Showing posts with label திருட்டு. Show all posts
Showing posts with label திருட்டு. Show all posts

Wednesday, 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Wednesday, 4 December 2019

திருட்டும் ஜோதிடமும்


ஜோதிடத்தில் பொருளாதார வளமைக்கு உரிய கிரகங்களாக குரு, சுக்கிரன், ராகு, புதன் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.  குரு பெரிய அளவிலான பணப்புழக்கத்தையும், சுக்கிரன் சிறிய அளவிலான பணப்புழக்கத்தையும், ராகு அந்நிய தொடர்புகள் மூலம் புழங்கும்  பணத்தையும், புதன் வியாபாரத்தின் மூலமும், வங்கிக்கடன், பத்திரங்கள், காலி மனைகள் இவற்றை முன்னிட்டு புழங்கும் பணத்தையும் குறிக்கின்றன. சூரியன் அரசு வழங்கும் கடனையும் அதை பெறுபவரையும் குறிக்கும். சூரியன்-ராகு தொடர்பு ஏற்பட்டால் இயக்கம், பொதுச்சேவை செய்வர். இச்சேர்க்கையை குரு பார்ப்பின் இவர்களது பொதுச்சேவை பாராட்டப்பெறும். இவர்களது சேவையால் பல்லாண்டு நிலைத்து நிற்கும் பேறு பெறுவார். சூரியன் – ராகு சேர்க்கையை குருவோ அல்லது இதர சுபர்களோ பார்க்கவில்லை எனில் பொதுச்சேவையில் ஊழல் செய்வர். அதனால் இத்தகையவர்கள் இறந்த பின்னும் பல்லாண்டுகளுக்கு மக்களால் தூற்றப்படுவர். (ஊழல் அரசியல்வாதிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்)  சூரியனுக்கு குரு சேர்க்கை ஏற்படின் கோவில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்படுத்தும். சூரியன் பாவ ஆதிபத்தியத்தில் கெட்டிருந்தால் கோவில் நிர்வாகத்தில் கொள்ளை அடிப்பர். அதனால் இவர்களுக்கு புற்று நோய் போன்ற கொடிய நோய் வரும்.


செவ்வாய் பாதிக்கப்பட்டிருப்பின் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை மூலம் தனத்தை அடையும். இன்று நகரங்களில் நடக்கும் திருட்டுக்களில் பெரும்பாலானவை வன்முறையிலானவை. போகிற போக்கில் சாதுரியமாக கண்ணியமான தோற்றத்தில் திருடுவது பாதிக்கப்பட்ட சுக்கிரனாகும்.  திருடியவர் சுக்கிரனின் அம்சம் எனில் நம்புவது கடினம் என்றவகையில் இது அமையும். பாதிக்கப்பட்ட புதன் சாதுரியமாகவும் திட்டமிடலோடும் திருடும். சந்திரன் பணத்தின் மீதான சிந்தனையையும், செவ்வாய், கேது ஆகியவை பணத்தின் மீதான கட்டுப்பாட்டையும் குறிக்கும். சனி உழைப்பின் மூலமாக பெறும் பணத்தை குறிக்கும். உழைப்புக்கும் நேர்மைக்கும் உரிய சனி ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்து சந்திரன் தொடர்பு பெறும்போது உழைப்பின் மூலம் அடைய முடியாத தனத்தை திருடிப்பெற முனையும்.

காலபுருஷனுக்கு சுக ஸ்தானாதிபதியான கடக ராசி ஆதிபதி  சந்திரன் உழைக்காமல் திருட வேண்டும் என்ற சிந்தனையை பாதிக்கப்பட்ட சந்திரன் ஏற்படுத்தும். கால புருஷனுக்கு 1௦ ஆமிட அதிபதி கடகத்திற்கு நேர் எதிரான மகர ராசியாகும். இதனால் திருடர்களின் ஜாதக அமைப்பில் சனி-சந்திரன் ஏதாவது ஒரு அமைப்பில் சம்பந்தம் பெறும்.  சந்திரன் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் நீச்சமாகிறது. விருட்சிகம் கால புருஷனுக்கு 8 ஆம் பாவம் என்பதால் ரகசியம் காக்கும். எனவேதான் கால புருஷ லக்னத்திற்கு 8 ஆமிட தொடர்பு பெறுவதால் உழைக்காமல் ரகசியமாக திருடுவதற்கு காரக கிரகமாக சந்திரன் திகழ்கிறார். (சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவன் வெண்ணையையும் நம் மனதையும் திருடிய கண்ணன்). கடகத்தில் சனியின் பூச நட்சத்திரமும் விருட்சிகத்தில் சனியின் அனுஷ நட்சத்திரமும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 8 ஆவது பாவம் திருட்டை குறிக்கும் பாவமாகிறது.  கண நேரத்தில் கவனத்தை திசை திருப்பி திருடுவதற்கு எல்லாம் சந்திரனே காரணம்.  சந்திரன் தொடர்பில்லாத திருட்டே இல்லை. சந்திரன் எந்த கிரகத்துடன் சேர்க்கையில் உள்ளதோ அல்லது பார்க்கிறதோ அந்த கிரக காரகதிற்கு திருட்டு மனோபாவத்தை ஏற்படுத்துவார்.

கேது சட்டப்படியான தண்டனை கொடுக்கும் கிரகமாகும். சந்திரனுக்கு கேது தொடர்பிருந்தால் திருட்டு ஜாதகர் எத்தனை வருஷமானாலும் கேது தொடர்புடைய திசா புக்தி வந்து ஜனன சந்திரன் மேல் கோட்சார கேது போகும்போது அல்லது ஜனன கேது மீது கோட்சார சந்திரன் போகும் காலத்தில் தண்டனை அடைவது உறுதி. தண்டனை கொடுக்கும் கிரகங்களான செவ்வாய் (காவல்துறை), சூரியன் (அரசு), சனி (கர்ம காரகன்) ஆகியோரை கர்ம வினைகளின் பொருட்டு ராகு-கேதுக்கள் செயல்படாமல் செய்து தண்டனையை நிறுத்தி வைப்பதும் உண்டு. திருட்டின் தன்மை சந்திரன் மற்றும் 8 ஆமிட  தொடர்புகளைப்பொருத்து அமையும்.

கீழே  ஒரு பெண்மணியின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் 6, 9  ஆமதிபதி குரு லக்னத்தில் உச்ச நிலையில் திக்பலம் பெற்று கேதுவுடன் இணைவு பெற்றுள்ளார். குரு -  கேது தொடர்பு கோடீஸ்வர யோகம் என கூறப்பட்டாலும் பெரிய தனத்தை குறிக்கும் குரு கடனை குறிக்கும் கேதுவோடு தொடர்பு பெறுவது பொருளாதார வாழ்கையில் உயர்வை தந்தாலும் ஜாதகருக்கு கடனும் பெரிய பொருளாதாரத்தை இழப்பதையும் சேர்த்தே இது தரும். சுக்கிரன் பாதகாதிபதியாகி இரண்டாமிடத்திலும் பாவகத்தில் லக்னத்திலும் சூரியன் மற்றும் வக்கிர புதனுடன் இணைந்து 2 ஆவது பாவக ரீதியான பாதிப்பை தர வேண்டிய நிலையில் உள்ளார். . லக்னாதிபதி சந்திரன் மீனத்தில் குருவின் பூரட்டாதி – 4 ல் நின்றாலும் பாவத்தில் லக்னத்திற்கு 8 ல் நின்று அதன் வீட்டதிபதி வக்கிர சனியின் 3 ஆவது பார்வையை பெறுகிறார். இப்படி 8 ஆமிட தொடர்பை லக்னாதிபதி சந்திரன் பெறுவதால் திருட்டு தொடர்புடைய விஷயங்களை ஜாதகர் எதிர்கொள்வார் எனலாம். திசா நாதன் புதன் பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெற்று சுக்கிரனின் பூரம் – 4 ல் நின்று திசை நடத்துகிறார். 2 க்கு விரையத்தில் நிற்கும் கேதுவின் மகம் – 2 சாரம் பெற்ற சுக்கிரனின் புக்தியில் பூராடம் – 4 ல் தனுசுவில் நிற்கும் 8 ஆமதிபதி சனியின் அந்தரத்தில் தன ஸ்தானத்திற்கு விரையத்தில் லக்னத்தில் 8 ஆமதிபதி சனியின் பூசம் – 3 சாரம் பெற்ற கேதுவின் அந்தராந்திரத்தில் ஜாதியின் வீட்டில் 15 சவரன் நகை திருடு போனது. 8 ஆமதிபதி சனி சாரம் பெற்று லக்னத்தில் நிற்கும் குரு தங்கத்தை குறிக்கும் காரக கிரகமாவார்.

இரண்டாவதாக ஒரு திருட்டுப்பெண்ணின் ஜாதகம்.

கன்னி லக்ன ஜாதகத்தில் விரையாதிபதி சூரியன் உச்ச சனியோடு இணைவு பெற்று நீச பங்கம் அடைகிறார். குரு, சுக்கிரன்,  புதன் மூவரும் அஸ்தங்கம் பெற்றுள்ளனர். திருட்டுக்கு காரக கிரகமான சந்திரன் 10 ஆமதிபதியாகி சனி தொடர்புகொண்டுள்ளார். இந்த ஜாதகி திருடுவதையே தொழிலாகக்கொண்டவர்.  பாதகாதிபதி குரு பாதகஸ்தானமான மீனத்திற்கு 8 ல் பகை வீட்டில் அரசாங்கத்தை குறிக்கும் சூரியனால்  அஸ்தங்கமாகி திசை நடத்துகிறார். ஜாதகரது செயல்களை  கண்காணித்து தவறுகளுக்கு தண்டனை வழங்கும் பாதகாதிபதி வலுவிழப்பதால் ஜாதகி தண்டனைகளில் இருந்து தப்புதவதை குருவின் அஸ்தங்கம் குறிக்கிறது. புக்தி நாதன் ராகு சுயசாரத்தில் திருவாதிரை- 2 ல் நின்று புக்தி நடத்துகிறார். அந்தர நாதனான உச்ச அஸ்தங்க சனி  தனது பகைவரான செவ்வாயின்  சித்திரை – 4 ல் நின்று அந்தரத்தை நடத்துகிறார். இந்த நிலையில் ஜாதகியைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் ஜாதகி திருடும் சமயத்தில் பொறி வைத்து கையும் களவுமாக ஜாதகியை பிடித்தனர். அரசாங்கத்தை குறிக்கும் சூரியனும் காவல்துறையை குறிக்கும் செவ்வாயும் லக்ன பாவிகளானதால் ஜாதகியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தும் ஜாதகி தண்டனையின்றி வெளியே உலாவிக்கொண்டுள்ளார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கும்ப லக்ன ஜாதகத்தில் திருட்டை குறிக்கும் பாவமான 8 ஆமதிபதி புதன் தன்னுடன் இணைந்து 8 ஆவது பாவத்தில் நிற்கும் சூரியனின் உத்திரம் – 2 இல் நின்று திசா – புக்தியை நடத்துகிறார். 8 ஆமதிபதி புதனின் சார நாதன் சூரியன் திருட்டுக்கு காரக கிரகமான சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறார். சந்திரனின் வீட்டில் அந்தர நாதன் சனி, 8 ஆமதிபதி புதனின் ஆயில்யம் – 2 ல் நின்று அந்தரம் நடத்துகிறார். புதனின் அந்தராந்திர காலத்தில் மாட்டை குறிக்கும் ரிஷப ராசியில் சூரியனின் கார்த்திகை–4 ல் நின்ற குருவின் அமைப்பால் ஜாதகரின் 2 மாடுகள் திருடு போயின. புதன் இரட்டை தன்மையை குறிக்கும் கிரகம் என்பதை கவனிக்க.

பல்வேறு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருட்டு பற்றிய எனது ஆய்வு இங்கே பதிவிடப்பட்டது. எனது பதிவுகளை திருடி தங்களது தளத்தில் பதிவிட்டுக்கொள்ளும் ஜோதிடர்களுக்கும் ஒரு ஜாதக அமைப்பு இருக்கத்தான் செய்கிறது போலும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501