Thursday 30 September 2021

யாருக்கோ திருமணம் – பகுதி இரண்டு!

கடந்த பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவு வருகிறது. கடந்த பதிவை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.


சூரிய-சுக்கிர இடைவெளி அதிகமிருப்பவர்களின் கவனம் பெரும்பாலும் பொருளாதாரத்தை நோக்கிய திசையில் இருப்பதை நடைமுறையில் காணமுடிகிறது. சுக்கிரன் சூரியனை விட்டு அதிக தூரம் விலகி விடுவதால் சுக்கிரனின் காரகமான இல்லற நாட்டமும் இத்தகையோரை விட்டு விலகி விடுவதாகவே தோன்றுகிறது. இயல்பான இத்தகைய எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்கள் ஒருவரை ஆக்கிரமிக்கின்றன எனில் எதிர்மறை எண்ணங்களுக்குரிய  ராகு-கேதுக்களின் பிடியில் இத்தகையோர் அகப்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள வேண்டும். சுக்கிரனின் காரகங்கள் பாதிப்புக்குள்ளாகும் அதே வேளையில் இவர்களின் எதிர்பார்ப்புகள் பொருளாதாரத்தின் பக்கம் திசை திரும்பி விடுகிறது. மேலும் துணை பற்றிய எண்ணம் குறையும்போது அதற்காக தனக்கான துணையை தேர்ந்தெடுப்பது பற்றிய எண்ணங்களை வளர்ப்பதற்குப் பதில், தனது எண்ணைகளை ஒத்த ஒரு தன்பாலினரையே நாடுகின்றனர் என்பதுதான் இத்தகைய ஜாதக அமைப்பினரின் விபரீதம். இத்தகைய எண்ணம் ஏற்படும் சூழலில் மற்றவர்களைவிட தனித்து தெரிவதற்காக தங்களது தோற்றத்தில் சில வித்தியாசமான அமைப்புகளையும்  இவர்கள் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 1980 ல் பிறந்த ஒரு ஆண். இவருக்கு சூரியன் சுக்கிரன் இடைவெளி 42 பாகைகளாக உள்ளது. களத்திர காரகன் சுக்கிரன் 8 ல் மறைந்தாலும் தன் வீட்டில் ஆட்சி பெறுவதும், 7 ஆமதிபதி செவ்வாய் 12 ல் மறைந்தாலும் 7 ஆம் வீட்டை தனது 8 ஆம் பார்வையில் வைத்திருப்பதும் இவருக்கு குடும்ப வாழ்வை தருகிறது. ஆனால் இவர் குடும்பத்தோடு இணைந்திருப்பதை அது பாதிக்கிறது. ஜாதகர் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து வேலை செய்கிறார். இந்தியா வந்து சில மாதங்கள் குடும்பத்தோடு இருக்கும்போது கருத்து வேறுபாடு தலைதூக்குவதாக கூறுகிறார். ஜாதகருக்கு கடகத்தில் உள்ள ராகு திசை நடக்கிறது. இரட்டைப்படை ராசியில் நிற்கும் ராகு திசையை அடுத்து ஒற்றைப்படை ராசியில் உள்ள குரு திசை வரும் வரை இவர் நீடித்து குடும்ப தொடர்பில் இருப்பது கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜாதகருக்கு இந்த நிலையை சொல்லி தெளிவுபடுத்தினால் போதும்.  

இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்..


ஜாதகர் 1969 ல் பிறந்த ஒரு ஆண். முன் ஜாதகத்தில் பார்த்த சில அமைப்புகள் இதிலும் உள்ளன. இவருக்கும் சூரிய-சுக்கிர இடைவெளி 42 பாகைகள்தான். ஆனால் இவருக்கு திருமணம் ஆகவில்லை. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்தில் நீசம் பெற்று லக்னத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாதகாதிபதி சனி, பாவ கர்த்தாரி தோஷம் பெற்ற 7 ஆமிடத்தையும் பார்த்துதான்.  ஜாதகர் திருமண காலத்தில் சுக்கிர திசையை கடந்துள்ளார். ஆனால் சுக்கிரன் 8 ஆமதிபதி செவ்வாயின் சாரம் பெற்று மிருகசீரிஷம்-2 ல் நின்று, பாதகாதிபதி சனியின் அனுஷம்-3 ல் இருந்து 8 ஆமதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் செவ்வாயின் 8 ஆமிட பார்வையின் பலனையே சுக்கிரன் வழங்க வேண்டியவராகிறார். களத்திர காரகன் சுக்கிரனுக்கு 8 ஆமிட செவ்வாய் தொடர்பு மறுப்பை தெரிவிப்பதால் ஜாதகருக்கு திருமண வாழ்வு மறுக்கப்பட்டுள்ளதை உணரலாம். இவருக்கு பரிகாரங்களோ வழிபாடுகளோ பலனளிக்காது.

மூன்றாவது ஜாதகம் கீழே.


ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். சூரிய சுக்கிர இடைவெளி 42 பாகைகள். ஜாதகர் 5 , 10 க்குரிய சுக்கிர திசையில் திருமணம் செய்துகொண்டார். ஜாதகருக்கு கப்பலில் பணி. எனவே பல காலத்திற்கு பிறகுதான் குடும்பத்தோடு இணைவார். 5 ஆமிடம் என்பது 7 க்கு லாபமாக வரும் பாவம் என்பதால் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 1௦ ஆம் பாவம் என்பது 7 க்கு 4 ஆம் பாவமாக வரும் இரட்டைப்படை பாவமாகும். பொருளாதாரத்திற்கு சிறப்பை வழங்கும்  இரட்டைப்படை பாவங்கள் இல்லறதிற்கு சிறப்பல்ல. எனவே மனைவியை பிரிந்திருந்தார். அடுத்து வந்த சன்னியாசி கிரகமான கேது திசையும் இல்லற சிறப்பை தரவில்லை.  தற்போது 11 ஆமிடத்தில் இருந்து செயல்படும் புதன் திசையாவது குடும்பத்தோடு தன்னை இணைத்து வைக்குமா என எதிர்பார்க்கிறார். இந்த ஜாதகத்தில் சூரிய-சுக்கிர இடைவெளி பாதிப்பை தருவதற்கு திசா-புக்திகள் காரணமாகின்றன. கணவனை குறிக்கும் செவ்வாய்க்கு மனைவியை குறிக்கும் சுக்கிரன் பாதகம் பெற்றதும் இவரின் நிலைக்கு காரணம்.

ஜாதக ரீதியாக சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிகம் இருப்போர் எதிர்கொள்ளும் விளைவுகள்.

இத்தகைய ஜாதக அமைப்பினர் பலருக்கு சிறு வயதில்  பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் ஏனையோரைவிட மிக அதிகம். இதனால் அவர்களது எதிர்கால குடும்ப வாழ்வு பாதிக்கும். சிறு வயதில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒரு பெற்றோருக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தங்களது மகன்களை தவறான நபர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பது.

சிற்றின்ப ஆசை தலைதூக்கும் பதின்ம வயதில் தவறான நண்பர்களாலும், நவீன தொலை தொடர்பு சாதனங்களாலும் பாலியல் காட்சிகளை பார்த்து கெட்டுப்போகும் சிறார்களுக்கும் குடும்ப வாழ்வு பாதிக்கும். எனவே பெற்றோர் தங்கள் மகன்களின் நண்பர் வட்டாரத்தின்மீது ஒரு கண் வைத்திருப்பது மிக முக்கியம்.

இயல்பான மனிதர்களோடு பழகாமல் மிக வித்தியாசமான நபர்களை தங்களது ஆதர்ஷ நாயகனாக பாவித்தல் இவர்களது மன ஓட்டத்தை சொல்லும். 

சிறுவயதில் ஜாதகரை தனியாக இருக்க விடாமல்  குடும்பத்தோடும் உறவுகளுடனும் நண்பர்களுடனும் பெரும்பாலான நேரங்களை செலவிட வைப்பது உதவிகரமாக இருக்கும்.

ஜாதகரை தொடர்ந்து ஓய்வு நேரங்களில் பல்வேறு வகை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்திற்கு உட்படுத்துவது மிகுந்த பலனளிக்கும்.

அவசியமின்றி நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பக்கம் செல்வதை தடை செய்வதும், குறிப்பாக Video Games போன்றவற்றில் ஒருவரின் கவனம் செல்லாமல் தடை செய்வதும் அவசியம். பொதுவாகவே செயற்கை சாதனங்களை அதிகம் நாடுவோருக்கு இல்லற பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதை சமீபதித்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வு ஒன்று உறுதி செய்கிறது.

இயற்கையை நேசித்தல், புதிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லுதல், மனவளக்கலை, யோகா, தியானம், தோட்டக்கலை, வீட்டு விலங்குகளை பராமரித்தல் இவற்றோடு திருவிழா போன்ற ஊர் பொது விஷயங்களில் ஜாதகரின் பங்களிப்பு இருக்குமாறு பார்துக்கொள்வது இத்தகையோரை பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க பெருமளவில் உதவும்.

 தீர்வுகள்.

பல காலம் ஒரே இடத்தில் வசிப்பதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாக இருக்குமென்பதால் இடமாற்றமும் இவர்களுக்கு சிறந்தது. 

இவர்களாக திருமணதிற்கு தயாராகும் முன் திருமணம் செய்விப்பது மணமுறிவுக்கு வழிவகுக்கும். எனவே ஜாதகர் தனது எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீண்டு வரும் வரை பெற்றோர் ஜாதகருக்கு உதவியாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு இல்லற நாட்டம் குறைவு எனில் அவரது துணைவருக்கும் அதுபோன்றே ஜாதக அமைப்பு இருக்குமாறு தேர்ந்தெடுப்பது நன்று.

இதர ஜாதக அமைப்புகள் சாதகமற்று இருப்பின், அதிகமான சூரிய-சுக்கிர இடைவெளி  ஒரு சந்நியாசி யோகம் போல செயல்படும் என்பதை மேலே பார்த்த இரண்டாவது ஜாதகம் உணர்த்துகிறது. இத்தகையோர் குடும்பத்தோடு எப்போதும் இணைந்து இருப்பதை கிரகங்கள் அனுமதிக்காது. மீறி இருப்பின் பிரிவினையை தூண்டும் என்பதால் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து வெளியிடம் சென்று வேலை பார்ப்பது குடும்பம் பிரியாமல் இருக்க வழிவகுக்கும்.

இத்தகையோருக்கு உளவியல் சிகிச்சையே மிகுந்த பலனளிக்கும்.

வழிபாடுகள்.

வழிபாடுகளை பொறுத்தவரை ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரக அம்சங்களை வழிபடுவது பலனளிக்கும்.

இத்தகையோருக்கு சர்ப்ப தோஷம் இயல்பாகவே செயல்படும் என்பதால் சர்ப்ப தோஷங்களுக்கு செய்யப்படும் வழிபாடுகளும் உதவும்.

சிவன் கோவிலில் இரவு இறுதியாக செய்யப்படும் பள்ளியறை பூஜையில் ஜாதகரை பங்கேற்க செய்வது பலனளிக்கும்.   

ஜாதக ரீதியாக திசா-புக்திகள் சாதகமற்று இருப்பின் அதற்குரிய வழிபாடுகளை தகுந்த ஜோதிடரை நாடி தெரிந்து செய்வது பலன் தரும்.  

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Saturday 25 September 2021

யாருக்கோ திருமணம்!

 

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவர். அதற்கு ஒரு ஜாதகரின் குண நலன்களை அறிந்து சாதகமான சூழலில் பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொருள். இதுவன்றி அவசரசப்பட்டு முன்னரே திருமணம் செய்விப்பது ஒருவரது இல்லறத்தில் சிக்கலை ஏற்படுத்தும். ஒருவரது குண நலனை புறந்தள்ளிவிட்டு சாதகமற்ற கிரக சூழலில், வசதி வாய்ப்புகள் ஏற்பட்டுவிட்டன என்பதை மட்டும் வைத்து திருமணம் செய்விப்பது பாதிப்பை ஏற்படுத்தும். திருமணதிற்கு ஒருவர் உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோ ரீதியாகவும் தயாராக இருக்கிறாரா என்று கவனித்து, அவரது எண்ணங்களை புரிந்து  பிறகு முடிவு செய்வதே நல்லது. கால மாற்றத்தில் இன்று நட்சத்திரப் பொருத்தங்களைவிட  கிரக ரீதியான மற்றும் பாவ ரீதியான பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மேற்சொன்ன அனைத்தையும் விட, திசா-புக்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒருவரது திருமண வாழ்வு சிறக்க லக்னத்திற்கு 7 ஆமிடமும் ஏழாமதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது அவசியம். இதனோடு கால புருஷனுக்கு 7ஆமிடமான துலாமும் அதன் அதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது மிக அவசியம். இவற்றில் பாதிப்பிருந்தால் ஒரு ஜாதகரது திருமண வாழ்வில் சிரமங்கள் ஏற்பட திசா-புக்திகளின் அடிப்படையில் வழியுண்டு. முக்கியமாக இல்லற இன்பத்தின் அதிபதி என்று கூறப்படும் சுக்கிரன் நிலை கவனிக்கப்பட வேண்டும். ஆனால் சுக்கிரன் உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனிடமிருந்தே ஒளியைப்பெற்று பிரதிபலிக்கின்றன. சூரியனுக்கு சுக்கிரனுக்கும் அதிக பட்சமாக்க 46 பாகைக்கும் சற்று கூடுதலாக அமையும். இவ்விடைவெளி 4௦ பாகைக்கு மேற்படின், அங்கு சுக்கிரனின் காரகங்கள் பாதிக்கப்படும்.  இது மிக நெருக்கமாக அமைந்தாலும் சுக்கிரனின் காரகமான இல்லறம் பாதிக்கப்படும். இந்த இரு நிலைகளிலும் சுக்கிரன் பாதிக்கப்படும் அதே வேளையில் சூரியனின் காரகங்கள்  தீவிரமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே இல்லாத ஒருவர் தொழிலில் சிறப்பாக பொருளீட்டுவது யாருமே இல்லாத ஊரில் யாருக்காக டீ ஆற்றுகிறார் என்ற நிலையை தரும்.   

எனவே சூரிய –சுக்கிர இடைவெளி சரியான அளவில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இந்த சூரிய சுக்கிர இடைவெளி அளவு, தற்போதைய நவீன பாகை முறை ஜோதிடத்தில் ஒருவரது திருமண வாழ்வை எடை போடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.  

முதலாவதாக ஒரு ஜாதகம்.

ஜாதகத்திற்கு உரியவர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ஜாதகத்தில் சூரியனுக்கும் சுக்கிரனுக்குமான இடைவெளி அதிக பட்ச இடைவெளியில் 46 பாகைக்குமேல் உள்ளது. இவருக்கு திருமணம் பற்றிய எண்ணமே மிக குறைவாக உள்ளது. இவரை வீட்டோர் பெண் பார்க்க அழைத்துச்  செல்லுமிடத்தில் யாருக்கோ திருமண ஏற்பாடு நடப்பது போன்று நடந்துகொள்வதாக வீட்டோர் கூறுகிறார்கள். சூரியன் சுக்கிரன் இடை வெளி 4௦ பாகைகளுக்கு மிகுந்ததால்தான். இது போன்ற மனோ நிலை ஒரு ஜாதகருக்கு ஏற்படும். இவ்வமைப்பில் எந்த கிரக திசா-புக்தி நடந்தாலும் இவர்களின் மனோபாவம் பெரிதாக மாறிவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிக பட்ச சூரிய சுக்கிர இடைவெளி அமைபவர்களுக்கு இடது கை பழக்கமும், தன்பால் ஈர்ப்பும் (Homo sex), ஒரு காதில் கடுக்கண்  போடுவது போன்ற  வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு விருப்பமின்றி திருமணம் செய்து வைத்தால்  மண முறிவு ஏற்படும். மேற்கண்ட ஜாதகர் ஒரு காதில் கடுக்கண் போட்டுள்ளார். சுய தொழில் செய்யும் 32 வயதாகும் ஜாதகருக்கு இதுவரை திருமணம் நாட்டம் வரவில்லை. அதனால் திருமணமும் நடக்கவில்லை.

கீழே இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்த ஜாதகை 1985 ல் பிறந்தவர. 36 வயதாகும் ஜாதகிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தன, குடும்ப காரகரான விரையாதிபதி குரு லக்னத்தில் நீசமானதால், குடும்ப வறுமை இவரை வாட்டியுள்ளது. இவர் வேலை செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவராக இருக்கிறார். இவரது ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிக பட்ச இடைவெளியான 46 பாகையில் இருப்பதை கவனியுங்கள். இவ்வமைப்பு இயல்பிலேயே ஒருவருக்கு இல்லறத்தில் நாட்டக்குறைவை அல்லது அதை நோக்கி செல்வதை தடை செய்யும் வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும். இந்த ஜாதகி தந்தையின் வறுமையே தான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமைக்கு காரணம் என்கிறார். சிரம காலத்திலும் தன்னை நாடி வந்த காதல்  மற்றும் திருமண  வாய்ப்புகளை புரந்தள்ளி உள்ளார். தற்போது தந்தை காணாமல்போய்  விட்டார். சூரியன் இந்த ஜாதகத்தில் 12 ல் மறைந்து லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாகவும் வருகிறார். இதனால் சூரியன் தனது காரகதுவ அடிப்படையில் ஜாதகியின் வாழ்வை பாதித்துள்ளது. தனது தந்தை உயிரோடு இருந்தால் நிச்சயம் தங்களை தொடர்புகொள்ளாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார். 36 வயதில் தற்போதுதான் தனக்கு திருமண நாட்டம் வந்துள்ளது என்கிறார். இதிலிருந்து அறிய வருவது, தோஷத்தை ஏற்படுத்தும் சூரியனின் அம்சமான  தந்தை, ஜாதகியை  விட்டு விலகியதால்தான் ஜாதகிக்கு திருமண எண்ணமே ஏற்பட்டுள்ளது. நீச குரு  தனது மூன்றாவது சுற்றை தற்போது கோட்சாரத்தில் நிறைவு செய்வதும் மற்றொரு காரணம். சூரியனிலிருந்து அதிக பாகை  இடை வெளியில், லக்னத்திற்கு 2 ல், பாதகாதிபதியோடு செவ்வாயோடு இணைந்து  நிற்கும் சுக்கிரன், பொருளாதார அடிப்படையில் குடும்ப வாழ்வை பாதிக்கிறார். காரக கிரகங்கள் பகையாகவும், பாதிப்பான நிலையில் இருப்பதாலும் ஜாதகியின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது..

கீழே மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.

இந்த ஜாதகர் 1987 ல் பிறந்த ஒரு ஆண். 34 வயதான இவருக்கு இதுவரை  திருமணமாகவில்லை. ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளியானது அதிக பட்ச இடைவெளியான 46 பாகை என்பதை கவனியுங்கள். இதனால் இவருக்கு  இயல்பாகவே இல்லற நாட்டம் குறைவு. இவருக்கு திருமண அமைப்பை பற்றி ஜாதகம் பார்த்தபோது ஜாதகரின் சார்பாக அவரது நண்பர்தான் பேசினார். ஜாதகர் யாருக்கோ திருமண வாழ்வு பற்றி கேட்கிறார்கள் என்ற ரீதியில் தனது திருமண அமைப்பை பற்றி ஜோதிடரிடம் பேசக்கூட முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நான்காவதாக மற்றொரு ஜாதகம் கீழே.

இந்த ஜாதகர் 1988 ல் பிறந்த ஒரு ஆண். சூரியன் சுக்கிர இடை வெளி 4௦ பாகையாக உள்ளது. ஆனால் இதில் ஒரு சிறப்பு சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகியுள்ளனர். சூரியன் கால புருஷனுக்கு 7 ஆமிடத்தில் நீசம் பெற்ற நிலையில் பரிவர்தனையாகியுள்ளது. பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதால் ஜாதகர் மிக நேர்த்தியான தோற்றம் கொண்டவர். குடும்ப காரகன் குரு 8 ல் வக்கிரம்  பெற்று 2 ஆமிடத்தை பார்ப்பதால் நல்ல வேலையில் சிறப்பான சம்பாத்தியத்திலும் இருப்பவர். பேச்சு சாதுர்யம் மிக்கவரும் கூட. இவருக்கும் திருமண ஆசை இல்லை. ஆனால் குறுக்கு வழியில் காம சுகத்தை திட்டமிட்டு அனுபவிப்பவர். காரணம், கால புருஷனுக்கு 7 ல் 11 ஆமதிபதி நீசம் பெற்றதாலும், பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதாலும்தான். 32 வயதை கடந்த ஜாதகர் முறையான திருமண வாழ்வு தனக்குத் தேவையில்லை என்கிறார்.

இப்பதிவில் நாம் அலசிய ஜாதக அமைப்பினருக்கான தீர்வுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்,

கைபேசி: 8300124501

Saturday 18 September 2021

மருத்துவ நுழைவுத்தேர்வு எதிர்பார்ப்பும் கொடுப்பினையும்!

 


மருத்துவ நுழைவுத்தேர்வை நீக்கினால் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு தனமுள்ளோரின் வாரிசுகள் அனைவரும் மருத்துவராகிவிடுவர். அதனால் திறமையான சாமான்யர்களின் வாரிசுகள் முன்னேற இயலாது என்று மத்திய அரசு எண்ணுகிறது. இதனால் பணம் படைத்தோர் வாரிசுகள் பயிற்சி நிலையங்களை நாடுகின்றனர். இப்பயிற்சி நிலையங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் நிலை  சாமான்யர்களின் வாரிசுகளுக்கு கிடைப்பதில்லை. இதனாலும் சாமான்யர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இக்குறையை தீர்க்க மத்திய அரசு கல்வியில் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து   இந்தியா முழுமையிலும் முதன்மை பாடங்கள் எனப்படும் (core subjects ) கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவைகளை அனைத்து மாநிலங்களிலும் CBSC, STATE BOARD,ICS போன்ற அனைத்து கல்வித்துறையிலும்  ஒரே பாடத் திட்டத்தை செயல்படுத்தலாம். மாநிலங்கள் தங்களது மொழி, கலாசாரம், வரலாறு போன்ற இதர பாடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என ஒரு நடைமுறையை கொண்டு வரலாம். தற்போது அதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படி கொண்டுவந்தாலும் பாடத்திட்டத்தை விட்டு விலகிய கேள்விகள் நுழைவுத்தேர்வில் கேட்கப்படக்கூடாது என்ற நிலையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் OUT OF SYLLABUS எனும் கேள்விகள் மூலம் தனம் படைத்தோரின் வாரிசுகள் குறுக்கு வழியில் வாய்ப்பு பெற அது  வழி வகுக்கும். பயிற்சி தேவைப்படாமல் திறமையுள்ளோர் அனைவரும் பாடத்திட்டத்தின் மூலமே மருந்தவம் பயில வகை செய்தால் மட்டுமே அனைவருக்கும் சம வாய்ப்புகள் என்பது சாத்தியமாகும். மாநில அரசுகள் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய கோருவது இத்தகைய முரண்பாடுகளாலும், தாங்கள் சம்பாதிக்கவுமே என்பதை அனைவரும் அறிவர். நமது இன்றைய பதிவில் மருத்துவராக ஜாதக அமைப்பு என்ன என்பதை நமது முந்தைய பதிவுகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் கூறுவதே. தங்களது வாரிசுகளுக்கு உள்ள கல்வி அமைப்பை அறிந்து பெற்றோர்கள்  செயல்பட்டால் பல மாணவ மணிகளின் உயிரை காப்பாற்றலாம் என்ற அடிப்படையில் இப்பதிவு வருகிறது.

 மருத்துவராவதற்குரிய கிரகங்கள்:

மருத்துவத்தின் காரக கிரகங்களாக சூரியன், செவ்வாய், புதன், ராகு-கேதுக்கள் ஆகியவை கூறப்பட்டாலும் சூரியனே மருத்துவத்தின் முதன்மை கிரகமாகும். ஒரு ஜாதகரை மருத்துவர் நிலைக்கு கொண்டு வருவதில் சூரியன், செவ்வாய், குரு, சந்திரன் ஆகிய கிரகங்களின் பங்கு முக்கியமானது.

நோய் பாவம் 6 என்றால், நோயிலிருந்து மீழ்வதை 6 ன் விரைய பாவமான ஐந்தாம் பாவம் குறிப்பிடும். குறிப்பாக கால புருஷனின் 5 ஆம் பாவாதிபதி சூரியனின் வலுவே ஒருவர் நோயிலிருந்து குணமாவதை குறிக்கிறது. சூரியனே உயிர்களுக்கு சக்தி கேந்திரம். எனவே சூரியனின் அமைவு மருத்துவ துறைக்கு முதன்மையானது. சூரியனின் கதிர் வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

செவ்வாய் அறுவை சிகிச்சைக்கு அதிபதி என்பதோடு, செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியும், கால புருஷனின் ஆயுள் பாவமான விருட்சிகத்திற்கும் அதிபதியாகிறார். எனவே உயிர் காக்கும் துறையான மருத்துவத்திற்கு செவ்வாய் முக்கிய காரக கிரகமாகிறார்.

ஒருவர் துன்பங்களிலிருந்து விடுபடுவதை 5 ன் பாவத் பாவமான 9 ஆம் பாவம் குறிப்பிடும். மேலும் உயர் கல்வி பாவம் என்பது 9 ஆம் பாவமே. இதன் அடிப்படையில் ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் கால புருஷனின் 9 ஆமதிபதி குருவின் அருளாசி முக்கியம்.

சூரியன், செவ்வாய், குரு மூன்றும் நெருப்பு ராசிகளுக்கு அதிபதிகள் என்பது கவனிக்கத்தக்கது. ஒளியே ஆரோக்யத்தை வழங்குகிறது. மாறாக இருள் வியாதியை தருகிறது.

ஒருவர் மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது சந்திரனே. எனவே சந்திரன் செவ்வாயுடன் அல்லது செவ்வாயின் வீட்டுடன் தொடர்பு பெறுவது நன்று.

மருத்துவராவதற்குரிய பாவங்கள்:

பாவங்களில் 1,6,1௦ ஆகிய பாவங்களிளோடு செவ்வாய், சூரியன், குரு ஆகிய நெருப்பு ராசி கிரகங்களின் தொடர்பு மருத்துவத்திற்கு சிறப்பான அமைப்பாகும்.

மேற்சொன்ன அனைத்தையும் விட மிக சாதகமான திசா-புக்திகள் உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும் காலத்தில் வர வேண்டியது அவசியம்.  

கீழே  ஒரு ஜாதகம்.

 


ஜாதகி 1998ல் பிறந்தவர். 12 ஆம் வகுப்பு முடித்து NEET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஒதுக்கீட்டில் 2016 ஆமாண்டு மருத்துவக்கல்லூரி சென்றவர். இவ்வருடம் MBBS முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிகிறார். இதில் மேற்சொன்ன விதிகளின் செயல்பாடுகளை காண்போம்.  லக்னமே செவ்வாயின் விருட்சிகமாகி, குரு மற்றும் சந்திரனின் பார்வையை லக்னம் பெறுகிறது. உச்ச சந்திரன் 1௦ ஆமதிபதி சூரியனின் கார்த்திகை-4 ல் நிற்பதால் 1௦ ஆமதிபதி சூரியன் வலுவடைகிறார். சூரியனை குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜீவன பாவமான 1௦ ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-3 ல் செவ்வாய் நிற்கிறார். திசா நாதன் ராகுவே மருத்துவ காரக கிரகங்களில் ஒன்றாகி தனித்த நிலையில் சூரியனின் வீட்டில் நிற்பதால்  சூரியன் போன்றே செயல்படும். இந்த அமைப்பால் ஜாதகி மருத்துவரானார். குறிப்பாக கல்லூரி செல்லும் காலத்தில் ராகு திசையில் இருப்பதுதான் ஜாதக கொடுப்பினையை அனுபவிக்க முக்கிய காரணம்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஜாதகம்.


இவர் 2000 ல் பிறந்த ஒரு மாணவி. இவர் கடந்த இரு வருடங்களாக மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுகிறார். தற்போதும் எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டுள்ளார். ஜாதகிக்கு செவ்வாய் திசை கடந்த ஆண்டு இறுதிவரை நடந்தது. குரு செவ்வாயையோ, சூரியனையோ பார்க்கவில்லை. ஆனால் செவ்வாயின் வீடான விருட்சிகத்தை 12 ல் மறைந்த நிலையில் பார்க்கிறது. செவ்வாய் சந்திரனின் வீட்டில் நீசமாகி திசை நடத்துவதால் ஏற்பட்ட உந்துதலாலேயே ஜாதகி மருத்துவம் படிக்க எண்ணியுள்ளார். செவ்வாய் 1, 6, 1௦ பாவங்களோடு தொடர்புகொள்ளவில்லை. செவ்வாய், சூரியன், குரு ஆகியவைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பாகவில்லை. தற்போது ஜாதகிக்கு செவ்வாய் திசை முடிந்து ராகு திசை துவங்கியுள்ளது. ஜாதக அமைப்பு சாதகமாக இல்லை என்பதால் ராகு திசையிலும் இந்த ஜாதகிக்கு மருத்துவம் பயில வாய்ப்பு இல்லை எனலாம்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1990 ல் பிறந்த ஒரு ஆண். இவர் MBBS முடித்து, மனநல மருத்துவத்தில் MD முடித்து அதிலேயே DM முடித்து அரசு மருத்துவராக பணிபுரிகிறார். ஜாதகத்தில் செவ்வாய் 1௦ ஆமதிபதி சந்திரனின் ரோஹிணி-2 ல் நின்று விருட்சிகத்தை பார்க்கிறார். உச்ச குருவும் விருட்சிகத்தை பார்க்கிறார். சூரியன் 1௦ ஆமதிபதி சந்திரனின் தொடர்புடன் 12 ல் சுய சாரத்தில் உத்திரம்-2 ல்  உள்ளார். இந்த அமைப்பால் இவருக்கு மருத்துவம் பயில வாய்ப்பு உள்ளது. இவர் மருத்துவம் பயில திசா-புக்திகள் எப்படி அனுமதித்தன என காண்போம். சந்திரன் ஹஸ்தம்-2 ல் சுய சாரம் பெற்றுள்ளார். எனவே பிறப்பு திசை சந்திர திசை. பிறகு செவ்வாய் திசை கடந்து 2003 முதல் 2021 வரை ராகுவின் திசை. இந்த ராகு திசையில்தான் ஜாதகர் மருத்துவம் பயின்றார். காரணம் ராகு 1௦ ஆமதிபதி சந்திரனின் திருவோணம்-1 நிற்கிறார். 1௦ ஆமிட தொடர்பு பெற்ற ராகு ஜாதகருக்கு மருத்துவம் கல்வியை வழங்கி மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது. மருத்துவத்தை பொறுத்தவரை ராகு-கேதுக்களின் பங்கு முக்கியமானது. சந்திரன் சாரம் பெற்றதால் ராகு, சந்திரன் குறிக்கும் மனநல மருத்துவத்தில் ஜாதகரை உயர்த்தியுள்ளது.

நான்காவது ஜாதகம் கீழே.

இவர் 2002 ல் பிறந்த ஒரு பெண். இவரும் இருமுறை மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதி இரண்டாவது தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டுள்ளார். லக்னத்திற்கு 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று சூரியனும் செவ்வாயும் குருவோடு சிறப்பாக இணைவு பெற்று அமைத்துள்ளது. இது மருத்துவம் பயில சிறப்பான ஜாதக அமைப்பாகும். ஆனால் இவரால் இருமுறையும் சிறப்பாக தேர்வெழுத முடியவில்லை என்கிறார்.  காரணம் ஜாதகிக்கு இவ்வாண்டு ஜனவரி வரை சுக்கிர திசை நடைபெற்றுள்ளது. சுக்கிரன் லக்னத்திற்கு லாபத்தில் அமைத்திருந்தாலும் சுக்கிரன் 1௦ க்கு விரையத்தில் ரிஷபத்தில் நிற்கும் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. 1௦ ஆமிடாதிபதியோடுதான் சுக்கிரனுக்கு தொடர்புள்ளதே தவிர 1௦ ஆமிட கிரகங்களோடு அல்ல. ஜனன கால புதன் மீது கோட்சார ராகு அமர்ந்திருந்த நிலையில்  கடந்த ஆண்டு சுக்கிர திசையில் ஜாதகிக்கு மருத்துவ வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது சூரிய திசையில் ஜாதகி இரண்டாவது முறையாக தேர்வெழுதியுள்ளார். சூரியன் திக்பலம் பெற்று நிற்கும் நிலையில் தற்போது வாய்ப்பு உள்ளதை மறுக்க இயலாது. ஆனால் சூரியன் 10 ல் நின்று திசை நடத்தினாலும் அவர் 9 ல் நிற்கும் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். எனவே சூரியன் தனது வலுவை 9 ஆமிடதிற்கே செயல்படுத்துவார் எனலாம். கன்னி லக்னத்திற்கு சூரியன் விரையாதிபதியாகி, 8 ஆமதிபதி செவ்வாய்  மற்றும் பாதகாதிபதி குருவின் இணைவில் உள்ளார். மேலும் செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதி என்பதோடு, ராசிக்கு விரையாதிபதியும் ஆவதால் திசாநாதன் சூரியனைவிட அதிக பாகை பெற்று நிற்கும் செவ்வாய் ஜாதகி மருத்துவராக அனுமதிக்க மாட்டார் என்றே முடிவு செய்ய வேண்டியுள்ளது.

விரைவில் மீண்டுமொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday 14 September 2021

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்!

காதல் இன்றைய காலத்தில் நிறைய மாறிவிட்டது. புறா விடு தூதிலிருந்து குருஞ் செய்திகளில் பரிமாறிக்கொள்ளப்படும் காலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக பொருத்தம் பார்க்கத்தான் ஜோதிடரை நாடி வருவர். காதலிப்பவர் தனக்கு தகுந்தவரா? எனக் கேட்டு ஜோதிடரை அணுகுவோரும் உண்டு. சமீபத்தில் காதலை சொல்ல நல்ல நாள் கேட்டு ஒரு அன்பர் வந்தது ஆச்சரியமூட்டும் அனுபவம். வந்தவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்  அவருக்கு ஜாதகத்தை பெற்றோர் எழுதி வைக்கவில்லை. எனவே பிரசன்னம் பார்க்க வேண்டுமென்றார்.


அவரது கேள்வி நான்கு.
 

1..சக ஆசிரியையின் செயல்கள் என்னை கிளர்சியூட்டுகின்றன. அவரது செயல்கள் என்னை வசீகரிப்பதன் அறிகுறியா?

2. அல்லது “நான் தவறாக புரிந்துக்கொண்டுள்ளேனா?”

3. எனது எண்ணம் சரி எனில் அவரிடம் எனது காதலை சொல்ல நாள் குறித்து சொல்லவும்.

4. எனது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் எங்கள் மண வாழ்வு எப்படி இருக்கும்? என்று கேள்விகள் இருந்தன.

ஆசிரியருக்கு தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அடிவாங்காமல் அவமானப்படாமல் தனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலில் ஜோதிட ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.. அவரது பயத்திற்கு காரணம் அவர் விரும்புவதாக சொல்லும் சக ஆசிரியை வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதுதான்.

ஆசிரியருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயம் ஆரூடம் இரண்டும் ஒன்றாக உள்ளது. இது கேள்வியாளர் தனக்காகவே கேள்வியை கேட்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. உதயமும் ஆரூடமும் சிம்மமாகி அங்கு சூரியன் ஆட்சி பெற்றுள்ளது கேள்வியாளர் அரசுத் தொடர்புகொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது. உதயத்தை குரு பார்ப்பதும், உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உச்ச புதன் இருப்பதும் வந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை குறிப்பிடுகிறது. உதயம் கேள்வியாளர் என்றால் 7 ஆமிடம்  இவர் காதலை சொல்லவிருக்கும் ஆசிரியையைக் குறிக்கும். 7 ஆமிடத்தில் குரு இருந்து சூரியன் பார்வை பெறுவது எதிராளியும் ஆசிரியையே என கேள்வியாளர் கூறியது சரியே என்பதை தெரிவிக்கிறது. 

இப்போது இவர் காதலின் நிலை என்ன என்பதை காண்போம். உதயம் இரண்டாமிடத்தில் உள்ள உச்ச புதனையும், நீச சுக்கிரனையும், நோக்கி நகர்கிறது. புதன் காதலின் காரக கிரகம் என்பதோடு, அவர் தகவல் பரிமாற்றம், கடிதம் இவற்றின்  காரக கிரகமும் கூட. மேலும் உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சுக்கிரன் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாவது பாவத்தின் அதிபதியும் கூட. எனவே கேள்வியாளர் காதலை தெரிவிக்க  தயாராக இருக்கும் நிலையை இரண்டாமிட கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதன் காதலியையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். இவை இரண்டும் ஒன்றாய் உதயத்திற்கு இரண்டில் அமைவது, காதலிக்கவுள்ள பெண்ணை மனைவியாக அடையும் கேள்வியாளரது ஆசையை குறிப்பிடுகிறது. காதல் பாவமான உதயத்திற்கு 5 ஆமிடம் தனுசில் ஜாமச் சந்திரன் அமர்ந்து அதன் அதிபதி ஜாம குருவால்  உதயதிற்கு லாபத்தில் மிதுனத்தில் இருந்து பார்ப்பது சிறப்பு என்றாலும் வெளிவட்ட குருவிற்கு உள்வட்ட குருவே ஆதார சக்தி. உள்வட்ட குரு வக்கிரம் பெற்று 7 ல் அமர்ந்து உதயத்தை பார்க்கிறார். உதயத்தில் சூரியனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் காதலை சொல்ல துணிச்சல் ஜாதகருக்கு உண்டென்றாலும் வெளிவட்ட செவ்வாய் நீசம் பெற்று, துணிச்சல் ஸ்தானாதிபதி உள்வட்ட சுக்கிரனும் நீசம் பெற்று அமைந்தது ஆகியவற்றால் கேள்வியாளருக்கு சிறிது பயம் கலந்த ஆர்வம் இருப்பது தெரிகிறது. உச்ச, நீச கிரகங்களே கேள்வியாளரின் சிந்தனையில் மையம்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப களத்திர காரக கிரகங்களான சுக்கிரன், செவ்வாயோடு காதல் காரகன் புதனும் உச்சம் பெற்றது ஜாதகரின் சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது.   

இப்போது இவரது காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பார்ப்போம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் உதயத்திற்கு இரண்டாம் வீட்டில் நீசம் பெறுவது கேள்வியாளர் குறிப்பிடும் பெண்ணுக்கு உள்ள பாதிப்பை கூறும் அல்லது கேள்வியாளரின் எண்ணத்திலேயே உள்ள தகுதிக் குறைவை குறிப்பிடும். இதை தனது மதத்திற்கு மாறுப்பட்ட அளவிலான எண்ணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஜாம சுக்கிரன் உதயத்திற்கு எட்டாமிடமான மீனத்தில் உச்சம் பெற்று மறைவது, எதிராளி ஆசிரியை தற்போது வசதியாக இருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. சுக்கிரனும் புதனும் காதல் பாவமான 5 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளாமல் அவமான பாவமான எட்டாமிடத்தையே தொடர்புகொள்கின்றன.  மேலும் உதயத்திற்கு எட்டாம் அதிபதி 7 ல் இருப்பதால் எதிராளியால் கேள்வியாளருக்கு அவமானம் ஏற்பட இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. 7 ஆமிட குருவே உதயத்திற்கு 11 ல் இருப்பது கேள்வியாளரின் ஆவலை தூண்டுவதோடு முறையற்ற தொடர்பு குறித்த தகவலையும் தெரிவிக்கிறது. எனவே கேள்வியாளர், எதிராளியிடம் தனது காதலை தெரிவித்தால் அவமானப்பட நேரும். சக ஆசிரியையின் நடவடிக்கைகளை கேள்வியாளர் தவறாக புரிந்து கொண்டுள்ளதையே பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. 

காதல் காரகன் புதன் வெளிவட்டத்தில் உதயத்திற்கு பாதக ஸ்தானமாக மேஷத்தில் கவிப்புடன் உள்ளது இதனை உறுதி செய்வதாக உள்ளது. உதயதிற்கு 6 ல் இரு சனியும் உள்ளது, தவறாக எடுக்கப்படும் கேள்வியாளரின் ஒரு முன் முயற்சியால் அவரது வேலையில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஒரே கிரகம் உள்வட்டதிலும் வெளிவட்டதிலும் ஒரே ராசியில் இருப்பது அதன் காரகம் பாதிக்கப்படுவதை குறிக்கும். உதயத்திற்கு விரையத்தில் அமைந்த வெளிவட்ட நீச செவ்வாயை இரு சனியும் பார்க்கிறது. பாதகத்தில் கவிப்பு அமைந்து பாதகாதிபதியான செவ்வாய் உள்வட்டத்தில் உதயத்தில் அமர்ந்து 5, 8 அதிபதியான உள்வட்ட குரு  பாதகாதிபதி செவ்வாயின் அவிட்டத்தில் நின்று உதயத்தை பார்ப்பது ஆகியவை காதலைவிட பாதகமே கேள்வியாளரை தேடி வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. எனவே சக ஆசிரியையின் செயல்களை கேள்வியாளர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். காதல் கடிதம் கொடுத்தால் கேள்வியாளர் அவமானப்பட நேரும் என்பதோடு அவரது பணிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதை  பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனவே காதலை சொல்ல தற்போதைய சூழல் சாதகமில்லை என்று கேள்வியாளருக்கு கூறப்பட்டது. 

இந்த வகை பிரசன்னம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது என்பதோடு இவ்வகை கேள்விகளுக்கு எப்படி விடையளிக்கலாம் என்ற புரிதலையும் கொடுத்தது. இதை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசான்களுக்கு நன்றிகள் கோடி.

 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday 7 September 2021

கிரக சஷ்டாஷ்டக விளைவுகள்!

 


ஜோதிடத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 / 8 ஆக அமைவது சஷ்டாஷ்டகம் என்று அழைக்கப்படும். சஷ் என்பது 6 ஐயும், அஷ்டம் என்பது 8 ஐயும் குறிக்கும். உதாரணமாக மேசத்தில் சூரியன் இருந்து விருட்சிகத்தில் சந்திரன் இருப்பது ஒன்றிலிருந்து மற்றொன்று 6 / 8 ஆக அமையும். இப்படி தங்கள் நிலைகளில் சஷ்டாஷ்டகம் பெற்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து செயல்படும். இதன் வெளிப்பாடு கிரக காரகம், கிரகமிருக்கும் ராசி, கிரகங்கள் சுட்டும் உறவுகள், பணிகள் போன்ற பல்வேறு வகைகளில் வெளிப்படும். இவற்றை சில உதாரணங்கள் மூலம் இன்றைய பதிவில் ஆராய்வோம்.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகர் 1984 ல் பிறந்து திருமணமான ஒரு ஆண். ஜாதகத்தில் தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி சனி, 12 ஆமிடமான துலாத்தில் உச்சம். அங்கு சனியின் நண்பர் சுக்கிரன் ஆட்சியாக உள்ளார். தாயாரை குறிக்கும் காரக கிரகம் சந்திரனும் மனைவியை குறிக்கும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6/8 ஆக  அமைந்துள்ளனர். இதனால் சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் சஷ்டாஷ்டக தோஷம் ஏற்படுகிறது. சந்திரனும் சுக்கிரனும் பெண் கிரகங்கள் என்பதோடு சுப கிரகங்களுமாவர். எனினும் இவை இரண்டும் சம வலு கொண்ட பகை கிரகங்களாகும். சந்திரன் இரவுக்கு ராணி எனில் சுக்கிரன் பகலுக்கு ராணியாகும். இதனால் இந்த ஜாதகர் திருமணமான நாள் முதல் தனது தாய்க்கும் தனது மனைவிக்கும் நிகழும்  உரிமைப்போரில் நிம்மதி இழக்கிறார். 4 ஆமதிபதி சனி சுக்கிரனுக்கு நட்பாகையால் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்கிறார். ஆனால் இதர நேரங்களில் இருவருக்கும் உரிமைப்போர் நடக்கிறது. என்கிறார். கிரகங்கள் இப்படி சஷ்டாஷ்டகம் பெற்று அவற்றின் காரக உறவுகள் கருத்து வேறுபாடுகொள்ளும் என்றாலும் அதன்  தாக்கம் தொடர்புடைய திசா-புக்திகளில்தான் அதிகம் வெளிப்படும்.

இந்த ஜாதகருக்கு சந்திரனை நேர் பார்வை செய்யும் சூரிய திசை நடக்கிறது. சந்திரனை சூரியன் பார்ப்பதால் ஜாதகரின் தாயார் இயல்பாகவே அதிகார குணம் பொருந்தியவர். தற்போது புதன் புக்தி நடக்கிறது. புதன் சூரியனோடு சேர்ந்து சந்திரனை பார்ப்பதால் தாயார் அதிகாரத்தோடு அதற்குரிய புத்தி சாதுர்யமும் கொண்டவர் என்பது புரிகிறது. புக்திகாரகன் புதன், சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் இருந்து புக்தி நடத்துகிறார். இதனால் தாயார் தனது ஆளுமையையும் புத்திசாலித்தனத்தையும் காட்டி ஜாதகரின் மனைவியை மட்டம் தட்ட முயற்சிக்கிறார். இதற்கு திசா நாதன் சூரியனும் புக்தி நாதன் புதனும் மனைவியை குறிக்கும் சுக்கிரனுக்கு 12 ல் இருப்பதும், சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் பகை என்பதும் காரணமாகும். சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்திற்கு 12ல் இருப்பதாலும் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாகவுள்ள சந்திரனைவிட வலு குறைந்தவராகிறார். ஆனால் சுக்கிரன், சந்திரனைவிட ஒரு பாகைதான் குறைந்தவர் என்பதால் இங்கே கௌரவப்போட்டி தாய்க்கும், மனைவிக்கும் அதிகமாகிறது. இப்படி தாய்க்கும் மனைவிக்குமிடையே நடக்கும் சண்டையில் ஜாதகர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு சென்று பணிபுரிய உள்ளதாகவும் அப்போதுதான் இவர்களுக்கு புத்தி வரும் என்று கூறுகிறார். ஜாதகருக்கு புதன் புக்திக்கு அடுத்து சந்நியாசி கிரகமான கேதுவின் புக்தி குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் ஜல ராசி விருட்சிகத்தில் இருப்பதால் இவர் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்ல எண்ணுகிறார். சஷ்டாஷ்டகம் பெற்ற கிரகங்கள்  தங்கள் காரக உறவு வகையில் ஜாதகரை பாதிக்கின்றன.  

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.


ஜாதகர் திருமணமான ஆண். ஜாதகத்தில் களத்திர காரக கிரகங்களான சுக்கிரனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். ஜாதக அமைப்பிலேயே இவர் திருமண வாழ்வில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டை சந்திப்பார் என்பது தெளிவாகிறது. எப்போது எனும் கேள்வி எழும்போது திசா-புக்திகள் பதிலைத் தரும். இவருக்கு 7 ஆமிடத்தை பார்வை செய்யும் சந்திர திசையில் திருமணம் நடந்தது. 8 ஆமிடத்தில் இருந்து 7 ஆமிட சனியின் உத்திரட்டாதியில் நிற்கும் செவ்வாய் திருமணத்தை நடத்தி வைத்தார். மனைவி வந்தவுடன் செவ்வாய்க்கும் சுக்கிரனுக்குமான சஷ்டாஷ்டகம் வேலை செய்கிறது. இதனால் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு எழுகிறது. இதனால் சார அடிப்படையில் 7 ஆமிட தொடர்பு பெற்று திருமணத்தை நடத்தி வைத்த அதே செவ்வாய், தான் நிற்கும் பிரிவினை பாவமான 8 ஆமிடத்திற்குமான பலனையும் கொடுக்க வேண்டியவராகிறார். அதனால் பிரிவினையையும் செவ்வாய் கொடுத்துவிட்டார். பிரிவினைக்கு வித்தாக அமைந்தது சுக்கிரன்-செவ்வாய் பெற்ற சஷ்டாஷ்டகமே.  இவர் திருமணமாகி இல்லற வாழ்வுக்குள் நுழையுமுன்னரே மணமுறிவை சந்தித்தவர்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501