கண்ணீர் அஞ்சலி
M.S.விஸ்வநாதன்
1928 - 2015
கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசிக்குள் எப்போது சனி பகவான் பிரவேசித்தாரோ அப்போதிருந்தே துலாம் ராசி குறிப்பிடும் நீதித்துறையும், பெண்களின் பாதுகாப்பும், கலைத்துறையும் கடுமையான பல சோதனைகளையும் இழப்புகளை சந்தித்துவருகிறது. உச்ச சனியுடன் ராகுவும் துலாம் ராசிக்குள் சென்று இணைந்ததிலிருந்து காலம் தனது கோரதாண்டவத்தை ஆடிவருகிறது. இப்போது சனியும் ராகுவும் துலாம் ராசியை விட்டு விலகிவிட்டாலும் துலாம் ராசிக்கு இருபுறமும் அவை நிற்பதால் கடுமையான பாவகர்த்தாரி யோகத்தில் துலாம் ராசி அகப்பட்டுக்கொண்டுள்ளது. தராசுத்தட்டு தடுமாரிக்கொண்டிருக்கிறது.நீதி சாமான்யனுக்கல்ல என்ற நிலை தோன்றிவிட்டது குறித்த விரக்தி அடித்தட்டு மக்களிடையே பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தியத் திருநாட்டில் நீதித்துறை மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை இழந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில் தங்களது குடும்பம் மற்றும் பெண்கள் குறித்த அச்சத்திற்கு இடையே வாழ்ந்துவருகிறான் இந்தியப் பாமரன்.
துலாம் ராசி குறிக்கும் தமிழகத்து மக்களுக்கு இந்த காலகட்டத்தை கடந்து வருவது பெரிய வேதனை.நல்ல கலைகளில் மனிதன் தனது வேதனைகளை மறக்கிறான். திரைத்துறையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுவரும் இழப்புகள் அதீதமானவை.
தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல், தாங்கள் பால்யத்தில் கேட்டு பார்த்து மகிழ்ந்த நல்லிசையை மனதில் அசைபோடுவதுதான். நல்ல திரைப்படங்களை, நல்ல கலைஞர்களை போற்றும் தமிழன் அத்தகைய கலைஞர்களின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என மகிழ்கின்றான்.
இறைவனின் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு காரணம் இருக்கும் என எனது பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடுவேன். நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க இயலாமல் சிறுவயதில் தாயுடன் உயிரை நீர்நிலையில் குதித்து மாய்த்துக்கொள்ள இருந்த நிலையில் கடைசி வினாடியில் காப்பாற்றப்பட்டனர் M.S.விஸ்வநாதனும் அவரது தாயாரும். காரணம் காலம் அவருக்கு அளித்திருந்த கடமை.
இப்போது படைப்பின் காரணத்தை நிறைவு செய்து மீண்டும் இறைவனின் பொற்பாதங்களில் சென்று சேர இருக்கிறது M.S.V. யின் ஆன்மா.
காலம் அவரது உயிரை பறித்துவிட்டது.
ஆனால் அவரது இசை தமிழ் சினிமா வாழும்வரை உயிரோடிருக்கும்.
அதை காலனால் அளிக்க இயலாது.
ஆம் M.S.V காலனால் அளிக்க இயலாத காவியம்.
கனத்த இதயத்துடன்,
அன்பன்,
பழனியப்பன்.