Sunday, 1 February 2015

உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும்

சுற்றுலாத்துறை:

ஜோதிட நுணுக்கங்கள் வலைப்பூ கடந்த ஜனவரி 23 முதல் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துககொள்கிறேன்.  பணிச்சுமை காரணமாக அடிக்கடி எழுத இயலாவிட்டாலும் உபயோகமாக மற்றும் ஆய்வுப்பூர்வமான பதிவுகள் தொடர்ந்து வரும் என்பதை உறுதியளிக்கிறேன். ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கான பதிவு இது. புரியாதவர்கள் அடிப்படையைப் புரிந்துகொண்டு தொடரவும்.

பாவச் சக்கரத்தைப் பற்றி எழுதிய போதே வர்க்கச் சக்கரங்களைப்பற்றி எழுதுமாறு பல்வேறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கிரகங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் எப்படி செயல்படும் என்பதை அளவிடவே வர்க்கச் சக்கரங்கள். இவற்றில் 16 வகை  சக்கரங்கள் முதன்மையானவை. இவற்றை சோடசாம்சம் என்பர். ஒரு குறிப்பிட்ட சக்கரத்திலிருந்து அது தொடர்புடைய  விஷயத்தை மட்டுமே ஆராயவேண்டும் என இச்சக்கரங்களின் பயன்பாட்டை வரையறுத்த மகரிஷி பராசரர் தனது பராசர ஹோராவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமணம் தொடர்புடையவற்றிற்காக மட்டும் ஆராய வேண்டிய நவாம்சத்தை கிரக வலுவை மதிப்பிட இன்று ஜோதிடர்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். (பயன்பாட்டிலும் இது சரியாகவே வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.)

பத்தாமிடாதிபதியின் வலுவை அளவிட நவாம்சச் சக்கரத்தோடு தசாம்சச் சக்கரத்தையும் கவனிக்கவேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் மகிழ்ச்சியையும் ஜாதகரது கர்மாவையும் குறிப்பிடும்.

தசாம்சச் சக்கரத்தின் விசேஷங்கள்.

1.தசாம்ச சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாவது பாவமும் அதன் கேந்திரங்களான 6, 9, 12 ஆம் பாவங்களும் முக்கியமானவை. இதன் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10 ஆமதிபதிகளும் மிகுந்த நன்மையைச் செய்யும்.

2.தசாம்சக் கட்டத்தில் 10 ஆமிடத்தில் அமையும் கிரகங்கள் அவை சுபக்கிரகங்களானாலும் பாவக் கிரகங்களானாலும் நன்மையையே செய்யும்.

3. கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் சுகஸ்தானமான  நான்காமிடம் தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமதத்தையும் உருவாக்குவதாகும். காரணம் நான்காமிடம் சுகத்தைக் குறிப்பது 10 ஆமிடம் செயலைக் குறிப்பது. ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்பாடு பாதிக்கப்படும் என்பது இதன் அடிப்படையாகும். தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமையும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.


16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களில் எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை காண்போம்.

1.ராசி                 -    மெய், நிறம், தோற்றம்
2.ஹோரா             -    செல்வநிலை
3.திரேக்காணம்        -    சகோதரன், சகோதரி
4.சப்தாம்சம்           -    குழந்தைகள்
5.நவாம்சம்           -     கணவன் அல்லது மனைவி
6.தசாம்சம்            -    தொழில்
7.துவாதசாம்சம்       -    பெற்றோர்
8.திரிம்சாம்சம்         -    விதி
9.சோடசாம்சம்        -    வாகனம்
10.சஷ்டியாம்சம்       -    பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
11.சதுர்த்தாசம்         -    அதிஷ்டம்
12.விம்சாம்சம்         -    கடவுள் நம்பிக்கை, குலதெய்வம், பக்தி
13.சதுர்விம்சாம்சம்     -    கல்வி
14.பம்சாம்சம்          -    உடல் வலிமை
15.சுவேதாம்சம்        -    சுகம்
16.அக்ஷவேதாம்சம்    -    குணம்


நான்காமிடம் ஒருவரின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. 12 ஆமிடம் அயனம் எனப்படும் நகர்தலைக் குறிப்பிடும். மேற்கண்ட ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் 12 ஆமிடாதிபதி செவ்வாய் வாகன காரகன் சுக்கிரனோடு சேர்ந்து நான்காமிடத்தில் சிம்மத்தில் உள்ளது. இதனால் ஜாதகர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தொழிலை செய்ய இயலாது என்பது இதன் பொருளாகும்.  ஜீவன காரகன் சனி விரைவான செயல்பாட்டைக் குறிக்கும் சர ராசியாதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளார். ஜாதகர் வாகனச் சுற்றுலா தொழிலை மேற்கொண்டுள்ளார்.

இதை தசாம்சச் சக்கரத்தை வைத்து ஆராய்வோம்.

தசாம்சச் சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாமிடத்தில் ஆன்மீகக் கிரகங்களான குருவும் கேதுவும் நன்கு அமைந்துள்ளனர். (ஜாதகர் திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும்  ஆன்மீக சுற்றுலா நிறுவனம் நடத்துகிறார். மேலும் குரு ராசி, நவாம்சம் & தசாம்சத்திலும் வர்கோத்தமத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. மூன்றாமதிபதி செவ்வாய் ஆட்சியில் உள்ளது சிறப்பு.  6 ஆமதிபதி சனி பகவான்  6 க்கு 12 ல் அமர்ந்தாலும் ஆட்சியில் உள்ளார். 2 மற்றும் 9 ஆமதிபதியும் வாகனம், சுற்றுலா இவற்றிற்கு காரகனுமான சுக்கிரன் பணவரவைக் குறிக்கும் இரண்டாவது பாவமான துலாத்தில் ஆட்சியில் உள்ளது இந்த வகையில் வருமானம் வரவேண்டும் என்பதை உறுதி செய்கிறது. துலாராசியும் ஒரு சர ராசி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 12 ஆமதிபதியும் விரையாபதியுமான சூரியன் 3 ஆவது பாவத்திற்கு கேந்திராதிபதியாவதால் நன்மையைச் செய்யவேண்டும் ஆனால் தசாம்சத்தில் 4 ஆவது பாவத்தில் அமையும் பாவக்கிரகம் தீமையைச் செய்ய வேண்டும் என்பதால் சூரியன் தீமையையும் கலந்தே செய்யவேண்டியவராகிறார். 

ராசிச்சக்கரத்தின்  3 ஆம் பாவாதிபதி சந்திரன் தசாம்சத்தில் 8ல் மறைந்தாலும் சுக்கிரனின் பார்வை பெறுவது சிறப்பு அத்துடன் சந்திரனுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதியும் 10 ஆமதியுமான புதன் அமைந்தது ஜாதகரின் தொழில் ரீதியிலான முயற்சி, விருப்பம் மற்றும் கர்மாவையும் தெளிவாக விளக்குகிறது.

வர்க்கச் சக்கரங்களைப் போடவும் ஆராயவும் மிகுந்த நேரம் பிடிக்கும் என்பதாலும் அப்படி கால அவகாசமெடுத்து கணிக்குமளவுக்கு ஜோதிடனுக்கு தட்சிணை தரப்படுவதில்லை என்பதாலும் 90 சதவீத ஜோதிடர்கள் ராசி மற்றும் நவாம்சத்தோடு நின்றுவிடுகின்றனர். இன்று ஜாதகங்களைக் கணிக்க கணினிகள் பயன்படுகின்றன என்பதால் ஜோதிடர்கள் இனி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இப்படி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் உண்டு. ராசிக்கட்டதில் ஒரு லக்னம் மாறும் கால இடைவெளி தோராயமாக 2 மணி நேரமாகும். நவாம்ச சக்கரத்தில் 12 நிமிடத்திற்கு ஒருமுறை லக்னம் மாறும். ஆனால் வர்க்கச் சக்கரங்களில் ஓரிரு நிமிடங்களிலேயே லக்னமும் கிரகங்களும் மாறும். எனவே ஜனன நேரம் துல்லியமான ஜாதகங்களுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது பயன் தரும். இதில் ஜனன நேரத்தில் வித்தியாசமிருக்குமென சந்தேகமேற்பட்டால்  அதை சரிசெய்ய (For birth time rectification) தசாம்ச சக்கரத்தை ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எப்படியெனில் ஜாதகர் முப்பது முப்பத்தைந்து வயதில் தொழில் ரீதியாக நிலைத் தன்மை பெற்று இருப்பார். அப்போது அவரது தொழிலுக்கேற்ப தசாம்ச சக்கரம் பொருந்தும் வகையில் ஒருசில நிமிடங்களை முன்னும் பின்னும் சரி செய்து துல்லியமான ஜனன நேரத்தை காண்பது என்பது வழக்கமாகிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.