Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Sunday, 28 February 2016

மணமுறிவுற்ற வாழ்க்கைத்துணை யாருக்கு வாய்க்கும்?

தற்கால திருமண சூழ்நிலைகள் கடினமாகி வரும் நிலையில் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. ஜோதிடர்களிடம் சென்று சரியான வரனை தேர்ந்தெடுத்துவிட்டோம் என யாரும் கூறிக்கொள்ள இயலாது. காரணம் இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தவன் இறைவன். அந்த விதியை ஜோதிடர்களால் மாற்றிவிட இயலாது. வாய்ப்புகளில் சிறப்பானதை ஜோதிடர்களால்  தேர்ந்தெடுத்துத்தர மட்டுமே இயலும். அவ்வளவே.

இன்று நாம் மணமுறிவுற்றவர்களை திருமணம் செய்துகொள்ளும் ஜாதக அமைப்பை பற்றி விவாதிப்போம். தங்களுடைய ஜாதகப்படி அமையக்கூடிய துணைவரின் அம்சங்களை தெரிந்துகொள்வது பொருத்தம் காண வசதியாக இருக்கும். திருமணத்தில் ஏற்படும் தாமதத்தையும் இதனால் தவிர்க்கலாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

கீழுள்ளது ஜாதகத்தை ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.




ஜனனம் 09.09.1985 – 2.21 AM – கரூர்

இவர் மணம் புரிந்தது திருமணம் முறிவுற்ற ஒரு பெண்ணை.

லக்னாதிபதி சூரியன் நீசமாகிகிவிட்டார். லக்னாதிபதி என்பவர் ஒரு ஜாதகரின் ஒட்டுமொத்த குணாதிசயங்களையும் நிர்ணயிப்பதில் முக்கிய பண்பு வகிப்பவர்  ஆவார். லக்னாதிபதி நீசமானால் ஜாதகருக்கு அடிப்படையில் வலுவான தெளிவான சிந்தனைபோக்கு போன்றவற்றில் குறைபாடுகள் ஏற்படும். குடும்ப காரகன் குரு நீசமானதால் குடும்பம் நீச வகையில் அல்லது கலங்கமுற்ற வகையில் அமையவேண்டும். ஒரு கிரகத்தின் செயல்பாட்டை அதன் வீட்டில் இருக்கும் கிரகம் பாதிக்கும். இவ்விதிப்படி சனியின் செயல்பாட்டை சனியின் வீட்டில் நீச நிலையில் அமைந்த குரு பாதிக்கிறது. இதனால் சனியும் நீச தோஷத்திற்கு உள்ளாகிறார். எனவே சனி எழாமதி எனும் வகையில் மனைவியின் அம்சம் நீசம் அல்லது கலங்கமுற்றவர் என்பதை அனுமானிக்கலாம்.

குருவால் இப்படி தோஷசப்பட்ட சனி லக்னத்தை பார்ப்பது ஜாதகரில் மேற்சொன்ன குணாதிசயத்தை உறுதிசெய்கிறது. மேலும் சுக ஸ்தானத்திலும் (விருச்சிகம்)  பாக்ய ஸ்தானத்திலும் (மேஷம்) பாவிகள் அமைந்து அதன் அதிபதி செவ்வாய் விரயாதிபதி சந்திரனுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமைந்தது ஜாதகருக்கு குடும்ப விஷயத்தில் குறைகள் உண்டு என்பதை உணர்த்துகிறது. ஜாதகர் எளிய குடும்பத்தை சார்ந்தவர் என்பதும் பொருளாதார சிரமங்களின் அடிப்படையில் மணமுறிவுற்ற வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் புரிந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. குருவும் சனியும் ஜாதகரின் பொருளாதார சூழலை குறிப்பிடுகின்றனர். 

ஜாதகருக்கு 09.06.2014 அன்று திருமணம் நடந்தது.


ராகு திசையில் குடும்ப பாவாதிபதி புதனின் புக்தியில் திருமணம். திருமண நாளின் கிரக நிலைகள் கீழே.



ஜாதகரின் கன்னி ராசிக்கு இரண்டாமிடமான குடும்ப ஸ்தானமான துலாத்தில் வக்கிர சனி. உச்சமாகி வக்கிரமான கிரகம் நீச பலனை தரவேண்டும் எனும் விதிப்படி  நீச வகையில் களங்கமான மனைவியை ஜாதகருக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது தெளிவாக தெரிகிறது. ராகு இரண்டாமிடத்தில் நின்றது குடும்பத்திற்கு வரும் மனைவியின் அம்சத்தை அதாவது களங்கம் என்ற தனது காரக வகையில் உணர்த்துகிறது. ராசி அதிபதி புதன் தனது ஆட்சி வீட்டில் வக்கிரமானதால் விவாகரத்தான மனைவியை அடையும் மனநிலையை ராசி அதிபதி மற்றும் புத்திகாரகன் என்ற வகையில் ஜாதகருக்கு ஏற்படுத்தி உள்ளார். புதன் குடும்ப காரகன் குருவுடன் இணைத்து திருமண காலத்தில் நின்றது குறிப்பாக மேற்குறிப்பிட்ட வகையில் குடும்பம் அமையும் என்பதை உணர்த்துகிறது.

அடுத்து கீழே காணப்படும் ஜாதகமும் விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்த ஒரு ஆணின் ஜாதகம்தான்.


ஜனனம் 02.06.1977

விருச்சிக ராசி & லக்னத்தில் அமைந்த நீச கிரகம் சந்திரன் களத்திர ஸ்தானமான 7 ஆமிடத்தையும் குடும்ப காரகன் குருவையும் பார்வை செய்கிறது. நீசன் சந்திரனின் வீட்டில் அமைந்த சுக ஸ்தானாதிபதி சனி ஜாதகர் சுகப்படும் விதம் நீசம் எனும் வகையில் களங்கமுற்ற பெண்ணிடம்தான் என்பதை தெரிவிக்கிறது. தாம்பத்ய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்த ராகு ஜாதகரின் படுக்கைக்கு வரும் துணைவரின் அம்சம் தனது காரக அடிப்படையில் களங்கமடைந்தவர் என்பதை தெரிவிக்கிறது. குடும்ப காரகன் குருவை நீச கிரகம் சந்திரன் பார்ப்பதால் குடும்பம் கலங்கமுற்றவகையில் அமையும் என்பதை  தெளிவாக குறிப்பிடுகிறது.

மூன்றாவது ஜாதகம் கீழே.


31.08.1968 - மைசூர் 

கடக லக்னாதிபதி சந்திரன் நீசம். லக்னாதிபதி மனோகாரகன் சந்திரன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. லக்னத்தில் 5 ஆமதிபதியும் ஒரு மனிதனின் மன   ஓட்டங்களை குறிக்கும் ஐந்தாமதிபதியான நீச கிரகம் செவ்வாய் அமைந்துள்ளது போன்றவை ஜாதகரின் எண்ணங்களில் குறை அல்லது கலங்கமடைந்தவரை வாழ்க்கைத்துணைவராக  ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையை ஜாதகருக்கு தந்துள்ளது. மேலும் மனைவியை குறிக்கும் ஏழாமதிபதி சனியும் நீசமாகி வக்கிரமடைந்து நீசன் செவ்வாயின் வீட்டில் அமைந்துள்ளது ஜாதகரின் வாழ்க்கை துணை மணமுறிவுற்றவர் அல்லது கலங்கமடைந்தவர் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.

செவ்வாயும் சனியும் நீச நிலையில் பரிவர்த்தனை பெற்றதால் இங்கு ஓரளவு ஜாதகருக்கு பலனையும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சமடைந்து வக்கிரமடையும் கிரகம் எப்படி நீச பலனை கொடுக்குமோ அப்படி அதேபோல் நீசமடைந்து வக்கிரமடையும் கிரகமும் உச்சத்திற்கு ஈடான நல்ல பலனையும் கொடுக்கும். இந்த ஜாதகம் இந்த விதிக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதன்படி சனி நீசமடைந்து வக்ரமானதால் சனியின் காரகம் அடிப்படையில் ஜீவனம் வலுவடைந்தது. செவ்வாயின் வீட்டில் உள்ள சனி வலுவடைந்ததால் பரிவர்தனையடைந்த செவ்வாயும் வலுவடைந்தது. சந்திரனும் சனியும் வர்கோத்தமம் பெற்றதாலும் வலுவடைந்துள்ளன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 

செவ்வாய் வேகம், கோபம், அவரசம் போன்றவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சந்திரன் விரைவுத்தன்மைக்கு உரிய கிரகமாகும். இவற்றின் அடிப்படையில் ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பரிமளித்தவர்.

நீங்கள் நினைப்பது சரிதான். ஜாதகர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் திரு.ஜவகல் ஸ்ரீநாத் ஆவார். இவர் தனது புகழின் உச்சத்தில் இருந்தபோது திருமணமாகி மணமுறிவுற்றவரை விரும்பி மணம் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகரின் குடும்ப ஸ்தானமும் குடும்ப காரகன் குருவும் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டதாலும் ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரனும் களத்திர ஸ்தானாதிபதி சனியும் லக்னாதிபதி சந்திரன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் நீச நிலை பெற்றதாலும் ஜாதகர் விரும்பி அமைத்துக்கொண்ட அந்த முதல் திருமணம் நிலைக்கவில்லை. மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜாதகர் இரண்டாவதாக மறுமணம் செய்துகொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

மீண்டுமொரு பதிவில் ஆராய்வோம்,


வாழ்த்துக்களுடன்

அன்பன்,

பழனியப்பன்.

Friday, 6 March 2015

சூரியனின் திக்பலம்

ஜாதகத்தில் கிரக மற்றும் பாவ வலுவை அளவிட 51 முறைகள் உள்ளதாக பண்டைய ஜோதிட  நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் திக்பலம்  பற்றி இங்கு காண்போம்.

எளிய முறையில் கூறுவதென்றால் சிங்கத்துக்கு வலிமை கரையில். முதலைக்கு வலிமை நீரில். இதே போன்று ஒவ்வொரு கிரகமும்  ஜாதகக் கட்டத்தில் கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய பாவங்களில் பெறும் சிறப்பான  அல்லது சௌகரியமான நிலையையே திக்பலம் என ஜோதிடத்தில் கூறுகிறோம்.

ஒவ்வொரு கிரகமும் எவ்விடத்தில் திக்பலம் பெறுகின்றன என்பது பின்வருமாறு.

கிரகம்                                                 திக்பலம் பெறும் கேந்திர ஸ்தானம்.
புதன் & குரு                          -           1 ஆமிடம்  (லக்ன கேந்திரம்)

சந்திரன் &  சுக்கிரன்          -           4 ஆமிடம்  (சதுர்த்த கேந்திரம்)

சனி                                          -           7 ஆமிடம் (சப்தம கேந்திரம்)

சூரியன் & செவ்வாய்        -           10 ஆமிடம் (தசம கேந்திரம்)

ராகு-கேதுக்கள் இரண்டும் தாங்கள் அமையப்பெறும் பாவாதியின் நிலையை ஓட்டிச் செயல்படும் நிழல்கிரகங்கள் என்பதால் இவற்றிற்கு திக்பலம் கிடையாது.

இப்பதிவில் நாம் தசம கேந்திர திக்பலனை ஆராய்வோம்.


அரசனும் சேனாதிபதியும் அதிகத் துடிப்போது  செயல்படும் இடம் போர்க்களமாகும்.  வெல்லவேண்டும்  என்ற துடிப்பு இருவருக்கும் போர்க்களத்தில் அதீதமாக இருக்க வேண்டும். அந்த அடைப்படையில்தான் அரச கிரகம் எனப்படும் சூரியனுக்கும் சேனாதிபதி எனப்படும் செவ்வாய்க்கும் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தை திக்பலம் கொண்டதாக ஜோதிடத்தில் வரையறுத்தார்கள். 


ஜனன கால சூரிய திசை இருப்பு: 4 வருஷம் 4 மாதம் 14 நாட்கள்.

ஜனன நேரத்தை இங்கு குறிப்பிடவில்லை . காரணம் அது சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான். எனினும் ஆய்வு ஜோதிடர்களுக்காக தசா இருப்பை குறிப்பிட்டுள்ளேன். அதைக்கொண்டு ஜனன நேரத்தை அறிந்து கொள்ளலாம். ஜாதகர் பிறந்தது ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி.   

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய ஆணின் ஜாதகத்தில் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தில் சூரியன் தனக்கே உரிய திக்பலத்துடன் சௌகரியமாக இருக்கிறார். சூரியன் அமைந்த தசம கேந்திரம் சூரியனின் ஆத்ம  நன்பணான புதனின் வீடாகும். அத்துடன் சூரியன் தன் நண்பன் புதனோடு இணைந்து அமைந்தது மிகச் சிறப்பு. போர்க்களத்தில் ஒரு அரசன் தன் நம்பிக்கைக்குரிய நண்பனோடு சேர்ந்து போரை சந்திப்பது போன்றது இது. அரசன் இதுபோன்ற சூழ்நிலையில் பதட்டமின்றி மிக வீரமுடனும் சாதுரியத்துடனும் போர்புரிய இது துணை புரியும். புதன் சாதுரியமான செயல்பாட்டிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியன் அமைந்த மிதுன ராசி பஞ்ச பூத அமைப்பில் வாயு ராசி என்பதால் அரசன் வாயுவின் தன்மைக்கேற்றபடி சில சமயம் தீவிரமாகவும் சில சமயம் அலட்டலில்லாமலும் போர்புரிவான். இந்த ஜாதகரும் களத்தில் எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமின்றி ஆனால் தீர்க்கமாகச் செயல்படுபவரே. வெற்றியை  மகிழ்வாய் எற்பவர். அதே சமயம் தோல்வி பெறும் நிலையிலும் கூட அசிங்கமாக அல்லாமல் கௌரவமாக ஏற்றுக்கொள்பவர். போரில் வெற்றி தோல்வி என்பது எதிர்பார்க்கக்கூடியதே. அரசன் (சூரியன்) சிறப்பாகப் செயல்பட்டாலும் ஜாதகரின் கன்னி லக்னத்திற்கு சூரியன் விரைய ஆதிபத்தியம் பெறுவதால் சில சமயம் தோல்வி தவிர்க்க இயலாததாகிவிடும். சில சமயம் மட்டுமே.  பல சமயம் தவிர்க்க இயலாமல் போனால் அவன் அரசனாக இருக்கவே தகுதியற்றவனாகி விடுவான் என்பதை கூறித்தான்  அறியவேண்டுமென்பதில்லை.

மேற்கண்ட ஜாதகர் அரசனல்ல. அரசு சார்பில் தலைமைப் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டவர். போர்க்களம் என்று குறிப்பிட்டது உண்மையில் போர்க்களமல்ல ஆடுகளம். அதுவும் கிரிக்கெட் ஆடுகளம். அரசனாகப் பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி.

மேற்கு இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வென்ற தோனியையும் சக வீரர்களையும் ஊக்குவிப்போம்.

போரின் வெற்றியில்  அப்போரில் பங்குபெறும் மன்னர்களின் ஜாதகம்  முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் போரில் பங்குபெறும் தேசங்களது  ஜாதக அமைப்பு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.மேலும் சம்பவம் நிகழும் நாளின் கோட்சார நிலை மற்றும்  பங்குபெறும் இரு அணி வீரர்களின் ஜாதகமும் கவனமாக ஆராயப்பட வேண்டும். இவை அத்தனையையும் ஆராய்ந்து ஆட்டத்தின் முடிவை துல்லியமாக கூறிவிட  இயலும்.

இப்போது நாம் மலேசிய ஆக்டோபசிடமோ அல்லது நியூசிலாந்து கிளியிடமோ ஆஸ்திரேலியாவில் நடக்கும் 11 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவைத்தெரிந்துகொள்வோம்.  

மற்ற கிரகங்களின் திக்பலத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன். 

Saturday, 16 November 2013

சாதனைச் சிகரம் சச்சின் டெண்டுல்கர்




இந்தியாவில் அதிகம் அலசப்பட்ட ஜாதகங்களுள் ஒன்று நமது சச்சினின் ஜாதகம். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேசத்தில் பிரச்சனைகள் பல இருக்க, பெரும்பாலான ஜோதிடர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகத்தை நாமும் அலசுவது அரைத்த மாவையே அரைப்பது போன்றிருக்கும்  என்ற எனது எண்ணத்தையும் மீறி அவரது ஜாதகத்தை இங்கு நான் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதோடு மற்றுமின்றி எனது பள்ளி நாட்களிலிருந்து என்னை வசீகரித்த கிரிக்கெட் வீரர் சச்சின் என்பதும் அவரது ஜாதகத்தை எனது நோக்கில் ஆராய வேண்டும் என்பதும் ஒரு காரணம். அவரது கடைசி டெஸ்ட்டின் போது இப்பதிவை எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதும் மற்றொரு முக்கிய காரணம்.


இந்தியர்களால் மட்டுமல்ல எதிரணி வீரர்களாலும் கூட மிகவும் நேசிக்கப்பட்டவர் சாதனைச் சிகரம் நமது சச்சின் டெண்டுல்கர் என்றால் அது மிகையல்ல. பின்வரும் அவரது ஜாதகத்தைக் கவனியுங்கள்.

சிம்ம லக்னம் என்பது சாதனையாளர்களுக்கான லக்னம் சென்றால் அது மிகையல்ல. பொதுவாகவே ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் தான் சாரத்த துறையில் சாதிக்க வேண்டும் எனில் அவர் சிம்ம லக்னத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான பொது விதி.

சாதனையாளர்களுக்கே உரித்த சிம்ம லக்னத்தில்  பிறந்த சச்சினின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சம். லக்னாதிபதியைப் பாக்யாதிபதி பார்ப்பதே சிறப்பு என்ற நிலையில், சூரியனுக்கு வீடு கொடுத்த பாக்யாதிபதி செவ்வாயும் உட்சமடைந்து தனது வீட்தில் உட்சமடைந்த சூரியனைப் பார்ப்பது கூடுதல் சிறப்பு. கூடவே இரு கிரகங்களும் நட்பு என்பது அபரிமிதமான ராஜயோகத்தை ஏற்படுத்தும் அமைப்பு.  ராஜ்யத்தைக் குறிக்கும் சூரியனுடன் ராஜ்ய ஸ்தானாதிபதி (10 ஆம் அதிபதி) சுக்கிரன் கூடியிருப்பது மற்றுமொரு சிறப்பு.




விளையாட்டுத்துறையில் ஒருவர் ஜொலிக்க வேண்டுமெனில் அதற்கு

1.காரகத்துவம் பெற்ற புதன் சிறப்பாக இருக்க வேண்டும்.
2.துடிப்பான செயல் வேகத்திற்கு சந்திரன் சிறப்பாக இருக்க வேண்டும்.
3.போர்க்குணத்திற்கும் விடா முயற்சிக்கும் உரிய  செவ்வாய் சிறப்புற்றிருக்க வேண்டும்.

இந்த மூன்று விதிகளும் ஒருங்கே அமைந்த ஜாதகம் சச்சினுடையது.

உட்சன் செவ்வாயுடன் கூடியதால் நீச குரு தனது நீச நிலையிலிருந்து விடுபட்டு  ராஜ யோகத்தைத் தரவேண்டியவராகிறார்.

ஒரு கிரகம் நீச நிலையிலிருந்து விடுபடும்போது அக்கிரகத்திற்குரிய பாவங்களும் வலுவடையும். அதனால் அந்த அக்கிரகத்தினது பாவத்திலமைந்த கிரகங்களும் வலுவடையும் என்பது விதி.

அந்த வகையில் சந்திரன் வலுவடைந்தார். மேலும் புதனும் தனது நீச நிலையிலிருந்து விடுபட்டுள்ளார்.

புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டதால் ஜாதகர் தான் சார்ந்த துறையில் ஜொலிக்க உதவி புரிந்தார். தன, குடும்ப காரகன் குருவும் தன குடும்ப பாவதிபதி புதனும் ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் அபரிமிதமான செல்வச் செழிப்பையும் கொடுத்தார்கள். ஜாதகரின் செல்வச் செழிப்பிற்கு, குரு ராஜயோகத்தில் அமைந்து தனஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகப் பார்ப்பதும் குருவின் வீட்டில்  தன ஸ்தானாதிபதி அமர்ந்ததும் முக்கிய காரணம். ரேவதி நட்ச்திரத்தில் தனது சுய சாரத்தில் அமைந்த புதன் தனது பாவத்தையே பார்த்து அதனை சிறப்புச் செய்கிறார்.

புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டாலும் அது குருவினது நீச பங்கத்தைப் போல (உச்சனுடன் கூடி நீச பங்கப்பட்டது போன்ற) மிக வலுவான நிலையில் இல்லை. மேலும் அவர் அஷடமத்தில் மறைந்துவிட்டார். புதன் ஜாதகருக்கு நற்பலன்களை வழங்கும்படி  இக்கட்டில் குருவால் தள்ளப்பட்டார். அதனால் தனது காரகத்துவங்களில் ஒன்றான கல்வியில் ஜாதகரை கைவிட்டு விட்டார்.  (சச்சின் பள்ளி இறுதியில் தோல்வியுற்று படிப்பை நிறுத்தினார். அதற்கு காலச் சூழ்நிலையும் ஒரு காரணம்). புதன் வாக்குகாரகனும் கூட என்பதால் சச்சின் வாக்கு வன்மை இன்றி சற்றே பெண்மைத்தனமாகப் பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்விடத்தில் ஒரு ஜோதிட நுட்பத்தினை ஜோதிட ஆர்வலர்கள் கவனிக்க வேண்டும். ஒரு கிரகம் தோஷப்பட்டு ஜாதகருக்கு நன்மை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டால் அக்கிரகமானது அதன் காரகங்களில் ஒன்றைக் கை விட்டு அதன் மற்ற காரகங்களில் நன்மை செய்யும்.
பாக்கிய ஸ்தானமும் வலுவடைந்து பாக்கியாதிபதியும் வலுவடைந்ததால் ஜாதகர் தான் விரும்பிய காதல் மனைவியை அடைந்தார். 5 ஆம் இடத்தில் ராகுவுடன் நல்ல நிலையில் அமைந்த சந்திரன் ஜாதகருக்கு காதல் உணர்வுகளை தூண்டினார். லக்னாதிபதியுடன் கூடிய காதல்காரகன் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த 7 ஆமதிபதி சனியும் ஜாதகரின் மனதில் இருந்த காதலை வெளிக்கொணர்ந்தார்கள் எனலாம். 

திருமணத்தோடு தொடர்புடைய 12, 2 மற்றும் 7 ஆவது பாவங்களுடன் சனி செவ்வாய் சம்பந்தம் பெற்றால் தனது குலத்தை (ஜாதியை) விட்டு வேறு குலத்தில் காதல் திருமணம் புரிவார் என்பது ஒரு ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் சனி களத்திர பாவாதிபதியாகி 12 ம் பாவத்தை பார்வை செய்கிறார். அதே 12 ஆம் பாவத்தை  செவ்வாயும் பார்த்ததால் காதல் மணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் குடும்ப காரகன் குருவும் இணைந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியுள்ளது. 

குடும்ப பாவாதிபதி 8 ல் மறைந்தால் குடும்பம் அமையும் போது சில வருந்தமான, அவமானகரமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு ஜோதிட விதி


இந்த ஜாதகத்தில் புதன் 8ல் குரு வீட்டில் மறைந்துள்ளார். குருவினது வீடு என்பதாலும் குரு வலுவடைந்தார் என்பதாலும் பெரிதாக அவமானகரமான சூழ்நிலை திருமணத்தில் ஏற்படவில்லை எனினும் சச்சினின் மனைவி வயதில் மூத்தவர் என்பது இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. சனி 10 ஆம் பார்வையாக தனது களத்திர பாவத்தை பார்த்ததால் ஜாதகரைவிட அவரது மனைவி  வயதில் மூத்தவர் என்பது இதற்கு முக்கியமான காரணமாகும்.

சச்சினின் சாதனைகளுக்கு சூரியன், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், கர்ம ஸ்தானத்தில் நட்புவீட்டில் அமைந்த சனி, ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்த ராகு – கேதுக்களுமாகும். மேலும் வீர, தீர , வெற்றி ஜெயங்களைக்குறிக்கும் 3 ஆம் இடத்தின் அதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் பாக்கியஸ்தானத்தில் கூடியது ஜாதகரின் பல சாதனைகளுக்கும்  வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது.

ராகு – கேதுக்கள் இரண்டுமே நல்ல நிலையில் அமைந்துள்ளன. இவை தாங்கள்  அமர்ந்த பாவங்களின் அதிபதிகளை அடியொற்றியே தங்கள் பலன்களை வழங்குவர். 

ராகு மற்றும் கேது இரண்டுமே 5 ல் சுபர்களின் வீட்டில் இருப்பது குறையல்ல. அவர்கள் அமைந்த வீட்டில் சுபர்கள் கெட்டல் மட்டுமே பாவத்தைக் கெடுப்பார்கள். அதுவே பாவிகள் வீடானால் அவ்வீட்டின் பலன் கெட்டுவிடும். (இது ஒரு முக்கியமான ஜோதிட விதி. இவ்விதியை சரியாகப் புரிந்துகொள்ளாமல் சில அரைகுறை ஜோதிடர்கள் திருமணப் பொறுத்த விஷயத்தில் விளையாடுவது வேதனைக்குரியது.)

சச்சினின் ஜாதகத்தில் வலுவடைந்த கிரகங்களால் பெரும்பாலும் அணைத்து பாவங்களுமே வலுவடைந்திருப்பத்தைக் காணலாம்.
இப்படி வலுவடைந்த கிரகங்களும் பாவங்களும் சச்சினின் சாதனைகளுக்கு, செல்வச் செழிப்பிற்கு,குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவற்றிற்கு காரணமாகும்.

அதோடு லக்னம் கேதுவின் மக நட்சத்திரத்தில் அமைந்ததால் சச்சின் உலகின் ஒப்பற்ற சந்யாசி ஸ்ரீசத்யசாய்பாபாவின் சீடராக உள்ளார்.

ஜீவன காரகன் சனி நட்பு வீட்டில் அமைந்தால் ஜாதகர் தான் செய்யும் கர்மாவை (வேலையை) ரசித்துச் செய்வார் என்பது ஒரு ஜோதிட விதி. சச்சின் கிரிக்கெட்டை தனது உயிர் மூச்சாக நினைப்பதால்தான் அதை அவரால் ரசித்து அனுபவித்து விளையாட முடிகிறது. இதனால் அவருக்கு பல சாதனைகள் தேடி வந்தன.

சச்சின் போன்ற சாதனையாளர்கள் படைத்தவனால் ஆசீர்வதிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்.

சச்சின் ஒரு சகாப்தம்.

நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ.

இதனை நான் அவர்மீதுள்ள அபிமானத்தால் குறிப்பிடவில்லை.

நாம் அலசிய அவரது ஜாதகத்திலிருந்து இவ்வாசகங்கள் மிகையல்ல என்பது புரியும்.

அவரது சாதனைகளை விடுங்கள்.

அவர் ஒரு நல்ல மனிதர்.

முறையாக வருமான வரி செலுத்துபவர்.

மனிதாபிமானி என்பதால் அவர் பல்லாண்டு வாழ உலகில் அனைவராலும் வேண்டப்படுகிறது.

சச்சின் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமையாக நினைக்கும் அவரது பலகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன் என்று இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


இதற்கு மேலும் அவரது தொழில், உறவுகள், ஆரோக்கியம், ஆயுள் போன்றவற்றை ஆராய இயலும் என்றாலும் அது விரும்பத்தக்கது அல்ல என்பதால் இத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க சச்சின்!

மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்.
அன்பன்.
பழனியப்பன்.