Saturday, 26 March 2016

விருச்சிக சனி - செவ்வாய் சேர்க்கை பாதிப்புகள் என்ன?


இரு கடும் யுத்த கிரகங்களான சனியும் செவ்வாயும் தற்போது விருச்சிக ராசியில் சேர்க்கை. வழக்கமாக ஒன்றரை மாதத்தில் ஒரு ராசியை கடந்துவிடும் செவ்வாய் தன் வீட்டில் விருச்சிகத்தில் வக்கிர கதிக்கு உள்ளாவதால் சில மாதங்கள் தங்குகிறார். இதன் விளைவுகள் என்ன?. உலக அளவிலும், இந்திய அளவிலும் குறிப்பாக தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் இதன் பாதிப்புகள் என்ன என்பது பலரது கேள்வியாகியுள்ளது.

சனி பாதுகாப்புத்துறைக்குரிய போர்க்கிரகம். செவ்வாய் போரில் வீரர்களை வழிநடத்தும் சேனாதிபதி கிரகம். தீவிரமான செயல்திறனும் மெதுவான செயல் வேகமும் கொண்ட சனி சேனாதிபதியான செவ்வாயின் பார்வையில் அல்லது சேர்க்கையில் போரிடும்போது தீவிரமாக செயல்படும். அதனால் பாதிப்புகள் குரூரமானதாகவே இருக்கும். இதன் விளைவாக யுத்தத்திற்கு சம்மந்தமே இல்லாத சாமான்யர்களும் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க இயலாதது.

                   

            யுத்த களத்தில் பரிதாமகரமான நிலையில் கர்ணன்.

பகை கிரகங்களான சனியும் செவ்வாயும் ஒன்று சேர்க்கையில் அங்கு கிரக யுத்தம் ஏற்படும் என்றாலும் யுத்தத்தில் ஒரு கிரகம் வக்ரகதிக்கு உள்ளானாலும் அங்கு யுத்தம் நடைபெறுவது இல்லை. இந்த அடிப்படையில் சனி இப்போது வக்ரமடைகிறது. (சனிக்கு ஐந்தாவது பாவத்தில் சூரியன் இருக்கும்போது சனி வக்ரமடையும்.) அடுத்த மாதம் சித்திரை பிறந்ததும் செவ்வாயும் வக்கிரமடைகிறது. அதனால் கிரக யுத்தம் ஏற்படாது என்றாலும் இவை இரண்டின் இணைவு வக்ரகதியிலேயே சில மாதங்கள் நீடிப்பதால் உலகிலும் இந்தியாவிலும் கடுமையான சில விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுவாக சனி செவ்வாய் இணைவு பூமிக்கு இயற்கை பேரழிவுகளை கொண்டுவரும். பூகம்பம், நில நடுக்கம், விமான விபத்துகள், நாடுகளுக்கு இடையேயான போர்கள், தீவிரவாத தாக்குதல்கள், பெரும் தீ விபத்துகள் போன்றவவை ஏற்படும். கடல் உயிரினங்கள், வன உயிரினங்கள் போன்றவை பெரும் உயிரிழப்புகளை சந்திக்கும்.

தனி மனித வாழ்வில் இதன் தாக்கம் என்றால் இயற்கைக்கு மாறான செயற்கை மரணங்கள் அளப்பரிய விதத்தில் ஏற்படும். தற்கொலைகள், விபத்துகள், பகை உணர்ச்சியால் ஏற்படும் குரூர வெட்டு, குத்து, துப்பாக்கிச்சூடு மரணங்கள் அதிகரிக்கும். அரசுக்கும் மக்களுக்குமான பகை உணர்ச்சி அதிகரிக்கும் என்றாலும் தேர்தலில் அதன் தாக்கம் சிதைவடையும். (செவ்வாய் ஆட்சியில் உள்ளதால்).

சம்மந்தமற்ற வகையில்  தனி மனிதர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது தவிர்க்க இயலாதது. யுத்த களத்தில் வந்து மாட்டிக்கொள்ளும் சாமான்யர்கள் இவர்கள். நான் நேர்மையானவன் எந்த வம்புக்கும் சென்றதில்லை எனக் கூறி இந்த கிரக சூழ்நிலைகளின் பாதிப்பிலிருந்து முழுமையாக தப்பிக்க இயலாது என்றாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த கால கட்டத்தை கடந்தாக வேண்டிய சூழல் இப்போது சாமான்ய மனிதர்களுக்கு ஏற்படும்.  

                  

      பரந்தாமன் வழிகாட்ட பார்த்தன் கர்ணனை நோக்கி பானம் விடுதல்.

சில சாமான்யர்களுக்கு கற்ற கல்வியும் நேர்மையும் பாரம்பரியமும் இந்த கிரக யுத்த களத்தில் வித்தை பயனற்றுப்போன கர்ணனின் நிலை போல் ஆகிவிடும். அளப்பரிய கல்வியாளன், பணக்காரன்  எந்த சூழ்நிலையும் எதிர்கொள்வேன் என யாரும் சவால் விட இயலாது.  காரணம் இந்த கிரக சூழலில் கடும் பாதிப்புகளை சனியின் அம்சமான சாமான்யர்களும் அடைய வேண்டும் என்பது ஜோதிட விதி.

ராஜ கிரகமான சூரியனின் வீட்டில் ராகு - குரு இருக்க  தனது உச்ச ராசி மேஷத்தையும் தன்வீட்டிற்கு திக்பலம் பெற்ற பத்தாம் வீடான ரிஷப ராசியையும் சூரியன் கடக்க இருப்பது தவறானவர்கள் மட்டுமின்றி சாமான்யர்களும் உலக அளவில்  அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாவார்கள் என்பதை குறிப்பிடுகிறது. ஜீவன காரகன்  சனி பகை வீட்டில் வக்ரமனவது சிறப்பென்றாலும் உடனிருக்கும் செவ்வாயால் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளால் நிம்மதி இழப்பர்.  தொழிலில் அனுசரனை இல்லாவிட்டால் பணியிழப்பும் ஏற்படும். இந்நிலை வரும் புரட்டாசி மாதம் துவங்கும் வரை நீடிக்கிறது. அதன பிறகே மக்கள் நிம்மதியடையலாம்.
  
எனவே மிகுந்த பொறுமையும் நிதானமும் உண்மையான தெய்வ பக்தியும் கொண்டு இந்த காலகட்டத்தை கடந்திட வேண்டும்.

                     ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.


விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.