Thursday 26 December 2019

கிரகச் சேர்க்கையும் கர்மாவும்.



ஒரு கிரகச் சேர்க்கை பலரின் ஜாதகத்தில் அமையப்பெற்றாலும் அவை அமைவைப்பொறுத்து சாதக பலனையோ பாதக பலனையோ செய்யும். அக்கிரக்கச் சேர்க்கை அமையப்பெற்ற அனைவருக்கும் ஒரே விதமான பலனை கொடுக்காது. ஒரே குடும்பத்தில் இவ்வாறு கிரகச் சேர்க்கை அமையப்பெற்றாலும் இது பொருந்தும். ஆனால் கிரகச் சேர்க்கையில் இணையும் கிரகங்களின் காரகம் கண்டிப்பாக வெளிப்படும். இதனை ஒரு குடும்ப ஜாதகம் மூலம் இப்பதிவில் அலசுவோம்.


மேற்கண்ட ஜாதகம் 78 வயது நிரம்பிய ஒரு பெண்மணியின் ஜாதகம்.  சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே ராகு-சந்திரன் சேர்க்கை அமைந்துள்ளது. உடன் மாந்தியும் உள்ளது. சூரிய சந்திரர்களோடு ராகு-கேதுக்கள் இணைவது கிரகண தோஷமாகும். உடலை குறிக்கும் சந்திரனுடன் பூர்வ ஜென்ம கர்மாவின் காரக கிரகமான ராகு இணைந்திருப்பது ஜாதகியை மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் அமைப்பாகும். ஜாதகியின் மரணத்திற்கும் அது இட்டுச் செல்லும் என்பதை உடன் இணைந்துள்ள மாந்தி குறிக்கிறது. சந்திரனும் செவ்வாயும் இரத்த மரபணுக்கள் மூலமாக பாரம்பரிய பதிவுகளை கடத்தும் காரக கிரகங்களாகும். அஷ்டமாதிபதியும் புத்திர காரகருமான குரு, செவ்வாயின் மிருகசீரிஷம் – 1ல் பூர்வ புண்ணியம் மற்றும் ரோக ஸ்தானங்களுக்கு அதிபதியான சனியுடன் இணைந்துள்ளது. குரு, சனி, புதன், செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் ஜாதகத்தில் வக்கிரம் அடைந்துள்ளது. இது கர்ம வினையின் தீவிரத்தை குறிக்கிறது. வக்கிர கிரகங்கள் அனைத்தும் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுவுடன் இணைந்தே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்கிரனை தவிர இதர கிரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் அமைந்துள்ளன. சுக்கிரனின் இரு வீடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில் சுக்கிரன் ரோக ஸ்தானாதிபதி சனியின் அனுஷம் – 4 ல் அமைந்து சனி பார்வை பெறுகிறார்.  சந்திரன் இரத்தத்தையும் சுக்கிரன் சுரப்பிகளையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். சந்திரன் கர்ப்பப்பையை குறிக்கும். சுக்கிரன் அமைந்த கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிக ராசியும் செவ்வாய்  நிற்கும் லக்னத்திற்கு 8 ஆமிடமும் கர்பப்பையை குறிக்கும்.  ராகு சந்திரனோடு தொடர்பு பெறுவது கர்ப்பப்பை பாதிப்பை தரும்.  ஜாதகிக்கு தற்போது ரோகாதிபதி சனியுடன் இணைந்து நிற்கும் 5 & 8க்குரிய குருவின் திசை நடைபெறுகிறது. ஜாதகி தற்போது கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குரு நவாம்சத்திலும் ராகு பாவச் சக்கரத்திலும் காலபுருஷனின் ரோக ஸ்தானமான கன்னியின் நிற்பது ஜாதகி குரு  திசையில் அடையும் ரோக பாதிப்புகளை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

இந்தப்பெண்மணியின் முதல் மகனின் ஜாதகம் கீழே.

மேஷ லக்ன ஜாதகத்தில் தாயாரின் ஜாதகத்தில் அமைந்துள்ளது போலவே லக்னத்தில் மாந்தி அமைந்துள்ளது. தாயாரின் ஜாதகத்தை போலவே சந்திரன் – ராகு சேர்க்கை உள்ளது. இந்த அமைப்புகள் தாயார் வழி கர்மா மகனுக்கும் தொடர்கிறது என்பதை குறிக்கிறது. லக்னதிற்கும் லக்னாதிபதி செவ்வாய்க்கும் பாக்ய ஸ்தான குருவின் பார்வை கிடைக்கிறது. இதனால் தாயார் வழி கர்ம தோஷம் ஜாதகரை குறைவாகவே பாதிக்கும் எனலாம். 4 ஆம் பாவமும் 4 ஆம் பாவாதிபதியும் சர்ப்ப கிரகங்களால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து தாயாரின் நிலையை புதல்வரின் ஜாதகம் தெளிவாக காட்டுகிறது. 6 ஆம் பாவத்தில் நெருப்புக் கிரகம் சூரியன் 6 ஆம் பாவாதிபதியான உச்ச நிலையில் இருக்கும் புதனுடன் இணைந்து நிற்கிறார். புதனும் செவ்வாயும் சூரியனால் அஸ்தங்கமடைந்துள்ளன. இப்படி ஆறாவது பாவத்திற்கு சூரியனின் வலு கூடுவதால் 6 ஆமிடம் குறிக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வியாதி வகைகளை சூரியன் கட்டுப்படுத்துவார் எனலாம்.  ஜீவன காரகன் சனி அஸ்தங்க செவ்வாயின் மிருக சீரிஷம் – 2 ல் நிற்கிறார். சனியின் சார நாதன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் பாதகாதிபதி சனியால் ஜாதகருக்கு தீமை செய்ய முடியாது.

2 ஆம் பாவாதிபதி சுக்கிரன் ஜல ராசியில் கேதுவோடு இணைந்து உச்ச புதனின் ஆயில்யம் – 1 ல் நிற்கிறார். இதனால் ஜாதகர் தகவல் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக பணிபுரிந்து வருமானம் ஈட்டுகிறார். வெளிநாடு சார்ந்த பணி இது என்பது கவனிக்கத்தக்கது. 1௦ ஆமிடத்தில் ராகு சந்திரன் சேர்க்கை இதற்கு உதவி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. ராகு – கேதுக்கள் நவீன தகவல் தொழில் நுட்பம், மென்பொருள், கடல்கடந்த தொடர்புகளை குறிக்கும் காரக கிரகங்களாகும். ஜாதகர் ராகு-கேது தொடர்புடைய விதத்தில் தனது கர்மாவை கழிப்பதால் அவை ஜாதகருக்கு தங்களது பாதிப்பை குறைத்தே தரும் எனலாம். ஜாதகர் தற்போது ராகு திசையை கடந்து குரு திசையில் உள்ளார். இந்த ஜாதகத்தில் சந்திரன் – ராகு சேர்க்கை கர்மா வேலை வகையில் தனது விளைவை தருகிறது   எனலாம்.  

2 ஆவது மகனின் ஜாதகம் கீழே.

 தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியும் பரம சுபருமான குரு வக்கிர நிலையில் மறைவு ஸ்தானமான மூன்றாமிடத்தில் அமைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் சந்திரன் நீச வர்கோத்தமம் பெற்ற நிலையில் சந்திரன்-ராகு சேர்க்கை உள்ளது. தாய் வழி கர்மா இந்த ஜாதகத்திலும் தொடர்வதையே இது குறிப்பிடுகிறது. மனோகாரகன் சந்திரன் பாதிக்கப்பட நிலையில் 5, 9 பாவாதிபதிகள் பாதகாதிபதி புதன் தொடர்பு பெற்று சிம்மத்தில் அமைந்துள்ளது. பாதக ஸ்தானத்தில் சனி அமைந்து சிம்மத்தில் அமைந்த கிரகங்களை 3 ஆம் பார்வையால் பார்க்கிறது. சனி வீட்டில் குரு அமைந்து சனி பாதக ஸ்தானத்தில்  திக்பலம் பெற்று நிற்பதாலும் இங்கு குருவிற்கு சனிக்கும் ஏற்பட்ட தொடர்பு பாதகத்தை செய்யவே வழி வகுக்கும். புத்தி காரகன் புதன் பாதகாதிபதியாகி வர்கோத்தமம் பெற்று சூரியனை விட்டு 8 பாகைகள் முன்னால் சென்று (சிம்மத்தில் சூரியன் 8 பாகை, புதன் 16 பாகை)  தனது உச்ச வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.  புதன் முழுமையாக அஸ்தங்கம் அடையவில்லை. இதனால் பாதக பலனே கூடுதலாக வெளிப்படும். 

மனோ காரகன் சந்திரன் பாதகத்தில் நிற்கும் சனியின் அனுஷம் – 4 லும் 5 ஆமதிபதி செவ்வாய் 8 ஆமிடத்தில் நிற்கும் 6 ஆமதிபதி சுக்கிரனின் பூரம் – 4 லும், பாக்யாதிபதி சூரியன் 6 ஆமிடத்தில் மனோகாரகன் சந்திரனின் ரோகிணி – 4ல் சந்திரனை பாதிக்கும்படி அமைந்துவிட்ட கேதுவின் மகம் – 3ல் நிற்கிறார். கடக ராசி பாவகர்தாரி யோகத்தில் அமைந்து கேதுவின் மூன்றாவது பார்வை பெற்று  சந்திரனும் பாதிக்கப்பட்டுவிட்டதால் ஜாதகர் பிறவியிலேயே மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார். குரு பாதகாதிபதியை பார்த்து சந்திர கேந்திரம் பெற்றதால் ஜாதகர் குழந்தை மனோ பாவம் பெற்றவராக காணப்படுகிறார். ஜாதகர் தற்போது சூரிய திசையில் உள்ளார். அடுத்து பாதக ஸ்தானத்தில் நிற்கும் சனியின் சாரம் பெற்ற சந்திர திசையில் மேலும் கடுமையாக பாதிக்கப்படப்போவதையே ஜாதகம் குறிப்பிடுகிறது.  இந்த ஜாதகத்தில் சந்திர-ராகு சேர்க்கை மன நிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கிரகச் சேர்க்கை ஒரே குடும்பத்தில் ஏற்படுவது ஒரு யோகமோ தோஷமோ அவர்களை தொடர்ந்து வருவதை குறிக்கும். ஆனால் அதன் வெளிப்பாடு அனைவருக்கும் ஒரே விதமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கிரகச் சேர்க்கை சாதகத்தையோ பாதகத்தையோ வழங்கும் நிலையில் இருந்தாலும் அவ்வமைப்பை பாதிக்கும் எதிர்க்காரணிகளை ஆராய்ந்தே அதை இறுதி செய்ய வேண்டும். 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501.

Thursday 19 December 2019

குளறுபடித் திருமணங்கள்!



திருமணம் நிச்சயமான சிலருக்கு திருமண நாளில் மாப்பிள்ளை அல்லது பெண்ணை மாற்றி வேறொருவரை திருமணம் செய்யும் செய்திகளை நாம் கேள்வியுற்றிருப்போம். இப்படி குளறுபடியாக நடக்கும் திருமணங்களுக்கும் ஜாதக ரீதியான காரணங்கள் உண்டு. அத்தகைய திருமணங்களுக்கான காரணிகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசுவோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு கேதுவின் சாரத்தில் மூலம்-3 ல் நின்று திசை நடத்துகிறார். கேது புதனின் கேட்டை -2 ல் நிற்கிறார். இதனால் குரு, புதன், கேது மூவருக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. புதன் பாதகாதிபதி என்பதோடு காதலியை குறிப்பவராகிறார். அவர் 7 ஆமதிபதி என்பதால் மனைவியையும் குறிக்கிறார். கேதுவும்  காதல் ஆசையை தூண்டும் கிரகம் என்றாகி புதனின் நட்சத்திரத்தில் நிற்பதும் பாவத்தில் குரு கேதுவோடு இணைந்து நிற்பதும் கவனிக்கத்தக்கது. புதன் வர்கோத்தமம் அடைந்து குருவின் பாகை 9 ஐ விடவும் சுக்கிரனின் பாகை 16 ஐ விடவும்  னைவிட அதிகமாக 27 பாகை சென்று ஆத்ம காரகனாக அமைந்துள்ளபடியால் லக்னத்தை புதனே இயக்குபவராகிறார்.  ஜாதகருக்கு குரு திசை நடக்கிறது. லக்னாதிபதி ஆட்சி பெற்று 7 ஆமிடத்தை பார்ப்பதால் திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும்.   காதலுக்குரிய சகல அமைப்பும் ஜாதகத்தில் உள்ளதாலும் திசா நாதன் குருவிற்கு புதன் கேது தொடர்பு உள்ளதாலும் ஜாதகர் காதலித்தார். அதுவும் பிரச்சனை வேண்டாமென்று தாய்மாமன் மகளையே காதலித்தார். உறவு என்பதால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய ஏற்பாடானது.

ஜாதகத்தை நன்கு கவனியுங்கள் கால புருஷனுக்கு 2, 7 க்குரிய சுக்கிரனின் இரு வீடுகளும் பாவக்கிரகங்களால் பாதிக்கப்பட்டுள்ள்ளது. களத்திர கிரகங்கள் சுக்கிரன், செவ்வாய் & 7 ஆமதிபதி புதன்  ஆகிய மூன்று கிரகங்களுமே தத்தம் பகை கிரகங்களுடன் தொடர்பில் உள்ளன. லக்னாதிபதியும் குடும்ப காரகனுமான குருவும் பாதகாதிபதி கிரகத்துடனும், 6 ஆமதிபதியுடனும் குடும்ப வாழ்க்கைக்கு எதிராக செயல்படும்  சந்நியாச – ஆன்மீக கிரகம் கேதுவுடனும் தொடர்பில் உள்ளது. எனவே ஜாதகருக்கு திருமண விஷயத்தில் பாதகமில்லாமல் சாதகமில்லை என்பது புலனாகிறது.  2 ஆமிடமான குடும்ப பாவத்திலும் ஒரு பாவக்கிரகமே இருந்தாலும் அது பாக்யாதிபதியும் தந்தை – மாமனாரை குறிக்கும் சூரியனாக இருப்பதால் ஜாதகருக்கு குடும்பம் அமைகையில் தந்தையும் மாமனாரும் உதவியாக இருப்பார்கள் எனலாம்.

திருமண நாளின்  கிரக நிலையை கீழே.

ராசிக்கு 6 ல் கோட்சார குரு செல்லும் காலம் அமையும் திருமணங்கள் குளறுபடிகளை சந்தித்தே ஆக வேண்டும். லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் லக்னாதிபதி போகும் காலம் திருமணம் நடந்தால் ஜாதகர் அவமானங்களை சந்தித்த பிறகே திருமணம் செய்வார்.  7 ஆமிடத்திற்கு குரு பார்வை கிடைக்கும் காலம் திருமணம் செய்வதே சிறப்பானது. சிறப்பான குடும்ப வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதியரின் ஜாதக திருமண விபரங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புரியும். ஜாதகத்தில் உள்ள தோஷ அமைப்பைக்கூட சரியான திருமண முகூர்த்தத்தின் மூலம் குறைத்துக்கொள்ளலாம்  என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருமண நாள் என்பது மிகுந்த கவனத்துடன் தகுந்த ஜோதிடரைக்கொண்டு குறிக்கப்பட வேண்டும்.  குரு ராசிக்கு 6 லும் லக்னாதிபதி குரு அவமான ஸ்தானமான 8 ஆமிடத்திலும் செல்லும் காலத்தில் திருமண முகூர்த்தம் அமைந்துள்ளது.

ஜாதகருக்கு லக்னாதிபதியும் குடும்ப காரகனும் லக்னதிலிருந்து 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குருவின் திசையில் 7 ஆமதிபதி புதனோடு இணைந்து நிற்கும் களத்திர காரகன் சுக்கிரனின் புக்தியில் லாப ஸ்தானத்தில் குரு சாரத்தில் நிற்கும் 2 ஆமதிபதி சனியின் அந்தரத்தில் திருமண நாள் குறிக்கப்பட்டது. திருமண நாளில் கோட்சார சந்திரன் 2 ஆமிடத்தில் நிற்கும் சூரியனின் உத்திரத்தில் கன்னியில் நிற்கிறார். திருமண நாளின் கிழமை குருவாரமான வியாழக்கிழமை ஆகும். 

இந்த ஜாதகத்தில் திசா நாதனான லக்னாதிபதியைவிட லக்னத்தில் நிற்கும் பாதகாதிபதி புதனுக்கு வலு கூடியுள்ளது. இதனால் திருமண நாளன்று காதலியான மாமன் மகள் கடைசி நேரத்தில் ஏற்பட்ட மனதடுமாற்றத்தில் (மனத்தடுமாற்றம் – புதன்)  திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால் திருமண மண்டபமே திகைத்துவிட்டது. இறுதியில் மணமகளின் தந்தையும் தாய் மாமனுமான மாமனார் (தாய் மாமன் – புதன்)  தனது இரண்டாவது மகளை அதே முகூர்தத்தில் ஜாதகருக்கு திருமணம் செய்வித்தார். இங்கு ஏழாமதிபதியான  பாதகாதிபதி திருமண விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார். திசா நாதன் லக்னாதிபதியானதால் குழப்பம்  தீர காரணமானார். இளைய மற்றும் கடைசி மகளை புதன் குறிப்பதால் கடைசி பெண்ணை திருமணம் செய்வித்ததால் காரக அடிப்படையில் புதனும் சமாதானம் அடைந்து திருமணம் நடக்க வழிவிட்டது. அதனால் புதனின் அம்சமான தாய் மாமனும் சூரியனின் அம்சமான மாமனாரும் (இருவரும் ஒருவரே)  ஜாதகரின் கௌரவத்தை காப்பற்றி குளறுபடிகளை கலைந்து திருமணத்தை நடத்திவைத்தார்.

நமது திருமணத்தில் இப்படி நடந்துவிட்டதே என்று புலம்புவதைவிட அத்தகைய சூழல்களில் பாதிக்கும் கிரகம் தனது வேலையை செய்கிறது என்ற அமைப்பில் நிதானத்துடனும்  சாதுர்யத்துடனும் சூழ்நிலைகளை எதிர்கொண்டு சமாளிக்க முயலவேண்டும். முக்கியமாக திருமண திட்டமிடலில் தகுந்த ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது சிரமங்களை எதிர்கொண்டு சம்மாளிக்க உதவும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Friday 13 December 2019

மகரச் சனி ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்கள் என்ன?


ஜீவன கார கிரகம் சனி கோட்சாரத்தில் எப்போது கேதுவின் பிடிக்குள் அகப்பட்டதோ அப்போதிலிருந்தே உலக அளவில் தொழில் வளமும் அதனை சார்ந்த வேலைவாய்ப்பும்  தடுமாறுகின்றன. சனி-கேதுவோடு தற்போது தன காரகன் குருவும் வந்து சேர்ந்துவிட்டதால் வேலை வாய்ப்பும் தனப்புழக்கமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி தடைபட்டு வேலை வாய்ப்பு பறிபோகின்ற சூழலில் உலகில் இன்று பெரும்பாலான நாடுகளில் போராட்டங்கள் தலைதூக்கியிருக்கின்றன. வாகனத்துறை மட்டுமின்றி அணைத்து துறைகளும் இன்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கின்றன. முதலில் சனிதான் கேதுவின் பிடிக்குள் இருந்து அடுத்த வரும் ஜனவரி நான்காவது வாரத்தில் வெளி வருகிறார். அதன்பிறகு குருவும் மார்ச் மாதம் அதிசாரமாகி மகரத்திற்கு போகிறார். இது ஒரு நல்ல அமைப்பு. ஜீவனகாரகனும் கால புருசனின் 10 ஆமதிபதியுமான சனி மகரத்தில் ஆட்சி பெற்று அதிசாரமாக மகரத்திற்கு வரும் குருவின் தொடர்பு பெறுகிறார்.  மகரத்தில் நீசமடையும் குரு  அங்கு ஆட்சியாய் அமர்ந்துள்ள சனியோடு சேரும்போது நீச பங்கமடைகிறார்.


மகரத்தில் உத்திராட நட்சத்திரத்தில் சனியும் குருவும் இணைந்திருக்கும்போது அரசுகள் பொருளாதார ரீதியான தங்களது கட்டுப்பாடுகளை தளர்த்தும். இதனால் குறிப்பாக அமெரிக்கா-சீனா போன்ற நாடுகளிடையே மட்டுமல்ல இதர நாடுகளும் தங்களுக்குள் பொருளாதார ரீதியாக உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் என எதிர் பார்க்கலாம். 2020 பிற்பகுதியில் ராகு ரிஷப ராசிக்கும் குரு முறையாக பெயர்சியடைந்து மகர ராசிக்கும் வரும் காலத்தில் உலகின் போக்கு வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும். புதுமைக்கு உரிய ராகு கால புருஷனுக்கு 2 ஆமிடத்தில் உச்சமாவதால் பாரம்பரியமான துறைகள் யாவும் புதுமையான நவீன முறைக்கு மாறும். வேலை வாய்ப்புகள் பெருகும் என எதிர்பார்க்கலாம். மகரத்தில் சூரியனின் உத்திராடம்-2 ல் ஆட்சி வீட்டிற்கு வரும்  சனி மக்களிடையே சுய தொழில் சிந்தனையை தூண்டுவார். ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் திசை நடப்பவர்களும் ஜனன சனியோடு ராகு-கேதுக்கள் நல்ல முறையில் அமைந்துள்ளவர்களுக்கும் 2020 ன் பிற்பகுதி முதல் சிறப்பான காலமாக இருக்கும் எனலாம். கடந்த முறை ராகு ரிஷப ராசிக்கு வந்த பிறகுதான் தகவல்தொடர்பு சாதனப்பொருட்கள் சாமானியனுக்கும் கிடைக்கப்பெற்று தொழில்துறை ஒரு புதிய பரிணாமத்தை அடைந்தது. அப்போது ராகு ஏற்படுத்திய தாக்கத்தால்தான் தகவல் தொழில்  நுட்பத்துறை நமது தேசத்தின் முதன்மையான அந்நியச்செலவாணியை பெற்றுத்தரும் துறையாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

சுய தொழில் ஒருவருக்கு சிறக்க வேண்டும் என்றால் லக்னாதிபதி எனும் முதன்மை கிரகம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவின்றி அமைந்துவிட்டால் ஒருவருக்கு போராட்ட மனோபாவமும் நிர்வாகத்திறனும் இருக்காது. எனவே லக்னாதிபதி பலம் முக்கியம். இரண்டாவதாக நிர்வாகத்திறமைக்கு உரிய சூரியன் நன்கு அமைந்திருக்க வேண்டும். 3 ஆவதாக சுய தொழிலை குறிக்கும் 10 ஆமிடம் சிறப்பாக அமைய வேண்டும். 1௦ ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெறுவது சிறப்பு. அல்லது 1௦ ஆமிடத்தில் ஒரு உச்ச கிரகம் இருப்பது  சிறப்பு. 1௦ ஆமிடத்தில் இருக்கும் கிரகம் பாவ கிரகமாக அமைவது சிறப்பு.  லக்ன கேந்திரங்களில் பாவிகள் அமைவது நன்று. சுபர்கள் அமையக்கூடாது. சனி சந்திரன் தொடர்பு சுயதொழில் சிந்தனைக்கு சிறந்தது. சந்திரன் தனித்து 6, 8, 12 ல் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் ஜாதகரிடம்  மன உறுதியும் கண்டிப்பும் இன்மையால் தொழில் நஷ்டமடைவது உறுதி.

இனி சுய தொழிலுக்கு சாதகமான சில ஜாதக அமைப்புகளை காண்போம்.

முதலில் ஒரு பெண்ணின் ஜாதகம்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னாதிபதி 1௦ ஆமதிபதியுடன் 9 ல் இணைவு பெற்றுள்ளார். 1௦ ஆமிடத்தில் ஒரு பாவக்கிரகமான கேது உச்சம் பெற்றுள்ளார். ஜீவன காரகன் சனி இயந்திர காரகன் செவ்வாயுடன் இணைந்துள்ளதால் ஜாதகி தையல் நிறுவனம் அமைத்து பலருக்கு வேலை தருகிறார். நாடி ஜோதிட விதிப்படி சுக்கிரன் ஜாதகியை குறிக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் நிர்வாகத்தை குறிக்கும் சூரியனுடன் இணைந்துள்ளது இயல்பான நிர்வாகத்திறனை ஜாதகிக்கு கொடுக்கிறது. பொதுவாக சிம்ம ராசி மற்றும் லக்னம் அமைந்தவர்கள் சுபாவ குணத்திலேயே நிர்வாகத்திமையை பெற்றிருப்பார்கள்.  ஜாதகிக்கு ராகு திசை நடக்கிறது. ராகு உச்சம் பெற்ற நிலையில் சுக்கிரனின் வீட்டில் அமைந்து திசை நடத்துகிறது. ஜாதகி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆடைகளை (சுக்கிரன் – ஆடை)  தனது நிறுவனத்தின் மூலம் தைத்து தருகிறார்.

இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சனி 8 ல் மறைவது சிறப்பல்ல. 1௦ ஆமிடத்தில் சந்திரன் நீசம் பெற்று சனியின் அனுஷம் -1 ல் அமைந்துள்ளதால் இவருக்கு இயல்பிலேயே தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதை அறியலாம். 8 ஆமிட சனி சந்திரனின் நட்சத்திரத்தில் ஹஸ்தம் – 3 ல் நிற்பதால் இங்கே சனிக்கும் சந்திரனுக்கும் சாரப்பரிவர்தனை உள்ளது.  அதனால் சந்திரனின் நீசம் பங்கப்படுகிறது. சனிக்கு வீடு கொடுத்த வியாபார கிரகம் புதன் ஆட்சி குருவுடன் அஸ்தங்கமடையாமல் சேர்ந்துள்ளதால் புதனும் நீச பங்கமடைந்துள்ளார்.  ஜாதகர் 1௦ ஆமிடத்தில் அமர்ந்த சந்திரன் குறிக்கும் பஞ்சு மில் (Spinning Mill) வைத்து வெளிநாடுகளுக்கு நூல் ஏற்றுமதி செய்துவருகிறார். கால் பாதம் மற்றும்  ஊழியர்களை குறிக்கும் சனி இரட்டை கிரகமான புதனின் வீட்டில் வக்கிரமடைந்து பாத ராசியான மீனத்தை பார்ப்பதால் இவரது நிறுவனத்தில் கணக்கு வழக்குகளை கால் ஊனமான ஊழியர்கள் இருவர் கவனித்து வந்தனர். இந்த ஜாதகத்தில் சனி-சந்திர சார பரிவர்த்தனையை கவனிக்காமல் விட்டுவிட்டால் பலன் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வக்கிரம் பெற்ற நிலையில் சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். சூரியன் மேஷத்தில் உச்ச நிலையில் உள்ளார். மேற்பார்வைக்குரிய செவ்வாய் உச்ச சூரியனுடன் இணைந்து ஆட்சியில் உள்ளார். இத்தகைய அமைப்புகளால் இந்த  ஜாதகருக்கு இயல்பாகவே சுய தொழில் எண்ணம் இருப்பது புலனாகும். 9 ல் லக்னாதிபதி அமைந்து 9 ஆமதிபதி உச்சமானதால் ஜாதகரின் தந்தை ஏற்படுத்தி வைத்திருந்த தொழிலையே ஜாதகர் தொடர்ந்து கவனித்து வருகிறார். 1௦ ஆமிடத்தில் ஒரு பாவி இருக்க நிர்வாகச் சிறப்பு என்றபடி கேது கன்னியின் இருக்கிறார். ராகு மீனத்தில் இருக்கிறார். வங்கி வரவு செலவுகளை குறிக்கும் புதன் உச்ச சுக்கிரனுடன் இணைந்து நீச பங்கமான நிலையில் அமைந்துள்ளார். ராகு – கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் இல்லை என்றாலும் ராகு மீனத்தையும் கேது கன்னியையும் இயக்கும் என்ற விதிப்படி கன்னி கேது குறிக்கும் கடனை வங்கி மூலம் பெற்று தனது தொழிலை ஏழரை சனியிலும் சிறப்பாக நடத்திவருகிறார். இந்த ஜாதகத்தில் சந்திரன் 12 ல் நீசம் இவருக்கு சுய தொழில் சிறப்பில்லை என்ற விதி  இங்கு ஏன் செயல்படவில்லை என்ற கேள்வி எழும். ஜாதகர் சந்திரன் குறிக்கும்  அன்றாடம் அழியக்கூடிய காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். சந்திரன் சனியின் அனுஷம் – 2 ல் நீசமாகியுள்ளார்.  சனியின் மற்றொரு நட்சத்திரத்திரம் உத்திரட்டாதி – 4 ல்  உச்ச சுக்கிரன் நிற்கிறார். இதனால் சனிக்கும் சனியின் சாரத்தில் நிற்கும் கிரகங்களுக்கும் வலு கூடும். இதனால் சந்திரன் இங்கு நீச பங்கமடைகிறார். 12 நிற்கும் சந்திரன் பாதிப்பை தராமைக்கு ஜாதகர் சந்திரனின் அன்றாடம் அழியக்கூடிய காரக தொழிலை செய்வதும், சந்திரன் நீச பங்கம் பெற்றதும் காரணமாகும்.

நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

தனுசு லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமைந்துள்ளார். பல கிரக கூட்டில் லக்னாதிபதி அமைந்துள்ளதால் ஜாதகரின் எண்ணங்களில் தெளிவின்மை ஏற்படும். நிர்வாக சிறப்பை குறிக்கும் சூரியன் 1௦ ஆமிடத்தில் திக்பலம் பெற்று அமைந்துள்ளதால் ஜாதகருக்கு பணிக்கு செல்வதில் நாட்டம் இருக்காது. சுய தொழில் செய்யவே விருப்பம் ஏற்படும். சனியும் செவ்வாயும் நாயை குறிக்கும் கிரகங்களாகும். லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் கேது அமைவது கால்நடைகளோடு ஜாதகரை தொடர்புபடுத்தும் அமைப்பாகும். 4 மற்றும் 6 ஆவது பாவங்களும் வளர்ப்பு பிராணிகளை குறிக்கும் பாவங்களாகும்.  ராசிகளில் துலாமும் மேஷமும் நாயை குறிப்பிடும் ராசிகளாகும். துலாம் ராசிக்கு சனி – செவ்வாய் தொடர்பு ஏற்பட்டால் வீட்டில் நாய் வளர்ப்பர். இங்கு சந்திரனோடு பரிவர்த்தனை பெரும் செவ்வாய்   துலாம் ராசியையும் சனியையும் பார்க்கிறது. ஜாதகர் நாய்களை இனப்பெருக்கம் செய்வித்து விற்பனை செய்து பொருளீட்டி வருகிறார். ஜாதகருக்கு ராகு திசையில் சுய புக்தி அடுத்த ஆண்டு முற்பகுதிவரை நடக்கிறது. இத்தகைய தொழிலை செய்வதற்கு திசா நாதன் ராகுவும் முக்கிய காரணமாகும். ஆனால் ராகு குரு சாரத்தில் விசாகம் – 1 ல் சுபர்களோடு இணைந்து நிற்பதால் ராகுவின் சுயபுக்தி முடிந்த சில காலங்களில் தனது தொழிலை மாற்றியாக வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் சனி வக்கிரமடைவது ஜீவன விஷயத்தில் ஜாதகர் உறுதியாக ஒரு எண்ணத்தில் இருப்பதை குறிக்கும். சனி வக்கிரமடைந்த பெரும்பாலான ஜாதகர்கள் பணிக்கு செல்ல முடியாமலும் சென்றாலும் பணியில் ஒன்ற முடியாமல் சுய தொழில் செய்யவே விரும்புவதையும் காண முடிகிறது.  லக்னாதிபதி வக்கிரமடைந்தாலும் லக்னத்திலோ அல்லது லக்ன திரிகோணங்களில்லோ வக்கிர கிரகங்கள் அமைய பெற்றவர்களுக்கும் இந்த குணம் இருப்பதை அறிய முடிகிறது.


மீண்டும் அடுத்தவார பதிவில் சந்திப்போம்.

உங்களுக்கான தொழிலை தெரிந்துகொள்ள

அழைப்பீர்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501.

Wednesday 4 December 2019

திருட்டும் ஜோதிடமும்


ஜோதிடத்தில் பொருளாதார வளமைக்கு உரிய கிரகங்களாக குரு, சுக்கிரன், ராகு, புதன் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.  குரு பெரிய அளவிலான பணப்புழக்கத்தையும், சுக்கிரன் சிறிய அளவிலான பணப்புழக்கத்தையும், ராகு அந்நிய தொடர்புகள் மூலம் புழங்கும்  பணத்தையும், புதன் வியாபாரத்தின் மூலமும், வங்கிக்கடன், பத்திரங்கள், காலி மனைகள் இவற்றை முன்னிட்டு புழங்கும் பணத்தையும் குறிக்கின்றன. சூரியன் அரசு வழங்கும் கடனையும் அதை பெறுபவரையும் குறிக்கும். சூரியன்-ராகு தொடர்பு ஏற்பட்டால் இயக்கம், பொதுச்சேவை செய்வர். இச்சேர்க்கையை குரு பார்ப்பின் இவர்களது பொதுச்சேவை பாராட்டப்பெறும். இவர்களது சேவையால் பல்லாண்டு நிலைத்து நிற்கும் பேறு பெறுவார். சூரியன் – ராகு சேர்க்கையை குருவோ அல்லது இதர சுபர்களோ பார்க்கவில்லை எனில் பொதுச்சேவையில் ஊழல் செய்வர். அதனால் இத்தகையவர்கள் இறந்த பின்னும் பல்லாண்டுகளுக்கு மக்களால் தூற்றப்படுவர். (ஊழல் அரசியல்வாதிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்)  சூரியனுக்கு குரு சேர்க்கை ஏற்படின் கோவில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்படுத்தும். சூரியன் பாவ ஆதிபத்தியத்தில் கெட்டிருந்தால் கோவில் நிர்வாகத்தில் கொள்ளை அடிப்பர். அதனால் இவர்களுக்கு புற்று நோய் போன்ற கொடிய நோய் வரும்.


செவ்வாய் பாதிக்கப்பட்டிருப்பின் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை மூலம் தனத்தை அடையும். இன்று நகரங்களில் நடக்கும் திருட்டுக்களில் பெரும்பாலானவை வன்முறையிலானவை. போகிற போக்கில் சாதுரியமாக கண்ணியமான தோற்றத்தில் திருடுவது பாதிக்கப்பட்ட சுக்கிரனாகும்.  திருடியவர் சுக்கிரனின் அம்சம் எனில் நம்புவது கடினம் என்றவகையில் இது அமையும். பாதிக்கப்பட்ட புதன் சாதுரியமாகவும் திட்டமிடலோடும் திருடும். சந்திரன் பணத்தின் மீதான சிந்தனையையும், செவ்வாய், கேது ஆகியவை பணத்தின் மீதான கட்டுப்பாட்டையும் குறிக்கும். சனி உழைப்பின் மூலமாக பெறும் பணத்தை குறிக்கும். உழைப்புக்கும் நேர்மைக்கும் உரிய சனி ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்து சந்திரன் தொடர்பு பெறும்போது உழைப்பின் மூலம் அடைய முடியாத தனத்தை திருடிப்பெற முனையும்.

காலபுருஷனுக்கு சுக ஸ்தானாதிபதியான கடக ராசி ஆதிபதி  சந்திரன் உழைக்காமல் திருட வேண்டும் என்ற சிந்தனையை பாதிக்கப்பட்ட சந்திரன் ஏற்படுத்தும். கால புருஷனுக்கு 1௦ ஆமிட அதிபதி கடகத்திற்கு நேர் எதிரான மகர ராசியாகும். இதனால் திருடர்களின் ஜாதக அமைப்பில் சனி-சந்திரன் ஏதாவது ஒரு அமைப்பில் சம்பந்தம் பெறும்.  சந்திரன் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் நீச்சமாகிறது. விருட்சிகம் கால புருஷனுக்கு 8 ஆம் பாவம் என்பதால் ரகசியம் காக்கும். எனவேதான் கால புருஷ லக்னத்திற்கு 8 ஆமிட தொடர்பு பெறுவதால் உழைக்காமல் ரகசியமாக திருடுவதற்கு காரக கிரகமாக சந்திரன் திகழ்கிறார். (சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தவன் வெண்ணையையும் நம் மனதையும் திருடிய கண்ணன்). கடகத்தில் சனியின் பூச நட்சத்திரமும் விருட்சிகத்தில் சனியின் அனுஷ நட்சத்திரமும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 8 ஆவது பாவம் திருட்டை குறிக்கும் பாவமாகிறது.  கண நேரத்தில் கவனத்தை திசை திருப்பி திருடுவதற்கு எல்லாம் சந்திரனே காரணம்.  சந்திரன் தொடர்பில்லாத திருட்டே இல்லை. சந்திரன் எந்த கிரகத்துடன் சேர்க்கையில் உள்ளதோ அல்லது பார்க்கிறதோ அந்த கிரக காரகதிற்கு திருட்டு மனோபாவத்தை ஏற்படுத்துவார்.

கேது சட்டப்படியான தண்டனை கொடுக்கும் கிரகமாகும். சந்திரனுக்கு கேது தொடர்பிருந்தால் திருட்டு ஜாதகர் எத்தனை வருஷமானாலும் கேது தொடர்புடைய திசா புக்தி வந்து ஜனன சந்திரன் மேல் கோட்சார கேது போகும்போது அல்லது ஜனன கேது மீது கோட்சார சந்திரன் போகும் காலத்தில் தண்டனை அடைவது உறுதி. தண்டனை கொடுக்கும் கிரகங்களான செவ்வாய் (காவல்துறை), சூரியன் (அரசு), சனி (கர்ம காரகன்) ஆகியோரை கர்ம வினைகளின் பொருட்டு ராகு-கேதுக்கள் செயல்படாமல் செய்து தண்டனையை நிறுத்தி வைப்பதும் உண்டு. திருட்டின் தன்மை சந்திரன் மற்றும் 8 ஆமிட  தொடர்புகளைப்பொருத்து அமையும்.

கீழே  ஒரு பெண்மணியின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் 6, 9  ஆமதிபதி குரு லக்னத்தில் உச்ச நிலையில் திக்பலம் பெற்று கேதுவுடன் இணைவு பெற்றுள்ளார். குரு -  கேது தொடர்பு கோடீஸ்வர யோகம் என கூறப்பட்டாலும் பெரிய தனத்தை குறிக்கும் குரு கடனை குறிக்கும் கேதுவோடு தொடர்பு பெறுவது பொருளாதார வாழ்கையில் உயர்வை தந்தாலும் ஜாதகருக்கு கடனும் பெரிய பொருளாதாரத்தை இழப்பதையும் சேர்த்தே இது தரும். சுக்கிரன் பாதகாதிபதியாகி இரண்டாமிடத்திலும் பாவகத்தில் லக்னத்திலும் சூரியன் மற்றும் வக்கிர புதனுடன் இணைந்து 2 ஆவது பாவக ரீதியான பாதிப்பை தர வேண்டிய நிலையில் உள்ளார். . லக்னாதிபதி சந்திரன் மீனத்தில் குருவின் பூரட்டாதி – 4 ல் நின்றாலும் பாவத்தில் லக்னத்திற்கு 8 ல் நின்று அதன் வீட்டதிபதி வக்கிர சனியின் 3 ஆவது பார்வையை பெறுகிறார். இப்படி 8 ஆமிட தொடர்பை லக்னாதிபதி சந்திரன் பெறுவதால் திருட்டு தொடர்புடைய விஷயங்களை ஜாதகர் எதிர்கொள்வார் எனலாம். திசா நாதன் புதன் பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெற்று சுக்கிரனின் பூரம் – 4 ல் நின்று திசை நடத்துகிறார். 2 க்கு விரையத்தில் நிற்கும் கேதுவின் மகம் – 2 சாரம் பெற்ற சுக்கிரனின் புக்தியில் பூராடம் – 4 ல் தனுசுவில் நிற்கும் 8 ஆமதிபதி சனியின் அந்தரத்தில் தன ஸ்தானத்திற்கு விரையத்தில் லக்னத்தில் 8 ஆமதிபதி சனியின் பூசம் – 3 சாரம் பெற்ற கேதுவின் அந்தராந்திரத்தில் ஜாதியின் வீட்டில் 15 சவரன் நகை திருடு போனது. 8 ஆமதிபதி சனி சாரம் பெற்று லக்னத்தில் நிற்கும் குரு தங்கத்தை குறிக்கும் காரக கிரகமாவார்.

இரண்டாவதாக ஒரு திருட்டுப்பெண்ணின் ஜாதகம்.

கன்னி லக்ன ஜாதகத்தில் விரையாதிபதி சூரியன் உச்ச சனியோடு இணைவு பெற்று நீச பங்கம் அடைகிறார். குரு, சுக்கிரன்,  புதன் மூவரும் அஸ்தங்கம் பெற்றுள்ளனர். திருட்டுக்கு காரக கிரகமான சந்திரன் 10 ஆமதிபதியாகி சனி தொடர்புகொண்டுள்ளார். இந்த ஜாதகி திருடுவதையே தொழிலாகக்கொண்டவர்.  பாதகாதிபதி குரு பாதகஸ்தானமான மீனத்திற்கு 8 ல் பகை வீட்டில் அரசாங்கத்தை குறிக்கும் சூரியனால்  அஸ்தங்கமாகி திசை நடத்துகிறார். ஜாதகரது செயல்களை  கண்காணித்து தவறுகளுக்கு தண்டனை வழங்கும் பாதகாதிபதி வலுவிழப்பதால் ஜாதகி தண்டனைகளில் இருந்து தப்புதவதை குருவின் அஸ்தங்கம் குறிக்கிறது. புக்தி நாதன் ராகு சுயசாரத்தில் திருவாதிரை- 2 ல் நின்று புக்தி நடத்துகிறார். அந்தர நாதனான உச்ச அஸ்தங்க சனி  தனது பகைவரான செவ்வாயின்  சித்திரை – 4 ல் நின்று அந்தரத்தை நடத்துகிறார். இந்த நிலையில் ஜாதகியைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் ஜாதகி திருடும் சமயத்தில் பொறி வைத்து கையும் களவுமாக ஜாதகியை பிடித்தனர். அரசாங்கத்தை குறிக்கும் சூரியனும் காவல்துறையை குறிக்கும் செவ்வாயும் லக்ன பாவிகளானதால் ஜாதகியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தும் ஜாதகி தண்டனையின்றி வெளியே உலாவிக்கொண்டுள்ளார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கும்ப லக்ன ஜாதகத்தில் திருட்டை குறிக்கும் பாவமான 8 ஆமதிபதி புதன் தன்னுடன் இணைந்து 8 ஆவது பாவத்தில் நிற்கும் சூரியனின் உத்திரம் – 2 இல் நின்று திசா – புக்தியை நடத்துகிறார். 8 ஆமதிபதி புதனின் சார நாதன் சூரியன் திருட்டுக்கு காரக கிரகமான சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறார். சந்திரனின் வீட்டில் அந்தர நாதன் சனி, 8 ஆமதிபதி புதனின் ஆயில்யம் – 2 ல் நின்று அந்தரம் நடத்துகிறார். புதனின் அந்தராந்திர காலத்தில் மாட்டை குறிக்கும் ரிஷப ராசியில் சூரியனின் கார்த்திகை–4 ல் நின்ற குருவின் அமைப்பால் ஜாதகரின் 2 மாடுகள் திருடு போயின. புதன் இரட்டை தன்மையை குறிக்கும் கிரகம் என்பதை கவனிக்க.

பல்வேறு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருட்டு பற்றிய எனது ஆய்வு இங்கே பதிவிடப்பட்டது. எனது பதிவுகளை திருடி தங்களது தளத்தில் பதிவிட்டுக்கொள்ளும் ஜோதிடர்களுக்கும் ஒரு ஜாதக அமைப்பு இருக்கத்தான் செய்கிறது போலும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501

Thursday 28 November 2019

புத்திர பாவ நுட்பங்கள்


மேலோட்டமாக பார்க்கும் சில ஜாதக விஷயங்கள் உள்ளார்ந்து பார்க்கும்போது மாறுபட்டுத் தெரியலாம். புத்திர வகையில் தம்பதியர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்வது முக்கியம். இரு ஜாதகங்களை இணைக்கும்போது ஒருவரது ஜாதகத்தை மற்றொருவரது ஜாதகம் பாதிக்கும். உதாரணமாக பெண்ணின் ஜாதகத்தில் 5 ஆம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பின் ஆணின் ஜாதகத்தில் வலிமையான குரு பெண்ணின் பாதிக்கப்பட்ட 5 ஆம் பாவத்தை பார்க்கும் அமைப்பில் பெண்ணின் புத்திர பாவ தோஷம் கட்டுப்படுத்தப்படும்.  இன்றைய பதிவில் தனிப்பட்ட ஜாதகத்தில் புத்திர பாக்கியத்தை அலசுவதில் உள்ள சில நுட்பங்களை உதாரண  ஜாதகங்களுடன் பார்ப்போம்.



ஒரு ஆணின் ஜாதகம் கீழே.

கன்னி லக்ன ஜாதகத்தில் 5 ஆமதிபதியான சனி விரையாதிபதி சூரியனுடன் இணைந்து 1 பாகை முன்னிலையில் அஸ்தங்கம் பெற்றுள்ளார். உயிரணு உற்பத்திக்கு காரகன் சூரியனுடன் சூரியனின் பகைக்கிரகம் சனி இணைவது புத்திர பாக்கியத்திற்கு தடை, தாமதத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  ராகு புத்திர ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்து குழந்தைபேறுக்கு சாதகமான அமைப்பு அல்ல. புத்திர காரகன் குரு வக்கிரமடைந்து அஷ்டமத்தில் மறைந்த நிலையில் உள்ளார். பொதுவாக இத்தகைய அமைப்புகள் புத்திர பாக்கியத்திற்கு தடை என பொதுவாக ஒதுக்கிவிடக்கூடாது. இத்தகைய தடைகளுக்கு எதிர் அமைப்புகள் உள்ளதா? அதன் அளவு என்ன? அது வெளிப்படும் திசா புக்திகள் ஆகியவற்றை ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும்.

அப்படி கவனிக்கையில் லக்ன பாதகாதிபதி  குரு வக்கிரமடைவது குருவால் ஏற்படும் பாதகத்தன்மை மாற்றமடைவதையும் 8 ல் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதற்கிணங்க குருவால் நன்மையே ஏற்படும் என்பதும் தெளிவாகிறது. லக்னாதிபதி புதனுக்கும் குடும்ப பாக்யாதிபதி சுக்கிரனுக்கும் 8 ஆமிட குருவின் பார்வை கிடைப்பது சிறப்பானது. குரு  பார்வை இவ்விரு கிரகங்களுக்கும் ராசிக்கு 5 ஆமிடத்தில் கிடைக்கிறது என்பது கூடுதல் பலமாகும். மேலும் மேஷ குரு பரணி – 4 லிலும் துலாச்சுக்கிரன் விசாகம் – 1 லிலும் அமைந்து சாரப்பரிவர்தனை பெறுகின்றனர். குடும்பத்திற்கு புதிய வரவை குறிக்கும் சுக்கிரன் 5 க்கு 5 ஆமிடமான (பாவத் பாவ)  ரிஷபத்திற்கும் உரியவராகி குருவுடன் பரிவர்த்தனை பெறுவது மிகச்சிறப்பானதாகும்.  இது மட்டுமின்றி இந்த ஜாதகத்தில் குரு – சுக்கிரன் சாரப்பரிவர்தனை பெறுகிறார்கள் என்றால் குருவும் சதுர்த்த கேந்திரத்தில் குருவின் வீட்டில் அமைந்த செவ்வாயும் நேரடியாகவே பரிவர்த்தனை பெறுகின்றனர். இதனால் நன்மை செய்யும் நிலையில் அமைந்த லக்ன பாதகாதிபதி குருவுடன் தொடர்புகொள்ளும் செவ்வாயும் ஜாதகத்தில் நன்மை செய்யும்  நிலையிலேயே அமைந்துள்ளது. இத்தகைய பரிவர்தனைகளால் குரு, சுக்கிரன், செவ்வாயும் இவை சாரம் பெரும் கிரகங்களும் நன்மையையே செய்ய வேண்டிய நிலை பெறும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும் சூரியனும் சனியும் செவ்வாயின் சித்திரையில் அமைந்துள்ளனர். ஐந்தாம் பாவத்தில் அமைந்த ராகுவும் செவ்வாய் சாரத்தில் அவிட்டத்தில் நிற்கிறது. இதனால் சுபத்துவமடைந்த செவ்வாயின் சாரம் பெற்றதால் சனி சூரியன் சேர்க்கையால் ஏற்படும் உயிரணு குறைபாடு ஜாதக அமைப்பிலேயே நிவர்த்தியாகிவிடுகிறது. ஜாதகருக்கு சனி திசையில் புதனின் புக்தியில் பெண் குழந்தை பிறந்தது.

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகத்தில் புத்திர ஸ்தானத்தில் 5 ஆவது பாவத்தில் சனி அமைந்து லக்ன பாதகாதிபதி செவ்வாயின் பார்வையை பெறுகிறது. குருவின் வீட்டில் சனி-செவ்வாய் தொடர்பு பெறுவது இவ்விரு கிரகங்களின் கடுமையை மட்டுமே குறைக்கும். குரு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்து குடும்ப ஸ்தானத்தில் சுய சாரம் ஹஸ்தம்-2ல் நிற்கும்  சந்திரனை பார்ப்பது ஒரு நல்ல அமைப்பு. இது ஜாதகியின் இரத்தத்தில் கொழுப்பு அதிகம் இருப்பதை குறிக்கிறது. பாக்கிய ஸ்தானாதிபதி செவ்வாய் புதனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். மேலும் லக்னாதிபதி சூரியன் பெண்களுக்கு முக்கிய புத்திர ஸ்தானமான 9 ஆமிடத்தில் உச்சமாகி அந்த ஸ்தானத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். குரு 5 ஆவது பாவமான தனுசுக்கு 6 ல் அமைந்துள்ளது. 5 ஆம் இடத்து அதிபதி மற்றும் கால புருஷனுக்கு 9 ஆம் அதிபதி என்பது மட்டுமே ஓரளவு புத்திர பேறுக்கான சாதக நிலையாகும்.

5 ல் அமைந்த சனி பாதகாதிபதி செவ்வாயின் பார்வையை பெறுவதால் புத்திர பாக்கியத்தை ஒரு பாதகத்தை அடைந்த பின்னரே  பெறமுடியும் என்பது விதி. லக்னாதிபதி பாதகத்தில் இருப்பதும் இதையே உறுதி செய்கிறது.  ஜாதகி புத்திரப்பேறு தொடர்பாகவே ஜாதகம் பார்க்க வந்திருந்தார். பிரசன்ன ஜாதகமும் ஜாதகி விரைவில் புத்திரப்பேறை அடைய இருக்கிறார் என்பதையே காட்டியது. உண்மையில் அடியேன் குழம்பித்தான் போனேன். பிறகு கூறினேன் “ அம்மா பூர்வீகம் தொடர்பாக ஒரு பாதிப்பை நீங்கள் அடைந்து பிறகே புத்திரம் வாய்க்கும் அமைப்பு தங்கள் ஜாதகத்தில் உள்ளது” எனக்கூறினேன்.  அதற்கு ஜாதகி கூறிய பதிலில் ஆச்சரியமுற்றேன். ஜாதகி பிறப்பால் கிறிஸ்தவர். லக்ன கேது இதை குறிப்பிடுகிறது. சனி செவ்வாய், 5 – 9 தொடர்பால் ஜாதகி மதம் மாறி ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளார். எனவே 5 ஆமிடம் குறிப்பிடும் பூர்வீக வழிபாட்டு முறையிலிருந்து ஜாதகி மாறியுள்ளார். இதனால் 5 ஆமிடம் தனது பாதிப்பை அடைந்துவிட்டது. இனி புத்திரம் அடைய தடையில்லை. பாதிப்பை அடைந்த 5 ஆம் பாவ சனி ஜாதகியின் 3௦ வயது வரை புத்திரப்பேறை தாமதப்படுத்தியுள்ளது.  இந்த பதிவை எழுதும் சமயம் லக்னத்திற்கு 5 ஆமிடத்திற்கு வந்த கோட்சார குருவின் நிலையால் குரு  திசை சுய புக்தியில்  ஜாதகி கருவுற்றிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த ஜாதகத்தில் புத்திர தோஷம் கடுமையாக உள்ளதாகவே தெரியும்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

விருட்சிக லக்ன ஜாதகத்தில் லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் 1, 6 ஆமதிபதி செவ்வாய் அமர்ந்துள்ளார். கடகத்தில் புத்திர காரகனும் 5 ஆம் அதிபதியுமான குரு உச்சமாகி வக்கிரமும் ஆகியுள்ளார். உச்ச வக்கிரம் என்பது நீச நிலைக்கு ஒப்பானது. குரு பாதகாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். குருவின் 5 – 9 ஆமிட தொடர்பால் புத்திரம் உறுதியாக அமையும் என்றாலும் குருவின் உச்ச வக்கிரமாகி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றதால் பாதிப்பையும் அடையும் என உறுதியாகக்கூறலாம்.  இந்த ஜாதகத்திலும் 5 – 9 பாவங்கள் தொடர்பு பெறுவதால் ஜாதகரின் மகன் ஜாதி மாறி திருமணம் செய்துள்ளார். 5 ஆமிடமான பூர்வ புண்ணியம், முன்னோர்களை குறிக்கும் 9 ஆம் பாவங்களின் வடிவில் தோஷம் வெளிப்பட்டுவிட்டது.

புத்திர பாவத்தை ஆய்வு செய்வதில் குரு, 5 ஆம் பாவாதிபதிகளின் நிலைமை. மற்றும் இவர்களின் சாரத்தில் அமைந்த கிரகங்கள், இவை பெற்றுள்ள ஆதிபத்தியங்கள், திசா புக்திகள் ஆகியவற்றை ஆழ்ந்து ஆராய்தால் புத்திரத்தின் தன்மையை தெளிவாக அறியலாம்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501