Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Saturday, 14 August 2021

இரிடியத்தில் இன்வெஸ்ட் பண்ணலாமா?

 



மனிதர்கள் ஒருங்கிணைந்த சமுதாயமாக வாழ்ந்த பண்டைய காலத்தில் சக மனிதர்களிடம் நேசம் அதிகம் இருந்தது. அதன் காரணமாக சக மனிதரை ஏமாற்றுவதும் குறைந்திருந்தது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாக தனிமைப்பட்டு நிற்கும்  இன்றைய காலத்தில் சக மனிதன் மீதான நேசம் என்பது பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் சக மனிதனை ஏமாற்றிப்பிழைக்கும் மனிதர்கள் அதிகமாகிவிட்டனர். அரசே மக்களை ஏமாற்றுகிறது. மக்கள் சக மக்களை ஏமாற்றுகின்றனர். அதுவும் நவீன மின்னணு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துவிட்ட இக்காலத்தில் இவற்றை சார்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதை காணலாம். பல்வேறு வகையான மோசடிகள் பல்வேறு பெயர்களில் பிரபலமாகிவிட்டன. இரிடியம் மோசடி, மண்ணுள்ளிப்பாம்பு மோசடி, ஈமுக்கோழி மோசடி, இணைய வழி மோசடிகள், கைபேசி வழி மோசடிகள், முகநூல் வழி மோசடிகள் என்று இப்பட்டியல் நீளுகிறது. காலத்திற்குக்காலம் இத்தகைய மோசடிகள் புதிய அவதாரங்கள்  எடுக்கின்றன. தற்போது நடப்பில் உள்ளது அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் அரசியல் ஏஜெண்டுகளின் மோசடிகள்தான். பொதுவாக வங்கியை தவிர்த்து தனி நபர்களிடம் சேமிக்கும் சேமிப்பில்தான் மோசடிகள் நடக்கும் என்றால் தற்போது வங்கியில் பணியாற்றுவோரே மோசடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவை எல்லாவற்றையும் பார்த்து சாதாரண மனிதன் திகைத்து நிற்கிறான். பணம் கொடுத்து  அரசு வேலைக்கு முயற்சிக்கலாமா?, இரிடியம் நபர்களிடம் பணம் கொடுக்கலாமா? என்று என்னிடமும் பலர் ஜோதிடம் பார்க்க வந்துள்ளனர். நமது இன்றைய பதிவு இவற்றை ஆராய்வதே.

இரிடியம் 

பொதுவாக மோசடிகளுக்கு முதன்மை காரக கிரகம் என்று ராகுவை சொல்லலாம். மனிதனின் ஆசையை தூண்டிவிட்டு பிறகு இழப்பை கொடுத்து இறுதியாக உண்மையை உணர்த்துவது ராகு-கேதுக்களின் பணி. கேதுவின் மோசடியில் ஒரு தனித்துவம் இருக்கும். கேது ஆசை காட்டி இழப்பை கொடுத்து பிறகு ஜாதகரை நெறிப்படுத்தும். ஆனால் ராகு,  வகை தொகையற்ற மோசடிகளுக்கு காரக கிரகமாகும். ராகு கொடுக்கும் பாதிப்பிலிருந்து ஒருவர் விரைவில் மீளமுடியாது. சுக்கிரன் வளமையை நேசிக்கும் கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனுக்கு  ராகு-கேதுக்களின் தொடர்பு ஏற்படும் போது அந்த ஜாதகர் பண மோசடியில் சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது. ராகு-கேதுக்கள் இருவருமே ஆசையை தூண்டி தண்டிக்கும் கிரகங்கள் என்றாலும் தொடர்புடைய திசா புக்தி வரும் வரை இவைகள் காத்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ராகு-கேதுக்கள் குறுக்கு வழியில் கொடுக்கும் தனத்தை ஒருவர் அனுபவித்து விட்டால் அதன் பிறகு அந்த ஜாதகர் அவற்றின் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை எனலாம். அல்லது ஒரு இழப்பை ஜாதகருக்கு கொடுத்துவிட்ட பிறகு அவருக்கு முறையான மற்றும் முறையற்ற வகைகளில் உதவி புரிகிறது.  ஆனால் அதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. ராகு-கேதுக்களுக்கு குருவின் தொடர்பு ஏற்பட்டால் அந்த ஜாதகர் ராகு-கேதுக்களின் மூலம் நேர் வழியில் சிறப்பான தனம் ஈட்டுகிறார். உதாரணமாக கைராசி மருந்துவர், மிக நேர்மையான குற்றம் கண்டுபிடிக்கும் அதிகாரி, நேர்மையான நீதிபதி ஆகியோர் இவற்றின் அம்சங்களாகும். இப்படி குரு தொடர்பு பெற்ற ராகு-கேதுக்களுடைய ஜாதகர்களுடன், ராகு-கேதுக்கள் ஒரு தெய்வீக சக்தியாக உடன் பயணித்துக்கொண்டிருக்கும். இந்த வகை ஜாதகர்கள் மற்றவர்களின் கர்மாவை அவர்களை தண்டிப்பதன் மூலம் தீர்க்க அவதாரம் எடுத்தவர்கள் எனலாம்.

கீழே ஒரு ஜாதகம்.


இந்த ஜாதகி 1964 ல் பிறந்தவர். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். மாங்கல்ய பாவமான 8 ஆமிடம் பாவ கர்தாரி யோகத்தில் அமைந்துள்ளது.. இதனால் இந்த ஜாதகிக்கு மாங்கல்ய பலமில்லை. கேது சாரத்தில் மேஷத்தில் குரு நிற்கிறார். களத்திர பாவத்தில் சுக்கிரனின் சாரம் பெற்று நிற்கும் கேது முதலில் மாங்கல்ய, பாக்ய ஸ்தானாதிபதியான சனியையும் லக்னத்தில் நிற்கும் ராகு முதலில் 5 ஆம் பாவாதிபதியான சுக்கிரனையும் முதலில் தொடுகின்றனர். ஜாதகிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுக்கிரனை கடக்கும் ராகு அடுத்து தொடுவது களத்திர பாவாதிபதியான குருவைத்தான். இத்தகைய அமைப்புகளால் விதவையானவர் ஜாதகி. 5 ஆம் பாவாதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது நிற்பதால் இவரது மகள் ஒரு கிறிஸ்தவரை மணமுடித்துள்ளார். இந்த ஜாதகிக்கு ராகு-கேதுக்கள் தீய பலனை ராகு மற்றும் கேதுவோடு தொடர்புடைய குரு திசையில் கொடுத்துவிட்டன. தற்போது ஜாதகிக்கு பாக்ய ஸ்தானமான கும்பத்தில் மூலத்திரிகோணம் பெற்று நிற்கும் சனியின் திசை 2010 முதல் நடக்கிறது.  

மிதுனத்தில் அமைந்த லக்ன ராகு குறுக்கு வழி சிந்தனையை தூண்டுவார். கேது சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். பணத்தின் மீதான தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டுமெனில் தன காரக கிரகங்களான குருவும் சுக்கிரனும் ஆத்ம அல்லது தாரா காரகர்களாக இருக்க வேண்டும் அல்லது ராகு-கேதுக்கள் தொடர்பு பெறவேண்டும். இந்த ஜாதகத்தில் சுக்கிரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நிற்பது கவனிக்கத்தக்கது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட வலையில் சிக்க வைத்து  ஏமாற்ற வேண்டுமெனில் முதலில் அந்த குறிப்பிட்ட விஷத்யத்தின் மீது அவரது ஆசையை தூண்ட வேண்டும். ராகு முதலில் தொடப்போவது சுக்கிரனைத்தான். மேலும் ஆசையை தூண்டி சிக்க வைக்கும் காரக கிரகமான கேது பாதக ஸ்தானத்தில் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். எனவே ராகுவும்-கேதும்  ஜாதகிக்கு பணத்தின் மீதான ஆசையை தூண்டுவர். இந்த ஜாதகியை 9 ல் ராகு சாரம் சதையத்தில் நிற்கும் சனியின் திசையில், கேது புக்தியில் இரிடியம் மோசடியாளர்கள்  தொடர்புகொண்டனர். சனி பாக்ய ஸ்தானத்தில் நின்று திசை நடத்தினாலும் அவர் திடீர் அதிஷ்டத்தை குறிக்கும் 8 ஆம் பாவத்திற்கும் அதிபதி என்பதாலும் சனி ராகு சாரம் பெற்றதாலும் ஜாதகிக்கு இத்தகைய வாய்ப்பு வந்தது. ஜாதகி அவர்களிடம் பணம் கொடுக்குமுன் என்னை ஜாதகத்துடன் அணுகினார். ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் மிதுனத்தில் ஜனன கால ராகு மீது சென்றுகொண்டிருந்தது.

 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி:8300124501