Saturday 27 June 2020

புதனும் மூன்றாம் பாவமும்!




இருமனம் ஒருமனமாகி இணையும் திருமணப்பொருத்தத்தில் அனைத்து பாவங்களும் கிரகங்களும் ஒருங்கினைய வேண்டும். ஆனால் இவை அனைத்துமே சாத்தியமில்லை. இதனால் ஒருவர் மற்றவருடன் எந்த அளவு இணைந்து செல்வார் என்பதை ஆராய்ந்தே இன்றைய திருமணங்கள் நடக்கின்றன. பொதுவாக மூன்றாவது பாவத்திற்கு அத்தனை முக்கியத்துவம் திருமணப்பொருத்தத்தில் கொடுப்பதில்லை. திருமணப்பொருத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் 3 ஆமிடமும் 12 ஆமிடமும் மிக முக்கியமானவை. உண்மையில் ஜாதகத்தில் உள்ள பல தோஷங்களை போக்குவதற்கான வழிகள் இவ்விரு பாவங்களிலும் உள்ளது. இதுபோல புதன் என்பது இருவர் மனமொன்றி இணையும் உறவுப்பாலத்தை குறிக்கும். கிரகமாகும். புதன் கால புருஷனுக்கு போக ஸ்தானமான 3ஆம் பாவ அதிபதி என்பதால் மிதுனம் மற்றும் புதனைக்கொண்டும் லக்னத்திற்கு 3 ஆம் பாவம் மற்றும் அதன் அதிபதியைக்கொண்டும் ஒருவர் மற்றொருவருடன் தாம்பத்ய அடிப்படையில் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவார் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஒருவரது இல்லறம் சிறப்படைய வேண்டுமெனில் கால புருஷனுக்கு படுக்கை சுகத்தை குறிக்கும் மீனத்தில் அதிபதி குருவின் தொடர்பு 3 ஆம் பாவம், 3 ஆம் பாவாதிபதி, புதன் மற்றும் மிதுனம் இவற்றிற்கு இருக்கவேண்டும். இவை நைசர்கிக பாவர்களோடும் லக்ன பாவர்களோடும் தொடர்புகொண்டிருந்தால் அங்கே தாம்பத்யம் தடைபடும். அதுவே உறவு  பாதிப்படைவதன் முதல் அறிகுறியாக அமையும். உண்மையில் தம்பதியரின் 3, 12 பாவங்களோடு கோட்சார சந்திரனை இணைத்துப்பார்த்தால் அவர்களின் அன்றைய இரவில் தாம்பத்யமுண்டா என்பதைக்கூட அறியலாம். இவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகிக்கு தற்போது ராகு திசையில் சூரிய புக்தியில் உள்ளார். 2017 முதல் கணவனோடு சண்டையிட்டு பிரிந்துள்ளார். கணவனை குறிக்கும் செவ்வாய் போக ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் நீசமாகியுள்ளார். 2017 ல் ஜாதகிக்கு 7 ல் நிற்கும் ராகுவின் திசையில் கேது புக்தி துவங்கியதும் இல்லறம் தடைபட்டு பிரிந்துள்ளனர். கேது களத்திர காரகன் செவ்வாய்க்கும் போக பாவமான கடகத்திற்கும் பாதக ஸ்தானமான ரிஷபத்தில்  அமைந்ததால் போகம் கருத்து வேறுபாடால் தடைபட்டு அதுவே பிரிவினையாகி உள்ளது. கேதுவிற்கு அடுத்து வந்த சுக்கிர புக்தியும் கால புருஷனுக்கு 12 ல் உச்சமாகி வக்கிரமடைந்து நீசத்திற்கு ஒப்பான நிலையில் புக்தி நடத்தியுள்ளதால் ஒற்றுமையை ஏற்படுத்த இயலவில்லை. சுக்கிரனின் 1, 6 தொடர்பு போகத்திற்கு பாதகமாகவும் 7 க்கு விரையமாகவும் அமைவதும் மற்றொரு காரணம். சுக்கிர புக்தியை அடுத்து வந்த சூரியனும் 3 க்கு பாதகத்தில் நிற்கும் கேதுவின் அஸ்வினி சாரம் பெற்றுள்ளதும் இருவரும் இணைந்து குடும்பம் நடத்த வாய்ப்பில்லை பிரிவுதான் என்பதையே காட்டுகிறது. இந்த ஜாதகத்தில் கால புருஷ போக ஸ்தானாதிபதி புதன் நீசமாகியுள்ளது ஜாதகிக்கு போக பாக்கியத்தில் தடை ஏற்படும் என்பதையும் புதன் லக்ன அஷ்டம, லாபாதிபதி குருவுடன் பரிவர்தனையாகியுள்ளது திருமணமும் நடந்து போகமும் ஏற்பட்டு அது தடையுடன் முடிய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. சம்பவங்கள் புதனின் கேட்டை-1 சாரம் பெற்று திசை நடத்தும் ராகுவின் திசையில்தான் ஏற்படவேண்டும் என்பதும் ஜாதகியின் விதிப்பயன் என்பது புலனாகிறது. 

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

இந்தப்பெண்ணிற்கு போக ஸ்தானமான 3 ஆம் பாவத்தில் கால புருஷ போக ஸ்தானாதிபதி புதன் நீசமாகி அஷ்டமாதிபதி சூரியனுடன் இணைந்து நிற்கிறார். புதன் அஸ்தங்கமடையவில்லை. குரு கேந்திராதிபத்திய தோஷம் பெற்று லக்னத்திற்கு 4 ல் அஷ்டமாதிபதி சூரியன் உச்சமாகும் ,மேஷத்தில் நிற்கிறார். குரு வருஷ கிரகமாவதால் ஜாதகிக்கு திருமணமாகி 1 வருட காலம் தாம்பத்ய உறவை தவிர்த்து வந்துள்ளார். ஒரு வருடம் சென்ற பிறகே தாம்பத்யம் ஏற்பட்டுள்ளது. தாம்பத்யம் ஏற்பட காரணம், கற்பு ஸ்தானமான சுக ஸ்தான அதிபதி செவ்வாய்  மேஷத்தில் நிற்கும் குருவை பார்ப்பதே ஆகும். குருவிற்கு திரிகோணத்தில் தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் லக்னாதிபதி சனி நின்று தாமதித்தாவது தாம்பத்யத்தை  தரவேண்டியவராகிறார். 7 ஆமதிபதி சந்திரன் உச்ச செவ்வாயால் நீச பங்கம் பெற்று 4 ஆமிட குருவிற்கு அஷ்டமத்திலும் 4, 11 ஆமதிபதி செவ்வாய்க்கு பாதகத்திலும் நீச புதனின் கேட்டை சாரம் பெற்று அமைந்து புதனது நீச தோஷத்தையும் போக்குகிறார். இதனால் ஜாதகிக்கு தாம்பத்யம் தடை பட்டு பிறகு ஏற்பட்டுள்ளது.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

    
இந்த ஜாதகர் என்னுடன் பணிபுரிந்தவர். 1973 ல் பிறந்தவர் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் கால புருஷ போக ஸ்தானாதிபதி புதன் வக்கிரமாகி இரு கடும் பாவிகளான சனியோடும் கேதுவோடும் இணைந்துள்னது. இவர்களுக்கு குருவின் பார்வையும் இல்லை.  லக்னத்திற்கு 3 ஆமதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு 6 ல் மறைந்து பகை பெற்று நீசத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளார்.  இந்த ஜாதகருக்கு திருமணம் நடந்து முறையான போகம் கிடைக்காது என்பது ஜாதக விதியாகும். திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் இது. திருமண மறுப்பை போக ஸ்தான அடிப்படையிலும் பார்க்கலாம் என்பதற்கான உதாரணம் இது.

இறுதியாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

இந்த ஜாதகத்தில் புதன் 7 ல் ஆட்சி பெற்றுள்ளது. இது தனுசு லக்னத்திற்கு கடும் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். இந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெற்று தாம்பத்யமும் நடந்தது. புத்திர, தாம்பத்ய ஸ்தானாதிபதி செவ்வாய் கால புருஷனுக்கு தாம்பத்ய ஸ்தானமான மீனத்தில் நின்றதால் இது நடந்தது. ஆனால் விவாகரத்தும் ஆகிவிட்டது. இப்போது விவாகரத்தின் காரணத்தை ஆராய்வோம். 7 ஆமதிபதியான புதனை 7 க்கு 6 ஆமதிபதி செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரு கடும் பாவிகள் பார்க்கின்றனர். இதனால் களத்திரம் இவ்விரு பாவிகளின் குணம் கொண்டவராக இருப்பார். அதே சமயம் லக்னாதிபதி குரு, லக்னத்திற்கு 6 ல் பகை பெற்று மறைந்து 7 க்கு விரையத்தில் நிற்பதால் மனைவியின் குணத்தோடு ஜாதகரால் ஒருங்கிணைய முடியவில்லை. மேலும் போக ஸ்தானமான 3 ஆமதிபதி சனி லக்னத்தில் வக்கிரமாகி 3 ஆமிடத்தில் ராகு லக்னாதிபதி குருவின் சாரம் பூரட்டாதி-1 பெற்று நிற்பதால், மனைவியின் தீவிர எண்ணங்களுக்கு எதிராக தீவிர பகை எண்ணங்களை ஜாதகர் கொண்டிருப்பார். இதனால் இவர்களின் தாம்பத்ய எண்ணங்கள் ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை என்பதால் பிரிவு ஏற்பட்டுள்ளது.

தம்பதிகளின் தாம்பத்ய ஒற்றுமையை அறிய புதனையும் மூன்றாவது பாவத்தையும் அதன் அதிபதியையும் உற்றுநோக்க வேண்டியது அவசியம். 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Friday 19 June 2020

ஜோதிடத்தில் குடும்ப உறவுகள்





மனித வாழ்க்கை ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறது. ஒரு நபர் உறவுகளின்றி வாழ்ந்தால் அவர் அநாதை என அழைக்கப்படுவார். பொருளாதார சிரமங்களைகளைக்கூட ஒருவர் பொறுத்துக்கொள்ளவார். ஆனால் இன்று உறவுகள் ரீதியில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை மிகப்பெரிய அளவில் எடுத்துக்கொள்கின்றனர். உறவுகளோடு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அன்றைய காலத்தில் ஒருவர் ஒரு உறவால் பாதிக்கப்பட்டால் மற்றொரு உறவினர் அவரை தாங்கிப்பிடிப்பார். இதனால் உறவுகள் என்றாலே சிரமப்படுதுபவர்கள் என்றொரு மனோநிலை ஜாதகருக்கு வராது.  ஆனால் உறவுகளைவிட்டு சம்பாத்தியதிற்காக பிரிந்து செல்லும் இன்றைய சூழலில் உறவுகளோடு ஒரு மனிதனின் பிணைப்பு குறையத்தொடங்குகிறது. இதனால் அவன் தனி மனிதன் ஆகிறான். அவனது உறவு அவனது மனைவி மற்றும் குழந்தைகள் என்ற அளவில் சுருங்கிவிடுகிறது. மற்றவை எல்லாம் பெயரளவிலேயே உறவாக அமைந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் கால மாற்றம் ஏற்படுத்தும் விழைவுகள். இவைகளை ஒரு தனி மனிதனால் தடுத்துவிட இயலாது. பண்டைய ஜோதிட விதிகளோடு போராடாமல் காலமாற்றத்திற்கேற்ப மாறிவரும் உறவு நிலைகளையும் கவனித்து ஜோதிடத்தை அணுகுவதே சிறந்தது. இதனால் ஒருவர் மனோரீதியாக பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த ஆலோசனைகளை ஒரு ஜோதிடரால் வழங்க முடியும். இவற்றை ஆராய்வதுதான் இன்றைய பதிவின் நோக்கம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


மிதுன லக்னம். லக்னத்திற்கு 7 ல் பாதகாதிபதி குரு ஆட்சி. கடும் களத்திர தோஷம் கொண்ட ஜாதகம். ஜாதகருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களது குடும்ப வாழ்விலும் பாதிப்புகள் உண்டு. களத்திர காரகன் சுக்கிரனும், களத்திர பாவமும் பாவாதிபதி குருவும் பாவகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாதகருக்கு பாதிப்பை மனைவி ஏற்படுத்தினால் மனைவியும் பாதிக்கப்படுவார் என்ற அமைப்பு இங்கே உள்ளது. இதனால் இருவரும் தங்கள் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட்டால் குடும்பம் பிரியாமல் தடுக்க முடியும். செவ்வாயின் சேர்க்கை பெற்ற சனி தனது மூன்றாம் பார்வையால் பாதக ஸ்தான கிரகங்களை பார்க்கிறது. இதனால் மனைவி பிடிவாதமும் கோபமும் நேர்மையும் கொண்டவராக இருப்பார். சனியைவிட 4 பாகைகள் பின்தங்கி கிரக யுத்தத்தில் தோல்வியுற்ற செவ்வாய் தனது நான்காம் பார்வையாக 8 ல் மறைந்த லக்னாதிபதி புதனையும் சூரியனையும் பார்க்கிறது. இதனால் ஜாதகருக்கும் ஜாதகரின் தந்தைக்கும் பிடிவாதமும் வைராக்கியமும் ஏற்படும். லக்னாதிபதி புதன் சூரியனோடு லக்னத்திற்கு 8 ல் நிற்பது சிறந்த புத ஆதித்த யோகம். ஜாதகர் நல்ல மதிநுட்பம்கொண்டவர். இப்பொழுது இவர்களின் வாழ்வில் உறவுகள் வழி பாதிப்புகள் எப்படி என்பதை காணலாம்.


கோட்சாரத்தில் லக்னத்திற்கு 1 – 7ல் ராகு – கேதுக்கள் நிற்பதால் ஜாதகருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உறவு சரியில்லை. மனைவி தனது தந்தையின் வீட்டில் குழந்தையோடு இருக்கிறார். தனது மாமனார் மற்றும் கணவரின் மூத்த சகோதரி, மற்றும் மூத்த சகோதரியின் கணவர் ஆகியோர் தங்களது குடும்ப வாழ்க்கைக்கு தடையாக இருப்பதாகவும் கணவன் தன்னை மதிப்பதில்லை என்பதும் மனைவியின் குற்றச்சாட்டு. ஜாதகத்தில் லக்னாதிபதி 8 ஆமிடத்தில் சூரியனோடு சேர்ந்து மறைவு பெற்று அமர்ந்துள்ள நிலையில் 8 ஆமதிபதி உச்சமானதால் ஜாதகர் ஒரு பாரம்பரியமும் கௌரவமும்கொண்ட குடும்பத்தில் பிறந்தவராவார். இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி புதனுக்கு சனியும் சுக்கிரனும் நண்பர்கள். சுக்கிரன் பாதக ஸ்தானம் பெற்றுள்ளது. சூரியன் மறைவு ஸ்தானம் பெற்றுள்ளது. புதன் எந்த பாவத்திலும் முழுமையான மறைவு பெறாத ஒரே கிரகமாகும். சூரியன் 8, 12 ல் மறைவு பெறும் கிரகமாகும். இங்கு நண்பனின் வீட்டில் மறைந்த புதன் பெரிய அளவில் பாதிக்கப்படாது. ஆனால் 8 ல் பகைவன் சனியின் வீட்டில் அமைந்த சூரியன் பாதிக்கப்படும். சூரியனுக்கும் பாகை இடைவெளி அதிகம் என்பதால் இங்கு தந்தைக்கும் மகனுக்கும் ஒருங்கிணைவு இருக்காது. ஆனால் சூரியனுக்கு புதன் கட்டுப்படும் கிரகமாகும். சூரியன் புதனைவிட அதிக பாகையில் சென்றிருப்பதால் சூரியன் புதனை கட்டுப்படுத்தும். 

உச்ச சனியோடு சேர்ந்த செவ்வாய் புதனையும் சூரியனையும் பார்ப்பதால் ஜாதகரின் தந்தை சனி+செவ்வாய் சேர்க்கையை குறிக்கும் சீருடையணிந்த ராணுவ அதிகாரியாக பணிபுரிந்தவராவார். இதனால் தந்தை மகனின் குடும்ப வாழ்வில் தலையிட்டு தனது ராணுவ கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இதனால் ஜாதகர் தனது குடும்ப வாழ்வில் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் தனது குடும்ப வாழ்வில் தடுமாறுகிறார். சூரியன் சுக்கிரனுக்கு பகை கிரகம் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். மேலும் செவ்வாயின் பார்வையும்  தந்தையை மூர்க்கமாக்குகிறது. மூத்த சகோதரியை குறிக்கும் சுக்கிரன் பாதக ஸ்தானத்தில் அமைந்து செவ்வாயோடு சேர்ந்த சனியின் பார்வையை பெறுகிறது. இதனால் கணவனின் மூத்த சகோதரி வகையில் ஜாதகரின் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படும்.  மைத்துனனை குறிக்கும் செவ்வாய் 6,11 ஆமதிபதியாகி தனது கடும் பகை கிரகமான சனியோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் மைத்துனனாலும் (ஜாதகரின் மூத்த சகோதரியின் கணவன்)  ஜாதகருக்கு பாதிப்புகளே அதிகம். சனியும் செவ்வாயும் குழந்தையை குறிக்கும் 5 ஆவது பாவத்தில் இணைந்து நின்று, 7 ஆம் பாவத்தில் ஆட்சி பெற்று நிற்கும் புத்திர காரகனும் களத்திர பாவாதிபதியுமான குருவை சனி பார்ப்பதால் குருவின் களத்திர தோஷத்தை சனி குறைத்தாலும் குழந்தை பிறந்த பின் இருவருக்கும் பிரிவினை பாதிப்பு ஏற்படவேண்டும் என்ற விதி இங்கே செயல்படுகிறது.

தற்போது இந்த நபருக்கு ஜோதிடர்கள் கிரகங்கள் ஜாதக ரீதியாக அமைந்துள்ள விஷயங்களை விளக்கி ஜாதகரது தந்தை, மூத்த சகோதரி மற்றும் அவரது கணவரை தனது குடும்ப விஷயங்களில் தலையிடாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் மனைவியோடு தனியாக குடித்தனம் போகவேண்டும் என ஆலோசனை கூறலாம். இவற்றை கிரகங்களின் நிலைகளின்படியே அறிவுறுத்தவேண்டும். தற்போது கோட்சார  ராகு-கேதுக்கள் லக்னத்திற்கு 1 – 7  ஆக அமைந்துள்ளன. வரும் புரட்டாசி மாதம் (செப்டம்பர் 2௦2௦)ல் அவை 6 -12 நிலை பெற்று சிறப்பாக மாறவிருக்கின்றன. மேலும் ஜனன கால புதன்+சூரியன் மீது நீதிமானான கோட்சார சனி செல்வதால் தந்தை சனியின் நேர்மைக்கு தலைவணங்கியாக வேண்டும். கூடுதலாக பாதகாதிபதி குரு இவ்வருட இறுதியில் லக்னதிற்கு 8 நீசமாகி அங்கு ஆட்சிபெற்ற சனியோடு சேரவிருக்கிறார். (தற்போது தற்காலிகமாக அதிசார குரு சனியோடு சேர்ந்துள்ளது). இதனால் இவ்வருட பிற்பகுதியில் ஜாதகர் தனது குடும்பத்துடன் இணைய வாய்ப்பு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஜாதகத்தில் 7 ஆமிட நிலையும் சனியோடு சேர்ந்த செவ்வாயும் பிரிவினையை குறிப்பிடும் அமைப்பு இந்த சூழலில் இவர்கள் பிரிவதே ஜாதகப்படி உள்ளது என ஜோதிடர்கள் சிந்திக்கத்தோன்றும். இங்கு செவ்வாய் சனியிடம் கிரக யுத்தத்தில் தோல்வியுற்றுள்ளதையும் பாதக ஸ்தானத்திற்கும் பாதகாதிபதிக்கும் பாவ கர்த்தாரி யோகம் உள்ளதையும்  வெற்றி பெற்ற லக்ன யோகாதிபதி சனியின் 7 ல் பதிவதையும் கவனிக்க வேண்டும். மனைவியின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து ஜாதக திசா புக்திகள் மற்றும் கோட்சாரத்தின் அடிப்படையில் தீர்க்கமான பதிலை கூறுவது ஒரு சிறந்த ஜோதிடரின் முக்கிய கடமை. இந்த ஜாதகரின் மனைவிக்கு  தனுசு லக்னம். பாதக ஸ்தானமான மிதுனத்தில் புதன் ஆட்சியாக உள்ளது. சம சப்தம லக்னம் என்பதைவிட சம தோஷம் கொண்ட ஜாதகங்கள் என்பதையும் அடியேன் கவனித்தேன்.

விரைவில் உங்களை மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Friday 12 June 2020

மதுரையும் சிதம்பரமும்!


ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் தன்மையை பொறுத்து “உங்கள் வீட்டில் மதுரையா அல்லது சிதம்பரமா?” என்றொரு கேள்வி அன்றைய வழக்கத்தில் இருந்தது. மதுரை என்பது மதுரையை ஆட்சி செய்யும் அன்னை மீனாக்ஷியை குறிப்பிடுவது. அங்கு சொக்கநாதருக்கு இரண்டாமிடம்தான். அதுபோல சிதம்பரம் என்றால் நம் நினைவுக்கு வருவது நடராஜர்தான். அங்கே அவருக்குத்தான் முதல் மரியாதை. பொதுவாக ஒரு குடும்பத்தை பெண் நிர்வகிப்பதே சிறப்பு. காரணம் இயல்பாகவே பெண் என்பவள் பொறுமைக்கு உதாரணமான பூமாதேவியின் அம்சமாக மதிப்பிடப்படுபவள். குடும்ப உறவுகளை தாய்மை உள்ளத்தோடு அணுக வேண்டும். அது பெண்ணுக்கே உரியது. அதனாலேயே குடும்பத்தை ஒரு பெண் நிர்வகிப்பதே சிறந்தது என்கின்றனர். ஆனால் அலுவலக உறவுகளை ஒரு ஆண் தாய்மை உணர்வுடன் அணுகக்கூடாது அங்கே சாதுரியத்திற்கே முன்னுரிமை. அலுவலக உறவுகளை புத்தி கொண்டே அணுக வேண்டும். ஆண் குடும்ப உறவுகளை புத்தி கொண்டு அணுகினால் குடும்ப உறவுகளுக்கிடையேயான உறவுகள் வரவு செலவுகளின் அடிப்படையில் அமையுமே தவிர அது நெஞ்சம் நிறையும் பாசத்தின் அடிப்படையில் அமைய வாய்ப்பு குறைவு. இதனால் ஆணின் ஆளுமை அலுவலகத்தில்தான் இருக்க வேண்டும் குடும்பத்தில் அல்ல என்றொரு கருத்து உருவானது. இவை இடம்மாறி அமைவதும் உண்டு. உதாரணமாக மனைவி ஒரு வணிக பின்னணியை கொண்டவராக இருந்து வந்திருந்தால் அவளிடம் இயல்பாகவே அவளின் சுபாவத்தில் பாசத்தைவிட லாப நோக்கே இடம்பெற்றிருக்கும். இதனால் ஏற்படும் சிக்கல்களை களைய அங்கு கணவன் தனது குடும்ப உறவுகளை பேண தாய்மை உணர்வு கொண்டவனாக தனது பங்களிப்பை அளித்ததாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். கணவன் பொருளாதார மற்றும் பணிச்சூழலை கையாளத்தெரியாவிட்டால் அவற்றில் சிறந்த மனைவியின் ஆலோசனையை நாடுவதில் தவறில்லை. இன்றைய பதிவு இதைப்பற்றியதுதான். 


மேற்கண்ட ஜாதகம் ஒரு ஆணினுடையது. இந்த ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் 7 ஆமதிபதி 7 ஆமிடத்திலேயே வக்கிரமாகியுள்ளது. எந்த ஒரு கிரகமும் தனது ஆட்சி வீட்டில் வக்கிரமானால் தனது சுபாவ குணத்தை இழந்துவிடும். ஒரு ஜாதகத்தில் பரம சுபக்கிரகமான குகு இப்படி வக்கிரமடைவது பொதுவாக நன்மையான அமைப்பு அல்ல. ஆனால் இங்கு 7 ஆமிடம் என்பது உபய லக்னமான கன்னிக்கு பாதக ஸ்தானம் என்பதால் குரு வக்கிரமடைவது ஒருவகையில் நன்மையே. இந்த ஜாதகத்தில் மனைவியை குறிப்பிடும் சுக்கிரன் நீசமாகி தனது பகை கிரகமான லக்ன விரையாதிபதி சூரியனுடன் இணைந்துள்ளார். சூரியன் 11 பாகையிலும் சுக்கிரன் 2௦ பாகையிலும் நிற்கின்றனர்.  இதனால் சுக்கிரனுக்கு பெரிதாக அஸ்தங்க தோஷமில்லை. எனினும் நீச வீட்டில் இருப்பதால் ஜாதகரின் மனைவி சாதுரியம் குறைந்தவராக இருக்கவே வாய்ப்பு அதிகம். இந்த ஜாதகத்தில் புதனுடனான பரிவர்தனைக்குப்பின் சூரியன் 12 ஆமிடத்திம் சென்று மறைகிறது. 3 & 8 ஆமதிபதியான செவ்வாய் 2 ல் அமைந்து 1௦ ஆமிட ராகுவின்  சுவாதி சாரம் பெறுகிறார். மற்றொரு ஆண் கிரகமான குரு தனது வீட்டில் வக்கிரமாகி வலு குறைக்கிறார். இதனால் 3 ஆண் கிரகங்களும் தங்களது தனித்துவமான ஆளுமை குணத்தை இழக்கின்றனர். 

இப்போது மனைவியை மதிப்பிடுவோம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் நீசமானாலும் சூரியனுடன் பரிவர்த்தனையான புதனின் வரவால் வலுவடைகிறார். லக்னாதிபதி புதன் வக்கிரமடைவது ஜாதகரை மட்டுமே பாதிக்கும். சுக்கிரனை பாதிக்காது. லக்ன திரிகோனத்திலும் ஒரு பெண் கிரகம் சந்திரனே அமைந்துள்ளது. மற்றொரு பெண்கிரகமான ராகு தசம கேந்திரமான 1௦ ஆமிடத்தில் வலுவாக அமைந்து தனது உச்ச வீட்டை நோக்கியுள்ளார். இந்த அமைப்புகளின்படி ஆண் கிரகங்களைவிட பெண் கிரகங்களின் வலுவே இந்த ஜாதகத்தில் கூடியுள்ளது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் பரிவர்த்தனை கிரகங்களான புத்திகாரகன் புதன் மற்றும் நிர்வாக காரகன் சூரியனின் தொடர்பையும் ஒருங்கே பெறுவதால் வலுவடைகிறது. மற்றொரு அம்சமாக பாதக ஸ்தான குரு அங்கே வக்கிரமடைவதால் தனது பாதக ஆதிபத்தியத்தை கைவிட்டு சுபதுவமான தனது காரகத்தை மட்டும்  தக்கவைத்துக்கொள்கிறார். இப்படி 7 ல் நிற்கும் குரு லக்ன கிரகங்களை பார்க்கும் நிலையில் சுக்கிரன் வலுவடைகிறார். இதனால் இந்த ஜாதகத்தில் கணவனைவிட மனைவியே முக்கியதுவம் பெறுகிறார்.

கீழே இரண்டாவது ஜாதகம்.

இந்த ஜாதகத்தில் குரு லக்னதிலேயே உச்சமாகி திக்பலத்தில் உள்ளது. லக்னாதிபதி சந்திரன் மனைவியை குறிக்கும் 7 ஆமிடத்தில் அமர்ந்துள்ளது. இந்த ஜாதகத்தில் 7 ல் நிற்கும் லக்னாதிபதி சந்திரனைவிட லக்னத்தில் அமர்ந்த குருவின் திக்பலம் வலுவானது. மனைவியை குறிக்கும் சுக்கிரன் ரிஷபத்தில் தனது பாதக வீட்டில் 3 பாகை பெற்று தார காரகனாகியுள்ளார். சூரியன் அதே இடத்தில் 25 பாகை பெற்று ஆத்ம காரகனாகியுள்ளார். இதனால் அங்கு சுக்கிரனைவிட சூரியன் வலுவடைகிறார். இந்த ஜாதகரின் மனைவியும் குடும்ப நிர்வாகத்தை தானே நடத்த முயன்றார். ஆனால் குருவின் திக்பலமும் சுக்கிரன் பாதக ஸ்தானம் பெற்றதனாலும் ஜாதகரே குடும்பத்தை நிர்வகிக்கிறார். 

மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம் கீழே.     
இந்த ஜாதகத்தில் கடக லக்னத்திற்கு 7 ஆமிடத்தில் குரு நீசமாகியுள்ளார். இது  வாழ்க்கைத்துனைவருக்கு சிறப்பை தராது. லக்னாதிபதி சந்திரனும் லக்னத்திற்கு 8 ல் லக்ன யோகாதிபதி செவ்வாயுடன் மறைந்துள்ளார். இதனால் ஜாதகிக்கும் இது சிறபான அமைப்பல்ல.ஆனால் லக்னாதிபதி சந்திரன் குருவின் பூரட்டாதி-1 லும் குரு திருவோணம்-3 லும் அமைந்து சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள். இதனால் பரிவர்த்தனைக்குப் பின் ஆண் கிரகங்களான குருவும் செவ்வாயும் லக்னத்திற்கு 8 ல் மறைகிறார்கள். பரிவர்த்தனை சந்திரன் லக்னத்திற்கு 7 ல் தனது சுய சாரத்தில் வந்து அமைவதால் லக்னம் வலுவாகிறது. கணவனை குறிக்கும் களத்திர & வாகன காரகன் செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் மறைந்து சனியோடு பரஸ்பர பார்வையை பரிமாறிக்கொள்வதாலும் 7 ல் நிற்கும் பரிவர்த்தனை சந்திரனின் அமைப்பாலும் ஜாதகியின் கணவர் வாகன ஓட்டியாக பணிப்புரிகிறார். 8 க்கு சனி-செவ்வாய் தொடர்பு ஏற்படுவதால் உண்டாகும் மாங்கல்ய தோஷத்தை பரிவர்த்தனைக்குப்பின் 8 க்கு சென்று அமரும் குரு போக்கிவிடுகிறார். அதே சமயம் ரிஷபத்தில் சூரியன் 11 பாகையிலும் சுக்கிரன் 23 பாகையிலும் அமைந்துள்ளனர். இதனால் சுக்கிரன் சொந்த வீட்டில் வலுவாக உள்ளார். சனியோடு சுக்கிரன் இணைவதால் ஜாதகி பணிபுரிகிறார். சூரியனோடு சுக்கிரன் இணைவதால் ஜாதகி நிர்வாகத்திறமைகொண்டவர். அரசுத்துறையில் பணிபுரிகிறார். புதனோடு சுக்கிரன் இணைவதால் கல்வித்துறையில் இருக்கிறார். இந்த ஜாதக அமைப்புகளால் நிர்வாகத்திறமை கண்ட ஜாதகியே தனது குடும்பத்தை நிர்வகிக்கிறார்.

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
துலாம் லக்ன ஜாதகம். ராஜ்ய ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் பாதகாதிபதி சூரியனும் 7 ஆமதிபதி செவ்வாயும் திக்பலம் பெற்று அமைந்துள்ளனர். லக்னாதிபதியும் களத்திர காரகர் சுக்கிரனும் 1௦ ஆமிடத்தில் அமைந்துள்ளதால் கணவன் மனைவி இருவருமே நிர்வாகச் சிறப்புமிக்கவர்கள்தான். சுக்கிரன் 6 பாகையிலும் சூரியன் 13 பாகையிலும் செவ்வாய் 21 பாகையிலும் அமைந்துள்ளனர். செவ்வாய் ஆட்சி புதனின் ஆயில்யம்-2 சாரம் பெற்றதனால் நீச பங்கமும் அடைகிறார். இரு கிரகங்களும் சூரியனைவிட்டு 5 பாகைக்கு மேல் தள்ளியுள்ளன என்பதால் அஸ்தங்க பாதிப்பு அதிகமில்லை.  கணவன் – மனைவியை குறிக்கும் செவ்வாயும் சுக்கிரனும் ராஜ்ஜிய ஸ்தானத்தில் ஒன்றினைந்துள்ளதால் இருவரும் நிர்வாகம் செய்வார்கள். ஒருவரை ஒருவர் அனுசரித்தும் செல்வார்கள். ஆனால் இங்கு சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் இடையே பாதகாதிபதி சூரியன் வந்து அமைந்ததால் இருவரையும் ஒன்றிணைய விடாமல் செய்வார். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்ல விரும்புகிறார்கள். ஆனால் இங்கு விதி பாதகாதிபதி ரூபத்தில் வந்து இருவரையும் பிரித்துவிட்டது. இங்கு மதுரையும் சிதம்பரமும் அவரவர்கள் இருப்பிடத்தில் ஆட்சி செய்கிறார்கள். இருவரும் இணைந்து குடும்பத்தை நடத்த வழியில்லாமல்போய்விட்டது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Thursday 4 June 2020

ஜீவனமும் கோட்சாரமும்!


2020 ஆம் ஆண்டு எண்கணித அடிப்படையில் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ன் கீழ் வரும் ஆண்டாகும். ராகு தனது உச்ச வீடான ரிஷபத்தை நோக்கி வரும் சூழலில் இன்று கொரானாவினால் உலகப்பொருளாதாரம் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவிருக்கிறது. கால ஓட்டத்திற்கேற்ப மாறுதல்களை ஏற்படுத்தும் கிரகங்களில் முக்கியமானது ராகுவாகும். நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நவீனத்துவங்களுக்கு அதிபதி கிரகம் ராகு. ராகுவும் கேதுவும் தங்களது உச்ச வீடுகளான ரிஷபத்தையும் விருட்சிகத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஜீவன காரகன் கால புருஷனுக்கு ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியில் இருக்கிறார். வருட இறுதியில் உலகியல் ஜோதிட விதிகளின்படி தர்ம கர்மாதி யோகம் செயல்பட இருக்கிறது. கால புருஷனுக்கு தன ஸ்தானமான ரிஷபத்தில் உச்சமடையும் ராகுவும் உலக பொருளாதாரத்தின் போக்கை  மாற்றியமைக்க இருக்கிறார்கள் என்பது தெளிவாகத்தெரிகிறது. முக்கியமாக வருடக்கோள்களின் பெயர்ச்சியும் இந்த வருடம் நடக்கின்ற சூழலில் இந்நிகழ்வு நடைபெற இருப்பது எதிர்பார்க்கத்தக்கது. அனைத்து துறைகளும் திடீரென்று ஏற்பட்ட இந்த கொரானா சூறாவளியால் திகைத்து நிற்கும் இந்நிலையிலும் எதிர்வரும் கோட்சார நிலைகளுக்கேற்ப தங்களது ஜாதக அமைப்பைக்கொண்டு தங்கள் சம்பாத்திய நிலையை திட்டமிட இப்பதிவு உங்களுக்கு உதவும்.


ரிஷப ராசியில் புதுமைகளுக்குரிய ராகு வந்து உச்சமடைவதால் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையேயான உறவிலும் புதிய மாற்றங்கள் ஏற்படும். மக்கள் தங்களுக்கான தனித்த திறமையைகளை பயன்படுத்தி பொருளீட்டும் சூழல் உருவாகும். இதனால் நிர்வாக தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு தொழிலாளர்களை கையாள்வதில் பாதிப்பு ஏற்படும். காரணம் நிர்வாகத்தை குறிக்கும் சிம்ம ராசிக்கு 1௦ ஆமிடத்தில் ராகு வந்து உச்சமடைவதே. குருவும் சனியும் இணைந்து கால புருஷ ஜீவன ஸ்தானத்தில் நிற்பதால் அடித்தட்டு மக்களுக்கும் உண்மையாக உழைக்கும் மக்களுக்கும் மேன்மையான காலமே. குரு சனி இணையும் மகர ராசிக்கு திரிகோணத்தில் ராகு உச்சமடைவதால்  செய்தொழிலில் காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் பாதிப்படைவர். பெரிய தொழில்களை பல சிறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்து செய்யும் நடைமுறை பரவலாகும். ரிஷப ராசி திரைத்துறையை குறிக்கும் சுக்கிரனின் ராசி என்பதால் நூற்றாண்டு பழமை வாய்ந்த திரை அரங்குகளின் காலம் படிப்படியாக முடிவுக்கு வரும்.

கீழே ஒரு ஜாதகம்.
ஜாதகர் வட்டித்தொழிலில் ஈடுபட்டுள்ளவர். ஜனன காலத்தில் மிதுனத்தில் நின்ற ராகு கோட்சாரத்திலும் அதே இடத்தில் நின்று 2 ஆமிடதில் உள்ள சுக்கிரனை நோக்கி வருகிறார். சுக்கிரன் சிறிய தனத்தையும் குரு பெரிய தனத்தையும் ராகு மிக அதிக அளவிலான தனத்தையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். கடந்த கோட்சார காலத்தில் சனியோடு சேர்ந்திருந்த கேதுவால் இவர் செய்த வட்டித்தொழிலில் நிறைய பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பார். ஜனன சுக்கிரனை தொடும் சூழலில் கேதுவும் அடுத்து குருவைத்தான் தொட இருக்கிறார். ராகு-கேதுக்கள் வட்டித்தொழிலை குறித்தாலும்  தனத்தின் காரக கிரகங்களின் மீது அவை செல்லும்போது தன வகையில் இழப்பு ஏற்படுத்த தயங்கமாட்டார்கள். அதுவும் சிறிய மீனைபோட்டு பெரிய மீனை பிடிப்பதுபோல சிறிய அளவிலான லாபங்களை கொடுத்து பிறகு இருப்பதையும் பிடுங்கிக்கொள்வார்கள். அதை மீறி வட்டித்தொழிலில் வருமானம் சிறப்பாக இருந்தால் ராகு சுக்கிரனோடு  குடும்ப ஸ்தானத்தில் இணைவதால்  மனைவி வகையில் பாதிப்பை ஏற்படுத்தி குடும்பத்தை கெடுத்துவிடுவார் எனலாம். சனி குருவோடு இணைந்து செல்லும் சூழலில் ஏழரை சனி காலத்தில் சனி கடும் உழைப்பின் பேரிலேயே வருமானத்தை தருவார். இத்தகையோர் இக்காலத்தில் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளி நாடு சென்று கடுமையாக உழைத்தால் ராகுவும் சனியும் பாதிப்புகளை குறைத்துக்கொள்வார்கள்.

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.
1972 ல் பிறந்த ஆணின் ஜாதகம் இது. இவர் கடந்த காலங்களில் மிகக்கடுமையான தொழில் நெருக்கடிகளை சந்தித்தவர். காரணம். இவருக்கு இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஏழரை சனியும் சமீபத்தில் லக்னத்தில் இரண்டாமதிபதி சனியோடு இணைந்திருந்த கேதுவும்தான். இதனால் தொழில் வகையில் எந்த திசையில் செல்வது என தெரியாமல் விழிப்பவர். தனுசு லக்னத்தில் குரு அமர்ந்து பாக்யாதிபதி சூரியன் உச்சம் பெற்றதால் இவரால் சுய கௌரவத்தை இழந்து தாழ்ந்த வேலைகளை செய்து பொருளீட்ட முடியாது. குரு வக்கிரமடைந்துவிட்டதால் சம்பாத்திய வகையில் இப்படித்தான் செயல்படுவேன் என சில பிடிவாதமான எண்ணங்களை இவர் கொண்டிருப்பார். கோட்சார சனி ஜனன ராகு மீதும் ஜனன சனி மீது கோட்சார ராகுவும் இன்னும் சில மாதங்களின் வரவிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜனன குரு வக்கிரமடைந்துவிட்டதால் ராகுவால் பெரிய அளவில் குரு பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்பு குறைவு.. 5 ஆவது பாவத்தில் ஒரு உச்ச கிரகம் இருப்பதும் இதை தெரிவிக்கிறது. ஆனால் ஜீவன வகையில் ஜாதகர் பெரும் இடர்பாட்டை எதிர்கொள்ளப்போவது தெரிகிறது. இங்கு சனி குறு போல வக்கிரமடையவில்லை என்பதால் நிச்சயம் ராகுவால் பாதிப்பை எதிர்கொள்ளும்.

இந்த காலத்தில் ஜாதகரின் நேர்மைக்கு சோதனையான காலமாகும். முறைகேடான வழிகளில் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஜாதகரின் கண்முன்னால் வந்து நிற்கும். ஜாதகர் நேர்மை தவறி சம்பாதித்தால் அதன் பாதிப்பு குடும்பத்திலும் புத்திர வகையிலும் எதிரொலிக்கும். ஜனன குரு லக்னத்தில் வக்கிரம் பெற்று அமர்ந்ததால் குறுக்கு வழியில் சம்பாதிக்க மனம் சலனப்படும். அதே சமயம் கௌரவத்திற்குரிய சூரியன் உச்சமாகியுள்ளதால் குறுக்கு வழி வேண்டாம் என மனம் எச்சரிக்கும். ஜாதகரின் ஆசைக்கும் நேர்மைக்கும் இடையே இங்கு போட்டி நடக்கும். இது ஜாதகருக்கு மிக சோதனையான காலம்.   ஆசையில் ஜாதகர் வென்றால் ஜாதகரை ராகு மிகக்கடுமையாக தண்டிக்கும். மிகப்பெரிய அவமானத்தை ஜாதகர் சந்திப்பார். காரணம் ஜனன காலத்தில் அவமான ஸ்தானமான 8  ஆமிடத்தை சனி தனது 3 ஆம் பார்வையால் பார்க்கிறது. கோட்சாரத்திலும் 2 ஆமிடதிலிருந்து அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தை சனி பார்க்கிறது. அப்படி அவமானப்பட்டால் உச்சமான கௌரவதிற்குரிய சூரியனின் நிலையால் ஜாதகர் தனது உயிரை மாய்துக்கொள்ளக்கூட வாய்ப்புண்டு. கௌரவம் பார்க்காமல் அவமானத்தை எதிர்கொள்ள தைரியம் இருப்பவர்கள் குறுக்கு வழியில் சம்பாதிக்க இது ஒரு நல்ல காலமே. எனினும் தவறு செய்யலாமா வேண்டாமா என்பதை திசா-புக்தி கிரகங்களே தீர்மானிக்கின்றன. ஜாதகருக்கு ராகு மற்றும் சனி தொடர்புடைய திசா புக்திகள் நடந்தால் ஜாதகர் குறுக்கு வழியில் செல்ல அதிக வாய்ப்புண்டு. நடப்பது சூரியன் அல்லது குருவின் திசா புக்தியானால் ஜாதகர் குறுக்கு வழியை தவிர்ப்பார். இந்த ஜாதகருக்கு குரு திசையில் ராகு புக்தி நடக்கிறது.

மூன்றாவது ஜாதகம் கீழே.
இந்த ஜாதகர் ஒரு கணக்கு தணிக்கையாளர். ராகுவும் செவ்வாயும் ஒன்று சேர்வது விரும்பத்தக்கது அல்ல. நூறு சதவீதம் துல்லியத்தை எதிர்பார்க்கும் அமைப்பு இது. சந்திரன் இந்த கூட்டணியில் இடம் பிடித்ததால் சிறிது மாறுபாடு உண்டு. விளையாட்டு மற்றும் ஆராய்ச்சித்துறையை தவிர இதர வகையில் இந்த அமைப்பு விரும்பப்படுவதில்லை. வரவு செலவுகள் சரியாக இருக்க வேண்டும் என ஒரு தணிக்கையாளராக ஜாதகர் எண்ணுவது நியாயமே. 1௦ ஆவது பாவத்தில் இருக்கும் தன காரகன் குருவை சனியோடு சேர்ந்த சூரியன் பார்க்கிறார். இதனால் 1௦ ஆம் பாவமான ஜீவன பாவத்தில் உள்ள நிறை குறைகளை கணக்கிட்டு வாடிக்கையாளர்களை வழிநடத்துவது ஜாதகரின் ஜனன கர்மா. இப்போது கோட்சாரத்தில் சனியோடு இணைந்த சூரியன் மீதும் செவ்வாய் சந்திரனோடு இணைந்த ராகுவோடும் கோட்சார சனி சென்று சேர இருக்கிறார். முந்தைய ஜாதக அமைப்பை போன்றே இந்த ஜாதகத்திலும் நெருக்கடிகள் உண்டு. நெருக்கடியின் தன்மை வேறு. அரசு சொல்லும் வழி முறைப்படி வாடிக்கையாளர்களை நெறிப்படுத்துவது ஜாதகரின் கடமை. பொதுவாகவே வரவு செலவு கணக்கை சரியாக காண்பிப்பவர் மிகக்குறைவே. இந்நிலையில் இவ்வருட இறுதியில் மகரத்தில் கோட்சார குருவும் சனியும் ஜனன மகர கிரகங்களோடு அமையும் நிலையை காண்கையில் வாடிக்கையாளர்கள் முறையான கணக்கை தர மறுப்பவர்களாகவும் அல்லது உண்மையான வரசு செலவை மறைத்து காண்பிப்பவர்களாகவும் இருப்பர். ஜாதகருக்கு ஜனன காலத்தில் உள்ள செவ்வாய்-ராகு சேர்க்கையால் விடாப்பிடியாக முறையான கணக்கை கேட்டுப்பெற வேண்டிய சூழல் ஏற்படும். மனப்போராட்டத்தில் பாதிக்கப்பட்டால் ஜாதகர் தொழிலை இழக்க வேண்டியிருக்கும். அரசின் விதிமுறைக்கும் வாடிக்கையாளர்களின் தன்மைக்கும் இடையே போராடும் காலமாக ஜாதகருக்கு இது இருக்கும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501