ஒரு மனிதனின் வாழ்வின் சம்பவங்களை ஜாதகக் கட்டத்தில் உள்ள 12 பாவங்கள் அதன் அதிபதிகள் மற்றும்
தொடர்புடைய காரக கிரகங்களைக் கொண்டு அறியலாம்.
ஒரு பெண்ணின் மாதவிடாய் தொடர்புடைய விபரங்களை 5 ஆமிடம் அதன் அதிபதி ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். பெண் இயல்பை நிர்ணயிப்பதில் காரகன்
சுக்கிரனுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. பெண்ணின் மாதவிடாயின் ஒழுங்கை செவ்வாய் நிர்ணயிக்கிறார்.
செவ்வாயை மாதவிடாய் காரகன் எனலாம். அவளுடைய குழந்தை பாக்கியத்தை குரு நிர்ணயிக்கிறார்.
மேற்கண்ட மகர லக்ன ஜாதகம் 7 நிமிட
இடைவெளியில் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளில் முதல் பெண்ணின் ஜாதகம். பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் முக்கிய
பங்கு வகிக்கும் செவ்வாய் நீசமாகி வர்கோத்தமம் பெற்றதாலும் ஐந்தாம் பாவதிபதி சுக்கிரன் குருவின் பார்வை பெற்றதாலும் ஜாதகியின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பில்லை.
நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனும்
வர்கோத்தமம் பெற்று வலுவாகவே உள்ளனர். புதன்
நவாம்சத்தில் 5 ஆம் பாவதிபதி ஆகி நீசம் பெற்றது ஜாதகி படிப்பில் கெட்டிக்காரர்
என்பதைக் குறிப்பிடும் அதே நேரம் அவர் உயர் கல்வி பெறும் நிலையில் கடின சூழ்நிலைகளைக்
கடந்தாக வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. ஐந்தாமிடம் ஒருவரது நுண்ணறிவைக்
குறிப்பிடுவதாகும். 9 ஆம் பாவம் உயர் கல்வியை குறிக்கும்.
இந்த இரண்டாவது ஜாதகம் 7 நிமிடத்திற்குப் பின் பிறந்த
ஜாதகியின் தங்கையுடையது.
முதல் ஜாதகத்தை ஒப்பிடும்போது 2வது ஜாதகத்தில் நவாம்ச
லக்னம் மட்டும் மாறியுள்ளது. உச்சமாகி வக்ரமடைந்த கிரகம் நீசத்திற்கு ஒப்பான
பலனைத் தரவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நவாம்சத்தில் 5 ஆமிடத்தில் உள்ள சனி கெடுபலனைத் தரவேண்டியவராகிறார். இந்த
ஜாதகிக்கு மாதவிடாய் சுழற்சியில் குறைபாடு உள்ளது. கல்வியில் சுமார்தான்.
நுண்ணறிவு இல்லை. இந்த இரண்டிற்கும்
காரணம் நவாம்சத்தில் ஐந்தாமிடத்தில் தோஷ நிலையில் அமைத்த சனிதான். முதல் ஜாதகத்தில் நவாம்சத்தில் ஆறாமிடத்தில் அமர்ந்து கெட்ட சனி நன்மையே செய்வார். ஆனால் இரண்டாம் ஜாதகத்தில் நவாம்சத்தில் சனி புத்திர ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்ததால் ஜாதகிக்கு தோஷத்தை கொடுக்க வேண்டியவராகிறார்.
இரு ஜாதகத்திலும் மாதுல காரகன் (தாய் மாமனைக் குறிப்பிடும்
கிரகம்)
புதன் நீசமானது ஜாதகிகளின்
தாய்மாமன் வாழ்வில் படும் துயரங்களைக் குறிப்பிடுகிறது.
இந்த 3 ஆவது ஜாதகம் ஒரு
பெண்ணின் ஜாதகம்.
இப்பெண்ணின் ஜாதகத்தில் 2 ஆமதிபதியும்
குடும்ப காரனுமான குரு ராசியிலும்
நவாம்சத்திலும் உச்சமானது சிறப்பு. நவாம்சத்தில் குரு உச்சமடைந்தது 2 ஆம் பாவமாக
அமைந்தது அதனினும் சிறப்பு. 2 ஆம் பாவத்தில் ராசியில்
2ல் நீசமடைந்து நவாம்சத்திலும் உச்சன்
குருவுடன் கூடியதால் புதன் தனது நீசத்திலிருந்து விடுபட்டார். நவாம்சத்திலும் மண
வாழ்வைக் குறிக்கும் பாவங்களான 2,7 பாவங்கள் நல்ல நிலையிலேயே அமைந்துள்ளது. ராசியிலும்
நவாம்சத்திலும் 2 ஆமிடத்தோடு தொடர்புடைய மாதுல காரகன் புதனால் ஜாதகி தனது தாய் மாமனை மனம் புரிந்தார்.
புதன் வித்யா காரகனும் ஆவதால் ஜாதகி பள்ளி
ஆசிரியையாகப் பணிபுரிகிறார். ராசியில் 2லும் நவாம்சத்தில் ஜீவன ஸ்தானமான 10லும் சூரியன் சம்மந்தப்பட்டதால் ஜாதகிக்கு அரசுப் பணி அமைந்தது.
முந்தைய பெண்மணியின் ஜாதக அமைப்புகளைக் கொண்ட ஒரு ஆணின் ஜாதகம் இந்த நான்காவது
ஜாதகம். அதே ஆண்டில் பிறந்தவர்.
குடும்பம் அமைவதைக் குறிப்பிடும் 2வது பாவம் லக்னாதிபதி சனி அமர்ந்ததால் கெட்டது.
2 ஆம் அதிபதியும் குடும்ப காரகனுமான குரு
உச்சமடைந்ததால் அவர் தனது பாவத்தையும் உயர்வடையச் செய்ய வேண்டும். ஆனால் குருவுக்கு
வீடு கொடுத்த 6 ஆமதிபதி சந்திரன் உச்சமடைந்ததால் குருவானவர் சந்திரனை மீறிச்
செயல்பட முடியாது. எனவே குருவால் குடும்பத்தை அமைத்துத் தர இயலவில்லை. ஆனால் காரகத்தின் அடிப்படையில் குரு
ஜாதகரை செல்வந்தராக்கியுள்ளார். மேலும்
7ஆமதிபதி 6 ஆமதிபதியுடன் ஒன்று சேர்வது மனைவி குடும்பத்திற்கு வருவதைத் தடுக்கும்
அமைப்பாகும்.
நவாம்சத்தில் 2 மற்றும் 7 ஆம் பாவத்திற்கு அதிபதி செவ்வாய் நீசமானது ஜாதகருக்கு
குடும்பம் அமையாது என்பதை உறுதி செய்கிறது. இது சகோதரத்தாலும் ஜாதகரின் உறுதியற்ற
குணத்தாலும் அவருக்கு குடும்பம் அமையாது என்பதை குறிப்பிடுகிறது. நடந்ததும் அப்படியே.
மேற்கண்ட 5 ஆவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.
லக்னத்திற்கு புத்திர பாவமான 5 ஆமதிபதி செவ்வாய்
8 ல் நீசமாகி ராகுவுடன் சேர்ந்து கெட்டு
மறைந்துவிட்டார். ராசிக்கு புத்திர ஸ்தானமான 5 ஆமிடம் செவ்வாய் ராகுவால் கெட்டதும்
புத்திர வகையில் பாதிப்பை தரக்கூடியதே. புத்திர
காரகன் குரு 3 மறைந்துவிட்டார். 3 ஆமிடம் 5 ஆம் பாவத்திற்கு பாதக ஸ்தானம் (சர
பாவமான மேஷத்திற்கு பாதக ஸ்தானமான 11 பாவத்தில் கும்பத்தில் குரு அமைந்த அமைப்பு) என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனடிப்படையில்
பார்த்தால் ஜாதகரின் புத்திர பாக்கியம் கேள்விக்குறியே என்று சொல்லத் தோன்றும்.
ஜாதகருக்கு 2
புதல்விகள். எப்படி?
நீசமான செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் பூரட்டாதி
4 ல் குரு சாரத்தில் நின்று புனிதமடைகிறார்.
பொதுவாகவே ஒரு கிரகத்தின் சாரத்தில் (நட்சத்திரத்தில்) அமையும் கிரகங்கள் அதன்
நட்சத்திராதிபதி கிரகத்தின் காரகத்தை வலுவுடன் காக்கும்.
இது ஒரு சூட்சுமமான முக்கிய விதி. ஜோதிடத்தில் இப்படி
எண்ணற்ற விதிகள் உள்ளன. அணைத்தையும் ஒரு சேர கவனத்தில் கொள்வதுதான் ஜோதிடர்களுக்குச்
சிரமமான வேலை. இதில் தேர்ந்தவரே ஜோதிட வித்தகர் ஆவார்.
மேற்கண்ட விதியினடிப்படியில் சந்திரன் செயல்பட்டு
தனது பாவத்தில் நீசமான புத்திர ஸ்தானாதிபதியும்
நண்பனுமான செவ்வாயை வலுவூட்டுகிறார். அதனால் ஜாதகருக்கு புத்திரம்
ஏற்பட்டது. மேலும் நவாம்சத்தில் செவ்வாய் லக்னாதிபதி குருவுடன் அவரது ஆட்சி
வீட்டில் அமைந்தது புத்திர வகையில் பாக்கியக் குறைவை ஏற்படுத்தவில்லை.
நவாம்சத்தில் 5 ஆமதிபதி சனி மேஷத்தில் நீசமானாலும் அங்கு உச்சமடைந்த சூரியனால் நீச
பங்கமும் ஏற்பட்டுவிட்டது. 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் பெண் கிரகமான சந்திரனது
வீட்டில் அமைந்து சந்திரனாலும் வலுவடைந்ததால் ஜாதகருக்கு இரு குழந்தைகள். இருவருமே
பெண்கள்.
5 ஆம் பாவத்திற்கு 3 ஆம் பாவமான 7 ஆம் பாவம் 2 ஆவது குழந்தையைக்
குறிக்கும். 7 ஆமிடத்திற்க்கு குரு பார்வை
ஏற்பட்டதால் 2 ஆவது குழந்தை பாக்கியமும் கிட்டியது. செவ்வாயுடன் ராகு ஒரு
பாவத்தில் சேர்ந்தால் அங்கு இருவருமே வலுவடைவர் என்பது ஒரு நுட்பம். ஆனால் அதன்
பாதிப்பை ஜாதகர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஜாதகர் செவ்வாயின் காரகத்தின்
அடிப்படையில் பூமி (நிலம்) வகையில் கடனுக்காக விரையம் செய்தார் என்பது
வருந்தத்தக்க உண்மை. ஆனால் குரு மற்றும்
சந்திரனால் புத்திர பாக்கியத்திற்கு குறைவு ஏற்படவில்லை.
இந்த ஆறாவது ஜாதகமும் ஒரு ஆணினுடையது
5 ஆமிடத்தில் புதன் உச்சமானால் ஜாதகரின் முதல்
மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிட்டாது. இரண்டாவது மனைவிக்கு குழந்தை பாக்கியம்
கிட்டும் என்றொரு விதி ஜோதிடத்தில் உண்டு. ஆனால் ஜாதகருக்கு லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான
சுக்கிரன் நவாம்சத்தில் நீசம். நவாம்சத்தில் வீரிய ஸ்தானமான 3 ஆமிடத்தில் லக்னாதிபதி
சூரியன் நீசமாகி அதன் அதிபதி சுக்கிரனும் நீசமானது ஜாதகரின் வீரியமின்மையைக் குறிப்பதோடு ஜாதகருக்கு
இரண்டாவது மணம் செய்யுமளவுக்கு இல்லறத்தில் நாட்டம் இராது என்பதைக் குறிக்கிறது.
ஜாதகர் ஏக பத்தினி விரதன். கௌரவமான
வாழ்வைக் கொண்டிருந்தாலும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
மேற்கண்ட ஜாதக அமைப்புகளில் இருந்து நவாம்சத்தை
அளவிடுவது எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்ளலாம். ராசியில் மறுக்கப்பட்ட ஒரு பாக்கியம் நவாம்சத்தில் உறுதி செய்யப்பட்டால் தாமதமாகவேணும் அந்த பாக்கியம் ஜாதகருக்குக் கிடைத்துவிடும். ஆனால் நவாம்சமும் கெட்டுவிட்டால் குறிப்பிட்ட அந்த பாக்கியம் ஜாதகருக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத்தான் அர்த்தம் கொள்ளவேண்டும். நவாம்சம் பற்றிய இன்னும் பல
நுட்பமான முறைகளை வேறொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.
அடுத்த பதிவு: சைவத் துறவியும் பௌத்தத் துறவியும்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
வேண்டுகோள்: ஆலோசணைகளுக்காகத் தொடர்பு கொள்வோர் அற்பக்
காரணங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டாம் என பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜோதிடத்தை வாழ்வில் உபயோகமான முறையில் பயன்படுத்த வேண்டும்.