர் பிராமணர். சூரியன் கடகத்தில் அமர்ந்து சந்திரனின் பார்வையை பெறுகிறார்.. சந்திரன் தமிழ் மொழியை குறிப்பவர் என்பதால் ஜாதகரின் தந்தை தமிழ் மொழி பேசும் பிராமண வகுப்பை சார்ந்தவர். தாயாரை குறிக்கும் நான்காம் அதிபதி செவ்வாய் கடகத்தில் அமைந்ததால் ஜாதகரின் தாயாரும் ஒரு பிராமண பெண்மணி. குருவே தந்தையை குறிக்கும் 9 ஆமதிபதியாகி லக்னத்தை 5  ஆம் பார்வை செய்வதால் ஜாதகர் பிராமணத்தன்மை நிறைந்தவர். தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனி வக்கிரமாகியுள்ளது ஒரு தோஷமே. 6 ஆமிட சந்திரனையும் சனி தனது 3 ஆம் பார்வையாக பார்க்கிறது. இந்த அமைப்பு எதோ ஒரு குறைபாட்டை தாயார் வழியில் சுட்டிக்காட்டுகிறது. தமிழ் மொழியை குறிக்கும் சந்திரன் நீசமாகும் விருட்சிக ராசியில் சனி வக்கிரம் பெற்று 4 ஆம் பாவத்தின் 5 ஆவது திரிகோணமான  மீனத்தில் அந்நிய பாஷையை குறிக்கும் ராகு அமர்ந்து, 4 ஆம் பாவத்தின் 9 ஆவது திரிகோணமான கடகத்தில் தெலுங்கு மொழியை குறிக்கும் சூரியன் இதர கிரகங்களை விட வலுவாக அமைந்ததால் தாயார் தெலுங்கு மொழி பேசும் பிராமண பெண்மணியாவார். ராகுவும் சூரியனை பிரதிபலிப்பவர் என எடுத்துக்கொண்டால் ராகுவும் தெலுங்கு மொழியை குறிப்பார்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.
இதுவும் ஒரு ஆணின் ஜாதகமே. லக்னத்தில் இரு சுப கிரகங்களான குருவும் சந்திரனும் அமைந்துள்ளது. குரு திக்பலத்தில் அமைந்து 5 ஆமிட ராகுவை பார்ப்பதால் ஜாதகர் தீவிர  மத நம்பிக்கை கொண்டவர். 9 ஆமதிபதி புதனாகி 1௦ ஆமிடத்தில் நீச செவ்வாயோடு இணைந்த நிலையில் செவ்வாய் லக்னத்தை பார்க்கிறது. இதனால்  ஜாதகர் மகாவிஷ்ணுவை வழிபடுகிறார். 9 ஆமிடத்தில் அமைந்த சூரியன் குரு பார்வை பெறுகிறார். இதனால் தந்தை சிவனை வழிபடுகிறார். தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி சனி நீசம் பெற்றுள்ளது. 4 க்கு 9 ஆமிடாதிபதி புதன் நீச செவ்வாயுடன் இணைந்துள்ளார். நீச சனியின் பார்வை திக்பல குருவை பெரிதும் பாதிக்காவிட்டாலும் நீசத்தை நோக்கி செல்லும் சந்திரனை பெரிதும் பாதிக்கும். இதனால் தாயாரின் வழிபாட்டில் ஒரு தவறோ குழப்பமோ இருக்கும். ஜாதகர் பகலில் பிறந்தவர் என்பதால் பகலில் பிறந்தவர்களுக்கு தாயாரை குறிக்கும் சுக்கிரனுடன் கேது இணைந்து சந்திரனை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஜாதகரின் தாயார் கேது குறிப்பிடும் கிரிஸ்தவ மதத்தை சார்ந்தவரவார். தந்தையும் தாயும் கலப்பு மணம் புரிந்தவர்கள்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
ரிஷப லக்ன ஜாதகத்தில் குல வழிபாடுகள் மற்றும் தந்தையை குறிக்கும் 9 ஆமிடத்ததிபதி சனி, 9 க்கு 8 ல் சிம்மத்தில் அமைந்துள்ளார். தாயாரை குறிக்கும் பாவமான சிம்மத்தின் 9 ஆமதிபதி செவ்வாய் நீசமாகியுள்ளார். இதனால் ஜாதகரின் தாயும் தந்தையும் ஓரிரு தலைமுறைக்கு முன்னதாக கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள். ஜாதகத்தில் சூரியன் சந்திரனின் ரோகிணியிலும் சந்திரன் சூரியனின் உத்திராடத்திலும் அமைந்து சாரப்ப்பரிவர்தனை பெற்றுள்ளனர். இது ஜாதகர் தாய் மதம் திரும்புவதை குறிக்கிறது. ரிஷப லக்னம் ஒரு சுப கிரகத்தின் லக்னமாக அமைந்து சுப கர்த்தாரியோகம் பெறுகிறது. கால புருஷனுக்கு 9 ஆம் பாவமான தனுசுவை அதன் அதிபதி குரு லக்னாதிபதியுடன் இணைந்து பார்க்கிறார். இரண்டும் சுப கிரகங்களாகும். இதனால் ஜாதகர் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி இந்து  தர்மங்களை தற்போது கடைபிடித்து வருகிறார். 

நான்காவது ஆணின் ஜாதகம் கீழே.
கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள். இதனால் ஜாதகருக்கு குடும்பம் அமையும்போது ஒரு மாறுதலை சந்தித்து குடும்பம் அமையவேண்டும் என்பதை இது குறிக்கிறது. ஜாதகர் திருமணத்தின்போது வேற்று மதத்தை சார்ந்த தனது மனைவியை, தனது தந்தையாரின் வற்புறுத்தலின் பேரில் தனது மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துகொண்டார். லக்னத்தில் குரு திக்பலம் பெறுகிறார். இதனால் குருவின் பாதகாதிபத்திய தோஷம் அடிபடுகிறது. குல வழிபாடுகளை குறிக்கும் 9 ஆமதிபதி சுக்கிரன் லக்னதில் நீசமாகியுள்ளார். லக்னாதிபதி புதன் நீசன் சூரியனுடன் அமைந்துள்ளார். கடவுள் நம்பிக்கைக்குரிய 9 ஆம் பாவத்தை 9 இன் விரையாதிபதியான 8 ஆமதிபதி செவ்வாய் 3 ஆமிடதிலிருந்து பார்க்கிறார். இந்த அமைப்புகளால் ஜாதகருக்கு இறை நம்பிக்கை இல்லை. லக்னத்தை 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்தும் ராகு லக்னாதிபதி புதனின் சாரம் பெற்றுள்ளார். லாபாதிபதி சந்திரன், ராகு சாரம் பெற்று  சந்திரனை நோக்கிச்சென்றுகொண்டுள்ளார். இதனால் பிறப்பில் ஜாதகர் ஒரு இஸ்லாமியர். திக்பலம் பெற்ற குரு சுக்கிரனுடன் இணைந்து 7 ஆம் பாவத்தையும் பார்க்கிறது. இதனால் மனைவிக்கு இறை நம்பிக்கை உண்டு. மனைவி ஒரு இந்து. மனைவியின் மத நம்பிக்கையில் ஜாதகர் தலையிடுவதில்லை. 
  
இறுதியாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்று பாதகத்தில் அமைந்துள்ளது. இதனால் மனைவி வகையில் ஒரு நெருடல் ஜாதகருக்கு ஏற்படும். பாதகாதிபதி புதனுடன் பரிவர்த்தனைக்கு பிறகு லக்னத்தில் குரு வந்து அமருகிறார். புதனுக்கு 7 ல் திக்பலம் இல்லை. இதனால் இங்கு லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்று பரிவர்த்தனையில் வந்து லக்னத்தில் அமர்ந்தாலும் திக்பலம் வேலை செய்யும். இதனால் இங்கு 7 ஆமதிபதி புதனைவிட லக்னத்தில் அமரும் லக்னாதிபதி குருவிற்கே வலு அதிகம். 1 ம் 7 ம் பரிவர்த்தனையாவதால் இவ்விரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் பாதகத்தை செய்ய இயலாது. 4 ஆமிடத்தில் 7 ஆமதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் கேது அமர்ந்து லக்னத்தில் அமைந்த 7 ஆமதிபதி புதன் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்து சாரப்பரிவர்த்தனை பெறுகிறார்கள். சாரப்பரிவர்தனைக்கு முன் கேது சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் சாரப்பரிவர்த்தனைக்கு பிறகு கேது சுக்கிரனை நோக்கியும் வருகிறார்கள். இதனால் ஜாதகரின் மனைவி திருமணதிற்கு சில வருஷங்களுக்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது கிறிஸ்தவத்தை பின்பற்ற மருத்துவமனையில் அறிவுறுத்தப்பட்டார். திருமணத்திற்கு பிறகு தற்போதும் சர்ச்சுக்கு சென்று வருகிறார். இங்கு 7 ஆமதிபதியைவிட லக்னாதிபதிக்கு வலு கூடுவதால் பரிவர்த்தனை குரு பரிவர்த்தனை கேதுவோடு இணைந்தாலும் லக்னத்தில் அமரும் கேது லக்னாதிபதியின் தன்மையை சார்ந்தே செயல்படுவார். மேலும் வக்கிரம் பெற்ற கிரகங்களை ராகு-கேதுக்கள் பாதிப்பதில்லை. இதனால் இங்கு ஜாதகரை மீறி மனைவியால் தனது குழந்தைகளை கிரிஸ்தவத்திற்கு  மதம் மாற்ற இயலாது. எனினும் கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதியான குரு வக்கிரமடைவது இதர மதம் சார்ந்த விஷயங்களில் தொடர்பை ஏற்படுத்தும் பாதகமான அமைப்பே.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Thursday 21 May 2020

8 ஆமிட ரகசியங்கள்

ஜாதகத்தில் லக்ன பாவத்தின் ஆயுளை தீர்மானிப்பது எட்டாவது பாவம்தான். ஒரு பாவத்திற்கு அதன் எட்டாவது பாவம் சிறப்பாக இருந்தால்தான் அந்த பாவத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். இதை கிரகம் நின்ற இடத்திற்கு எட்டாம் பாவத்தை அளவிட்டும்  கிரகத்தின் பலம், பலனத்தை அறியலாம். எட்டாவது பாவம் பல்வேறு ரகசியங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது. எட்டாவது பாவம் பொதுவாக நல்ல பலனை தர வாய்ப்பே இல்லை எனலாம். காரணம் எட்டாவது பாவத்தின் சக்தி ஜாதகரின் உயிரை தாங்கிப்பிடிக்க மட்டுமே செலவிடப்பட வேண்டும். எட்டாவது பாவம் ஒரு மனிதன் பிறரிடம் வெளிப்படுத்தக்கூடாத ரகசியங்களை குறிக்கும். அவை ஆயுள், அவமானங்கள், தண்டனைகள், உடலுறவு, மணமுறிவு, மறைப்பொருள், ஆன்மிகம், புதையல், பங்கு வணிகம், திடீர் பொருளாதாரங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை அடுத்தவரிடம்  வெளிப்படுத்தினால் ஜாதகர் தனது வாழ்வில் வீழ்ச்சியை சந்திப்பார் என்பது நமது தர்ம சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகம். ஆன்மிகம் என்பது மறைந்திருக்கும் இறை சக்தியை உணர்வதுதான். அதனால்தான் ஞான காரகன் கேது கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் உச்சமடைகிறார். மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமடைந்துள்ளார். ராசியதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் ராசிக்கு எட்டில் சிம்ம ராகுவிடம் தஞ்சமடைந்துள்ளார். லக்னத்தில் எட்டாமதிபதி புதன் அமர்ந்துள்ளார். இவை யாவும் மறைப்பொருளான பரம்பொருளை நாடும் நோக்கில் ஜாதகரின் கர்மா இயங்கும் என்பதை குறிப்பிடுகின்றன. சந்திரனை நோக்கி வரும் கேதுவும் இதை உறுதி செய்கிறது. லக்னாதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்துள்ளதாலும் ராசியதிபதி சனி சூரியனின் வீட்டில் மோட்சகாரகன் ராகுவுடன் இணைந்துள்ளதாலும் ஜாதகர் சிவாச்சாரியராக (சிவன் கோவிலில் பூஜை செய்பவர்) உள்ளார். கால புருஷனுக்கு போக ஸ்தானாதிபதி (3 ஆமதிபதி) புதன் லக்னத்தில் அமர்ந்ததால் உடல் ரீதியான போகத்தை ஜாதகர் விரும்புகிறார். புதன் எட்டாமதிபதியாகி எட்டாமிடம் உடலுறவையும் மறைபொருளையும் ஒருங்கே குறிப்பதால் இவ்விரண்டையும் ஜாதகரின் மனம் நாடுகிறது. புதனுடன் இணைந்துள்ள 12 ஆமதிபதி சுக்கிரன் படுக்கை சுகத்தோடு மோட்ச நிலைக்கும் அதிபதியாகிறார். புதன் சுக்கிரன் இணைவது மதன கோபால யோகம் என்று சொல்லப்படும் சூழலில் ஜாதகருக்கு சிற்றின்ப ஆசையும் ஆன்மீகமும் ஒருங்கே எழுகிறது. ஆனால் இங்கு இருவரும் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாய் அஸ்தங்கமாகிவிட்டதால் லக்னாதிபதியை மீறி புதனும் சுக்கிரனும் எதுவும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். ஜாதகருக்கு குடும்ப வாழ்க்கையை வழங்கவேண்டிய குரு 2 க்கு 8 ல் உச்ச வக்கிரமடைந்து குடும்ப வாழ்வை தர இயலாத சூழலில் அமைந்துவிட்டார். 1978 ல் பிறந்த ஜாதகரின் திருமண முயற்சிகள் இதுவரை வெற்றியடையவில்லை.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ரிஷப லக்ன ஆணின் ஜாதகத்தில் தற்போது அஷ்டமாதிபதியான குருவின் திசை நடக்கிறது. குரு லக்னத்திற்கு 8, 11 க்கு உரியவராகி லக்னத்திற்கு 2 ல் நிற்கிறது. 8 ஆமிடம் மறைந்திருக்கும் தனம். இவர் பங்கு வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். பங்கு வணிகம் நேரடி வருமானமல்ல. பாரம்பரிய தொழில் அல்ல. வணிக சந்தையில் மறைந்திருக்கும் தனத்தை தேடி முதலீடு செய்து பொருளீட்டுவதுதான். எனவேதான் லக்னத்திற்கு 8 ம் பாவம் பங்கு வணிகத்திற்கு உரிய பாவமாக பார்க்கப்படுகிறது. லக்னதிபதி சுக்கிரனும் பங்கு வணிகத்திற்கு உரிய கிரகங்களில் ஒன்றாகி அது பங்கு வணிகத்திற்கு மற்றொரு காரக கிரகமான புதனின் வீட்டில் தன ஸ்தானத்தில் நிற்பதால் ஜாதகர் பங்கு வணிகத்தில் பொருளீட்டுகிறார். இங்கு சுக்கிரனும் குருவும் இணைந்து ஜாதகருக்கு தனம் வரும் வழியை நிர்ணயம் செய்கின்றன.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி லக்னத்திற்கு 7 ல் திக்பலம் பெற்று நிற்கிறார். எனவே ஜாதகரை சனி எப்படியும் காப்பாற்றுவார் எனலாம். சனி ஆயுள் மற்றும் ஜீவன காரகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆயுள் என்பது சனியோடு 8 ஆமிடத்தையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. ஜாதகருக்கு லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் நிற்கும் ராகுவின்  திசை கடந்த பதினேழரை வருடங்களாக நடக்கிறது. 8 ஆமிடம் என்பது ஆயுளோடு ஒரு ஜாதகர் படும் அவமானங்களையும் குறிப்பிடும். ராகு சனியை நோக்கி நகர்ந்து வருகிறது. சனி வக்கிரமில்லாத நேர்கதியில் உள்ளது. இதனால் ஜாதகரின் ஜீவனம் ராகுவால் பாதிக்கப்படும். ராகுவின் காரக தொழிலை செய்தால் மட்டும் பாதிப்பு குறைவாக இருக்கும் எனலாம். ராகு சூரியனின் உத்திரம்-4 சாரம் வாங்கியுள்ளார். சூரியன் ரிஷபத்தில் நின்று ஜீவன பாவமான 1௦ ஆமிடத்தை பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு கெளரவதிற்கு உரிய சூரியனின் சாரம் வாங்கியுள்ளத்தால் இவர் வேலை செய்யுமிடங்களில் கௌரவம் பார்த்து வேலையோடு ஒன்ற இயலாமல் சண்டையிட்டு வந்துவிடுகிறார். சுய தொழிலை குறிக்கும் 1௦ ஆம் பாவாதிபதி செவ்வாய், வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளதால் சுயதொழிலிலும் சோபிக்க இயலாமல் போராடுகிறார். இதனால் ஜாதகர் பெருத்த அவமானங்களை சந்திக்கிறார். வேலை மற்றும் சுய சம்பாத்தியம் எதற்கும் லாயக்கற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுகிறார். அவமானங்களை எதிர்கொள்ள இயலாமல் திசா நாதன் ராகு 2 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் மதுப்பழக்கதிற்கும் அடிமையாகிவிட்டார். இங்கே ஆயுள்காரகன் சனி திக்பலம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் ஆயுள் ரீதியாக ஜாதகரை காப்பாற்றுகிறார். எனவே ராகு ஜாதகருக்கு ஆயுள் கண்டத்தை தர இயலவில்லை. இதனால் திசா நாதன் ராகு 8 ஆமிடம் குறிப்பிடும் அவமானங்களை தருகிறார். குரு திசை துவங்கியதும் ஜாதகர் தெளிவான வாழ்க்கைப்பாதைக்கு மாறி தனது அவமானங்களிளிருந்து விடுபடுவார் எனலாம்.

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
  
இந்த ஜாதகமும் முந்தைய ஜாதகத்திற்கு ஒப்பானதுதான். ஜாதகருக்கு நடந்தது சனி திசை. கும்ப லக்னாதிபதி சனி வக்கிர நிலை பெற்று லக்னத்திற்கு 11 லிருந்து திசை நடத்துகிறார். சனியும் 5 ஆமிட செவ்வாயும் நேர்பார்வை பார்த்துக்கொள்கின்றனர். சனி-செவ்வாய் தொடர்புகொள்பவர்கள் தங்கள் வாழ்நாளில் என்றாவது ஒருநாள் விபத்து, மணமுறிவு, கண்டம் போன்ற கடுமையான பாதிப்புகளை அடைகிறார்கள். லாபஸ்தான திசா நாதன் சனி தனது பகை கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சை வாங்கி 1௦ ஆவது பார்வையாக லக்னத்திற்கு 8 ஆவது பாவத்தை பார்க்கிறது. சாதாரணமாகவே சனியின் பார்வைக்கு கடுமை அதிகம் என்பது அனைவரும் அறிந்த நிலையில் செவ்வாயின் பார்வை பெற்ற சனிக்கு கடுமை மிக அதிகமாகும். சனி பார்க்கும் இடங்களுக்கு தனது பாதிப்பை தராமல் இருக்க மாட்டார். இந்நிலையில் சனியின் பார்வையை வாங்கும் செவ்வாயின் 4 ஆவது பார்வையும் 8 மிடத்தின் மீது விழுகிறது. ஜாதகர் தனது சனி திசையில்  ராகு புக்தியில் கொடுமையானதொரு வாகன விபத்தில் சிக்கி நீண்டதொடு மரணப்போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைத்தார். 8 ஆமிட ராகு வேகத்திற்கு உரிய சந்திரனோடும் ஆவேசத்திற்குரிய செவ்வாயோடும் கடுமைக்குரிய சனியோடும் தொடர்புகொண்ட நிலையில் புக்தியை நடத்துகிறது. சனி தான் பார்க்கும் இடத்திற்கு தனது சக்தியை தனது திசா புக்தியில் செலவிட்டே ஆக வேண்டும். இதனால் சனியால் விபத்தை தடுக்க இயலவில்லை. சனி லக்னத்தை 3 ஆம் பார்வை பார்த்ததால் கண்டத்தை கொடுத்து மரணத்தை தவிர்த்தாரா என்றால் அது குறைவே. ஏனெனில் சனி வக்கிரமாகி பின்னோக்கி வருகிறது. இதனால் சனியின் 3 ஆமிட பார்வை லக்னத்தை விட்டு விலகுகிறது. எனவே சனியால் ஜாதகரை காப்பாற்ற இயலாது. இங்கு ஜாதகரை காப்பாற்றியது சனி சாரம் அனுஷம்-1 பெற்ற விருட்சிக குருதான். குருவும் வக்கிரமாகி 9 ஆமிடத்தை நோக்கி போகிறார். இதனால் குருவின் அறை பங்கு பார்வை துலாத்திலிருந்து லக்னத்திற்கு கிடைக்கிறது. இதனால் ஆயுளை எடுக்க ஆயுள்காரகன் சனியின் சாரம் பெற்ற குருவின் அனுமதியும் திசா புக்தி நாதர்களுக்கு தேவை. குரு ஆயுளை எடுக்க அனுமதிக்கவில்லை.  இங்கு குரு ஜாதகரின் உயிரை காப்பாற்றினார் என்றால் அது மிகையல்ல. இங்கு குருவின் அமைப்பால் திசா புக்தி நாதர்கள் ஜாதகருக்கு 8 மிடம் குறிப்பிடும் கண்டத்தை மட்டுமே வழங்க முடிந்தது.

ஐந்தாவது ஆணின் ஜாதகம் கீழே.
.
விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்த்தனையாகியுள்ளார். பொதுவாக ஒரு மறைவு ஸ்தான பரிவர்த்தனைகள் சிறப்பல்ல. ஏனெனில் பரிவர்த்தனைகளே பாதிப்பை ஒரு வகையில் வழங்கிவிட்டுத்தான் பலனளிக்கும் என்ற நிலையில் மறைவு ஸ்தானங்களுடனான பரிவர்த்தனை ஒரு பாதிப்பையும் இழப்பையும் வழங்காமல் பலனளிக்க வாய்ப்பே இல்லை. எப்போது அவை இரண்டும் ஏற்படும் என்றால் தொடர்புடைய திசா புக்திகளில்தான் ஏற்படும். 8 ஆமதிபதி புதன் புத்திகாரகனாகும். புதன் லக்னத்திற்கு திக்பலத்தை வழங்கும் 1௦ ஆமதிபதி சூரியனோடு இணைந்து லக்னத்தில் நிற்பது சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இவ்விரு கிரகங்களும் லக்னம், நான்கு மற்றும் 8 ஆகிய இடங்களில் இணைவதுதான் சிறந்த நிபுணத்துவ யோகமாகும். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் 8 ஆமதிபதி புதனோடு பரிவர்தனையாவதால் ஜாதகருக்கு  பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். ஜாதகர் கணினி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இது நுட்ப அறிவால் ஏற்பட்டது. ஜாதகருக்கு 8 ஆமிடதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் சில வருட போராட்டமான வாழ்க்கைத்துனையுடனான மண வாழ்க்கை முறிவுக்கு வந்தது.

போராட்டமான மண வாழ்க்கைக்கு காரணம் சுக்கிரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் ஏற்பட்டது. இதனால் மனைவியின் குணம் ராகுவால் பாதிக்கப்படும். குடும்ப பிரிவினைக்கு அடித்தளமிட்டது கடந்து போன சந்திர திசையாகும். சந்திரன் விருட்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியாகி குடும்ப பாவத்தில் வந்து அமர்ந்து திசை நடத்திய சூழலில் கணவன் மனைவிக்கிடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தி அது முற்றிய நிலைக்கு தள்ளிவிட்டுத்தான் தனது திசையை முடித்திருக்கிறார். இந்நிலையில் மணமுறிவை குறிப்பிடும் 8 ஆம் பாவதிலிருக்கும் செவ்வாய் திசை துவங்கியதும் மண வாழ்வு முறிவு பெற்றது. பரிவர்த்தனைச் செவ்வாய் குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் பரிவர்த்தனையாகி அமர்ந்ததும் லக்னம் வலுவடைகிறது. அதனால் லக்ன பாவ செவ்வாய் திசை துவங்கியதும் 2 ஆமிடம் வீழ்ச்சியடைகிறது. இங்கு பிரிவினையை லக்ன பாவம் மற்றும் 8 ஆம் பாவம் ஆகிய இரண்டுமே குறிப்பிடும் என்பது கவனிக்கத்தக்கது. அதே சமயம் இப்படி லக்னத்தில் பரிவர்த்தனையால் வந்து அமரும் செவ்வாய் தனது பார்வைகளால் சுகஸ்தானமான 4 ஐயும் களத்திர பாவமான 7 ஐயும் 8 ஆம் பாவத்தையும் பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு மறுதிருமணமும் அமைந்தது.  

மீண்டும் உங்களை மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501   

Wednesday 13 May 2020

ஜாமக்கோள் ஆச்சரியங்கள்!



ஜாதகம் இல்லாதோர்க்கு ஜோதிடத்தில் வழி காட்ட இயலுமா என்றொரு கேள்வி எல்லோருக்கும் இருக்கும். பிரசன்ன ஜோதிடம் இதற்கு வழி காட்டுகிறது. பிரசன்னத்தில் பலதரப்பட்ட பிரசன்னங்கள் இருக்கின்றன. உதாரணமாக தீபப்பிரசன்னம், ஹோரைப்பிரசன்னம், சோழிப்பிரசன்னம், தாம்பூலப்பிரசன்னம், அஷ்டமங்களப்பிரசன்னம், பெண்டூலப்பிரசன்னம், ஹோராரரி பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம் என்று இந்தப்பட்டியல் நீள்கிறது. பொதுவாக பிரசன்னங்களின் மூலமாக தான் எண்ணி வந்த காரியத்தின் முடிவு எப்படி அமையும் என்பதே பிரசன்னம் கேட்பவர் அனைவரின் எதிர்பார்ப்புமாகும். ஒரு நுட்பமான ஜோதிடர் பிரசன்னத்தின் மூலம் கேள்விக்குண்டான விஷயத்தின் போக்கு அதன் முடிவு ஆகியவற்றை துல்லியமாக கூறிவிட முடியும். இதனோடு, வந்த நபரின் பாவனைகள், அந்த நேரத்தின் ஜோதிடர் உணரும், பார்க்கும், கிடைக்கும் நிமித்தங்கள், சகுனங்கள் ஆகியவற்றையும் இணைந்துப்பார்த்து பதிலளிப்பார் உதாரணமாக அஷ்ட மங்களப்பிரசன்னம் இப்படிப்பட்டதுதான்.

பொதுவாக ஜோதிடர்கள் இப்படி நடக்கும் எனும்போது அப்படி நடக்காமல் போனால் எப்படி அதை எதிர்கொள்வது என்றொரு கேள்வி எப்போதும் பிரசன்னம் கேட்டு வருபவர் அனைவரிடமும் இருக்கும். மேலும் கேள்வி எழுந்த சூழலை பிரசன்ன ஜாதகம் சுட்டிக்காட்ட வேண்டும் அப்போதுதான் அந்தப்பிரசன்னத்தின் மூலம் தெளிவான பதில் கிடைக்கும். இதை இதர வகை பிரசன்னங்களைவிட தெளிவாக அறுதியிடுவது ஜாமக்கோள் பிரசன்னமாகும். ஜாமக்கோள் பிரசன்னதிலும் கேள்வியின் நிலை சுட்டிக்காட்டப்படவில்லை எனில் பிரசன்னத்தை தொடர மாட்டார்கள். ஜாமக்கோள் பிரசன்னத்தில் கேள்வியின் சூழலை சுட்டிக்காட்டுவது மட்டுமின்றி, கேள்வியாளரின் நிலையையும் தெளிவாக அறிந்து உரைக்க முடியும். இந்தச் சிறப்பு மூலம் ஜாமக்கோள் பிரசன்னம் இதர முறை பிரசன்னங்களை விட மேம்பட்டு நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. இதை ஒரு உதாரண பிரசன்னத்தின் மூலம் காணலாம்.

மேஷ உதயம். உதயாதிபதி செவ்வாய் பெண் ராசியான கடகத்தில் நிற்கிறது. கேள்வியாளர் ஒரு பெண் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கடக ராசி கடலைக்குறிக்கும் ராசியாகும். மேஷ உதயம் என்பது தலை நகரத்தை சுட்டிக்காட்டுகிறது. கேள்வியாளரான பெண்மணி தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து என்னைத்தொடர்புகொண்டார். ஆருடம் கன்னியின் நிற்கிறது. உதயத்திற்கு ஆருடம் 6 ஆவதால் கேள்வியாளர் பணிபுரிபவர். கடகத்திலிருக்கும் உதயாதிபதி செவ்வாயை உழைப்பின் காரகன் சனி பார்ப்பது இதை உறுதி செய்கிறது.  6 ஆமிடம் வேலை. உதயத்திலும் ஆரூடதிலும் சூரியன் நிற்கிறது. இதனால் கேள்வியாளர் அரசுப்பணிபுரிகிறார். ஆரூடம் புதனின் வீடான கன்னி. உதயத்திலும் இரு புதன்கள்  நிற்கின்றன. இதனால் இவர் புதன் தொடர்புடைய கல்வி, கணக்கு, மருத்துவம் போன்றவற்றில் துறைகளில் ஒன்றில் பணி புரிபவராக இருக்கக்கூடும். கல்வி, போதனை என்பவை இரண்டாமிடத்தோடும்  தொடர்பாக  வேண்டும். ஆனால் இங்கு ஆரூடம் 6ல் நின்று 6 ஆமிடம் வியாதியையும் குறிப்பிடும் என்பதாலும் ஜாதகி மருத்துவத்தோடு தொடர்புடைய துறையில் இருக்க அதிகபட்ச வாய்ப்புண்டு. (பிற்பாடு கேள்வியாளர் இதை உறுதி செய்தார்.)

கேள்வியாளர் என்னிடம் ஜாதகம் அனுப்பி கேள்வி கேட்குமுன்னரே, அவர் தொடர்புகொண்ட நேரத்திற்கு நான் பிரசன்னம் கணித்தேன் என்பதால் கேள்வி என்ன என்பதையும் அனுமானிக்க வேண்டியிருந்தது. கேள்வியை கேள்வியாளர் கேட்கவில்லை எனும் சூழலில் உதயத்திற்கு 1௦ ஆமிடத்தைக்கொண்டும் உச்ச – நீச்ச கிரகங்களை வைத்தும் அனுமானிக்கலாம் என்பதன் அடிப்படையில் உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் இரு சனிகளும் நீச நிலையில் ஆட்சி சனியோடு இணைந்த குருவும் 1௦ ல் நிற்கிறது. இரு சனிகளின் 3 ஆவது பார்வையும் விரைய ஸ்தானத்தில் நிற்கும் 7 ஆமதிபதி சுக்கிரனின் மீதும் 7 ஆவது பார்வை கடகத்தில் நிற்கும் நீச நிலை பெற்று நிற்கும் களத்திர காரகன் செவ்வாயின் மீதும் 1௦ ஆவது பார்வை களத்திர பாவமான 7 ஆமிடத்திலும் பதிகிறது. மேலும்  உள்வட்டத்தில் செவ்வாய் உதயத்திற்கு பாதகத்தில் நிற்கிறார். உதயாதிபதி செவ்வாய் பிரிவினையை குறிக்கும் 8 ஆம் பாவ நீச சந்திரனுடன் பரிவர்த்தனையாகியுள்ளது. இது கேள்வியாளர் தனது மண வாழ்வில் பாதிப்பை அடைந்திருப்பதையும் தெளிவாக குறிப்பிடுவதோடு பணியிலும் கடுமையான உழைப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை தெரிவிக்கிறது. (பிற்பாடு கேள்வியாளர் இவ்விரண்டையும் உறுதி செய்தார்.) கூடுதலாக அவர் தெரிவித்தது, அவர் மருத்துவத்துறையில் சிறுநீரகத்துறையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் சுத்திகரிக்கும் பணியோடு தொடர்புடையவர். இதை பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறதா என காண்போம்.

பொதுவாக கடக உதயத்தில் செவ்வாய் நீசமாகி மகர சனி பார்ப்பது என்பதை மரண ஜாமம் என ஜாமக்கோள் பிரசன்னம் வரையறை செய்கிறது. மரண அவஸ்தைகளையும் மரணத்தோடு போராடுபவர்களையும்ம் இது குறிப்பிடுகிறது. காரணம் கால புருஷனுக்கு லக்ன மற்றும் அஷ்டமாதிபதி செவ்வாய் கால புருஷனின் மாரகாதிபதி சனியால் சுடுகாட்டை குறிக்கும் மகர ராசியிலிருந்து பார்ப்பதுதான். இதில் சனி வயதான மற்றும் நோயாளிகளை குறிக்கிறது. செவ்வாய் நீர் ராசியான கடகத்திலிருந்து சனியை பார்ப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடகம் நீர் ராசி என்பதிலிருந்து சிறுநீர் என்பதையும், கழிவுகளை குறிக்கும் சனி கழிவின் நீர்வடிவமான சிறு நீர் வெளியேற்றம் பாதிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிடுகிறது. ஜாமச்சனி (வெளிவட்டச்சனி) செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம்-3 ல் நின்று கடக செவ்வாயை பார்ப்பது இதை உறுதி செய்கிறது. சிறுநீரகத்தை குறிப்பிடும் ராசி துலாம் ராசியாகும். துலாம் ராசியை கடக செவ்வாய் நான்காம் பார்வையாக பாப்பதும் மகர சனி 1௦ ஆம் பார்வையாக பார்ப்பதாலும் கேள்வியாளர் சிறுநீரகம் பாதிகப்பட்டவர்களோடு உத்தியோக ரீதியாக தொடர்புகொள்வார் என்பதோடு, இதே அமைப்புதான் கேள்வியாளரது மண வாழ்விலும் பாதிப்பை கொடுத்துள்ளது என்பதும் தெளிவாகிறது. 

இந்த பிரசன்னம் கேள்வியாளரின் நிலையை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இதர வகை பிரசன்னங்களில் இத்தனை தெளிவு கிடைக்காது.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை, வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501  

Saturday 9 May 2020

கோணமும் எதிர்க்கோணமும்!


ஜாதகத்தில் ஒருவருக்கு ஒரு பாதிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதன் பதிலீடாக ஒரு கொடுப்பினையும் நிச்சயம் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து ஜாதகங்களிலும் சாதக பாதக அம்சங்கள் உண்டு. பாதகம் இல்லாமல் சாதகமில்லை. எனவே ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தில் பாதகங்களை மட்டும் சுட்டிக்காட்டாமல் சாதகமான அம்சங்களையும் கண்டறிந்து அதில் ஜாதகரை ஈடுபடச்செய்ய வழிகாட்ட வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.



இந்த ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதி பாவியாகி புத்திர ஸ்தானமான 5 ல் அமைந்து லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு திருமணம் புத்திரப்பேறு ஆகியவை தாமதமாகும் (இவை இரண்டும் ஜாதகருக்கு தாமதமாகவே அமைந்தது). எனினும் லக்னாதிபதி லக்ன திரிகோணத்தில் அமைவது சிறப்பு. 

6 ஆமதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைவது சிறப்பல்ல. இதனால் ஜாதகருக்கு தாம்பத்யம் உள்ளிட்ட அனைத்து சுகங்களும், ஆரோக்யமும் பாதிக்கப்படும். ஆனால் புதன் 4 ஆமிடமான வித்யா ஸ்தானத்தில் அமைவதால் கல்வி சிறப்பாக இருக்கும்.

ஆய்வுக்கல்விக்குரிய பாவமான 11 ஆம் பாவத்தில் சந்திரன் நீசமடைவது ஆய்வுக்கல்விக்கு சாதகமான அமைப்பல்ல. எனினும் 11 ஆமிடம் நீச பங்கமாகி 11 ல் அமைந்த சந்திரன் மற்றும் சந்திரன் நின்ற வீட்டதிபதியின் (ராசியாதிபதி)  காரக வகையில் ஆய்வுக்கல்வி பயின்றால் அது பாதிப்பை தராது.. ஜாதகர் பல் மருத்துவத்தில் ஆய்வுக்கல்வி (PhD) பயின்றவர். 

சனி அஷ்டமாதிபதி சூரியனுடன் அமைவது சிறப்பல்ல எனினும்  அஸ்தங்கமாகாமல் (சூரியன்-3 பாகை, சனி-27 பாகை) சூரியனோடு அமைவது ஜாதகர் ஜீவன விஷயத்தில் உயர்ந்த நிலையை அடைய உதவும்.
  
குரு நீசம் பெறுவது சிறப்பல்ல. எனினும் நீசம் பெற்றாலும் குரு லக்னத்தில் அமைவது திக்பலமாகும்.

7 ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று பாதகத்தில் அமைவது சிறப்பல்ல. எனினும் பாதகாதிபதி செவ்வாயே ராசி அதிபதியாகி ராசியின் கேந்திரத்தில் அமைவதால் சந்திரன் நீச பங்கமடைவது சிறப்பு.

சனி - செவ்வாய் 2 ஆமிடத்தோடு தொடர்புகொள்வது சிறப்பல்ல எனினும் காதல் திருமணத்திற்கு இது மிகச்சிறப்பான அமைப்பாகும். (ஜாதகர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.) 

சனி–செவ்வாய் பரஸ்பர பார்வை பெறுவது சிறப்பல்ல. எனினும்   இவ்விரண்டின் காரகங்கள் கலந்த (செவ்வாயின் காரகம் முதன்மையாய் இருக்க வேண்டும்) தொழிலை (சனி-செவ்வாய் - சீருடையணிந்த எந்தப்பணியும்) செய்வது சிறப்பாகும். ஜாதகர் பல் மருத்துவர். 

சனி-சந்திர தொடர்பு பூனர்பூ தோஷத்தால் திருமணம் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் அனைத்தும் தாமதமாக நடைபெறும். எனினும் தாமதமானாலும்  ஜீவன விஷயங்களில் ஜாதகர் சாதனை படைப்பார். 

லக்னம் பாவ கர்த்தாரியில் அமைந்திருப்பது தோஷமாகும். எனினும் ஜாதகரிடம் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மனோதிடம் இருக்கும்.

சனியை நோக்கி கேது வருவது தொழில் தடையாகும். எனினும் கேதுவின் காரக தொழிலை செய்தால் பாதிப்பு குறைவாகும். கேதுவின் காரகங்களில் மருத்துவமும் ஒன்றாகும். 

சுக்கிரன் சூரியனோடு இணைந்திருப்பது (சூரியன்-3 பாகை, சுக்கிரன்-13 பாகை) தோஷமாகும். எனினும் மனைவி அரசுவகை தொடர்புகளால் உயர்வடைவார். (மனைவி உயர் பதவி வகிக்கும் அரசு ஊழியர்)

சுக்கிரனை நோக்கி கேது வருவது மனைவிக்கு தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எனினும் கேதுவின் காரக செயல்களில் மனைவி ஈடுபட்டால் பாதிப்பு குறைவாகும். (மனைவி மருந்துக்களோடு தொடர்புடைய துறையில் பணி செய்கிறார்)
.
ராகு – கேதுக்களின் அச்சுக்கு வெளியே 7 ஆமதிபதி சந்திரன் பாதகத்தில் லக்னாதிபதி சனியின் அனுஷம்-2 ல் இருப்பது மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எனினும் சுக்கிரனையும் 7 ஆமிடத்தையும் குரு பார்வை செய்வதால் பிரிவு வேலை நிமித்தமாகவே இருக்கும் எனவே திருமண வாழ்வில் பிரிவு இருக்காது.

12 ஆமிடத்தில் ராகு அமைவது ஜாதகரது உழைப்பை பிறர் உறிஞ்சும் அமைப்பாகும். தாம்பத்யமும் தூக்கமும் இதனால் பாதிப்புக்குள்ளாகும். கடின சூழ்நிலைகளிலும் இரவிலும் பணிபுரியும் சூழல் இதனால் ஏற்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இதனால் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.   எனினும்   6 ஆமிடத்தில் கேது அமைவது எதிர்ப்புகளை முறியடிக்கும் அமைப்பாகும். வாழ்வில் எத்தனை கடின சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் வெற்றிகரமான மனிதராகவே இவர் அறியப்படுவார்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் வாழ்க்கை. தீமைகளை அறியாவிட்டால் நன்மைகளின் அருமை தெரியாது. வாழ்க்கையின் முக்கியமான புதிரே இதுதான். ஜாதகத்தில் உள்ள சாதக அம்சங்களை சுட்டிக்காட்டி ஜாதகரை நெறிப்படுத்துவது ஒரு ஜோதிடரின் தலையாய பணியாகும். 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 08300124501.

Saturday 2 May 2020

7 ஆம் பாவ சூட்சுமங்கள்



ஜோதிடத்தில் 7 ஆம் பாவம் வாழ்க்கைத்துணை என்பதை தாண்டி தொடர்பு ஸ்தானம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவரின் தொடர்புகள் நன்கு அமைந்தால்தான் அவரது வாழ்க்கை சுகமானதாக, நிம்மதியானதாக அமையும். 7 ஆமிடம் கெட்டுவிட்டால் ஜாதகருக்கு அமையும் தொடர்புகள் மோசமானதாக நிச்சயம் இருக்கும் எனலாம். ஜாதகத்தில் லக்னம் ராசி அதன் அதிபதிகளுக்குப்பிறகு முக்கிய கிரகமாக 7 ல் நிற்கும் கிரகம் வரையறை செய்யப்படுகிறது. அதனால்தான் 7 ஆம் பாவத்தை நிவர்த்தி பாவம் என்கிறார்கள். பொதுவாக 7 ஆம் பாவத்தை நிவர்த்தி பாவம் என்று பார்ப்பதை விட ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 7 ல் நிற்கும் கிரகத்தை அந்த பாவத்தின் நிவர்த்தி கிரகம் என்று பார்ப்பதும் சிறப்பு வாய்ந்தது.  இக்கருத்தின் பின்னணியிலும் சில சூட்சுமங்கள் உள்ளன. அவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.

ஜாதகர் 1980 ல் பிறந்த ஒரு ஆண். லக்னத்திற்கு 7 ல் நிவர்த்தி ஸ்தானத்தில் சனி திக் பலத்தில் லக்னாதிபதி குருவோடு இணைந்து நிற்கிறது. இது பொருளாதாரத்திற்கு சிறப்பான அமைப்பாக கூறப்பட்டாலும் இவ்வமைப்பு பிரம்மஹத்தி தோஷத்தை சுட்டிக்காட்டுகிறது. இதனால் குடும்ப வாழ்வு பாதிக்கப்படவேண்டும். நிவர்த்தி ஸ்தானமே இங்கு பாதகஸ்தானமாவதால் 7 ஆமிட கிரகங்களை சாந்தப்படுத்தினால் ஜாதகருக்கு சிரமங்கள் குறையுமா என்றால் நிலைமை குறைந்தது போலவும் இருக்கும் குறையாதது போலவும் இருக்கும். ஏனெனில் பாதக ஸ்தான கிரகங்கள் பாதகத்தை செய்யாமல் விடாது. ஆனால் லக்னாதிபதியும் திக்பல சனியும் ஜாதகரை தாங்கிப்பிடிக்கவும் செய்ய வேண்டுமே என்றால் உண்மையாகவே ஜாதகரை தாங்கிப்பிடிக்கவும்தான் வேண்டும். இங்கு குரு லக்னத்தை 7 ல் இருந்து பார்ப்பது சிறப்பு என்றால், குரு தான் இருக்கும் இடத்தை அழித்துத்தான் லக்னத்தை பாதுகாப்பார். ஆனால் சனி குருவிற்கு எதிராக செயல்படுவார். அதாவது சனி இருக்கும் இடத்தை வாழவைப்பார் மாறாக பார்க்கும் இடத்தைத்தான் அழிப்பார். இதனால் 7 ஆமிடம் இங்கு சம நிலை பெறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் குரு பாதகாதிபதி புதனுடன் பரிவர்த்தனை ஆகிறார்.இப்போது எப்படிப்பட்ட சூழல் உருவாகும் என்றால் ஜாதகர் ஜீவன வகையில் பல கசப்பான சூழல்களை எதிர்கொள்ளவேண்டும். ஜாதகருக்கு புதன் சார்ந்த வகைகளில் ஜீவனம் அமையும் எனக்கூறலாம். திக்பபல சனியுடன் உச்ச புதன் சேர்வதால் சனி-புதன் தொடர்புடைய தொழில்களை செய்வதே நிவர்த்தி என்றாவதற்கும் ஒரு வாய்ப்பு ஏற்படும். அப்படியானால் மனைவியுடனான குடும்ப வாழ்வு என்னவாகும் என்றால், புதன் 7 ஆமதிபதி ஆவதால் தனது காரகத்துவம் சார்ந்த கூட்டாளி வகைக்கே முக்கியத்துவம் அளிப்பார். இந்த ஜாதகத்தில் சனியோடு பரிவர்த்தனை புதன் சேர்வதால் ஜாதகர் களத்திர வகை பாதிப்புகளைவிட தொழில் வகை பாதிப்புகளையே அதிகம் அடைவார் எனலாம். அதற்கு சனி புதன் சேர்க்கையே ஏமாற்றத்தை குறிப்பதும் ஒரு காரணம். மனைவி வழி பாதிப்பிற்கு சுக்கிரனின் நிலையையும் கவனிக்க வேண்டும். இந்த ஜாதகர் ஜீவன வகைகளில் பல்வேறு கசப்பான சூழ்நிலைகளை எதிர்கொண்டார். குடும்ப வகையில் பாதிப்பில்லை.

இப்போது பின்வரும் இரண்டாவது ஜாதகத்தை கவனியுங்கள்.
இந்த ஜாதகத்தில் நிவர்த்தி ஸ்தானத்தில் உச்ச குரு அமைகிறது. இதனால் உச்ச குரு  நிவர்த்தி கிரகமாகிறார். ஜாதகர் குரு சார்ந்த ஆன்மீக விஷயங்களில் ஈடுபடும்போது மனச்சாந்தி பெறுவதாக கூறுகிறார். ஆனால் குரு இருக்குமிடத்தை அழிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகத்தில் குரு 7 ஆமிடத்தை அழிக்கிறார். ஜாதகருக்கு வாழ்க்கைத்துனைவர் வகைகளில் சிறப்பிருக்காது. இப்பாதிப்பை தவிர்க்க குருவிற்கு நிவர்த்தி ஸ்தானமான லக்னத்தில் இருக்கும் கிரகத்தை அமைதிப்படுத்த வேண்டும். லக்னத்தில் கிரகங்கள் இல்லாவிட்டால் லக்னத்தோடு தொட்டர்புகொள்ளும் கிரகங்களையோ அல்லது குருவின் சார நாதனையோ வணங்க வேண்டும். இதே குரு லக்னத்தில் அமைந்தால் ஜாதகருக்கு தான் இருக்கும் இட அமைப்பில் பாதிப்பை தருவாரா என்றால் லக்னத்தில் குரு திக்பலம் பெறுவதால் லக்ன குரு ஜாதகருக்கு பாதிப்பைத்தரமாட்டார்.

மூன்றாவது ஜாதக அமைப்பு கீழே.
உபய லக்னங்களுக்கு 7 ஆமிடமே நிவர்த்தி மற்றும் பாதக ஸ்தானமாக வருகிறது. இங்கே நிவர்த்தி ஸ்தானத்தில் கிரகங்கள் இல்லை. ஆனால் நிவர்த்தி ஸ்தானத்தை லக்னாதிபதி புதன் தனது நட்புக்கிரகமான சூரியனுடன் இணைந்து பார்க்கிறது. லக்னத்தில் புத-ஆதித்ய யோகமும் செயல்படுகிறது. இந்த ஜாதகர் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் சூரியன் மற்றும் புதன் இணைந்த தொடர்புகளையோ  அல்லது  செயல்களிலோ தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் அவைகளே ஜாதகருக்கு நிவர்த்தியை வழங்கி சிறப்பைச்செய்யும். லக்னத்தில் சூரியன் இருப்பதால் ஜாதகரின் தொடர்புகள் அரசு சார்ந்த வகைகளில் இருக்கலாம். புதனும் தொடர்பு ஸ்தானத்தை பார்ப்பதால் புதனின் காரகத்துவங்களிலும் ஜாதகருக்கு தொடர்புகள் இருக்கலாம். ஜாதகர் புதன் குறிப்பிடும் வலையுலகில் புகழ் பெற்ற ஒரு ஜோதிடர். சூரியன் குறிப்பிடும் தலைமைச்செயலக  ஊழியர்.

நான்காவதாக மற்றொரு ஜாதகம்.
மகர லக்ன ஜாதகத்தில் காதலுக்குரிய காரக கிரகமான புதன் லக்னத்தில் திக்பலம் பெற்று 7 ஆம் பாவத்தை பார்வை செய்கிறது. இதனால் ஜாதகி காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திக்பல புதனும் 7 ஆமதிபதி சந்திரனும் ஒன்றுக்கொன்று 5 – 9 ஆக அமைந்ததால் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது. ஆனால் இங்கு புதன் 6 மற்றும் 9 ஆமதிபதி என்பது கவனிக்கத்தக்கது. 7 ஆமதிபதி சந்திரன் 7 க்கு பாதகத்தில் உச்சமாகியுள்ளதால் இவரது குடும்ப வாழ்விலும் புயல்வீசிக்கொண்டிருக்கிறது. இப்போது 7 க்கு விரையாதிபதியான 6 ஆமதிபதி புதன் லக்னத்திலிருந்து 7 ஆம் பாவத்தை பார்வை செய்வதால் குடும்ப வாழ்வு மேம்பட நிவர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்யும் புதன் குறிப்பிடும் மகாவிஷ்ணுவை வழிவடுவது பலனளிக்குமா என்றொரு கேள்வி எழும். மேலும் 7 ஆமாதிபதி 7க்கு பாதகத்தில் நிற்கையில் அது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று குழப்பம் வரக்கூடும். இங்கு புதன் திக்பலம் பெற்றுவிட்டதால் மேற்கண்ட கேள்விகளுக்கு இடமே இல்லை. நிச்சயம் இவர் மகாவிஷ்ணுவைத்தான் வழிபட வேண்டும். மேலும் இவர் திருப்பதி பெருமாளை வழிபடுவது மிகச் சிறப்பு.

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501