Showing posts with label வீடு. Show all posts
Showing posts with label வீடு. Show all posts

Tuesday, 31 August 2021

கட்டம் பார்த்து திட்டம் போடு!


வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எப்போதுமே தெளிவான திட்டமிடுதலோடு எடுப்பது நலம். இல்லையேல் அதன் விளைவுகள் எதிர்பார்த்தபடி அமையாமல் போக வாய்ப்புண்டு. விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுப்பவர்களே வாழ்வில் விரைந்து  முன்னேறுகிறார்கள். முடிவெடுத்து செயல்பட அதிக காலம் எடுத்துக்கொள்பவர்களும் வாழ்வில் முன்னேறுகிறார்கள் என்றாலும் அவர்கள் முந்தைய வகையினரைவிட மெதுவாகவே முன்னேறுகிறார்கள். “எண்ணித் துணிக கருமம்” என்பார் வள்ளுவர். குழப்பமான சூழலில் எடுக்கும் முடிவு சாதகமாக இருப்பதில்லை. குறிப்பிட்ட விஷயத்தில் தெளிவு பெற்றவர்கள் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த விஷயத்தில் தைரியமாக முடிவெடுகிறார்கள். தாங்கள் எடுக்கும் முடிவு சாதகமற்றுப் போகும்போது தங்களது விஷய ஞானத்தால் அம்முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்  அல்லது  பாதகத்தின் விகிதத்தை குறைத்துக் கொள்கிறார்கள். மற்றொரு வகையினர் உண்டு. முடிவெடுக்க வேண்டிய விஷயத்தின் மீது தெளிந்த அறிவு இல்லாமல், உரிய விஷய ஞானம் கொண்டவர்களையும் ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டு அவ்விஷயம் சாதகமற்றுப் போகும்போது மற்றவர்களை துணைக்கு அழைப்பார்கள். இவர்களை சொதப்பல் திலகங்கள் எனலாம். இன்றைய பதிவில் ஜோதிடத்தின் துணைகொண்டு முடிவெடுப்பதில் கோட்சார கிரகங்கள் எப்படி பயன்படுகின்றன என்பதை ஆராய்வோம்.


மேற்கண்ட ஜாதகர் 1986 ல் பிறந்த ஒரு ஆண். பிறப்பு ஜாதகம் இடது பக்கமும், கோட்சார ஜாதகம் வலது பக்கமும் உள்ளது. கோட்சார சந்திரன் ரிஷபத்தில் உச்ச கதியில் சுய சாரத்தில் செல்கிறார். பொதுவாகவே சந்திரன் ஸ்திர ராசியின் ரிஷபத்தில் உச்சம் பெற்ற நிலையில் ஜோதிடம் பார்க்க வருபவர்கள் நிதானமானவர்கள். தெளிவான முடிவெடுப்பவர்கள். தாங்களால் முடிவெடுக்க இயலாவிட்டால் தகுந்த ஆலோசனையை நாடிப்பெற தயங்காதவர்கள். ஜனன கால சனியும், புதனும் கோட்சார சந்திரனை பார்க்கிறார்கள். எனவே ஜாதகர்  புதன், சனி ஆகிய இரு கிரகங்களின் காரகங்கள், பாவங்கள் தொடர்பான விஷயத்திற்காகத்தான் ஜாதகம் பார்க்க வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜோதிடத்தில் இம்முறை “சந்திர நாடி “ என அழைக்கப்படுகிறது. ஜனன ஜாதகத்தில் விருட்சிக சனி மகர செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். எனவே ஜாதகர் கேட்க வந்துள்ள விஷயத்தில் செவ்வாயின் காரகத்துவமும் கலந்திருக்கும்.

கோட்சார சந்திரனை ஜனன கால சனி பார்ப்பதால் ஜாதகர் சனியின் காரகமான வேலை தொடர்பான விஷயதிற்கு தெளிவு பெற வந்துள்ளார் என அனுமானிக்கலாம். ஜனன கால சனி மீது கோட்சார கேது நிற்பதால் ஜாதகருக்கு வேலையில் தடையா? அல்லது வேலை இல்லையா? என்பதை முதலில் அனுமானிக்க வேண்டும். ஜனன காலத்தில் நீசமான 6 ஆமதிபதி சூரியன், கோட்சாரத்தில் ஆட்சி பெற்று ஜனன கால மற்றும் கோட்சார வக்கிர குருவின் நேர் பார்வையில் உள்ளார். தன பாவாதிபதியான செவ்வாயும் 6 ல் சூரியனோடு இணைந்து குரு பார்வை பெறுவதால் ஜாதகர் வேலையில் இருக்கிறார் என்பதை அனுமானிக்கலாம். அதே சமயம் 6 ஆமதிபதி சூரியன் அடுத்து மாற்றத்தின் காரகரான ஜனன கால சந்திரனையும், ஜனன கால கேதுவையும் நோக்கி சென்றுகொண்டிருப்பதாலும், ஜனன கால ஜீவன காரகன் சனி மீது கோட்சார கேது நிற்பதாலும் வேலையில் சிரமங்கள் உண்டு என அனுமானிக்கலாம். எனவே உங்களுக்கு வேலையில் சிரமங்கள் தற்போது உண்டு. அதை பொறுத்துக்கொண்டு பணி செய்யவும். வேலை சிரமங்களை பொறுத்துக் கொள்ளாவிட்டால் வேலை இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது என அறிவுரை வழங்கப்பட்டது. “மிக்க நன்றி சார். வேலைப்பழு விஷயமாகத்தான் உங்களிடம் ஆலோசனை பெற வந்தேன்” என்று ஜாதகர் கூறினார்.

கோட்சார சந்திரனோடு தொடர்புகொள்ளும் மற்றொரு ஜனன கால கிரகம் புதன் ஆவார். புதன் லக்னத்திற்கு 4 ஆம் அதிபதியாகிறார். மேலும் ஜனன கால சனியோடு பரிவர்தனையாகும் உச்ச செவ்வாயும் விருட்சிகத்திற்கு வந்து கோட்சார சந்திரனை பார்க்கிறார். இதனால் ஜாதகர் 4 ஆமிட புதன் குறிக்கும் நிலம், செவ்வாயின் காரகமான வீடு தொடர்பான சிந்தனையில் உள்ளது தெரிகிறது. கோட்சாரத்தில் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து 4 ஆம் பார்வையாக பரிவர்த்தனை செவ்வாயை பார்ப்பதாலும், 4 ஆமதிபதி புதன் கோட்சாரத்தில் உச்சமானதும் இதை உறுதி செய்கிறது. “இடம், வீடு வாங்கும் சிந்தனையும் உங்களுக்கு உள்ளது. தற்போது ஜனன கால பரிவர்த்தனை செவ்வாய் மற்றும் புதனின் மீது கோட்சார கேது நிற்பதால் தற்போது அதற்குரிய காலமல்ல. எனவே இது தொடர்பான விஷயத்தை ஒத்திப்போடவும் என்று கூறினேன்”. ஜாதகர் தற்போது "கடன் பெற்று இடம் வாங்கிப்போட்டால் எதிர்காலத்தில் அது உதவுமா? என்று கேள்வி எனக்கிருக்கிறது" என்றார். கோட்சார சந்திரன் அடுத்து 4 ஆம் பாவத்திற்கு சென்று ஜனன கால குருவின் 5 ஆம் பார்வையை பெறவுள்ளது. அதே சமயம் ஜனன கால புதன், பரிவர்த்தனை செவ்வாயை விட்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் ராகு-கேதுக்கள் விலகுகின்றன. அதன் பிறகு அது பற்றி முடிவு செய்யலாம். தற்போது வேண்டாம் என்று கூறினேன்.

மூன்றாவது கேள்வியாக ஜாதகர் தனக்கு 2 ஆவது குழந்தை வாய்ப்பைப் பற்றி கேட்டார். இரண்டாவது குழந்தையை குறிக்கும் பாவம் 5 க்கு 3 ஆன 7 ஆம் பாவமாகும். கோட்சார குரு லக்னத்திற்கு வந்து 5, 7 ஆகிய பாவங்களை பார்க்கும்போது அதற்குரிய காலம் உள்ளது. திசா புக்திகளும் கோட்சாரத்துடன் அதற்கு பொருந்தி வர வேண்டும். ஜாதகருக்கு அந்த அமைப்பு அடுத்த 2022 பிற்பகுதியில் வருகிறது” என்று கூறப்பட்டது. கோட்சார சந்திரனை பார்த்த 7 ஆமதிபதி புதனாலும், கும்பத்தில் குரு வக்கிரமாகி பின்னோக்கிய நிலையில் மகரத்தை நோக்கி வருகிறார். இப்படி அரைப்பங்கு  மகர தொடர்பு பெற்ற வக்கிர குருவின் 5 ஆம் பார்வை  கோட்சார சந்திரனுக்கு கிடைக்கிறது. எனவே ஜாதகர் குழந்தை பற்றிய விஷயத்தை இறுதியாக கேட்டார்.

ஜாதகரின் நிலையை ஜனன & கோட்சார கிரகங்கள் ஒரு ஊடுகதிர் படம் போல (Scan report) தெளிவாக உணர்த்துகின்றன. இனி முடிவெடுப்பதில் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். அந்த தெளிவை தருவது ஜோதிடம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்!

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Sunday, 6 June 2021

வீடா? நிலமா?

 


வீடு கட்டி அல்லது வாங்கி குடியேரிய பிறகு அதனை அனுபவிப்பதில் உள்ள  வீடு கொடுப்பினைகள் பற்றி பதிவு எழுதிய போது, பல அன்பர்கள் வீடு பற்றி மேலும் பல கோணங்களில் எழுதத்தூண்டியதன் விளைவே இப்பதிவு. வீடு பற்றி ஏற்கனவே சில பதிவுகள் நான் எழுதியிருந்தாலும் இது மற்றொரு கோணம். கட்டிய வீடு வாங்க வாய்ப்புண்டா? அல்லது நிலம் வாங்கி வீடு கட்டலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஜாதகத்தில் இதனை தெளிவாக அறிந்துகொள்ளலாம் என்றாலும் பெரும் தனம் செலவு செய்து சொத்து வாங்குபவர்கள்  தங்களது ஜாதகத்தில் அதற்கான சாதக பாதகங்களை தகுந்த ஒரு ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுப்பது எதிர்காலத்தில் வரும் சிரமங்களை தவிர்க்க பேருதவியாக இருக்கும். குறிப்பாக லக்னத்திற்கு 2 ஆம் பாவம், வீடு பாவம் எனும் 4 ஆம் பாவத்தின் லாப பாவம் என்ற அமைப்பின்படி ஒருவர் சொத்து வாங்க அவருக்கு உள்ள நிதி நிலைமையை தெளிவாக சுட்டிக்காட்டும். கட்டிய வீடாக வாங்குவதற்கு ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுவாக அமைந்திருக்க வேண்டும். கீழே ஒரு ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1960 ல் பிறந்தவர். ஜாதகருக்கு தற்போது புதன் திசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. புதன் 4 ஆம் பாவத்தோடு தொடர்புகொண்டுள்ளதால் வீடு வாங்க எண்ணம். புதன்  ராகுவின் சுவாதி-4 ல் நிற்கிறார். ராகு 4 ஆம் பாவத்திற்கு  லாபத்தில் லக்னத்திற்கு 2 ல் தன ஸ்தானத்தில் குரு பார்வை பெற்று நிற்கிறார்.  இது வீடு வாங்க அல்லது கட்ட ஜாதகரிடம் போதுமான தனம் உள்ளது என்பதை குறிப்பிடுகிறது. தற்போது வீடு வாங்கவா? அல்லது கட்டவா? என்பதே இவரது கேள்வியாக இருந்தது. புக்தி நாதன் சுக்கிரன் திசா நாதன் புதனைவிட அதிக பாகை  பெற்று சொந்த வீட்டில் திக்பலம் பெற்று மாளவ்ய யோகத்துடன் மதன கோபால யோகமும் பெற்று வலுவாக அமைந்திருப்பதால் கட்டிய  வீடே அமையும் என்று கூறப்பட்டது. அதன்படியே ஜாதகர் கட்டிய வீட்டையே வாங்கினார். புக்தி நாதன் சுக்கிரன் குருவின் விசாகம்-2 ல் சூரியனுக்கு நெருங்கிய பாகையில் நின்றதால் ஜாதகர் தனது  மகனுக்காக வீடு வாங்கினார்.

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


இந்த ஜாதகர் கடந்த 202௦ துவக்கத்தில் வீடு வாங்கினார். புதன் திசையில் கேது புக்தியில் வீடு வாங்கினார். ஜாதகத்தில் 1,4 ஆமதிபதி குருவின் சாரம் பெற்று விசாகம்-3 ல் திசாநாதன் புதன் நிற்கிறார். உச்சமடைந்த வீடு காரகன் செவ்வாயின் சித்திரை-1 ல் புக்திநாதன் கேது நிற்கிறார். வீடு காரகன் செவ்வாய், வீடு பாவமான 4 க்கு லாபத்தில் லக்னத்திற்கு 2 ல் உச்ச வலுவுடன் சுய சாரம் பெற்று (அவிட்டம்-1) நிற்கிறார். செவ்வாயின் நிலை வீடு வாங்குவதற்கான தனம் ஜாதகரிடம் உள்ளதையும்.திசா-புக்தி நாதர்கள் வீடு அமையும் காலத்தையும் குறிப்பிடுகிறார்கள். 4 ல் ஒரு பாவி ராகு அமைந்து திசா  நாதன் புதன் 4 க்கு 8 துலாத்தில் அமைந்ததால் 4 ஆம் பாவம் ஒருவகையில் பாதிப்பை அடைய வேண்டும். 4 ல் அமைந்த நிழல் கிரகம் ராகு பொருட்காரகத்துவத்தை பாதிக்கமாட்டார். உயிர் காரகத்துவத்தைத்தான்  பாதிப்பார். இதன் அடிப்படையில் ஜாதகர் வீடு வாங்கியதும் ஜாதகரின் தாயார் உடல்நலம் குன்றியுள்ளார். (4 ஆம் பாவம் = வீடு = பொருட்காரகத்துவம் & 4 ஆம் பாவம் = தாயார் = உயிர் காரகத்துவம்)  ஒரு பாவத்தின் பொருட்காரகத்துவம் வலுவடைந்தால் அந்த பாவத்தின் உயிர் காரகத்துவம் பாதிக்கப்படும் என்பதே இதன் அடிப்படை.  

எனது வீடு பாக்கியம் எப்படி உள்ளது? ஒரு வாய்ப்பு வந்துள்ளது என அணுகிய ஒரு அன்பருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.



வீடா அல்லது இடமா?

உதயம் கால புருஷனுக்கு வீடு பாவமாகிய 4 ஆமிடம் கடகமாகி அதில் வீட்டை குறிக்கும் காரக கிரகங்களான செவ்வாயும் சுக்கிரனும் அமைந்துள்ளனர். உதயாதிபதிகளான இரு சந்திரன்களும் 1௦ ஆமதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். இது ஜாதகரின் வீடு வாங்கும் எண்ணத்தை தெளிவாக கூறுகிறது. உள்வட்ட புதன் மிதுனத்தில் அமைந்த உள்வட்ட சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகி வக்கிரமும் பெற்றுள்ளதாலும் ஜாம புதன் கன்னியில் செவ்வாயின் சித்திரை-2 ல் உச்சம் பெற்று நிற்பதாலும்  புதன்  பலகீனமாகிறார். இதனால் உதய கிரகங்களே வலுவானவை என்ற அடிப்படையிலும் உதய செவ்வாய் நீசமானாலும் உதயாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை ஆவதால் வலுவடைகிறது. வீடு பாவாதிபதி (4 ஆமதிபதி) சுக்கிரன் உதயத்திலேயே அமைந்துள்ளது வீடு வாங்கும் அமைப்பு ஜாதகரை தேடிவந்துள்ளதை உறுதிசெய்கிறது. ஆரூடம் உதயத்திற்கு 4 ல் அமைந்துள்ளதும் ஜாதகரின் வீடு வாங்கும் மன நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது. 6 ஆமதிபதி குரு உதயத்திற்கு 4 ல் அமைவதும், அந்த  குருவை நோக்கி கேது வருவதும், உதய செவ்வாய் உதயத்திற்கு 6 ல் அமைவது ஆகியவை ஜாதகர் கடன் மூலம் வீடு வாங்க எண்ணியுள்ளதை குறிப்பிடுகிறது.  இந்நிலையில் 4 ல் மாந்தி குருவின் விசாகம்-3 ல் குருவோடு இணைந்து அமைந்துள்ளது சிறப்பான அமைப்பல்ல. இது ஜாதகர் வாங்கும் வீட்டை ஒட்டி இறந்த ஆன்மாக்களின் பதிவுகளோ அல்லது கல்லறை போன்று  மனித உடல் புதைக்கப்பட்டிருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. மேலும் உதயாதிபதி சந்திரனும் ராகுவும் ஒருவரை ஒருவர் முன்நோக்கி நெருங்கி வருவதும் நல்ல அமைப்பல்ல. இது வீட்டருகே அந்நிய கலாசாரம் கொண்டவர்கள் இருப்பார்கள் என்பதை குறிப்பிடுகிறது. ஜாம குருவும் மேற்கு திசைக்குரிய துலாத்தில், மேற்கு திசைக்குரிய சனி சாரம் அனுஷம்-1 பெற்றுள்ளார்.

எத்தகைய இடத்தில் வீடு?

மேற்கண்ட அமைப்புகளால் ஜாதகர் வாங்க எண்ணியுள்ள வீடு அன்னிய மதத்தவர் வசிக்கும் பகுதியில் மேற்கு வாசல் கொண்ட வீடாக இருக்க வாய்ப்பு உண்டு என கூறப்பட்டது. மேலும் கடக ராசியில் உதயம் அமைந்துள்ளதால் வீடு புற நகர் பகுதியில் நீர் நிலை அருகில் இருக்க வாய்ப்புள்ளதையும் குறிப்பிட்டோம். கேள்வியாளர் புற நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தர்கா அருகில் மேற்கு பார்த்த வீடு விலைக்கு வருகிறது அதை வாங்கலாமா என்பதற்காகவே உங்களை அணுகினேன் என்றார். தர்கா என்பது இறந்துவிட்ட இஸ்லாமிய சான்றோர்களின் சமாதியை வழிபடும் இடமாகும். வீட்டருகே இறந்த ஆன்மாவின் பதிவுகள் இருக்கும் என்று நாம் கணித்ததும் சரியாக வருகிறது. ராகு உதயாதிபதி சந்திரனின் ரோகிணி-2 ல் ரிஷபத்தில் நிற்பதால் இஸ்லாமியர்கள் வசிப்பிடம்.

வீட்டின் விலை என்ன?

கடக உதயத்தின் கதிர்கள் 3. சுக்கிரனின் கதிர்கள் 2௦. செவ்வாய் நீசமானதால் அதற்கு கதிர்கள் இல்லை. மகரத்தில் கவிப்பு உள்ளதால் மகரத்திலி\ருந்து பார்க்கும் கிரகங்களுக்கு சூரியன், சனி ஆகிய கிரகங்களுக்கும் கதிர்கள் இல்லை. எனவே 3+20=23 என்பதே எண்ணிக்கை. எனவே . வீட்டின் தொகை சுமார் 23 லட்சத்திற்குள் இருக்கும் என்று கூறப்பட்டது. கேள்வியாளர் 21 லட்சத்திற்கு பேச்சு வார்த்தை நடக்கிறது என்று கூறினார். இறுதி செலவாக 23 லட்சம் வரக்கூடும்.

மேற்கண்ட இத்தகைய நுட்பமான தகவல்களை எல்லாம் ஜாதகத்தின் மூலம் நாம் அறிவது மிகக்கடினம். பிரசன்னமே அதிலும் ஜாமக்கோள் பிரசன்னமே மிக துல்லியமான தகவல்களை தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில்  மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்.

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Tuesday, 2 February 2021

வீடு கொடுப்பினையும் அனுபவ பாக்யமும்!

 


சொந்த வீடு என்பது அனைவரது பெரும் கனவான ஒன்று. சிலர் வீட்டை கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டிவிட்டு அதில் வசிக்க இயலவில்லையே என்று புலம்புவர். பணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்குப் பிடித்தமாதிரி அமையவில்லை என புலம்புபவர்கள் சிலர். இருக்கும் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தங்கள் எண்ணப்படி மேலும் வசதி கூடிய வீட்டை அமைத்துக்கொள்பவர் சிலர். இப்படி வீடு வகை சிரமங்களை இன்று பெரும்பாலோரிடையே காணமுடிகிறது. நகர்ப்புறத்தில் இன்று வீடு என்பது பல லட்சங்கள் பிடிக்கும் ஒரு சொத்தாகும். கணிசமான தொகையில் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளையும் மீறி கடன்பெற்று கட்டிவிட்டு அதில் வசிக்க இயலாமை விரக்தியைத்தரும். இதனை தவிர்க்க சரியான திட்டமிடல் வீடு கட்டுவதற்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவு கட்டிய தங்கள்  சொந்த வீட்டில் வாழ்ந்து மகிழ முடியுமா என தகுந்த ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் அவசியம். இது தொடர்பானதே இன்றைய பதிவு.

முதலாவாதாக ஒரு ஆணின் ஜாதகம்.                    

ஜாதகர் 1955 ல் பிறந்தவர். ஜாதகத்தில் அஷ்டமாதிபதி சூரியன் லக்னத்திலேயே உள்ளார். சூரியனுக்கு அஷ்டமாதித்ய தோஷம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் வலுவடையும் உத்திராயணத்தில் பிறந்து லக்னத்தில் சூரியன் உள்ளதால் ஜாதகருக்கு தந்தை வழி பாக்கியங்கள் உண்டு. லக்னாதிபதி சனி உச்சமாகி குரு பார்வை பெறுகிறார். வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்தை பூர்வீகத்தை குறிக்கும் சனி பார்த்ததால் ஜாதகருக்கு தந்தை வழி பூர்வீக வீடு கிடைத்தது. ஸ்திர லக்னமாகி உச்ச சனி லக்ன கேந்திரம் பெற்றதால் ஜாதகர் ஜனனம் முதல் இன்று வரை தனது பூர்வீக வீட்டிலேயே வசிக்கிறார். நான்காம் அதிபதி செவ்வாய் 3ல் குரு வீட்டில் பாவர் தொடர்பற்ற நிலையில் உள்ளதால் இவருக்கு வீடு தொடர்பான பாதிப்புகள் எப்போதும் இல்லை. பாக்ய ஸ்தானமான கன்னியில் அமைந்த சந்திரனை செவ்வாய் பார்ப்பதால் இவருக்கு செவ்வாய் வகை பாக்கியங்கள் உண்டு. செவ்வாயின் 8 ஆம் பார்வையை பெற்ற சனி 4 ஆம் வீட்டை உச்ச கதியில் பார்த்ததால் பழைய வீடு அவ்வளவுதான்.

இரண்டாவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.                

இந்தப்பெண்மணிக்கு 4 ஆம் அதிபதி குரு, தனது 4 ஆம் பாவத்திற்கு 8 ஆம் பாவமான கடகத்தில் பூமி காரகன் செவ்வாயுடன் இணைந்து உச்சமாகியுள்ளார். உச்ச குருவுடனான இணைவால் செவ்வாய் நீசபங்கம் பெறுகிறார். இப்படி 4 ஆமதிபதியும் பூமிகாரனும் லக்னத்திற்கு லாப ஸ்தானத்தில் அமையும் சிறப்பான அமைப்பால் ஜாதகி தனது உழைப்பால் வீடு கட்டினார். ஜாதகத்தில் சந்திரனும் குருவும் பரிவர்தனையாகியுள்ளனர். கன்னி லக்ன பாதகாதிபதி குரு சந்திரனுடன் பரிவர்தனைக்குப்பிறகு பாதக ஸ்தானம் மீனம் சென்று அங்குள்ள வக்கிர சனியோடு இணைகிறார். இதனால் ஜாதகிக்கு சனி மற்றும் குருவால் பாதகம் ஏற்பட வேண்டும். இந்த வகையில் பணிக்கு செல்லும் ஜாதகி பணி மாறுதல்களின் பொருட்டு சொந்த இருப்பிடத்தில் வாசிக்க இயலாமல் மன  உலைச்சலுக்கு ஆளாகியுள்ளார். (சனி-வேலை, சந்திரன்-இட மாறுதல்கள், குரு-பதவி).  இவருக்கு வீடு பாக்கியம் உள்ளது. ஆனால் அதை அனுபவிக்கும் பாக்கியம் இல்லை.  பாக்கியாதிபதி சுக்கிரன் நீசமாகியுள்ளது இதை தெளிவாக எடுத்துக்கூறுகிறது.

கீழே மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.                    

ஜாதகத்தில் தனது நான்காம் பாவத்தை அதன் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். இதனால் இவருக்கு வீடு அமைந்தது. ஆனால் ராகு 2 ஆம் இடத்தில் நின்று லக்னத்தில் உள்ள செவ்வாயை நோக்கி வருகிறது. இதனால் செவ்வாயின் காரகங்கள் பாதிப்படையும். ராகு இரண்டாமிடத்தில் நிற்பது ஜாதகரின் வருமான வகைகள் வெளிநாடு, வெளியூர் ஆகியவற்றில் அமையும் என்பதை குறிக்கிறது. ஜாதகர் தனது வாழ்வின் பெரும் பகுதியை வெளிநாட்டில் செலவழித்தவர். தற்போது தாய்நாடு திரும்பினாலும் வெளிமாநிலத்தில் குடும்ப சூழலின் பொருட்டு வாடகைக்கு வசிக்கிறார். சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். சிம்மம் உயர்ந்த வீடுகளை குறிக்கும். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயோடு இணைந்து நிற்பதால் ஜாதகரின் வீடு மூன்று தளங்களைக்கொண்டது. செவ்வாய் சிம்ம லக்னத்திற்கு 4 ஆமதிபதியும், பாக்ய & பாதகாதிபதியுமாகி ராகுவால் முதலில் தீண்டப்படுவதால் ஜாதகருக்கு கட்டிய வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் குறைவு.   

நான்காவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.                   

ஜாதகர் மெத்தப்படித்தவர். நிரம்ப சம்பாதிப்பவர். கும்ப லக்னத்திற்கு 4 ல் திக்பலத்தில் அமைந்த சுக்கிரனுடன் லக்னாதிபதி சனி நட்பு பெற்று இணைந்து வக்கிர குரு பார்வை பெறுகிறார்.  உடன் புதனும் சூரியனும் உள்ளதால் ஜாதகரின் வீடு புதன், சுக்கிரன் குறிக்கும் கலை நயம் மிக்கது. சூரியன் குறிக்கும் அடுக்குமாடியில் ஒரு தளத்தில் வசிக்கிறார். எந்த கிரகமும் சூரியனால் அஸ்தங்கமடையவில்லை. பூமி, அசையா சொத்துக்களுக்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றாலும், 12 ல் மறைந்து ராகுவுடன் ஒரே பாகையில் நின்று ராகுவால் அஸ்தங்கப்படுத்தப்படுகிறார். இதனால் செவ்வாயை ராகு கட்டுப்படுத்தி வைத்துள்ளார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு போதிய தன வசதி இருந்தாலும் வீடு கட்ட விருப்பமின்றி இருக்கிறார். பாக்யாதிபதி சுக்கிரன் திக்பலம் பெற்றதால் ஜாதகருக்கு வீட்டை அனுபவிக்கும் பாக்கியம் உண்டு. செவ்வாயின் நிலையால் வீடு கட்டும் பாக்கியம் இல்லை.  

பெரும் பொருளாதரத்தை எடுத்துக்கொள்ளும் வீடு அனைவருக்கும் அவசியமும் தேவ்வையுமான ஒன்று என்றாலும் அதை அனுபவிக்கும் சூழல் உள்ளதா என்று தெரிந்துகொண்டு வீட்டின் யோக திசை, பணிச்சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றை ஆராய்ந்து வீடு கட்டிக்கொள்வதே சிறப்பு.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501

Tuesday, 29 December 2020

இன்னும் வாழ்க்கை மீதமிருக்கிறது!

 

அத்தப்பனும் அங்கயர்க்கன்னியும் பாரம்பரியமானதொரு சமூகத்தை சார்ந்தவர்கள். அத்தப்பன் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர். இல்லறத்தை பொறுத்தவரை சிரமங்களற்ற வாழ்க்கை. அங்கயர்க்கன்னி தனது சமூகத்திற்கே உரிய வகையில் வீட்டை நிர்வகிப்பதில் நல்ல நிர்வாகியாக திகழ்கிறார். இவர்கள் இல்லறத்தில் விளைந்த முத்துக்களாக நல்ல குழந்தை செல்வத்தையும் பெற்றவர்கள். பொதுவாக ஒரு நல்ல சமூகத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறப்பதே ஒருவரது வாழ்வை பெரிய சிக்கலின்றி அனுபவித்துவிட பெரிதும் உதவும். இந்தக்கூற்று முழு உண்மையானால் இத்தகைய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வாழ்வில் சிக்கலே இருக்கக்கூடாது. அப்படியானால் படைத்தவனுக்கு இவர்கள் வாழ்வில் என்ன வேலை?. நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாகவும் இருப்பது இன்றைய காலத்தில் அவசியம். நல்லவர்கள் இறைவனிடம் தங்களை முழுமையாக ஒப்படைத்துவிடுகிரார்கள். தங்கள் வாழ்வில் எது நடந்தாலும் அது இறைவன் அளிப்பது என்று நிம்மதியடைகிறார்கள்.   வல்லவர்கள் இறைவனை வணங்கிவிட்டு தங்களது வாழ்க்கைப்போராட்டத்தை துவங்குகிறார்கள். அவர்களுக்கு எந்தத்தோல்வி வந்தாலும் அது தங்களது இயலாமையினால் மட்டுமே என எண்ணித்துடிக்கிறார்கள். தங்களுக்கு மேலே ஒருவன் இருந்துகொண்டு தங்களை வழிநடத்துகிறான் என்பதை மறந்து விடுகிறார்கள். அதன் விளைவால் தங்களது நிம்மதியை இழக்கிறார்கள்.



அத்தப்பன் நல்ல மனிதர்தான். ஆனால் அவர் நல்ல நிர்வாகியல்ல என்பதை திருமணமாகி சில நாட்களிலேயே அங்கயர்க்கன்னி உணர்ந்துவிட்டார். இதனால் குடும்ப நிர்வாகத்தோடு தங்களுக்கான வியாபாரத்தையும் தானே கவனிக்க வேண்டிய நிலையை அங்கயர்க்கன்னி உணர்ந்து அந்தப்பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார்.  இந்த சமயத்தில் ஒருவரது அறிவையும் பொறுப்புகளையும் மீறி விதி விளையாடும். அத்தப்பன்-அங்கயர்க்கன்னி வாழ்விலும் அது விளையாடியது. நல்லவர்களாக  இருந்துவிடுவதால் மட்டும் விதி மனிதர்களை விட்டு விடுவதில்லை. சோதனைகள் மூலம் அவர்களை வல்லவர்களாகவும் மாற்றுவதே அதன் வேலை. இப்படி வல்லவர்களாக மாறுவதற்கு அவர்கள் கொடுக்கும் விலைக்கு அனுபவம் என்று பெயர். அனுபவமே ஆசான். அனுபவமே இறை.

கீழே அங்கயர்க்கன்னியின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகம். லக்னாதிபதி ஆறாமிட தொடர்பு பெறுவது சிறப்பல்ல. இந்த ஜாதகத்தில்  இங்கு 6 ஆமிடாதிபதி சனியோடு லக்னாதிபதி புதன் பரிவர்தனையாகிறார். 6 , 1௦ இரண்டுமே பொருட்பாவங்கள் என்றாலும் தொழிலால் கடன் ஏற்படும் என்பதை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது.  லக்னத்திற்கு 7 ல் விரையாதிபதி சூரியனோடு இணைந்து அஸ்தங்கம் பெற்று நிற்கும் குரு, கணவர் வலுவற்றவர் என்பதை குறிக்கிறார். இப்படி களத்திராதிபதி அஸ்தங்கமாகி வலுவிழப்பது உபய லக்னத்திற்கு ஒருவகையில் நன்மையே. எப்படி எனில், 7 ல் சூரியன் குருவோடு இணைந்து லக்னத்தை பார்ப்பது, ஜாதகிக்கு திருமணமான பிறகு குடும்ப, தொழில்வகை நிர்வாகத்தையும் ஏற்பதால் லக்னாதிபதி வலுவடைவார். நவாம்சத்தில் செவ்வாயும் சுக்கிரனும் கடகத்தில் இணைந்து நிற்பது கணவன் மனைவி ஒற்றுமையை குறிக்கிறது. அதே சமயம் செவ்வாய் நீசம் பெற்று நீச சந்திரனோடு பரிவர்தனையாவதால் வலுவடைகிறது. நவாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனை பெறுவதும் கணவனின் திறமை குறைவால் ஜாதகி நிர்வாகியாவார் என்பதை உறுதி செய்கிறது. லக்னப்புள்ளி உணவு காரகன் சந்திரனின் ஹஸ்தம்-4ல் அமைந்து,  சந்திரன் 1௦ ஆமிடத்தில் உள்ள சனியின் பூசம்-4 ல் நிற்கிறது. இதனால் இவர்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யும் இனிப்பு, காரம், சாக்லேட் போன்ற வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது தசாம்ச சக்கரத்தை ஆராய்வோம். தசாம்சத்தில் 7 , 1௦ ஆமதிபதி புதன் நீசமாகி சந்திரன், சுக்கிரனுடன் இணைந்து குரு, சூரியனின் பார்வையை பெறுகிறது. 1௦ ஆமதிபதி புதன் சந்திரனின் வீட்டில் சந்திரனுடன் இணைவதால் உணவு தொடர்புடைய தொழில் என்பதையும் சுக்கிரனும் குருவும் இணைந்த பார்வை புதனுக்கு கிடைப்பதால் இனிப்பு தொடர்புடைய தின்பண்டம் என்பதையும் இது குறிப்பிடுகிறது. கேதுவோடு இணைந்த செவ்வாய் 4 ஆம் பார்வையாக புதனை பார்ப்பதால் கார வகைகளையும் இணைத்து விற்பனை செய்வார்கள் என்பதை இது குறிப்பிடுகிறது. (செவ்வாய்-காரம்). குரு நீசம் பெற்று சனியோடு பரிவர்த்தனை பெறுவதால் வருமானத்தில் தடைகள் ஏற்படும் என்பதும் இனிப்பை குறிக்கும் குரு பாதகாதிபதியானதும் மற்றொரு இனிப்பு கிரகம் சுக்கிரன் 8 ல் மறைந்ததும் இனிப்பு வகைகள் நஷ்டத்தை கொடுக்கும் என்பதையும் குறிப்பிடுகின்றன. ராசியிலும் தசாம்சதிலும் சந்திரன் கடகத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. குரு லக்ன பாதகாதிபதியாகி விரையாதிபதி சூரியனோடு இணைந்து 1௦ க்கு 1௦ ஆன 7 ல் நிற்கிறது. சுக்கிரன் ராசியின் பாதகாதிபதியாகி ராசிக்கு 1௦ ல் மேஷத்தில் நிற்கிறது. இதனால் இனிப்பு தொடர்புடைய வகையில் ஜாதகிக்கு லாபமிருக்காது என்பது தெளிவாகிறது.

2௦13 ல் ராசிக்கு 1௦ ல் நிற்கும் சுக்கிர திசையில் குரு புக்தியில் இந்தத்தொழிலை துவங்கி கடனுக்கு பொருள் கொடுத்து நெருக்கடிக்கிடையில்தான் இதுவரை தொழிலை செய்து வருகின்றனர். 6 ஆமதிபதியும் 1௦ ஆமதிபதியும் பரிவர்தனையாவதும் இவர் கடன் கொடுத்து வியாபரம் செய்ய காரணமாகிறது. வெளி நபர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு தங்களது தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளனர். தங்கத்தின் காரக கிரகமான பாதகாதிபதி குரு 7ல் அஸ்தங்கமானதால் மாங்கல்யத்தைக்கூட அடமானம் வைத்துள்ளதாக ஜாதகி கண்ணீர் சிந்த தெரிவித்தார். வெளிநாட்டில் புகழ் பெற்ற இனிப்பு சாக்கலேட் ஒன்றிற்கு ஏஜென்சி எடுத்து அதில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை என தெரிவித்தனர். அதே சமயம் கார வகையை குறிக்கும் ராசியின் முதல்தர யோகாதிபதியான செவ்வாய்  ராசிக்கு 1௦ ஆமதிபதியாகிறார். அவர் மேஷத்திற்கு 1௦ ல் மகரத்தில் உச்சம் பெற்று ராசிக்கு 7 ல் நின்று சந்திரனை பார்ப்பதால் ஜாதகிக்கு கார வகைகளில் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை என்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற பூமிகாரகன் செவ்வாயால் இவர்களுக்கு 2 வீடுகளில் இருந்து வாடகை வருகிறது.

ஜாதகி தற்போது சுக்கிரதிசை புதன் புக்தியில் உள்ளார். 6 ஆமிடத்தோடு பரிவர்தனை பெறும் புதன், கடன் பாதிப்பை தருகிறார். லக்னாதிபதி புதன் ஜோதிடர்களை குறிக்கும் கிரகம் என்பதாலும் அது சனியோடு தொடர்பாவதாலும் ராசிக்கு 7 ல் சனியும் குருவும் தற்போது வந்துள்ளதாலும் தொழில் வகை ஆலோசனை கேட்டு ஜாதகி என்னை தொடர்புகொண்டார். செவ்வாய் ஜாதகத்தில் சிறப்பாக இருப்பதாலும் சுக்கிரனுக்கு 1௦ ல் செவ்வாய் இருப்பதாலும் இனிப்பு வகைகளில் முதலீடு செய்யாமல் காரவகை மட்டும் செய்து படிப்படியாக கொடுத்த கடனை வசூல் செய்துகொள்ளுமாறு சொல்லப்பட்டது. சந்திரன் மூன்று சக்கரங்களிலும் (நவாம்சத்தில் பரிவர்தனைக்குப்பிறகு) கடகத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் பேக்கரியை படிப்படியாக குறைத்துவிட்டு பதிலாக சந்திரன் குறிக்கும் மளிகை கடை (கடன் கொடுக்காமல்) நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. செவ்வாயின் நிலையை கருத்தில்கொண்டு எதிர்காலத்தில் கடன் வசூலான பிறகு இருக்கும் இடத்தில் மேலும் இரு வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும் சொல்லப்பட்டது.   

ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பதில் அவர் ஈடுபடும் தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எத்தனை திறமை படைத்தவராயினும் ஒருவர் ஜாதகப்படி சாதகமற்ற தொழிலை தேர்ந்தெடுத்தால் தோல்வி நிச்சயம். ஜாதகரை வாட்டும் கிரகங்களைப்போலவே அவர்களை உயர்த்தும் கிரகங்களும் உண்டு. அத்தகைய கிரகங்களை அடையாளங்கண்டு அவை சார்ந்த வகைகளில் ஒருவர் ஈடுபடுவது அவரது வாழ்வை நிச்சயம் உயர்த்தும்.  


விரைவில் அடுத்த பதிவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Thursday, 21 November 2019

வெளிநாட்டில் வீடு வாங்கும் யோகம்.


வாழ்க்கைப்போராட்டத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வெளிநாட்டு வாழ்வு என்பது கனவு. குடும்பத்தை பிரிந்து பலகாலம் வெளிநாட்டில் வாழும் குடும்பஸ்தருக்கு வெளிநாட்டு வாழ்க்கை என்பது தண்டனை என்பர். சிலருக்கு மட்டும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கும் சூழல் அமைகிறது. தாய் நாட்டில் இன்றைக்கு வீடு வாங்குவதே கடினம் எனும் சூழலில் வெளிநாட்டில் குடும்பத்துடன் வீடு, வாகன வசதிகளுடன் வசிக்கும் சூழல் அமைவது வெகு சிலருக்கே. இதை மீறி வெளிநாட்டில் வீடு வாகன வசதிகளை அடைத்தாலும் அதை அனுபவிப்பதற்கு ஜாதகத்தில் கொடுப்பினை இருக்க வேண்டும். நமது இந்த வாரப்பதிவு அதற்கான காரணிகளை ஆராய்வதே.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

மகர லக்ன ஜாதகிக்கு கேது ஒன்பதாவது பாவத்தில் கன்னியில் உள்ளார். ஒன்பதாம் பாவம் வெளிநாட்டு வாழ்வை குறிக்கும். ராகு-கேதுக்கள் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும். இதனால் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசிக்கிறார்.  வீட்டை குறிக்கும் 4 ஆம் பாவத்திற்கும் லாபத்தை குறிக்கும் 11 ஆம் பாவத்திற்கும் உரிய செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்று அமர்ந்துள்ளது.  பரிவர்த்தனைகளில் நீச்ச பரிவர்த்தனை என்பது ஒரு அருமையான அமைப்பு. ஏனெனில் பரிவர்த்தனைக்குப்பிறகு நீச்ச கிரகங்கள் தங்கள் ஆட்சி வீட்டுக்கு வந்துவிடுகின்றன.  பரிவர்த்தனை பெற்ற செவ்வாய் லாப ஸ்தானத்தில் சனியோடு இணைகிறது. நடப்பு திசா நாதன் கேது செவ்வாயோடு பரிவர்தனையாகும் சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இதனால் கேதுவுக்கு செவ்வாயோடு தொடர்பு ஏற்படுகிறது. இதனால் ஜாதகி நடப்பு கேதுவின் திசையில் வீட்டை குறிக்கும் லக்னத்திற்கு நான்காமிடத்தில் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷத்தில் அமைந்த குருவின் புக்தியில் தற்போது வெளிநாட்டில் வீடுவாங்க தேர்வு செய்துகொண்டுள்ளார். பரிவர்த்தனைக்கு பிறகு ஏற்படும் சனி செவ்வாய் தொடர்பால் ஜாதகி பழைய வீட்டை வாங்கி சீர்செய்து குடிப்போக இருக்கிறார்.

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே முதன்மையான நீர்க்கோளான குரு அமைந்து 7ஆமிடத்தில் வர்கோத்தமம் பெற்று நிற்கும் பூமிகாரகன் செவ்வாயின் பார்வையை பெறுகிறது. வீடுகாரகன் சுக்கிரன் 4 ஆமிடத்தில் செவ்வாயின் வீட்டில் திக்பலத்துடன் நின்று நவாம்சத்தில் உட்சம் பெறுகிறது. இதனால் ஜாதகர் குரு  திசையில் வெளி நாட்டில் வீடு வாங்கினார். லக்னத்தில் நிற்கும் குரு வக்ரமாகி இழப்பை குறிக்கும் 12 ஆவது பாவத்தை நோக்கி போகிறது. வக்கிர குரு என்பதால் குருவின் திக்பலம் அடிபட்டுவிடுகிறது. செவ்வாய் லக்னத்திற்கு பாதகாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 4 ல் திக்பலத்தில் அமையும் சுக்கிரனும் 4 ன் விரைய பாவமான 3ஆமதிபதியாகிறார். மேலும் சுக்கிரன் லக்னாதிபதி சூரியனுக்கு  பகைவராகி சூரியனுக்கு பாதகத்தில் நிற்கிறார். இந்த ஜாதக அமைப்புகள் வீடு வாங்கினாலும் அதை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதை உணர்த்துகிறது. வெளி நாட்டு வீடு பாக்கியத்தில் ஏற்படும் தடைகளை 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவமான 8 ஆவது பாவத்தை ஆராய்ந்தால் புரியும். குரு 5 ஆவது பாவாதிபதியாகி அதன் பார்வையை பெறுவதாலும் வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 9 ஆம் பாவத்திற்கு பாவத்பாவமானதாகவும் தனுசு அமைவதாலும்   5 ஆமிட சிறப்பால் ஜாதகர் வெளிநாட்டு வேலை, வீடு பாக்கியங்களை அடைந்தார். அதே குரு வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் 9 ஆமிடத்திற்கு விரைய பாவமான அஷ்டமத்திற்கும்  அதிபதியானதால்  குரு திசையின் இரண்டாவது பகுதியில் அஷ்டமத்தில் ராகுவோடு இணைந்து நின்ற சனியின் அமைப்பால் பணியிழப்பை சந்தித்து இந்தியா திரும்பினார். வீடு உள்ள நாட்டில் இதுவரை சரியான வேலை அமையாமல் வாங்கிய வீட்டை அனுபவிக்க இயலாமல் ஜாதகர் இந்தியாவில் உள்ளார்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்ன ஜாதகத்தில் வர்கோத்தமம் பெற்ற நான்காம் அதிபதி சனியோடு லக்னத்தில் ஆட்சி பெற்ற பூமி காரகன் செவ்வாய் உள்ளது. லக்னாதிபதி செவ்வாய் ஜீவன காரகன் சனியோடு இணைந்து நீர் ராசியான விருட்சிகத்தில் அமைந்திருப்பதால் ஜாதகரின் ஜீவனம் வெளிநாட்டில் அமைகிறது.  லக்ன செவ்வாய் வீட்டை குறிக்கும் 4 வது பாவத்தை பார்க்கிறது. வீடு காரகன் சுக்கிரன் மீனத்தில் உச்ச நிலையில் உள்ளார். இதனால் ஜாதகர் நடப்பு செவ்வாயின் திசையில் 4 ஆம் பாவத்தில் நிற்கும் குருவின் புக்தியில் வெளிநாட்டில் வீடு வாங்க உள்ளார். செவ்வாய் சனியோடு தொடர்பு பெறுவதால் பழைய வீட்டை வாங்கும் முனைப்பில் உள்ளார். 

நான்காவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.

மகர லக்ன ஜாதகத்தில் கணவன் மற்றும் வீட்டை குறிக்கும் செவ்வாய் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் வீடுகாரகன் சுக்கிரனின் வீட்டில் நிற்கிறது. செவ்வாய் சந்திரனின் சாரம் பெற்றதால் கணவர் வெளிநாட்டில் தொழில் செய்தவர். சந்திரன் வீட்டை குறிக்கும் 4 ஆவது பாவத்தில் நின்றதால் கணவர் செவ்வாய் திசையில் வெளிநாட்டில் பூமி வாங்கி வியாபர நிறுவனம் அமைத்து வியாபாரம் செய்தார். செவ்வாய்க்கு வீடு கொடுத்த சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவோடு தொடர்புகொண்டு நீசத்தை நோக்கி செல்வதால் வெளிநாட்டில் அமைந்த சொத்தை அனுபவிக்க முடியாது என்பது தெரிகிறது. செவ்வாய் திசைக்கு அடுத்து மாங்கல்ய ஸ்தானமான அஷ்டமத்தில் அமைந்த ராகுவின் திசையில் கணவர் மரணமடைந்தார். ஜாதகிக தற்போது 12 ஆவது பாவத்தில் ஜீவன காரகன் சனியோடு இணைந்த குருவின் திசையில் உள்ளார்.  தன வரவை குறிக்கும் 2 ஆமிடத்திற்கு லாபத்தில் 2 ஆமிடத்தில் நிற்கும் கேதுவின் மூல நட்சத்திரத்தில் திசா நாதன் குரு அமர்ந்து திசை நடத்துகிறார்.  ஜீவன காரகன் சனியும் திசா நாதன் குருவும் வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளனர். இதனால் வெளிநாட்டில் கணவர் வாங்கிய சொத்தை ஜாதகி நேரடியாக அனுபவிக்க முடியவில்லை. ஆனால் வெளிநாட்டில் கணவர் ஏற்படுத்திய நிறுவனம் மூலம் ஜாதகிக்கு இன்றும் வருமானம் வந்துகொண்டிருக்கிறது. என்னே கிரகங்களின் லீலைகள்.

எந்த பாக்கியங்களை ஒரு ஜாதகர் அடைய வேண்டும் என்பதையும் அதை எப்போது அடைய வேண்டும் என்பதையும் அதையும் எதுவரை அடைய வேண்டும் என்பதையும் ஜாதகத்தை ஆராய்ந்தால் கிரகங்களே முடிவு செய்கின்றன என்பது தெளிவாக புலனாகிறது. தெளிந்த மனம் சாந்தமடைகிறது. தெளியாத மனம் ஆத்திரங்கொண்டு தவிக்கிறது.

மீண்டும் அடுத்த வாரப்பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501.