Showing posts with label வாக்கு ஸ்தானம். Show all posts
Showing posts with label வாக்கு ஸ்தானம். Show all posts

Friday, 3 January 2020

செல்போன் தோஷம்!


நாளுக்கு நாள் புதுமையான விஷயங்கள் அறிமுகமாகி பழமையானவைகளை புறக்கணிக்க வைக்கிறது. புதுமைகளை நாட நாட நமக்கு வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. பொருளாதார வளர்ச்சிகளும் கூடும். எனவே புதுமைகளை புறந்தள்ளினால் வாழ்வில் முன்னேற முடியாது. ஆனால் புதுமைகளை அதீதமாக பயன்படுத்துவது அதாவது உண்ண  உறங்கக்கூட மின்னணு சாதனங்கள் செயலிகள் என்று அதை நோக்கி செல்வது நமக்கு சாதகங்களை விட பாதகங்களையே அதிகம் ஏற்படுத்தும் என்பதை காலப்போக்கில் உணர முடியும். இன்றைக்கு கைபேசிகள் இல்லாத மனிதர் என்றால் அவர் சுத்த சந்நியாசியாகத்தான் இருக்க முடியும்


கைபேசி, முகநூல் உள்ளிட்ட நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை குறிக்கும் காரக கிரகங்கள் ராகு-கேதுக்களாகும். ராகு-கேதுக்கள் போன்ற பாவக்கிரகங்கள் ஜாதகத்தில்  3,6,10,11 ல் அதுவும் தனித்த நிலையில் அமைவது விரும்பத்தக்கது. இவை லக்னம் மற்றும் தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் அமைவது மற்றும் வாக்கு ஸ்தானமான 2 மற்றும் 8 ல் அமைவதால் நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வாழ்வில் பொருளீட்ட வழிவகுக்கும். அதே சமயம் அவை அமையும் பாவங்கள் 1,2,7,8 ஆவதால் இல்லறத்திலும் குடும்ப வாழ்விலும் வாழ்க்கத்துனைவர் வகையிலும் பாதகத்தை செய்யாமல் போவதில்லை


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. கும்ப லக்ன ஜாதகம். மிதுன ராசியில் சந்திரன் புனர்பூசம் – 2 ல் அமைந்துள்ளது. 1989 ல் பிறந்த ஜாதகிக்கு சனி திசையில் லக்னத்தில் அமைந்த ராகுவின் புக்தியில் திருமண நிச்சயம் நடந்தது. லக்னத்தில் ராகு சுய சாரத்தில் சதயம் – 1 ல் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். இதனால் பொருளாதார வளம் கொண்டவராக ஜாதகி உள்ளார். திருமணம் நிச்சயம் ஆனவுடன் ஜாதகியும் இவருக்கு நிச்சயிக்கப்பட்ட வரனும் கைபேசியில் தினமும் பேசி வந்தனர். மண மகனை குறிக்கும் 7 ஆமதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாக உள்ளார். ஜாதகிக்கு நடக்கும் ராகு புக்தி சூரியனுக்கு பகையாகும். 7 ஆமதிபதி உச்சமானதால் திருமணதிற்கு முன்னதாகவே வரன் ஜாதகிக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். லக்னத்தில் அமைந்த ராகு மேஷ சூரியனை தனது 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்துகிறது. இதனால் பத்திரிகை அடித்து வினியோகித்துவிட்ட நிலையில் ஜாதகி நிச்சயிக்கப்பட்ட வரனின் அதீத கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் திருமணத்தை நிறுத்திவிட்டார். இங்கு 7 ஆமதிபதி சூரியன் உச்சமானாலும் 7 ஆமதிபதி மேஷ சூரியனுக்கு பாதகத்தில் கும்பத்தில் ராகு அமைந்து சூரியனை தனது 3 ஆம் பார்வையால் கட்டுப்படுத்துவதால் ஜாதகி தனது உறுதியான முடிவால் மணமகனை மறுத்து உதறினார்.

கீழே 2 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


மீன லக்ன ஜாதகத்தில் ராகு ஜீவன காரகன் சனியோடு சேர்ந்து உப ஜெய ஸ்தானமான 6 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 12 ஆமதிபதியாகிய சனி 6 ஆமிடத்தில் அமைவது ஒருவகையில் விபரீத ராஜ யோகம் என்றாலும் அவர் ராகுவோடு இணைந்து அமைவது ஜீவன வகையில் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். மேலும் சனி 6 ல் அமைந்தாலும் அவர் பகை வீட்டில் சிம்மத்தில் அமைவது சிறப்பல்ல. இவர்களுக்கு இடம் கொடுத்த சூரியன் கால புருஷனின் மூன்றாமிடத்தில் புதனுடன் இணைந்து நிற்கிறார். சிம்மத்தில் சனியோடு ராகுவும் அமர்ந்து ராகு சூரியனை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதால்  சனிக்கு பகைவீடு என்ற தோஷத்தை ராகு போக்கிவிடுகிறார். ஆனால் சனி ராகுவிற்கு கட்டுப்பட்டவராகிறார். ஜாதகருக்கு ஜீவனம் ராகுவால் தடைபடாமல் இருக்க வேண்டுமானால் ராகுவின் காரகத்தொழிலை செய்தாக வேண்டும்.

ஜாதகர் கைபேசி விற்பனை நிறுவனம் ஒன்றில் பழுது நீக்கும் வேலை செய்துவந்தார். ராகு சிம்மத்தில் அமைந்துள்ளதால் நிறுவனத்தில் முதலாளியைவிட ஜாதகரே முக்கிய நபராக திகழ்ந்தார். ராகுவின் காரக தொழிலை செய்ததால் (ராகு - குற்றம் கண்டுபிடித்து அதை நீக்குதல்) தொழிலில் ஜாதகர் சிறப்புற்றார். தற்போதைய திசா நாதன் சனி, சூரியனின் வீட்டில் அமர்ந்ததால் பணி புரிந்த கடையிலிருந்து விலகி சொந்தமாக கைபேசி விற்பனை & பழுது நீக்கும் நிறுவனம் தொடங்கி நடத்திவருகிறார். இதற்கு கடக்க ராசியில் சனியின் பூசம்-4ல் உச்சமான குருவும் ஒரு முக்கிய காரணம். சனி களத்திர ஸ்தானமான 7 க்கு விரையத்தில் நின்று திசை நடத்துவதாலும் 6 ஆமதிபதி சூரியன் 7 ஆமதிபதியோடு இணைந்து ராகு பார்வை பெறுவதாலும் பொருளாதார வளத்தை கொடுக்கும் இதே சனியும்-ராகுவும் குடும்ப வாழ்வில் பாதிப்பை ஜாதகருக்கு தற்போது வழங்கி வருகின்றன. ஜாதகர் தற்போது மனைவியோடு கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்.

மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம் அடுத்து.


தனுசு லக்ன ஜாதகத்தில் ராகு-லக்னதிலும் கேது தொடர்புகள் மற்றும் களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்திலும் அமைந்துள்ளது. சந்திரன் விருட்சிக ராசியில் அனுஷம்-4 ல் அமைந்துள்ளது. ராகு-கேதுக்கள் தனித்த நிலையில் அமைந்துள்ளது நன்மையே எனினும் 1-7 தொடர்பாவதால்  அவைகளின் மூலம் சாதக பாதகங்கள் இரண்டையுமே அடைய நேரிடும் என்பதை குறிக்கிறது. இந்த ஜாதகியும்  ராகு-கேதுக்கள் குறிக்கும் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார். 1992 ல் பிறந்த இந்த ஜாதகிக்கு தற்போது திருமணம் ஏற்பாடாகி முடிவாகிய பின் ஜாதகியும் நிச்சயிக்கப்பட்ட வரனும் கைபேசியில் தினமும் பேசிவந்தனர். ஜாதகிக்கு சுக்கிர திசையில் சுய புக்தி நடக்கிறது. சுக்கிரன் ஐந்தாமிடத்தில் லக்ன பாதகாதிபதி புதனுடன் இணைந்துள்ளார். புதன் தகவல் தொடர்பின்  காரக கிரகம் என்பதால் தகவல் தொடர்பு மூலமாகவும் 1-7 ல் நிற்கும் சர்ப்ப கிரகங்களால் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமும் பாதகம் ஏற்பட வேண்டும்.

சுக்கிரன் பாவத்தில் களத்திர ஸ்தானத்திற்கு விரையத்தில்  6 ஆமிடத்தில் சூரியனுடன் ஆட்சி பெற்று திசையையும் புக்தியையும் நடத்துகிறார். விருட்சிக ராசிக்கு ஏழரை சனி இன்னும் முடியவில்லை. ஜாதகிக்கு தற்போது சுக்கிர திசை சுய புக்தியில் ராகு அந்தரம் நடக்கிறது. 2 ஆமிடத்தில் நிற்கும் சனி  8 ஆமிடம் தொடர்பாகும்போது அவமானத்தை ஏற்படுத்தும்.  சனியின் நட்சத்திரத்தில் அனுஷம்-4  ல்  அவமான ஸ்தானாமான 8 ஆமதிபதி சந்திரன் நிற்கிறது. ராசிக்கு 2 ல் லக்னத்தில் சனி தற்போது கோட்சாரத்தில்  நிற்கிறது. இதனால் ஜாதகியோடு கைபேசி பேச்சுக்கள் மூலம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நிச்சயிக்கப்பட்ட வரன் திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் ஜாதகி பெருத்த அவமானமும் மன உழைச்சலும் அடைந்தார்.

4 ஆவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் தகவல் பரிமாற்ற ஸ்தானமான 3 ஆமிடத்தில் நீசம். வாகன யோகங்களை குறிக்கும் சுக்கிரன் கன்னியில் நீசம். லக்னாதிபதி சூரியன் சுக்கிரனின் வீட்டில் ராகுவோடு இணைந்து அமைந்ததால் ஜாதகர் வாகனத்துறையில்  ஈடுபட்டுள்ளார். லக்னாதி சூரியனும், வாகன காரகன் சுக்கிரனும்,  சுக்கிரனின் வீடும் பாதிக்கப்படிருப்பது இதற்கு சாதகமான அமைப்பல்ல. ஜாதகருக்கு வாகன ஸ்தானமான 4 க்கு விரையத்தில் 3 ல் நிற்கும் புதனின் திசை நடக்கிறது. புதன் தகவல் தொடர்ப்பு காரகன் என்பதால் தனது தொழிலை விளம்பரம், பத்திரிகை, தகவல் தொடர்புகள் மூலம் விரிவுபடுத்த முனைகிறார். திசா நாதன் புதன்,நீச சூரியன் மற்றும் ராகுவோடு இணைந்து நிற்பதால் அதீத கற்பனைகளும் பேச்சும் கொண்டவர். இதனால் இவரிடமிருந்து அழைப்பு வந்தாலே இவர்களது தொடர்பாளர்கள் இவரை தவிர்க்கின்றனர். இதற்கு காரணம் தகவல் தொடர்பு காரகனும் வாக்கு காரகனுமான புதன் நீச கிரக தொடர்பாகி  ராகுவோடும் தொடர்பு பெற்ற நிலையில் நீச சுக்கிரனோடு பரிவர்த்தனை பெற்றதேயாகும்.

எனவே கைபேசி, முகநூல் உள்ளிட்ட நவீன மின்னணு சாதனங்களை குறிக்கும் ராகு கேதுக்கள்  மற்றும் தகவல் தொடர்பு காரகன் புதனின் நிலையை அறிந்து இவற்றை அளவோடு பயன்படுத்தி வாழ்வில் வளம் காண்பீர். இவை ஏற்படுத்தும் தாக்கம் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501.

Monday, 15 August 2016

கிரக உறவுகள்

கிரகங்களுக்கிடையேயான உறவுகள் மனித வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியதே இப்பதிவு.

உலக மனித இனத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே. ஒருவரது சாயல் மற்றொருவருக்கு இருக்கலாமேயன்றி முழுக்க பிரதி எடுத்தது போன்று தோற்றமும் எண்ணமும் அமைந்துவிடாது. உடல் ஒன்றாகவும் தலை இரண்டாகவும் அமைந்த அபூர்வ மனித பிறவிகளுக்குக்கூட எண்ணங்களில் மாறுபாடு உண்டு.

நாம் அணைவரும் ஒரு வகையில் கிரக கதிவீச்சுகளின் அம்சங்களே. ஒவ்வொரு வண்ணக்கதிர்வீச்சுக்கும் ஒருசில பிரத்யோக பலன் உண்டு. உதாரணமாக சிவப்பு வண்ணம் வேகத்தையும் போர்க்குணத்தையும் தூண்டும். நீலம் அமைதி தரும். மஞ்சள் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தூண்டும்,. பச்சை வண்ணம் வாழ்வில் ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இப்படி பல. இந்தவகையில் ஒவ்வொரு கிரகமும் ஒரு நிற கதிவீச்சை பிரதிபலிக்கிறது.

குருவிடமிருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக்கதிர்வீச்சு செவ்வாயிடமிருந்து வெளிப்படும் சிவப்புநிறக்கதிர்வீச்சோடும் சூரியனின் வெளிர் மஞ்சளோடும் சந்திரனின் வெள்ளை நிறத்தோடும்  இணைந்து செயல்படுகிறது. அதனால் இந்த நான்கும் நட்புக்கிரகங்கள்.

சுக்கிரனிடமிருந்து வெளிப்படும் கருமை கலந்த தீவிர வெண்மை நிறக்கதிர்வீச்சு சனியிடமிருந்து வெளிப்படும் நீல நிறக் கதிர்வீச்சோடும் புதனின் பச்சை நிறத்தோடும்  குறிப்பிட்டுசொல்ல இயலாத ராகு-கேதுக்களின் கதிர்வீச்சோடும் இணைந்து செயல்படுகிறது. எனவே இவை ஐந்தும் நட்புக்கிரகங்கள்.



முதலாவது கோஷ்டிக்கு தலைவர் தேவகுரு எனப்புகழப்படும் வியாழன் கிரகம். இரண்டாவது கோஷ்டிக்கு தலைமை வகிப்பது அசுர குரு எனப்புகழப்படும் சுக்கிரன் ஆவார். முதலாவது தேவ கோஷ்டி என்றும் இரண்டாவது அசுர கோஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. தலைமை வகிக்கும் குரு-சுக்கிரன் இரண்டும் ஆச்சாரியர்கள் என போற்றப்படுகிறார்கள்.


தேவர்கள்-அசுரர்கள் என்பதெல்லாம் இந்த கர்ம பூமியில் பிறக்கும் மனிதனின் இருவேறு குணங்களை அளவிட பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அவ்வளவே. உண்மையில் நாம் ஒவ்வொருவரின் பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு தகுந்த மாதிரியான பலன்களையே வாழ்வில் எதிர்கொள்கிறோம் என நமது இந்து தர்மம் கூறுகிறது.

கர்மபூமியில் பிறந்த மனிதன் இரு குணங்களையும் அதாவது நல்ல மட்டும் தீய குணங்களை கொண்டவனாகவே பிறக்கிறான். முழு நற்குணமோ அல்லது முழு தீய குணமோ கொண்டு இந்தக்கலியில் யாரும் பிறக்க முடியாது என்பது அந்தப் பரந்தாமன் வகுத்த விதி.


இதில் புதனிடமிருந்து வெளிப்படும் பச்சை நிறக்கதிர்வீச்சுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது நாரதர் போல. அதன் பச்சை நிறக்கதிர்வீச்சு  இரு கோஷ்டிகளோடும் இணைந்து செயல்படும். குறிப்பாக புதனுக்கு சூரியனோடு மிகுந்த நட்பு உண்டு. சூரியனுக்கு அடுத்து பட்டத்துக்கு உரிய கிரகம் (HEIR) என அழைக்கப்படுகிறது புதன். இளவரசுப்பட்டம் சூட்டப்பட்ட கிரகமான புதனை சூரியனுக்கு சம பலம்கொண்ட நட்புக்கிரகம் என ஜோதிடம் குறிப்பிடுகிறது. வேறெந்த கிரகத்திற்கும் இந்த உரிமை இல்லை. சூரியனின் கதிர்வீச்சு தாக்கத்திற்கு ஒப்பான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது புதனின் கதிர்வீச்சு. அதனை மனித வாழ்வின் சம்பவங்களைக்கொண்டுதான் அறிய முடியும்.

புத்தியில்லா மனிதன் பிணத்திற்கு சமம் என்பர். புதன் ஒருவரது புத்தி சாதுரியத்தை குறிப்பிடுகிறது. அதனால்தான் புதனை புத்திகாரகன் என ஜோதிடம் போற்றுகிறது. இளவரசுப்பட்டம் பெற்ற புதனுக்கு மந்திரி கிரகமான குருவோடும் சேனாதிபதி கிரகமான செவ்வாயோடும் இணைந்து செயல்படாது ஆனால் அவற்றிற்கு இணையாக செயல்படும் சமக்கிரகம். அரசி கிரகம் என ஜோதிடம் வரையறுக்கும் சந்திரனின் கதிர்வீச்சோடும் இணைந்து செயல்படாது. புதனுக்கு சந்திரன் எதிரிதான். ஒரு கிரகத்தின் கதிர்வீச்சோடு இணைந்து செயல்படாத கிரகங்கள் அக்கிரகத்துக்கு பகைக்கிரகங்களாகின்றன.

இரு கோஷ்டி கிரகங்களிலும் உள்ள கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு பகை சமம் என்ற வகையில் செயல்படும் என்றாலும் தேவ கோஷ்டியிலுள்ள செவ்வாய்க்கும் அசுர கோஷ்டியிலுள்ள சனிக்கும் உண்டான பகை தீவிரமானது. இரண்டும் இரு வேறு துருவங்கள்.

செவ்வாய் – அவசரம்             சனி – பொறுமை
செவ்வாய்- வேகம்               சனி - நிதானம்
செவ்வாய் – அதி குரூரம்         சனி- குரூரம்
செவ்வாய் – ஆதிக்கம்            சனி- பணிவு
செவ்வாய் – சேனாதிபதி          சனி- போர்வீரன்
           
மிகவும் தீவிரமாக செயல்படும் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று கடுமையான பகை கிரகங்களாகும். ஜாதகத்தில் நன்கமைந்தால். இவைகள் கொடுக்கும் செல்வங்கள் தலைமுறைக்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும். இவை இரண்டும் கேந்திர ஆதிபத்தியம் பெற்று ஒன்றாக இணைந்திருந்தால் நல்ல பலனையே தரும். எனினும் அந்த நல்ல பலனை தருவதிலும் தங்களது தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை நிலைநாட்ட முயலும்.

செவ்வாய் நன்கமைந்தால் அதிகாரம் மிக்க பதவியும் பூமி யோகமும் ஏற்படும். காவல், ராணுவம் போன்ற பாதுகாப்புத்துறைகளோடும், விவசாயம், சுரங்கம், பொறியியல் துறையோடும் தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

சனி நன்கமைந்தால் சாதாரணமான நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு படிப்படியாக நிதானமாக அதே சமயம் உறுதியாக முன்னேறுவர். கடுமையான உழைப்பு, சட்டம்-ஒழுங்கு, நீதித்துறை, பொறியியல், மக்கள் தொடர்பு போன்றவற்றோடு சம்மந்தப்படுத்தும். சிறந்த பணிச்சூழல், நல் ஆயுள் போன்றவை சனி ஜாதகத்தில் நன்கமைந்தால் கொடுக்கும் கொடை.

பாரதத்தின் 70 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி வெளிவரும் இப்பதிவில் சனி-செவ்வாய் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணம். 

சுதந்திர வேட்கை கொண்ட சனியின் அம்சமான சாமான்யர்கள் ஜாலியன் வாலாபாக்கில் குழுமியிருந்தனர். அப்போது அதி கோபம் கொண்ட செவ்வாயின் அம்சமான ஜெனரல் டயர் அவர்களை ஈவு இரக்கமற்ற வகையில் சுட்டுத்தள்ள உத்தரவிட்டான். அந்தக்கோரக்காட்சியை காந்தி திரைப்படத்தில் காணும்போது நமது நெஞ்சம் பதறும். நேரில் கண்டவனுக்கு எப்படியிருக்கும். அந்த சுதந்திர போராட்ட நிகழ்வுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு 19 வயது இளைஞன். கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவன் தப்பிப்பிழைத்தான். மிகச்சரியாக அடுத்த 19 ஆவது வருடத்தில் அவனது முப்பத்து எட்டாவது வயதில் இங்கிலாந்தில் பணி ஓய்வு பெற்று தனது இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருந்த ஜெனரல் டயரை கண்டுபிடித்து சுட்டுக் கொன்றான் சனியின் அம்சமான உத்தம்சிங்.

செவ்வாய் கோபத்தில் கோரத்தாண்டவம் ஆடியது.

சனி நிதானித்து பழி தீர்த்தது.

குணம் ஒன்றுதான். அது வெளிப்படும் விதம்தான் இரண்டுக்கும் வேறு.

கீழ்க்காணும் ஜாதகத்தை கவனியுங்கள்.



கர வருஷம் கார்த்திகை மாதத்தில் (NOV 2011) பிறந்த சிறுவனின் ஜாதகம் இது.

சிறுவனின் லக்னத்தில் விரைவான செயல்பாட்டை குறிக்கும் இரு கிரகங்களான செவ்வாய்-சந்திரன்.  ஆனால் சந்திரன் இங்கு விரயாதிபதி என்பதும் தேய்பிறை சந்திரன் என்பதும் கவனிக்கத்தக்கது. வாக்கு காரகனும் புத்தி காரகனுமான புதன் செவ்வாயின் வீட்டில் அமைந்து செவ்வாயால் பார்க்கப்படுகிறார். இந்த அமைப்பின்படி சிறுவனது எண்ணம் வார்த்தையாக வெளிப்படும்போது வேகமாக வெளிப்பட வேண்டும்.

ஜாதகத்தில் மெதுவான செயல்பாட்டை குறிக்கும் சனி உச்சம் என்பது கவனிக்கத்தக்கது. சனி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் அமைந்து செவ்வாயின் விரைவான செயல்பாட்டுக்கு தடை போடுகிறது.மன எண்ணங்களை விரைவாக வார்த்தைகளாக வெளிப்படுத்த செவ்வாய் விழைகிறது. செவ்வாயின் நட்சத்திரத்திலமைந்த சனி அதை நிதானப்படுத்துகிறது. எண்ணம் விரைவாகவும் அது வெளிப்படும் வார்த்தை மெதுவாகவும் அமைந்துவிட்டால் அங்கு பேச்சில் தடை ஏற்படும். சிறுவனுக்கு கடந்த ஜூலை மாத கடைசி வாரத்தில் சுக்கிர திசையில் சனி புக்தி துவங்கியது.முதல் பேச்சில் தடை இருப்பது தெளிவாக தெரிய ஆரம்பித்தது. சனி தனது புக்தியில் பேச்சுக்கு தடை ஏற்படுத்துகிறார் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

இந்தப்பதிவில் சனி-செவ்வாய்க்கிடையேயான உறவை அலசினோம் மற்றொரு சந்தர்ப்பத்தில் இதர கிரகங்களுக்கிடையேயான உறவுகளையும் அலசுவோம்.

அடுத்த பதிவு.

ஒரு ஜோதிடனின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.  

விடுபட்ட பிற்சேர்க்கை : 
சிவப்பையும் கருப்பையும் பிரதான வண்ணங்களாக தங்கள் கொடிகளில் இணைத்து பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளை கவனியுங்கள. இவர்களது செயல்கள் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். மறந்தும் கூட மக்களுக்காக இவர்களால் அரசியலை பயன்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை.