Showing posts with label வியாதி. Show all posts
Showing posts with label வியாதி. Show all posts

Saturday, 22 August 2020

கொரானா ஸ்பீக்கிங்!


கொரானாவால் உலகம் பீதியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் கொரானாவால் உயிரிழப்புகளை சந்தித்த சில ஜாதகங்களை ஆராய்ந்தபோது, தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கும் கொரானா மரணங்களுக்கும் உள்ள நேரடித்தொடர்பை தெளிவாக உணர முடிகிறது. ராகு தடைகளுக்கு உரிய கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே. மிதுனம் கால புருஷ தத்துவப்படி தைராய்டு மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் ராசியாகும். கொரானாவால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் சுவாசிப்பதில் ஏற்படும் தடையால்தான் உயிரிழக்கின்றனர். ஜனன காலத்தில் மிதுன ராசியும் அதன் அதிபதி புதனும் பாதிக்கப்பட்டு, தற்போது மாரக திசா-புக்திகள் நடப்பவர்களே கொரானா மூலம் மரணத்தை அதிகம் தழுவுகின்றனர். உடலில் ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்களும், புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களும் கொரானா தாக்குதலுக்கு உள்ளாக  வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

 கீழே ஒரு ஜாதகம்.

கன்னி லக்னத்திற்கு மீனம் பாதக ஸ்தானம். மீனத்தில் லக்னாதிபதி புதன் நீசமாகியுள்ளார். அதே சமயம் பாதகாதிபதி குரு லக்னத்திற்கு 1௦ ல் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் நிற்கிறார். இதனால் இங்கு பரிவர்த்தனை யோகம் செயல்படுகிறது. இந்த பரிவர்தனையால் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். இதனால் இங்கு குருவின் பாதகாதிபத்திய தோஷம் விலகுகிறது.

ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு மீனத்தில் ஆட்சி வீட்டிற்கு வரும் பாதகாதிபதி குருபாதகத்தை செய்யும் நிலையிலேயே உள்ளார். எனவே பரிவர்தனைக்குப்பிறகு இங்கு பாதக தோஷம் வலுவடைகிறது. இப்போது குரு மிதுனத்தில் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். இதனால் தனித்து லக்னத்தில் நிற்கும் ராகு லக்னாதிபதி புதன் போலவே செயல்படுவார். இதனால் ராகுவின் சாரத்தில் நிற்கும் குருவை லக்னாதிபதி புதனின் சாரத்தில் நிற்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் குரு நன்மையை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் பரிவர்த்தனைக்கு முன்னர்தான். பரிவர்த்தனைக்குப்பிறகு குரு ஆட்சி பெறும் நிலையில் இவை தlலைகீழாக மாறிவிடும். புதன் மீனத்தில் சுய சாரத்தில் ரேவதி – 2 ல் நிற்கிறார். இதனால் இங்கு குருவிற்கு லக்னாதிபதியின் தொடர்பு பரிவர்தனைக்குப்பிறகு மீண்டும் ஏற்படுகிறது. இதனால் இப்போது குருவின் செயல்பாடு எப்படி அமையும் என்ற கேள்வி எழும். ஏழும் பத்தும் பரிவர்த்தனை ஆவதால் இங்கு பரிவர்த்தனை ஆகும் இடங்களுக்கே கிரகங்கள் செயல்பட வேண்டும் எனவே லக்னத்திற்கு பாதகத்தை குரு செயல்படுத்த மாட்டார் என்றொரு கருத்து இங்கு எழும்.

ஆனால் கிரகங்கள் பரிவர்த்தனை ஆனாலும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஓரளவு அதாவது சுமார் 3௦ சதவீத பலனை வழங்க வேண்டும். மீதி 7௦ சதவீத பலனை தாங்கள் பரிவர்த்தனை ஆகிச்சென்று அமரும் இடத்திற்கு வழங்கும் என்றொரு கருத்தே பெரும்பாலும் நடைமுறையில் ஏற்கத்தக்கதாக உள்ளது. இந்தக்கருத்தை கவனத்தில்கொண்டு இப்போது இந்த பரிவர்த்தனையை அனுகினால் பரிவர்த்தனை ஆகும் குருவும் புதனும் இணைந்தே ஜாதகருக்கு நன்மையையும் தீமையையும் கலந்து செய்யவேண்டும் என்றொரு எண்ணம் வரும். இக்கருத்தே சரியானதும் கூட.

இப்போது உண்மையில் இக்கிரகங்கள் என்ன பலனை ஜாதகருக்கு வழங்கியுள்ளன என்று கவனித்தால், லக்னத்தில் ராகு அமர்ந்து, லக்னாதிபதி புதன் பரிவர்த்தனைக்குமுன் மீன ராசியில் நிற்பதாலும், பரிவர்த்தனைக்குப்பின் லக்னாதிபதி புதன், குரு நின்ற ராகுவின் சாரத்திற்கு வருவதாலும் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு வெளிநாட்டில் வசிக்கிறார். 7 ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் வாழ்க்கைத்துனையுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். 1௦ ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கின்றனர். 1௦ ஆமிடம் கால புருஷனுக்கு 3 ஆமிடமான கழுத்து மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் மிதுன ராசியாகிறது. இதனால் ஜாதகருக்கு இவை தொடர்பாக உபாதைகள் ஏற்படின் அது மாரக வியாதியாக உருமாறும். பரிவர்த்தனைக்குப்பின் மாரக ஸ்தானத்திற்கு வரும் குரு 5 ஆம் பார்வையாக கடகத்தை பார்ப்பார். 11 ஆமிடம் என்பது அனைத்து லக்னத்திற்கும் பொதுவான மாரக ஸ்தானமாகும். கடகம் மார்பை குறிக்கும் ராசியாகி பரிவர்த்தனை குருவின் பார்வையை பெறுகிறது. ராகு சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. ராகுவால் ஏற்படும் மூச்சுத்திணறல் மார்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும், நுரையீரல் இயக்கத்தையும் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. இதனால் இந்த ஜாதகர் மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்பால் மார்பு மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு ஆயுள்தோஷத்தை சந்திப்பார் என அனுமானிக்கலாம்.

திசா – புக்திகளின் அடிப்படியில்தான் அது நிகழும் என்றாலும், லக்னாதிபதி பாதகாதிபதி மற்றும் மாரக ஸ்தானம் இவற்றோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பைக்கொண்டே இதை அனுமானிக்கவேண்டும். இந்த அமைப்பு உள்ளோருக்கு தற்போது மாரக திசா-புக்தி நடந்தால் அத்தகையோர் தற்போது உலகை பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே புதன், மாகர ஸ்தானம், மிதுனம், கடக ராசி தொடர்புடையவர்கள், ஜனன ஜாதகத்தில் புதன்+ராகு சேர்க்கை உள்ளவர்கள், ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள், கவனமாக இருக்க வேண்டிய காலமிது. திசா-புக்தி சிறப்பாக அமையப்பெற்றவர்கள் இது பற்றி கவலைப்படாமல் கவனமாக இருந்தால் போதும்.

 

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

 அதுவரை வாழ்த்துக்களோடு,


அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Monday, 24 July 2017

போர்க்களத்தில் சில புள்ளி மான்கள்.

மருத்துவ ஜோதிடம் – பகுதி 2

போர்களை வழியச்சென்று சந்தித்து தனது எல்லைகளை விரிவாக்கும் அல்லது இழக்கும் அரசர்கள் ஒரு புறம். தங்களது தினசரி வாழ்க்கையையே போர்க்களமாக சந்திப்பவர்கள் ஒருபுறம். இரு வகையினருக்கும் இறைவன் இப்பூமியில் இடம் கொடுத்துள்ளான்.

வாழ்க்கைப்பாதை சிலருக்கு எளிதானது. சிலருக்கு கடினமானது. அவரவர் கர்ம வினைகளின்படி அவை அமைகின்றன. 


பல போர்களை சந்தித்த அரசன் மாவீரனாகிறான்.

பல துயரங்களை சந்திக்கும் மனிதன் எந்தச் சூழ்நிலைக்கும் கலங்காத மன உறுதி பெறுகிறான்.

இரு வகையினரும் தங்களது உயிரை துச்சமாக மதிப்பவர்கள் என்பதால் விதியே சில நேரங்களில் இத்தகையவர்களிடம் குழம்பி நிற்கிறது.  

பல வருடங்களுக்கு முன் என் கவனத்தை கவர்ந்த ஒரு கவிதை.

வாழ்க்கையே போர்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமோ!



சிலரது வாழ்க்கை போர்க்களத்தில் அகப்பட்டுக்கொண்ட புள்ளிமான்களைப்போன்றது. அடுத்த வினாடி தனக்கு ஆபத்து உள்ளதை அறிந்தும் கலங்காது போராடும் இவர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். அப்படி வியாதி என்ற ஒரு போர்க்களத்தில் அகப்பட்டு  போராடிக்கொண்டிருக்கும் நமது வாசக அன்பர் ஒருவரின் வாழ்க்கை சம்பவங்கள் அவற்றிற்கு காரணமான ஜோதிட காரணங்களோடும் அவரின் ஒப்புதலோடும் இங்கே பதிவிடப்படுகிறது.


இவரது உடல் எண்  5. உயிர் எண் 3.

புதனுக்குரிய 5 ஆம் எண்ணும் குருவுக்குரிய 3 ஆம் எண்ணும் எதிர் எதிர் அதிர்வலைகள் கொண்டவை. புதனுக்கு 8 ல் குரு வக்கிரமாகி பகை வீட்டில் நிற்கிறார். கடுமையான நிலை இது.

லக்னம் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. புதன் நவாம்சத்தில் நீசம். லக்ன புள்ளியின் உப நட்சதிராதிபதி சூரியன் ராசியில் நீசமாகியுள்ளார். நவாம்சத்தில் உச்சமாகியுள்ளார்.  இப்படி லக்னம் அமைந்த நட்சத்திராதிபதிகள் நீச நிலை பெற்றது இவர் வாழ்வில் துயரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை குறிக்கிறது. ஏனெனில் லக்னம், ஆத்ம காரகன் சூரியன், உடல் & மனோ காரகன் சந்திரன் ஆகியோர் நல்ல நிலையில் அமைந்துவிட்டால் ஜாதகர் எவ்வளவு துயரங்களையும் துணிந்து எதிர்கொள்ள இயல்பாகவே தயாராக இருப்பார்.

இங்கு ஆத்ம காரகன் சூரியன் நீசமாகி தனக்கு அஷ்டமத்தில் வக்கிர நிலையில் அமைந்த குருவின் சாரத்தில் விசாக நட்சத்திரத்தில் உள்ளார். நவாம்சத்தில் உச்சமானது நன்மையே. மனோ காரகன் சந்திரன் ஆறில் கேதுவுடன் சேர்ந்து மறைந்து கேதுவின் சாரம் (அஸ்வினி) பெற்றதும் சந்திரனின் வீட்டில் சனி அமர்ந்ததும் கடுமையானதே. வர்கோத்தமம் பெற்றதும் ஒருவகையில் நன்மையே. இதன் பொருளாவது துயரங்களின் அடிப்படையிலேயே ஜாதகர் துணிவை பெற வேண்டும் என்பதே.

இரண்டு வயதில் ஆறாம் பாவத்தில் அமைந்த கேதுவின் திசையில் கால புருஷ தத்துவத்தில் வயிறை குறிக்கும் சிம்ம ராசிக்குரிய நீசமான சூரியனது புக்தியில் கல்லீரல் கோளாறால் வயிற்றுப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் பாதிப்பு ஏற்பட்டது.   சூரியன் அமைந்த விசாக நட்சதிராதிபதி குருவே கல்லீரலை கட்டுப்படுத்துகிறார் என்பதும் குருவும் சூரியனும் சஷ்டாஷ்டகத்தில் உள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஆறாவது வயதில் கேது திசை அஷ்டமாதிபதி  புதன் புக்தியில் வலது கால் சைக்கிளில் மாட்டி முட்டிக்கு  கீழ் தோல் முழுதுமாக உரிந்தது. அஷ்டமாதிபதி கொடுத்த கண்டம் அளப்பரியது என்றுதான் கூற வேண்டும். வலது பக்க முழங்காலின் கீழ் பகுதியை குருவும் இடது பக்க பகுதியை சனியும் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது மருத்துவ உடலியல் ஜோதிடம் அறிவிக்கும் உண்மை. புதன் முழங்காலுக்கு கீழான பகுதியை குறிக்கும் பதினொன்றாம் பாவாதிபதி ஆகி அந்த பாவத்தை புதனுக்கு எட்டில் நின்ற குரு பார்வை செய்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. புதன் வலது பாதத்தை குறிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் நிற்கிறார். (சனி இடது பாதத்தை குறிப்பார்). எனவே புதன் புக்தியில் காலின் வலது புறம் பாதிக்கப்பட்டது. புதன் காரக அடிப்படையில் உடலின் தோலை ஆட்சி செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையுடன் ஜாதகர் மிதிவண்டியில் செல்லும்போது இவ்விபத்து நடந்தது என்பதும். சூரியன் பாதங்களை குறிக்கும் 12 ஆமிடத்தில் நீசம் என்பதும் ஆய்வுக்குரியது.

10.02.1983ல் அதே புதன் புக்தியில் லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான விபத்து காரகன் செவ்வாய் அந்தரத்தில் விபத்தில் வலது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு 3 மாத மருத்துவமனை வாசம்.

எட்டாம் அதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்த சுக்கிர திசை துவங்கி சுய புக்தி முடிவில் தந்தைக்கு கர்மம் செய்ய வைத்தது. 

புதன் எட்டாம் அதிபதியாகி அதன் நட்சத்திரத்தில் அமைந்த சுக்கிரன் திசை கண்டத்தை தந்து கல்வியை தடைகளோடு தடுமாற வைத்தது. இதற்கு புதன் 12 ல் மறைவு பெற்றதும் முக்கிய காரணம். ஜாதகரால் சுக்கிர திசையில் கல்லூரிப்படிப்பை முடிக்க இயலவில்லை. ஆனால் புதன் பதினொன்றாம் பாவத்திற்கும் அதிபதியானதால் சுக்கிர திசையின் மறு பகுதியில் தான் சார்ந்த மருத்துவம், கணக்கு, புத்தகம், எழுதுதல் என்ற வகையில் ஜாதகரை தொடர்புபடுத்தியது. கட்டுரை, சிறுகதை நாவல், பத்திரிகை உதவி ஆசிரியர் என்ற வகையில்  ஜாதகரை வாழ்வில் முன்தள்ளியது. 

இரு பாவ ஆதிபத்தியம் கொண்ட ஒரு கிரகத்தின் வீட்டிலிருந்து திசை நடத்தும் ஒரு கிரகம் அதன் திசா புக்தி பலனை  அதன் இரு பாவங்களையும் சார்ந்து தர வேண்டும் என்ற விதிப்படி  சுக்கிரன் முதல் பத்து வருடம் 6 ஆமிட பலனை வழங்கி கடுமைப்படுத்தியது. ஆனால் சுக்கிர திசையின் இரண்டாம் பகுதி பத்தாண்டுகள் லக்ன பலனை வழங்கி தடைகளுக்கிடையேயும் ஜாதகரை அசுவாசப்பட வைத்தது. . 

அடுத்து  2௦௦4 ல் நீசமான சூரியனின் திசை துவங்கியது. அத்துடன் மற்றொரு கொடிய கால கட்டமும் துவங்கியது என்றே கூற வேண்டும். திசா நாதன் நீசமானதால் ஜாதகருக்கு புதனின் காரகத்துவமான பத்திரிகைத்துறையே ஈர்த்தது. கால புருஷ தத்துவப்படி முதுகுத்தண்டு மற்றும் முதுகெலும்பை குறிக்கும் சிம்ம ராசி அதிபதி சூரியன் நீசமாகி திசை நடத்தியதால் முதுகில் காச நோய் ஏற்பட்டு நீங்கியது.சூரியன் 7 மற்றும் 12 ஆகிய திருமண பாவங்களுடன் தொடர்புகொண்டதாலும் 2 ஆம் அதிபதி குரு 7 ல் நின்று சுக்கிரன் பார்வை பெற்றதாலும் சூரிய திசை புதன் புக்தியில் 16.11.2007ல் திருமணம்.

பொதுவாக திருமண தொடர்புடைய பாவங்களுடன் ராகு-கேதுக்கள் தொடர்பு கொண்டிருக்கையில் அவைகளுக்குரிய எண்களான 4 (ராகுவிற்குரியது) & 7 (கேதுவிற்குரியது) இவற்றில் திருமண தேதியை நிர்ணயிக்கக்கூடாது. மேற்கண்ட திருமண தேதியின் ஒற்றை இழக்க எண் 7 ஆனது கேதுவின் எண். கேது களத்திர ஸ்தானமான 7 க்கு விரையமான 6 ல் இருக்கிறது. திருமணம் நிலைக்கவில்லை. 04.08.2009 ல் சந்திர திசை துவங்கியது.. காச நோய்க்கு எடுத்துக்கொண்ட வீரியமிக்க மருந்துகளால் ஜாதகரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 26.08.2009 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராசிகளில் துலாம், விருச்சிகம் மற்றும் பாவங்களில் 7 & 8 மற்றும் கிரகங்களில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் , ராகு ஆகியவை சிறுநீரகங்களை கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகதிற்கான காரக கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரனும் சுக்கிரனின் பாவங்களும் பாவிகளாலும் பகைவர்களாலும் பாதிக்கப்பட்டுவிட்டன. சிறு நீரக நோய்க்கு காரணமான சந்திரன் நோயை குறிக்கும் ஆறாமிடத்தில் அமர்ந்து திசை நடத்துகிறது. 6 ஆமிடம் மனைவியை குறிக்கும் 7 க்கு விரைய பாவமும் கூட என்பதால் ஜாதகருக்கு சிறுநீரக பாதிப்பு தெரிந்ததும் மனைவி விலகிச்சென்றுவிட்டார்.

2010 மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம் என இரு மருத்துவர்களை கலந்துவிட்டு முடிவு செய்கிறார் ஜாதகர். அன்று முதல் இன்று வரை ஒரு வாரத்தில் சராசரியாக மூன்று முறை  மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்கிறார். பாதகாதிபதியான சந்திரன் நோயை கொடுத்து மாரகதுக்கு சமமான வேதனைகளை கொடுத்துக்கொண்டிருப்பதால் ஆயுளை பாதிக்கவில்லை.

தற்போது ஜனன கால ராகுவின் மீது கோட்சார குரு செல்லும்போது ஜாதகர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

சிறு சிறு விஷயங்களில் ஏற்படும் ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள இயலாமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் மனோபாவம் படைத்தவர்கள் இது போன்றவர்களின் வாழ்க்கைப்போராட்டங்களை பார்த்தாவது  வாழ்வில் போராடி வெற்றிபெற முயல வேண்டும்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 07871244501

Sunday, 21 December 2014

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும் விபரீதங்கள்.

விசித்திர ஜாதகங்கள்: பகுதி-1 

வெள்ளிக்கிழமையிலும் அமாவாசையிலும்  விபரீதங்கள்.

சிலவகை ஜாதகங்களை ஆராயும் போது ஜோதிடருக்கு இந்த ஜாதக அமைப்பு ஜாதகருக்கு என்ன கொடுமை செய்யுமோ என கவலை கொள்ளவைக்கும். ஜோதிடர்களால் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு ஏற்படுத்தும் பாதிப்பை சிலசமயம் துல்லியமாகக்கூட அளவிட இயலும் அதன் பாதிப்பை தடைசெய்ய ஜோதிடர்களால் மட்டுமல்ல யாராலும் இயலாது என்பதே உண்மை. துயரங்களைக் கலைய அதற்கு காரணமான படைத்தவனை சரணடைவதே சரியான முறை.

அந்தச் சரணாகதிகளும் படைத்தவனிடம் வைக்கப்படும் கோரிக்கை மனுக்களே. அனைத்து மனுக்களும் கனிவோடு பரிசீலக்கப்படும் என்பது உறுதியில்லை. காரணம் அவைகளும் கர்மவினைகளின்படியே பரிசீலிக்கப்படும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு இறுதியில் இறைவன் தங்களை வாழ்வை கடினப் படுத்துவான்  என ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொண்டு  கிரகப் பெயர்ச்சி காலங்களில் மட்டும் நீதிபதியின் முன்னாள் முறையிடும் வாதியைப்போல் பணிந்து வணங்குவது மட்டும்  பயன்தராது. இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம் கிரகப் பெயர்சிகளும் இன்றைய காலகட்டத்தில் காமர்ஷியலாகிவிட்டன என்பது வேதனைக்குரிய விஷயம். 

இந்து தர்மமும் அதன் பிரதான அங்கமான ஜோதிடமும்  சில விசேஷமான முறைகளின் மூலம் மனிதனது துயரங்களைக் குறைத்துக்கொள்ள வழிவகை செய்துள்ளது மறுக்க இயலாத உண்மை. ஆனால் இதைவைத்து நடக்கும் பொருளீட்டு முறைகள் இவற்றின் அற்புதங்களை சிதரடித்து வருவது வேதனை. நாத்திகர்களைவிட பொருளாதாரத்தை பிரதானமாக முன்னிறுத்தும் ஆத்திகர்களால் நமது மதம் மட்டுமல்ல ஜோதிடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களுமே தவறானவை எனும் எண்ணம் கொள்ள வைக்கும். உண்மையான நமது இந்து தர்மத்தையும் அதன் அற்புதங்களையும் புரிந்துகொள்வோம். தவறான ஆத்திகன் மோசமான நாத்திகனைவிட வேகமாக மத-தர்ம நெறிகளை அழித்துவிடுவான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால கேது திசை இருப்பு: 2 வருஷம், 7 மாதம், 12 நாட்கள்.

ஜாதகத்திற்கு உரியவர் ஒரு பெண்.

இந்த ஜாதகத்தில் சூரிய சந்திரர்களும் அவர்களது வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கால சர்ப்ப தோஷ ஜாதகத்தில் 2 ஆம் வீட்டில் குரு உச்சமாகியுள்ளார். காரகன் பாவத்தில் இருப்பது பாதிப்பைத் தரும். “காரகோ பாவ நாசாய என்பது ஸ்லோகம். ஒரு கிரகம் எந்த வகையில் செயல்படும் என்பதை அக்கிரகத்தினது காரகத்துவங்கள், அதன் சுய பாவங்கள், அக்கிரகம் அமைந்த பாவம் மற்றும் அதன் பாவாதிபதி இவற்றுடன் அக்கிரகம் அமைந்த நட்சத்திராதிபதி & உப நட்சத்திராதிபதி போன்றவற்றைக் கொண்டு அறியலாம். (குறிப்பிட்ட கிரகத்திற்கு 4 மற்றும் 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் என்பதை அறியவேண்டும்.) 

மேற்கண்ட விதிகளின்படி குடும்பகாரகன் குரு குடும்ப பாவமான கடகத்தில் உச்சம் பெற்று அமைந்தது குடும்ப உறவில் ஏற்படும் சச்சரவைக் குறிப்பிடுகிறது. “அந்தணன் தனித்திருக்க அவனியில் அவதிகள் அதிகம் உண்டாம் என்பது ஜோதிடப் பழமொழி. குரு தனித்து உச்சமானது தனவரவில் சில நன்மைகளை தந்தது ஆனால் கணவருடனான் உறவில் அடிக்கடி சண்டைதான் ஏற்பட்டது. அதற்கு குரு ராசிக்கு 12ல் மறைந்ததும் ஒரு முக்கிய காரணம். 

5 ஆம் பாவாதிபதி புத்திரம், சிந்தனை மற்றும் பூர்வ புண்ணியத்தைக் குறிப்பவர். அந்த 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனானவர் எதிரியைக் குறிப்பிடும் 6 ஆம் பாவாதிபதியுடன் இணைந்தது ஜாதகியின்  சிந்தனையில் சண்டையிடும் மனோபாவத்தையும் நெருப்பு வார்த்தைகளையும் உமிழ வைத்தது. ஸ்திர ராசியான சிம்ம ராசிக்கு 9 ஆம் பாவமான மேஷம் பாதகஸ்தானமாகும். மேஷத்தில் சம வலுவுடைய சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து நின்றது தோஷம். இவ்விரு கிரகங்களும் சுக்கிரனின் சுய நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் அமைந்துள்ளன. செவ்வாய் 19.08 பாகை (பரணி-2) & சுக்கிரன் 24.48 பாகை (பரணி-4).

இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கது என்னவெனில் சம வலுவுடைய இத்தகைய கிரகங்கள் 5 பாகை இடைவெளிக்குள் அமைந்துவிட்டால் கிரக யுத்தம் ஏற்பட்டு வென்ற கிரகம் தோல்வியுற்ற கிரகத்தை கொன்றுவிடும் அல்லது பிரிவினையை ஏற்படுத்திவிடும் (கணவன் – மனைவி இருவருள் ஒருவர் கொல்லப்படுவார் அல்லது பிரிவினை ஏற்படும்).

இந்த ஜாதகத்தில் 5 பாகை இடைவெளி உள்ளதால் இங்கு கிரக யுத்தம் பெரிய அளவில் இல்லை. மேலும் சுக்கிரன் சுய சாரத்தில் செவ்வாய்க்கு முன்னே உள்ளதால் சுக்கிரனை செவ்வாயைவிட வலுவுடையவராக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி சொந்த வீட்டில் சுக்கிரனுடன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமைந்த 6 ஆம் பாவாதிபதி செவ்வாயானவர் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையில் ஜாதகியை கணவருடன் சண்டையிட தூண்டினார்.

சந்திரனின் வீடு 2 ஆமிட  தனித்த குருவால் பாதிக்கப்பட்டது அறிந்ததே. ராசியாதிபதி சூரியனானவர் குரு அமைந்த சந்திரனின் வீடான கடக ராசிக்கு பாதகஸ்தானமான 11 ஆம் இடம் ரிஷபத்தில் சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி-3 ல் அமைந்து கெட்டுவிட்டார். அது லக்னத்திற்கு விரய ஸ்தானமும் ஆகி லக்னாதிபதி புதனும் சந்திரனின் ரோகிணி-4 ல் அமைந்து கெட்டுவிட்டார். சூரியனது வீடும் சந்திரனுடன் அமைந்த  பாவிகளான ராகு மற்றும் சனியால் கெட்டுவிட்டது.

இங்கு மற்றோர் உபவிதி உள்ளது அது "ராகுவானவர் எந்த பாவத்தில் அமைந்துள்ளாரோ அந்த பாவாதிபதி சூரிய சந்திரர்களுக்கு எதிராக செயல்படுவார் என்பதே அது. (சூரிய சந்திரர்கள் இருவரும் அமுது உண்ணும்போது தேவர்களின் வரிசையில் மாறி அமைந்த ராகுவை காட்டிக் கொடுத்ததால் ராகு இவர்கள் இருவருக்கும் பாதகத்தை தருவார் என்பது  இதன் புராண பின்னணி).   இந்த ஜாதகத்தில் ராகு அமைந்த பாவாதிபதி சூரியனது வீடாகவே அமைந்தது சோகமே.

இப்படி இரண்டு கிரகங்களோடு (சந்திரன்-சூரியன்) அவற்றின் பாவங்களும் (கடகம்-சிம்மம்) கெட்டுவிட்டால் அவற்றிற்குரிய திசா புக்திகள் கடும் பாதிப்பைத் தரும்.

ஜாதகிக்கு 2008 பொங்கலன்று சந்திரனின் திசை துவங்கியது.

அது முதல் செவ்வாய்-சுக்கிரனின் நிலையினால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கணவன்-மனைவிக்குள் கடுமையான சண்டை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல சூரியன்-சந்திரர்களும் அவர்களது வீடும் கெட்டதால் சூரிய-சந்திரனின் கோட்சார நிலையால் நிகழும் ஒவ்வொரு அமாவாசையன்றும் தம்பதிகளுக்குள்  கடுமையான சண்டை ஏற்பட்டது. 

கணவர் சற்று பொறுமைசாளி. ஆண் கிரகங்கள் ஜாதகியில் ஜாதகத்தில் கெட்டுவிட்டதிலிருந்து இதை அறியலாம். கணவர் வெள்ளிக்கிழமையையும் அமாவாசையையும் நினைத்தாலே நடுங்க ஆரம்பித்துவிட்டார். சண்டை ஏற்பட்டால் கணவர் அதன் தீவிரத்தைத் தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். அதற்குக் காரணமும் உள்ளது.

அது

ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் ரத்தத்தை குறிக்கும் கிரகங்கள். ஜாதகத்தில் மோசமான நிலையில் அமைந்த இவையிரண்டும் ஜாதகிக்கு இரத்தக் கொதிப்பை உருவாக்கிவிட்டன. மேலும் செவ்வாய் பரம்பரை வியாதியைக் குறிப்பிடும் கிரகமாகும். (ஜாதகியின் தாயார் இரத்தக் கொதிப்பால் உயிரிழந்தவர்)

எனவே வாக்குவாதத்தில் ஜாதகிக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாகி ஜாதகிக்கு ஏற்படும்  உயிராபத்தை தவிற்கும் பொருட்டு கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்.   

ஆனாலும் கணவரால் ஜாதகியின் உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.

காரணம்.

ஜாதகிக்கு மாரக திசையான சந்திரனின் ஆதிக்க காலம் 2008 லேயே தொடங்கிவிட்டது. சந்திரன் மனோ காரகன் என்பதால் ஜாதகியின் மனோபாவத்தில் அலோபதி மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத எண்ணத்தை உருவாக்கிவிட்டார். ஜாதகி அக்குபங்சர் மருத்துவத்தையே நாடினார். மரண நாளில் அக்குபங்சர் டாக்டரையும் படைத்தவன் வெளியூர் செல்லும் அமைப்ப ஏற்படுத்தினான். கடைசி நேரத்தில் சுய நினைவற்ற நிலையில் அலோபதி மருத்துவர்களாலும் ஜாதகியைக் காப்பாற்ற இயலவில்லை.  சந்திரன் மனோகாரகன் என்பதால் மனோநிலையின் மூலம்  ஜாதகிக்கு மரணவாய்ப்பை வழங்கினான். அது மட்டுமல்ல சந்திரன் தாயாரைக் குறிக்கும் மாத்ருகாரகன் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஜாதகியின் தாயாரும் ரத்தக் கொதிப்பால் இறந்தார் எனக் குறிப்பிட்டேனல்லவா? அவர் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மரணமடைந்தார். சந்திரன் மாரகாதிபதி என்பதால் தாயாரை இழந்த துயரில் ஜாதகியும் அதே நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அதே ரத்தக் கொதிப்பால் மரணமடைந்தார்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.