Showing posts with label மருத்துவ ஜோதிடம்.. Show all posts
Showing posts with label மருத்துவ ஜோதிடம்.. Show all posts

Saturday, 22 August 2020

கொரானா ஸ்பீக்கிங்!


கொரானாவால் உலகம் பீதியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் கொரானாவால் உயிரிழப்புகளை சந்தித்த சில ஜாதகங்களை ஆராய்ந்தபோது, தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கும் கொரானா மரணங்களுக்கும் உள்ள நேரடித்தொடர்பை தெளிவாக உணர முடிகிறது. ராகு தடைகளுக்கு உரிய கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே. மிதுனம் கால புருஷ தத்துவப்படி தைராய்டு மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் ராசியாகும். கொரானாவால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் சுவாசிப்பதில் ஏற்படும் தடையால்தான் உயிரிழக்கின்றனர். ஜனன காலத்தில் மிதுன ராசியும் அதன் அதிபதி புதனும் பாதிக்கப்பட்டு, தற்போது மாரக திசா-புக்திகள் நடப்பவர்களே கொரானா மூலம் மரணத்தை அதிகம் தழுவுகின்றனர். உடலில் ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்களும், புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களும் கொரானா தாக்குதலுக்கு உள்ளாக  வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

 கீழே ஒரு ஜாதகம்.

கன்னி லக்னத்திற்கு மீனம் பாதக ஸ்தானம். மீனத்தில் லக்னாதிபதி புதன் நீசமாகியுள்ளார். அதே சமயம் பாதகாதிபதி குரு லக்னத்திற்கு 1௦ ல் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் நிற்கிறார். இதனால் இங்கு பரிவர்த்தனை யோகம் செயல்படுகிறது. இந்த பரிவர்தனையால் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். இதனால் இங்கு குருவின் பாதகாதிபத்திய தோஷம் விலகுகிறது.

ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு மீனத்தில் ஆட்சி வீட்டிற்கு வரும் பாதகாதிபதி குருபாதகத்தை செய்யும் நிலையிலேயே உள்ளார். எனவே பரிவர்தனைக்குப்பிறகு இங்கு பாதக தோஷம் வலுவடைகிறது. இப்போது குரு மிதுனத்தில் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். இதனால் தனித்து லக்னத்தில் நிற்கும் ராகு லக்னாதிபதி புதன் போலவே செயல்படுவார். இதனால் ராகுவின் சாரத்தில் நிற்கும் குருவை லக்னாதிபதி புதனின் சாரத்தில் நிற்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் குரு நன்மையை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் பரிவர்த்தனைக்கு முன்னர்தான். பரிவர்த்தனைக்குப்பிறகு குரு ஆட்சி பெறும் நிலையில் இவை தlலைகீழாக மாறிவிடும். புதன் மீனத்தில் சுய சாரத்தில் ரேவதி – 2 ல் நிற்கிறார். இதனால் இங்கு குருவிற்கு லக்னாதிபதியின் தொடர்பு பரிவர்தனைக்குப்பிறகு மீண்டும் ஏற்படுகிறது. இதனால் இப்போது குருவின் செயல்பாடு எப்படி அமையும் என்ற கேள்வி எழும். ஏழும் பத்தும் பரிவர்த்தனை ஆவதால் இங்கு பரிவர்த்தனை ஆகும் இடங்களுக்கே கிரகங்கள் செயல்பட வேண்டும் எனவே லக்னத்திற்கு பாதகத்தை குரு செயல்படுத்த மாட்டார் என்றொரு கருத்து இங்கு எழும்.

ஆனால் கிரகங்கள் பரிவர்த்தனை ஆனாலும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஓரளவு அதாவது சுமார் 3௦ சதவீத பலனை வழங்க வேண்டும். மீதி 7௦ சதவீத பலனை தாங்கள் பரிவர்த்தனை ஆகிச்சென்று அமரும் இடத்திற்கு வழங்கும் என்றொரு கருத்தே பெரும்பாலும் நடைமுறையில் ஏற்கத்தக்கதாக உள்ளது. இந்தக்கருத்தை கவனத்தில்கொண்டு இப்போது இந்த பரிவர்த்தனையை அனுகினால் பரிவர்த்தனை ஆகும் குருவும் புதனும் இணைந்தே ஜாதகருக்கு நன்மையையும் தீமையையும் கலந்து செய்யவேண்டும் என்றொரு எண்ணம் வரும். இக்கருத்தே சரியானதும் கூட.

இப்போது உண்மையில் இக்கிரகங்கள் என்ன பலனை ஜாதகருக்கு வழங்கியுள்ளன என்று கவனித்தால், லக்னத்தில் ராகு அமர்ந்து, லக்னாதிபதி புதன் பரிவர்த்தனைக்குமுன் மீன ராசியில் நிற்பதாலும், பரிவர்த்தனைக்குப்பின் லக்னாதிபதி புதன், குரு நின்ற ராகுவின் சாரத்திற்கு வருவதாலும் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு வெளிநாட்டில் வசிக்கிறார். 7 ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் வாழ்க்கைத்துனையுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். 1௦ ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கின்றனர். 1௦ ஆமிடம் கால புருஷனுக்கு 3 ஆமிடமான கழுத்து மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் மிதுன ராசியாகிறது. இதனால் ஜாதகருக்கு இவை தொடர்பாக உபாதைகள் ஏற்படின் அது மாரக வியாதியாக உருமாறும். பரிவர்த்தனைக்குப்பின் மாரக ஸ்தானத்திற்கு வரும் குரு 5 ஆம் பார்வையாக கடகத்தை பார்ப்பார். 11 ஆமிடம் என்பது அனைத்து லக்னத்திற்கும் பொதுவான மாரக ஸ்தானமாகும். கடகம் மார்பை குறிக்கும் ராசியாகி பரிவர்த்தனை குருவின் பார்வையை பெறுகிறது. ராகு சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. ராகுவால் ஏற்படும் மூச்சுத்திணறல் மார்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும், நுரையீரல் இயக்கத்தையும் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. இதனால் இந்த ஜாதகர் மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்பால் மார்பு மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு ஆயுள்தோஷத்தை சந்திப்பார் என அனுமானிக்கலாம்.

திசா – புக்திகளின் அடிப்படியில்தான் அது நிகழும் என்றாலும், லக்னாதிபதி பாதகாதிபதி மற்றும் மாரக ஸ்தானம் இவற்றோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பைக்கொண்டே இதை அனுமானிக்கவேண்டும். இந்த அமைப்பு உள்ளோருக்கு தற்போது மாரக திசா-புக்தி நடந்தால் அத்தகையோர் தற்போது உலகை பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே புதன், மாகர ஸ்தானம், மிதுனம், கடக ராசி தொடர்புடையவர்கள், ஜனன ஜாதகத்தில் புதன்+ராகு சேர்க்கை உள்ளவர்கள், ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள், கவனமாக இருக்க வேண்டிய காலமிது. திசா-புக்தி சிறப்பாக அமையப்பெற்றவர்கள் இது பற்றி கவலைப்படாமல் கவனமாக இருந்தால் போதும்.

 

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

 அதுவரை வாழ்த்துக்களோடு,


அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Saturday, 9 May 2020

கோணமும் எதிர்க்கோணமும்!


ஜாதகத்தில் ஒருவருக்கு ஒரு பாதிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதன் பதிலீடாக ஒரு கொடுப்பினையும் நிச்சயம் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்து ஜாதகங்களிலும் சாதக பாதக அம்சங்கள் உண்டு. பாதகம் இல்லாமல் சாதகமில்லை. எனவே ஜோதிடர்கள் ஒருவரது ஜாதகத்தில் பாதகங்களை மட்டும் சுட்டிக்காட்டாமல் சாதகமான அம்சங்களையும் கண்டறிந்து அதில் ஜாதகரை ஈடுபடச்செய்ய வழிகாட்ட வேண்டும்.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.



இந்த ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதி பாவியாகி புத்திர ஸ்தானமான 5 ல் அமைந்து லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு திருமணம் புத்திரப்பேறு ஆகியவை தாமதமாகும் (இவை இரண்டும் ஜாதகருக்கு தாமதமாகவே அமைந்தது). எனினும் லக்னாதிபதி லக்ன திரிகோணத்தில் அமைவது சிறப்பு. 

6 ஆமதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைவது சிறப்பல்ல. இதனால் ஜாதகருக்கு தாம்பத்யம் உள்ளிட்ட அனைத்து சுகங்களும், ஆரோக்யமும் பாதிக்கப்படும். ஆனால் புதன் 4 ஆமிடமான வித்யா ஸ்தானத்தில் அமைவதால் கல்வி சிறப்பாக இருக்கும்.

ஆய்வுக்கல்விக்குரிய பாவமான 11 ஆம் பாவத்தில் சந்திரன் நீசமடைவது ஆய்வுக்கல்விக்கு சாதகமான அமைப்பல்ல. எனினும் 11 ஆமிடம் நீச பங்கமாகி 11 ல் அமைந்த சந்திரன் மற்றும் சந்திரன் நின்ற வீட்டதிபதியின் (ராசியாதிபதி)  காரக வகையில் ஆய்வுக்கல்வி பயின்றால் அது பாதிப்பை தராது.. ஜாதகர் பல் மருத்துவத்தில் ஆய்வுக்கல்வி (PhD) பயின்றவர். 

சனி அஷ்டமாதிபதி சூரியனுடன் அமைவது சிறப்பல்ல எனினும்  அஸ்தங்கமாகாமல் (சூரியன்-3 பாகை, சனி-27 பாகை) சூரியனோடு அமைவது ஜாதகர் ஜீவன விஷயத்தில் உயர்ந்த நிலையை அடைய உதவும்.
  
குரு நீசம் பெறுவது சிறப்பல்ல. எனினும் நீசம் பெற்றாலும் குரு லக்னத்தில் அமைவது திக்பலமாகும்.

7 ஆமதிபதி சந்திரன் நீசம் பெற்று பாதகத்தில் அமைவது சிறப்பல்ல. எனினும் பாதகாதிபதி செவ்வாயே ராசி அதிபதியாகி ராசியின் கேந்திரத்தில் அமைவதால் சந்திரன் நீச பங்கமடைவது சிறப்பு.

சனி - செவ்வாய் 2 ஆமிடத்தோடு தொடர்புகொள்வது சிறப்பல்ல எனினும் காதல் திருமணத்திற்கு இது மிகச்சிறப்பான அமைப்பாகும். (ஜாதகர் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.) 

சனி–செவ்வாய் பரஸ்பர பார்வை பெறுவது சிறப்பல்ல. எனினும்   இவ்விரண்டின் காரகங்கள் கலந்த (செவ்வாயின் காரகம் முதன்மையாய் இருக்க வேண்டும்) தொழிலை (சனி-செவ்வாய் - சீருடையணிந்த எந்தப்பணியும்) செய்வது சிறப்பாகும். ஜாதகர் பல் மருத்துவர். 

சனி-சந்திர தொடர்பு பூனர்பூ தோஷத்தால் திருமணம் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் அனைத்தும் தாமதமாக நடைபெறும். எனினும் தாமதமானாலும்  ஜீவன விஷயங்களில் ஜாதகர் சாதனை படைப்பார். 

லக்னம் பாவ கர்த்தாரியில் அமைந்திருப்பது தோஷமாகும். எனினும் ஜாதகரிடம் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் மனோதிடம் இருக்கும்.

சனியை நோக்கி கேது வருவது தொழில் தடையாகும். எனினும் கேதுவின் காரக தொழிலை செய்தால் பாதிப்பு குறைவாகும். கேதுவின் காரகங்களில் மருத்துவமும் ஒன்றாகும். 

சுக்கிரன் சூரியனோடு இணைந்திருப்பது (சூரியன்-3 பாகை, சுக்கிரன்-13 பாகை) தோஷமாகும். எனினும் மனைவி அரசுவகை தொடர்புகளால் உயர்வடைவார். (மனைவி உயர் பதவி வகிக்கும் அரசு ஊழியர்)

சுக்கிரனை நோக்கி கேது வருவது மனைவிக்கு தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எனினும் கேதுவின் காரக செயல்களில் மனைவி ஈடுபட்டால் பாதிப்பு குறைவாகும். (மனைவி மருந்துக்களோடு தொடர்புடைய துறையில் பணி செய்கிறார்)
.
ராகு – கேதுக்களின் அச்சுக்கு வெளியே 7 ஆமதிபதி சந்திரன் பாதகத்தில் லக்னாதிபதி சனியின் அனுஷம்-2 ல் இருப்பது மனைவியை பிரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எனினும் சுக்கிரனையும் 7 ஆமிடத்தையும் குரு பார்வை செய்வதால் பிரிவு வேலை நிமித்தமாகவே இருக்கும் எனவே திருமண வாழ்வில் பிரிவு இருக்காது.

12 ஆமிடத்தில் ராகு அமைவது ஜாதகரது உழைப்பை பிறர் உறிஞ்சும் அமைப்பாகும். தாம்பத்யமும் தூக்கமும் இதனால் பாதிப்புக்குள்ளாகும். கடின சூழ்நிலைகளிலும் இரவிலும் பணிபுரியும் சூழல் இதனால் ஏற்படும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் இதனால் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.   எனினும்   6 ஆமிடத்தில் கேது அமைவது எதிர்ப்புகளை முறியடிக்கும் அமைப்பாகும். வாழ்வில் எத்தனை கடின சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் வெற்றிகரமான மனிதராகவே இவர் அறியப்படுவார்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் வாழ்க்கை. தீமைகளை அறியாவிட்டால் நன்மைகளின் அருமை தெரியாது. வாழ்க்கையின் முக்கியமான புதிரே இதுதான். ஜாதகத்தில் உள்ள சாதக அம்சங்களை சுட்டிக்காட்டி ஜாதகரை நெறிப்படுத்துவது ஒரு ஜோதிடரின் தலையாய பணியாகும். 

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 08300124501.

Friday, 14 February 2020

பயமும் ஜோதிடமும்

துணிந்தவர்களுக்கு துக்கமில்லை என்பது முன்னோர் வாக்கு. துணிந்தவர்கள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அச்சமின்றி செயல்பட்டு எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறிச் செல்வர். அதே சமயம் அவர்கள் இழப்புகளை சந்திக்கவும் தயங்குவதில்லை. பாதிப்புகளை மட்டுமே பார்ப்பவர்கள் வாழ்வில் ஒருநாளும் முன்னேற முடியாது. ஜோதிடத்தில் பயம் என்பது ஒரு தண்டனை என்றுதான் கூற வேண்டும். ஜனன ஜாதகத்தில் சந்திரன் பாதித்தவர்கள்  பயத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.
இத்தகையவர்களுக்குத்தான் 
எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் குறைவு. செவ்வாய் வலுவடைந்தவர்களும் தைரியம், துணிவு, ஆண்மை, வீரியம் ஆகியவற்றிற்குரிய   3 ஆவது பாவம் வலுவடைந்தவர்களும் பொதுவாகவே துணிச்சல் மிகுந்தவர்களாக காணப்படுவர். ஆனால் லக்னாதிபதி மற்றும் சந்திரனின் நிலையைக்கொண்டுதான் ஒருவரின் துணிச்சலை தெளிவாக அறிய முடியும். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் சனி,ராகு-கேது போன்ற பாவிகள் தொடர்பு ஏற்படும் போது இவ்விரு கிரகங்களுக்கும் மிகுந்த பய உணர்ச்சி ஏற்படும். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளூர பயந்துகொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிப்பார். 
இயல்பாகவே தைரியம் மிக்கவை நெருப்பு ராசிகள் எனப்படும் மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை. மேஷம், சிம்மம் தவிர்த்து மற்றோர் நெருப்பு ராசியான தனுசுக்கு அதிபதி குருவிற்கு சனி சமக்கிரகமாக வருவதாலும். கேது குருவின் தன்மையை ஒத்த ஞானியாக வருவதாலும், குரு இவ்விரு கிரகங்களோடும் சூரியன், செவ்வாயைப்போன்று அல்லாமல் அஞ்சாது எதிர்த்துநின்று செயல்படும். ராகுவோடு சேர்ந்தால் மட்டும் தனது நற்குணங்களை ராகுவிடம் இழந்து அதை சமாதானப்படுத்திவிட்டு தான் வழுவிழந்து நிற்கும். அதனால்தான் சனி, ராகு-கேதுக்களோடு இணையும் குரு இவைகளால் ஏற்படும் தோஷங்களை பெருமளவில் குறைத்துவிடுகிறார்.  ராகு செவ்வாயோடு சேர்ந்தவர்களுக்கும் 3 ஆம் பாவத்தில் ராகு-கேதுகள் இருக்கப்பெற்றவர்களுக்கும் அசட்டுத்துணிச்சல் இருக்கும். எந்த இடத்தில் நிதானிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்காது. ராகு-சந்திரன் சேர்க்கை உள்ளவர்களுக்கும் ராகுவுக்கு திரிகோணத்தில் சந்திரன் அமையப்பெற்றவர்களுக்கும், சந்திரனுக்கு அடுத்த பாவத்தில் ராகு இருப்பவர்களுக்கும் வாய்ச்சவடால் அதிகம். இத்தகையவர்களை வாய்ச்சண்டையால் வெல்லவே முடியாது. ஆனால் பயமுறுத்தி இவர்களை பணிய வைக்க முடியும்.    
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் நெருப்பு ராசியும் ராஜ ராசியுமான சிம்மமே ராசியும் லக்னமுமாக அமையப்பெற்றவர். முக்கிய ஒளிக்கிரகமும் மனோ காரகனுமான சந்திரனை நோக்கி நிழல் கிரகமான கேது  வருகிறது. இதனால் ஜாதகரின் மனம் பதட்டமடைகிறது. 2 ஆமிட கேது பொருளாதரத்தை பாதிக்கவில்லை. ஆனால் மனதை பாதிக்கிறார். சந்திரன் உடலையும் உணவையும் குறிப்பவர். அதனால் உடலின் மீதும் உண்ணும் உணவின் மீதும் மிகுந்த கவலை கொள்கிறார். சந்திரனை நோக்கிய நிலையில் கேது உள்ளதால் ஜாதகருக்கு பேய் பற்றிய பயமுண்டு. நல்ல துறையில் நல்ல சம்பாத்தியத்தில் உள்ள ஜாதகருக்கு இரவில் தனியாக வெளியே செல்ல   பயம். கேதுவின் நிழல் சந்திரனின் மீது படிவதால் இந்நிலை ஏற்படுகிறது. 
இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  
மீன லக்ன ஜாதகத்தில் நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் 1 – 7 ல் அமைந்துள்ளன. இதனால் ஜாதகருக்கு நிழல் கிரகங்களின் தாக்கம் அதிகம். உடல், மனோ காரகன் சந்திரன் 8 ல் மறைந்துவிட்டதால் ஜாதகருக்கு இவை இரண்டைப்பற்றியும் பயம் மிகவும் அதிகம். சந்திரனின் வீட்டில் சந்திரனின் பகை கிரகமான சுபாவ பாவி சனி அமைந்துவிட்டதால் பயத்தில் மனம் குழம்பியுள்ளார். சந்திரனும் கடக ராசியும் ஜோதிடத்தில் மார்பை குறிப்பிடும். 1977 ல் பிறந்த ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 1998 ல் ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் திசை துவங்கியது. குரு கடக ராசிக்கு விரையத்தில் கேந்திராதிபத்திய தோஷத்தில் பகை கிரகம் சுக்கிரனுடன் அமைந்துள்ளார். குரு மார்பை ஆளுமை செய்யும் கிரகமாகும்.  மார்பு ராசியான கடக ராசிக்கு விரையத்தில் குரு கடகத்திற்கு பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து கடகத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் நிற்கும் செவ்வாயின் மிருக சீரிஷம் – 4 ல் நிற்கிறார். செவ்வாய் மிருக சீரிஷம் – 2 ல் அமைந்து நவாம்சத்தில் கன்னியில் நிற்கிறார். இந்த அமைப்பால் குரு திசை துவங்கியது முதல் தனக்கு மார்பில் பாதிப்பு இருப்பதாக எண்ணி பதட்டமடைகிறார். 
கடக ராசி அதிபதி சந்திரனுக்கு 8 ல் மாந்தியுடன் இணைந்து நிற்கும் செவ்வாயால் இந்த பதட்டம் அதிகமாகி தனக்கு மாரடைப்பு உள்ளதாக எண்ணிக்கொள்கிறார். இதனால் திருமணத்தை தவிர்த்து வருகிறார். தற்போது ஜாதகர் சனி திசையில் உள்ளார். சனி பாவத்தில் கன்னியில் உச்சமடையும் புதனின் ஆயில்யம்-4 ல் நின்று மீன நவாம்சம் பெற்று கன்னி நவாம்சத்தில் உள்ள செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் ஜாதகருக்கு தனக்கு இருப்பதாக எண்ணும் மார்பு நோய் பற்றிய பயம் மிக மிக அதிகம். மருத்துவர்கள் ஜாதகருக்கு மார்பில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறிவிட்டாலும் ஜாதகர் தனது பயத்தால் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். கால புருஷனுக்கு ரோக ஸ்தானாதிபதியான புதனே களத்திர பாவாதிபதியாகி பாவத்தில் உச்சமடைவதால் நோய் பயத்தால் ஜாதகர் திருமணம் செய்துகொள்ள மாட்டார்.   
மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
துலாம் லக்னத்திற்கு ரோக ஸ்தானமான 6 ஆமிடாதிபதி குரு லக்னத்தில் வக்கிரமடைந்த நிலையில் அமைந்துள்ளார். வக்கிர குருவால் அதன் திக்பலம் பாதிக்கப்படும். 4 ஆம் பாவம் உடலின் கட்டமைப்பை சொல்லும். 4 ஆமிடத்திற்கோ, 4 ஆம் பாவாதிபதிக்கோ குரு தொடர்பு ஏற்படும்போது ஒருவருக்கு உடற்பருமன் ஏற்படும். இந்த ஜாதகத்தில் வக்கிர குருவின் பார்வை நான்காம் அதிபதியான நீச சனியின்மீது படுகிறது. மேலும் குரு வக்கிரமடைந்து 12 ஆமிடம் நோக்கி செல்வதால் 12 ஆமிடத்திற்கும் அரைப்பங்கு குருவின் ஆதிக்கம் ஏற்படும். இதனால் 12 ஆமிட குருவின் அரை பங்கு பார்வை 4 ஆமிடத்திற்கும் ஏற்படுகிறது. இதனால் ஜாதகருக்கு உடல் பருமன் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் லக்ன பாதகத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் தொடர்புடைய திசா-புக்திகள் வந்தால் உடலும், மனம் பாதிக்கப்படும் எனலாம். ஜாதகருக்கு ராசிக்கு பாதகத்தில் லக்ன பாதகாதிபதி சூரியனுடன் இணைந்த செவ்வாய் திசை கடந்த 2018 இறுதிவரை நடந்தது.  செவ்வாய் பாதகாதிபதி சூரியனோடு இணைந்த நிலையில் மேஷத்தில் நீசமடைந்த சனியின் மூன்றாவது பார்வையை பெற்ற நிலையில் சந்திரனை பார்க்கிறது. 
உடற் பருமனுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டவர் ஒரு கட்டத்தில் உடல் மிகவும் மெலிந்துவிட்டதாக சக நண்பர்கள் கூற மிகுந்த மன பாதிப்புக்குள்ளானார். நீச சனி உடல் மெலிவுக்கு ஒரு முக்கிய காரணம்.  ஜாதகர் சிறுநீரகத்துறையில் தலைமை மருத்துவராக இருந்து ஏனையோருக்கு பாடம் நடத்துபவர். எனினும் செவ்வாய் திசையில் பாதகாதிபதி சூரியனின் புக்தியிலும் அடுத்து வந்த சந்திர புக்தியிலும்  மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் வரை சென்று மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரோக ஸ்தானமான 6 க்கு விரையத்தில் 5 ல் நிற்கும் ராகு திசை துவங்கியவுடன் ஜாதகர் தனது பாதிப்பிலிருந்து மீண்டார்.  ரோகம் 6 ஆமிடம். குணம் 5 ஆமிடம்.  

மீண்டும் விரைவில் இதுபோல் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன். 
கைபேசி: 8300124501.

Thursday, 30 January 2020

கொரோனா கிருமியும் ஜோதிடமும்


இன்று கொரோனா விஷக்கிருமி சீனாவில் தோன்றி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதுவும் மக்களின் தவறான உணவுப்பழக்கத்தால் ஏற்பட்டதாகவே அறியப்படுகிறது. பாம்பு மாமிசத்தை சரியாக சமைக்காமல் உண்டதால் ஏற்பட்ட  விளைவே இக்கொரோனா கிருமி என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சென்ற நூற்றாண்டில் ஆப்பிரிக்காவில்  துவங்கிப் பரவி ஆட்கொல்லி நோய்களில் ஒன்றாக உருவெடுத்துவிட்ட பால்வினை நோயான AIDS க்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. AIDS குரங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படும் நிலையில் ராட்சத பாம்பு வடிவில் பட்டங்கள் விடுவதும், ராட்சத பாம்பு பொம்மைகளைகொண்டு ஆடப்படும் நடனமும் சீனாவில் மிகப்பிரபலம். இதன் ஜோதிட அடிப்படை என்னவென்றால் சிவப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்தும் சீனா சிவப்பு நிறத்தை குறிக்கும் செவ்வாயின் அம்சமாக கருதப்படுகிறது. சீனாவின் செயல்பாட்டில் செவ்வாயின் ஆக்கிரமிப்புத்தனமும் போர்க்குணமும், கட்டுப்பாடுகளும் வெளிப்படுவதிலிருந்து இதை நாம் உணரலாம்.  சீனாவை பொறுத்தவரை அதன் ஜாதக அமைப்பின் செவ்வாய் தனது கடும் பகை கிரகமான ராகுவை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். இதனை ராட்சத பாம்பு வடிவ பட்டங்களை பறக்கவிட்டு சீனர்கள் மகிழ்வதிலிருந்தும், ராட்சத பாம்பு வடிவங்களைக்கொண்டு ஆடப்படும் சீனர்களின் டிராகன் நடனங்களில் இருந்தும்,  பாம்பு மாமிசத்தை பிரதான உணவாக எடுத்துக்கொள்ளும் அவர்களின் உணவுப்பழக்கத்தில் இருந்தும் நாம் அறியலாம்.


ராகுவிற்கு செவ்வாய் கடுமையான பகைக்கிரகமாகும். ராகு கோட்சாரத்தில் தற்போது வாயு ராசியான மிதுனத்தில் தனது சுய சாரமான திருவாதிரையில் அமர்ந்து ரத்த அணுக்களை குறிக்கும் செவ்வாயின் மிருகசீரிச நட்சத்திரத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. அதே சமயம் தனது சொந்த வீடான விருட்சிகத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும் மிதுன ராசியதிபதியும் தனது பகைக்கிரகமுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் தற்போது அமைந்துள்ள செவ்வாயை நோக்கி கேது நகர்ந்து வருவதையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். இப்படி கால புருஷனுக்கு ஆயள் ஸ்தானமான விருட்சிகத்தில் அமைந்து கேதுவின் தீண்டலால் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் பாதிக்கப்படும் நிலையில் இந்த கொரோனா கிருமி பரவுவது கடுமையான விளைவுகளை உலகத்தில் ஏற்படுத்தும் எனலாம். ராகு குறிக்கும் கிருமி ராகுவின் பகைக்கிரகமான செவ்வாயின் அம்சமான சிவப்பு நிறத்தை பிரதானமாக பயன்படுத்தும் சீனாவில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உலகில் சிவப்பு  நிறத்தை பிரதானமாக பயன்படுத்தும் நாடுகளையும், சந்திரனின் அம்சமாகவும், ராசி லக்னமாகவும் குறிப்பிடப்படும் நாடுகளையும் இந்த கிருமி அதிகம் பாதிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் சிவப்பு நிறம் ஆட்சி செய்யும் (கம்யூனிஷம்) கேரளாவில் முதல் கொரோனா கிருமித்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சிவப்பு நிறம் அதிகம் ஆட்சி செய்யும் செவ்வாயின் அம்சங்களான மணிப்பூர், மேற்கு வங்கம் இப்பகுதிகளிலும் இத்தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதன் பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட அதிகம் இருக்கக்கூடும். தமிழ்நாட்டை கேதுவின் அம்சம் கொண்ட ஆன்மீகம், கல்வி, மருத்துவத்திற்கு உரிய பூமியாக ஜோதிட ரீதியாக நான் கணிக்கிறேன். இதன் அடிப்படையில் ராகுவின் பாதிப்புகளை கேது சரிசெய்யும் என்ற அடிப்படையில் தமிழ் நாட்டுப்பண்டைய மூலிகை சிகிச்சை முறைகளால் இக்கிருமித்தொற்று  தமிழ்நாட்டில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பலவீனச் சூரியன் நோய்த்தொற்றுக்கு உரிய கிரகமாக கூறப்படுகிறது. எனவே சூரியனின் கதிர்கள் அதிகம் ஆளுமை செலுத்தும் பாலைவனப்பகுதிகள், நிலநடுக்கோட்டு பகுதி நாடுகளான  ஆப்பிரிக்க கண்டத்திலும் இக்கிருமி அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை  என்பது எனது அனுமானம்.    
இனி இந்த கிருமி பற்றி ஜோதிட ரீதியாக ஆராய்வோம்.

பொதுவாக விஷக்கிருமிகளை குறிக்கும் காரக கிரகங்கள் ராகுவும் கேதுவுமாகும். இவற்றை இனங்காண்பது எளிதல்ல. பல்வேறு நவீன முறைகளை கையாண்டுதான் கிருமிகளின் வகையை உறுதியிடமுடியும். கோட்சாரத்தில் ராகு வாயு ராசியான மிதுனத்தில் நிற்கிறது. காற்று ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்ந்துகொண்டே இருப்பது. இதனால்தான் இக்கிருமி விரைவாக பரவுகிறது. கிருமிகள் ரத்தத்தில் எவ்வளவு விரைவாக  பரவி உடலில் மரபுக்கூறுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறதோ அவ்வளவு விரைவில் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

இத்தகையை கிருமிகளால் ஜோதிடப்படி யார் பாதிக்கபடுவர் என்பதை காண்போம். தொற்றுக்கிருமிகளால் மொத்தமாக உயிரிழப்புகள் ஏற்பட ராகு-கேதுக்களே ஜோதிடப்படி காரணமாகும். எனவே

1.பிறப்பு ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் கூட்டு மரண பாவம் எனக்கூறப்படும் 4 ஆம் பாவத்தில்  நிற்கும் ஜாதகர்கள்.

2.ஜாதகத்தில் ராகு-கேதுக்கள் தொடர்புடைய மாரக திசை நடப்பில் இருந்து அவை வாயு ராசிகளில் நிற்கும் ஜாதக அமைப்பினர். 

3.கிருமித்தொற்றுக்கு உரிய கிரகம் பலவீனமான சூரியனாகும். அதனால் ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக அமைந்துள்ள ஜாதகர்கள் பொதுவாக எளிதாக கிருமித்தொற்றுக்கு ஆளாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

4.ஜீவ காரக கிரகமான குரு ஜாதகத்தில் பாதகமாக அமைந்து குருவோடு ராகுவோ அல்லது கேதுவோ  இணைவு பெற்றவர்கள். மற்றும் குருவிற்கு திரிகோணத்தில் ராகு-கேது அமையப்பெற்றவர்கள்.

5.ரத்தத்தை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். ரத்த அணுக்கள் உற்பத்தியை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். அந்த வகையில் பிறப்பு ஜாதகத்தில்  சந்திரனும் செவ்வாயும் ராகு-கேதுக்களால் தொடர்பு பெற்ற அமைப்பில் இருக்கும் ஜாதகர்கள். அல்லது சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு-கேதுக்கள் அமையப்பெற்ற ஜாதகர்கள் மற்றும் சந்திரனையோ அல்லது செவ்வாயையோ நோக்கி ராகு-கேதுக்கள் வரக்கூடிய அமைப்பின் பிறப்பு ஜாதகம் அமையப்பெற்றவர்கள்.

6. ரத்த காரகன் சந்திரனோடு தொடர்புடைய ரிஷபம் (சந்திரன் உச்சமாகும் ராசி) , கடகம், விருட்சிகம் மற்றும் இவற்றுக்கு அடுத்த ராசிகளான மிதுனம், சிம்மம், தனுசுவில் ராகு கேதுக்கள் அமைந்து முன்சொன்ன ராசிகளை நோக்கி ராகு-கேதுக்கள் வரும் அமைப்பில் பிறப்பு ஜாதகம் அமையப்பெற்றவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புண்டு என ஜோதிட ரீதியாக அறியமுடிகிறது.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து மீள ஜோதிடம் ஏதேனும் வழிகளை கூறுகிறதா எனக்கேட்டால் ராகுவின் பாதிப்புகளை கேதுவின் துணைகொண்டு சரி செய்யலாம் என்பதற்கேற்ப மக்கள் அதிகம் கூடுமிடங்களில் உலாவுவதை கூடுமானவரை தவிர்ப்பது நலம். இதனால் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு. ஜோதிட ரீதியாக கேது தனிமை விரும்பி என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப்பழக்கத்தை சீராக வைத்துக்கொள்வது முடிந்தவரை எளிதில் செரிமானமாகும் உணவுவகைகளை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். புலனடக்க பயிற்சிகளையும், யோகாசனம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றையும் கடைபிடிக்கலாம். ஆதித்ய ஹிருதயம் பிடிப்பது நன்மை பயக்கும். ராகு-கேதுக்களின் பாதிப்புகளால்தான் இத்தகைய கிருமிகள் பாதிப்பை தரும் எனவே ராகு-கேதுக்களின் பாதிப்புகளை விஷ்ணுவை வழிபடுவதன் மூலமாக குறைத்துக்கொள்ளலாம். ராகு-கேதுக்களுக்கு கிரக பதவியை பெற்றுத்தந்தவர் என்பதால் சர்ப்ப கிரக தோஷத்திற்கு விஷ்ணுவை வழிபடுவது நலம்பயக்கும். இதன் அடிப்படையில் பாற்கடலில் ஆதிசேஷனோடு பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், தும்பிக்கையாழ்வார், சரபேஸ்வரர்  போன்ற தெய்வங்களோடு கோவிலில் சென்று துர்க்கை, பகவதி, மாசாணியம்மன் மற்றும் சர்ப்ப வழிபாடுகளையும் செய்து வரலாம்.

கொரோனா கிருமிக்கு என்றில்லாமல் பொதுவாக மருத்துவ சிகிச்சைக்கு ஒருவரின் பிறப்பு ராகு-கேதுக்களின் மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்தில் செல்வது நன்மை தரும். வியாதிகள் விரைவில் தீரவும் நல்ல மருத்துவர் கிடைப்பதற்கும் இது உதவும். ராகு தொடர்புடைய தோல் வியாதிகளுக்கு எனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களில் பிறப்பு ராகு மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்தில் இதை பரிந்துரைத்து சிறப்பாக செயல்பட்டதை கண்டிருக்கிறேன். மேலும் ராகுவினால் நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பின் ஒருவரின் பிறப்பு கேதுவின் மீது கோட்சார சந்திரன் செல்லும் நாளிலும், கேது தொடர்புடைய நோய் பாதிப்பிற்கு ஒருவரின் பிறப்பு ராகுவின்மீது கோட்சார சந்திரன் செல்லும் காலத்திலும் செல்வது சிறப்பாக இருக்கும். ராகுவும் கேதுவும் ஒன்றுக்கொன்று ஏழாமிடமான நிவர்த்தி ஸ்தான அதிபதிகளாக அமைவதே காரணமாகும். 
மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501.

Sunday, 12 January 2020

உடற்பருமன்


இன்றைக்கு மக்களை வருத்தும் ஒரு பாதிப்பு உடற்பருமன். சீரான அளவைவிட உடலின் அங்கம் ஒன்று பெரிதாக அமைகிறதென்றால் அந்த அங்கத்தை குறிக்கின்ற பாவம் ஜாதகத்தில் வலுவாக அமைந்திருக்கிறது என்று பொருள். ஒரு உறுப்பின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறதென்றால் அந்த உறுப்பைக் குறிக்கின்ற பாவாதிபதி கிரகமும்  உறுப்பின் காரக கிரகமும் சிறப்பாக இருக்கிறார்கள் எனப்பொருள்.  ஆனால் ஒட்டுமொத்த உடலின் தோற்றத்தை லக்னமும்  உடலின் கட்டமைப்பை அதாவது உடலின் அளவை கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடக ராசியும் மற்றும் லக்னத்திற்கு நான்காம் பாவமும் குறிக்கின்றன. நான்காம் அதீத வலுப்பெற்றால் உடற்பருமன் ஏற்படும். மூன்றாம் பாவம் வலுப்பெற்றால் தோற்றம் சீராக இருக்கும். ராகு அதீத வளர்ச்சியை குறிக்கும் கிரகமாவதால் ராகு திசா நாதனோடும் 4 ஆம் பாவத்தோடும் தொடர்பாகும்போது அதீத உடலமைப்பை ஏற்படுத்தும். உதாரணமாக நடிகை நமீதா மற்றும் நகைச்சுவை நடிகர்  யோகிபாபு போன்றோர் ராகுவின் தாக்கம் நிரம்பப்பெற்றவர்கள். 


உதாரணமாக கடக ராசி நான்காம் பாவமாக வந்து அங்கு ராகு நின்று திசை நடத்தினால் உடற்பருமன் ஏற்படும். அது மரபணு குறைபாட்டோடு (Hormone imbalance) தொடர்புடையதாகவும் இருக்கும். ராகு வளர்ச்சியை குறிக்கும் கிரகமாகி இரத்த ரீதியான பாரம்பரிய கூறுகளை குறிக்கும் கடக ராசியில் ராகு தொடர்புகொள்வதால் இது ஏற்படும். ஆனால் மிதுன ராசி கடக ராசிக்கு விரைய ராசி ஆவதால் திசா புக்தி  ரீதியாக மிதுன ராசி செயல்பட்டால் உடற்பருமன் குறையத்துவங்கிவிடும். அப்போது உடற்பருமனை குறைக்க எடுக்கும் பயிற்சிகள் பலனளிக்கும்.  கால புருஷனுக்கு 3 ஆம் பாவமான மிதுன ராசியில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடானது ஒருவரின் உடற்பருமனை அதிகப்படுத்தவும்  ஒல்லியாக்கிவிடவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக மூன்றாம் பாவமாக மிதுன ராசியில் அமைந்து அதிலுள்ள ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் சூழலில் ராகு நான்காம் பாவமான கடகத்தில் அமைந்திருந்தால் மூன்றாம் பாவத்திலிருந்து  திசை நடத்தும் கிரகத்தின் திசையில் உடற்பருன்மன் குறைவதற்குப்பதில் அதிகமாகும். காரணம் திசை நடத்தும் கிரகம் சார ரீதியாக நான்காம் பாவ ராகுவோடு தொடர்புகொள்வதே .

கீழே ஒரு இளைஞனின் ஜாதகம்.

 1997 ல் பிறந்த இளைஞன் இவர். குரு சனியோடு பரிவர்த்தனையாவதால் நீசபங்கமடைகிறது. இதனால் நான்காம் பாவம் வலுவடைகிறது. இளைஞனுக்கு தற்போது குரு திசை சனி புக்தியில் உள்ளார். குரு  பாதகாதிபதியுடன் இணைந்து பாதகாதிபதி சூரியனின் சாரத்தில் இருந்து திசை நடத்திக்கொண்டிருக்கிறார்.  தனுசு ராசியில் கிரகங்கள் இருப்பதால் குரு தனது திசையில் மூன்றாவது பாவ பலனை தரமாட்டார். குரு தானிருக்கும் 4, 5 மற்றும் பரிவர்தனைக்குப்பின் இடம் மாறுவதால் 6 ஆமிடப்பலனையுமே தனது திசா புக்தி காலத்தில் வழங்குவார். குரு திசைக்கு அடுத்து வருவது சனி திசையே.  சனியும் 6, 5 மற்றும் பரிவர்தனைக்குப்பின் இடம் மாறுவதால் 4 ஆம் பாவ பலனையுமே வழங்குவார். குரு, சனியோடு பாதகாதிபதி சூரியன் தொடர்பாகி 4 & 6 ஆம் பாவங்களும் தொடர்பாவதால்  ஜாதகரின் உடற்பருமன் தீராத வியாதியில் கொண்டுவிடும் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது இளைஞனின் ஜாதகம் கீழே.


திசா நாதன் ராகு லக்னத்திற்கு 7 ல் 4 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் பூரம் – 2 ல் நின்று 2008 முதல் திசை நடத்துகிறது. இதனால் ஜாதகர் வளர வளர உடல்  பலூன் போன்று ஊதிவிட்டது. 2015 முதல் 10 ஆம் பாவத்திலிருந்து கேட்டை நட்சத்திரத்தில் சுய சாரம் பெற்று 4 ஆம் பாவத்தை பார்வை செய்யும் கால புருஷனின் 3 ஆம் பாவாதிபதி புதனின் புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் உடற்பருமனை குறைப்பதில் கவனம் செலுத்தி பெருமளவில் தனது உடல் எடையைக் குறைத்து தற்போது கட்டுக்கோப்பாக உடலை  பேணுகிறார். தற்போது ஜாதகருக்கு லக்னத்தில் ராகுவின் சதயம் – 4 ல் நிற்கும் கேதுவின் புக்தி  நடக்கிறது. கேது பொதுவாகவே குறுக்குவார் என்பதுடன் ராகுவின் செயல்களை கட்டுப்படுத்தும் சக்தியையும் பெற்றவராக  செயல்படுவார் என்பதால் தற்போது உடலை கட்டுக்கோப்பாக ஜாதகர் பயிர்ச்சிகளின் மூலம் பேணுகிறார்.

பின்வரும் ஜாதகம் ஒரு பெண்ணினுடையது.


ஜாதகி 1995 ல் பிறந்தவர். திருமணமாகிவிட்டது. கணவனை குறிக்கும் 7 ஆமிடத்தில் கால புருஷனின் 4 ஆம் அதிபதி சந்திரன் அமைந்துள்ளார். 7 ஆமிடம் கணவர் எனக்கொண்டால் 7 க்கு 4 ஆமிடமான 10 ஆமிடம் கணவரின் உடற்கட்டை குறிக்கிறது. 10 ஆமிடத்தை அதை அதிபதி குரு புதனின் கேட்டை நட்சத்திலிருந்து பார்க்கிறார். 7 க்கு விரையத்தில் 6 ல் அமைந்த 7 ஆமதிபதி குரு, 7 க்கு பாதகாதிபதியான லக்னாதிபதி புதனின் சாரம் பெற்று திசை நடத்துகிறார். இதனால் ஜாதகியின் கணவரின் உயிருக்கு பாதிப்புள்ளது. குரு பார்வை பெறும் இடம் வளர்ச்சியடையும்   என்பதற்கேற்ப குரு 7 க்கு 4 ஆமிடமான 1௦ ஆமிடத்தை பார்ப்பதால் கணவர் சற்று உடல் பருத்தவராக இருந்தார். திருமணமானவுடன் உடல் பருமனை குறைக்க முறையான மருத்துவர்களை தொடர்புகொள்ளாமல் தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி மருந்து வில்லைகளை உட்கொண்டார். ஜாதகிக்கு களத்திர காரகன் செவ்வாயின் சாரம் சித்திரை- 1 பெற்ற சுக்கிர திசையில் களத்திர பாவமான 7 ல் நிற்கும் 2 ஆமதிபதி சந்திரனின் சாரம் பெற்ற புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. புதன் சுக ஸ்தானாதிபதி என்பதால் தனது புக்தியில் ஜாதகிக்கு திருமணத்தை செய்வித்தார். 7 க்கு பாதாக ஸ்தானமான லக்னத்திற்கும் உரியவரானதால் அதே தனது புக்தியில் கணவரின் உயிரையும் பறித்துவிட்டார். கணவர் உடல் எடையை குறைக்க உட்கொண்ட மருந்துகளின் விளைவால்  திருமணமான மூன்று மாதத்தில் மரணமடைந்தார். புதன் மருந்துக்களுக்கு காரக கிரகம் என்பதை கவனிக்க. தொலைக்காட்சி விளம்பரங்களை நம்பி மருந்து உட்கொள்வோர் கவனம். 
 
சில வருடங்களுக்கு முன் பணி ஓய்வு பெற்ற எங்கள் மதிப்புமிகு பள்ளி ஆசிரியரின் ஜாதகம் கீழே.


ஜாதகத்தில் உடலின் கட்டமைப்பை குறிக்கும் நான்காம் பாவத்தில் வாழ்க்கையில் எதையும் அளவாக அனுபவிக்க வைக்கும் கேது உள்ளார். இதனால் இவரின் உடற்கட்டு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரே சீராக ஒல்லியாகவே உள்ளது. திரைத்துறை இயக்குனர் மனோபால போல எப்போதும் எதிர்க்காற்றில் வந்தது போலவே காணப்படுவார். இவரின் உடற்கட்டை பார்த்து பொறாமைப்படாத சக ஆசிரியர்களே இல்லை எனலாம். 1௦ ஆம் பாவத்தில் நின்ற ராகுவின் திசையில் ஜாதகருக்கு ஆசிரியராக பணி கிடைத்தது. தனது சிறப்பான சேவையால் நல்லாசிரியர் விருது பெற்றவர். ராகு குருவின் விசாகம் – 2 ல் நிற்கிறது. ராகு நின்ற பத்தாம் பாவத்திற்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியனும் செவ்வாயும் அமைந்துள்ள அமைப்பு அரசு ஆசிரியர் பணி பெற காரணாமாக இருந்தது. 1957 ல் பிறந்த ஜாதகருக்கு 1986 ல் குரு திசை வந்தது. குரு 3 ஆம் பாவத்தை பார்க்கிறார். 4 ல் கேது இருந்து உடலை குறுக்குகிறது. கால புருஷனின் 4 ஆம் பாவமான கடக ராசியில் பாவ கிரகங்கள் அமைந்து அதன் அதிபதி சந்திரன் அந்த பாவத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் உச்சமானதால் உடல் கட்டமைப்பு பேணப்பட்டது. குரு திசையை அடுத்து  2002 ல் வந்த சனி திசையிலும் ஜாதகர் உடல் கட்டுக்கோப்பாகவே காணப்படுகிறது. சனி லக்னத்தையும் கால புருஷனுக்கு 4 ஆம் அதிபதி சந்திரனையும் பார்க்கிறது என்பதே காரணம்.

மனித வாழ்க்கையை மட்டுமல்ல மனித உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் கிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன என்பதே உண்மை. இறைவனால் படைக்கப்பட்ட கிரகங்களின் தயவின்றி உயிரினங்களுக்கு எதுவும் நடைபெறாது. இதையே அவனன்றி எதுவும் அசையாது என நமது இந்து தர்மம் கூறுகிறது.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Tuesday, 19 March 2019

குழந்தைப்பேறு


குழந்தைப்பேறு என்பது இன்றைய காலத்தில் காலம் அளிக்கும் வரம் என்றால் அது மிகையல்ல. திருமணம் நடந்து ஒரு வருஷ காலத்தில் குழந்தை பிறந்துவிட்டால் அந்தக் குடும்பம் பாக்கியம் பெற்ற குடும்பம்.பொருளாதாரத்தால் சிரமப்படும் குடும்பங்கள் கூட திருமணமான அடுத்த வருடத்தில் குருவின் அம்சமான குழந்தை பிறத்துவிட்டால் அந்தக்குடும்பத்துக்கு குருவருள் இருப்பதாக ஐதீகம். குரு துணை இருந்தால் எத்தகைய சிரமங்களையும் எளிதில் கடந்துவிடலாம். அப்படி ஒருவருடத்தில் குழந்தை பிறக்கும் குடும்பங்களில் மணமுறிவு என்பது சில ஆண்டுகள் கழித்து பிறக்கும் குடும்பங்களை விட மிகக்குறைவே. இதை ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்துகொள்ளலாம். பொருளாதார காரணங்களுக்காக குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடைகிறதோ இல்லையோ அத்தகைய குடும்பங்களில் பிரிவினை அதிகம். குழந்தை பிறப்பும் சிக்களுக்கு உள்ளாகிறது. எனவே எக்காரணம் கொண்டும் குழந்தை பிறப்பை அதிலும் குறிப்பாக முதல் குழந்தையை திட்டமிடவே கூடாது.



மேற்கண்ட கூற்றை கடந்த காலத்தில் சென்று பார்க்கவேண்டுமெனில் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் முறைகள் அறிமுகமான 80 களுக்கு முந்தைய கால மக்களின் குடும்ப உறவு நிலையையும் தற்போதைய காலத்தில் சாதாரணமாகிவிட்ட மணமுறிவு நிலைகளையும்  ஒப்பிட்டுப்  பார்த்தாலே இக்கருத்தின் உண்மை புரிந்துவிடும். பொதுவாக குரு வலிமை குன்றியிருந்தால் பொருளாதாரத்திலோ அல்லது குழந்தை பாக்யத்திலோ  சிரமப்படுத்தும். நாம் பொருளாதார சிரமங்களை கர்ம வினை என்று எடுத்துக்கொண்டு குழந்தைப்பேறை தள்ளிப்போடாமலிருந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். கவனம் “பொருளைவிட பாக்கியம் முக்கியம்”.

கீழ்க்கண்ட ஜாதகம் ஒரு பெண்மணியுடையது.


மகர லக்ன ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் கேதுவுடேன் வக்ரமாகிவிட்ட ஆறாமதிபதி புதன் இணைந்து அந்த பாவத்தை தோஷப்படுதுகிறார்.  சுரப்பிகளை குறிக்கும் ஐந்தாமதிபதியான சுக்கிரன் கடகத்தில் நின்று அவருக்கு இடம் கொடுத்த சந்திரனும் கர்ப்பப்பையை குறிக்கும் சந்திரன் கர்ப்பப்பையை குறிக்கும் 8 ஆவது பாவத்தில் அமைந்துவிட்டது ஜாதகிக்கு கர்ப்பப்பை மற்றும் சுரப்பி வகை பாதிப்புகள் உள்ளதை குறிப்பிடுகிறது. இந்த நிலையில் அஷ்டமத்தில் அமர்ந்துவிட்ட சந்திரனை அஷ்டமாதிபதியோடு இணைந்த லக்னாதிபதி சனி பார்ப்பது கர்ப்பப்பை வகை தோஷத்தை அதிகப்படுத்தும் எனலாம். பொதுவாக சனியோடு சூரியன் இணைவே ஜீவ அணுக்களின் செயல்பாட்டை குறைத்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாமதிபதியை புத்திர காரகன் குரு பார்ப்பது ஒரு நல்ல அம்சம். எனினும் அவர் பாதகாதிபதியோடு இணைந்த நிலையில் ஐந்தாமாதியை பார்பதாலும் ரத்த திசுக்களுக்கு காரகன் செவ்வாயுடன் கொழுப்பு காரகன் குரு இணைந்தாலும் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி அதன் பொருட்டு குழந்தை பிறப்பை தடை செய்யும் என்பதை அனுமானிக்கலாம். குருவுக்கு விரையாதிபத்தியமும் உள்ளதாலும் அவர் பாதகாதிபதியோடு சேர்ந்திருப்பதாலும்  இந்த ஜாதகிக்கு புத்திர பேறுக்கான வாய்ப்பு குறைவே. மேலும் செவ்வாய் கணவனை குறிக்கும் கிரகம் என்பதாலும் 7 ஆமதிபதி சந்திரன் 8 ல் மறைந்து விரையாதிபதி குருவோடு இணைந்த பாதகாதிபதி செவ்வாயின் பார்வை பெற்ற சனி 7 ஆமதிபதி சந்திரனை பார்ப்பதும் கணவன் வகையியிலும் இரத்த வகையில் உள்ள பாரம்பரிய பாதிப்பால் குழந்தை பேறு வாய்ப்பு குறைவே என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. 7 ஆமிடத்தை கணவனாகக்கொண்டு ஆராய்ந்தால் குழந்தை பிறப்பு மற்று குடும்பத்திற்கு குழந்தையின் வரவை குறிப்பிடும் 7 க்கு 5 ஆமிடமான 11 ம்,  7 க்கு 2 ஆமிடமான 8 ம் குழந்தை பிறப்பிற்கு சாதகமான நிலையில் இல்லை. ஆனால் குருவின் பார்வை 7 க்கும் 11 க்கும் உள்ளது மட்டுமே இங்கு ஒரு ஆறுதலான நல்ல விஷயம்.

ஆனால் இங்கு குருவே பாதகாதிபதி தொடர்பு பெற்ற நிலையில் அது எந்த அளவுக்கு உதவும் என்பதே கேள்வி. பாவகத்தில் ராசிக்கு 10 ல் திக்பலம் பெற்ற சூரியன் இருப்பது ராசி ஓராளவு வலுவோடு இருப்பதை குறிப்பிடுகிறது. மேலும் ஜாதகி தன முயற்சியால் சில பாக்கியங்களை அடையலாம் என்பதை அது குறிக்கிறது. ஜாதகிக்கு லக்னத்திற்கு 7 ல் நிற்கும் சுக்கிரனின் சாரம் பெற்ற சந்திரனின் திசையில் குரு புக்தியில் 1997 ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு குரு தொடர்புகொண்ட செவ்வாய் திசை 2011 ஏப்ரல் வரை உள்ளது.

ஜாதகி என்னிடம் செவ்வாய் திசையில் புதன் புக்தியில்  ஜாதகம் பார்க்க வந்தார். செவ்வாய் பாதகாதிபதி என்றாலும் அவர் பாதகத்தில் குருவோடு கூடி 5 ல் அமைந்த தனது எதிரியும் 6 ஆமதியுமான புதனின் சாரம் பெற்றுள்ளார். இவ்விடத்தில்தான் ஜோதிடர்கள் ஜாதகிக்கு குழந்தை உண்டா இல்லையா என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து சொல்ல வேண்டும். இந்த ஜாதகத்தில் திசா நாதன் செவ்வாயையும் கோட்சார நிலைகளையும் கவனிக்க வேண்டும்.  செவ்வாய்க்கு விரையாதிபதி தொடர்பு சிறப்புல்லை என்றாலும் குருவோடு இணைந்த கிரகமும் குரு பார்த்த கிரகமும் சுபத்தன்மை அடையும் என்ற விதியையும் கவனிக்க வேண்டும். அதற்கு ஆட்சி வீட்டில் அமைந்த குரு உதவுவது நன்மையே என்றாலும் குரு+செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு இருப்பதால் இயற்கையாக இல்லாமல் செயற்கையாகவும் வழிபாடுகள் மூலமாகவும் புத்திர பாக்கியதிற்கான  வாய்ப்பை அதிகமாக முயற்சியின் பேரில் மேற்கொள்ள வேண்டும். பரிகாரங்கள் எந்த அளவு பலனளிக்கும் என்பதை ஒரு ஜோதிடர் எடைபோட்டு வைத்திருப்பது தேர்ந்த ஒரு ஜோதிடருக்கு மிக அவசியம். அதற்கு அனுபவமும் தேர்ந்த ஜோதிட அறிவும் கைகொடுக்கும்.

இந்த ஜாதகத்தில் குரு ஆட்சியில் இருந்தாலும் பாகை அடிப்படையில் பார்த்தால் திசா நாதன் செவ்வாயின் பாகை 25.24 , குருவின் பாகை 25.55  மற்றும் 6 ஆம் பாவத்தில் அமைந்த லக்னாதிபதி சனியின் பாகை 25.14 ஆகும். இதனால் பாகை அடிப்படையில் நெருக்கமாக அமைந்திருக்கும் இம்மூன்று கிரகங்களும் ஒருங்கிணைந்து செயல்படும் எனலாம். இதில் குரு மற்ற இருவரை விட அதிக பாகை சென்றுள்ளது மற்ற இருவரை விட வலிமையானவர் என்பதையும் தனது சுபாவ சுபத்துவத்தை பாகை அடிப்படையில் தன்னோடு நெருங்கியுள்ள திசா நாதன் செவ்வாய்க்கு வழங்குவார் எனலாம். குரு இப்படி செவ்வாயைவிட அதிக பாகை சென்றுள்ளதால் செவ்வாயின் பாதகாதிபத்திய தோஷத்தின் தீவிரத்தை பெருமளவு குறைத்துவிடுவார் எனலாம்.

இப்படி குருவால் சுபத்துவம் பெற்ற திசா  நாதன் செவ்வாய் புத்திர பாக்கியத்தை தரவேண்டியவராகிறார். குரு+செவ்வாய்க்கு திரிகோணத்தில் ராகு இருப்பதால் முதலில் வழிபாடுகளையும் அதோடு மருத்துவத்தின் உதவியோடு செயற்கை முறைகளிலும் முயற்சிகளை மேற்கொள்ள தம்பதிகள் இருவருக்கும் பரிந்துரை வழங்கப்பட்டது.

3 ஆம் பாவம் செயற்கை முறை கருத்தரிப்பை குறிக்கும் பாவமாகும். 3 ம் பாவம் 5 ஆவது பாவத்திற்கு லாப பாவமாக வருவதால் 3 ஆம் பாவம் சாதகமாக இருந்து லக்னத்திற்கு 2, 3, 5, 11 தொடர்புடைய திசா புக்திகளில் புத்திர பேருக்கு சிறந்த வாய்ப்பு ஏற்படும். இதில் செயற்கை முறை கருத்தரிப்பு எனில் 3 ஆவது பாவ தொடர்புகளை ஒரு ஜோதிடர் கவனமாக கவனிக்க வேண்டும். 3 ஆவது பாவம் சிறப்புற்று செயற்கை முறை கருதரிப்பிற்கு உரிய ராகுவானவர் குரு தொடர்போ அல்லது குருவிற்கு திரிகோணத்திலோ அமைந்திருந்து கோட்சாரத்திலும் அத்தகைய குரு-ராகு தொடர்பு ஏற்பட்டால் செயற்கை முறை கருதரிப்பிற்கு பரிந்துரை செய்யலாம். அப்படி அமையாவிட்டால் செயற்கை முறை கருத்தரிப்பு முயற்சி பலனற்றதாகிவிடும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்றைக்கு செயற்கை முறை கருத்தரிப்பிற்கு சில லட்சங்கள் செலவாகிறது என்பதை கவனிக்கவும். ஜோதிடர்கள் இதை சரியாக எடைபோடாவிட்டால் குழந்தைக்காக சொத்தை விற்று முயற்சி செய்யும் தம்பதிகளின் நிலை மேலும் பரிதாபத்திற்கு உள்ளாகிவிடும் என்பதை கவனித்து பலன் சொல்ல வேண்டும். 

ஜாதகிக்கு  குருவால் சுபம் பெற்ற செவ்வாய் திசையில் ஐந்தாமதிபதி சுக்கிரனின் புக்தியில் ஐந்தில் நின்ற புதனின் அந்தரத்தில் கோட்சார குரு லக்னத்திற்கு இரண்டில் கும்பத்தில் தனது சுய சாரமான பூரட்டாதியில் நின்றபோது திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையில் ஆண் மகவு பிறந்தது.

ஐந்தாவது பாவகப்புள்ளி சந்திரனாகி அது சூரியனின் வீட்டில் நிற்பதாலும் குரு ஆறாமதிபதி புதன் சாரம் பெற்று புதன் சந்திரனின் நட்சத்திரத்தில் நிற்பதும் பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் பாரம்பரிய வியாதியை கொண்டு பிறக்கும் என்பதை குறிக்கிறது. தந்தைக்கு சர்க்கரை வியாதி உண்டு. இந்நிலையில் செயற்கை முறையில் பிறக்கும் குழந்தைக்கு தந்தை காரணமாக இல்லாவிட்டால் குழந்தைக்கு இவ்வமைப்பை சொல்ல வேண்டியதில்லை.

மேற்படி ஜாதகம் K.P முறையில் ஆய்வு செய்யப்பட்டது. 

அடுத்த பதிவு

யோகமும் தோஷமும் இரட்டை பிறவிகளா?

அதுவரை

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 07871244501