Showing posts with label திரிகோணங்கள். Show all posts
Showing posts with label திரிகோணங்கள். Show all posts

Wednesday, 13 January 2021

நதி எங்கே போகிறது?

தன் பிறப்பின் நோக்கம் என்ன?

தனது கர்மா என்ன?

தன்னை எது வழிநடத்துகிறது?


என்ற கேள்வியை சுயமாக கேட்டுக்கொள்ளாத மனிதர்களே உலகில் இல்லை எனலாம். வாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்திய வயது மனிதர்களைவிட பெரும்பாலும் 40 வயதை தாண்டிய அனைவரிடமும் இக்கேள்வி ஒருநாள் கண்டிப்பாக எழுந்தே தீரும். அதனால்தான் மனிதர் மனம் வயது செல்லச்செல்ல ஆன்மீகத்தின்பால் திரும்புகிறது. ஒருவரது பிறப்பின் சூழலை லக்னமும் லக்னத்தோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் வாழும் சூழலை பூர்வ புண்ணியம் எனும் அவரது ஐந்தாம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் தெரிவிக்கும். அவர் ஆன்மா இறுதியாக எதில் நிறைவு பெறும் என்பதையும் அவரது கடந்த பிறவியின் கொடுப்பினைகள் என்ன என்பதையும் 9 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களுமே முடிவு செய்கிறது. அவரின் வாழ்வின் முடிவை 12 ஆம் பாவமும் அதனோடு தொடர்புடைய கிரகங்களும் முடிவு செய்கின்றன. எளிமையாக சொல்வதென்றால் வாழ்வின் துவக்கத்தை லக்னமும், மத்திய காலத்தை 5 ஆம் பாவமும் இறுதிக்காலத்தை 9 ஆம் பாவமும் குறிப்பிடும்.  இவற்றின் ரகசியங்களை தெரிந்துகொண்டால் ஒருவரின் வாழ்க்கைப்பயணம் தவிப்பாக இருக்காது. இப்பதிவில் நாம் ஒரு மனிதனின் மேற்கண்ட மூன்று சூழ்நிலைகளையும் ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.

ஜாதகர் 1968 ல் பிறந்த ஒரு ஆண். லக்னம் மோட்ச ராசியான கடகத்தில் அமைந்து அதன் அதிபதி சந்திரன் வளர்பிறையான காலத்தில் பிறந்தவர். இதனால் ஜாதகருக்கு இயல்பாகவே ஒரு அறம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும் எனலாம். லக்னம் பூசம்-3 ல் அமைந்துள்ளது. சந்திரன் பூசம்-2 ல் அமைந்துள்ளது. பூச நட்சதிராதிபதி சனி, கால புருஷனின் மூன்றாவது மோட்ச ராசியான மீனத்தில் மோட்ச காரகன் ராகுவுடன்  அமைந்துள்ளார். இவரது சிந்தனை வாழ்வின் பிற்காலத்தில் எதை நோக்கிய நிலையில் இருக்கும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இவரது ஜாதகத்தில் ஞான காரகன் கேது லக்னத்திற்கு 3 ல் அமைந்து அதன் அதிபதி புதன் மீனத்தில் அமைந்துள்ளார். மீனத்தின் அதிபதி குரு சூரியனுடன் பரிவர்த்தனையாகி நிற்கிறார். இந்நிலையில் கடக லக்னத்தின் யோகாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு திக்பலத்தை தரும் நிலையில் அமைந்து மீனத்தில் உச்சமாகியுள்ள சுக்கிரனின் சாரம் பரணி-1 பெற்றுள்ளார். செவ்வாய் கடகத்தையும் மற்றொரு மோட்ச ராசியாகிய விருட்சிகத்தையும் பார்வை செய்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.  இந்த ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் மீன ராசியையே தொடர்புகொள்கின்றன. லக்னத்தின் போக ஸ்தானாதிபதி (3 ஆம் அதிபதி) புதனே கால புருஷனுக்கும் போக ஸ்தானமான மிதுனதிற்கும் அதிபதியான நிலையில் அவர்  லக்னத்தின் மோட்ச பாவமான 12 ஆம் அதிபதியுமாகி, அவர் கால புருஷனின் மோட்ச பாவமாகிய மீனத்தில் அமைகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முதலில் ஜாதகரின் பிறப்பு விபரங்களை காண்போம். லக்னமும் லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்ததால் ஜாதகர் ஒரு நல்ல ஆன்மீக  நாட்டம் கொண்ட ஒரு உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்தார். பிறப்பு திசை சனி திசை என்பதும், சந்திரன் சனி சாரம் பெற்றதும் இதற்கு காரணமாகும். பிறவியிலேயே சனி திசை வந்து சிரமங்களை சிறு வயதிலேயே அனுப்பவிப்பவர்கள் பிற்கால வாழ்வில் தடம் மாறுவது குறைவு. காரணம் சனி கற்றுத்தரும் பாடங்கள் அப்படி. சனி திசைக்குப்பிறகு ஜாதகருக்கு சனியோடு சாரப்பரிவர்த்தனை பெற்ற (புதன் உத்திரட்டாதி-2, சனி ரேவதி-2) புதன் திசை வந்தது. வித்யா ஸ்தானமாகிய 4ஆம் பாவத்தின் அதிபதியாகிய உச்ச சுக்கிரனால் நீச பங்கப்பட்ட புதன் வித்யா காரகன் என்பதால் சிறந்த கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். ஜீவன காரகன்  சனியோடு புதன் தொடர்பாவதால் கல்விக்கேற்ற வேலையையும் கிடைக்கப்பெற்றார். 7 ஆம் அதிபதி சனியோடு தொடர்பானதால் ஜாதகருக்கு திருமணமும் தக்க வயதில் நடந்தது. பாதகாதிபதியான மனைவி வந்ததும் வாழ்வில் வசந்தகளும் கூடவே  பாதகமான சில மாற்றங்களும் வரவேண்டும். ஆனால் இங்கு பாதகங்கள் ஏதும் பெரிய அளவில்  நடக்கவில்லை. மனைவியும் ஜாதகரைப்போலவே நல்ல ஆன்மீக சிந்தனை வாய்க்கப்பெற்றவராகவே இருக்கிறார். காரணம் சுக்கிரனுக்கு பாவிகளின் தொடர்பு ஏற்ப்படுவதால் தனது இயல்பான பலன்களை வழங்க முடியவில்லை.

இரண்டாவதாக ஜாதகரின் மத்திய வயது வாழ்வியலை ஆராய்வோம். ஜாதகருக்கு இப்போது பூர்வ புண்ணிய பலன்கள் செயல்படத்துவங்குகின்றன. 31 ஆவது வயதில் ஜாதகருக்கு புதன் திசை முடிந்து கேது திசை துவங்கியது. ஞான காரகன் கேது தனது காரக அடிப்படையிலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை தனது மூன்றாம் பார்வையால் கட்டுப்படுத்துவதாலும் கேதுவின் சாரநாதன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியானதாலும் பூர்வ புண்ணிய அடிப்படையில் ஜாதகருக்கான பலன்கள் நடந்தன. செவ்வாய் லக்னத்திற்கு 4 ஆம் பாவத்தை பார்த்ததால் வீடு, வாகன பாக்கியங்களை குறைவின்றி வழங்கினார். 1௦ ஆம் அதிபதி என்பதால் வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை வாரி வழங்கினார். ஞான காரகன் கேது தற்போது கட்டுமான காரகன் செவ்வாய்க்கு தனது காரக அடிப்படையில் தான் விரும்பும் “அடியார்க்கு எளியர்” (சிவன்)  கோவில் கட்டும் சிந்தனையை ஏற்படுத்துகிறார். பொதுமக்களிடம் ஜாதகருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்காத சூழலில் தனது வீட்டின் ஒரு பகுதியையே கோவிலாக மாற்றுகிறார் ஜாதகர். ஞான காரகன் கேது, பிடிவாதகாரகன் செவ்வாய் தொடர்பால் தன் முயற்சியில் ஜாதகர் பின்வாங்கவில்லை. உரிய காலம் வரும் வரை காத்திருக்கிறார். ஜாதகர் 2௦ வருடங்களாக தனது வீட்டில் வழிபாடுகள் செய்து இப்படி காத்துக்கொண்டுள்ளார். தற்போது 52 வயதான நிலையில் ஜாதகருக்கு சுக்கிர திசை முடிய இன்னும் உத்தேசமாக 5 வருடங்கள் உள்ளது. சுக்கிரன் பாதகாதிபதி என்பதோடு கால புருஷனின் குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் அதுவரை ஜாதகருக்கு தடை நீடிக்கும்.

இறுதியாக ஜாதகரின் கடைசி காலங்களிலாவது அவரது விருப்பங்கள் நிறைவேறுமா எனக்காண்போம். சுக்கிர திசைக்கு அடுத்து வரும் சூரிய திசை ஜாதகரின் எண்ணங்களை நிறைவேற்றும். காரணம் சூரியன் குருவோடு பரிவர்தனையாவதுதான். சூரியனுடன் பரிவர்த்தனையாகி மோட்சகாரகன் ராகுவோடு இணையும் கால புருஷனின் மோட்ச ஸ்தானாதிபதி குரு, ஞானகாரகன் கேதுவின் மகம்-1 ல் நிற்கிறார். இப்படி சூரியன், குரு, ராகு-கேதுகளுடன் ஏற்படும் தொடர்பால் ஜாதகர் கோவில் கட்டுவார். குருவிற்கும் கேதுவிற்கும் ஆன்மீக ரீதியாக இயல்பாக உள்ள புரிதலால் சூரிய திசையில் ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறும். அப்போது கோவில் கட்ட ஜாதகருக்கு அரசின்  பின்புலத்தில் இயங்கும் ஒரு பெரிய ஆன்மீக அமைப்பு ஒன்றின் மூலம் உதவிகள் கிடைக்கும் என்பது ஜாதக ரீதியாக தெரிகிறது. சூரிய திசையை அடுத்து வரும் சந்திரன் அஷ்டமாதிபதி சனியின் சாரம் பெறுவதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் ஜாதகரின்  வாழ்வு சந்திர திசையில் இறையோடு கலந்து நிறைவுபெறும். கடகத்தில் பிறந்து விருட்சிகத்தில் பொங்கி பிரவாகமெடுத்த நதி இறுதியாக மீனத்தில் கடலில் கலக்கும் எனலாம். ஜாதகத்தில் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பது ஜாதகரின் நோக்கத்தை தெளிவாகத்தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Saturday, 25 July 2020

காம புதனின் காதல் சேட்டைகள்!



ஜோதிடத்தில் புதன் ஒரு முக்கிய கிரகம். புதன் ஜோதிடத்தில் புத்திகாரகன் என வர்ணிக்கப்படுகிறார். புத்தியைக்கொண்டு எதையும் சாதிக்கலாம் என்பதால்தான் “பலவான் புத்திமான்” என்கிறார்கள்.  புதன் காதலுக்கு உரிய கிரகமாகவும் கருதப்படுகிறது. "எத்தனை பெரிய புத்திசாலியும் காதல் வயப்பட்டுவிட்டால் முட்டாளாகிவிடுகிறான்" என நகைச்சுவையாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. காதலில் புத்தியை உணர்வுகள் வென்றுவிடுகின்றன. ஆனால் காதலுக்கும் புத்திக்கும் உரிய ஒரு கிரகம் தனது காரகத்துவங்களிலேயே ஒன்றை வென்று ஒன்றை தோல்வியடைய வைக்கிறது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். புதன் காதலன்-காதலி, நண்பர்கள் ஆகியவர்களையும் குறிப்பிடும் கிரகமாகும். புதனால் ஒரு காதல் ஏற்பட்டால் அது ஒரு காலத்தில் வெற்றியடையாமல் விலகிச்சென்றாலும் மீண்டுமொருமுறை தேடிவரும். நல்ல நண்பர்களையே காதலர்களாக அடைபவர்கள் கொடுப்பினைகொண்டவர்கள். அவர்களையே திருமணம் செய்பவர்கள் பாக்கியசாலிகள். புதன் ராகுவோடு தொடர்புகொண்டு 7 ல் நின்று அங்கு களத்திர காரகர்களும் கெட்டிருந்தால் அங்கு காமக்களியாட்டம்தான். சொல்ல, எண்ண முடியாத  நிகழ்வுகளையெல்லாம் இச்சேர்க்கை நடத்திக்காட்டும். கயிலாயத்தையே இலங்கைக்கு பெயர்த்துவரத் துணிந்தான் ராவணன். ஆனால் சீதை மீது கொண்ட முறையற்ற காதலால் அனைத்தையும் இழந்தான். புத்தியால் வெல்ல இயலாத எதிரியைக்கூட காதலும் காமமும் வென்றுவிடுகின்றன.  

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம். 


விருட்சிக லக்னத்திற்கு 6 ல் கேது சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் சுக்கிரனின் பூராடத்தில் அமைந்துள்ளது. சந்திரனின் திரிகோணத்தில் கேது அமைந்து இருவரும் ஒரு கிரக சாரம் பெற்றதால் இவர்களுக்கிடையேயான தொடர்பு வலுவானதாக அமைகிறது. சந்திரன் பாதகாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தில் வந்து அமைவதால் ஒரு பெண்ணால் பாதிப்பு வரும் என அனுமானிக்கலாம். நட்பு, காதலர்களை குறிப்பிடும் புதன் உச்சமாகி காதல் பாவமான 5 ஆமிடத்தை பார்க்கிறது. புதனின் இந்த அமைப்பால் இந்தப்பெண்ணுக்கு இயல்பாகவே காதலுணர்வு இருக்கும். ராகு காம, களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனோடும் குடும்ப காரகன் குருவோடும் இணைந்து தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் நிற்கிறது.  இந்த ராகு புதனுக்கு அடுத்த ராசியில் இருந்து புதனை நோக்கி வருகிறார். இதனால் இந்த ஜாதகியின் இயல்பான காதலுணர்வில் விபரீதமான எண்ணங்கள் எழும்.

நட்பு பாவமான 4 ஆமதிபதி சனி, சதயம்-3 ல் நின்று ராகுவோடு தொடர்பாகிறது. இதனால் நட்பையே காதலாக என்னும் எண்ணம் இப்பெண்ணுக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்த களத்திர பாவாதிபதி சுக்கிரனின் பூராடம்-3 ல் உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் நிற்கிறார். உச்ச புதன் ஹஸ்தம்-4 ல் நின்று  2 ஆமிட சந்திரனோடு தொடர்புகொள்கிறார். சந்திரன் மற்றும் புதனின் இத்தகைய தொடர்பால்  ஏற்படும் உணர்ச்சித்தூண்டலில்  காதல் மூலம் குடும்பத்தில் சில விபரீத எண்ணங்கள் ஜாதகிக்கு எழும். கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகமே காம உணர்வுகளை பிரதிபலிக்கும் ராசியாகும். காரணம் 8 ஆமிடம் என்பது உடலுறவை குறிப்பிடும் இடம் என்பதால்தான். இந்நிலையில் லக்னாதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 8 ல் கால புருஷனுக்கு போக ஸ்தானாமான மிதுனத்தில் அமைந்து அதன் அதிபதி உச்ச புதனை பார்க்கிறது. லக்னாதிபதி செவ்வாய் இப்படி அமைவதால் ஜாதகிக்கு புதனின் காரகத்துவங்ளான நட்பு மற்றும் காதலில் அதிக தூண்டுதலை ஏற்படுத்தும்  12 ஆமிட ராகுவும் புதனை நோக்கி வருகிறது. மூலத்திரிகோணத்தில் உச்சம் பெற்ற தனித்த புதன் சிறப்பாக அமைத்திருப்பது போல இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் புதனை அதன் இயல்பிலிருந்து மாற்றுகின்றன. இதனால் புதன் காமத்தில் மாறுபட்ட பல்வேறு கோணங்களை ஜாதகியை எண்ண வைக்கிறது.

இந்த ஜாதகிக்கு 2 ஆமிடதில் நிற்கும் சந்திரனின் திசையில் சந்திரன் சாரம் பெற்ற லாபாதிபதி புதனின் புக்தியில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பிறகு ராசிக்கு காதல் பாவமான 5 ஆமிடத்தில் மேஷத்தில் நிற்கும் காதலை குறிக்கும் மற்றொரு கிரகம் கேதுவின் புக்தி துவங்கியது. கேது சுக்கிரனின் சாரம் பரணி-4 ல் நிற்கிறது. 7 ஆமதிபதி சுக்கிரனுக்கு திரிகோணத்தில் பள்ளி நட்பை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் சனி நிற்கிறது. இதனால் மணமான பின்னும் பள்ளி நட்பு காதலெனும் தீயாய் சுடுகிறது. புதன் விட்டுப்போன தொடர்பை ஒரு காலத்தில் மீண்டும் தேடிவரச்செய்யும். அப்படி பள்ளி நட்புகள் மீண்டும் சில வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டன. ஆனால் வாழ்க்கைச்சூழல்கள் இருவருக்கும் திருமணம் எனும் நிலையால் மாறியிருந்தன. இப்போது சந்திர புக்தியில்   கேது புக்தியில் ஜாதகி தனது பள்ளி நட்பை எண்ணி கணவரை பிரிகிறார். சுக்கிரனின் புக்தியிலும் ஜாதகி கணவரை பிரிந்துதான் இருந்தார்.

சுக்கிரனின் திரிகோணத்தில் நின்று குரு பார்வை பெறும் கணவரான செவ்வாய் தனது மனைவியை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். செவ்வாய்க்கு குரு பார்வை இருந்ததால் கணவர் ஜாதகியின் நிலையை புரிந்துகொண்டார். ஜாதகிக்கு சந்திர திசையில் திக்பலம் பெற்ற சூரியனின் திசை துவங்கியதும் கணவர் ஜாதகியை உளவியல் முறையில் அணுகி பள்ளிக்காதலில் இருந்து தனது மனைவியை மீட்டெடுத்தார். நட்பை குறிக்கு 4 ஆம் பாவாதிபதி சனி தனது பாவத்திலேயே வக்கிரமாகியுள்ளது. இதனால் திருமணமான பள்ளி நண்பர் ஜாதகியின் எண்ணங்களை புறந்தள்ளினார். திக்பலம் பெற்ற சூரியன் பாதகாதிபதி சந்திரனுக்கு திரிகோணத்திலும் 12 ஆம் பாவ ராகு, சுக்கிரனுக்கு பாதகத்திலும் உச்ச புதனுக்கு விரையதிலும் நின்று புக்தி நடத்தியதால் அது சாத்தியமாயிற்று.  

இந்த ஜாதகி திருமணமான பின்னும் தனது பள்ளிதோழியை மறக்க இயலாமல் தோழியுடன் இணைந்து வாழ எண்ணி தனது கணவரை பிரிந்து சென்றார். தோழிக்கும் திருமணமான நிலையில் இப்பெண்ணின் கருத்தை நிராகரித்தார். ஜாதகியின் குடும்ப வாழ்வை சூரியன் காப்பாற்றினார். தற்போது ஜாதகி கணவருடன் இணைந்து வாழ்கிறார்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Wednesday, 13 November 2019

திரிகோண நுட்பங்கள்


ஒரு பாவகத்தின் துவக்கப்புள்ளி எந்த கிரக சாரத்தில் அமைகிறதோ அதே கிரக சாரம்தான் அந்த பாவகத்தின் 5 மற்றும் 9 ஆவது பாவக புள்ளியாகவும் அமையும். இப்படி அமைவதை ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்மம் என ஜோதிடத்தில் அழைக்கிறோம். 12 பாவங்களையும் மேற்கண்ட அடிப்படையில் நான்கு வகையில் பிரிக்கலாம். இந்த அடிப்படையில் லக்ன திரிகோணங்களை தர்ம திரிகோணங்கள் என்றும் 2 ஆம் பாவ திரிகோணங்கள் கர்ம திரிகோணங்கள் எனவும் மூன்றாம் பாவ திரிகோணங்கள் காம திரிகோணங்கள் எனவும் நான்காம் பாவ திரிகோணங்கள் மோட்ச திரிகோணங்கள் எனவும் அழைக்கிறோம். இவை ஒருவர் கடைப்பிடிக்கும் தர்மம், பொருளீட்டளுக்கான அவரது கர்மம், அவரது இல்லற ஈடுபாடு, இறுதியாக அவரது மோட்ச நிலை ஆகியவற்றை ஆராய இந்த திரிகோணங்கள் உதவுகின்றன.

முதலாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.



ஜாதகத்தில் 1, 5, 9 பாவங்கள் தர்ம திரிகோணங்கள் எனப்படும். ஒருவரது சிந்தனையும் செயல்களும் எதை நோக்கிய வகையில் இருக்கும் என்பதை இதனைக்கொண்டு அளவிடலாம். ராகு கேதுக்களுக்கு தனிப்பட்ட காரகங்கள் கிடையாது அவை நின்றபாவப்படியும் அவை இணைந்த கிரகங்களின் காரகங்களையும் கிரகித்தே அவை செயல்படும். தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது சூரியனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் நிற்கிறது. இந்த அமைப்பால் ஜாதகர் அரசின் உயர்பதவியை நோக்கிய சிந்தனையை ஏற்படுத்திகொண்து ஒரே குறிக்கோளாக செயல்பட்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் (IAS) வென்றிபெற்றார்.

இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


ஜாதகத்தில் பொருளாதாரத்தை குறிக்கும் கர்மத்திரிகோணங்கள் எனப்படுபவை 2 ம் அதன் திரிகோணங்களான 6, 1௦ ஆகும். ரிஷப லக்னத்திற்கு 2 ஆம் பாவாதிபதியும் முதல் கர்மத் திரிகோணாதிபதியுமான புதன் உச்ச சுக்கிரன், ஆட்சி குரு மற்றும் ராகுவுடன் இனைந்து நீச பங்கம் பெறுகிறார். லக்னாதிபதியே இரண்டாவது கர்ம திரிகோணமான துலாமின் அதிபதியும் ஆகி உச்சமாகி லாப ஸ்தானத்தில் குரு, புதன், ராகு தொடர்பு பெறுகிறார். மூன்றாவது கர்ம திரிகோணத்தில்தான் இதர 2 திரிகோணாதிபதிகள் தொடர்பு பெறுகிறார்கள். ஜாதகர் குரு, புதன் குறிப்பிடும் ஆசிரியராக பணிபுரிந்து பொருளீட்டுகிறார். இதற்கு லக்னாதிபதி சுக்கிரன் குருவின் வீட்டில் குருவின் பூரட்டாதியில் நின்று உச்சமானதும், ஜீவன காரகன் சனி விருட்சிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்பதும் ஒரு காரணம்.

மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகம். லக்னத்திற்கு 3, 7, 11 ஆகிய பாவங்கள் காமத்திரிகோணங்கள் எனப்படும். முதலாவது காமத்திரிகோணமான மீனத்தின் பாவக துவக்கப்ப்புள்ளி புதனின் ரேவதி நட்சத்திரத்திலும்  2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தின் துவக்கப்புள்ளி புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலும் மூன்றாவது காமத்திரிகோணமான விருட்சிகத்தின் துவக்கப்புள்ளி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் அமைந்துள்ளது. புதன் 2 ஆவது காமத்திரிகோணமான கடகத்தில் லக்னத்திற்கு இரண்டில் நிற்கும் குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. காதலை குறிக்கும் 5 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்னாதிபதியும் குடும்ப பாவாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் காதல் காரகன் புதனுடன் இணைந்து களத்திர ஸ்தானத்தில் நிற்கிறது.

ஜாதகி காதல் திருமணம் புரிந்துகொண்டவர்.

நான்காவதாக கீழே ஆணின் ஒரு ஜாதகம்.


கன்னி லக்னம். லக்னாதிபதி புதன் கால புருஷனுக்கு  8 ஆமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்து நிற்கிறது. 8 ஆமிடம் என்பது மறைபொருள் என்பதையும் அது கால புருஷனின் 2 ஆவது மோட்ச பாவம் என்பதையும் நாம் அறிவோம். இப்படி கால புருஷனின் இரண்டாவது மோட்ச பாவத்தில் அமைந்த லக்னாதிபதி புதனை லக்னத்தின் இரண்டாவது மோட்ச பாவாதிபதியும் புதனின் ராசிநாதனுமான செவ்வாய் மேஷத்தில் ஆட்சிபெற்று ௮ ஆவது பார்வையால் பார்க்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இது மோட்சம் நோக்கிய ஜாதகரின் உறுதியை தெரிவிக்கும். லக்னத்திற்கு மோட்ச பாவங்கள் எனப்படுபவை 4, 8, 12 ஆகியவை ஆகும். முதல் மோட்ச திரிகோணமான தனுசுவில் மறை பொருளை குறிப்பிடும் ராகுவுடன் மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடாதிபதி சூரியன் இணைந்துள்ளது. 2 ஆவது மோட்ச பாவமான 8 ஆமிடத்தில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது.  மூன்றாவது மோட்ச பாவமான 12 ஆமிடத்தை ஆன்மீக கிரகங்களில் ஒன்றான பரம சுபன் குரு பார்க்கிறார். இரண்டாவது மோட்ச பாவம் மேஷத்தையும் மூன்றாவது மோட்ச பாவமான சிம்மத்தையும் ஞான காரகன் கேது தனது மூன்றாவது பார்வையால் கட்டுப்படுத்துகிறார்.

ஜாதகர் உலகம் போற்றும் மிகச்சிறத்த ஆன்மீக குரு பகவான் ரமண மகரிஷி ஆவார்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501