ஜோதிடத்தில் ராசி மற்றும் நவாம்ச கட்டங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை
பாவக் கட்டத்திற்கு பெரும்பாலான ஜோதிடர்கள் அளிப்பதில்லை. காரணம் பாவச்சக்கரத்தை
போடுவதற்கு சற்றே தேர்ந்த நுணுக்கம் தேவை. மேலும் ராசி நவாம்சத்தைவிட பாவச்சக்கரம்
நுணுக்கமாக எதையும் தெரிவித்துவிடாது என்ற எண்ணமும் ஒரு காரணம். அதனால் ஆய்வு
ஜோதிடர்கள் மட்டுமே பாவத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் ஜோதிடர்களுக்கு
உதவ கணினிகள் வந்துவிட்ட சூழ்நிலையில் பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது ராசியும்
நவாம்சமும் குறிப்பிடாத விஷயங்களைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவும்.
பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.
பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.
ராகு திசை இருப்பு: 3 வருஷம் 0 மாதம் 8 நாட்கள்.
ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண்.
கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் விரயாதிபதி
சூரியன் கேதுவுடன் உள்ளார். சுக்கிரன் 2 ஆம் பாவத்தில் ஆட்சியில் உள்ளார். சுக்கிரனுடன் லக்னாதிபதி
புதன் வக்கிரகதியில் சேர்க்கை.
ராசியைக் கொண்டு கவனித்தால் ஜாதகரின் கும்ப ராசிக்கு 2 ஆமிடத்தில் ராசி மற்றும் விரைய
ஸ்தானங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்கிர கதியில் ராகுவுடன் சேர்க்கையில்
உள்ளார். ஆனால் ராசிக்கு இரண்டாம் பாவத்திற்கு உரிய குரு தனது பாவத்திற்கு 6 ல் செவ்வாயுடன் மறைந்துவிட்டார். ராசிக்கு
7 ஆமதிபதி சூரியன் ராசிக்கு 8 ல் மறைந்துவிட்டார்.
ராசிக்கட்டத்தில் இந்த அமைப்பை வைத்து ஜாதகத்தை கணித்தால் என்ன
தோன்றும்.
1.ராசியை குரு பார்ப்பதாலும் லக்னத்திற்கு 2 ல் சுக்கிரன் லக்னாதிபதியுடன்
சேர்ந்து ஆட்சியில் உள்ளதாலும் ஜாதகருக்கு திருமணம் நடந்துவிடும் இல்லறத்திற்கு துணைவி
வருவாள் என அனுமானிக்கலாம்.
உண்மையே. ஜாதகர் திருமணமானவர்.
2. ராசிக்கு 2 ஆமிடம் கெட்டு அந்த பாவாதிபதி தனது 2
ஆம் பாவத்திற்கு 6 ல் மறைந்ததால்
குடும்பத்தில் பிரச்சினை இருக்க வேண்டும். இதை ராசிக்கு 7 ஆமதிபதி சூரியன் ராசிக்கு
8 ல் கேதுவுடன் சேர்ந்து கெட்டதிலிருந்து
தெளிவுற அறியலாம்.
இதுவும் உண்மையே. வாக்கு ஸ்தானமான ராசிக்கு 2 ல்
கடும் பாவிகள் சனி, ராகு நின்றதால் ஜாதகருக்கு கடும் சொல் உதிர்க்கும் சுபாவம்
ஏற்பட்டுவிட்டது. அதனால் ஜாதகருக்கு மனைவியுடன் இணக்கமான உறவு இல்லை.
இப்போது கிரகங்களின் அடிப்படையில் ராசிக்கட்டத்தை
ஆராய்வோம்.
லக்னத்தில் அமரும் கிரகம் ஜாதகரின்
வாழ்க்கைப் பயணத்தில் வாகன ஒட்டியாகச் செயல்படும் என்பதை மறந்துவிடக்கூடாது. அதே
சமயம் விரயாதிபதி சூரியன் லக்னத்தில் அமர்ந்ததாலே வாழ்வில் கண்டிப்பாக
ஏதாவது ஒன்றினை ஜாதகர் விரயமாக்கிவிட வேண்டும் என்பது விதி.
லக்னாதிபதி புதன் தனம், வாக்கு, குடும்பம், வலது கண்
போன்ற இன்னும் பலவற்றைக் குறிக்கும் 2
ஆம் இடத்தில் அதன் அதிபதியும் நண்பனுமான சுக்கிரனுடன் நின்றதால் ஜாதகருக்கு குடும்பம்
அமைத்துத் தந்தார். வித்யா காரகனான புதன்
பத்தாம் அதிபதியும் ஆகி 2 ல் நின்றதால் ஜாதகர் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப்
பணிபுரிகிறார். லக்னம்தான் சூரியனாலும் கேதுவாலும் கெட்டுவிட்டது புதனின் மற்றொரு
வீடான 10 ஆமிடம் மிதுனம் எவ்வித
தோஷமும் இன்றி அமைந்திருப்பதைப் பாருங்கள்.
இப்போது பாவச் சக்கரத்திற்கு வருவோம்.
ராசிக்கட்டத்தில் லக்னத்தில் இருந்த சூரியன் பாவக்கட்டத்தில்
லக்னத்திற்கு 2 ல் நீசம். ராசிக்கட்டத்தில் ராசிக்கு 2 ல் மீனத்தில் வக்கிரகதியில்
இருந்த சனி பாவச்சக்கரத்தில் மேஷத்திற்கு
மாறிவிட்டார். இதன் அடிப்படையில் சூரியன் ஜாதகருக்கு எப்படி பலனளிப்பார் என
ஆராய்வோம்.
விரயாதிபதி சூரியன் எப்படிப் பலனளிபார் என ஆராய சூரியனது
பாவம் மற்றும் காரகத்தையும் கவனத்தில்
கொள்ள வேண்டும். சூரியன் அரசு உத்தியோகத்திற்கு காரகத்துவம் பெற்ற கிரகம். அது ராசிக்கட்டத்தில்
லக்னத்தில் அமர்ந்ததால் ஜாதகருக்கு அரசுக் கல்லூரிப் பணியை அமைத்துத் தந்து தனது
அம்சத்தை நிலை நாட்டினார். அதே சூரியன் நேந்திரத்திற்கும் (கண்கள்) காரகத்துவம்
பெற்றவர் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் கண்களுக்கு ஒளி வழங்குவதில்
சுக்கிரனுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுக்கிரனை உப நேந்திர காரகனாக ஜோதிடம்
குறிப்பிடுகிறது. சுக்கிரன் ஆட்சியில்தான் உள்ளது ஆனால் ராகுவின் நட்சத்திரமான
சுவாதி நட்சத்திரத்தில் (3 ஆம் பாதத்தில்) உள்ளது. ராகு ராசிக்கு நேந்திர ஸ்தானமான
(2 மிடம்) மீனத்தில் ராசிக்கு விரையாதிபதியான சனியுடன் சேர்க்கை. இதனால் ஜாதகர்
மட்டுமல்ல எந்த உரியினமும் தனது வாழ்வில் இழக்ககூடாத கண் பார்வையை இழந்துவிட்டார்.
சனியும் ராகுவும் 2 ஆமிடத்தில் இருப்பது கண் பார்வையைப் பறிக்கும் அமைப்பு. சூரியனும்
சுக்கிரனும் கண்களுக்கு ஒளி வழங்கும் கிரகங்கள் என்றால் சனியும் சனி போன்று
செயல்படும் ராகுவும் கண்களை குருடாக்குவதற்கு காரகத்துவம் பெற்ற கிரகங்கள்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லக்னத்தில் நின்ற சூரியன் தனது அம்சமாக ஜாதகர் இருக்க
வேண்டும் என்பதால் ஜாதகருக்கு அரசுப் பணியை வழங்கியது. அதே சூரியன் பாவத்தில் நீசமானதால்
தனது காரகத்தின் அடிப்படையில் கண்களை குருடாக்கிவிட்டது. மொத்தத்தில் சூரியன் ஜாதகத்தில்
தான் அமைந்த அமைப்புக்குத் தக்கபடி தனது பணியை குறைவில்லாமல் நிறைவேற்றிவிட்டது.
கண்களைப் பறித்த சூரியன் அரசுப் பணி மூலம் ஜாதகரை கைதூக்கியும்
விட்டுள்ளது.
ராகுவின் சதய நட்சத்திம் 4 ஆம் பாதத்தில் ராகு திசை சூரிய
புக்தியில் பிறந்த ஜாதகர் ராகுவின் சாரத்தில் நின்ற சந்திரனின் புக்தியில் தனது
இரண்டாவது வயதில் கண் பார்வையை இழந்தார்.
குழந்தை பிறந்தவுடன் படைத்தவன் ஜாதகரின் கண்களைப் பறித்துவிடுவான்
என்பதை அறியாத அப்பாவிப் பெற்றோர் ஜாதகருக்கு கண்ணன் எனப் பெயரிட்டனர் என்பதை இறைவனின் திருவிளையாடல் என்று சொல்வதைத் தவிர
வேறென்ன சொல்வது?
பின்வரும் இரண்டாவது ஜாதகத்தைக் கவனியுங்கள்.
செவ்வாய் திசை இருப்பு : 5 வருஷம் 5 மாதம் 28 நாட்கள்.
ஜாதகர் இதுவரை மணமாகாத ஒரு ஆண்.
கால சர்ப்ப தோஷ ஜாதகம். லக்னத்திற்கு 2 ல் செவ்வாய்
நீசம். ராசியும் ராசிக்கு 7 வீடும் பாவிகளால் கெட்டது. லக்னத்தில் நின்ற குரு ஜாதகரை எத்தகைய இடர்பாடுகளில்
இருந்தும் காக்க வேண்டும். தாம்பத்திய சுகத்தைக் குறிக்கும் 12 ஆமிடத்தில் ஆட்சியில் உள்ள
சுக்கிரன் தாம்பத்யத்திற்கு மனைவியை அளித்தருள வேண்டும். குருவும் சுக்கிரனும்
ஜாதகருக்கு ஏற்படும் தோஷங்களிலிருந்து ஜாதகரை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு
விடுவித்து ஜாதகருக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்.
இந்த ஜாதகத்தின் பாவச்சக்கரத்தை இப்போது அலசுவோம்.
ராசிக்கட்டத்தில் சிம்மத்திலிருந்த சனி லக்னத்திற்கு இரண்டாமிடமான கடகத்திற்கு மாறியுள்ளார். கடகத்தில்
நீச நிலையிலுள்ள செவ்வாயுடன் சேர்ந்ததால் 2 ஆமிடம் மேலும் கடும் தோஷத்திற்கு
உள்ளானது.
ராசிக்கட்டத்தில் 8 லிருந்த சூரியன் 7 ஆமிடத்திற்கு மாறிவிட்டது. அதனால் 7 ஆமிட தோஷம் மேலும் கடுமையானது.
ஜாதகரைக் கடைதேற்றும் என ராசிக்கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட
குரு லக்னத்திற்கு 12 ல் மறைந்துவிட்டார். 12 ஆமிடத்தில் ஆட்சியில் நின்ற சுக்கிரன் 11 ஆமிடத்திற்கு மாறிவிட்டார். அதோடு
அவர் அப்படி மாறி அமர்ந்த மேஷத்தின் அதிபதி செவ்வாய் ஏற்கனவே நீசமாகி கடும்
தோஷத்தை தரவேண்டிய நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.
பாவத்தில் ஏற்பட்ட இத்தகைய கடும் பாதிப்புகள் 1978 ல் பிறந்த ஜாதகரின் திருமண வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டன.
தற்போது குருவும் சனியும் உச்சமாகி எழரையாண்டுச் சனியும் விலக உள்ள சூழ்நிலையில் ஜாதகருக்கு
ஓரளவு (ஓரளவு மட்டுமே) திருமணத்திற்கான காலம் கனிந்துள்ளது.
பின்வரும் மூன்றாவது ஜாதகத்திற்கு உரியவர் கடந்த
இரண்டு வருடங்களுக்கு முன் 2012 மத்தியில் குரு ரிஷபத்தில்
இருக்கும்போது என்னிடம் ஜோதிட ஆலோசனைக்கு வந்தார்.
சூரிய திசை இருப்பு: 3 வருஷம் 10 மாதம் 16 நாட்கள்.
ஜாதகரின் மகர ராசிக்கு 5 ல் வரும் குரு அற்புதப்
பலன்களைச் செய்வார் என்று தொலைகாட்சி ஜோதிடர்கள் கூறிக்கொண்டிருக்க தனக்கு குருப்பெயர்ச்சி
ஆனதிலிருந்தே சோதனைதான். என்ன ஜோதிடப் பித்தலாட்டாம் என அங்கலாய்த்தார்.
ஜாதகரின் ராசி மகரமானாலும் பாவத்தின் அடிப்படையில்
பார்த்தால் அவருக்கு தனுசு ராசிதான் வருகிறது. தனுசு ராசிக்கு 6 ஆவது ராசியான
ரிஷபத்திற்கு வரும் குரு 6 ஆமிடப் பலன்களான கடன், வியாதி மற்றும் எதிர்ப்பு
போன்றவைகளைத் தூண்டிவிடுவார். இந்த நுட்பங்களை ஜாதகருக்கு விளக்கியவுடன் ஜாதகரும் ஜோதிடம் பயில ஆர்வம் காட்டினார்.
பாவச் சக்கரத்தை இப்படி அலசினால் அது ராசிச் சக்கரம்
சொல்லாத பல கேள்விகளுக்கு விடை சொல்வதை உணரலாம். எனவே ஜோதிடர்கள் ராசிச்சக்கரம்
நவாம்சச் சக்கரங்களை ஆராய்வதோடு நின்றுவிடாமல் குறைந்த பட்சம் பாவச் சக்கரத்தையும்
ஒரு ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வது பலன்களை துல்லியமாக அளவிட உதவும் எனக்
கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்,
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.